NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, February 19, 2016

வைகறை நினைவுகள்: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!

வைகறை நினைவுகள்: 26, ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன் (இணைப்பு: https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/504364509716583) என்னும் தலைப்பில் நான் நினைவு கூர்ந்திருந்தவற்றுக்கு சகோதரர் ஷேக் முஹம்மது சுலைமான் பின்னூட்டமிட்டு சில கேள்விகள் கேட்டிருந்தார்.

அவரது பின்னூட்டமும், கேள்விகளும் இவை:

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. ஒரு ஜும்மா சபையில் மௌலானா சுலைமான் பாகவி அவர்கள் ஏன் அந்த தர்ஜுமாவை எதிர்த்தார் இதனை பற்றி பின்னர் விளக்கம் ஏதும் உண்டா சகோதரரே.

2. மௌலானா சுலைமான் பாகவி அவர்களின் மகன் பாரூக் எங்களது சம காலத்தில் கிரசன்ட் பள்ளியில் படித்தார். மௌலானா சுலைமான் பாகவி மற்றும் அவரின் மீது மதிப்பு உண்டு. இன்று தாவா தளங்களில் அதிகம் விநியோகம் செய்யப்படும் தர்ஜுமா IFT மற்றும் முஹம்மது ஜான் டிரஸ்ட் பதிப்புகள் இதை தவிர தௌஹீத் ஜமாத்தினர் PJ அவர்களின் பதிப்பினை விநியோகம் செய்கின்றனர் . அப்படி ஓர் எளிமையான மற்றும் அதிகம் விநியோகம் ஆகும் IFT பதிப்பினை மௌலானா விளாசி தள்ளிய காரணம் என்ன? இந்த கேள்வி எந்த உள்நோக்கமும் கொண்டதல்ல.



''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இஸ்லாத்தை அதற்குரிய சரியான பார்வையில் பரிச்சயம் செய்ததே மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்று நான் ஆரம்பத்திலேயே அது சம்பந்தமாக நினைவு கூர்ந்திருக்கிறேன்.

நான் மட்டுமல்ல இன்று உலகளவில், எங்கெல்லாம் இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்படுகிறதோ இதன் முக்கிய பின்புலனாக இருப்பதும் மௌலானா மௌதூதியின் இந்த இலக்கியங்கள்தான். சர்வதேச அளவில் பெரும் சிந்தனையாளராகவும், அறிவு ஜீவியாகவும் போற்றப்படும் மெளலானாவுக்கு எதிரான எதிர்ப்பு கருத்தியல் ரீதியானது என்று இதுவரையிலும் நிரூபிக்கப்படவில்லை.

இஸ்லாத்தை யாரெல்லாம் எடுத்துரைக்கலாம் என்று 'சிலர்' ஏற்படுத்தியுள்ள குறுகிய வரையரைதான் இந்த ‘மெளதூதி’ எதிர்ப்புக்கு காரணமாக நிற்கிறது எனலாம். இதற்கு புரோகித மனப்பான்மைதான் காரணம் என்ற சொல்லாடலை கையாள என் மனம் இடந்தரவில்லை.


இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளரான மௌலானா மௌதூதி குறித்து வாசிக்காத சமூகத்தின் ஒரு பகுதியினர் செவிவழி செய்திகளையே ஆதாரமாகக் கொண்டு அதே கருத்துக்களை முன்னெடுத்து செல்வது இன்றும் நீடிக்கிறது.

இறைமறுப்பு கொள்கைளில் என்னைப் போல எண்ணற்ற இளைஞர்கள் அதிலேயே மூழ்கி இறைவனின் கடும்கோபத்துக்கு ஆளாவதற்கு வருத்தப்படாத இந்த மனப்பான்மைதான் இஸ்லாத்தை சிரமேற்கொண்டு முன்னெடுத்து செல்லும்போது, வழிகேடர்கள், வஹாபதிகள் இன்னும் இதற்கும் ஒரு படி மேலே சென்று ‘காதியானிக்கள்’ என்று கூட விளிக்கப்படுகிறார்கள். இவை நான் கடந்து வந்த பாதையில், சந்தித்த எனக்கும் சூட்டப்பட்ட பட்டப் பெயர்களாகும். மௌனத்தில் கரைந்துருகி, பொறுமையை ஆயுதங்களாக்கி களத்தில் இந்தப் பிரச்சாரங்களை தகர்த்தெரிந்தது இறைவன் நாடினால், வைகறை நினைவுகளில் நினைவு கூரப்படும்.

இந்த அடிப்படையில்தான், மௌலானா சுலைமான் பாகவியும், மௌலானா நிஜாமுத்தீன் மன்பயீயும் தங்கள் கடைசி தருணம்வரை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் பணிக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தினார்கள். கருணையுள்ள இறைவன் இவர்களின் பிழைப்பொறுப்பானாக!

மௌதூதி எதிர்ப்பாளர்கள், மௌலானாவைக் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இன்றைய வைகறை நினைவுகளில் சென்ற நூற்றாண்டின் தலைச்சிறந்த அறிவு ஜீவியான அவரை நான் நினைவு கூர்கிறேன். எத்தகைய ஆளுமைகள் எல்லாம் இந்த சமூகத்தின் முன்னோடியாய் இறைவன் அருள்புரிந்திருக்கிறான் என்பதை எண்ணி வியக்கிறேன்.

இனி…


நூற்றாண்டே சாட்சியாக..
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அவர் மௌலான அபுல் கலாம் ஆசாத்துடன் நெருங்கி பழகியிருக்கிறார். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார். கட்டுரைகளைப் படித்திருக்கிறார். மாபெரும் கவி அல்லாமா இக்பால் மனதில் பிரவாகமெடுத்த கவிதைகளை எல்லாம் அள்ளி அள்ளிப் பருகினார். அவருக்கு மௌலானா அன்வர் ஷா கஷ்மீரியின் இமாமத்தில் (தலைமையில்) தொழும் நற்பாக்கியம் கிடைத்தது. ஹஸன் அஹ்மது மதனீ, முஃப்தி கிஃபாயதுல்லாஹ் போன்ற பெரும் மார்க்க அறிவு ஜீவிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தமது இளமையில் சில நாட்களை ஸயீத் அதாவுல்லாஹ் ஷா புகாரியின் கல்விப் பாசறையில் பயின்றிருக்கிறார். இந்த அனுபவங்கள் எல்லாம் அவரை மிகச் சிறந்த சிந்தனையாளராக்கும் மைல்கற்களாக அமைந்தன.

இஸ்லாமிய பேரரசுகளின் வளமும் செழுமையும், பண்பாடும், கலாச்சாரமும் அந்த அரசுகள் தந்த அமைதியான வாழ்க்கை அமைப்பும், முஸ்லிம்கள் இஸ்லாமிய பேரொளியில் ஸ்பெயினிலிருந்து இந்தோனேஸியாவரை ஆண்ட உன்னதங்களும் கண்களில் மிளிர்ந்தன. உலகாசையில் விழுந்த முஸ்லிம்கள் தங்கள் இலக்கையும், குறிக்கோளையும் மறந்து போனதால்.. அடைந்த இழப்புகள் அவரது இரவுகளை வேதனை மிக்க தூங்கா இரவுகளாக்கின. முஸ்லிம்கள் இஸ்லாமிய ராஜபாட்டையிலிருந்து விலகி நடந்ததால்.. இதன் பிறகு ஒரு புதிய இஸ்லாமிய பெயர் தாங்கி அமைப்பு உருவானதை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனை மாற்றியமைத்து புதுயுகங்களை சமைக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை அவர் திட்டவட்டமாக நம்பினார்.


இந்த நேரத்தில் வெள்ளையனை விரட்டியடிக்க உக்கிரமான பன்முகப் போராட்டங்கள் இந்தியாவில் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சுதந்திரப் போராட்டத்தை நசுக்க இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க நச்சு விதைகளை விதைக்கிறார்கள். பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக 1915-இல், மதன் மோகன் மாளவியா இந்த மகா சபையை நிறுவினார். பின்னாளில் அது வகுப்புவாத அமைப்பாக உருவெடுத்தது. 1925-இல், கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆரம்பித்தார். 1923-இல், நாக்பூரில் நடந்த வகுப்புக் கலவரங்களையொட்டி இந்துத்துவவாதிகள் செய்த பொய்யான பிரச்சாரங்கள் ஆர்.எஸ்.எஸ் உருவெடுக்க காரணங்களாயின.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்.. ஸ்டாலினின் 'செம்படையினர்' நாத்திகவாதமே வாழ உரிமையுடையது என்ற எண்ணத்தில் ரஷ்யாவின் முஸ்லிம் பகுதிகளான உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், சமர்கண்ட், நேஷாபூர், புகாரா போன்ற மாநிலங்களை ரத்தக் களரியாக்கினர். அப்பகுதிகளில் வசித்துவந்த முஸ்லிம் அறிஞர்களையும், மேதாவிகளையும் கொன்றொழித்து மசூதிகளையும், பாடசாலைகளான மதரஸாக்களையும் கால்நடை தொழுவங்களாக்கினர்.

நாத்திகவாதம், ஆத்திகவாதத்தை 'கிரெம்ளின்' மாளிகையிலிருந்து விரட்டியடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது. மற்றொருபுறமோ ஜெர்மன் 'நாஜி' தலைவர் ஹிட்லர் தனது இனவாத சித்தாந்தத்தை நிலைநாட்ட மனித பிணங்கள் மீது அரியணை அமைக்கும் தீவிர முயற்சியில் களம் இறங்கியிருந்தார்.

உலகை அமைதி பூங்காவாக்க வேண்டிய இஸ்லாமிய சக்தியோ அரசியல், பொருளாதாரம், அறிவியல் என்று வாழ்க்கையின் பல்வேறு துறைகளாக கூறு போடப்பட்டு இருந்தது. மேற்கத்திய சித்தாந்தம் முஸ்லிம்களின் வாழ்வில் திணிக்கப்பட்டிருந்தது. ஆன்மிக அறநெறிகளுக்கும், வாழ்வின் பிற துறைகளுக்கும் சம்பந்தமில்லை என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. பாரிஸ், லண்டன் கலாச்சாரங்கள் தாரளமயமாக்கப்பட்டு முஸ்லிம் நாடுகள் மேற்கத்திய வர்ணங்களுக்காளாயின.

1888-களிலேயே பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்து முக்கிய விவாதம் நடந்தது. 'பிளட்ஸ்டோன்' என்ற பிரமுகர், 'இளைஞர்கள் சமூகத்தின் முதுகுத்தண்டு போன்றவர்கள். அதனால், இளைய சக்தியை திசை திருப்ப வேண்டும். முஸ்லிம் இளைஞர்களை நம் பக்கம் கவர்ந்துவிட்டால்.. இஸ்லாமிய வாழ்க்கை முறையை செயல்பட விடாமல் தடுத்துவிட முடியும்!"- என்ற ஆலோசனையை முன் வைத்தார். அத்துடன் நில்லாமல் மேசையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டி, "இது குர்ஆன்! முஸ்லிம்களின் வழிகாட்டி! இந்த நூலைவிட்டு அவர்களை விலக்க வேண்டும்!"-என்றார்.

இவரது ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்பட்டது.

பிரச்னைகளின் பிடியில் சிக்கி முஸ்லிம்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரம். சிலர் நாட்டு விடுதலைக்காக.. சிலர் தொழிலாளர் உலகுக்காக.. இன்னும் சிலரோ 'பாஸிஸம்' வளர்வதற்காக தத்தமது சக்தி-சாமார்த்தியங்களை செலவழித்துக் கொண்டிருந்தார்கள். உலகமே, ரத்தக் களறியாகி.. மனிதகுலம் பிண மலைகளாய் குவிக்கப்பட்ட துயரம் வாய்ந்த நாட்களவை!

இந்த சூழலில் 16 வயதுகொண்ட அந்த துடிப்புள்ள இளைஞர் மனித குலத்துக்கு நேரிய வழியைக் காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டார். வரவிருக்கும் நவீன அறிவியல் உலகை 'எழுதுகோல்தான்' ஆளப்போகிறது என்ற திடமான தீர்மானத்துக்கு வந்தார். அறிவின் மூல ஊற்றே எழுதுகோல்தானே! திருக்குர்ஆனும் இதற்கு சாட்சியாகவல்லவா இருக்கிறது.

1919 இல், தனது 16 வயதில் அவர் முதன் முறையாக 'ஜபல்பூரிலிருந்து' வெளியான 'தாஜ்' வார இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார். மனித உள்ளங்களில் அன்பை பீறிட்டெழச் செய்வது இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்றும், அதன் பக்கம் திரும்புவது ஒன்றே ஈடேற்றத்துக்கான வழி என்றும் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.


1920 இல், தாஜ் இதழ் நின்று போனது. அதன் பிறகு அந்த இளைஞர் தில்லி சென்றடைந்தார். தில்லியில் 'ஜமீயதுல் உலமாயே ஹிந்த' என்ற அமைப்பு 'முஸ்லிம்' என்ற பெயரால் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தது. இப்பத்திரிகையின் ஆசிரியராக அந்த இளைஞர் பொறுப்பேற்றார். தமது அற்புதமான ஆக்கங்களால் முஸ்லிம் சமுதாயத்தில் எழுச்சியை உருவாக்க கடுமையாக உழைத்தார்.

1926 இல், சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைவர் பண்டிட் சச்தானந் கொலை செய்யப்பட்டார். கொலையாளி ஒரு முஸ்லிம் இளைஞர். இச்சம்பவம் காங்கிரஸ் இயக்கத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த கொலையை காந்திஜி விமர்சிக்கும்போது, "இஸ்லாம் இரத்தம் சிந்துவதை ஊக்குவிக்கிறது" என்றும், "இஸ்லாத்தின் துவக்கமும் வாள்தான்! அதன் முடிவும் வாளகவும்தான் இருக்க முடியும்!" - என்று சொன்னார்.

காந்தியின் இந்த கடும் விமர்சனத்தின் மீது பலத்த சர்ச்சைகள் எழுந்தன.

இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்ட இந்த அபாண்டம் பெரும் பிரச்னையாக வடிவெடுத்தது.

இச்சமயத்தில், மௌலானா 'முஹம்மது அலி ஜவஹர்' தில்லியின் ஜாமியா மஸ்ஜிதில் அவசரகால கூட்டம் ஒன்றை ஏற்படுத்தி சொற்பொழிவாற்றினார். அப்போது அவர், "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

கூட்டத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞர் மௌலானா முஹம்மது அலி ஜவஹரின் சொற்பொழிவைக் கேட்டு பெரிதும் பாதிக்கப்பட்டார். மௌலானாவின் கேள்வி, "காந்தியின் விமர்சனத்துக்கு யாராவது தக்க விளக்கமளித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"- அவரது நினைவில் எழுந்து அவரது தூக்கத்தைப் பறித்துவிட்டது. அதன் விளைவாக, 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' (இஸ்லாத்தில் ஜிஹாத்தின் உண்மை நிலை) என்ற புத்தகத்தை எழுதினார். உலகில் அமைதியை நிலைநாட்ட வந்த இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிக்கிறது என்ற தவறான கருத்தைக் கொண்டோருக்கு அது தக்க பதிலாக இருந்தது. மேற்கத்தியவாதமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு என்று நினைத்துவந்த உலகத்தாருக்கு அந்த இளைஞரின் எழுதுகோலிலிருந்து பிறந்த அற்புதம் அது.

'இஸ்லாம் ஜிஹாத்' என்ற பெயரில் 'அல் ஜமியத்' பத்திரிகையில் (அந்த இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது) அவருடைய ஆக்கங்கள் வெளிவரலாயின. அதன் பிறகு அது 500 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டது. இஸ்லாமிய இலக்கியத்தில் இன்றுவரை அந்தப் புத்தகம் பேரிலக்கியமாக போற்றப்பட்டு வருகிறது. மார்க்க அறிஞர்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பொக்கிஷமாக கருதப்படுகிறது மகாகவி அல்லாமா இக்பால். 'அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்' என்னும் இந்தப் புத்தகத்தை உயர்ந்த நூல் என்று மனந்திறந்து பாராட்டியுள்ளார்.

தமது 24 வயதுக்குள் உலகின் கவனத்தை திசை திருப்ப காரணமான அந்த இளைஞர்தான் இன்று 'மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி' என்று அழைக்கப்படுகிறார்.

1928 இல், ஜமியத்துல் உலமாயே ஹிந்த் அரசியல் சார்புடைய இயக்கமாக மாறியது. 'அல் ஜமியத்' இதழும் கட்சியின் பத்திரிகையாகிவிட்டது. இந்த நடவடிக்கை மௌலானாவுக்கு பிடிக்கவில்லை. அல் ஜமிஅத்துக்கு விடை கொடுத்துவிட்டு 1932 இல், இஸ்லாம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து 'தர்ஜுமானுல் குர்ஆன்' என்ற பெயரில் மாத இதழ் ஒன்று வெளிவந்து கொண்டிருந்தது. மௌலானா அதன் ஆசிரியராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். திருக்குர்ஆனில் ஒளிவெள்ளமே மானுட பிரச்னைகளுக்கான தீர்வு என்று மனங்கவரும் விதமாக படிப்பவர் உள்ளங்களை ஈர்க்கும்விதமாக எழுதலானார்.

1933-1937 வரை இஸ்லாமிய சித்தாந்தத்தை உள்வாங்கி, சமூக -அரசியல்துறைச் சார்ந்த பல்வேறு புத்தகங்களை மௌலானா எழுதினார்கள். அப்போது எழுதப்பட்டவைதான் வட்டி, பர்தா, கணவன்-மனைவி உரிமைகள் மற்றும் கடமைகள், இஸ்லாத்தில் குடும்பக் கட்டுப்பாடு போன்ற உயரிய வாழ்வியல் இலக்கியங்கள்.

இவ்வெளியீடுகள் மேற்கத்திய பிரச்சார சாதனங்களுக்கு பெருத்த தலைவலியாக மாறின. இஸ்லாம் மற்றும் அதன் உன்னத கருத்துக்களை சகித்துக் கொள்ள அவை தயாராக இல்லை. சுரண்டலற்ற, கண்ணியம் வாய்ந்த இஸ்லாமிய சமூக அமைப்பை ஜீரணிக்க மேற்குலக ஆதிக்க சக்திகளால் முடியவில்லை.

மௌலானாவின் புத்தகங்கள் இஸ்லாமிய உலகில் பெரும் அறிவு புரட்சியைத் தோற்றுவித்தன. அதிலும் குறிப்பாக முதலாளித்துவத்துக்கும், கம்யூனியஸத்துக்கும் மூளைச் சலவைச் செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் உள்ளங்களை ஈர்த்துக் கொண்டன.

1938 இல், அல்லாமா இக்பாலின் அழைப்புக்கிணங்க மௌலானா மௌதூதி ஹைதராபாத்திலிருந்து லாஹீருக்குச் சென்றார். அவர் லாஹீர் சேரும்போது, இந்தியா சுதந்திரமடையப் போகிறது என்ற செய்தி ஊர்ஜிதமானது.

சுதந்திர இந்தியாவில் அமையப் போகும் புதிய அரசு, இந்திய முஸ்லிம்களின் சமூக - அரசியல் வாழ்க்கைக்கு அந்த அரசு தரும் உத்திரவாதம் இவற்றை குறித்த கவலைகள் மௌலானாவின் மனதை அரித்தெடுக்கலாயின.

1941 ஆகஸ்ட், 26 இல், வெறும் 75 பேர் கொண்ட ஒரு சிறு குழுவை ஒன்றுபடுத்தி 'ஜமாஅத்தே இஸ்லாமி' (இஸ்லாமிய கூட்டமைப்பு) என்ற இயக்கத்தை மௌலானா ஆரம்பித்தார்கள். அக்குழுவினரால் ஏகமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ஒருபுறம் இயக்கப் பொறுப்புகள் மறுபுறம் எழுத்துப் பணிகள் என்று மௌலானா சூறாவளியர் சுழன்றார்.

லெனின் இஸ்லாத்தை ஏளனம் செய்யும் வகையில், "வானத்தில் சுவனம் அமைப்பதைவிட பூமியில் சுவனம் அமைப்பதே எங்களது முக்கியப் பணி!" - என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மௌலானா ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பெருந்திரளாய் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில், "வானத்தில் சுவனம் அமைப்பதை லட்சியம் கொண்டவரால் மட்டுமே பூமியிலும் சுவனம் அமைக்க முடியும் என்றே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன!" - என்றார். தொடர்ந்து சொல்லும்போது, "ஆகாயத்தில் சுவனம் அமைக்க விருப்பமில்லாதவர்களால் ஆகாயத்திலும் நரகமே; பூமியிலும் நரகமே அமைப்பார்கள்! ஒருகாலம் வரும் ; அன்று மாஸ்கோவில் கம்யூனிஸம் சமாதி கட்டப்படும்!" - என்றார் தீர்க்கதரிசனத்தோடு!

மௌலானா மௌதூதியின் தலைமையில் உருவான இஸ்லாமிய பேரெழுச்சி உலகம் முழுவதும் பரவலாயிற்று. 1970 இல், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய 'தஃப்ஹீமுல் குர்ஆன்' உருதுவில் முழுமை அடைந்தது. திருக்குர்ஆனின் அந்த விளக்கவுரை இன்று உலகின் பல்வேறு மொழிகளிலும், இந்தியர்களின் பெரும் பகுதி மொழிகளில் ஏறக்குறைய 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மௌலானாவின் பல நூல்கள் உலகின் 70 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய இலக்கிய உலகில் பல்வேறு சாதனைகள் புரிந்தோர் எல்லாம் மௌலானாவின் நூல்களையே 'சார்பு' நூல்களாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன உலகுக்கு ஈடுகொடுக்கும் விதமாக இறுதி வேத நூலான திருக்குர்ஆனின் கருத்துக்களுக்கு விளக்கவுரை எழுதியவர்களில் தலையாய இடம் பிடித்தவர் மௌலானா அவர்கள்.

1947, ஆகஸ்ட் 15 இல், இந்தயா-பாகிஸ்தான் இரு நாடுகளாக பிரிந்தன. இருபுறமும் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. பாகிஸ்தானில் மௌலானா மௌதூதியும், இந்தியாவில் காந்தியும் வகுப்புக் கலவரங்களைத் தடுக்க பெரும் முயற்சி மேற்கொண்டார்.


ஆனால், காந்தியின் முயற்சிகளை மட்டுமே ஊடகங்கள் பிரதானப்படுத்தின. மெளலானாவின் முயற்சிகளையும், அமைதிக்கான பெரும் பணிகளையும் இருட்டடிப்புச் செய்தன. இஸ்லாம், முஸ்லிம்களின் விஷயத்தில் ஊடகங்களின் போக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தும் ஒரே மாதிரியாக தொடர்கிறது.

