NewsBlog

Thursday, July 23, 2015

மார்க்கம்: நான் புரிந்து கொண்ட இஸ்லாம்


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சகோதரர் சிராஜுல் ஹஸன் மே, 3 -2015 அன்று இரண்டு படங்களோடு அவரது முகநூல் பக்கத்தில் கீழ்க்கண்ட பதிவிட்டிருந்தார்:

முதல் படம் முஸ்லிம்களின் “தர்கா உரூஸ் விழா யானை....!”

இரண்டாம் படம் இந்து சகோதரர்களின் “கோயில் விழா யானை...! ”

ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்...!

தர்காகாரர்கள் இப்படியெல்லாம் செய்தால் பிறகு ஏன் எதிர்ப்பு வராது? - சிராஜுல்ஹஸன்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

- என்ற கேள்வியையும் அவர் கேட்டிருந்தார்.

ஆறு வித்யாசங்கள் கண்டுபிடிக்க சொல்லி சகோதரர் சிராஜுல் ஹஸன் செய்திருக்கும் ஒப்பீடு இன்றைய அறிவு ஜீவிகளில் ஒரு சிலர் தரும் இறைமறுப்பாளர் ஃபத்வாவுக்கு ஒப்பானதாக இருக்காது என்றே நான் எண்ணுகிறேன்.


இந்த பதிவுக்கு வந்தால்.. எதிர்வினையாக சிலவற்றை சொல்லியாக வேண்டும்.

சித்தாந்த ரீதியான பொதுமையை உள்வாங்கிக் கொண்டு அந்தந்த மண்ணுக்கேற்ப வேர்விட்டு வளரும் வாழ்வியல் தத்துவமே இஸ்லாம்.

பல நூறு நூற்றாண்டுகளைத் தாண்டி:

இஸ்லாத்தின் துவக்கமே ஓதுவது.. எத்திவைப்பது. இறைநெறி வழிகாட்டுதல் என்னும் இறைவேத கொள்கையை ஏற்பவர்கள் ஓதி அறிந்து கொள்வது.. தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்கு எத்திவைப்பது. இதுதான் இஸ்லாத்தின் கட்டமைப்பு. இதைதான் நபிகளார் செயல்படுத்திக் காட்டினார்கள்.

நபிகளாரைத் தொடர்ந்து அதை இம்மியும், பிசகாமல் செய்தவர்கள்தான் நபித்தோழர்கள், அவர்களைத் தொடர்ந்து வந்த இமாம் பெருமக்கள்.

இந்த செயல்முறை வாரிசுகள் என்னும் அந்தஸ்தில், இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாய் ஏற்றுக் கொண்டவர் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள கட்டாய பொறுப்புகூட. அதை செயல்படுத்திக் காட்டி அந்த செயல்முறையை செய்யும்படி பணித்தவர்கள் நபிகளார்.

இந்தப் பணி, நாளை மறுமையில், “செய்தீர்களா? இல்லையா?” - என்று வினவப்பட்டு ஒவ்வொருவரும் பதில் அளிக்க வேண்டிய கேள்விக்கான பணி.

23 ஆண்டுகாலம் இந்தப் பணியில் இரவு பகலாய், தன்னைப் பிணைத்துக் கொண்டும், அர்ப்பணித்துக் கொண்டும் திருப்தியடையாமலேயே, ஹஜ்ஜதுல் விதா என்னும் பெருந்திடலில், லட்சக்கணக்கான நபித்தோழர், தோழியர் மத்தியில் தன் செயலுருவம் குறித்து அஞ்சி, அந்த அச்சத்தாலே, “நான் இந்தப் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினேனா தோழியர்.. தோழர்களே!” – என்ற கேள்வியை எழுப்பினார்கள். “ஆம்.. ஆம்..” நாயகமே..! நீங்கள் சரியாக நிறைவேற்றினீர்கள்.. அதற்கு நாங்களே சாட்சி..” – என்று அந்த ஜனசமுத்திரம் முழங்கியபோது, வழியும் விழித்திரை நீரை சுண்டியெறிந்த நபிபெருமானார், “இறைவா! நீயே சாட்சியாக இரு..!” என்று தங்கள் சுண்டுவிரலை விண்ணுயர்த்தி சாட்சியாக்கிய கனமான, ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரின் தோள் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பு இது.

இறைவேதமும், இறைத்தூதரின் வழிமுறைகளும்

இறைவேதமும், இறைத்தூதரின் வழிமுறைகளும் ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ள வேண்டிய எளிய அதேசமயம் அறிவு ரீதியானவை.


ஒரு 14 நூற்றாண்டு இடைவெளி. இருப்பினும் காலத்தை வென்று நிற்கிறது ஒரு கொள்கை. மண், மொழி, நிறம், இனம் என்று எல்லாவற்றையும் தாண்டி நிற்பது பெரும் வியப்பானது. இவையே இஸ்லாம் அண்டசாரங்களின் அதிபதியால் அருளப்பட்ட மார்க்கம், எக்காலத்துக்கும் பொருத்தமான வாழ்வியல் திட்டம் என்பதற்கான உதாரணமாய் நிற்பது.

பிற இஸங்களின் தாக்கங்களைத் தாண்டி:

• பல நூறு நூற்றாண்டு இடைவெளி,

• பல தத்துவங்களின் இடைமறித்தல்கள்,

• உலகப்போர்கள் என்னும் அரசியல் தலையீடுகள்,

• காலனியாத்திகம் மூளைச் சலவை செய்து கல்வி நிலையங்களில் உருவாக்கிய கம்யூனிஸ, முதலாளித்துவ முஸ்லிம் பெயர்தாங்கி வடிவங்கள்,

• இதன் விளைவாய் சொந்த சமுதாயத்தின் மீதே சொந்த சமுதாய ஆட்சியாளர்களால் இதுவரையிலும், தொடுக்கப்பட்டுவரும் யுத்தம்.

• ஆப்கானிஸ்தான், இராக், எகிப்து, சிரியா மற்றும் அரபுலகம் தோறும் இஸ்லாமிய எழுச்சி மீது தொடுக்கப்படும் அரசு ரீதியாக கட்டமைக்கப்பட்ட வன்முறை மற்றும் அதன் எதிர்வினைகள்.

இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு, பூமிப்பந்தில் ஆழமாக வேர்ப்பிடித்து வளரும் இஸ்லாம் என்னும் பெரும் விருட்சம்.

யார் காரணம்?

இந்த சூழல்களின் பின்னணியில் தமிழக முஸ்லிம்களின் கொள்கை வீழ்ச்சியின் எதிர்வினைகளின் பாதிப்புகளால்தான் சகோதரர் சிராஜுல் ஹஸன் ஆறு வித்யாசங்கள் சித்தரித்தரித்திருக்கிறார் என்றே நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

இந்த அவலத்திற்கு,

• அறிவெழுச்சி பெற்று,

• அப்படி பெற்ற அறிவெழுச்சியை பரவலாக்க மறந்து,

• தங்களுக்குள்ளேயே செயல்படுத்துவதுதே என்ற புரிதலோடு அல்லது

• அந்த அறிவெழுச்சியை ஓர் உடலின் பிற அங்கமாக கருதப்பட வேண்டிய முஸ்லிம் சமூக உறுப்பினர்களை எள்ளிநகையாட பயன்படுத்தி

• பெரும் சர்ச்சைகளுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் அறிவாளிக வர்க்கம்தானே காரணம்.

இஸ்லாத்தின் பிரதிநிதிகள் யார்?

இஸ்லாத்தின் மூலாதாரம்,

• பல பிரிவுகளாய் ‘நிறுவன (பிராண்டட்) அறிவெழுச்சி’யாய் பிளவுபட்டு

• அதுவே இஸ்லாமயமாக்கப்பட்ட நிலையைத் தாண்டி,

• தங்களுக்கு நம்பிக்கைகளாய், வழிமுறைகளாய் ஊட்டப்பட்டவற்றையே

• அவையே உண்மை நெறி என்று விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு,

• அவை சரியோ, தவறோ என்று புரிந்து கொள்ள முடியாத நிலையில்

• அவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும்

பாமர மக்கள்தான் இஸ்லாத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற சொல்லாடலை பயன்படுத்தினால் என்ன தவறு இருக்க முடியும்? அல்லது இத்தகைய எளிய பாமரர்கள்தான் இஸ்லாத்தின் பிரதிநிதிகள் என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்?


இறையில்லங்களில் பாங்கொலி கேட்டதும், மூன்று வேளை உணவுக்கும் உத்திரவாதம் இல்லாத ஏழை, பாழைகளான ஜைனப்புகளும், ஃபாத்திமாக்களும்தான் உடலை மறைக்க போதிய ஆடை இல்லாத நிலையிலும் இழுத்து தலையை மறைத்துக் கொள்கிறார்கள்.

• ஆண்டில் இருமுறை எட்டிப்பார்ப்பவர் என்று அறிவெழுச்சி பெற்றவர்களின் பல்கலைக்கழகங்களால் பட்டமளிக்கப்பட்ட ரிக்ஷா ஓட்டி பிலால்களும்,

• நடைபாதை வணிகப் பெருமக்களான எளிய அபூபக்கர்களும்

• தங்கள் அன்றாட கஞ்சியளிக்கும் பெரும்வணிகங்களுக்கு, கூலி தொழில்களுக்கு விடுமுறை அளித்துவிட்டு

• கைக்கட்டி, வாய்பொத்தி,

• சுன்னத்தான கோலத்தோடு பள்ளியின் ஒருமூலையில் அமர்ந்து

• இமாம் சாஹெப்பின் நடைமுறை சிக்கல்களைத் தீர்க்காத பயான்களையும்

• உள்வாங்க முடியாமல் தவித்து தடுமாறினாலும் அவற்றை தேவ வாக்காய் மதிக்கிறார்கள்.

இவர்கள்தான் இஸ்லாத்தின் பிரதிநிதிகள். சமய நல்லிணக்க விரும்பிகள். மண்ணுக்கேற்ப இஸ்லாத்தின் உண்மை பிரதிநிதிகள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

பெரும் கவனமாய் செய்ய வேண்டிய பணி

புதையுண்டு போன ஒரு சிற்பத்தை தொல்லாய்வு நிபுணர்கள் கவனத்துடன், அகழ்ந்து மெல்ல மெல்ல தூசு தட்டி அதன் உண்மை வடிவம் தருவதுபோல இவர்களை வடிவமைப்பதில்தானே நிஜங்களான தத்துவத்தின் நடமாட்டங்களை உயிர் பெற முடியும்? இப்படிதானே பெரும் கவனமாய் நபிகளார் வடிவமைத்து எளிய மனிதர்களை மாபெரும் ஆளுமைகளாக மாற்றிக் காட்டினார்கள். வரலாற்றின் நாயகன், நாயகிகளாக்கினார்கள்! இத்தனை நூற்றாண்டுகளைத் தாண்டியும் பெருமதிப்புடன் அந்தப் புனிதர்களின் பெயர்களை உச்சரிக்க செய்தார்கள்.

செய்ய வேண்டியவை:

• தமது கொள்கையில் பின்தங்கிப் போன சமுதாயமான முஸ்லிம்களை சாதாரண அரசியல்வாதிகள் போல வாக்கு வங்கிகளாய் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

• பல குழுக்களாய், பிராண்டட் நிறுவனங்களாய் பிளவுப்பட்டு கிடக்கும் அறிவு ஜீவிகள் தங்கள் பிணக்கு, பூசல்களுக்கு அடிப்படையாய் உள்ள சிறு காரணங்களைத் தவிர்த்து அவற்றையே கொள்கையாய் காட்டாமல், உட்பூசல்களை மறந்து பாமரர்களை அரவணைத்து கொள்ள வேண்டும்.


• பொத்தாம் பொதுவான இஸ்லாமிய கல்வியை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.

இஸ்லாம் என்னும் அறிவொளிதான்.. அந்த சத்தியப் பேரொளிதான் அறியாமை என்னும் காரிருளை ஓட்டவல்லது என்கிறது வரலாறு.

28 வயது வரை என்னைப் போல இஸ்லாத்தின் அடிப்படைகள்கூட ஏதும் தெரியாமல் இறைமறுப்பு கொள்கைளின் முகவர்களாக முன்னணியில் நின்று கொடி பிடித்தவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் பேரொளியால் ஈர்க்கப்பட்டது இப்படிதான்!

பலாத்காரம் இல்லாத, எள்ளி நகையாடாதா, அறிவுரீதியான தர்க்கங்களுக்கு பொறுமையாக பதிலளித்து யதாத்தவாதத்தைக் கற்றுக் கொடுத்த இஸ்லாமிய அழைப்பாளர்களால்தான் அது முடிந்தது.

கருணையாளனின் திருமுன்:

இறுதியாக, இறைவனின் பேரருள்.. மற்றும் பெரும் கருணையின் விசாலத்தில்…

• எள்ளி நகையாடப்படும்,

• துச்சமாக மேடைதோறும் வெளிச்சம் போட்டு காட்டப்படும்

• பாமரத்தனமான..

• பத்துப்பாத்திரங்களைத் தேய்த்து, கூலி வேலை செய்து ஜீவனம் நடத்தும், ஜைனப்புகளும், ஃபாத்திமாக்களும்,

• நடைபாதைதோறும் கடை விரித்து

• அன்றாட பொழுதுகளை பெரும் திண்டாட்டத்துடன் கழிக்கும்

• ஏழை, எளிய பிலால்களும், அபூபக்கர்களும் மன்னிக்கப்பட்டு சுவனவாசியாகலாம்!

நீண்ட ஆடை,

காற்றில் பறக்கும் தாடியுடன்,

வெள்ளையும், சொள்ளையுமாய் மடிப்பு கலையாத ஆடைகளுடன்மேடைதோறும் சொந்த சமுதாயத்தையே இழிவுபடுத்தும்

அவர்களின் நடைமுறைகளை சீர்த்திருத்தும் நோக்கம் மற்றும் செயல்முறைகள் ஏதுமின்றி எள்ளி நகையாடும்

பேரறிஞர்கள், அறிவு ஜீவிகள், கொள்கை கோமான்கள் எல்லாம் இறைவனின் பெரும் கோபத்துக்கு ஆளாகலாம்.

நான் புரிந்து கொண்ட இஸ்லாம் இதுதான்!

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive