•இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
உலகமென்னும் ஆசா – பாசங்களில் சிக்கி மனிதனின் உள்ளொளி மங்கிவிடுகிறது. அதை பிரகாசமாக்கி சக மனிதர்களின் மீதான சமூக பொறுப்புகளை உணர்த்தி உலகளாவிய சகோதரத்துவ நேயத்தை மலரச் செய்து, இறைவனின் பேரன்புக்கு ஆளாக்க ஒரு சாதகமாக இருப்பதுதான் நோன்பு. உலகம் முழுக்க வாழும் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ஒரே மாதத்தில், ஒரே நேரத்தில் துவக்கி, ஒரே நேரத்தில் முடித்து, ஒரே இலக்கை அடைவதற்காக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கடைபிடிக்கும் ஒரு புனித வேள்வி இது. மனித சமூக அமைப்பில் பல நூறு ஆண்டுகளாக நிலவும் ஒரு வித்யாசமான கட்டமைப்பு. இறைவனுக்காகவே, இறைக்கட்டளைகளை நிறைவேற்றி அவனது திரு உவப்பை எட்டுவதற்கான பிரத்யனம் இது.
நோன்பு என்பது எல்லா காலங்களிலும் எல்லா சமய மக்களிடமும் உலகம் முழுக்க பின்பற்றப்படும் ஓர் இறைவணக்கம். அளப்பரிய அதன் நன்மைகளை முன்வைத்துதான் முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டதாக திருக்குா்ஆன் குறிப்பிடுகிறது. இதன் மூலம் இறையச்சம் பெறலாம் என்று இயம்புகிறது. ரமலான் எனப்படுவது இறையச்சம் பெறுவதற்கான பயிற்சி பாசறையாகும்.
”நோன்பு ஒரு கேடயம். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் கெட்ட சொற்களைப் பேச வேண்டாம். சண்டை, சச்சரவில் ஈடுபட வேண்டாம். கூச்சலிட வேண்டாம். எவராவது வசைமொழிப் பேசினால், சண்டையிட முனைந்தால் தான் ஒரு நோன்பாளி என்பதை நினைவில் கொள்ளட்டும்.– என்று தீமைகளைத் தடுத்து நிறுத்தும் கேடயமாக நோன்பை உருவகப்படுத்தும் நபிகளார் மற்றொரு இடத்தில் இப்படியும் எச்சரிக்கிறார்: “எவர் நோன்பு நோற்றிருந்தும் பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் குறித்து இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை”
நோன்பை கடமையாக்கியதில், இறைவனின் நோக்கம் மனிதனை நல்லவனாக ஆக்குவதேயாகும். இந்நிலையில், ஒரு மனிதன் இந்த நோக்கத்தை அறியாமல் அல்லது அந்த நோக்கத்தை புறக்கணித்து செயல்படும்போது, அதுவும் இவற்றையெல்லாம் தடுத்துக் கொள்ள வேண்டும் என்று பயிற்சி களமாகக்கப்பட்ட ரமலான் மாதத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் தன்னுள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால் காலை முதல் மாலை வரையில் உணவு உண்ணாமலும், குடிநீரை அருந்தாமலும் இருந்து யாருக்கு என்ன லாபம்?
இத்தகையவர்கள் துரதிஷ்டசாலிகள் என்கிறார் நபிகளார்: ”எத்தனையோ நோன்பாளிகள் நற்பேறற்றோராய் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை. மேலும், நோன்புக்கால இரவுகளில் விழித்திருந்து “தராவீஹ்“ (நோன்பு கால உபரி தொழுகை) தொழுவோர் பலர் இருக்கின்றனர். இந்தத் தொழுகையின் மூலமாக அவர்கள் கண் விழித்திருந்ததைத் தவிர வெறெதுவும் அவர்கள் அடைவதில்லை.
0 comments:
Post a Comment