தனி நபராக இஸ்லாமிய பாதையில் பயணித்த மெளலானாவின் அடிச்சுவட்டில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அணி திரண்டார்கள்.

இஸ்லாமிய வாழ்வியல் திட்டத்தை நவீன சாதனங்கள் மூலமாக மனித குலத்துக்கு எட்டச் செய்ய கடந்த நூற்றாண்டில் பாடுபட்ட மாமனிதர் மௌலானா மௌதூதி ஆவார்.

1978-இல் சவுதி அரசின் 'சவுத் அல் ஃபைஸல்' விருதுக்காக மௌலானா தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர்வதேச அளவில் நடக்கும் இந்த தேர்வை சர்வதேச அளவிலான அறிஞர் குழுதான் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் சர்வாதிகாரி 'ஷா'வின் ஆட்சி இமாம் ஆயதுல்லாஹ் குமைனியின் தலைமையில் நடந்த மக்கள் புரட்சியால் கவிழ்ந்தது. ஈரானின் அதிபராக குமைனி தேர்வு செய்யப்பட்டார்.

அதிபரானதும் குமைனி முதன்மை பணியாக தமது பிரதிநிதி குழு ஒன்றை மெளலானா மௌதூதியை சந்திப்பதற்காக லாஹீருக்கு அனுப்பி வைத்தார்.

மௌலானாவும் இஸ்லாமிய ஆட்சிக்கான நெறிமுறைகளையும், அரிய பல ஆலோசனைகளையும் அக்குழுவினருக்கு வழங்கினார்.

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.

"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார் கனத்த குரலில்.

27, மே மாதம் 1979 - இல், தமது சக இஸ்லாமிய சேவகரும் மகனுமான டாக்டர் அஹ்மது பாஃரூக்குடன் மௌதூதி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்கள். ஆகஸ்ட் 20 ஆம் நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். செப்டம்பர் 4 இல் நுரையீரல் நோய் சம்பந்தமான அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மௌலானா அவர்கள் செப்டம்பர் 22 அதிகாலையில் இறையடி சேர்ந்தார்.

"இன்னாலில்லாஹி.. வ இன்னா இலைஹி ராஜிவூன்.."

மௌலானாவின் மரணம் முஸ்லிம் உலகுக்கு பெரும் இழப்பாக அமைந்தது. உலக முஸ்லிம் சமுதாயம் சோகப் பெருங்கடலில் மூழ்கியது. சில இளைஞர்கள் மூர்ச்சையடைந்து போனதாக செய்திகளும் வெளியாயின. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து இரங்கல் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

மௌலானாவின் பௌதீக உடல் அமெரிக்காவிலிருந்து பி.ஐ.ஏ. பிரத்யேக விமானத்தில் லாஹீர் கொண்டு வரப்பட்டது. கதாஃபி ஸ்டேடியத்தில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்ட. உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்திருந்த அறிஞர் பெருமக்கள், அறிவு ஜீவிகள், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக் உட்பட பல நாடுகளின் ஆட்சியாளர்கள் அத்தொழுகையில் கலந்துகொண்டார்கள்.

எழுதுகோலையே தனது போராட்டக்கள ஆயுதமாக்கி ஜிஹாத் என்னும் அறப்போர் புரிந்த மாமனிதரின் இறுதித் தொழுகையை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அன்றைய தலைவர் பேரறிஞர் அல்லாமா யூஸீஃப் அல் கர்ளாவி தலைமைத் தாங்கி நடத்தி வைத்தார்.

இன்று மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் நம்மிடையே இல்லை. ஆயினும், அவர் விட்டுச் சென்ற பணிகள் 'ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்' வடிவில் நாடு முழுவதும் பெரும் விருட்சமாய் படர்ந்துள்ளது.

மெளலானா விட்டுச் சென்ற பணிகளை இன்னும் துடிப்பாக எடுத்துச் செல்ல வேண்டியது நமது பொறுப்பு. இந்தப் பணிகள் திருக்குர்ஆன் மற்றும் திருநபிகளாரின் சுன்னாஹ் - இவை இரண்டும் முஸ்லிம்கள் மீது சுமத்தும் பொறுப்புகளின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்டவை.

யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!
இறைவன் நாடினால். திருக்குர்ஆன் அறிமுகப்படுத்தபோய்… ஊர் எல்லைவரை விரட்டப்பட்ட கதை..

இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27:  ஈந்து கசிந்த மனம்:  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html     
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html


Share:

Monday, February 8, 2016

வைகறை நினைவுகள் 28 நான் புரிந்துகொண்ட இஸ்லாம்


நேற்றைய ஈந்து கசியும் மனம்! வைகறை நினைவுகளுக்கு https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/504733293013038 சகோதரர் Athavullah Athavullahah பின்னூட்டமிட்டிருந்தார்.

அதில், "இதையெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிற நாம்தான், யாரோ ஒருவர் உளறிய உளறலுக்காக நபிகளார், பெருநாளில் புது ஆடை அணிந்ததற்கு ஆதாரம் இல்லையே என்று புதுக் குழப்பங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்! உங்கள் சிராஜுல் ஹசனுக்குச் சொல்லுங்கள்!” – என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை வெளியிட பூரண உரிமை உள்ளவர்கள். இது இறைவன் தரப்பிலிருந்து நமக்கு கிடைத்திருக்கிற அருட்கொடை!

அதேபோல, கருத்துக்களை மறுத்துரைக்க சுதந்திரமும் உண்டு! அதுபோலதான் சகோதரர் சிராஜுல் ஹஸனும் கருத்துரைக்கிறார். பாராட்டுக்கள் எதிர்ப்புகள் என்று பின்னூட்ட வடிவிலான எதிர்கருத்துக்களும் வருகின்றன.

அந்த வகையில், சகோரர் சிராஜுல் ஹஸன் மே, 3, 2015 அன்று ஒரு பதிவிட்டிருந்தார். அதற்கு அன்றே நான் முகநூலில் https://www.facebook.com/IkhwanAmeerOnline/posts/797381923703022:0 அளித்த பதிலைதான் இன்றைய வைகறை நினைவுகளில் நினைவு கூர்கிறேன்.



சகோதரர் சிராஜுல் ஹஸன் மே, 3 -2015 அன்று இரண்டு படங்களோடு அவரது முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவிட்டிருந்தார்:

முதல் படம் முஸ்லிம்களின் “தர்கா உரூஸ் விழா யானை....!”

இரண்டாம் படம் இந்து சகோதரர்களின் “கோயில் விழா யானை...! ”

ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!

தர்காகாரர்கள் இப்படியெல்லாம் செய்தால் பிறகு ஏன் எதிர்ப்பு வராது? - சிராஜுல்ஹஸன் - என்ற கேள்வியையும் அவர் கேட்டிருந்தார்.

ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க சொல்லி சகோதரர் சிராஜுல் ஹஸன் செய்திருக்கும் ஒப்பீடு இன்றைய அறிவு ஜீவிகளில் ஒரு சிலர் தரும் இறைமறுப்பாளர் ஃபத்வாவுக்கு ஒப்பானதாக இருக்காது என்றே நான் எண்ணுகிறேன்.

இந்த பதிவுக்கு வந்தால்.. எதிர்வினையாக சிலவற்றை சொல்லியாக வேண்டும்.

சித்தாந்த ரீதியான பொதுமையை உள்வாங்கிக் கொண்டு அந்தந்த மண்ணுக்கேற்ப வேர்விட்டு வளரும் வாழ்வியல் தத்துவமே இஸ்லாம்.

பல நூறு நூற்றாண்டுகளைத் தாண்டி:
''''''''''''''''
இஸ்லாத்தின் துவக்கமே ஓதுவது.. எத்திவைப்பது. இறைநெறி வழிகாட்டுதல் என்னும் இறைவேத கொள்கையை ஏற்பவர்கள் ஓதி அறிந்து கொள்வது.. தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்கு எத்திவைப்பது. இதுதான் இஸ்லாத்தின் கட்டமைப்பு. இதைதான் நபிகளார் செயல்படுத்திக் காட்டினார்கள்.

நபிகளாரைத் தொடர்ந்து அதை இம்மியும், பிசகாமல் செய்தவர்கள்தான் நபித்தோழர்கள், அவர்களைத் தொடர்ந்து வந்த இமாம் பெருமக்கள்.

இந்த செயல்முறை வாரிசுகள் என்னும் அந்தஸ்தில், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாய் ஏற்றுக் கொண்டவர் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாய பொறுப்புகூட. அதை செயல்படுத்திக் காட்டி அந்த செயல்முறையை செய்யும்படி பணித்தவர்கள் நபிகளார்.

இந்தப் பணி, நாளை மறுமையில், “செய்தீர்களா? இல்லையா?” - என்று வினவப்பட்டு ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டிய கேள்விக்கான பணி.

23 ஆண்டுகாலம் இந்தப் பணியில் இரவு பகலாய், தன்னைப் பிணைத்துக் கொண்டும், அர்ப்பணித்துக் கொண்டும் திருப்தியடையாமலேயே, ஹஜ்ஜதுல் விதாவில், அரபாஃத் பெருந்திடலில், லட்சக்கணக்கான நபித்தோழர், தோழியர் மத்தியில் தன் செயலுருவம் குறித்து அஞ்சி, அந்த அச்சத்தாலே, “நான் இந்தப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினேனா தோழியர்.. தோழர்களே!” – என்ற கேள்வியை எழுப்பினார்கள். “ஆம்.. ஆம்..” நாயகமே..! நீங்கள் சரியாக நிறைவேற்றினீர்கள்.. அதற்கு நாங்களே சாட்சி..” – என்று அந்த ஜனசமுத்திரம் முழங்கியபோது, வழியும் விழித்திரை நீரை சுண்டியெறிந்த நபிபெருமானார், “இறைவா! நீயே சாட்சியாக இரு..!” என்று தங்கள் சுண்டுவிரலை விண்ணுயர்த்தி சாட்சியாக்கிய கனமான, ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் தோள் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு இது.


இறைவேதமும், இறைத்தூதரின் வழிமுறைகளும்
'''''''''''''''''''''''''''''''''''''
இறைவேதமும், இறைத்தூதரின் வழிமுறைகளும் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டிய எளிய அதேசமயம் அறிவு ரீதியானவை.

ஒரு 14 நூற்றாண்டு இடைவெளி. இருப்பினும் காலத்தை வென்று நிற்கிறது ஒரு கொள்கை. மண், மொழி, நிறம், இனம் என்று எல்லாவற்றையும் தாண்டி நிற்பது பெரும் வியப்பானது. இவையே இஸ்லாம் அண்டசாரங்களின் அதிபதியால் அருளப்பட்ட மார்க்கம், எக்காலத்துக்கும் பொருத்தமான வாழ்வியல் திட்டம் என்பதற்கான உதாரணமாய் நிற்பது.

பிற இஸங்களின் தாக்கங்களைத் தாண்டி:

• பல நூறு நூற்றாண்டு இடைவெளி,

• பல தத்துவங்களின் இடைமறித்தல்கள்,

• உலகப்போர்கள் என்னும் அரசியல் தலையீடுகள்,

• காலனியாத்திகம் மூளைச் சலவை செய்து கல்வி நிலையங்களில் உருவாக்கிய கம்யூனிஸ, முதலாளித்துவ முஸ்லிம் பெயர்தாங்கி வடிவங்கள்,

• இதன் விளைவாய் சொந்த சமுதாயத்தின் மீதே சொந்த சமுதாய ஆட்சியாளர்களால் இதுவரையிலும், தொடுக்கப்பட்டுவரும் யுத்தம்.

• ஆப்கானிஸ்தான், இராக், எகிப்து, சிரியா மற்றும் அரபுலகம் தோறும் இஸ்லாமிய எழுச்சி மீது தொடுக்கப்படும் அரசு ரீதியாக கட்டமைக்கப்பட்ட வன்முறை மற்றும் அதன் எதிர்வினைகள்.

இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு, பூமிப்பந்தில் ஆழமாக வேர்ப்பிடித்து வளரும் இஸ்லாம் என்னும் பெரும் விருட்சம்.


யார் காரணம்?

இந்த சூழல்களின் பின்னணியில் தமிழக முஸ்லிம்களின் கொள்கை வீழ்ச்சியின் எதிர்வினைகளின் பாதிப்புகளால்தான் சகோதரர் சிராஜுல் ஹஸன் ஆறு வித்யாசங்கள் சித்தரித்தரித்திருக்கிறார் என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

இந்த அவலத்திற்கு,

• அறிவெழுச்சி பெற்று,

• அப்படி பெற்ற அறிவெழுச்சியை பரவலாக்க மறந்து,

• தங்களுக்குள்ளேயே செயல்படுத்துவதுதே என்ற புரிதலோடு அல்லது

• அந்த அறிவெழுச்சியை ஓர் உடலின் பிற அங்கமாக கருதப்பட வேண்டிய முஸ்லிம் சமூக உறுப்பினர்களை எள்ளிநகையாட பயன்படுத்தி

• பெரும் சர்ச்சைகளுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் அறிவாளிகள் வர்க்கம்தானே காரணம்.

இஸ்லாத்தின் பிரதிநிதிகள் யார்?

இஸ்லாத்தின் மூலாதாரம்,

• பல பிரிவுகளாய் ‘நிறுவன (பிராண்டட்) அறிவெழுச்சி’யாய் பிளவுபட்டு

• அதுவே இஸ்லாமயமாக்கப்பட்ட நிலையைத் தாண்டி,

• தங்களுக்கு நம்பிக்கைகளாய், வழிமுறைகளாய் ஊட்டப்பட்டவற்றையே

• அவையே உண்மை நெறி என்று விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு,

• அவை சரியோ, தவறோ என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில்

• அவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும்

பாமர மக்கள்தான் இஸ்லாத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தினால் என்ன தவறு இருக்க முடியும்? அல்லது இத்தகைய எளிய பாமரர்கள்தான் இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இறையில்லங்களில் பாங்கொலி கேட்டதும், மூன்று வேளை உணவுக்கும் உத்திரவாதம் இல்லாத ஏழை, பாழைகளான ஜைனப்புகளும், ஃபாத்திமாக்களும்தான் உடலை மறைக்க போதிய ஆடை இல்லாத நிலையிலும் இழுத்து தலையை மறைத்துக் கொள்கிறார்கள்.

• ஆண்டில் இருமுறை எட்டிப்பார்ப்பவர் என்று அறிவெழுச்சி பெற்றவர்களின் பல்கலைக்கழகங்களால் பட்டமளிக்கப்பட்ட ரிக்ஷா ஓட்டி பிலால்களும்,

• நடைபாதை வணிகப் பெருமக்களான எளிய அபூபக்கர்களும்

• தங்கள் அன்றாட கஞ்சியளிக்கும் பெரும்வணிகங்களுக்கு, கூலி தொழில்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு

• கைக்கட்டி, வாய்பொத்தி,

• சுன்னத்தான கோலத்தோடு பள்ளியின் ஒருமூலையில் அமர்ந்து

• இமாம் சாஹெப்பின் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்காத பயான்களையும்

• உள்வாங்க முடியாமல் தவித்து தடுமாறினாலும் அவற்றை தேவ வாக்காய் மதிக்கிறார்கள்.

