நாங்கள் முதலாவது குடியேறிய வாடகை வீடு மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிலும் நீண்ட நாள் தங்க முடியாத ஒரு சூழலாக அமைந்தது. இதற்கான பெரிய காரணம் இல்லையென்றாலும், நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, இயல்பாகவே நான், ‘பசுமை விரும்பி’ மற்றும் வளர்ப்பு பிராணிகளின் மீது ‘அளவில்லாத பிரியன்’.
நான் இருக்கும் இடமெல்லாம் செடி- கொடிகள், பசுமையான மரங்கள் தழைத்தோங்க வேண்டும். நாய், பூனை, கோழி, புறா போன்ற பறவைகள் வசித்தாக வேண்டும்.
வீட்டு உரிமையாளர் என்னைப் போலவே ஒருவனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதலால், நிறைய வீடுகள் மாற வேண்டியிருந்த சந்தர்ப்பம் இயல்பாகவே அமைந்தது.
இந்த இடத்தில் இருவரை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். இந்த இருவரும் எனது நிழலாய் இருந்தவர்கள். எனது சுக, துக்கங்களிலும் பங்கெடுத்தவர்கள். இவர்கள் எனது பால்யகால சிநேகிதர்களானாலும், எனது மனைவியின் உடன்பிறவா சகோதரர்களாகி எனது மைத்துனர்களாக உறவு கொண்டாடியவர்கள். பின்னாளில் நான் ஏதாவது வெற்றியடைந்ததாக நீங்கள் கருதினால் அந்த பெருமை இவர்களைத்தான் போய் சேரும்.
பி.துரைக்கண்ணு மற்றும் எம்.ராஜு என்பது அவர்களின் அழகிய பெயர்கள்.
துரையும், ராஜுவும் அசோக் லேலண்டின் சகோதர நிறுவனமான ‘எண்ணூர் பவுண்ட்ரீஸ்’ உருக்காலையில் பணிபுரிந்தார்கள். வாகனங்களுக்கான பாகங்களை உருக்கி, வார்த்து தருவது இந்த உருக்காலையின் முக்கியப் பணி. சில ஆண்டுகளுக்கு முன் நிறுவனத்துக்குள் நடந்த விபத்தில் என் அருமை நண்பன் ராஜு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைந்தான்.
பள்ளி நாட்களின் எல்லா நாட்களிலுமே அநேகமாய் நான் பசித்தேயிருந்தேன். இரவும், இன்னும் சரியாக சொல்லப்போனால், நள்ளிரவும், அடுத்த நாள் காலை, இரவின் மிச்சம் மீதிகள் ‘பழையதாகவும்’ ஆக இருவேளை உணவு மட்டுமே எனக்கு நிச்சயக்கப்பட்ட உணவுகள்.
காலையில் பள்ளிக்கு புறப்படும்போதே அம்மாவிடம் கெஞ்சி, கூத்தாடி நான் பெறும் இரண்டு பைசா, ஐந்து பைசாவில்தான் நான் மதிய உணவுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும்.
நான் பட்டினி கிடப்பது எனது உயர்நிலைப்பள்ளியின் வகுப்பு நண்பர்களுக்கு தெரியக் கூடாது என்று மதிய உணவு இடைவேளையில், மெனக்கெட்டு, பொடி நடையாக ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கடைவீதிக்கு நடந்து செல்வேன். அங்கு எனக்காகவே காத்திருப்பதுபோல, தயாராக ‘கூன் கிழவி’ (கிழங்கு விற்கும் மூதாட்டி) இருப்பாள். மரவெள்ளிக் கிழங்கின் முன், பின் பகுதி கழிவுகளை கீழே எறியாமல் சேகரித்து வைத்திருப்பாள். ஐந்து பைசாவுக்கு அவற்றை இரு கை நிறைய பெற்றுக் கொண்டு மதிய உணவாக்கிக் கொள்வேன்.
இத்தகைய பசித்த சில நேரங்களில் மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் தாழங்குப்பம் மற்றும் நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த துரைக்கண்ணு மற்றும் ராஜு வீடுகளுக்கு சென்றால் என்னைப் பெறாத அந்த அம்மாக்கள் எனக்கு வயிறு நிறைய படைப்பார்கள். சமயங்களைத் தாண்டிய தாய்மையின் பந்தம் அது!
இப்படி பசித்த ஒருவேளையில், எண்ணூரிலிருந்து ராயபுரம்வரை கிட்டதட்ட 15 கி.மீ தொலைவு நான் கால்நடையாகவே நடந்து சென்று அங்கு ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த எனது பெரியப்பாவின் (எனது தாயின் மூத்த சகோதரியை இவர் மணந்திருந்தார்) வீட்டில் மதிய உணவு உண்ட அந்த சந்தர்ப்பமும் இப்போதும் பசுமையாக எனது நினைவில் இருக்கிறது. என்னை அமர வைத்து சோறு படைத்த எனது மூத்த தாயை அண்மையில் எனது கைகளால் நல்லடக்கம் செய்யும் ஒரு பாக்கியம் கிடைத்தது.
அது என்னவென்றே தெரியவில்லை. சொத்துபத்துக்களை சேர்க்க வேண்டும் என்ற ஆசை வழிவழியாக எங்களுக்கு வந்ததே இல்லை. இல்லையென்றால் 60 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆந்திராவிலிருந்து புலம்பெயர்ந்து வந்த எனது தந்தையார், வெறும், சவுக்கும், மைதானங்களாகவும் கிடந்த எண்ணூரின் பாதி பகுதியை வளைத்துப் போட்டிருக்கலாம். இந்த மரபணு என்னையும் தொற்றிக் கொண்டதால்தான் என்னவே, ‘இருப்பது போதும்!’ - என்ற மனோநிலையை ஆழமாக விதைத்துவிட்டது.
எனக்கென்று இடம் வாங்கியதும், நான் செய்த முதல் வேலை, சுற்றியும் உயிர்வேலி போட்டு. ‘பிளாட்டின்’ நடுவே ஓரமாய் பாசனத்துக்கான ஒரு பள்ளம் தோண்டி தோட்டம் அமைத்ததுதான்! அதில், எனக்கு இஷ்டமான செடிகளை பயிரிட்டு அழகு பார்த்தேன். வெறும் சவுக்கு விளையும் மண் பூமியின் தன்மையை பல்வேறு மண் கலவையால் மாற்றி, ‘எந்த செடியும் விளைவிக்க முடியாது!’ - என்ற அந்தப் பகுதியினர் கூற்றை உடைத்தெறிந்தேன்.
இப்படிதான் எனது ‘மனித நேயக்குடில்’, கூரை வீடு, கல்நார் (ஆஸ்பெஸ்டாஸ்) வீடு என்று பகுதி பகுதியாக 8 தென்னம் பிள்ளைகள், வீட்டுக்குள்ளேயே ஒரு கொய்யா, படர்ந்து வளர்ந்த சப்போட்டா, கிணற்றடியில் காய்க்க தயாராய் பூத்திருக்கும் புளிய மரம் என்று பசுமைக் குடிலாக உருவானது.
பெருந்தேடலால் நான் பெற்ற இஸ்லாத்தின் பரிபூரமணமான அந்த இரு சொல் கலிமாவுக்கு என்னை ஒப்புக் கொடுத்தேன். அதன்பின் அதன் தேட்டத்தை நிறைவேற்ற நான் செய்த நுட்பமான பணிகள் என்ன? என்பதை சொல்வதற்கு முன் சகோதரர் அப்துற் றஹீம் எனக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்கு முன்னால் நான் எத்தகைய தேடல்களில் ஈடுபட்டேன் என்று சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
ஏனென்றால், இஸ்லாம் யாருக்கும் பரம்பரை ரீதியாக கிடைப்பதில்லை. தாத்தா, பாட்டன், பூட்டன், அம்மா, அப்பா முஸ்லிம்கள் என்று வழி வழியாக கிடைப்பதும் அல்ல.
மிக எளிதாக பழுத்த பழமாய் நீட்டிய கைகளில் ‘இஸ்லாம்’ வந்து விழவில்லை என்பதை பகிர்ந்து கொள்ளவே இந்த தேடல் பயணங்களை கொஞ்சம் திரும்பிப் பார்க்க நினைக்கிறேன்.
இறைவன் நாடினால் அடுத்த வைகறை நினைவுகளில் பார்ப்போம்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இதற்கு
முந்தைய நினைவுகளை பகிர்ந்து கொள்ள இணைப்புகள்:
வைகறை
நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக: https://pamarannews.blogspot.com/2015/07/1.html
வைகறை
நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: https://pamarannews.blogspot.com/2015/07/2.html
பசியை உணர்ந்த பெருமகனாரின் வழித்தோன்றல் என்றே நினைக்கிறேன். அடுத்தவன் பசியோடு அருகிலிருக்க நாம் உண்ணல் கூடாது என என் தோழன் தீன் அடிக்கடி சொல்வார். ஏய் தம்பி! வேற வேலை இல்லை போப்பா! பசி வயித்தக் கிள்ளுதுல்லா என்றால் அக்கா! அதைத் தாங்கிக்கொள்ளும் வல்லமையை இறைவன் தருவான் என நம்பவைக்கும் தம்பி அவன்.
ReplyDeleteமதுரையில் ஓர் அண்ணன். சித்திக் அவரது பெயர். மூன்று தலைமுறையாய் பழகினோம்.எனக்கு 21ஆவது வயது ஆனபோது திருமணம் ஏற்பாடு ஆயிருந்தது.
அவர் வங்கி ஊழியர். சித்திக் அண்ணனும் வங்கி ஊழியர். சித்திக் அண்ணன் தன் நண்பர்களிடம் என்னுடைய தங்கைக்குச் சென்னையில் திருமணம். அனைவரும் எங்கள் குடும்பத்தில் போவார்கள். நான் எப்படிப் போக எனத்தெரிய இல்லை என்றாராம்!
அப்போது நண்பர்கள் ஏய் என்னப்பா சித்திக்! தங்கையின் திருமணத்திற்குப் போகாம இருந்தாக்க எப்படி எனக் கேட்க!
காலம்கழிந்தது.
எங்கள் திருமண அழைப்பிதழை அனைவரிடமும் காட்டிய போது! ஏய் என்ன உன் தங்கை முஸ்லீம் இல்லையா! எனக் கேட்டார்களாம்! அட போங்கப்பா! தங்கை என்றால் முஸ்லீமாகத்தான் இருக்கவேண்டுமா எனக்கேட்டவுடன் அனைவரும் அதிர்ச்சி ஆனார்களாம்.
அமீருக்கு நண்பர்கள் அமைந்ததைப் போல எனக்கும் தோழமைகளில் பெரும்பாலோர் அப்படித்தான்.
திவான்! மிகப் பெரிய எழுத்தாளர். வரலாற்று ஆய்வாளர் செ.திவான் எனில் பெரும்பான்மையோருக்குத்தெரியும். ஒற்றைத்தோளில் தொங்கும் நீண்ட பை. அதில் புத்தகங்கள், ஓர் எழுதுகோல் இவை மட்டுமே அவரின் உரிமைக்குரிய பொருள். நசீர்! இந்நொடி செய்தியையும் விரலிடுக்கில் வைத்துச் சொல்லும் அண்ணன். அதுசரி,இந்தப் புராணம் ஏனோ! அடடா! இது புராணமில்லீங்க! மாந்தனுக்குக் கிடைக்கும் அழகியல் உறவு என்பதில் சாதி, மதமில்லை என்பதைக் காட்டும்வாழ்வியல் அல்லவா!
சிறப்பான பின்னூட்ட பதிவு. நன்றி இளம்பிறை Ki.Ilampirai
Delete