NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, October 30, 2015

லென்ஸ் கண்ணாலே - 010, பூனையின் கண் பாருங்கள்..!


 

சென்ற பாடத்தில் ஒளிப்படங்களைத் தீர்மானிக்கும் 7 அம்சங்களைக் கண்டோம். இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் காமிராவின் அத்தனை இயக்கங்களையும் எளிதாக கையாண்டு அற்புதமான படங்களை எடுக்க முடியும். இறைவன் நாடினால், உலகப் புகழ் பெற்ற ‘போட்டோ கிராபராக’ மாற முடியும் என்றும் சொன்னேன்.

ஒரு நினைவுக்காக…

ஒளிப்படங்களை இந்த 7 அம்சங்கள்தான் தீர்மானிக்கின்றன.

1. வெளிச்சம் அல்லது ஒளி (LIGHT)

2. லென்ஸ் (LENS)

3. அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு.

4. நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம்.

5. ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) அதாவது சென்ஸார் திரை தொடு உணர்வின் அளவு.

6. படம் பிடிப்பதற்கான தொகுப்பு (COMPOSITION - Placement or Arrangement of Visual Elements)

7. ஈர்க்கப்படுதல் (INSPIRATION).


மேலே குறிப்பிட்டுள்ள இந்த ஏழு அம்சங்களில் அபெர்சர் (APERTURE), நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) மற்றும் ஐஎஸ்ஓ (ISO – Sensation of Sensor) இவற்றை ஒவ்வொன்றாக இனி பார்க்கலாம்.

இதில் முதலில், அபெர்சர் (APERTURE) அதாவது ஒளி ஊடுருவ லென்ஸின் விட்டம் விரிந்து சுருங்கும் அளவு. பெரிய வட்டம் அல்லது சிறிய வட்டமாக மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் யாராவது செல்லப் பிராணியாக பூனையை வளர்ப்பவர்களாக இருந்தால் இனி கவனமாக அதை கண்காணியுங்கள். இரவு நேரங்களில் அதன் கண்களை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்.


இரவில், பூனையின் கருவிழிகள் இருட்டு, வெளிச்சம் இவற்றுக்கு ஏற்றாற் போல, சுருங்கி விரிகின்றன. இதைதான் நான் பெரிய வட்டம். சிறிய வட்டம் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். இது ‘அபெர்சர்’க்கு (APERTURE) சரியான உதாரணமாகும்.

அபெர்சர் (APERTURE) என்பது சென்ஸார் உணர்வு பலகையில் அதாவது தொடு திரையில், லென்ஸ் வழியே எவ்வளவு வெளிச்சம் பாய வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒளி அளவீட்டின் விட்ட அளவாகும்.


எடுக்கப்போகும் படத்தின் தன்மையை, படம் கருப்பாக (Darkness) வரவேண்டுமா, வெளுப்பாக (Lightness) வரவேண்டுமா? என்று இது தீர்மானிக்கும் அளவீடாகும்.

அபெர்சர் (APERTURE), ஆங்கில ‘எஃப்’ எழுத்தில் (F) குறியீடுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது ஆங்கிலத்தில் எஃப் ஸ்டாப்ஸ் (F Stops) என்றும் அழைக்கப்படுகிறது.


உதாரணமாக, F1.4, F2, F2.8, F4, F5.6, F8, F16, F22

F1.4 என்பது லென்ஸ்ஸில் அதிகரிக்கப்படும் பெரிய அளவு விட்டத்தின் அளவு. பெரிய வட்டம். அதிக அளவு ஒளி பாயும்.

F22 என்பது லென்ஸ்ஸில் குறைக்கப்படும் சிறிய அளவு விட்டத்தின் அளவு. மிகச் சிறிய வட்டம். குறைந்தளவு ஒளி பாயும்.

குறைந்தளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை அதிகப்படுத்தும். பூனையின் விழித்திரை இருட்டில் விரிந்து பெரிதாவது போல.

அதிகளவு எஃப் அளவீட்டு எண் என்பது லென்ஸ்ஸின் விட்டத்தை குறைத்துவிடும். பூனையின் விழித்திரை பகலில் சுருங்கிவிடுவதைப் போல!

ஒளிப்படமெடுப்பவர் மத்தியில், ‘டெப்த் ஆஃப் பீல்ட்’ – Depth of Field (DOF) என்றொரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். இது நாம் போகஸ் செய்யும் படத்தின் ஆழத்தை அல்லது வீச்சை (Depth Of Focus) குறிக்கும் சொல்லாகும். அதனால், இதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

அதிக அபெர்சர் (Widest APERTURE) (அதாவது F5.6) காட்சிப்படுத்தவிருக்கும் பொருளின் பின்னணியை மங்கலாக்கிவிடும். குறிப்பிட்ட காட்சிகள், நபர்கள் ஆகியவற்றை படம் எடுக்கும்போது இந்த முறையை கையாளலாம்.


சிறிய அபெர்சர் (APERTURE) (அதாவது F16) பின்னணி உட்பட காட்சிப்படுத்தும். இயற்கைக் காட்சிகள் மற்றும் பின்னணி உட்பட துல்லியமாக பதிவாக வேண்டும் என்று நினைக்கும்போது இதை பயன்படுத்தலாம்.


சிறிய அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F1.4, F2 போன்ற F Stops லென்ஸ்ஸின் விட்டத்தை பெரிதாக்கி (Wide APERTURE) அதிகளவு ஒளியை ஊடுருவச் செய்யும். இரவு போன்ற மங்கலான வெளிச்சத்தில் படமெடுக்க உதவுபவை.

பெரியளவு அபெர்சர் எண் குறியீடுகள் என்பவை அதாவது F8, F16, F22 போன்றவை. பளீர் வெளிச்சத்தில் படமெடுக்க உதவும். லென்ஸ்ஸின் விட்டத்தை சிறிதாக்கி குறைந்தளவு ஒளியை ஊடுரவச் செய்யும்.

கொஞ்சம் ஆழ்ந்து படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இது. விளக்கத்துக்காக படங்களை தந்திருக்கிறேன். கவனமாக பார்த்து செயல் ரீதியாக களத்தில் இறங்கி படமெடுங்கள்.

இறைவன் நாடினால் அடுத்தது, நேரம் (SHUTTER SPEED – Exposure Duration) அதாவது காமிராவின் மூடி திறக்கும் ஒரு கதவு வழியே ஒளி ஊடுருவதற்கான நேரம் சம்பந்தமாக பார்ப்போம்..
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க: 

001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html
005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html

007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html
008. புகைப்படக் கலையின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/08/8_31.html

009. காமிரா எப்படி இயங்குகிறது? : http://ikhwanameer.blogspot.in/2015/09/9.html
Share:

Wednesday, October 28, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 9: ஒரு ராஜாதி ராஜா .. பஞ்ச-பராரியாய்..!



>>>>>>>> வயிறார உண்ண உணவில்லை. ஆனாலும் ராஜா அவர்!

>>>>>>>> ஏழையாகவே மரணிக்க வித்யாசமான பிராத்தனை செய்தவர்!

>>>>>>>> வெறும் தலையணை, மண்பாத்திரங்கள் மகளுக்குச் சீதனமாகக் கொடுத்தவர்!

யார் அவர்?  அவா்தான் நபிகள் நாயகம்!


நபிகள் நாயகம் தமது வாழ்வை மனித இனத்துக்கு ஒரு முன்மாதிரியாக விட்டுச் சென்றவர்கள். பசிப்பிணி, துன்பத்துயரங்கள் இவற்றை எல்லாம் சுயமாக அனுபவித்தவர்கள்.

துன்பத்துயரங்களை அனுபவித்தவர்களால்தான் மற்றவரின் பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

மக்காவின் செல்வச் சீமாட்டி அன்பு துணைவியர் கதீஜா நாச்சியார். வணிகம் நிமித்தமாக மக்காவிலிருந்து அயலகம் செல்லும் ஒட்டகங்கள் ஒரு நூறு என்றால் இந்த அம்மையாரின் ஒட்டகங்கள் ஏறக்குறைய எழுபது! இன்றைய சொல் வழக்கில் சொல்ல வேண்டும் என்றால்.. ஒரு மில்லினர் அல்ல பெரும் பில்லினர்!

அத்தகைய செல்வச் சீமாட்டியின் துணைவரான நபி பெருமானார் தொடர்ந்து மூன்று நாட்கள்கூட வயிறார உண்டதில்லை.

ஏழை-எளியோரின் வறுமையைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது நோன்பு நோற்பார்கள். ஷாபான் மாதத்திலிருந்து ரமலான் மாதம் வரை நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.

பசிப்பிணியின் கொடுமையை உணர்ந்தவராய் ஏழைகளின் துன்பந்துயர் நீக்க இறைவனிடம் நெஞ்சுருக பிரார்த்திப்பார்கள்.

அரபு நாட்டின் முடிசூடாத மன்னராக இருந்த நபிகளாரின் பிராத்தனை என்னத் தெரியுமா?

"இறைவா, என்னை ஏழையாக இருக்கச் செய்வாயாக! ஏழையாகவே மரணிக்கச் செய்வாயாக! ஏழைகளுடனேயே உயிர்க்கொடுத்து எழுப்புவாயா!"

இந்த மனிதப் புனிதர்,

~~~~ குடும்பயியலில் இருந்தவாறே உலக வாழ்வில் பற்றற்றவராய்..

~~~~~ அதிகாரப் பீடத்தில் அமர்ந்திருந்தவாறே சாமான்யராய்..

~~~~~ செல்வச் சீமாட்டியின் கணவராக இருந்தும் ஏழையாய்.. மிக மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். வாழ்வதற்கு அவசியமான குறைந்தளவு உணவே உண்டார்கள்.

நபிகளாருக்குப் பிடித்தமான உணவு என்னத் தெரியுமா?

பார்லியால் செய்யப்பட்ட ரொட்டி!

நபிகளார் வீட்டில் பல நாட்கள் அடுப்பே எரியாது. அத்தகைய நாட்களில் வெறும் பேரீச்சம் பழங்கள்தான் அவர்களது உணவாக இருந்தது. வயிற்றுப் பசியின் கொடுமையைத் தாளாமல் வயிற்றில் கற்களைக் கட்டிக் கொள்வார்கள். தமது பசியின் வேதனையை அடுத்தவர் அறியா வண்ணம் புன்னகைத்தவாறு இருப்பார்கள்.

ஒருமுறை.

தோழர், இம்ரான் பின் ஹஸீனை (இறையருள் பொழிவதாக!) அழைத்துக் கொண்டு தமது அருமை மகள் ஃபாத்திமாவின் இல்லத்துக்குச் சென்றார்கள்.

கதவைத் தட்டியதும், உள்ளே இருந்து ஃபாத்திமா அம்மையார் "இறைவனின் மீது ஆணையாக! என்னிடம் மாற்று உடைகூட இல்லாமல் இருக்கின்றேன்!" -என்றதும் நபிகளார் தமது தோளிலிருந்த துண்டை எடுத்து மகளிடம் தந்தார்கள். அதைத் தரித்துவரும்படி பணித்தார்கள்.

வீட்டில் உண்ண உணவு ஏதுமில்லை. அருமை மகள் பசியால் வாடுவதை அறிந்ததும் நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அந்த வறுமை நிலையைப் போக்க நபிகளார் இறைவனிடம் பிரார்த்தித்திருக்க முடியும். ஆனால், இம்மை வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவராய்.. நிலையான மறுமை வாழ்வைக் குறித்தே அதிக அக்கறைக் கொண்டிருந்தார்கள். தம்மைச் சுற்றி இருந்தோரிடமும் அதைத்தான் போதித்தார்கள்.

அந்த இறுக்கமான சூழலிலும் அன்பு மகளை அணைத்தவாறு, "மகளே, உன்னை சுவனத்துப் பெண்களின் அரசியாக்கி இறைவன் அருள்புரிவானாக!" என்று பிரார்த்தித்தவாறு நன்மாரயம் சொன்னார்கள்.

ஒரு நாட்டின் பேரரசராக திகழ்ந்தவரின் நிலைமையைப் பார்த்தீர்களா?

நபிகளார் தம்மிடம் இருந்த செல்வத்தை எல்லாம ஏழை-எளியோர் துயர் துடைக்க வாரி வாரி வழங்கினார்கள். அதேநேரத்தில் அவர்களது அன்பு மகள் ஃபாத்திமா (இறையருள் பொழிவதாக!) ஏழ்மையில் வாடினார்கள். தமது உணவுக்கான மாவை தாமே அரைத்துக் கொள்வார்கள். வீட்டுக்கான குடிநீரை தாமே சுமந்து வருவார்கள். ஒரு சராசரி மனிதர்கூட பணியாளரை வைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் இவை எல்லாம் நடந்தன. எத்தனை வித்யாசமான வரலாற்று நிகழ்வுகள் இவை!

வரலாற்றில் அரசர்களின் ... அதிபர்களின் ... பிரமுகர்களின் மனைவி-மக்கள், குடும்பத்தார் அனுபவித்த உல்லாச வாழ்க்கைக்கு நேர்மாறான வரலாறு இது!

அரபு நாட்டின் மாமன்னராக விளங்கியவர் நபிகள் நாயகம். அவரின் அன்பு மகளார், இதயத்துண்டு திருமணத்தின்போது, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்துச் சென்ற சீர்-செனத்திகள் என்ன தெரியுமா?

>>>>> ஒரு பாய்!

>>>>> ஒரு தோலாலான தலையணை!

>>>>> இரண்டு மண் பாத்திரங்கள்,ஒரு ஜாடி மற்றும் மாவரைக்கும் ஒரு கல் எந்திரம் ஆகியவை மட்டுமே!

இத்தகைய ஆளுமைப் பண்புக்குரியவரிடம் யார்தான் மயங்கமாட்டார்கள்?

---- >>>> இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

அடிமைத் தளையிலிருந்து விடுதலை : http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
Share:

வைகறை நினைவுகள் 23: மர்யம் ஏன் அழுதாள்?



அது மறக்க முடியாத நாள். மெய் சிலிர்த்துப் போன நேரம். குழந்தை மர்யத்தின் கண்கள் குளமாகி தாரை தாரையாக கண்ணீர்.

விசும்பலும், கோபமுமாய் அவள் கேட்ட கேள்வியை வாழ்நாளில் மறக்கவே முடியாது!

அன்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் (எஸ்.ஐ.ஓ) ரமளான் நன்நாளையொட்டி ‘ஈத் மிலன் – பெருநாள்’ சந்திப்பு எண்ணூரில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஒவ்வொரு சமயத்தினரும் பிற சமயத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாய் வாழ வேண்டும்; மனித நேயம் மலர வேண்டும் என்ற நோக்கத்தில் பிற சமயத்தினருக்காக அந்த சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினராய் உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார்.

வாழ்த்துரை, தலைமையுரைகளுக்குப் பின் சிறப்புரை ஆரம்பித்தது.

உரையின் இடையே சம்பந்தமேயில்லாமல் ஒரு கதையை அந்த தொழிலதிபர் சொல்ல ஆரம்பித்தார்:

“நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தது. திடீரென விமானத்தில் கோளாறு. யாராவது மூவர் உடன் கீழே குதித்தாக வேண்டும். பைலட்டிடமிருந்து அறிவிப்பு வெளியானதும் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த அமெரிக்கர் சட்டென்று எழுந்தார். “அமெரிக்கா… வாழ்க!” – என்று முழக்கமிட்டவாறு விமானத்திலிருந்து குதித்துவிட்டார்.

அடுத்ததாக, ரஷ்யர் எழுந்து, “ரஷ்யா.. வாழ்க!” – என்று முழங்கிக் கொண்டே விமானத்திலிருந்து குதித்தார்.

மூன்றாவதாக இந்தியர் எழுந்தார். “ஜெய் ஹிந்த்!” – என்று ஆக்ரோஷமாக முழக்கமிட்டவாறு பக்கத்திலிருந்து ஜப்பானிய பயணியை விமானத்திலிருந்து தள்ளிவிட்டார். இப்படிதான் இந்தியர்களின் மனோநிலை உள்ளது!” – என்று முடித்தார் அவர்.

- பெரும் வெடிச்சிரிப்பு அரங்கில் எழுந்தது.


ஆனால், என்னுடன் வந்திருந்த எட்டே வயதான என் மகள் மர்யத்தின் கண்கள் கலங்கிவிட்டன.

“ஓ” வென அழலானாள்.

காரணம் புரியாமல் தவித்த நான் மெதுவாய் அணைத்தவாறு அரங்கை விட்டு வெளியேறியதுதான் தாமதம்!

பொங்கி அவள் அழுதது இதுவரை காணாதது.

“அப்பா! அந்த ஆளூ… என் தாய் நாட்டை அவமதித்துப் பேசறாரு! நீங்களெல்லாம் சிரிச்சிட்டு ரசிக்கிறீங்களே! என் நாட்டு மக்களை அவமதித்துப் பேச அவரை யார் அனுமதிச்சது?”

ரோஷத்துடன் அவள் நின்ற கோலம் நெஞ்சைவிட்டு அகலாதது!

வீட்டை அடைந்ததும் மர்யம் தன் அழுகையை நிறுத்தவில்லை. அவளை அமைதிப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

மர்யத்தின் ஒவ்வொரு கண்ணீர் துளியிலும் உண்மையில் வழிந்தது தூய தேச பக்தி.

தேச பக்தியை யாருக்கும் யாரும் ஊட்ட வேண்டிய அவசியமில்லை. அது பிறந்த மண்ணோடும், அந்த மண்ணில் வீசும் காற்றோடும் இரண்டறக் கலந்து இந்த மண்ணில் தவழும் ஒவ்வொரு இந்தியனின் இரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருப்பது. இதில், இந்து, முஸ்லிம், கிருத்துவர் என்ற சமய பேதங்கள் இல்லை. பேசும் மொழிகளில் வேறுபாடுகளோ, பின்பற்றும் கலாச்சார – பண்பாடுகளின் வேற்றுமைகளோ, வாழும் கொள்கைகளோ இதை பிரித்துவிடுவதில்லை.

தொன்மை வாய்ந்த ஆன்மிக பூமியான இந்தியத் திருநாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு இந்தியரும் பெருமைக் கொள்வர். அதற்காக இறைவனுக்கு நன்றியும் சொல்வர். “இது என் தாய் நாடு!” – என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவர்.

இறைநெறியின் அடிப்படையிலான ஒழுக்க விழுமியங்களை தம் வாழ்வின் உயிரூட்டமாக கருதி வாழும் முஸ்லிம்கள் தேச பக்தியில் யாருக்கும் ‘கிஞ்சித்தும்’ குறைந்தவர்களில்லை. இன்னும் சொல்லப் போனால் எல்லோரையும்விட மிகைத்தவர்களாகவே அவர்கள் இருப்பர்; மர்யத்தைப் போலவே!


90-களில் நடந்த சம்பவம் இது.

ஒவ்வொரு ரமளான் பெருநாள் வரும்போதெல்லாம் அந்த குட்டி மர்யத்தின் கனல் கக்கும் தேசபக்தி தீக்கங்குளாய் என்னுள் தெறித்துவிழும்.

இன்று அதே மர்யம் வளர்ந்து நாட்டின் மற்றொரு பகுதியில் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருக்கிறாள்.

90 களை கடந்து, அவள் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இந்திய வரலாற்றில் எத்தனை எத்தனை மாற்றங்கள். எத்தனை எத்தனை மனச் சிதைவுக்கு ஆளாக்கிய சம்பவங்கள்!

இருப்பினும்… இன்னும் ஆயிரமாயிரம் மர்யங்கள் இந்த நாட்டு ஒருமைப்பாட்டின் மீதும் அதன் பன்முகத்தன்மை மீதும் இன்னும் மலையளவு அழுத்தமான நம்பிக்கைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வகுப்புவாதம் என்னும் கருமேகம் விலகும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

                   
இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html






 
Share:

Tuesday, October 27, 2015

வைகறை நினைவுகள் - 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு!



பூர்வீகம் மலைநாடு; கேரளம்.

ஒரு மாத குழந்தையாக இருந்தபோது, குடும்பத்தாரோடு புலம் பெயர்ந்தது சேலம் மாவட்டம் ஆத்தூர்.

ஹோட்டல் தொழில்.

பள்ளி படிப்பு முடிந்ததும், கல்லூரி படிப்புக்காக தூத்துக்குடி பயணம்.

கல்லூரியில் இடம் கிடைத்தும் ஹாஸ்டலில் இடம் கிடைக்காத சூழல் என்று எல்லாமே கணகச்சிதமான இறைவனின் ஏற்பாடுகள்.

கடைசியில் அண்ணனின் நண்பர் முத்து என்றழைக்கப்படும் ஷேக் தாவூதின் இல்லத்தில் தங்கி படிக்க வேண்டிவந்தது இளைஞன் ராஜகோபாலுக்கு!

ஆழ்ந்த உறக்கத்தில் லயித்திருந்த ஒரு நள்ளிரவு.

பக்கத்தில் யாரோ அழும் குரல் கேட்டு ராஜகோபால் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்து பார்த்தபோது…

தஹஜ்ஜத் நேரத்து தொழுகையில், தேம்பி.. தேம்பி அழுது தொழு கொண்டிருந்தான் நண்பன் முத்து.

தொழுகையும், அழுகையுமான அந்த நடுநிசி இரவு தனது வாழ்வில் அத்தகைய மாற்றங்களை நிகழ்த்த இருப்பதை ராஜகோபால் அறியவில்லை. அறிந்திருக்க நியாயமுமில்லைதான்!

எண்ணற்ற நன்மைகளைத் தாங்கிக் கொண்டு மனிதரின் எல்லா முறையீடுகளும் அருளாளனிடம் வானவர்களால் பதிவேற்றம் செய்யப்படும் அற்புத இரவின் நேரமல்லவா அது!

அந்த நடுநிசி அழுகைக்கான துருவல்களில் இஸ்லாம் பரிச்சயமானது ராஜகோபாலுக்கு.

அதன்பின், இடைவிடாத தேடல்களால் ஏற்பட்ட மனமாற்றங்கள், உற்றார் உறவுகளின் நெருக்குதல்கள் என்று கடைசியில் வீடு துறத்தல்வரை அது நீண்டது.

“வாணியம்பாடி சென்றால் கல்வி கற்கலாம்!” - என்று யாரோ சொன்னதைக் கேட்டு மேற்கொண்ட பயணம் பேராசியர் மௌலானா அஸ்லம் சாஹெபிடம் கொண்டு சேர்த்தது. அவரது வழிகாட்டலில் இறைநெறி முகிழ்ந்தது.


அதைத் தொடர்ந்து,

• வேலூர் இஸ்லாமிக் சென்டரின் முதல்வர் மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானியின் மருமகன்,

• ஜமாஅத்தின் கடைநிலை ஊழியன்,

• ஜுன் 1980-ல் சமரசத்தின் பொறுப்பாசிரியர்,

• குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் பங்களிப்பாளன்

• 9 புத்தகங்களின் பன்னூல் ஆசிரியர்

என்று அந்த ‘அழகிய ஒளிவிளக்கு’ சுடர்விட்டு பிரகாசித்தது.

யார் அந்த அழகிய ஒளிவிளக்கு?

எனது ஆசான்களின் பிறிதொருவர் அருமை சகோதரர் சிராஜுல் ஹஸன்தான் அவர்!

அவருடைய நீண்ட பயணத்தின் எளிய சுருக்கம்தான் மேற்சொன்னது.

நண்பர்களே!

சிராஜுல் ஹஸனை நான் எப்போதும் முகம் சுளித்துப் பார்த்ததில்லை. அதிர்ந்து பேசியும் கேட்டதில்லை. இதுவே அவரது பலவீனமோ என்று நான் பின்னாளில் சிந்தித்திருக்கிறேன்.

ஒரு எளிய அறையில்தான் சமரசத்தின் அத்தனைப் பொறுப்புகளையும் அவர் சுமந்து கொண்டிருந்தார்.

வலிமையான ஊடகமாக வெளியில் போற்றப்பட்ட சமரசம் பிற ஊடகங்கள் நவீனமயமானபோதும், அந்த நவீனத்துவத்தின் வாடைகூட படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், நவீன ஊடகங்களுக்கு சரிநிகராக அது வெளிவந்து கொண்டிருந்தது. இதற்கு சகோதரர் சிராஜுல் ஹஸனின் இடைவிடாத உழைப்புதான் காரணம் என்பேன்.

பத்திரிகைகளில் ஓரிரு கட்டுரைகள் எழுதியதும் தம்மை ஊடகவான்களாக பேசிக் கொண்டு வெளியில் வலம் வருபவர்களுக்கும், இயக்கம், பத்திரிகை, நூல் வெளியீட்டகம் என்ற அடையாளங்களோடு அயலகம் சென்று பொருள்நிறை பெற்றவர்களுக்கும் இடையே சிராஜுல் ஹஸன் பிழைக்கத் தெரியாதவராக இருந்தவர்.

வெளியிடங்களில், பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொண்டு அவர் எந்த சலுகையையும் பெற்றதாக எனக்கு தெரியவில்லை.

தன்னைப் பற்றியும், தன் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் அவர் வெளியில் யாரிடமும் சொல்லிக் கொண்டதில்லை!


1987-லிருந்து பழக்கமுள்ள சிராஜுல் ஹஸன் இதே மௌனத்தைதான் என்னிடமும் கடைப்பிடித்தார்.

கடைசியில் வைகறை நினைவுகளின் அவரோடான எனது நினைவுகளை பறிமாறிக் கொள்ளும் வேளையில்தான் அந்த மௌனம் ஓரளவு கலைந்தது.

மௌலானா குத்புத்தீன் அஹ்மது பாகவி, மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப், மௌலான மஸ்தான் அலி பாகவி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் தமிழக தலைவர் அப்துற் றகீப் சாஹெப், மௌலான சையத் முஹம்மது மதனீ போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் தான் பணியாற்றியதை ஒரு சிறப்பாக கருதுகிறார்.

35 ஆண்டு காலம் சமரசத்தில் பணியாற்றி பிறகு அப்பொறுப்புகளிலிருந்து விலகியது அல்லது விலக்கப்பட்டது சர்ச்சைக்குரியதாக வெளியில் பேசப்படுகிறது.

ஒரு அவரசநிலைக்காலம், அதன் பின் ஜமாஅத்தின் தடை என்றெல்லாம் பெரும் கடினங்களை கடந்து சமரசத்தை கரை சேர்த்தவர் சிராஜுல் ஹஸன். அத்தகைய அனுபவங்களையும், முதிர்ச்சியையும் புறக்கணித்திருப்பது ஆக்கப்பூர்வமான செயலாக எனக்குத் தெரியவில்லை.

அசோக் லேலண்ட் என்னும் ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனத்தின் மூத்த அதிகாரியாக பணியில் இருந்து, நூற்றுக் கணக்கான பணியாளர்களை வைத்து நிறுவனத்தை இயங்கச் செய்த நான் எனது நிறுவனத்தின் சிராஜுல் ஹஸன் போன்ற இத்தகைய பணியாளர்களை இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.

உற்பத்தி மற்றும் லாபத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட இத்தகைய நிறுவனங்களைவிடவா நாம் மிகவும் பின்தங்கிவிட்டோம்? என்ற உறுத்தல் என்னை துளைத்துக் கொண்டேயிருக்கிறது.

ஒருவேளை இது உலகமாயமாக்கலின் பாதிப்போ என்னவோ தெரியவில்லை.

இருள் சூழ்ந்த ஒரு நடுநிசியை பிரகாசத்தின் பெரு வெள்ளமாக்கி நேர்வழியைக் காட்டிய இறைவன் தனது அடியார்களுக்கு ஒரு போதும் அநீதி இழைப்பதில்லை என்பது மட்டும் உறுதி.

இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive