Showing posts with label தேர்தல்கள் 2019. Show all posts
Showing posts with label தேர்தல்கள் 2019. Show all posts
Wednesday, May 22, 2019
மீண்டும் சொல்கிறேன்
சங்பரிவார் என்னும் கொடூர ஆக்டோபஸின் மற்றுமோர் கரமான பாஜக-வை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. 'டவுசர்ஸ் பாய்ஸ்' என்று நக்கலடிப்பவர்கள் வெறும் 'முகநூல் புலிகள்தான்' என்பதை நினைவில் கொள்க.
ஒன்றுமே இல்லாமலிருந்து வெறும் சொற்ப எண்ணிக்கை இடங்களைக் கைப்பற்றி அதிலிருந்து 'குயுக்தி' வியூகங்களால் அரியணைப் பிடித்திருக்கும் ஒரு வலிமையான சித்தாந்தம்.
அது மனித இனத்துக்கு தீமை பயப்பதாக இருந்தாலும், அர்ப்பணங்கள், கடும் உழைப்பால் உயரங்களைத் தொட்டவர்களே அதன் தொண்டர்கள். ஆட்சியதிகாரம், அரசு எந்திரம், ஆள்-அம்பாரி என்று சகல ஆயுதங்களுடன் இருப்பவர்கள் அவர்கள்.
மிக எளிதாக மதத்தை அபினாக்கி மக்களை அடிமையாக்க அவர்கள் கையாளும் சூழ்ச்சியே நிகழ்கால வரலாறு. ஆம்.. ஒவ்வொரு அரசியல்வாதிக்குள்ளும், ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்த அபின் போதையை ஏற்றி எளிதாக அவர்களை தங்கள் கைவசப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்த சாணக்கியம் சங்பரிவாருக்கு கைவந்த கலை! அதன் ஒரு பகுதிதான் தேர்தலுக்கு பிறகான தேர்தல் கணிப்புகள்.
ஆக, ஜனநாயகத்துக்கான தேர்தல் களத்தில், எதிரியின் வலிமைத் தெரியாமல் கிண்டலடித்து, நையாண்டி செய்வது வெறும் பொழுதுகழிப்பாகவே முடிந்துவிடும்.
சக மனிதரிடையே துவேஷங்களை வளர்க்கும் ஒரு தத்துவம், சக மனிதரை அடக்கியாள துடிக்கும் ஒரு சித்தாந்தம், எளிய மனிதர்களின் குருதி ஆற்றில் சிம்மாசனங்களை அமைக்க விரும்பும் ஒரு தத்துவம் மக்களால் விரும்பப்படுவது எப்படி? என்று எழும் நியாயமான கேள்விக்கு பதில் தேடுவதும் அவசியம்.
அப்படியானால், மேற்குறிப்பிட்ட சங்பரிவார் தத்துவத்தைவிட மோசமான தத்துவம் அல்லது நடத்தைக் கொண்டவரா பிற அரசியல் கட்சியினர்? சங்பரிவாரைவிட மோசமானவரா நாம்?
இந்த தேடலில்தான் இந்தியாவின் இறையாண்மையும், இயல்பான இயக்கவியல் நியதியும் அடங்கியிருக்கிறது.
ஓட்டைகளை அடைக்காமல் எவ்வளவு சிறப்பான மாலுமியாக இருந்தாலும் கப்பல் கரைசேருமா என்ன?
தனது முகம் வகுப்புவாதத்தால் தோய்த்தெடுத்த இயற்கைக்கு புறம்பான வெறுப்பு முகத்திலானதா?
அல்லது சக மனிதர்களை மனதோடு நேசிக்கும் இயற்கையின் நியதிக்கு உட்பட்டதா? என்ற ஒரு முடிவுக்காக மொத்த இந்தியாவே காத்திருக்கிறது.
இத்தனை இயலாமை, பலவீனங்களுக்கு மத்தியில், ஒரு 'மாஜிக்' நடக்குமானால்.. நிச்சயம் அது இந்திய வாக்களார்களால் மட்டும் நிகழ்ந்தது அல்ல என்று மட்டும் மனம் உறுதியுடன் சொல்கிறது.
Sunday, April 14, 2019
பரிவாரங்கள் பரப்பும் கப்ஸாக்கள்
முஸாஃபர்நகர் மக்களவைத் தொகுதியின் பாரதிய ஜனதா ஊழியர் ஒருவர், புர்கா அணிந்திருந்த பெண்கள் குழு ஒன்றிடம் இருந்து போலி ஆதார் அட்டைகளை கைப்பற்றியதாக சமூக ஊடக காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல்கள் நடைபெற்ற பின்னர் இந்த காணொளி வலம் வருகிறது என்பது முக்கியமானது.
புர்கா அணிந்த சில பெண்கள் கள்ள ஓட்டுகளை போடுவதாக முஸாஃபர்நகர் பாஜக வேட்பாளர் சன்ஜீவ் பல்யான் தெரிவித்தார். அவரது இந்தக் குற்றம்சாட்டு ஆயிரக்கணக்கான முறை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பகிரப்பட்டு பார்க்கப்பட்டுள்ளது.
"பிஜேபி மிஷன் 2019" மற்றும் "வி சப்போர்ட் நரேந்திர மோதி" போன்ற வலது சாரி ஃபேஸ்புக் குழுக்களும் இந்த காணொளியை பகிர்ந்துள்ளன.
தற்போது நடைபெற்று வருகின்ற மக்களவைத் தேர்தலுக்கும், இந்த காணொளிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.
இந்த காணொளியிலுள்ள எழுத்துகள், "கள்ள ஓட்டு போட்ட புர்கா அணிந்த பெண்களை பாஜக முஸ்லிம் ஊழியர் பிடித்தார்," என்று குறிப்பிடுகிறது.
இந்த காணொளியை கவனமாக செவிமடுத்தால், அந்த பெண் கூறுவதும் கேட்கிறது.
காணொளியில் அந்த பெண், "நான் பிஎஸ்பி வேட்பாளர் ஷாய்லா. பெண்கள் பிரச்சனையில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை. உண்மையை சொல். இந்த ஆதார் அட்டைகளை உன்னிடம் கொடுத்தது யார்?" என்கிறார். காணொளிக்கு: https://www.bbc.com/tamil/india-47914935
ஊடக தகவல்களின்படி, 2017ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி ஃபேஷன் வடிவமைப்பாளர் ஷாய்லா கானை ராம்பூர் நகர் மன்றத் தலைவர் பதவிக்கு நிறுத்தியது. உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தல் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.
இப்போது வைரலாகும் காணொளி யூடியூபில் 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி பதிவேற்றப்பட்டது. இது உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தல்களுக்கு ஒரு நாளுக்கு பின்னராகும்.
இத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக எந்தவொரு செய்தி ஆதாரமும் இல்லை. இந்த காணொளி 2019ம் ஆண்டை சேர்ந்ததும் அல்ல.
(நன்றி: பிபிசி - தமிழ்)
Tuesday, April 9, 2019
தேர்தல்கள் 2019: அந்த வம்பனின் வம்பு!
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனக்கு ஆண்டு சரியாக நினைவில் இல்லை. 1986 லிருந்து 1990-களுக்குள்தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அப்போது நான் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியாளராக பணிபுரிந்து வந்தேன். ஜமாஅத்தின் ஊழியனாகவும் இருந்தேன்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முக்கிய ஆளுமைகளான பேரறிஞர் காலஞ்சென்ற குத்புதீன் அஹ்மது பாகவியும், பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானியும் அசோக் லேலண்ட் நிறுவனத்தை பார்வையிட வந்திருந்தார்கள். அதற்கான முறையான அனுமதியும் நிறுவனத்திடமிருந்து பெற்றாகிவிட்டது.
வாகன உற்பத்தியில், ஆசியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கடைசியாக எல்லா உதிரி பாகங்களையும் இணைத்து வாகனத்தின் உடற்பகுதியாக மாற்றும் சேசிஸ் அசெம்பிளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோதுதான் அது நிகழ்ந்தது.
தொலைவில் கப்போர்ட்டுகளின் மீது அமர்ந்திருந்த செல்வராஜ் குதித்து ஓடிவந்தான். "பாகிஸ்தான்வாலா … பாகிஸ்தான்வாலா!" - என்று சத்தமாக விருந்தினரின் நீண்ட ஆடைகளையும், தாடி, தொப்பிகளையும் கிண்டல் செய்து கத்த ஆரம்பித்தான்.
செல்வராஜ் ஒரு வம்பன் என்று நேரில் கண்டிருக்கிறேன். ஆனால், அநாகரிகமாக தனது நிறுவனத்தை பார்வையிட வந்திருக்கும் விருந்தினரிடம் இப்படி நடந்து கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை.
கோபமும், அவமானமும் சூழ்ந்து கொண்ட தருணமிது.
பேரறிஞர் குத்புதீன் அஹ்மது பாகவி, பேரறிஞர் வேலூர் அப்துல் ஹபீஸ் ரஹ்மானி இந்த ஆளுமைகளின் பாசறையில் நேரடி ஒழுக்கப் பயிற்சி பெறும் வாய்ப்பு பெற்றிருந்ததால் அந்நிகழ்வை ஒரு புன்சிரிப்புடனும், மென்மையுடனும் கடக்க வேண்டியிருந்தது.
இது, அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.
“இந்தியா ஜிந்தாபாத்!” - என்று சொல்லுங்கள் என்றான் எங்களை இடைமறித்த அந்த வம்பன் செல்வராஜ்.
நாங்கள் ஒருவர் மற்றொருவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். பிறகு ஒரே குரலில் அழகு தமிழில் சொன்னோம்: “இந்தியா.. வாழ்க..!”
பொட்டில் அறைந்தாற்போல அந்த வார்த்தைகள் வம்பன் செல்வராஜை பாதித்திருக்க வேண்டும். மௌனமாக விலகி வழிவிட்டான்.
அதே மென்மையுடன், புன்னகையுடனேயே நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம்.
இந்தியா மத துவேஷங்களின் உச்சக்கட்டத்தில் ஒரு தேர்தலை சந்திக்க இருக்கும் இந்த நேரத்தில் இந்த சம்பவம் நினைவில் எழுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
Saturday, April 6, 2019
விஷமிகளின் விஷமத்தனங்கள்:வயநாடு: ராகுல் காந்தி பேரணியில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதா?
வியாழக்கிழமை வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி, வேட்பு மனுதாக்கல் செய்த பின்னர் நடத்திய பேரணியில், அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தான் கொடிகளை வைத்திருந்தினர் என்றும், கேரள காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டடம் "பச்சை இஸ்லாமிய நிறத்தில்" உள்ளதாகவும் சில சமூக ஊடகங்கள் பரப்புரை செய்தன.
பாலிவுட் நடிகை கோயனா மித்ராவும் இதே கருத்தை தெரிவித்து, இந்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இது ஆயிரத்திற்கு மேலான ட்விட்டுகளையும், 2,500க்கு மேலான லைக்குகளையும் பெற்றது. அதேபோல, ஷேர்சேட் மற்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.
இந்த மக்களவைத் தொகுதியில் இருக்கின்ற இந்து மற்றும் இஸ்லாமிய மத வாக்காளர்களின் எண்ணிக்கை பற்றிய வதந்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன.
பிபிசி நடத்திய புலனாய்வில் , இந்த புகைப்படம் 2019ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி எடுக்கப்பட்டதாக கண்டறிந்தது.
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரதேச கட்சியான இந்திய முஸ்லிம் லீக் ஒன்றிய கட்சி (ஐயுஎம்எல்) இந்த மாநிலத்தில் பல பேரணிகளை தொடர்ந்து நடத்தியுள்ளது. அப்படிப்பட்ட நிகழ்வொன்றில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைதான் மித்ரா ட்விட் செய்துள்ளார். சமூக ஊடகங்களில் பரப்புரை செய்யப்பட்டுவருகிறது.
ஐ.யு.எம்.எல்-யின் கொடியும் பச்சை நிறம் கொண்டது. பாகிஸ்தான் கொடியின் பெரும் பகுதியும் பச்சை நிறம் கொண்டது. இதைப் பயன்படுத்தி விஷமிகள் செய்த விஷமத்தனமான பரப்புரையே இது.
அதேபோல, சமூக ஊடகங்களில் விஷமிகள் காட்டும் கட்டடம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது அல்ல. அது ஐ.யு.எம்.எல் கட்சியின் பிரதேச அலுவலகமாகும்.
இந்த புகைப்படத்தை ஜும் செய்து பார்த்தால், ஐ.யு.எம்.எல் கட்சியின் சின்னமான ஏணி தெரிகிறது. இந்த கட்டடத்தில் இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படமும் தெரிகிறது. இந்த படத்தில் இருப்பவர் 2009ம் ஆண்டு இறந்துபோன ஐ.யு.எம்.எல் தலைவர் சையத் முகமது அலி ஷாஹிப் ஆவார்.
அந்தக் கட்டிடத்தில், மலையாளத்தில், 'இக்பால் நகர், லீக் இல்லம்' என்று எழுதப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியைச் சுற்றியும் உள்ள பச்சை நிறங்கள் எல்லாமே அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் கட்சியின் அடையாளங்களாகும். இவற்றை விஷமிகள் திட்டமிட்டு விஷமத்தனமாக பரப்புரை செய்கிறார்கள்.
கோயாபல்ஸ்ஸீம் இத்தகைய தந்திரத்தைதான் பயன்படுத்தினான் என்கிறது வரலாறு.
பச்சை பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்றால்... பாஜக கொடியில் இடம் பெற்றுள்ள பச்சை நிறம் யாருக்கு சொந்தமானது என்று இந்த விஷமத்தனமான பரப்புரையில் இறங்கியுள்ள விஷமிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

