இவர்கள்தான் இஸ்லாத்தின் பிரதிநிதிகள். சமய நல்லிணக்க விரும்பிகள். மண்ணுக்கேற்ப இஸ்லாத்தின் உண்மை பிரதிநிதிகள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?


பெரும் கவனமாய் செய்ய வேண்டிய பணி

புதையுண்டு போன ஒரு சிற்பத்தை தொல்லாய்வு நிபுணர்கள் கவனத்துடன், அகழ்ந்து மெல்ல மெல்ல தூசு தட்டி அதன் உண்மை வடிவம் தருவதுபோல இவர்களை வடிவமைப்பதில்தானே நிஜங்களான தத்துவத்தின் நடமாட்டங்களை உயிர் பெற முடியும்? இப்படிதானே பெரும் கவனமாய் நபிகளார் வடிவமைத்து எளிய மனிதர்களை மாபெரும் ஆளுமைகளாக மாற்றிக் காட்டினார்கள். வரலாற்றின் நாயகன், நாயகிகளாக்கினார்கள்! இத்தனை நூற்றாண்டுகளைத் தாண்டியும் பெருமதிப்புடன் அந்தப் புனிதர்களின் பெயர்களை உச்சரிக்க செய்தார்கள்.

செய்ய வேண்டியவை:

• தமது கொள்கையில் பின்தங்கிப் போன சமுதாயமான முஸ்லிம்களை சாதாரண அரசியல்வாதிகள் போல வாக்கு வங்கிகளாய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

• பல குழுக்களாய், பிராண்டட் நிறுவனங்களாய் பிளவுப்பட்டு கிடக்கும் அறிவு ஜீவிகள் தங்கள் பிணக்கு, பூசல்களுக்கு அடிப்படையாய் உள்ள சிறு காரணங்களைத் தவிர்த்து அவற்றையே கொள்கையாய் காட்டாமல், உட்பூசல்களை மறந்து பாமரர்களை அரவணைத்து கொள்ள வேண்டும்.

• பொத்தாம் பொதுவான இஸ்லாமிய கல்வியை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

இஸ்லாம் என்னும் அறிவொளிதான்.. அந்த சத்தியப் பேரொளிதான் அறியாமை என்னும் காரிருளை ஓட்டவல்லது என்கிறது வரலாறு.

28 வயது வரை என்னைப் போல இஸ்லாத்தின் அடிப்படைகள்கூட ஏதும் தெரியாமல் இறைமறுப்பு கொள்கைளின் முகவர்களாக முன்னணியில் நின்று கொடி பிடித்தவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் பேரொளியால் ஈர்க்கப்பட்டது இப்படிதான்!

பலாத்காரம் இல்லாத, எள்ளி நகையாடாதா, அறிவுரீதியான தர்க்கங்களுக்கு பொறுமையாக பதிலளித்து யதார்த்தவாதத்தைக் கற்றுக் கொடுத்த இஸ்லாமிய அழைப்பாளர்களால்தான் அது முடிந்தது.

கருணையாளனின் திருமுன்:

இறுதியாக, இறைவனின் பேரருள்.. மற்றும் பெரும் கருணையின் விசாலத்தில்…

• எள்ளி நகையாடப்படும்,

• துச்சமாக மேடைதோறும் வெளிச்சம் போட்டு காட்டப்படும்

• பாமரத்தனமான..

• பத்துப்பாத்திரங்களைத் தேய்த்து, கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தும், ஜைனப்புகளும், ஃபாத்திமாக்களும்,

• நடைபாதைதோறும் கடை விரித்து

• அன்றாட பொழுதுகளை பெரும் திண்டாட்டத்துடன் கழிக்கும்

• ஏழை, எளிய பிலால்களும், அபூபக்கர்களும் மன்னிக்கப்பட்டு சுவனவாசியாகலாம்!

நீண்ட ஆடை,

காற்றில் பறக்கும் தாடியுடன்,

வெள்ளையும், சொள்ளையுமாய் மடிப்பு கலையாத ஆடைகளுடன்

மேடைதோறும் சொந்த சமுதாயத்தையே இழிவுபடுத்தும்

அவர்களின் நடைமுறைகளை சீர்த்திருத்தும் நோக்கம் மற்றும் செயல்முறைகள் ஏதுமின்றி எள்ளி நகையாடும்

பேரறிஞர்கள், அறிவு ஜீவிகள், கொள்கை கோமான்கள் எல்லாம் இறைவனின் பெரும் கோபத்துக்கு ஆளாகலாம்.

நான் புரிந்து கொண்ட இஸ்லாம் இதுதான்!

இறைவன் நாடினால்… மற்றொரு வைகறையில் நினைவுகள் தொடரும்.


இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27  ஈந்து கசிந்த மனம்  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html    


Share:

Saturday, February 6, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகை: இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?


நான் ஒரு இந்து, முஸ்லிம், கிருத்துவன் ஏன் யூதனும்கூட என்று சொன்ன காந்தி கடைசிவரை இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொண்டவர். "ஹே.. ராம்.. ஹே.. ராம்..!” - என்று தான் நம்பிய கொள்கையை உச்சரித்தவாறே உயிர் நீத்தவர். அவர் சொன்ன ஒற்றைச் சொற்றொடரை மட்டும் தமது கட்டுரையில் மேற்கோளாய் இழையோடவிடும் சகோதரர் சமஸ் இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை ஆழ்ந்து ஊடுருவ மறுக்கிறார். 

சங்பரிவார்கள் போல, முஸ்லிம்கள் இந்திய சமூக அமைப்பில் யாரையும் ஆதிக்கம் செலுத்த முயலவில்லை. மேலும், நடந்துமுடிந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடுகூட இஸ்லாமிய சமூக உள்ளீட்டு கட்டுமான மராமத்து பணிகளுக்கான ஒரு பிரயத்தனம். அது ஒரு அறிவு சம்பந்தமான விவாதகளம். ஒரு சீர்த்திருத்தத்துக்கான வழிமுறை. அதை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதில் சமூகத்திற்குள் கருத்துவேறுபாடுகள் உண்டு என்பது வேறு விஷயம். 

அடுத்ததாக, ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம், மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது.. ஒரே அரசு - என்றும் சமஸ் குறிப்பிடுகிறார். அந்தரங்கமானது இதில் ஒன்றுமில்லை... சர்வதேச அளவில் ஒவ்வொரு நாளும், தனித்தும், கூட்டாகவும் முஸ்லிம் சமூகம், “வணக்கத்துக்குரியது பரம்பொருள் அன்றி வேறில்லை! முஹம்மது நபிகள் அப்பரம்பொருளின் இறுதித்தூதர் ஆவார்!” - என்று முழங்கும் பாங்கோசையின் ஒரு பகுதி பிரகடனமே அது. 

அந்த பாங்கோசையில், உட்பட்டிருக்கும் “இலாஹ்” என்ற சொல் பரம்பொருளான இறைவன் வெறும் வணக்கத்துக்குரியவன் மட்டும் அல்ல. சட்டங்களும் அருளியவன் என்பதும் அடங்கும். முழு பிரபஞ்சமும் இறைவனின் இந்த சட்டங்களின் அடிப்படையில் சீராக இயங்கிவருவதுபோல, மனிதனும் இந்த சட்டங்களுக்கு அடிபணிய வேண்டும் என்ற வாக்குறுதியைதான் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளும்போது முன்மொழிகின்றான். மனித சட்டங்களின் குளறுபடிகளிலிருந்து இறைச்சட்டங்களின் பக்கம் திரும்புவது ஒன்றுதான் மனிதர்களுக்கான ஈடேற்றம் என்று பகிங்கரமாக முன்மொழிகிறது இஸ்லாம். 

ஷிர்க் என்பது வெறும் வணக்க வழிமுறைகளில் செய்யும் இணைவைப்பு மட்டுமல்ல. அரசியல் அமைப்பில் செய்யும் இணைவைப்பும் உட்படுத்தியது.

முதலாளித்துவவாதி தன் கொள்கை, கோட்பாடுகளை முன்வைத்து முயல்வதுபோல, ஒரு பொதுவுடமைவாதி கம்யூனிஸ சித்தாந்தத்தை மேலோங்க செய்ய முன்வருவதுபோல, ஒரு முஸ்லிமும் இறைச்சட்டங்களை முன்நிறுத்தி அதற்கான அமைப்பை உருவாக்குவதில் என்ன ரகசியம் வேண்டி கிடக்கிறது சகோதரர் சமஸ்?

அதேபோல, வஹாபியிஸம் என்ற சொல்லாக்கத்திற்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மேற்கத்தியவாதிகளின் திட்டமிட்ட சொல்லுருவாக்கம். சமூகத்திற்குள் சீர்த்திருத்தம் என்பது அவசியமாயினும், தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அனுதினமும் போராடிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பில் அது மெல்ல,  மெல்லதான் நடைபெறுவதற்கு சாத்தியமாகும். 

ஆக, சமஸ் இஸ்லாத்தை புரிந்துகொள்ள இன்னும் முன்னெடுக்க வேண்டும். 

சகோதரர் சமஸ்ஸின் கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் பொதுவெளியில் அறிவுஜீவிகள் எப்படியெல்லாம் கருத்தாக்கம் செய்கிறார்கள் என்பதற்காக 04.02.2016 அன்று தி இந்துவில் வெளியான அவரது கட்டுரையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன். 

ஆனால், அழகிய பதில் அளிக்க வேண்டிய முஸ்லிம் சமூகமோ உருப்படியாய் ஒரு கருத்தையும் (தி இந்து இணைய இதழில்) முன்வைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இனி சமஸ் சொல்வதை கேளுங்கள்...  - இக்வான் அமீர்.

““““““““““““““““

திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன?” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்?” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே?” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே!” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா? உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்?” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா?

சென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்!” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது!”

வஹாபிஸ அச்சுறுத்தல்

சர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்.

1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.

மிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.

சவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது? அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது? சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன? இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு!

வெற்றிடம் உருவாக்கும் செல்வாக்கு

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரைகூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடுகளின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ்லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர். வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு!

இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.

இந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பலம்

இஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.

காவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.

தமிழகத்தில் பல கோயில்கள் - மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல் மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.

இந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன?

பிளவுகள் குடும்பத்தில் தொடங்குகின்றன

அதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும்பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழா நடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். போன இடத்தில் பொங்கல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு உண்மையான முஸ்லிமா?’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா?”

எனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டவர். நாளடைவில் அதன் குரூர முகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளியேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக்கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் சொல்லியிருந்தார்.

“பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும் தந்திருந்த நாடு பிரிட்டன். என்னுடைய இளம் வயதில் நான் பிரிட்டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத்தையே உணராதவனாக இருக்கிறாய்?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள். அதுவரை நானோ, என் குடும்பமோ அறிந்திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக மாற்றினார்கள். சீக்கிரமே என் வாழ்க்கை முறை மாறியது.

ஒருகட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்தினரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத்தேன். பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல்லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போனால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண்களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச்சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டியவர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேசமானார்கள். ‘நீ மார்க்கத்தைவிட்டு விலகுகிறாய்’ என்றார்கள்.

சுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ்லாமே எனக்குப் பிடித்தமானது. எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது. வெளியேறிவிட்டேன். இன்றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். இந்தக் கோபப் பயணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”

புனிதம் எனும் கொடுஞ்சொல்!

உலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சபை பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.

இயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.

அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூகம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.

இந்தியாவில் சிறுபான்மை அடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மை அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை!

நன்றி:  தி இந்து - தமிழ், 04.02.2016. 
Share:

Wednesday, February 3, 2016

வைகறை நினைவுகள் - 27: ஈந்து கசிந்த மனம்



உலகம் முழுக்க ஈகை திருநாள் எனப்படும் ரமளான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும் நேரத்தில் இந்த வரலாற்று சம்பவம் நெஞ்சில் எழுவதிலிருந்து தடுக்க முடியவில்லை.

மீண்டும்… மீண்டும் நெஞ்சில் நிழலாடும் அந்த சம்பவத்தை நீங்கள் காண என்னோடு கால எந்திரத்தில் ஏறி சற்றேறக் குறைய 14 நூற்றாண்டுகளுக்கு பின் செல்ல வேண்டியிருக்கும்.

குதுகலமும், உற்சாகமும், உணர்வுபூர்வமாய் இருக்கும் அந்த சம்பவத்தின் நாயகர் எத்தனை ஆளுமை பண்புக்குரியவராக வரலாற்றில் திகழ்கிறார் … ஆஹா…!! அன்னாரை தலைவராக ஏற்றுக் கொள்வபர் பேறு பெற்றவர்..! மலைப்பே ஏற்படுகிறது.

வாருங்கள் என் நினைவுகளோடு நீங்களும், ஒரு நடை மதீனா சென்றுவிட்டு வருவோம்.


கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிற சாயலை படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.

அன்று ரமளான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்ற நன்னாள் அல்லவா அது!

பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைக்கட்டின.

நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ’ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.

மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமளான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.

தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.


எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில், தெருவொன்றில் அமர்ந்திருந்த சிறுவனைக் கண்டார். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.

அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் தெரிவித்தார்.

“மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.

சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்திரவு செய்யாதீர்கள்?” – என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே!

சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமளான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அன்பொழுக கேட்டார்.

இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனை தலை நிமிராமலேயே பேச வைத்தது.

“எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். எனது மாற்றான் தகப்பனாரோ என்னை சேர்த்துக் கொள்வதேயில்லை! ரமளான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” – என்று கூறிவிட்டு சிறுவன் “ஓ” வென்று அழலானான்.


நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.

“மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே..!” என்று ஆறுதல் சொன்னார்.

இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.

கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.

“இறைவனின் திருத்தூதரே! தாங்கள்… தாங்களா?” – மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.

ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தையார். எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?” – என்றார் அன்பொழுக.

உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?

அந்த அனாதைச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார் அவனை குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார். தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமளான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.

ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமளான் பெருநாள்.


எவ்வளவு எதார்த்தமாக அன்பு நபிகளார் அதை செயலுருவில் காட்டினார்..!!

அன்பு அண்ணலே..! உங்களை தலைவராய் அடைந்தமைக்கு உள்ளம் மகிழ்கிறேன். உவகையால் பூரிக்கிறேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இதயம் கனிந்த ரமளான் வாழ்த்துக்கள்!

- இறைவன் நாடினால்… மற்றொரு வைகறையில் நினைவுகள் தொடரும் 


இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html    

Share:

Monday, February 1, 2016

வைகறை நினைவுகள் 26: ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்!


 1990-களின் ஒரு வெள்ளிக்கிழமை.

சென்னை அண்ணாசாலை மக்கா மஸ்ஜித்.

மக்கா சுடர் இதழ் ஆசிரியரும், மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமுமான மௌலான சுலைமான பாகவி அனல் கக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். கையில் ஐ.எஃப்.டி வெளியீட்டு திருக்குர்ஆன் மொழியாக்கம்.

மௌலானாவின் உரை முழுவதும் திருக்குர்ஆன் வெளியீட்டுக்கு எதிராகவே இருந்தது. கூடவே, மொழியாக்க பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருந்த மௌலான குத்புத்தீன் பாகவிக்கும் அர்ச்சனை.

அப்போதுதான், ஐ.எஃப்டி. நிறுவனம் மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெபின் தளராத முயற்சியால் தமிழ் கூறும் நல்லுலகு பயன்பெறும் விதமாக திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருந்தது. அதுவும், பெரும் அறிஞர்கள், தமிழ் மொழி வல்லுநர்கள், ஆர்வலர்கள் கொண்ட குழுவுடன் இணைந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அது வெளியாகியிருந்தது.

திருக்குர்ஆன் மொழியாக்கம் வெளியீட்டு அறிமுகமாக வெள்ளிக்கிழமையில் முக்கிய பள்ளிகளுக்கு கொண்டு சேர்ப்பதென முடிவாகியிருந்தது.

அண்ணாசாலை மக்கா பள்ளிக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த குழுவில் மௌலானா குத்புத்தீன் அஹ்மது பாகவி ஐ.எஃப்.டியைச் சேர்ந்த தம்பி அஷ்ரப் அலி மற்றும் பலர் இருந்தனர்.


இந்தத் தகவல், மௌலான சுலைமான் பாகவிக்கு தெரிந்து அவர் எங்களை வெள்ளிஉரையில் விளாசிக் கொண்டிருந்தார். கேட்போரை ஆக்ரோஷமாக்கி உணர்ச்சிவசப்பட வைக்கும் முறைமை அது! எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் திருக்குர்ஆன் பிரதிகளோடு பள்ளிக்கு வெளியில் நாங்கள்.

அந்தச் சூழலில்தான், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து (1979-1988) அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ரஷ்ய கரடி தனது படைகளை திரும்பப் பெற்று நாட்டைவிட்டு வெளியிருந்தது. ஈடு இணையற்ற முஜாஹிதீன்களின் கொரில்லாப் போராட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல் பலத்த இழப்புக்கு ஆளாகி வெளியேறியிருந்தது. ஒருவிதத்தில் அது புறமுதுகு எனலாம்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தனது இறைமறுப்பு கொள்கைகளை அந்த மக்கள் மீது திணித்திட முயன்ற ரஷ்ய ஏகாத்திபத்யம் படுதோல்வி அடைந்தது. வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஆப்கானின் சுதந்திரப் போராளிகள் ஒரு வல்லரசை வீழ்த்தியதற்கு பின்புலமாக இருந்தது இறைவேதமான திருக்குர்ஆன்தான்!

இறைநம்பிக்கையாளர்களை ஓரணியில், திரட்டி அவர்களை எஃகு நிகர் அரணாக்கி, சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சர்வ வல்லமையுள்ள செம்படையினரை ஓட ஓட விரட்டச் செய்த நவீன வரலாற்று நிகழ்வு அது.

20-ம், நூற்றாண்டில் வீரம் சொரிந்த அறப்போராட்டத்தின் மூலமாக ஆக்கிரமிப்பாளரை ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்கள் விரட்டியடித்தனர். அதற்காக அவர்கள் கொடுத்த விலையும் சாதாரணமானதல்ல. மனைவி, மக்கள், உற்றார், உறவுகள், வீடு. வாசல்கள் என்று அனைத்தையும் இழந்துதான் அந்த களத்தில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள்.

ஆக்கிரமிப்பாளர்களுடனான அந்த யுத்தத்தில் முஜாஹித் ஷஹீத் அப்துல்லாஹ் ஆஸம் மற்றும் அவரது இரண்டு மகன்கள் முன்னணியில் இருந்தனர். பயணித்த வாகனத்தில் அவர்கள் குண்டுவைத்து கொல்லப்பட்டபோது, துன்பகரமான அந்த செய்தியை அவரது மனைவியார், “எல்லா புகழும் இறைவனுக்கே!” – என்ற ஒற்றை வரியில் தாங்கிக் கொண்டார்.


ஆக்கிரமிப்புக்கும், அநீதிக்கும் எதிரான ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் மறுமையை முன்வைத்து நடந்த அந்த அறப்போரில் ஒவ்வொரு போராளியும், அவரது குடும்பத்தாரும் திருக்குர்ஆனின் வார்ப்பாகவே இருந்தார்கள்.

அப்துல்லாஹ் ஆஸம் வீர மரணம் அடைந்தபோது, அல் ஜிஹாத் என்ற பத்திரிகை அவரைப் பேட்டிக் கண்டது. அப்போது, அந்த முடிவு (தனது கணவரும், பிள்ளைகளும் கொல்லப்பட்டது) தான் எதிர்பார்த்ததுதான் என்கிறார். தனது எஞ்சிய பிள்ளைகளையும் இறைவழியில் அர்ப்பணிக்க தயாராகவே இருக்கிறேன் என்று கணல் கக்குகின்றார்.

அவரது ஐந்து வயது மகன் அந்த பேட்டியில் இப்படி சொல்கிறான்:

உன் வயதென்ன?

ஐந்து.

உன் தந்தை எங்கிருக்கிறார்?

சொர்க்கத்தில்.

தந்தையை கொலை செய்தது யார்?

இறைமறுப்பாளர்கள்.

எவ்வாறு கொன்றார்கள்?

வாகன இருக்கையின் கீழ் குண்டு வைத்து கொன்றார்கள்.

அவர்களோடு இருந்தவர்கள் யார்?

அண்ணன் முஹம்மதுவும், இப்ராஹீமும். இவர்களும் தந்தையாருடன் சொர்க்கத்தில் இருப்பார்கள்.

அவர்களிடம் செல்ல விருப்பமா?

ஆமாம்! நானும் ஷஹீதாகி (அறப்போரில் கொல்லப்பட்டு) என்னை கப்ரில் (மண்ணறையில்) வைத்தவுடன், வானவர் தலைவர் ஜிப்ரீயல் என்னை அவர்களிடம் (தந்தையார் மற்றும் சகோரர்கள்) அழைத்துச் செல்வார்.

ஆக, அக்கிரமத்துக்கும், அநீதிக்கும் எதிரான வலிமையான, சிதைக்க முடியாத மனப்போக்கை திருக்குர்ஆன் ஏற்படுத்தியதே செம்படையை ஆப்கானிஸ்தானிலிருந்து விரட்ட காரணமானது.

இந்த வரலாற்று சூழலில்தான், திருக்குர்அன் பல்வேறு சிரமங்களுக்கிடையே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது.

மொழியாக்க அறிமுகத்துக்காக, அண்ணாசாலை மக்கா மஸ்ஜித்துக்கும் சென்றிருந்தோம்.

உள்ளே மெளலானா சுலைமான் பாகவி எங்களை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.


இந்நிலையில், வெளியில் திருக்குர்ஆன் பிரதிகளை இருகைகளிலும் ஏந்தியவாறு, சற்று உயரமான இடத்தில் நின்றுகொண்டு நான் இப்படி முழங்கலானேன்:

“ரஷ்ய கரடியை ஆப்கானிஸ்தானிலிருந்து ஓட ஓட விரட்டிய வேதநூல் இது! ரஷ்ய கரடியை ஆப்கானிஸ்தானிலிருந்து ஓட ஓட விரட்டிய திருக்குர்ஆன் இது!”

மெளலான சுலைமான் பாகவியின் உரையால் உணர்ச்சிவசப்பட்டு எங்கள் மீது வன்முறையை பிரயோகம் செய்ய வந்தவர்கள் நாங்கள் கொண்டுவந்திருந்த நூற்றுக்கணக்கான திருக்குர்அன் பிரதிகள் மக்களிடம் சேர்ந்துவிட்டதை நேரில் கண்டு இயலாமையால் திரும்பி சென்றுவிட்டார்கள்.

வைகறை நினைவுகள் இறைவன் நாடினால்… தொடரும்.

 வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html      

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive