NewsBlog

Monday, September 7, 2015

வைகறை நினைவுகள் 19: அந்த இருபது ரூபாய்!


முக்தார் அலி. மறக்க முடியாத எஸ்.ஐ.ஓ. பாலர் வட்டத்து சிறுவன்.

குழந்தைகள் வெறுமையானவர்கள். எந்த சிந்தனையும் மனதில், உட்புகாதவர்கள். எதிர்கால தலைமுறையை வழிநடத்திச் செல்லும் மாலுமிகள்!

இந்த இளம் வயது பாத்திகளில் நற்சிந்தனைகள் என்னும் விதைகள் தெளித்து வளர்த்தெடுத்தால் மிகச் சிறந்த மனிதர்களாக அவர்கள் உருவெடுப்பார்கள்.

அத்தகைய அதி முக்கியமான ஒரு பணியைதான் நான் தேர்வு செய்து, பாலர் வட்டத்து சிறார், சிறுமிகளிடம் செய்து வந்தேன்.

வடசென்னை, சென்னை மாநகரின் மிகவும் பின்தங்கிய பகுதி. ஆட்சியாளர்களால் இதுவரையிலும் புறக்கணிக்கப்பட்டு வரும் பகுதி. நிறுவனங்களின் செயல்பாடுகள் ஒட்டிதான் இங்கு வளர்ச்சிப் பணிகள் திட்டமிடப்படும். மக்களை முன்வைத்து அல்ல.

அதனால், வடசென்னையில் வாழும் மிக எளிய குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள்தான் பாலர் வட்டத்து குழந்தைகள். இவர்கள் கல்வி கற்பதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் எஸ்.ஐ.ஓ. அமைப்பின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் மூலமாக செய்ய வேண்டி வந்தது. அத்தோடு அவர்களுக்கான ஒழுக்கப் பயிற்சியும் அளிக்க வேண்டிய கட்டாயம்.

 
இடதுபுறம்: முக்தார் அலி
இச்சூழலில்தான் முக்தார் அலி என்னும் அந்த முத்து வார்த்தெடுக்கப்பட்டது.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் 1994-ம் ஆண்டு அது.

குழந்தைகளுக்கான உலகக் கல்வி, மார்க்கக் கல்வி, நற்பணிகளுக்கான அழைப்பு என்று தீவிரமாக செயல்பட்டு வந்த நேரத்தில்தான் முக்தார் அலி ஒரு நாள் வீடு தேடி வந்தான்.

“இக்வான்! (இக்வான் என்பது சகோதரன் என்று பொருள்படும் சொல் ஆதலால் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உட்பட இந்த பெயராலேயே என்னை விளிப்பது வழக்கம்) இது எனது சேமிப்பு பணம். அழைப்புப் பணிகளுக்காக செலவழியுங்க! இது கூட கொஞ்சம் பணம் போட்டு நோட்டீஸ் அடிங்க. நூறோ, இருநூறோ என்னிடம் கொடுங்க..! நான் வீடு வீடா போய் கொடுக்கிறேன்! நாம செய்ற இந்த நல்ல பணி எல்லா இடத்திலேயும் பரவட்டும்!” – என்றான்.

ஒரு உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வு அது. நீங்கள் இதை எப்படி உணருகிறீர்களோ எனக்குத் தெரியவில்லை.


தீமையில் சிக்கிக் கொண்டிருக்கும் சமூகத்தை மீட்டெடுக்க அந்த சின்னத் தளிர் தனது சில நாள் சேமிப்பை திரட்டி வந்து தந்திருந்தது. அறப்பணிகள் செய்ய தூண்டியது. ஒரு அசாதாரணமான செயலாகதான் எனக்குப்பட்டது.

முக்தாரை கட்டியணைத்து, உச்சித் தழுவி வாழ்த்தி அனுப்பி வைத்தேன்.

அப்போது நான் நிஜங்களின் நினைவுகள் என்னும் தலைப்பில் ‘சின்னக்குயில்’ என்னும் புனைப்பெயரில், சமரசம் பத்திரிகையில், எழுதி வந்தேன். முக்தார் அலியின் அந்த இருபது ரூபாய் ஒரு கவிதையை எழுத வைத்தது. 1-15 ஆகஸ்ட் 1994 சமரசம் இதழில் வெளியான அந்த கவிதை இதோ… இது:

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இருபது ரூபாய்..!
''''''''''''''''''''''''''''''''''''''''
அது இருபது ரூபாய்..!
அரசு அச்சடித்த இருபது ரூபாய்..!
“அப்படி என்னங்க இருக்கு அதுலே?
இப்படி உத்து … உத்து பார்க்கிறீங்க..?”
என் மனைவியின் குரல்.
அதிசயம் ஒன்றுமில்லைதான்!
அற்புதமும் இல்லைதான்!
ஆனாலும்,
நான் அதை உற்றுப் பார்க்கிறேன்..!

அது இருபது ரூபாய்..!
கொடுத்தது இளம் தளிர்க்கரங்கள்!
அது ‘பாக்கெட் மணி’
ஒரு ஐஸ் கிரீம்..
ஒரு கலர்..
சில பர்பிகள்.. சில மிட்டாய்கள்..
ஜீரணித்திருக்க வேண்டிய
இருபது ரூபாய்..!
 
எண்ணங்களின் முதிர்ச்சி..
சிந்தனையின் தெளிவு..
மன இச்சைக்கு கடிவாளம்..
ஜனித்தது இருபது ரூபாய்..!

வேர்த்து விறுவிறுக்க..
மேலும் கீழும் மூச்சிறைக்க..
கடும் வெய்யிலிலும்..
சுறுசுறுப்பாய்
அவன் ஓடிவந்தான்..!

அண்ணே..! இதை
அழைப்புப் பணிக்குப் பயன்படுத்தணும்..!
இறைநெறியை தவறவிட்ட
என்னருமை
சகோதரரைக் காக்கணும்..!
நிறைய நோட்டீஸ் அடிங்க..!
நூறோ.. இருநூறோ..
என்னிடம் கொடுங்க..!
இறைமறையின் போதனைகள்..
திருநபியின் வாக்குகள்
சேர்த்திடுவேன் மக்களிடம்..!
நினைவிருக்கட்டும்…
இது அழைப்புப் பணிக்கு மட்டுமே..!

சிறுவனா அவன்..?
சிந்தனையின் சிற்பி..!
சுடும் நரக நெருப்பிலிருந்து..
தன் சகோதரரை
காத்திடத் துடிக்கும்
கருணைத் தாயல்லவா அவன்..!

அது இருபது ரூபாய்..!
நான் உற்றுப் பார்க்கிறேன்..!
நெஞ்சில் நிழலாடும் ஒரு நினைவோடு..!


அது போர்க்கால அறிவிப்பு..!
“இறைப்பாதையில் கொடுப்பீர்.. செல்வத்தை..!”
மறைநபியின் கட்டளை..!
மதீனத்து மக்கள்
குவித்தனர் குன்றென
பொற்குவியலை..!
வீட்டையே துடைத்தெடுத்தனர் சிலர் என்றால்..!
“பாதி செல்வம் இதோ அண்ணலே..!
பலர்.. கொண்டு வந்து கொட்டினர்
திருநபியின் காலடியில்.
ஆடவருக்கு சளைத்தவரில்லை பெண்டிர்..!
அழகு நங்கையரின்
விலைமதிப்பு ஆபரணங்கள்..
கழன்று விழுந்தன
நிதிக் குவியலில்..!

“இறைவழியில் போரிட..
நிதி தாரீர்..! நிதி தாரீர்..!!”
மாநபி வார்த்தையின் ரீங்காரம்..
உறவைக் கெடுத்தது..!
உறக்கத்தைத் தடுத்தது..!
நபித்தோழர் ஒருவருக்கு..!
உண்ணவும் மனமின்றி..
அலைகழித்தது..!
“போர் நிதிக்கு என் பங்கில்லையே…
அய்யகோ.. என்ன செய்வேன்..!
அலையாய் அலைகழித்தது..! 


திட்டம் ஒன்று
பட்டென்று உதித்தது..!
யூதர் ஒருவர் தோட்டத்தில்
இரவெல்லாம் நீரிறைக்க..
கிடைத்ததோ…
இரு கை பேரீத்தம் கனி..!
“அண்ணலே..! இதோ..!
என்னாலான நிதி..!”
தோழர் நீட்டிய கரங்களில்
பேரீத்தம்… கனிகள்..!

நிலைமைகளின்
உண்மையை..
சீராக அறிந்திட..
வேறு யாருண்டு …
அண்ணல் நபியைப் போல்.?

ஏறிட்ட கண்களில்
நிறைந்திட்ட நீர்த்துளி..
பீரிட காத்திருக்க..
உழைத்துச் சிவந்த கரங்களிலிருந்து..
காய்த்துச் சிவந்த கனிகள்..
கொடுத்துச் சிவந்த கரங்களில்
உருண்டு வந்து விழுந்தன..!

பொற் குவியலின் மீது
பரப்பப்பட்ட பேரீத்தம் கனிகள்
குன்றின் சிகரமாய்..!
உயர்ந்த உழைப்பால்…
தூய உணர்வால்..
அதன் துடிப்பால்.. சுடர்விட்டு நின்றன..!
இதயம் நெகிழ
இறைத்தூதர் கூறினார்:
“தோழரே! என்னருமைத் தோழரே..!
நிதிக்குவியலில்..
அனைத்தையும்விட
சிறந்தவை இதுவேயாம்..! 


அது இருபது ரூபாய்..!
அரசு அச்சடித்த இருபது ரூபாய்..!
அதில் அதிசயம் ஒன்றுமில்லை..
அற்புதம் ஏதுமில்லை..!
இருப்பினும் பார்க்கிறேன்..
திரும்ப.. திரும்ப..!
வரலாற்றின் காலங்கள்
வீணாய் கரைந்திடவில்லை..!
இதோ எழுந்தன மீண்டும்..!
நிஜமாய்.. இதமாய்..
உணர்வின் நாதமாய்..
துடிப்பின் உருவாய்…!
அது இருபது ரூபாய்..!
வரலாற்றை நிஜபடுத்த வந்த
இருபது ரூபாய்…!”

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இறைவன் நாடினால்.. மீண்டும் மற்றொரு வைகறையில்.. நினைவுகளோடு…

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive