NewsBlog

Friday, July 17, 2015

வைகறை நினைவுகள் - 2, இந்நேரம்.. புதைச்ச இடத்தில் புல் முளைஞ்சிருக்கும்.



மே 29, 1977, அசோக் லேலண்ட் நிறுவனத்தில் அப்போது மூன்றாமாண்டு பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த அன்றைய மாலை நேரம்.

நிறுவனத்துக்கு வெளியே யாரோ அழைப்பதாக மெயின் கேட்டிலிருந்து அழைப்பு வந்தது.

வெளியே ரமணி நின்றிருந்தார். “ஒரு முக்கியமான விஷயத்தைப் பேச வேண்டும்” - என்றார்

“உங்க விவகாரம் வீட்டில் தெரிந்துவிட்டது. பழவேற்காடுக்கு பெண்ணை கடத்தி செல்ல இருக்கிறார்கள். அதனால் ‘அவர்’ தப்பித்து தன்னிடம் அடைகலம் கோரி வந்துள்ளார். தற்போது திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் அவரை நிற்க வைத்து வந்திருக்கிறேன். கிளம்புங்கள் போகலாம்!” என்று ரமணி பரபரப்புடன் சொன்னார்.

ரமணி எனது மனைவியின் தூரத்து உறவினர் என்று கேள்விபட்டிருக்கிறேன். அவரை அதுவரை நேரில் சந்தித்ததில்லை.

கடற்கரைக்கு சென்று, கட்டியப் புடவையுடன் வீட்டை விட்டு என்னை நம்பி வந்தவரை அன்று இரவு நண்பரின் வீடொன்றில் தங்கவைத்தேன். அதைத் தொடர்ந்து ஜுன் 3, 1977-ல், பதிவு திருமண அலுவலகத்தில் சட்ட ரீதியாக திருமணம் நடந்தது.

இருதரப்பு பெற்றோரும் வீட்டைவிட்டு விரட்ட ரூ15/-க்கு, கூரை வீட்டில் வாடகை பிடித்து எங்கள் வாழ்வைத் தொடங்கியபோது, எனது மாதாந்திர அரசு உதவித்தொகை ரூ.130/- அதிலும் பிடித்தம் போக ரூ.127/-

எங்கள் ஆரம்ப வாழ்க்கையில் பயன்படுத்த என்று எந்த வீட்டுப் பொருட்களும் இல்லை. எனது பயிற்சி காலமும் முடிவடையவில்லை. அதைத் தொடர்ந்து நிரந்தரமான வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதமும் இல்லை.

ஓராயிரம் 'இல்லை'களுடன் எங்கள் இல்வாழ்க்கை தொடங்கியது இன்று நினைத்தாலும் வியப்பளிக்கிறது.

தையல் இலைகள்தான் எங்கள் சாப்பாடு தட்டுகள். ஓரிரு மாதத்திற்கு பிறகு ஒரு அலுமினிய தட்டொன்றை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தோம். இன்றும் அந்த வாழ்க்கையின் நினைவாக அதை பத்திரமாக பாதுகாத்து வருகிறோம்.



எங்கள் குருவிக்கூட்டுக்கான ஒரு மாத பட்ஜெட் மற்றும் ஒரு நாள் செலவை அன்றைய நாட்குறிப்பு பிரதியை இங்கு இணைத்துள்ளேன் பாருங்கள்! பிரமிப்பாக இருக்கும். எப்படி இருந்த விலைவாசி இப்படியாகிவிட்டதே என்று வியப்பு ஏற்படுத்தும்.

என் மாமானார் அன்று செல்வாக்கு கொடிக்கட்டிப் பறக்க அரசியல் கோலோச்சியவர். அவரது திருமணமும் இருமனங்கள் ஒப்பிய திருமணமாக இருந்தபோதும், அவர் ஏனோ அவரது மரணம்வரையிலும்கூட எங்கள் திருமணத்தை ஒப்புக் கொள்ளவேயில்லை! 

“உங்கள் மகளை உங்களிடமிருந்து பிரித்த ஒரு தவறைத் தவிர வேறென்ன தவறு  செய்துவிட்டேன் நான்? ‘மாமா!’ என்று நான் வாய் நிறைய அழைக்கும் ஒரு சந்தர்பம்கூட எனக்கு தராமல் போய்விட்டீர்களே!” – என்று ஜனவரி 31, 2012 அன்று அவரது மரணத்தின் போது உடலின் அருகே என்னையறியாமல் கண்ணீர் விட்டு புலம்பினேன்.

எனது மாமனாரும், அவரது அரசியல் செல்வாக்கும், அவரது உறவினரின் ஆள்வளமும் அன்றாடங்காய்ச்சியின் மகனான என்னை என்ன வேண்டுமானாலும் செய்திருக்க முடியும். ஆனாலும், என் மீது ஒரு சிறு கீறலும் விழவில்லை. இறைவனின் பேரருள் அது! உங்க நடத்தைகள்தான் உங்களை காப்பாற்றியது தப்பிச்சீங்க போங்க!” - என்று என் மனைவி பின்னாளில் சொல்லி சிரிப்பார்.

ஆம்.. என்னை புதைச்ச இடத்தில் இந்நேரம் புல் முளைச்சிருக்கும்!

எனது படிப்பு, வீடு, எனக்குப் பிடித்த விளையாட்டான குத்துச் சண்டை. (ஒரு நல்ல பாக்ஸர் (படம்) என்றுகூட இளமையில் நான் பெயர் எடுத்ததும், பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்ததும், திருமணத்துக்கு முன் நடந்த எனது கடைசி போட்டியின் போது எனது மனம் கவர்ந்தவள், வெற்றியோடு திரும்பி வாங்க என்று வாழ்த்தி அனுப்பியதும் ஒரு உபரி தகவல் இங்கே) செடி, கொடிகள், வளர்ப்பு பிராணிகள், நல்ல நண்பர்கள், ஓய்வு நேரத்தில் நூலகம் என்றுதான் எனது இளமை கழிந்தது.

உண்மைதான்! ஒரு தீய பழக்கமும் இல்லாமல் இதுவரையிலுமான எனது வாழ்க்கை கழிந்துவிட்டது. 

ஒரு தாய்க் கோழி தன் குஞ்சுகளை பொத்தி பொத்தி வளர்ப்பதுபோலவே இறைவன் தனது அடியார்களின் மிகச் சிறிய அடியானான என்னை பாதுகாத்தான். இறைவனின் காருண்ய நிழலால் நான் ஏற்கனவே சூழப்பட்டிருக்கிறேன் என்று கண்கள் பனிக்க இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.


இடதுசாரி இயக்கங்களில் அதி தீவிர பங்கெடுத்து வந்த எந்த நம்பிக்கைகளையும் சாடாமல் அதேபோல, எந்த நம்பிக்கைகளையும் ஏற்காமல் சமூக மாற்றங்களுக்கான விடியலை எதிர்நோக்கி நான் நகர்ந்து கொண்டிருந்தேன்.

எனது துணைவியாரோ ஒரு சராசரி பெண்ணாக அவர் பிறந்து வளர்ந்த சமயத்தின் நம்பிக்கைகளை சார்ந்தவராக, சிலைகளை வைத்து வீட்டில் வழிபடுபவராக இருந்தார்.

அந்த சமயத்தில்தான் என்னை பெருமானார் அண்ணல் நபிகளார் பூரணமாக ஆட்கொண்டிருந்தார். அன்னாரது ஆளுமைப் பண்புகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. காலங்களை, தூரங்களை, மொழிகளை, நாடுகளை, கலாச்சார பண்பாடுகளை எல்லாம் தாண்டி அவர் என்னை ஈர்த்துவிட்டிருந்தார்.

இதுவரையிலும் என்னை வேறொரு கொள்கையின் பக்கம் முகம் திரும்பிப் பார்க்கக்கூட தேவையில்லாமல் செய்த அந்தத் தலைமைப் பண்பாளரை தரிசித்தேன்; அன்னாரது காலத்தில் புகுந்து.

அன்பு நபிகளாரின் அருமைத் தோழர், தோழியரின் கால்தூசுக்கு நான் ஈடில்லையானாலும் ஒரு நல்ல தோழனாக அந்த ஆளுமையாளர்களின் அனைவர்க்கும் பின்னால் நானும் ஒரு மிக மிக மிகச் சிறிய தொண்டனாய் நின்றேன்.

ஒரே இறைவன். ஒரே கொள்கை. ஒரு மக்கள். ஒரே தலைமை என்று அற்புதமான வாழ்க்கைய முன்னெடுத்துச் சென்ற அந்த ஆரம்ப தருணங்களை வார்த்தைகளால் என்னால் வடிக்கவே முடியாது.

இறைவனின் பேரருளுக்கு நான் ஆளானேன் என்ற பாக்கியத்தைவிட உலகில் வேறு சிறப்புடையது எதுவாக இருக்க முடியும்?.

இந்த இறையருள் பெருமழை என் குடும்பத்தார் மீதும் பொழிய வேண்டுமே நான் என்ன செய்ய?

இந்தக் கவலை என்னைத் தொற்றிக் கொள்ள நான் என்னென்ன முயற்சிகள் எடுத்தேன்? எனது அணுகுமுறை எவ்வாறு இருந்தது? என்பதை இறைவன் நாடினால்… 

... இறைவன் நாடினால்... நாளை வைகறை நேரத்தில்… 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: https://pamarannews.blogspot.com/2015/07/1.html


   
Share:

6 comments:

  1. Nice to read how you started your married life. Budget is amazing. When we got married in 1967, my husband's salary in Binny's was 250.

    ReplyDelete
  2. அமீர்!
    ஆம்! அப்படித்தான் நாவில் ஊறியுள்ளது இப்பெயர். இக்வான்! ஏனோ அது அவ்வளவாய் எனக்குள் இறங்க இல்லை.சரி, இப்ப அதுக்கு என்ன என நினைத்தால் அதைப்பற்றி ஏதும் வார்த்தை இல்லை.
    உமக்கான ஓர் அடியாரை இறை எங்கோ ஓர் அணுவில் நிறைத்திருக்கும் போதில் அந்த அணு அன்றோ வாழ்க்கைத்துணையாய் வந்துள்ளது.
    உன்னால் முடியும் என்னை வாழவைக்க. என்னாலும் முடியும் அமீர் உம்மோடு வாழ என்றதோ என்னவோ அந்தப் பருவ மங்கை. ஓர் ஆண் அடிக்கடி மாற வாய்ப்புள்ள உலகிலே பெண் ஒருவனை நினைத்துவிட்டாள் எனில் அஃது மட்டுமே கற்பு என்கிறார் வள்ளுவர்.
    அவள் சோர்விலாள்.மாட்சிமை பொருந்தியவள்.கற்பெனும் திண்மை பெற்றவள் எனப் பல இடங்களில் பெருமை பேசும் வள்ளுவர் ஆணின் வாழ்வில் அவளன்றோ உயிர் என்கிறார். உடம்பொடு உயிரிடை என்ன ? வினாவைத்தொடுக்கிறார். மற்றென்ன இருக்கிறதாம்! மடந்தையொடு எம்மிடை நட்பு என்கிறாரே! எத்தனையோ நட்புகள் இருக்கலாம்! கைப்பிடித்தபோதில் அவள் மடந்தையாமே!மடந்தை என்பது ஆறாவது பருவம். ஆக ஆறும் ஏழும் பெருக்கினால் முப்பத்து இரண்டு அல்லவா விடை. முதிர்கன்னி வயதுடை ஆனாலும் அவளின் இளமை என்னவோ அன்று பார்த்ததும் அதே நிலா என்பதுபோல் ஒளியைப் பாய்ச்சும். நினைத்துப் பார்க்கிறேன் அமீர்! பெண்ணைப் பெற்றவர் எப்படி இருந்தாலும் ஆழ்மனக்காதலில் அந்த வங்கக்கடல் போல் மிக அழகாக இருக்குமே! கைப்பிடித்தபின் பொருளா.....! தாரமா.....! பொருளில்லா வாழ்க்கையில் பொருளைப் பெருமையாக கொள்ளாமல் தாரம் நிழலாக, ஒளியாக உடனிருக்கிறாளே! என்னே பெருமை இது அமீரின் அகத்திணையில்.
    இன்னுமாய் இணையர் வாழ்தல் வேண்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன் அமீர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி இளம்பிறை Ki.Ilampirai

      Delete
  3. Simply awesome sir enaku intha books read pandra habbits la illa but unga story innaikutha 1st time read pandren enakum enum naraiya read pananum nu thonuthu thank you sir♥️

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive