NewsBlog

Saturday, September 5, 2015

வைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவர்!


சாலையோரத்தில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டாலும், அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் என்னை அறியாமலேயே அந்தக் குட்டிச்சுவரை கண்கள் தேடுகின்றன.

ஆஹா..! எத்தனை எத்தனைக் கனாக்களை விதைத்த குட்டிச்சுவர் அது!

பேருந்துவரும்வரை நண்பர் ஃபிதாவுல்லாஹ்வுடன் சென்னை பெரம்பூர் ஜமாலியா பேருந்து நிறுத்தம் ஒட்டி (ஈஎஸ்ஐ ஆஸ்பிடல்) இருந்த அந்த குட்டிச் சிம்மாசனத்தில் அமர்ந்து சமூகக் கவலையோடு, அதன் முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வ சிந்தனைகளோட உரையாடிய நாட்களின் சாட்சி அல்லவா அந்த சுவர்!

கதை, பாட்டு என்றாலே கடிந்து முகம் சுளித்துக் கொண்டிருந்த சமூகத்தில் அப்போதே பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் என்று கருத்துக்களம் அமைத்த சுவர் அது!



1990-ன், பிந்தைய நாட்கள்.

மழலையர்களிடம் மழலையாய் கதை சொல்லியாய், சொன்னவற்றை எழுத்தில் வடிக்கும் குழந்தை இலக்கியவாதியாய் சமசரம் மற்றும் தினமணியில் வலம் வந்த நேரம்!

அப்போது காலஞ்சென்ற மூதறிஞர் ஜமீல் அஹ்மது சாஹெப் என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

ஹைதராபாத்திலிருந்து வெளிவரும் தெலுங்கு மாத இதழ் கீட்டுராய். சத்தியத்தையும், அசத்தியத்தையும் உரசிப் பார்க்கும், ‘உரைகல்’ என்பது இதன் பொருள். தற்போது இந்த இதழ் வார இதழாக வெளிவருகிறது.

கீட்டுராயில், ‘பிரபு பிலஸ்துன்னாடு’ என்னும் தலைப்பில் அதன் ஆசிரியரும், கவிஞருமான எஸ்.எம்.மாலிக் ஒரு தொடரை எழுதிக் கொண்டிருந்தார்.

கீட்டுராயின் பின்புற உள்ளட்டையில் ஒரு பக்கத்தில் அது பிரசுரமானது. வெறும் 20-25 வரிகள்தான்! ஆனால், சுந்தர தெலுங்கில், உயரிய மொழி இலக்கிய நடையில், குழைத்தெடுத்து எழுதிக் கொண்டிருந்தார் எஸ்.எம்.மாலிக்.

அந்தத் தொடரை உள்வாங்கி அந்த ‘கருத்துப்பிழிவை’ தமிழ் பேசும் நல்லுலகுக்கு சமரசம் மூலமாக அளிக்க வேண்டிய பணி எனது.

அந்தப் பணிக்காக அநேகமாக நாள்தோறும் நான் ஐ.எஃப்.டிக்கு வந்த வண்ணம் இருந்தேன்.

‘இறைவன் அழைக்கிறான்’ - என்ற தலைப்பில் அதை தமிழில் எழுதி வந்த நான், ஜமீல் சாஹெபை சந்தித்து அந்த தொடர் சம்பந்தமாக ஆலோசனை பெறுவது வழக்கமாக இருந்தது.

அப்போது, ஐ.எஃப்.டியின், திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிட ஜமீல் சாஹெப் அந்தப் பணியை முடுக்கிவிட்டிருந்தார்.

மர்ஹீம் மௌலான குத்புத்தீன் அஹ்மது பாகவி, மெளாலான காஞ்சி அப்துற் றவூப் பாகவி, மௌலான சையத் முஹம்மது மதனீ, மெளலானா மஸ்தான் அலி பாகவி, கவியோகி தண்ணன் மூஸா காக்கா, தமிழன்பன், வலம்புரி ஜான் என்று அறிஞர் பட்டாளமே அந்தப் பணிக்கு திரண்டிருந்தது. இதற்கு அடுத்ததாக பல்வேறு அடுக்குகள்; பல்வேறு ஆர்வலர்கள் அந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு பணிக்காக சமரசத்தின் பொறுப்பாசிரியர் சிராஜுல் ஹஸன் சாஹெப் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

அந்தநேரத்தில், ஐ.எஃப்.டியின் புத்தகப் பதிப்பு பணிகளை கவனித்து வந்தவர் நண்பர் ஃபிதாவுல்லாஹ் கான். அவரிடம் சமரசம் இதழ் பணிகளும் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இத்தகைய ஒரு சூழலில்தான் ஜமீல் சாஹெபை சந்திக்க செல்வேன். அந்த சந்திப்பு மக்ரீப்வரை நீளும். சில நேரங்களில் தொழுகைக்கு பிறகும் தொடரும்.

பிறகு நான் பெரம்பூர் ஜமாலியா பஸ் நிறுத்தத்திலிருந்து தங்கசாலை, அங்கிருந்து எண்ணூர் என்று பேருந்து பிடித்து வீடு திரும்ப வேண்டும்.

இப்படி வீடு திரும்ப தயாராகும் அனேகமாய் எல்லா நேரங்களிலுமே பேருந்து நிறுத்தத்திற்கு என்னோட பிதாவுல்லாஹ் வருவார்.

பேருந்து நிறுத்தம் ஐ.எஃ.ப்.டியை ஒட்டியுள்ள தொழிலாளர் மருத்துவ காப்பீட்டு மருத்துவமனைக்கு எதிரில் அமைந்திருந்தது. (இப்போதும்தான்!) அதன் சுற்றுச் சுவர் குட்டையானது! பேருந்துவரும்வரை அந்த சிம்மாசனத்தில் நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து கொள்வோம்.

அப்போது நான் எஸ்.ஐ.ஓ. பாலர் வட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டுவந்த நேரம்.

கதை சொல்லியாக, குழந்தை எழுத்தாளராக, சிறுவர் நாடக ஆசிரியராக என்று பல்வேறு தளங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த காலம்.

எல்லாம் செயல்முறைப் பணி. களப்பணிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில்தான் அடுத்த நாள் நகர்வு என்ற நிலை.


இந்நிலையில், வில்லிவாக்கம் மார்க்கத்திலுள்ள அன்னனூர் டோனா கேலா கேம்பில் எஸ்.ஐ.ஓ. பாலர் வட்டத்தின் சங்கமம் நிகழ்ந்தது.

எண்ணூரிலிருந்து எனது மூத்த மகள் சிறுமி சுமைய்யா (ஷர்மிளா) தலைமையில் குழந்தைகள் பட்டாளம் எண்ணூரிலிருந்து திரண்டு வந்தது.

ஒருகாலத்தில், சிவப்பு கொடி ஏந்தி ஊர்வலங்களின் முன்னணியில் நின்ற அதே குட்டிப் பெண் இப்பொது, இஸ்லாமிய பாசறையின் குட்டி போராளியாய் திகழ்ந்தாள். வெறும் சொற்பொழிவுகள் என்பவை குழந்தைகளை சலிக்க செய்துவிடும். ‘சின்னக்குயில்’ என்னும் பெயரில் கவிதைகள் எழுதி வந்த நான் குழந்தை பாடல்களை பாடவும், நாடகங்களில் நடடிக்கவும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருந்தேன். அதனால், அன்னனூர் முகாமில் நடைபெற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும் எங்களால் சிறப்புற பங்கு பெற முடிந்தது.


இந்த வெற்றிக்கான திட்டப் பகிர்வும், சிந்தனைப் பறிமாற்றங்களும் பெருமளவில் சகோதரர் ஃபிதாவுல்லாஹ் கானுடன் நடத்தப்பட்டது அந்தக் குட்டிச்சுவரில்தான்.

இந்த நினைவுகளை பகிரிந்து கொள்ள நேற்று மலேசியாவில் நம்பிக்கை இதழின் ஆசிரியராக இருக்கும் ஃபிதாவுல்லாஹ்வுடன் நான் தொடர்பு கொண்டபோது, அவர் என்னிடம் சொன்ன வார்த்தைகளை அப்படியே இங்கு தருகிறேன்:

“இக்வான் சாப், கலை, இலக்கியம், பாடல்கள் என்றாலே எல்லாரும் ஒரு அலர்ஜியோடு பார்த்த காலத்தில் நமது சிந்தனைகள் ஒன்றாக இருந்தன. இப்போதும் 'நம்பிக்கை' பத்திரிகை பணியோடு இஸ்லாமியப் பாடல்களையும், இந்திய முஸ்லிம்களின் வரலாறுகளையும் ஆவணப்படுத்தி வருவதற்கு அந்த குட்டிச்சுவரில் விதைக்கப்பட்ட விதைகள்தான் ஊற்றுக்கண்!”

இப்படி ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னரே இளைய முஸ்லிம் சமுதாயத்தின் ஆக்கப்பூர்வ வளர்ச்சிக்காக தொலைநோக்கு சிந்தனைகளுக்கு வித்திட்ட அந்த குட்டிச்சுவரை எப்படி நண்பர் ஃபிதாவுல்லாஹ்வால் மறக்க முடியாதோ அப்படியே என்னாலும் மறக்க முடியாது!


மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் உரையாடும் அந்த மறுமை நாளில் அந்தக் குட்டிச்சுவர் எங்களுக்கு சாட்சியாக இருக்கும். எங்கள் பாவங்களை மன்னிக்க பரிந்துரைக்கும் என்ற நம்பிக்கையோடு நான்.

இறைவன் நாடினால், மீண்டும் வைகறை நினைவுகளில்…

வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive