NewsBlog

Thursday, July 30, 2015

அழைப்பது நம் கடமை - 2: ஒரு கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும்!



அலுவலகத்தின் கழிப்பறையில் நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சியுறச் செய்தது. மெத்தப் படித்த முஸ்லிம் அவர். நல்ல பதவியில் இருப்பவர்கூட. பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார். இத்தனை நல்ல அம்சங்கள் கொண்ட அவர் நடந்து கொண்டவிதம் தான் என்னை பெரிதும் பாதித்தது. நீர் வசதி இல்லாத இடத்தில் நின்று கொண்டு அவர், தனது இயற்கைத் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் ஏராளமான கழிவறைகள் - குழாய்கள் என்று நவீனமாக அமைக்கப்பட்டிருந்த கழிவறை அது. இருவகையான இயற்கைத் தேவைகளில் ஒன்றை மட்டும் சரியாக நிறைவேற்றுபவர் மற்றதில் சுத்ததைப் பின்பற்றாதது வேதனையைத் தந்தது.

இஸ்லாமிய அழைப்புப் பணிகள் மற்றும் முஸ்லிம் சமுதாயத்துக்கான சீர்த்திருத்தப் பணிகள் ஆகியவற்றின் ஒரு சிறிய கேந்திரம் எங்கள் அலுவலகம். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிப்புரியும் அலுவலகத்தில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தத்தமது வழிமுறைகளில் இப்பணிகளைச் சேர்ப்பதில் கூட்டுப்பங்கு வகித்துள்ளன. இஸ்லாமிய அழைப்பும், முஸ்லிம்களுக்கிடையிலான சீர்த்திருத்தப் பணியும் கணிசமாக சேர்ந்துள்ள இடமிது. அப்படியிருந்தும்கூட இப்படியா? - இது கூட என் அதிர்ச்சிக்குக் காரணம்!



இஸ்லாம் என்பது பிரபஞ்ச இயல் (Universal Law) படைப்பினங்கள் மனிதன் உட்பட.. இந்த உலகில் எப்படி இயங்க வேண்டும் அல்லது வாழ வேண்டும் என்று வழிகாட்டும் வாழ்க்கைநெறி. இஸ்லாம் என்பதற்கு அடிபணிதல்.. சாந்தி.. சமாதானம்.. என்று பொருள்.

பூமியைப் பிளந்து வெளிப்படும் செடி கொடிகள், விருட்சங்களாய் வளராவிட்டால்.. மனிதனின் தேவைகள்.. மழை முதற்கொண்டு காய்க்கனிகள், உணவுவரை.. பாதிக்கப்பட்டுவிடும். இவற்றின் பற்றாக் குறையால்.. உயிரினத்தின் சகஜமான வாழ்க்கை மற்றும் அமைதி சீர்குலைந்துவிடும்.

அதேபோலதான், மனிதனும். அவன் இஸ்லாம் காட்டும் வாழ்வியல் திட்டத்தோடு ஒன்றி வாழாதபோது, பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும். அமைதியை தொலைத்து நிம்மதியை இழக்க வேண்டியிருக்கும். ஏனென்றால்.. செடி-கொடிகளைப் போலவே மனிதனும் இந்த பிரபஞ்ச அமைப்பில்  ஓர் உறுப்பினன். சூரிய சந்திரன்களைப் போலவே மனிதனும் உலக கூட்டுக் குடும்பத்தின் அங்கம். படைத்தவனின் கட்டளைகளுக்கு அடிபணிதலில்தான் அமைதி கிடைக்கிறது என்பதற்கு இந்த பிரபஞ்சமே மனிதனுக்கான சாட்சி.

மொத்தத்தில், இஸ்லாமிய வாழ்க்கையைப் பின்பற்றி வாழ்ந்தால்.. அறிவியல் பூர்வமாகவும், ஆன்மிக ரீதியாகவும் வெற்றிப் பெற முடியும். அது இயற்கைத் தேவைகளாகட்டும்.. அல்லது வாழ்வின் பிற துறைகளாகட்டும் அதாவது இம்மையிலும் வெற்றி. மறுமையிலும் வெற்றி.

அடுத்தது. இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு முக்கியத் தேவை ஆள்வளம். இந்த ஆள்வளத்தையும் முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ள முடியும். உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த அந்த நபரை 'இஸ்லாஹ் - சீர்த்திருத்தம்' செய்தாலே போதும். மென்மையான வழிமுறையில் அவர் சீர்த்திருந்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்தப் பணி செய்யப்பட வேண்டும். சகோதர வாஞ்சையோடு அவரது செய்கைக்கான காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று பார்ப்பது மிகவும் அவசியம். அதன் பின் அதை களைவதற்கான மாற்றுவழியை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படி அவரைச் சீர்த்திருத்திவிட்டால் அவர் வைரமாக ஜொலிக்க ஆரம்பித்துவிடுவார்.


அன்பு நபிகளாரின் சீர்த்திருத்த முறைமை இது. பாருங்கள்:

திரு நபிகளாரின் பள்ளிவாசல் அது!

அன்பு நபிகளாரும், அருமைத் தோழர்களும் அங்கு குழுமியிருந்தார்கள்.

அப்போது, ஒரு கிராமப்புற அரபி பள்ளிவாசலுக்கு வந்தார். தொழுது முடித்ததும் வெளிப்பள்ளியில் சிறுநீர் கழித்தார்.

இதை நபித்தோழர்கள் கண்டார்கள்.

அவரைத் தடுக்க ஒருசாரரும், அவரை அடிக்க மற்றொரு சாரரும் ஓடினார்கள்.

"வேண்டாம்! அவரை விட்டுவிடுங்கள்!" - என்று நபிகளார் அவர்களைத் தடுத்தார்கள்.

அந்த கிராமவாசி சிறுநீர் கழித்து முடித்தார்.

அதன்பிறகு, அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஒரு வாளி தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தும்படி நபிகளார் அறிவுறுத்தினார்கள்.

கடைசியாக அந்த கிராமவாசியை தனிமையில் அழைத்து, "சகோதரரே, இது இறைவனின் இல்லம். தொழுகைக்காகவும், இறைவேதம் ஓதுவதற்காகவும், இறைநாமம் துதிப்பதற்கான இடம். இங்கு அசுத்தம் செய்யக்கூடாது!" - என்று அறிவுறுத்தினார்கள். (புகாரி)

தவறு செய்தவர் ஒரு கிராமவாசி.

நீண்ட பயணத்திலிருந்து வந்திருப்பவர்.

இயற்கைத் தேவைக்கான அவசரம்.

அதனால், 'தான் என்ன செய்கிறோம்?' - என்று தெரியாமல் தவறு செய்கிறார்.

அவரது அவசரத் தேவையில் குறுக்கிடுவது உடல் நலத்தைப் பாதித்துவிடும். எனவே, தேவை முடியும்வரை நபிகளார் காத்திருக்கிறார்கள்.

அதன்பிறகு அசுத்தத்தை நீக்குவதற்கான 'மாற்றுவழி ஒன்றையும்' - ஒரு வாளி தண்ணீர் ஊற்றுவதன் மூலமாக - கற்றுத் தருகிறார்கள்.

அதேபோல, தவறு செய்த மனிதரை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தாமல் தனிமையில் அறிவுறுத்துகிறார்கள். தவறு செய்பவர் எதிர்மறை சிந்தனை கொள்ளாதவாறு செய்யும் பக்குவமான அறிவுரை அது. "ச்சே என்ன முட்டாள் தனம் செய்துவிட்டேன்!" - என்று தன்னைத் தானே நொந்து கொண்டு அடுத்தமுறை தவறு செய்வதற்கு முற்படாத நிரந்தரமான மனமாற்றத்தக்கு வழிகோலும் அறிவுரை!

இஸ்லாமிய அழைப்புக்கு அடித்தளமிடும் இறைமறையின் திருவசனம் இது:

"நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்" (திருக்குர்ஆன் -3:104)

- இறைவன் நாடினால்.. அழைப்பியல் தொடரும்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை: https://pamarannews.blogspot.com/2015/07/1_23.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive