ஒருநாள். நபிகளாரைக் காண நபித்தோழர் உமர் சென்றார்.
பள்ளிவாசலை ஒட்டிய ஒரு சிறு குடிசையில் நபிகளார் வசித்து வந்தார்.
களிமண் சாந்தால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள். மேலே பேரீச்சம் கீற்றுகளால் வேயப்பட்ட கூரை. கட்டாந்தரை. இதுதான் நபிகளாரின் வீடு.
குடிசையின் வாசல் ஓரத்தில் உமர் நின்றார். முகமன் சொன்னார்.
“உமர் பின் கத்தாப் வந்திருக்கிறேன் இறைவனின் தூதரே! உள்ளே வரலாமா?” – என்று அனுமதி வேண்டி நின்றார்.
பதில் முகமன் சொன்ன நபிகளார், “உள்ளே வாருங்கள் உமரே! – என்று வீட்டுக்குள் அழைத்தார்.
சிறிய வாசல் கொண்ட அந்தக் குடிசையில் குனிந்து நுழைந்த உமர் தரையில் அமர்ந்தார். சுற்றி நோட்டம் விட்டார்.
உள்ளே மெத்தை ஏதும் இல்லை. ஒரு சிறிய பாய் மட்டும் இருந்தது. அதில்தான் நபிகளார் பாதி உடல் தரையிலும், பாதி உடல் பாயிலுமாய் படுத்திருந்தார். பாயின் கோரைகளின் அழுத்தம் நபிகளாரின் முதுகில் வரிவரியாய் பதிந்திருந்தன. உடலில் ஒரு முரட்டு ஆடை இருந்தது. தலைக்கு இலைதழைகளால் நிரப்பப்பட்ட தலையணை இருந்தது. குடிசையில் உண்பதற்கு வசதியான உணவு ஏதும் இல்லை. படுப்பதற்கு எந்தவிதமான படுக்கை வசதிகளும் இல்லை. ஒரு மூலையில் கொஞ்சம் பெர்ரி இலைகளும், ஒரு துடைப்பமும் இருந்தன. சுவற்றில் தைக்கப்படாத தோலாடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.
இதைக் கண்ட உமரின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அதைக் கண்டு நபிகளார், “உமர்..! ஏன் அழுகிறீர்கள்?” – என்று விசாரித்தார்.
“அழாமல் என்ன செய்வது இறைவனின் திருத்தூதரே! அழாமல் வேறு என்னதான் செய்வது? நான் இங்கே காணும் காட்சிகள் என்னை நிலைக்குலையச் செய்கின்றன. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதரின் இருப்பிடமும், உடைமைகளும் என்னைக் கலங்கடித்துவிட்டன.
பைசாந்திய, பார்சிய அரசர்கள் எல்லாம் ஆடம்பரமாக, வசதியாக செல்வச் செழிப்பில் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களின் சிம்மாசனங்களோ பொன்னால் செய்யப்பட்டவை. அவர்களின் படுக்கைகளோ தூய பட்டால் நெய்யப்பட்டவை!” – என்ற உமர் கண்களைத் துடைத்துக் கொண்டே குடிசையினுள் இருந்தவற்றைச் சுட்டிக் காட்டியவாறு, “இதோ..! இவைதான் தங்கள் உடைமைகள், சொத்து, சுகங்கள்!” எனறு கனத்த குரலில் பெருமூச்சு விட்டவாறே சொன்னார்.
இதைக் கேட்டதும், நபிகளாரின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. கனிவுடன் உமரை நோக்கினார். மென்மையான குரலில் சொன்னார்:
“உமரே! நானும் இந்த உலகின் சுகபோகங்களையும், ஆடம்பரங்களையும் அனுபவிக்கலாம்தான்! உலகின் அரசர்கள் எல்லோரும் தங்கள் பங்கிற்கான இன்பங்களை இங்கேயே…. இம்மையில் அனுபவித்துவிடலாம்தான்! ஆனால், இவ்வலகைவிட்டு பிரிந்து செல்லும்போது, மரணத்திற்குப் பின் எதிர்படவிருக்கும் மறுமை உலகில் அவர்கள் பங்கு ஏதுமில்லை. வெறும் நஷ்டத்திலிருக்கும் உமரே! ஆம்..! அவர்கள் நஷ்டவாளிகளாக இருப்பார்கள்! நிலையாக நீடித்திருப்பவை மறுமை இன்பங்கள்தான் உமரே! இது உமக்கு சந்தோஷம் அளிக்கவில்லையா?”
நபிகளாரின் அரசு, மறுமை உலகின் நீண்ட நெடிய இன்பங்களின், வெகுமதிகளின் எதிர்ப்பார்ப்பில் இறையச்சத்துடன் வாழத் தயாராக இருக்கும் தலைவர்களால் ஆளப்படும் அரசு என்பது நபித்தோழர் உமர் புரிந்து கொண்டார்.
(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 17.09.2015 அன்று பிரசுரமான எனது ஆக்கம்)
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. இரவில் ஒலித்த அழுகுரல் : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_21.html
2. சவாலை ஏற்ற சிறுவன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/blog-post_15.html
0 comments:
Post a Comment