NewsBlog

Friday, September 4, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 3: 'குட்டி எறும்புகளும்... அன்பு நபியும்!'

 

நபிகளாரும் அவரது தோழர்களும் ஒரு பயணத்தில் இருந்தார்கள். வழியில், கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்க நேர்ந்தது. பயணக் களைப்பு அல்லவா அதுதான்!

நபிகளார் ஓய்வெடுக்க தங்கியிருந்த இடத்தைச் சுற்றி வந்தார்கள்.

தோழர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளனவா? என்பதைக் கேட்டறிந்தார்கள்.

சிறிது நேரம் சென்றிருக்கும். குளிர் அதிகமாக இருந்தது.

குளிருக்கு இதமாகப் பக்கததில் யாரோ தீ மூட்டியிருந்தார்கள்.

நபிகளார் அங்கு சென்றார்கள். நெருப்பின் அருகில் ஒரு மனிதர் இருந்தார். அவரிடம் நபிகளார் பேச்சுக் கொடுத்தார்கள். சட்டென்று அவர்களின் முகத்தில் பதற்றம்.

நெருப்புக்குப் பக்கத்தில் ஒரு எறும்புப் புற்று இருந்தது. புற்றைச் சுற்றியும் நிறைய எறும்புகள். இதைக் கண்டுதான் நபிகளார் பதறிப் போனார்கள்.

பாவம்..! அந்த எறும்புகள் நெருப்பில் விழுந்து இறந்துவிடும் அல்லவா? அனலில் சிக்கி அவை பொசுங்கிப் போகுமே? அந்த எண்ணம் நபிகளாரை கவலையடைய வைத்தது.


எறும்புகளுக்கு ஆபத்து! இறைவனின் சின்னஞ்சிறிய படைப்பான எறும்புகளுக்கு ஆபத்து!

"இந்த நெருப்பை இங்கே யார் மூட்டியது?"- நெருப்புக்குப் பக்கத்தில் இருந்த மனிதரிடம் நபிகளார் கேட்டார்கள்.

அந்த மனிதருக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர் நபிகளாரை குழப்பத்துடன் பார்த்தார்.

"இறைவனின் தூதரே, நா...ன்... நான்..தான்.. தீ...மூட்டினேன்... குளிருக்காக!.." - என்றார் தயங்கி.. தயங்கி.

"சீக்கிரமாகத் தீயை அணையுங்கள்.. ம்... சீக்கிரமாக தீயை அணையுங்கள்!"- நபிகளார் பதறினார்கள்.

இதைக் கண்ட அந்த மனிதர், ஒரு போர்வையை எடுத்தார். தீயின் மீது மூடினார்.

தீயும் அணைந்தது.

அதன் பிறகுதான் அந்த மனிதருக்கு விஷயம் விளங்கியது. எறும்புப் புற்றின் அருகில் நெருப்பு மூட்டியது தவறு என்று புரிந்தது.

அதன் பிறகு அந்த மனிதர், நெருப்பை மூட்டும் போது மிக மிக கவனமாக இருந்தார். சுற்றி ஏதாவது உயிரினங்கள் உள்ளனவா என்று பார்ப்பார். "அப்பாடா எதுவும் இல்லை!"- என்று திருப்தியுடன் சொல்லிக் கொள்வார். அதன் பிறகுதான் தீ மூட்டுவார்.

எறும்புகள் நெருப்பில் சிக்கி அழிவதைக் கூட நபிகளார் பொறுத்துக் கொள்ளவில்லை.

இறைவனின் எந்தப் படைப்பும் துன்பம் அடைவதை நபிகளார் எப்போதும் விரும்பியதில்லை.

- அருட்கொடைகள் தொடரும்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive