NewsBlog

Monday, September 7, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 4 : 'கடலில் மிதந்து வந்த கடன்!'


அவசரத் தேவையை முன் வைத்து ஒருவர் மற்றொருவரிடம் ஓராயிரம் தீனார் கடன் கேட்டார்.

"சாட்சியுடன் வாருங்கள். கடன் தருகின்றேன்!"-என்றார் கடன் தருபவர்.

இறைவனின் சாட்சியே போதுமானது!"-என்றார் கடன் கேட்டவர்.

"கடனுக்கு பொறுப்பு ஏற்கும் ஒருவரையாவது அழைத்து வாருங்கள் கடன் கொடுக்கின்றேன்!"-என்றார் அவர்.

"உமது கடனுக்கு இறைவனையே பொறுப்புதாரியாக்குகின்றேன்!"- என்று கடன் கேட்டவர் சொன்னார்.

"சரி..!"-என்று திருப்தியடைந்தவர் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் தந்தார்.

கடன் பெற்றவர் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார். பிழைப்புத் தேடி கடல் கடந்து சென்றுவிட்டார்.

கடன் திருப்பித்தரும் நாள் நெருங்கியது.

கடன்பட்டவர் பயணத்துக்கான தோணியைத் தேடி அலையலானார். ஆனால். தோணி கிடைக்கவில்லை. செய்வதறியாமல் திகைத்தவர் ஒரு மூங்கில் குழாயை எடுத்தார். அதை சுத்தம் செய்து ஓராயிரம் தீனார்களை அடைத்தார். கூடவே தனது இயலாத நிலைமையை விளக்கி ஒரு கடிதத்தையும் இணைத்தார். அதை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு வந்தார்.

"இறைவா! நான் உனது அடியார் ஒருவரிடம் ஓராயிரம் தீனார் கடன் வாங்கியதை நீ அறிவாய். அவர் சாட்சி கேட்டபோது உன்னையே சாட்சியாக்கியதும், பொறுப்புதாரி கேட்டதற்கு உன்னையே பொறுப்புதாரி ஆக்கியதும் உனக்குத் தெரியும். இதற்கு சம்மதித்து அவர் எனக்கு கடனும் அளித்தார். கடனை அடைக்க தவணை நெருங்கிவிட்ட நிலையில் அவரிடம் செல்வதற்கான எந்த வழியுமில்லாமல் நான் தவித்துக் கொண்டிருக்கின்றேன். இக்கட்டான இந்த சூழலில் வேறு வழி தெரியாமல்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். நான் கடனாகப் பெற்ற இந்த அடைக்கலப் பொருளை அவரிடம் சேர்த்துவிடுவாயாக!" - என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டார். மூங்கில் குழாயை கடலில் எறிநதார்.

அதே நேரத்தில், கடன் கொடுத்தவர் தவணை முடிய இருக்கும் அந்த கடைசி நாளில் கடன் வாங்கியவரை எதிர்பார்த்து நின்றிருந்தார். மிதந்தவாறு வந்த மூங்கில் குழாய் அவரது கண்ணில் பட்டது. அதை எடுத்து திறந்து பார்த்தவர் கடிதத்தையும், பணத்தையும் கண்டு வியப்படைந்தார். தனது பொருள் தன்னிடம் பத்திரமாக சேர்ந்தமைக்கு இறைவனை புகழந்தார்.

இது நடந்த சில நாட்களில் கடன்பட்டவர் நேரிடையாகவே வந்து சேர்ந்தார்.

"இறைவன் மீது ஆணையாக! இந்த படகைத் தவிர இன்னும் விரைந்து வர வேறு எந்த வசதியும் எனக்கு கிடைக்கவில்லை. தாமதமாக வந்ததற்கு தயவு செய்து மன்னிக்க வேண்டும்!"- என்று வேண்டி நின்றார்.

"அதற்கு அவசியமே இல்லை சகோதரரே! நீங்கள் அனுப்பியிருந்த பணம் எனக்கு எப்போதோ கிடைத்துவிட்டது!"-என்று அவர் நீட்டிய கடன் தீனார்களை திரும்பவும் அவரிடமே சேர்த்து வழியனுப்பி வைத்தார்.

முஹம்மது நபிகளார் (ஸல்), கடனை திருப்பித் தருவதன் அவசியத்தை வலியுறுத்தி தமது தோழர்களுக்கு சொன்ன வரலாற்று சம்பவம் இது.

"திருப்பித் தர வேண்டும் என்னும் எண்ணத்துடன் மக்ககளின் பொருட்களை ஒருவன் (கடனாகப்) பெறுகிறான் என்றால் இறைவன் அவன் சார்ப்பில் அக்கடனை நிறைவேற்றித் தருகின்றான். ஆனால், கடனை திருப்பித் தரும எண்ணமேயில்லாமல் ஒருவன் பெறுவானாகில் அதன் காரணமாக அவனை இறைவன் அழித்தே விடுகின்றான்!" - என்று நபிகளார் எச்சரிக்கிறார்கள்.

வாக்குறுதிகளை அத்துமீறும் எத்தனையோ சமுதாயங்களை இறைவன் அழித்துவிட்டுள்ளான். திருக்குர்ஆன் 'பாவிகள்!' - என்று அவர்களை அடைமொழியிட்டு இப்படி கடுமையாகச் சாடுகின்றது:

"அவர்களில் பெரும்பாலோரிடம் வாக்குறுதி பேணும் பண்பினை நாம் காணவில்லை. மாறாக அவர்களில் பெரும்பாலோரை பாவிகளாகவே நாம் காணுகின்றோம்!" (7:102}

- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html
 
நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive