NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Monday, June 26, 2017

நீங்கள் இல்லாமல் நாங்களும் இல்லைவே இல்லை சத்திய பிரியா..!

சிறுவயது முதற்கொண்டு எனது வாழ்க்கை என் வீட்டில் கழித்ததைவிட எனது இந்து சமய சகோதர்களின் இல்லங்களில் கழித்ததுதான் அதிகம். இதை நான் எனது வைகறை நினைவுகளில் நினைவு கூர்ந்தும் இருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html ஒரு அடையாளத்துக்காகவேதான் இந்த இந்து என்ற சொல் நான் பிரயோகித்ததும். ஏனென்றால், இந்து என்ற இந்தச் சொல் எங்களை தனிமைப்படுத்திவிடும் என்ற கூச்சத்துடனேயே இதை பிரயோகிக்கிறேன். ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சகோதரி சத்திய பிரியா - Sathiya Priya, இந்த சகோதரி எனது ஒளிப்படங்களை விரும்பி ரசிப்பவர். தவறாமல் பின்னூட்டமிடுபவர். அப்படி பின்னூட்டமிடும்போதெல்லாம் ஏதோ எனது உறவினர் ஒருவரிடமிருந்து வந்த பின்னூட்டமாகவே எனது உள்ளம் அதை நினைக்கும்.

சத்திய பிரியா தனது வாழ்வில் பின்னி பிணைந்துள்ள அழகிய உறவுகள் சம்பந்தமாக நினைவு கூர்ந்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆக மிகச் சிறந்த வாழ்த்தாக இதை நான் கருதி மீள்பதிவு செய்கிறேன்.

அதற்கு முன்பாக,

எனது வாழ்வின் பெரும்பகுதி இரத்த உறவுகள், மனைவி வழியில் இந்து சமயத்தவராக இருப்பதால் அற்புதமான அந்த உறவுகளோடு மிகவும் இணக்கமாக என் வாழ்க்கை தொடர்கிறது என்ற பெருமையோடு நான் இருக்கிறேன். இந்த இணக்கத்துக்காக நாங்கள் ஏராளமான இழப்புகளை சந்தித்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

சிறுவயது முதற்கொண்டு எனது வாழ்க்கை என் வீட்டில் கழித்ததைவிட எனது இந்து சமய சகோதர்களின் இல்லங்களில் கழித்ததுதான் அதிகம். இதை நான் எனது வைகறை நினைவுகளில் நினைவு கூர்ந்தும் இருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html ஒரு அடையாளத்துக்காகவேதான் இந்த இந்து என்ற சொல் நான் பிரயோகித்ததும். ஏனென்றால், இந்து என்ற இந்தச் சொல் எங்களை தனிமைப்படுத்திவிடும் என்ற கூச்சத்துடனேயே இதை பிரயோகிக்கிறேன்.

இதைத் தொடர்ந்து எனது எழுத்துக்கள், http://mazalaipiriyan.blogspot.in/2012/11/blog-post_28.html http://ikhwanameer.blogspot.in/2015/09/blog-post_14.html ஆவணப்படங்கள் https://www.youtube.com/watch?v=uykj1HfHw_o எல்லாமே ஒட்டியூடாடும் இந்த உறவுகளுடன்தான் இதுவரை தொடர்கிறது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இனி சகோதரி சத்திய பிரியாவின் நினைவு கூர்தலும், வாழ்த்துக்களும்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
என் சிறு வயதில் ஒரு முஸ்லிம் குடும்பம் அருகில் குடியிருந்தோம்.

என் அம்மா அவர்களுடன் நட்புடன் ஆரம்பித்த உறவு என் அம்மாவை தன் மகளாக அவர்கள் நினைக்கும் அளவிற்கு வளர்ந்தது.

எங்கள் வீட்டில் அனைத்து நிகழ்ச்சிகளும் அவர்கள் இன்றி நடைபெறா! அவர்களுக்கு எமது சடங்கு சம்பிராதயங்கள் பற்றி தெரியாதபோதும் அதை தெரிந்துகொண்டு செய்வார்கள். தால்சா சுவை அங்குதான் ஆரம்பம் எனக்கு.

அந்த வீட்டு மருமகள்கள் , ஆம் எங்கள் நான்கு மாமிகளும் அவ்வளவு அழகு!!!!

மீண்டும் வீடு மாறியபோதும் அவ்வாறே அமைந்தது.

என் ஆகச்சிறந்த தோழி சுமையா பானு கிடைத்தாள்.

நான்,சுமையா, அழகு, இன்று வரை எங்கள் மூவரின் நட்பும் அழகாக தொடர்கிறது.

என் திருமண நாளில் என் கூடவே இருந்தாள்.

நான் ஊருக்கு கிளம்பும் வரை என்னை வந்து பார்த்து விட்டுத்தான் வேலைக்கு கிளம்புவாள் என் உயிர்த்தோழி சுமையா.

காலேஜ் சமயத்தில் எனக்குக் கிடைத்த நட்பு mehz ரொம்ப பிடித்த மரியாதையுடன் கூடிய நட்பு.

அதன் பிறகு நாங்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறினோம். அங்கும் அவ்வாறே!!! பாப்பா அக்கா, ராசாத்தி அக்கா, ரஹ்மத் அக்கா, மும்தாஜ் அக்கா இன்னும் பலர்.

முக்கியமாக மும்தாஜ் அக்காவின் பிள்ளைகள் சாகுல். அலி. பானு அனைவரும் என் திருமணம்; என் தம்பி, தங்கை திருமணம், என் அப்பாவின் மறைவு எல்லாவற்றிருக்கும் எங்களுக்கு பக்கபலமாக இருப்பது அவர்கள் குடும்பமே! அதிகமாக phone பேசுவதில்லை இப்பொழுது. இருந்தாலும் பானுவும் அலியும் Msg செய்து கொண்டே இருப்பார்கள்.

”சத்யாம்மா நல்லாயிருக்கியாம்மா?” - என மும்தாஜ் அக்கா கேட்கும்போதே கண்களில் நீர் கோர்த்துவிடும்.

”நீங்க இருக்கணும்க்கா என் திருமணத்திற்கு” - என அலி சொல்லிக்கிட்டே இருப்பான்.

ஜுனில் வருவதாக சொன்னேன். நோன்பு நாட்கள் என்பதால் மே மாதம் வைத்துவிட்டார்கள். பானு என் பாசமிகு தங்கை.

இவ்வாறாக எங்கள் வாழ்கையில் இஸ்லாமியர்கள் பின்னிபிணைந்தே வந்திருக்கிறார்கள்.

சிங்கையிலும் nasi,Sadhu, zubi,aysha, seema,, என்று நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. Mdm. sheya sulong என் மகன் படித்த தொடக்கப்பள்ளியில் Office staff. இனிமையும் அன்பும் ஒரு சேர கலந்தவர்.

இவர்கள் வேண்டாம் என எங்கள் வாழ்க்கையை கடத்தி விட முடியாது.

இந்த பதிவை இந்த ரமலான் நாளில் பதிவு இடுவதே ஆகச்சிறந்ததாக நினைக்கிறேன்.

மேலும் என் முகநூல் நட்புகளுக்கும், இஸ்லாமிய உறவுகளுக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்! நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லவே இல்லை... Gulam Mohideen sir, Ikhwan Ameer sir, Mr.Raja hai, அனைவருக்கும் வணக்கங்களும்… வாழ்த்துக்களும்.

Happy Hari raya to Mdm. Sheyha Sulong...
Share:

Friday, June 23, 2017

ஆப்பிள் பழமும், மூதறிஞர் ஜமீல் அஹமதும்..!


மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

”நாளொன்று ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவர் தேவையே இல்லை” (An Apple a day keeps the doctor away) – என்றொரு சொலவடை உண்டு.

அது சரி… வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட ஆப்பிள் பழம் இந்தியாவுக்கு எவ்வாறு வந்தது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்பாக ஒரு சின்ன பிளாஷ் பேக் சொல்லியே ஆக வேண்டும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஒருநாள், மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப்பிடம் பேசிக் கொண்டிருந்த போது, தமக்கு முன்னால் தட்டில் வைத்திருந்த பழத்துண்டுகளில் ஓர் ஆப்பிள் துண்டை எடுத்துக் காட்டி ”இக்வான் சாப்.. இதோ இந்த ஆப்பிள் நமது நாட்டுக்கு எப்படி வந்தது என்ற கதை உங்களுக்குத் தெரியுமா?” – என்று கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காப்பதே சரியாக எனக்குத் தோன்ற அவ்வாறே செய்தேன்.

”இந்த ஆப்பிள் இந்தியாவுக்கு வந்ததற்கும், இயக்கத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. உண்மைதான், ஓர் இயக்கவாதி தனது இலக்கை அடைய எப்படி எல்லாம் அர்ப்பணிக்க வேண்டும்? மக்களை சீர்த்திருத்த எப்படி எல்லாம் உழைக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் அது.”

பேசுவதைவிட கேட்பது எனக்கு அதிகம் பிடிக்குமாதலால் நான் கவனமாக கேட்க ஆரம்பித்தேன்.

மூதறிஞர் தொடர்ந்தார்: “இந்த ஆப்பிளின் பின்னணியில் ஓர் அற்புதமான வரலாறு இருக்கிறது. நீங்கள் அதை எழுத வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியாவில் நான் ஒரு கட்டுரையை வாசித்தேன். ஆப்பிள் இந்தியாவுக்கு வந்தது சம்பந்தமான கட்டுரை அது. நீங்கள் அந்தக் கட்டுரையை வாசித்துவிட்டு எழுத வேண்டும்” – என்றார்.

அப்போது, இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆஃப் இந்தியா மூடுவிழா கண்டிருந்தது.

நான் இதைக் குறித்து சொன்னதும், ”ஆமாம்..! ஆனால், அந்த பத்திரிகை அலுவலகம் சென்று பழைய இதழ்கள் குறித்து கேட்டு குறிப்பிட்ட இதழ் கிடைக்கிறதா என்று முயற்சி செய்யுங்கள்!” – என்று அவர் வழியும் சொன்னார்.

அதன் பின்னும் பலமுறை மூதறிஞர் ஜமீல் அஹமது சாஹெப் எனக்கு ஆப்பிள் வரலாறு சம்பந்தமாக நினைவூட்டியவாறே இருந்தார்.அவரது மறைவுக்கு பின்னும் என்னால் அந்தக் கட்டுரையை எழுத முடியவில்லையே என்ற வருத்தம் என்னை சதா அலைக்கழித்தவாறே இருந்தது.

மேற்படி கட்டுரை வெளியான இதழ் எனக்கு கிடைக்கவேயில்லை. ஆனாலும் நான் தேடுவதை நிறுத்தவே இல்லை.

இது நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாக இருக்கும். சமீபத்தில் ஒருநாள் கூகுளில் தேடிக் கொண்டிருந்தபோது அந்தக் கட்டுரை சம்பந்தமான தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு. எனது ஆசானின் ஆசையை உயிருள்ள போது நிறைவேற்ற முடியாவிட்டாலும், அவரது மரணத்துக்கு பின்னாவது தட்டாமல் நிறைவேற்றும் மகிழ்ச்சி அது. அதுவும் ரமளானின் ஆயிரம் மாதங்களைவிட கண்ணியம் மிக்க லைலத்துல் கத்ர் இரவில் இதை எழுதி முடிக்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றியும்… புகழும்..!

மௌலானா தங்கள் ஆசையை நான் நிறைவேற்றிவிட்டேன். காலமே நீ சாட்சியாக இரு! வாசிப்போரே நீங்களும் சாட்சிகளாக இருங்கள்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

இந்தியாவில் முதன் முதலாக ஆப்பிள் பழக்கன்று பிரிட்டீஷ் ராணுவத்தைச் சேர்ந்த R.C லீ என்பவரால் குளு பள்ளத்தாக்கில் 1870-ல், நடப்பட்டது. நியூவ்டவுன் பிப்பின்ஸ், கிங் ஆஃப் பிப்பின், கோக்ஸ் ஆரஞ்ச் பிப்பின் போன்ற பழ வகைகளை அவர் நமது நாட்டில் அறிமுகப்படுத்தியபோதும் அவற்றின் புளிப்பு, இனிப்பு கலந்த சுவையால் அவ்வளவாக நமது விவசாயிகளின் வரவேற்பை பெற முடியவில்லை. மா, பலா போன்ற சுவை மிகுந்த பாரம்பர்ய பழங்களை விளைவித்து வந்த இந்திய விவசாயிகள் ஆப்பிளின் சுவையை விரும்பவில்லை என்பது வியப்பான செய்தியும் அல்ல.

இந்நிலையில்தான் அந்த இளைஞர், வணிக ரீதியாக ஆப்பிள் பழங்களை விளைவித்து பின்தங்கியிருந்த இமாச்சலப்பிரதேசத்தின் ஏழ்மையை விரட்டியடித்தார்.

சாமுவேல் இவான் ஸ்டோக் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர், ஆகஸ்ட் 6-1882-ல், அமெரிக்காவின் பிலடெல்பியாவின் புறநகர் பகுதியில் பிறந்தார்.

1900-ல், நியூயார்க்கின் மொஹெகென் லேக் ராணுவ அகடாமியில் பட்டப்படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

சமூக சேவைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்த சாமுவேல் ஸ்டோக் ஒருமுறை கிருத்துவ தேவாலயத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். இந்தியாவில் தமது வாழ்நாள் முழுவதையும் தொழுநோயாளிகளின் சேவைக்காக அர்ப்பணித்திருந்த மருத்துவரான டாக்டர் கார்ல்டன்னின் சொற்பொழிவுதான் அது. சமூகத்தால் தனிமைப்படுத்தப்படும் தொழுநோயாளிகளின் பரிதாபகரமான நிலைகுறித்து உள்ளம் நெகிழச் செய்யும் அந்த சொற்பொழிவு அந்த இளைஞரை உடையச் செய்தது. நிலைகுலைந்து போனவர் கண்ணீர் சிந்தி அழலானார். இதுவே அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. கடைசியில் தனது மேற்படிப்பை தொடர மனமில்லாமல் டாக்டர் கார்ல்டன்னோடு சமூகப் பணிகளில் தம்மை இணைந்து கொண்டார்.

ஜனவரி 9- 1904-ல், டாக்டர் கார்ல்டன் குடும்பத்தாரோடு இந்தியாவை அடைந்த சாமுவேல் ஸ்டோக் பிப்ரவரி 26, 1904-ல் மும்பையை அடைந்தார்.

தொழுநோயாளிகளின் இல்லம், இமாச்சலப்பிரதேசத்தின் அடிவாரத்தில் கிருத்துவ மெஷினரியால் 1868-ல், அமைக்கப்பட்டிருந்தது.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டிருந்த தொழுநோயாளிகளை டாக்டர் கார்ல்டன்னும் அவரது துணைவியாரும் கவனித்து வந்தனர். இங்குதான் மனித இனத்துக்கான சேவையை சாமுவேல் ஸ்டோக் முதன் முதலில் ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில், தொழுநோயாளிகளின் தோற்றம் கண்டு அதிர்ச்சியுற்ற சாமுவேல் ஸ்டோக் அதன்பின், அவர்கள் மீது இரக்கம் கொண்டார். அவர்களின் துன்பம் தீர சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்.

தொழுநோயல் பாதிக்கப்பட்டு ஆதரவற்றிருந்த 4 வயது கிர்பா ராமை தத்து எடுத்துக் கொண்டார்.

தனது பணியின் எல்லையான பஞ்சாபின் பல பகுதிகளுக்கு டாக்டர் கார்ல்டன்னோடு பயணம் செய்தார். கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டு நோயுற்றார். குணமடைந்ததும், சட்லுஜ் நதிக்கரையில் அமைந்திருந்த கோட்கர் என்னும் குக்கிராமத்துக்கு அனுப்பப்பட்டார்.

1815-ல், அமர் சிங் தாபாவின் தலைமையில் திரண்ட நேபாளி படையினரை பிரிட்டீஷ் படையினர் தோற்கடித்தனர். கோட்கரில் படைத்தளத்தையும் அமைத்தனர். 1872-ல், சிறிய சர்ச் ஒன்றும் அங்கு கட்டப்பட்டது. பசுமையும், குளிர்ச்சியும் மிக்க இந்த இடத்தால் மனம் கவரப்பட்ட சாமுவேல் ஸடோக் அங்கேயே தங்கி தமது பணிகளைத் தொடர முடிவெடுத்தார். வெகு விரைவிலேயே மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறிவிட்டார்.

1905-ல், இமாச்சல மலையடிவாரத்தில் அமைந்திருந்த கங்கரா நகர் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை அறிந்த சாமுவேல் ஸ்டோக் மீட்புக்குழுவினரோடு அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டார்.

நிலநடுக்கத்தில், பெற்றோரை பறிக்கொடுத்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாயினர். ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இடிந்து தெருவில் நின்றனர். இந்தச் சூழலில் ஐந்து குழந்தைகளை சாமுவேல் ஸடோக் தத்தெடுத்துக் கொண்டார்.

1910-ல் சாமுவேல் ஸ்டோக்கின் தந்தையார் மரணமுற்றதைத் தொடர்ந்து அவர் அமெரிக்கா சென்றார். 1911-ல் இந்தியா திரும்பியவர் உள்ளுரைச் சேர்ந்த பெண் அக்னெஸ்ஸை மணந்து கொண்டார்.

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா மாடில்டா பேட்ஸ் என்னும் விதவை சீமாட்டி, தனது தேயிலைத் தோட்டத்தை விற்பனை செய்துவிட்டு பழையபடி இங்கிலாந்து திரும்பி செல்ல விரும்பினார். அந்த தோட்டத்தை விலைக்கு வாங்கி சாமுவேல் ஸ்டோக் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.

பின்தங்கியிருந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆப்பிள் பயிரிடுவது உகந்தது என்று முடிவெடுத்த அவர் 1914-ல், தமது பண்ணையின் மண் மாதிரிகளோடு அமெரிக்கா சென்றார். திரும்பிவரும்போது, ஐந்து விதமான ஆப்பிள் பழக்கன்றுகளை உலகப் புகழ் பெற்ற ஸ்டார்க் பிரதர்ஸ் ஆஃப் லூசியானா நாற்றுப் பண்ணையிலிருந்து கொண்டு வந்து நடவு செய்தார்.

ஆப்பிள் குறித்து உள்ளுர் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பரப்புரைகளை தொடர்ந்து மேற்கொண்டார். அது அவ்வளவு எளிதான பணியாக இல்லை. பழமையான விவசாய முறைமைகளிலிருந்து நவீன விவசாய முறைகளுக்கு அவர்களை மாற்ற மிகவும் உழைக்க வேண்டியிருந்தது. இதற்காக தனது பண்ணைக்குள் ஒரு பள்ளிக்கூடத்தை அமைத்து உள்ளுர் குழந்தைகள் கல்வி கற்ற ஏற்பாடு செய்தார். அந்தக் குழந்தைகளுக்கு பல்வேறு பழவகைகளை பயிரிடுவதற்கான யுக்திகளை அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே போதித்தார். படித்து முடித்த குழந்தைகள் வளர்ந்து ஆளாகியதும் விவசாய நுணுக்கங்களில் திறமையானவர்களாக மாறத்தான் அந்த ஏற்பாடு.

ஆப்பிள் பயிரிடுவதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதோடு நில்லாமல் பின்தங்கிய மக்கள் வாழும் அத்தகைய மலைப்பகுதிகளில் ஆப்பிள் பயிர் ஒன்றுதான் அவர்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்பதை செயல் ரீதியாக நிரூபித்தார்.

இந்தியாவைத் தொடர்ந்து நேபாளத்துக்கும், பூடானுக்கும் ஆப்பிள் சென்ற கதை இதுதான்.

ஓர் இயக்கவாதி தனது கொள்கை, கோட்பாடுகளை நிறைவேற்ற தியாகங்களால் முன்னெடுத்துச் சென்ற கதை. ஒவ்வொரு இயக்கத்தாரும் படித்து பாடம் பெற வேண்டிய உண்மை கதை.

ஆதார இணைப்பு
“““““““““““““““““““““““““““
http://www.himachaltravelblog.com/…/thanedhar-a-story-of-…/…
https://en.wikipedia.org/wiki/Satyananda_Stokes

Share:

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்

 
இந்த வசனங்களை ஓதிய பின், மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். அதற்காக, பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் தந்துதவ வேண்டும். அதுவுமில்லாதவர் ஒரு பேரீச்சம் பழத்தின் பாதித் துண்டையாவது தந்திட வேண்டும்!” என்று அறிவுறுத்தினார்~ இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அது ஒரு காலை நேரம். நபிகளாரின் திருச்சபையில் நபித்தோழர்கள் அமர்ந்திருக்க, சிலர் முரட்டுக் கம்பளியைப் போர்த்திக்கொண்டு அங்கு வந்தார்கள். முளர் குலத்தைச் சேர்ந்த அவர்களது உடலின் பெரும் பகுதி நிர்வாணமாக இருந்தது. அவர்களின் ஏழ்மைக் கோலம் நபிகளாரைப் பாதிக்க அவருடைய திருமுகம் வருத்தத்தால் வாடிவிட்டது.

நபிகளார் வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு வெளியே வந்தார். இதற்குள் தொழுகை நேரம் வந்துவிடவே தோழர் பிலாலை அழைத்து, தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி பணித்தார். தொழுகை முடிவில் நபிகளார் சிற்றுரையாற்றினார். அந்த உரையில் திருக்குா் ஆனின் சில முக்கிய வசனங்களை ஓதிக் காட்டினார்.

“மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். அவை இரண்டின் மூலம் உலகில் அதிகமான ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். எந்த இறைவனின் பெயரைக் கொண்டு நீங்கள் மற்றவரிடம் உரிமைகளைக் கோருகிறீர்களோ, அந்த இறைவனுக்கு அஞ்சுங்கள். ரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து விலகி வாழுங்கள். திண்ணமாக, இறைவன் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்”

மனிதர்கள் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்ட ஒரே தாய்-தந்தை வம்சாவழியினர். ரத்த பந்த உறவுமுறையினர். அதனால், ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் பரிவுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். தேவையுள்ளோரின் தேவைகளைத் தீர்த்து வைக்காமலிருப்பது இறைவனின் கோபத்தைப் பெற்றுத் தரும் என்று அறிவுறுத்தும் வசனம் இது.

அடுத்ததாக , “இறைநம்பிக்கை கொண்டவர்களே! இறைவனுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்துக்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கிறான் என்று பார்க்கட்டும். இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக இறைவன் அறிபவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை நபிகளார் ஓதினார். இதன் மூலமாக ஏழை, எளியோருக்காகச் செலவிடப்படும் செல்வம் மனிதனுக்கு மறுமை நாளில் அழியாத சேமிப்பாக மாறுகிறது என்ற கருத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்த வசனங்களை ஓதிய பின், மக்கள் இறைவழியில் தர்மம் செய்ய வேண்டும். அதற்காக, பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும் வழங்கிட வேண்டும். துணிமணிகளை அளித்திட வேண்டும். கோதுமை ஒரு மரக்காலும் பேரீச்சம் பழம் ஒரு மரக்காலும் தந்துதவ வேண்டும். அதுவுமில்லாதவர் ஒரு பேரீச்சம் பழத்தின் பாதித் துண்டையாவது தந்திட வேண்டும்!” என்று அறிவுறுத்தினார்.

உணர்ச்சி மிக்க இந்த உரையைக் கேட்டதும் நபித்தோழர்கள் ஒருவர் பின் ஒருவராகத் தர்மம் செய்ய ஆரம்பித்தார்கள். கடைசியில் தானியங்கள், துணிமணிகள் என்று இரண்டு குவியல்கள் சேர்ந்துவிட்டன.

மக்களின் அறப்பணிகளுக்கான ஆர்வம் கண்டு நபிகளாரின் திருமுகம் மகிழ்ச்சியால் பொன்னிறம் பூசியதுபோல மலர்ந்து பிரகாசிக்கலாயிற்று.

அதேபோல, மற்றோர் இடத்தில், ரமலான் மாதத்தின் சிறப்புகளை உணர்த்தி அதற்கு முந்தைய மாதமான ஷ அபான் மாதத்தின் கடைசியில் நபிகளார் உரையொன்றை நிகழ்த்தினார். அந்த உரையின் கடைசிப் பகுதியாக, ரமலான் மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும் பரிவும் காட்ட வேண்டிய மாதம் என்று குறிப்பிட்டு வலியுறுத்துகிறார்.

தேவையுள்ளோர்க்கு வாரி வழங்கும் பண்பினரான நபிகளார் ரமலான் மாதத்தில் வேகமாக வீசும் காற்றைப்போல தான, தர்மங்களை விரைந்து செய்பவராக இருந்தார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 22.06.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)
 
Share:

Tuesday, June 20, 2017

உலக அகதிகள் தினம்

ஐரோப்பியர் பார்வையில் அகதிகள்
Share:

Sunday, June 18, 2017

தந்தையின் உடைமைகள்!



சற்று நேர இடைவெளிக்குப் பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே அவர் தொடர்ந்தார். “இன்றோ நான் மிகவும் பலவீனமானவனாக ஆகிவிட்டேன் இறைவனின் தூதரே! இவனோ இளமையுடன் பலசாலியாக இருக்கின்றான். இந்த தள்ளாமையில் எனது தேவைகளுக்காக இப்போது இவன் தன் உடமைகளைப் பகிர்வதைத் தடுக்கிறான் இறைவனின் தூதரே!” என சொல்லும்போதே, முதியவர் குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழலானார்.~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபை. அங்கே ஒரு இளைஞர் வந்தார். அவரது முகம் கோபத்தால் சிவந்திருந்தது. உதடுகள் துடிதுடிக்க, “இறைவனின் தூதரே! என் தந்தையார் எனது பொருளை நினைத்த போதெல்லாம் எடுத்துச் செலவழிக்கிறார்! அவரது போக்கு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது!” என்று புகார் தொடுத்தார்.

நபிகளார் அந்த இளைஞரை அமைதிப்படுத்தி அவரது தந்தையை அழைத்து வரும்படி பணித்தார்.

சற்று நேரத்தில் தொலைவில் ஒரு உருவம் தெரிந்தது. வளைந்த முதுகு. தளர்ந்த நடை. நடுங்கும் உடல். பழுத்த நரை. இடுங்கிய கண்கள். கையில் ஒரு தடி ஊன்றியபடி நடக்க முடியாமல் நடந்து ஒரு முதியவர் அங்கு வந்து சேர்ந்தார்.

அவரை, அரவணைத்து பக்கத்தில் இருத்திக் கொண்டு மகனின் குற்றச்சாட்டை சொல்லி நபிகளார் விசாரித்தார். அதைக் கேட்டு முதியவர் கண் கலங்கினார். வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினார். சற்று நேரத்துக்கு பின் தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தார்.

“இறைவனின் தூதரே! இதோ.. இங்கே.. நிற்கும் என் மகன் ஒரு காலத்தில் குழந்தையாக மிகவும் பலவீனமானவனாக, எதையும் செய்ய இயலாதவனாக இருந்தான். அப்போது, நானோ மிகவும் பலசாலியாக, நினைத்ததைச் செய்யும் வலிமை உள்ளவனாக இருந்தேன். இதோ இப்போது இளைஞனாக நிற்கும் இவன், அவனது குழந்தைப் பருவத்தில் எல்லா தேவைகளுக்கும் என்னைச் சார்ந்து வாழும் நிலையில் வெறுங்கையுடன் இருந்தான். ஆனால், இன்றோ…நான்…. இறைவனின் தூதரே!” மேற்கொண்டு பேச முடியாமல் முதியவர் துக்கத்தில் தடுமாறினார்.

சற்று நேர இடைவெளிக்குப் பிறகு பெருமூச்சு விட்டுக் கொண்டே அவர் தொடர்ந்தார். “இன்றோ நான் மிகவும் பலவீனமானவனாக ஆகிவிட்டேன் இறைவனின் தூதரே! இவனோ இளமையுடன் பலசாலியாக இருக்கின்றான். இந்த தள்ளாமையில் எனது தேவைகளுக்காக இப்போது இவன் தன் உடமைகளைப் பகிர்வதைத் தடுக்கிறான் இறைவனின் தூதரே!” என சொல்லும்போதே, முதியவர் குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழலானார்.

இதைக் கேட்டு கொண்டிருந்த நபிகளாரும் கண் கலங்கி விட்டார். கலங்கிய கண்களுடனேயே அந்த இளைஞரை நோக்கி நபிகளார் சொன்னார். “நீயும்.. உனது உடமைகளும் உனது தந்தையாருக்கே சொந்தம்!”

(தி இந்து, 09.04.2015-ல், பிரசுரமான எனது கட்டுரையிலிருந்து -
இணைப்புக்கு: http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7082020.ece)

Share:

Friday, June 16, 2017

அந்த பஞ்சாயத்துக்கான தீர்ப்பை அவனிடமே விட்டுவிடுவோம்..!



என்னைக் கேட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பெரும்பாலோர் நபிகளாரின் திருச்செய்தி என்னவென்று அறியாதவர்கள்தான் என்பேன். ~இக்வான் அமீர்

“““““““““““““““““““““““““““““““““““““““““““

இரண்டு நாட்களுக்கு முன், நண்பர் ஒருவர், வாட்ஸ்அப்பில் நிகழ்படம் (நிகழ்ச்சியை அசையும் படமாகப் பதிவு செய்து காணல்) ஒன்றை எனக்கு அனுப்பியிருந்தார்.

உள்ளரங்கு நிகழ்ச்சி அது.

தலைப்பாகை, நீண்ட தாடி என்றிருந்த ஒருவர், தமிழ் மொழியை சிதைத்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

ஐந்து நிமிடங்களுக்கான அந்தப் பதிவு, இறைவனிடம் நம்பிக்கையோடு இறைஞ்சுதல் சம்பந்தமானது. அதற்கு ஒப்புமை காட்டியது சகோதர சமயத்தாரின் நம்பிக்கையை!

உண்மையிலேயே இவர் யார் என்று எனக்குத் தெரியாது. எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்றும் தெரியாது. ஆனால், பயன்படுத்திய வார்த்தைகளோ சிலை வணங்கிகள், காஃபிர்கள். அதன்பிறகு அவர் பேச்சு எனக்கு அறவே பிடிக்கவில்லை.

நாம் திரும்ப… திரும்ப செய்யும் தவறுகள் மிக எளிதாக சம்பந்மேயில்லாமல் சொற்களை கொட்டுவதும், பட்டங்களைச் சூட்டுவதும்தான்!

• படைத்தவன் யார் என்று தெரிந்தும் மனம் முரண்டாக அவனை நிராகரிப்பதற்கும்,

• படைத்தவன் கட்டளைகள் இவைதான் என்று தெரிந்து அவற்றை ஏற்கப் பிடிக்காமல் மனதிற்கு திரையிட்டுக் கொள்வதற்கும்,

• படைத்தவன் குறித்த சரியான புரிதல் இல்லாமைக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு.

“ஷிர்க்“ என்ற இணைவைப்பும், “குப்ர்“ எனப்படும் இறைமறுப்பும் விரிந்த பொருள் கொண்ட வார்த்தைகள். மாற்று சமூகத்தை நோக்கிதான் இவை பாயும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. சொந்த சமூகத்தை நோக்கியும் பாயலாம். முடிவில்லாத சர்ச்சைகளில் சமூகத்தை சிக்க வைக்கலாம்.

அதனால், எல்லா மனிதர்களையும் படைத்து, பரிபாலிக்கும் இறைவனிடமே இந்த பஞ்சாயத்துக்கான தீர்ப்பை விட்டுவிடுவோம்.

இது விளங்காமல் வார்த்தைகளில் ஒருவிதமான வெறுப்பை உமிழ்ந்து பேசுவது கடும் எதிரிகளையும் நேசித்த அன்பு நபிகளாரை தலைவராக ஏற்ற சமூகத்துக்கு அழகல்ல.

என்னைக் கேட்டால் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பெரும்பாலோர் நபிகளாரின் திருச்செய்தி என்னவென்று அறியாதவர்கள்தான் என்பேன்.

வரலாற்றுக் கால கொடியவன் “பாரோ“ என்று பரவலாக அழைக்கப்படும் சர்வாதிகாரி, இறுமாப்பால் தன்னை இறைவன் என்று பிரகடனம் செய்து கொண்டவன் எகிப்தின் பிர்அவ்ன். அந்த கொடுங்கோலனிடம் மூஸா நபியை அனுப்புகிறான் இறைவன்.

படைப்பின் இயல்பான மனிதனுக்கு அளிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட சுயஅதிகாரத்துக்கும், விதிக்கும் இடையிலான ஒரு மெல்லிய இழையினூடே நகருகிறது அந்த வரலாற்று சம்பவம். அதில் இறுதி வாய்ப்பாய் தன்னைக் குறித்து அறிவுறுத்த மூஸா நபிக்கு ஆணையிடுகின்றான் இறைவன். ஒருவேளை கொடுங்கோலன் பிர்அவ்ன் மனம் திருந்தலாம் என்று தாயன்போடு அளிக்கப்படும் வாய்ப்பு அது.

இந்த புரிதலை உள்வாங்கியவர்கள் மேலே சொன்ன சகோதரர் அர்ஜுன் சம்பத்வரை இறைவனின் திருச் செய்தியை சேர்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் கொள்ள மாட்டார்கள்.

எங்கள் எதிர் வீட்டு கிருத்துவ குடும்பத்தார் சென்றாண்டுவரை நோன்பு கஞ்சிவரை எந்த பேதமும் பார்க்காமல் சகஜமாக வாங்கி குடிப்பார்கள்.

ஆனால், இப்போது என்னவோ நாங்கள் தீண்டத் தகாதவர்களைப் போலவே எங்களிடம் நடந்து கொள்கிறார்கள். ஊரெல்லாம் ரமலானின் புனிதமான உணவாய் அருந்தும் நோன்பு கஞ்சியை ஏற்க மறுக்கிறார்கள். புதிதாய் அவர்கள் சேர்ந்து வழிப்படும் அமைப்பின் ஷிர்க் எனப்படும் இணை வைப்பாளர் பட்டியலில் நாங்கள் இடம் பெற்று விட்டோமோ என்னவோ!

நாம் விளங்க மறுப்பது போலவேதான் இதுவும்.


Share:

Wednesday, June 14, 2017

நோன்பு ஒரு கேடயம்


 
நோன்பை கடமையாக்கியதில், இறைவனின் நோக்கம் மனிதனை நல்லவனாக ஆக்குவதேயாகும். இந்நிலையில், ஒரு மனிதன் இந்த நோக்கத்தை அறியாமல் அல்லது அந்த நோக்கத்தை புறக்கணித்து செயல்படும்போது, அதுவும் இவற்றையெல்லாம் தடுத்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி களமாகக்கப்பட்ட ரமலான் மாதத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் காலை முதல் மாலை வரையில் உணவு உண்ணாமலும், குடிநீரை அருந்தாமலும் இருந்து யாருக்கு என்ன லாபம்?
•இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உலகமென்னும் ஆசா – பாசங்களில் சிக்கி மனிதனின் உள்ளொளி மங்கிவிடுகிறது. அதை பிரகாசமாக்கி  சக மனிதர்களின் மீதான சமூக பொறுப்புகளை உணர்த்தி உலகளாவிய சகோதரத்துவ நேயத்தை மலரச் செய்து, இறைவனின் பேரன்புக்கு ஆளாக்க ஒரு சாதகமாக இருப்பதுதான் நோன்பு.

உலகம் முழுக்க வாழும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஒரே மாதத்தில், ஒரே நேரத்தில் துவக்கி, ஒரே நேரத்தில் முடித்து, ஒரே இலக்கை அடைவதற்காக  உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ஒரு புனித வேள்வி இது. மனித சமூக அமைப்பில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் ஒரு வித்யாசமான கட்டமைப்பு. இறைவனுக்காகவே, இறைக்கட்டளைகளை நிறைவேற்றி அவனது திரு உவப்பை எட்டுவதற்கான பிரத்யனம் இது.

நோன்பு என்பது எல்லா காலங்களிலும் எல்லா சமய மக்களிடமும் உலகம் முழுக்க பின்பற்றப்படும் ஓர் இறைவணக்கம். அளப்பரிய அதன் நன்மைகளை முன்வைத்துதான் முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டதாக திருக்குா்ஆன் குறிப்பிடுகிறது. இதன் மூலம் இறையச்சம் பெறலாம் என்று இயம்புகிறது. ரமலான் எனப்படுவது இறையச்சம் பெறுவதற்கான பயிற்சி பாசறையாகும்.

”நோன்பு ஒரு கேடயம். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் கெட்ட சொற்களைப் பேச வேண்டாம். சண்டை, சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். எவராவது வசைமொழிப் பேசினால், சண்டையிட முனைந்தால் தான் ஒரு நோன்பாளி என்பதை நினைவில் கொள்ளட்டும்.– என்று தீமைகளைத் தடுத்து நிறுத்தும் கேடயமாக நோன்பை உருவகப்படுத்தும் நபிகளார் மற்றொரு இடத்தில் இப்படியும் எச்சரிக்கிறார்: “எவர் நோன்பு நோற்றிருந்தும் பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை”

நோன்பை கடமையாக்கியதில், இறைவனின் நோக்கம் மனிதனை நல்லவனாக ஆக்குவதேயாகும். இந்நிலையில், ஒரு மனிதன் இந்த நோக்கத்தை அறியாமல் அல்லது அந்த நோக்கத்தை புறக்கணித்து செயல்படும்போது, அதுவும் இவற்றையெல்லாம் தடுத்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி களமாகக்கப்பட்ட ரமலான் மாதத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் காலை முதல் மாலை வரையில் உணவு உண்ணாமலும், குடிநீரை அருந்தாமலும் இருந்து யாருக்கு என்ன லாபம்?

இத்தகையவர்கள் துரதிஷ்டசாலிகள் என்கிறார் நபிகளார்: ”எத்தனையோ நோன்பாளிகள் நற்பேறற்றோராய் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும், நோன்புக்கால இரவுகளில் விழித்திருந்து “தராவீஹ்“ (நோன்பு கால உபரி தொழுகை) தொழுவோர் பலர் இருக்கின்றனர். இந்தத் தொழுகையின் மூலமாக அவர்கள் கண் விழித்திருந்ததைத் தவிர வெறெதுவும் அவர்கள் அடைவதில்லை.

Share:

முகநூலை பயனுள்ளதாக்க என்ன செய்ய வேண்டும்?


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளார் தமது தாயகமான மக்காவில் தமக்கு எதிரான கொடுமைகளின் உச்சத்தில் நாடு துறந்து மதீனா என்னும் அயலகம் செல்ல வேண்டி வந்தது. அப்போது, அண்ணலார் செய்த ஒரு பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தமது மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய பிரார்த்தனை அது.

"என் இறைவனே..! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் வாய்மையுடன் கொண்டு செல்வாயாக..! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக!” - என்ற இந்தப் பிரார்த்த னையை இறைவனே நபிகளாருக்குக் கற்றுத் தருகின்றான் ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
விசித்திரமான யுகத்தில் நுழைந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.

முகநூல் உலகம் பற்றிதான் சொல்கிறேன்.

எத்தனை எத்தனை விதமான விந்தை மனிதர்கள் இங்கே…. ஆஹா… வியப்பாக இருக்கிறது.

போலிகள் எச்சரிக்கை ஒருபுறம். அறிவு கொழுந்துகளின் ஆர்ப்பாட்டங்கள் மறுபுறம்.

• இப்படி வதந்திகளைப் பரப்புவோர்,
• சதா பரபரப்புகளிலேயே ஆழ்த்தி பதிவேற்றம் செய்வோர்,
• தனியான குழுக்களில் பேச வேண்டிய கருத்துக்களை பொதுத்தளத்தில் வரம்புமுறையில்லாமல்… கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் பதிவிடுவோர்,
• விமர்சனம் என்ற பெயரில் காதுகூசும் வசைமழைப் பொழிவோர்,
• தாயாக மதிக்கப்படும் மொழியை கொலை செய்வோர் என்று முகநூல் விசித்திர யுகமாகிவிட்டது.

என்னைக் கேட்டால் நல்லவற்றை விரைந்து… கொண்டு சேர்க்க, முகநூலைவிட சிறந்த ஊடகம் வேறு எதுவுமில்லை என்பேன். அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு இந்த பரிந்துரையை முன்வைப்பேன்.

முஸ்லிம்கள் என்று தனியாக விளிப்பதற்கு இந்த சொல்லாடலை நான் பயன்படுத்துவதற்கு எனது நண்பர்கள் எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும்.

தமது பண்பு நலன்களில் கவனமாக இருக்க வேண்டியவர்களும், கொள்கை ரீதியாகவே அடுத்தவர்க்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்புகள் சுமத்தப்பட்டவர்களும் முஸ்லிம்கள்தான் என்பதாலேயே இதை பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியிருந்தது.

நபிகளார் தமது தாயகமான மக்காவில் தமக்கு எதிரான கொடுமைகளின் உச்சத்தில் நாடு துறந்து மதீனா என்னும் அயலகம் செல்ல வேண்டி வந்தது. அப்போது, அண்ணலார் செய்த ஒரு பிரார்த்தனை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரும் தமது மனதில் பொறித்துக் கொள்ள வேண்டிய பிரார்த்தனை அது.


”என் இறைவனே..! நீ என்னை எங்கு கொண்டு சென்றாலும் வாய்மையுடன் கொண்டு செல்வாயாக..! என்னை எங்கிருந்து வெளியேற்றினாலும் வாய்மையுடன் வெளியேற்றுவாயாக!” - என்ற இந்தப் பிரார்த்தனையை இறைவனே நபிகளாருக்குக் கற்றுத் தருகின்றான்.

உண்மையாக இருத்தல். உண்மையே பேசுதல். உண்மையையே எழுதல் என்று தனது அத்தனை நடவடிக்கைகளையும் வாய்மை என்னும் நேர்க்கோட்டில் அமைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையின் போக்கை சீர்ப்படுத்தும் ஆளுமைப்பண்பு இது. வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தும் உந்து சக்தி.

முகநூலை மதிப்புள்ளதாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள் இவை:

• சொந்த அடையாளங்களுடன் இருங்கள். இதனால் போலிகள் தவிர்க்கப்படுவர்

• முகநூலுக்கு அப்பால் நிஜ உலகம் ஒன்றுண்டு என்பதால்… நிறைய வாசியுங்கள். வாசிப்பில்லாமல் அறிவு பெற முடியாது. அறிவில்லாமல் செயல்படவே முடியாது என்பதை நன்குணருங்கள்.

• அவற்றின் உண்மை தன்மை அறியாமல் எந்த செய்தியையும் பரப்பாதீர்கள். வதந்திகள் பெருத்த தீமை விளைவிப்பதால் அது கொலையைவிட கொடியதாகும்.

• ஒரு பரபரப்புக்கு பிறகு மறு பரபரப்பு வருமாதலால் அதனால் எந்த பலனும் விளையப் போவதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

• சமயம் சார்ந்த சர்ச்சைமிகு கருத்துக்களை தயவுசெய்து தனியான குழுக்களில் பதிவேற்றுங்கள். பொதுவெளியில், அவை குழப்பம் ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

• பரஸ்பரம் ஒருவர் மற்றொருவரை மதியுங்கள்.

• விமர்சனங்கள் உங்கள் முன்னேற்றத்துக்கான மைல் கற்கள் என்பதை உணருங்கள். அதனால், அவற்றை பொறுமையாக செவிமடுத்து கேளுங்கள். அந்த விமர்சனங்கள் உண்மையிலேயே நியாயமற்றவை, உங்களை திசைத் திருப்புபவை என்றால் அந்நிலையில் மென்மையும், மௌனமுமே மேல்.

• ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட தேர்ச்சி பெற்ற வாசிப்பினால்தான் மொழியும், அதன் நடையும் செம்மைப்படுகிறது. நமது கருத்துக்களை அடுத்தவர் உள்ளங்களில் மேடையமர்த்திக் கொள்ள முடிகிறது. தமிழ் எழுதப்படிக்கத் தெரியாதோர் தயவு செய்து கூச்சமில்லாமல் அதை கற்றுக் கொள்ள முயலுங்கள். சின்ன சின்ன வாக்கியங்களாக எழுதப் பழகுங்கள். பிழைத்திருத்தம் செய்யுங்கள். தாய்க்கு ஒப்பான மொழியை தயவுசெய்து கொலை செய்யாதீர்கள்.

• முகநூல் ஒருகாலும் பொழுதுபோக்குக்கானது அல்ல. அரட்டை அரங்கமும் அல்ல. நன்கு, பயனுள்ளதாக்கிக் கொள்ள நமக்கு கிடைத்திருக்கும் நல்வாய்ப்பு என்பதை உணருங்கள்.

• நண்பர்களை தேர்வு செய்யும்போது அவர்களின் முகநூல் பக்கத்துக்கு சென்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்கள். ஏற்கனவே அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்போர் எத்தகையோர் என்பதை கவனியுங்கள். தேவையற்ற சங்கடங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

• நன்மையானவற்றில் கொள்கை, கோட்பாடுகள், சமயங்கள் கடந்து ஒன்றிணைந்து செயல்படுங்கள்.

• உங்களது நட்பு வட்டத்தில் பெண்கள் இருந்தால்… அவர்களை உங்களின் கண்ணியத்துக்குரிய சொந்த சகோதரிகளாக கருதுங்கள். தேவையில்லாமல் அவர்களின் அந்தரங்களில் நுழையாதீர்கள். தவிர்க்க இயலாத சில நேரங்கள் தவிர மற்றைய நேரங்களில் இன்பாக்ஸில் செல்லாதீர்கள்.

•துவேஷங்களைத் தூண்டும், சமூக நல்லிணக்கத்தை சீர்க்குலைக்கும் எத்தகைய பரப்புரைகளை பரப்பும் ஊடகமாக ஒருகாலும் முகநூலை பயன்படுத்தாதீர்கள். அமைதி சீர்குலைந்துபோன சமூகத்தில் நல்லுரைகள் ஒருகாலும் எடுபடுவதில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.

• தீமைக்கு தீமை ஒருகாலும் தீர்வாகாது. நெருப்பை நெருப்பால் அணைக்கவே முடியாது. வன்மைக்கு மென்மைதான் தீர்வு. உயரிய ஒழுக்க விழுமியங்களால்தான் மனங்களை ஈர்க்க முடியும் என்னும் திருக்குா்ஆன் அறிவுறுத்தல்களை ஒருகாலும் புறக்கணிக்காதீர்கள்.

• நபிகளார் தலைமையில், உதைஃபியா என்னும் இடத்தில் மக்கத்து குறைஷிகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே முஸ்லிம்களுக்கு பெரும் பாதகம் என்று பேசப்பட்ட....  அந்த இடத்தின் பெயராலேயே வழங்கப்படும் உதைஃபியா உடன்படிக்கையை எப்போதும் நினைத்திருங்கள்.

நபிகளாரை நபியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று மக்கத்து குறைஷிகள் முரண்டு பிடிக்க... இறைவனின் திருத்தூதர் முஹம்மது என்ற ஒப்புகை நீக்கப்பட்டு, அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று மாற்றப்பட்ட அந்த மாற்றத்தை நபிகளார் ஏற்றார்கள். ஷரத்து இடம் பெற்றிருந்த பகுதியை சுட்டிக் காட்டச் சொல்லி, தமது திருக்கரங்களாலேயே நபிகளார் அதை அழித்தார்கள். குறைஷிகளின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் நபிகளார் பெற்றது ஒன்றே ஒன்றுதான் அமைதி!

•  அக்பர், பாபர் பிள்ளைகள் அல்ல நாம். இந்த மண்ணின் மைந்தர்கள். ஆதிகுடிகள். நமது நாடு. நமது மக்கள் என்பதில் எப்போதும் உறுதியாக, பொறுப்புணர்வோடு இருங்கள்.

 • எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, பொதுவெளியில் பதிவேற்றப்படும் உங்கள் பதிவுகள் அனைவருக்கும் புரியும்விதமாக அரபி சொல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். பள்ளிவாசல்களில் சக முஸ்லிம்களிடம் பேசுவதும், முஸ்லிம் பத்திரிகைகளில் எழுதுவதும் வேறு. முகநூலில் பதிவேற்றம் செய்வதும் வேறு என்பதில் கவனமாக இருங்கள். 

• கடைசியாக, காலம் எவ்வாறு செலவழிந்தது என்பது கேள்விக்குட்பட்டது. தகுந்த பதில் அளிக்காமல் இறைவனின் திருச்சந்நிதியிலிருந்து நம்மால் நகரவே முடியாது என்பதில் கவனமாக இருங்கள்.

Share:

Sunday, June 11, 2017

வடிவேலு ஹாஸ்யம் மிஞ்சும் நிஜங்கள்.

சற்று நேரத்தில் திடீரென்று ஏதோ எங்கள் பக்கத்தில் வெடிக்க அலறி அடித்துக் கொண்டு எழுந்தால்… சில அடிகள் பக்கத்திலேயே ஒருவர் ராக்கெட் விட்டு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், தயவுசெய்து அங்கிருந்து சென்றுவிடும்படியும், வாணவேடிக்கை நடக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று என்று தெரிவிக்க நடுஇரவை தாண்டிய அந்த அகால வேளையில் எங்கள் படப்பிடிப்பு இடத்தை முணுமுணுத்துக் கொண்டே மாற்ற வேண்டியிருந்தது. ~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''
90-களின் பிற்பகுதியில், சென்னையிலிருந்து வடக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில், ஆந்திரம் எல்லைப்புறமான “இருக்கம்“ என்ற அந்த தீவு பகுதிக்கு சென்றிருக்கிறேன்.

“கல்ப் ஆசியா“ என்ற செய்தி நிறுவனம் சார்பாக “மனிதனின் குரல்“ என்னும் தலைப்பில் பொதிகை தொலைக்காட்சியில் வாரம்தோறும் ஒளிப்பரப்புவதற்காக குறும்படங்கள் தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. இருபதுக்கும் மேற்பட்ட செய்தி படங்களை அப்போது தயாரித்து தந்துள்ளேன். அதன் ஒரு பகுதியாகதான் நான் ஆரம்பத்தில் சொன்ன அந்தப் பகுதிக்கு சென்றிருந்தேன்.

அப்போது, “தமிழ் கற்க கரைகடந்து வரும் பெண்கள்“ என்னும் தலைப்பில் ஓர் அற்புதமான குறும்படம் தயாரித்து ஒளிபரப்பியது குறிப்பிட்ட ஆவணமாகும்.

இருக்கம் தீவிலிருந்த திருவேங்கடம் நகர் என்ற மீனவர் கிராமத்திலிருந்து, தமிழ் கற்பதற்காக ஒரு மணி நேரம் பாய்மரப்படகு பயணம் வழியாக குழந்தைகள் தமிழகத்தின் சுண்ணாம்புகுளம் என்ற பகுதிக்கு வரவேண்டிய சூழல்.

மழைக்காலங்களில் பெருத்த சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வழிபயணம் முழுக்க ஆபத்துக்கள் நிறைந்தது. உயிரை பணயம் வைத்து தமிழ் மீது தீராத பற்றுக் கொண்ட அந்த மாணவமணிகள் குறித்து சிறப்பை விளக்கும் சிலிர்க்க வைக்கும் ஆவணப்படம் அது.

மீண்டும் இருக்கம் தீவு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தவனுக்கு அந்த தீவிலிருந்து எனது அண்டை வீட்டுக்கு புலன் பெயர்ந்த நண்பரின் உதவியால் அந்த வாய்ப்பும் 04.06.2017 ஞாயிறு அன்று கிடைத்தது.

இருக்கம் தீவின் திருவேங்கடம் நகர் மீனவர் கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோயில் திருவிழாவையொட்டிய பயணம் அது. அந்த பயணத்தின் முக்கியத்துவம் பின்னிரவில் நடக்கும் வாணவேடிக்கைதான்!

பண்ருட்டி, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வாணவேடிக்கை சிறப்புக் குழுவினர் நடத்தும் வாண வேடிக்கை அது. சிறந்த குழுவினருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்ற அறிவிப்பும் கூட!

ரமலான் மாதத்து நோன்பு காலமாதலால் பெரும்பாலும் பயணங்கள் மேற்கொள்ள முடியாது. கோடையின் வெம்மை ஒருபுறம் மற்றும் நோன்பு துவக்கம், அதன் துறப்பு ஆகியவற்றுக்கான சிறப்பு ஏற்பாடுக்கான உணவு தயாரிப்பு என்ற சிரமங்கள் பழக்கமற்ற பகுதியில் கிடைக்காது என்பதால் தயக்கம் வேறு. ஆனாலும் எனக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட தயாராக இல்லை.

அந்தியின் பேரழகு, வாணவேடிக்கை, சூரிய உதயம் ஆகிய இவற்றை படம் பிடிப்பது என்று அடுக்கடுக்காக செய்ய வேண்டிய பணிகளை ஏற்கனவே குறித்துக் கொண்டேன்.

வழியில் ஆரம்பாக்கம் என்றழைக்கப்படும் பகுதியில் (மாம்பழத்துக்கு பெயர் போன பகுதி இது) நோன்பு துறப்பதற்கான கொஞ்சம் பழங்கள், ரொட்டி என்று வாங்கிக் கொண்டோம். இந்தப் பயணத்தில் எனது மாணவன் மெஹர் அலியும் வந்திருந்தான்.

படகு துறைக்கு சென்றபோது, 10 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த பாய்மரப் படகுகள் நவீன மோட்டார் என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளாய் மேம்பட்டிருந்தன.

நண்பர் ஏற்பாடு செய்திருந்த சிறு படகில் ஏறிக் கொண்டு புறப்பட்டபோது காற்றின் வேகத்தில் அலைகளாய் மேலெழும்பிய நீர் படகிலிருந்த அனைவரையும் தெப்பமாய் நனைத்துவிட்டது. நல்லவேளை நான் படகின் முனைப்பகுதியில் அமர்த்தப்பட்டதால் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. வழி நெடுக படம்பிடித்தவாறு அந்த ஒரு மணி நேரத்தை செலவழித்தேன்.

இருக்கம் தீவில் இறங்கிய கையோடு அந்திவரை அதன் முக்கியப் பகுதிகளை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. தீவின் உயரமான பகுதியிலிருந்து காளாஹாஸ்தி மலை முகடுகளில் சூரியன் இறங்கி மறைந்த அந்த அற்புதமான காட்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

தீவுப் பகுதியில் கிடைத்த நுங்கு, நாங்கள் கொண்டு சென்றிருந்த பழங்கள் இவற்றைப் பயன்படுத்தி அந்தியில், நோன்பை துறந்தோம். இறைவணக்கங்களையும் முடித்துக் கொண்டோம். அதன்பின் பொடி நடையாய் நடந்து இருட்டில் மீனவ கிராமத்தை அடைந்தோம்.

உற்றார், உறவினர்களால் முற்றுகையிடப்பட்டிருந்த அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏகக் கூட்டம். ஊர்திருவிழாவுக்கு ஒவ்வொரு குடும்பத்தாரும் ஊருக்குச் செலுத்திய சில ஆயிரம் ரூபாய்களைவிட உறவினர்களை உபசரிக்க பல ஆயிரம் ரூபாய்களை அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்தது.

சாம்பார், தயிர் இவற்றுடன் வேண்டாம் என்று மறுத்தும் எங்களுக்காகவே சுடச்சுட வறுத்து கொண்டுவந்த மீன் துண்டுகள் என்று எங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு வாணவேடிக்கை நடக்கும் திடலை அடைந்தோம்.

• வாண வேடிக்கை வெடிகள் எங்கே வெடிக்கப் போகிறார்கள்?
• எத்தனை மணிக்கு வெடிக்கப் போகிறார்கள்?
• என்னென்ன வகை வெடிகள் பயன்படுத்தப் போகிறார்கள்?
• ஒருவேளை ராக்கெட் போன்ற வெடிகள் எங்கள் மீது பாய்ந்தால் நாங்கள் மேற்கொள்ள அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை என்ன?

இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு, கோயிலுக்கு பின்னாலிருந்த திடலில் முன்னூறு மீட்டருக்கு அப்பால், மணலில் போர்வையை விரித்துவிட்டு, வீடியோ காமிராவையும், டிஜிட்டல் காமிராவையும் காமிரா தாங்கியில் (Tripod) பொருத்தி தயாராக வாண வேடிக்கை நடக்கும் திசையில் வைத்து விட்டோம்.

எனது காமிரா செட்டிங் இதுதான்:

• Shutter Release Cable பொருத்தப்பட்ட
• Bulb Mode-ல், காமிரா
• Aperture f/8
• Manual Focus

இவற்றுடன் அவ்வப்போது, வாண வேடிக்கை வெள்ளோட்டமிட்டுக் கொண்டிருந்த இடத்தை மையப்படுத்தி Trail ஆக சில படங்களை எடுத்துப் பார்த்தேன்.

தீப்பொறிகள் ஏதாவது சிதறினால் அணைப்பதற்கு தயாராய் கண்டெய்னரில் தண்ணீர்.

ராக்கெட்டுகள் ஏதாவது தவறி எங்கள் மீது பாயாமலிருக்க தோள் பைகளை எங்களுக்கு முன்னால் மணல் மூட்டைகள் போல வைத்துக் கொண்டோம்.

அதிகபட்சமாக ஏதாவது விபத்து ஏற்பட்டால் தப்பி சென்று பதுங்க பக்கத்திலிருந்த ஒரு பாழடைந்த கோயில் கட்டிடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

கையில் தயாராக டார்ச் விளக்கு.

இத்தனை ஏற்பாடுகளுக்கு பிறகு நோன்பு களைப்பில் சிறிது கண்ணயர்ந்தோம்.

சற்று நேரத்தில் திடீரென்று ஏதோ எங்கள் பக்கத்தில் வெடிக்க அலறி அடித்துக் கொண்டு எழுந்தால்… சில அடிகள் பக்கத்திலேயே ஒருவர் ராக்கெட் விட்டு வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும், தயவுசெய்து அங்கிருந்து சென்றுவிடும்படியும், வாணவேடிக்கை நடக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்று என்று தெரிவிக்க நடுஇரவை தாண்டிய அந்த அகால வேளையில் எங்கள் படப்பிடிப்பு இடத்தை முணுமுணுத்துக் கொண்டே மாற்ற வேண்டியிருந்தது.

பல இடங்களைத் தேடியும் முன்னர் கிடைத்த வசதிகள், தனிமை, கோணம் எங்கும் கிடைக்காததால்… வாண வேடிக்கைகள் நடக்கட்டும்.. அதன் பிறகு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து மக்களோடு மக்களாய் ஓர் ஓரமாக போர்வையை விரித்து காமிராக்களோடு காத்திருந்தோம்.

பின்னிரவு இரண்டு மணி இருக்கும்.

வாண வேடிக்கை ஆரம்பித்தது.

பயங்கரமான நாட்டு வெடிகள் தெறிக்க ஆரம்பித்தன. ஏதோ நமது தலையில் விழுவதைப் போல சத்தம். நல்லவேளை தோள் பையில் ஹெட்போன் இருந்தது. எடுத்து காதுகளில் அழுத்தி செருகிக் கொண்டேன்.

தலைக்கு மேல் வண்ணமயமாய் சிதறிக் கொண்டிருந்த வாண வேடிக்கையை நான் படமெடுக்க மெஹரோ பாதி தூக்கக் கலக்கத்துடன் அவற்றை வீடியோவாக படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் சென்றிருக்கும்.

திடீரென தொடராய் வெடிகள் வெடிக்க மக்கள் சிதறி ஓட ஆரம்பித்தார்கள்.

என்ன ஏது என்று பார்த்து சுதாரிப்பதற்குள் மைதானம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. வெடிகள் வெடித்து சிதறிக் கொண்டிருந்தன.

ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்து வைத்திருந்த அந்த மணற்பாங்கான பகுதி நெருப்பால் பற்றி எரிந்தது. மரங்கள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன.

இறையருளால் நாங்கள் தப்பித்தோம் என்று இறைவனை புகழ்ந்தவாறே திரும்பிப் பார்த்தால் மெஹரைக் காணோம். தோள் பைகளையும் காணோம்.

ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும். அதன் பிறகுதான் அவன் திரும்பி வந்தான்.

வெடிவிபத்தில் குழம்பிப் போன மெஹர் கையில் கிடைத்த பைகளோடு பாதுகாப்பான இடம் தேடி ஓடியது தெரிந்தது.

இந்த வெடிவிபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்தார். கை சதைகள் பிய்ந்த நிலையில் அவரை, இருக்கத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் அக்கரைக்கு படகில் எடுத்துச் சென்றார்கள்.

இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் வாண வேடிக்கை ரத்து செய்யப்படவில்லை.

நேரம் காலை 3 மணி.

இனி அந்த கூட்டத்துக்கு நடுவில் இருந்து பயனில்லை என்று தெரிந்தது.

ஒரு ஐநூறு, அறுநூறு மீட்டருக்கு அப்பால் மணற்பரப்பில் போர்வையை விரித்தோம். எங்கள் நோன்பு துவங்குவதற்கு எல்லைக்குள்ளான காலகட்டம் இன்னும் 60 நிமிடங்களுக்கும் குறைவாக இருந்தது.

அதனால், அந்த மணற்வெளியில் கையில் பாக்கியிருந்த ரொட்டி, பழங்களை எங்கள் “சஹர்“ எனப்படும் நோன்பு உணவாக பயன்படுத்தி அங்கேயே வைகறை தொழுகையை தொழுது கொண்டோம்.

சற்று ஓய்வாக சாய்ந்திருந்த போது, விபத்து நிகழ்ந்த குழுவான பண்ருட்டி வாண வேடிக்கையைத் தொடர்ந்து, பாண்டிச்சேரி வாண வேடிக்கை ஆரம்பித்தது.

ஒருமணி நேரம் நடந்த அந்த நிகழ்வை நாங்கள் அழகாக படம் பிடித்தோம்.

எங்கள் அதிஷ்டம் நாங்கள் தப்பித்தோம். இல்லையென்றால், வெடித்துச் சிதறும் வெடிகளுக்கிடையே, புகைமூட்டத்திலிருந்து கருத்த நிறத்துடன் இரண்டு உருவங்களாய் நாங்கள் நின்றிருப்போம்.

உண்மைதான்… வடிவேலு ஹாஸ்யம் மிஞ்சும் நிஜங்கள் இவை!
Share:

காலமே சாட்சி!


"கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை" ~இக்வான் அமீர்

````````````````````````````
முகநூலில் நான் யாரையும் 'டாக்' செய்வதில்லை. அப்படியிருந்தும் பலர் என்னை “டாக்“ செய்து அதைத் தொடர்ந்து வரும் நோட்டிபிகேஷன் தொல்லையில் சிக்க வைக்கிறார்கள்.

இது ஒருபுறமிருக்க… அண்மையில் சகோதரர் ஒருவர் என்னை “டாக்“ செய்திருந்தார். அதில் ஒரு இஸ்லாமிய அறிஞர் எழுதிய புத்தகத்தை மையப்படுத்தியும் இருந்தார்.

பேரறிஞர் மௌலானா மௌதூதியால் அமைக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி ஒரு புதுவிதமான அமைப்பை சமூகத்தில் தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு அதில் எழுப்பப்பட்டிருந்தது. அந்த விவாதத்தில் 'மல்லுக்கட்டுக்கு வா..!' - என்று என்னையும் இழுத்துவிடும் விதமாக கமெண்டில்வேறு என் பெயரை சேர்த்திருந்தார்.

நான் விவாதங்களில் எப்போதும் கலந்து கொள்வதில்லை. அதுவும் இத்தகைய விவாதங்கள் வீணானவை. நமது நேரத்தை கொள்ளைக் கொள்பவை.. என்பது நான் இஸ்லாத்தை ஒப்பி ஏற்றுக்கொண்ட 80-களிலிருந்தே இதை நன்றாக அறிந்து வைத்திருப்பவன்.

நாத்திகவாதத்திலிருந்து இறைநம்பிக்கையாளனாக நான் மாறிய நிலையிலும் என்னை இந்த முஸ்லிம் சமூகம் சும்மா விடவில்லை. அநாகரீக விமர்சனங்கள் ஒரு பக்கம் என்றால், வழிகேடன், ஷியா, காதியானி என்று வாய்க்கு வந்தார்போல ஏச்சு, பேச்சுக்கள் பட்டங்கள் இலவசமாக வாரி… வாரி வழங்கியிருக்கிறது. பொதுத்தள நாளேடுகளின் படியேறி எனது எழுத்துக்களை தடைப்போட எவ்வளவோ முயற்சித்திருக்கிறது. இதில் கற்றவர், கல்லாதவர் எல்லாம் அடக்கம்.

கார்ல் மார்க்ஸிலிருந்து, நபிகளார் பக்கம் என்னை திருப்பியவை மௌலானா மௌதூதியின் புத்தகங்கள்தான் என்பதை நான் நேரிடையாகவே சொல்ல முடியும். என் வாசிப்புக்கும், என்னுள் எழுந்த கேள்விகளுக்கும் புரிதல்களாகி என்னை திருக்குா்ஆன் பக்கமும், திருநபிகளார் வாழ்வியல் பக்கமும், அந்த வாழ்வியலை தலைமேல் சுமந்து நின்ற நபித்தோழர், தோழியர்கள் பக்கமும், அதைத் தொடர்ந்து அவற்றை பெரும் பாடுபட்டு ஆதாரபூர்வமாக தொகுத்தளித்த பேரறிஞர்கள் பக்கமும் அந்தப் புத்தகங்கள்தான் என்னை திசை திருப்பியவை. ஜமாஅத்தே இஸ்லாமி என்னும் பேரியக்கத்தோடு என்னை இணைத்தவை.

ஒரு பத்தாண்டு காலம் ஜமாஅத்தில் இணைந்து நான் பணியாற்றியது மறக்க முடியாதது. மிகைத்தலாக கருதினாலும், அந்தப் பணிதான் எனது சுவனம் என்று என்னுள் ஆழமான கருத்துருவாக்கத்தை எழுப்பிய காலகட்டமது. எனது போதாத காலகட்டமோ அல்லது தொலைதூர சிந்தனையாக செயல்பட்டதால் என்னவோ ஒரு “டெக்னிகல் நாக்அவுட்டில்“ நான் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்.

ஜமாஅத்திலிருந்து நான் நீக்கப்பட்டாலும், இறையருளால் பாலர் பருவத்திலிருந்தே நான் உருவாக்கிய இளைஞர், இளைஞிகளும், அவர்களின் அரிய ஆள்வளம் வெளியில் சென்று வீணாகிவிடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் அவர்களிடையே உருவாக்கிய மணப்பந்தங்களும் இன்றளவும் தில்லிவரை இந்த வட்டம் பேசப்படுகிறது என்பது பெருமையான செய்தியும்… இறைவன் தரப்பிலிருந்து எனக்கு இவ்வுலகிலேயே கிடைத்த சீரிய வெகுமதியுமாகும்.

ஜமாஅத்தோடு இணைந்து நான் செய்த பணிகளின் விளைவுகள், ஜமாஅத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னும் அதன் ஒத்துழைப்பாளராக இருந்து செய்து கொண்டிருக்கும் பணிகளின் விளைவுகள் என்று ஒரு கால்நூற்றாண்டு கால பணிகள் சமூகம் சார்ந்த பொறுப்புகள்தான் என்று என்னால் உறுதியாக அதிலும் அனுபவபூர்வமாக கூறமுடியும். மாறாக இஸ்லாத்தில் ஒரு புதுவிதமான அமைப்பை உருவாக்குபவை என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. எவ்வித உண்மையும் அற்றது.

மௌலான மௌதூதியால் உருவாக்கப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானாவின் நூல்களை அமைப்பின் கட்டமைப்புக்காக வாசிப்பு நூல்களாக வைத்திருக்கிறது.

ஆனால், ஜமாஅத்தின் கொள்கையும், கோட்பாடுகளும், வழிமுறைகளும் திருக்குர்ஆன் மற்றும் சுன்னா எனப்படும் நபிகளாரின் திருவழிமுறைகளின் மீது கட்டப்பட்டவையாகும். அவற்றை செவ்வன நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இயக்கம் ஜமாஅத்து இஸ்லாமி.

நமது நாட்டின் ஒவ்வொரு இளைஞனையும், இளம்பெண்ணையும் அறிவுரீதியாக, ஒழுக்க ரீதியாக தயார் செய்து அவர்களது சமூக பொறுப்புகளை உணர்த்தி இந்த நாட்டை புனரமைக்கும் பணிகளை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் இயக்கம் இது. மௌலானா மௌதூதி என்ற மாய்மாலங்கள் இங்கு ஏதுமில்லை.

ஜமாஅத் இந்திய துணைக்கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அதன் மீது அபாண்டமாக ஏராளமான குற்றச்சாட்டுகள், குற்றம் சுமத்தி புத்தக வெளியீடுகள். ஒரு காலத்து வெள்ளிமேடைதோறும் சொல்லடுக்கு அம்பு வீச்சுக்கள் என்றெல்லாம் நடந்துள்ளன.

ஒரு கட்டத்தில் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று இளைமையின் வீரியம் துடித்தபோது, ”உங்களுக்கான பணியில் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பணிகளில் கவனம் சிதறவிடாதீர்கள்..!” – என்று அற்புதமான அறிவுரைகள் காலஞ்சென்ற மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப் போன்றவர்களால் அறிவுறுத்தப்பட்டு தடம் புரளாமல் நேர்வழி நடந்தவர்கள். நடந்து கொண்டிருப்பவர்கள்.

தற்போது, ஜமாஅத்தில் எந்தப் பொறுப்பிலும் நான் இல்லை. அதனால், இது அதிகாரபூர்வமான பதிலும் இல்லை. ஆனால், உண்மை இதுதான். இறைவன் நாடினால்… ஜமாஅத்தின் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ, ஆதரவாளனாகவோ, உறுப்பினராகவோ மனித இனத்தை அவனது படைப்பியல் நோக்கத்தில் கட்டமைக்கும் ஜமாஅத்தின் இந்த வெற்றிப் பணிகளை தலைமுறை… தலைமுறையாக அதிலும் குடும்பம் சகிதமாக நாங்கள் முன்னெடுத்து சென்று கொண்டேயிருப்போம். வெற்றியோ தோல்வியோ அது இறைவனின் கையில்.

கடைசியாக, நூற்றாண்டே சாட்சியாக என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் வைகறை நினைவுகள் என்னும் தலைப்பில் மௌலானா மௌதூதியின் வாழ்கையை சுருக்கமாக எழுதியிருக்கிறேன். http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html

அதிலிருந்து சில வரிகள்:

ஒருநாள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு கடிதம் மௌலானாவுக்கு வந்தது. அதில் இப்படி எழுதப்படிட்டிருந்தது:

"அன்புள்ள தந்தை நிகர் மெளலானாவுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தங்களது புத்தகங்களைப் படித்துதான் நான் இஸ்லாம் தழுவினேன்.

மறுமையில் இறைவனின் சந்நிதியில் தங்களது ஈடேற்றத்துக்கான பரிந்துரையை (சாட்சி) நான் செய்வேன்!"

கடிதத்தை படித்து முடிதத மௌலானாவின் கண்கள் குளமாயின.

"உண்மைதான்! இந்த இளைஞன் நாளை மறுமையில் என் ஈடேற்றத்துக்காக சிபாரிசு செய்வான் என்பது உண்மைதான்!" - என்றார் கனத்த குரலில்.

ஆம்...! யாருடைய சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்படாத அந்த மறுமை நாளில், அந்த ஒரு ஸ்பெயின் இளைஞன் மட்டுமல்லாமல் இதை எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆயிரக் கணக்கான பேர் மௌலானாவின் பிழைப் பொறுக்க கருணையாளனான இறைவனிடம் இருகரமேந்தி நிற்பார்கள்.

இறைவன் நாடினால்.... இதற்கு வரவிருக்கும் நூற்றாண்டுகள் சாட்சிகளாக நிற்கும்!
Share:

Saturday, June 3, 2017

ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: இறைவனின் மேன்மையை நினைப்போம்

யார் இந்த மாதத்தில் தானாக முன்வந்து ஒரு நற்செயலைச் செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவர் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமலானல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி நற்சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும், பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும். -இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதனைப் பிடித்தாட்டும் தீய பழக்கவழக்கங்களை விரட்டியடிக்கப் பயிற்சி பட்டறையாக வரும் மாதமாகையால் ரமலான் மாதம் சிறப்புமிக்கது. அது ஒழுக்கத்தையும், சுயகட்டுப்பாட்டையும் மேம்படுத்தி மனிதனுக்கு அவனது படைப்பியல் இலக்கை உணர்த்தி முன் நகர்த்தும் மாதம்.

இறையடியார்கள், இறைவனின் கட்டளைக்கு அஞ்சி இந்தக் கட்டுப்பாட்டைத் தனக்குத் தானே விதித்துக்கொண்டு அதை சிரத்தையுடன் கடைப்பிடிக்கும் மாதமாகும். பசித்திருந்தும், விழித்திருந்தும், இறைவனைத் துதித்திருந்துமாய் இறையருளைப் பெறுவதற்கான மாதமாகும்.

அதனால்தான், நபிகளார் ரமலானின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ரமலானுக்கு முந்தைய மாதமான ஷஅபான் மாதத்தின் இறுதியில் இப்படி உரையாற்றி உற்சாகமூட்டுகிறார்:

“மக்களே! மகத்துவமும், அருள்வளமும் மிக்க மாதம் ஒன்று நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு, ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். இறைவன் இந்த மாதத்தில் நோன்பைக் கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தின் இரவுகளில் பிரத்யேக இறை வணக்கமான தராவீஹ் தொழுவதை உபரி வணக்கமாக்கியுள்ளான்.

யார் இந்த மாதத்தில் தானாக முன்வந்து ஒரு நற்செயலைச் செய்கிறாரோ அவர் ரமலான் அல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவர் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமலானல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி நற்சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழை, எளியோர் மீது அனுதாபமும், பரிவும் காட்ட வேண்டிய மாதமாகும்.”

ஒரு மனிதன் இறைவனின் கட்டளைகளை மேற்கொண்டு குறிப்பிட்ட நேரத்திலிருந்து, குறிப்பிட்ட நேரம் வரை உண்ணுவதில்லை. பருகுவதுமில்லை. திருமணமானோர் இல்லற இன்பங்களைத் துய்ப்பதுமில்லை. இதன் விளைவு இறைவனுக்கு அடிபணிய வேண்டும் என்ற உணர்வு அவனுள் புத்துணர்வு பெறுகிறது. இதன் மூலமாக நேரம் வரும்போது, இறைவனின் கட்டளைகளுக்கொப்ப தனது இச்சைகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற பயிற்சி மாதம் முழுக்கக் கிடைக்கிறது. எக்காரணம் கொண்டும் பின்வாங்காத பொறுமையோடு, நிலைகுலையாமல் சமூகத் தீமைகளை எதிர்த்துப் போரிடும் மனவலிமை அதிகரிக்கிறது.

பிறரையும் நேசிக்கும் மனம்

அதேபோல, சமூகத்தின் நலிந்த பிரிவினரைத் தன்னைப் போலவே கருதி, தனக்கு இறைவன் தரப்பிலிருந்து வழங்கப்பட்டிருக்கும் வாழ்க்கை வசதிகளை அவர்களுக்கும் வழங்கி அவர்களும் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி நோன்பு நோற்கவும், நோன்பு துறக்கவுமான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும்.

திருமணம் போன்ற சுபநாட்களுக்குச் செல்ல அணியும் உடையிலிருந்து, தர நினைக்கும் பரிசுகள் வரை முன்னரே அழகான முறையில் திட்டமிடுவதைப் போலவே நெருங்கிவிட்ட ரமலானின் அத்தனை நன்மைகளையும் பெறுவதற்குத் திட்டமிடுதல் அவசியம்.

“இறைவா! நான் இந்த மனிதனை பகல் முழுவதும் உண்பதிலிருந்தும், பிற இன்பங்களிலிருந்தும் தடுத்து வைத்திருந்தேன். அவனும் அவற்றையெல்லாம் தடுத்துக் கொண்டான். எனவே, என் இறைவனே..! இந்த மனிதனின் விஷயத்தில் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வாயாக!” என்று நோன்பு பரிந்துரைக்க திருக்குர்ஆன் கூறும்.

“என் இறைவா! நான் இந்த மனிதனை இரவு உறக்கத்திலிருந்து தடுத்தேன். இவனும் தனது இனிய உறக்கத்தைத் துறந்து திருக்குர்ஆனை ஓதிய வண்ணமிருந்தான். எனவே இவனுக்கான எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்” என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.

இறைவனின் மேன்மைகளை நினைவுகூர்ந்து சுய ஒழுக்கம் மற்றும் மனிதாபிமானத்தைப் பேணுவதை அன்றாடக் கடமையாக மாற்றும் மாதமாக ரமலான் மாதம் திகழட்டும். 

(தி இந்து, ஆனந்த ஜோதி  இணைப்பில் 25.05.2017 அன்று வெளியான எனது கட்டுரை)
Share:

Friday, June 2, 2017

விருட்சமாய் வளர்ந்து நில்!



பிரியமுள்ள மகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் – உன் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக!

இறைவனின் பேரருளால் நலம். உன் நலத்துக்காகவும் அந்த கருணையாளனிடமே இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
”இனி, என்னிடம் நீங்கள் இருவரும் பேசக்கூடாது!”

- சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுவர்கள் இரண்டுபேரும் அம்மாவின் கோபத்தைக் கண்டு பயந்து போனார்கள். அவர்களின் கண்களில் ஏகத்துக்கும் மிரட்சி சூழ்ந்து கொண்டது!

”போய்விடுங்கள் இங்கிருந்து..!”

தங்களை இதுவரை அப்படி கடிந்து கொள்ளாத அம்மாவின் கோபம் அவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

”சரி, சிறிது நேரத்தில் அம்மாவின் கோபம் மறைந்துவிடும். பிறகு பேசிக் கொள்ளலாம்!” – என்று அவர்கள் அங்கிருந்து சென்றார்கள்.

சிறிது நேரம் சென்றது.

”அம்மா.!” பிள்ளைகள் இருவரும் குழைந்து கொண்டே தாயிடம் சென்றார்கள்.

”நான் அப்போதே சொன்னேனில்லையா? என்னிடம் இனி யாரும் பேசவே கூடாது என்று! போய்விடுங்கள் இங்கிருந்து..!”

அம்மா கோபமாக போட்ட சத்தத்தில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள்.

நேரம் கழிந்து கொண்டிருந்தது.

அம்மாவின் கோபத்திற்கான காரணமும் புரியவில்லை.  ஒரு நொடியும் தங்களைப் பிரிந்திருக்காத அம்மா இன்று பல மணி நேரமாகியும் தங்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது ஒரு சாதாரண விஷயமாக தெரியவில்லை.

சிறுவர்கள் குழம்பித் தவித்தார்கள்.

நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. பாவம் அந்தக் குழந்தைகள்! அவர்களை அறியாமலேயே அவர்களின் கண்களில் கண்ணீர் சூழ்ந்து கொண்டது. கண்கள் ஏக்கம் சூழ அம்மாவை பார்த்தன. சின்னஞ்சிறு உதடுகள், ”அம்மா.. அம்மா..” – என்று அசைந்தன.  அவர்களின் மூச்சுக் காற்றுக்கூட ”அம்மா.. அம்மா” என்று அழைப்பதாகவே வெளிப்பட்டது.

கடைசியில், தாங்கள் போட்ட சண்டைதான் அம்மாவின் கோபத்துக்குக் காரணம் என்று புரிந்தது.

ஒருவரின் தோளில், மற்றொருவர் கைகளைப் போட்டுக் கொண்டார்கள்.

நேராக அம்மாவிடம் சென்றார்கள்.

கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று கொட்ட ஒரே குரலில் சொன்னார்கள்: “ அம்மா… ஓ.. அம்மா..! எங்களைப் பாருங்களேன்..! எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் தெரியாமல் சண்டைப் போட்டுக் கொண்டோமம்மா..! இனிமேல் அப்படி செய்யமாட்டோமம்மா.. எங்களை மன்னித்துவிடுங்களம்மா..! அதற்காக எங்களிடம் பேசாமலிருக்காதீர்களம்மா..! எங்களால் தாள முடியாதம்மா..!”

அவர்கள் வார்த்தைகளை முடிக்கக்கூட இல்லை.

அதற்குள், ”என் செல்லங்களே..! கண்மணிகளே..!” என்று விம்மலும் அழுகையுமாய் அம்மா ஓடி வந்தார். அவர்களை அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். முத்தமாரி பொழிந்தார்.

”குழந்தைகளே..! நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள். அன்பு நபிகளார் என்றும் சண்டை, சச்சரவுகளை விரும்பியதில்லை. அதை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.  ஒற்றுமையாக வாழ்வதை மிகவும் விரும்பினார்கள்.

அன்பு நபிகளார் எதை வெறுத்தார்களோ அவற்றை நாமும் வெறுத்து ஒதுக்க வேண்டும். அன்பு நபிகளார் எதை விரும்பினார்களோ அவற்றை விரும்பி நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால், குழந்தைகளே, நீங்கள் சண்டைப் போட்ட போது நானும் உங்களை வெறுத்தேன்.  இனி நீங்கள் எப்போதும் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது புரிகிறதா?” – என்று அந்த பிஞ்சு குழந்தைகளான ஹஸன், ஹுஸைனுக்கு அறிவுரை வழங்கினார் அந்த உத்தம தாய், அன்பு நபிகளாரின் பிரியத்துக்குரிய மகள் ஃபாத்திமா நாச்சியார்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மகளே, இது ஒரு வரலாற்று நிகழ்வு. நபிகளாரின் அன்பு மகள் ஃபாத்திமாவின் குழந்தை வளர்ப்பு முறைமை இதுதான். 

நபிகளார் வேண்டியது சமாதானம். சண்டையல்ல. அமைதி தொலைந்து போன சமுதாயத்தில் முன்னேற்றமும், வளர்ச்சியும் சாத்தியமே இல்லை என்பதே இந்த சம்பவம் சொல்லும் செய்தி.

மகளே, நீ தென்னாட்டைக் கடந்து வடநாடு சென்றிருப்பது கல்வி கற்றுக் கொள்வதற்காக. சிறப்பாக கல்வி கற்றுக் கொள்ளல் என்ற லட்சியத்தை எட்டும் வழிகளைத் தேட வேண்டுமேயொழிய சண்டை, சச்சரவுகளில் உன் லட்சியத்தை தொலைத்துவிடக் கூடாது.  நீ அடைய வேண்டிய இலக்கிலிருந்து உன் சிந்தனையை திசை திருப்பிவிடக் கூடாது. அது உனது உற்றார் உறவுகளாக இருந்தாலும் சரி அல்லது உன் கூட படிக்கும் சக மாணவிகளாக இருந்தாலும் சரியே நீ எல்லோரிடமும் அன்புடனும், பண்புடனும் பழக வேண்டும்.

நீ  செழித்து வளர வேண்டிய ஒரு விருட்சத்தின் விதை.

ஒரு நல்ல விதையின் முளைப்புத் திறன் தெரியுமா உனக்கு?

சொல்கிறேன் கேள்.

பல விதைகள் பூமியில் விழுந்தன.

ஆனால், அவற்றின் ஒரு விதை விழுந்த இடமோ வெறும் மலைப்பாங்கான பாறை பகுதி. அதிலும் முளைக்கும் சாதியமற்ற பாறையின் இடுக்கு.

அத்துடன் முடிந்துவிட்டதா என்றால் அதுதான் இல்லை.

அந்த விதையை சுட்டுப் பொசுக்கிட சூரியன் துடிதுடித்தான். நெருப்பு மழையாய் வெய்யிலை வாரி இறைத்தான். உஷ்ண மழைப் பொழிந்தான்.

”ஊஹும்..!” அவை எவற்றையும் அந்த விதை சட்டை செய்யவே இல்லை.

”உன்னை விட்டேனா பார்..!” – என்று காற்று, சூரியனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள நிலைமை இன்னும் படு மோசமானது.

”உய்… உய்..!” – சூறைக்காற்றாய் சுழன்று விதையை அங்கிருந்து நகர்த்திட முயன்றது காற்று.

விதை அப்போதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இப்போது மழையும் இணைந்து கொள்ள, ”சத..சத.. பட்..பட்..” – என்று கூரான ஊசிகளாய் மழை பெய்து விதையை அழித்திட முயற்சி செய்தது.

பலனில்லை!

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நடுவே கண்விழித்த மலைப்பாறை, தன் மீதான அசாதாரண நம்பிக்கையால், ”பொடிப்பயல் எங்கே முளை விடப்போகிறான்?” – என்று சோம்பல் முறித்தபடி, பழையபடி உறங்க ஆரம்பித்துவிட்டது. 

ஆனால், விதையோ இத்தனை ஆர்ப்பாட்டங்களையும், கூக்குரல்களையும், ஏசல்களையும், முனைப்புகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டது. இறையருளால் முழு முனைப்புடன் முளைவிட ஆரம்பித்தது.

சூரிய ஒளி, காற்று, நீர், மலைப்பாறையில் படிந்திருந்த மண் என்று தன்னை எதிரியாய் பாவித்தவர்களின் துணை கொண்டே விதை பிளந்து முளைத்தது.

தனது சின்னஞ்சிறு பிஞ்சு சல்லி வேர்களை மெல்ல மெல்ல படரவிட்டது.

முடிந்த இடங்களில் ஆழமாகவும், கடினமான இடங்களில் மேலோட்டமாகவும் வேர்களைப் பரப்பி துளிர்விட்டது. ஆணி வேரை ஆழமாய் பூமிக்குள் செலுத்தி உறுதியானது.

ஒருகாலம் வந்தபோது, அந்த மலைப்பாறைகளின் மீது காயும், கனியுமாய் படர்ந்த ஒரு இளம் விருட்சம் பலன் தர ஆரம்பித்தது.

யாரெல்லாம் தனக்கு இடர் விளைவித்தார்களோ அவர்களின் தீயச் செயல்களை மறந்துவிட்டது.

பூமிக்கு நிழல் தந்தது. சூரியனுடன் தோழமைப்பாராட்டியது. வானத்துக்கு இரு கரம் நீட்டியது. நீரை உறிஞ்சி ஆவியாக்கி மழை மேகங்களை உருவாக்கியது. காற்றோடு இசைந்து, இன்னிசை இசைத்தது. கால்நடைகளுக்கு தீவனமானது. பறவைகளுக்கு அடர்ந்த கூடுகளானது. மனிதர்களுக்கு நிழலும், கனிகளுமாய் அளித்து மகிழ்ந்தது.

மகளே, வீரியமான ஒவ்வொரு விதையின் கதையிது.

நீயும் இத்தகைய விருட்சமாய் வளர்ந்து, படர்ந்து மனித இனத்துக்கு பலனளிக்க வேண்டும் மகளே. அதனால், எதிர்மறை அம்சங்களை புறக்கணித்துவிட்டு, நேர்மறை அம்சங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு வானத்தை தொடும் அளவுக்கு நீ வளர வேண்டும். இதுவே இந்தத் தந்தைக்கு நீ செய்யும் பிரதிபலன். உன்னைச் சுற்றியுள்ள சூழல்களை எல்லாம் உனக்குச் சாதகமாக்கிக் கொண்டு வானுயர வளர்ந்துவிடு.

•    நீ  அன்பிற்காக
•    ஏங்கிக் கொண்டிராதே..!
•    அன்பு மழையாகி
•    அடுத்தவர் மீது
•    அன்பை பொழிந்திடு!
•    அடுத்தவர் உன்னை
•    நேசிப்பதிருக்கட்டும்..!
•    நீ எல்லோர் மனங்களையும்
•    கொள்கைக் கொள்ளும்
•    மந்திரக்கோலாகிவிடு..!

அதேபோல,  எந்நிலையிலும், என் பெயரைப் பயன்படுத்தி உனக்கு செல்வாக்கை தேட முயலாதே! உன்னையே நீ சார்ந்திரு.. உன் கால்களிலேயே நீ நின்றிடு..!

•    ”வாழ்க்கை பறந்து கொண்டிருக்கிறது…!
•    பொழுது புலரும் ஒவ்வொரு நாளும்…
•    இறப்பும் உன்னை நெருங்கி வந்து கொண்டே யிருக்கிறது..!
•    ஆகவே, உன் ஒவ்வொரு கணத்தையும்
•    முற்றிலும் பயன்படுத்துவாயாக!”

சிறுவயதில் என்னுள் மாற்றங்களை நிகழ்த்திய அறிஞர்களில் ஒருவரான பீவர்புரூக்கின் இந்த பொன்மொழியையே உன் முன் வைக்கின்றேன்.

நீ நல்ல மனுஷியாக… பண்புள்ள … மனித நேயமிக்கவளாக மாற நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

உன்னோடு படிக்கும் மாணவிகள் அனைவருக்கும், உனது ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது சலாம்களையும், பிரார்த்தனைகளையும் சேர்த்துவிடு.

உன் பிரார்தனைகளில் எனக்காகவும் இடம் ஒதுக்குவாய் அல்லவா மகளே..!

உனது இம்மை, மறுமை நலன் நாடும் தந்தை,

இக்வான் அமீர்.

Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive