NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Monday, January 30, 2017

மனசோட மடல்கள்-002, அன்புள்ள சகோதரிக்கு,


"மனசோட மடல்கள்எனது வாழ்வில் நான் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்களுடனான எனது கருத்து பறிமாற்றங்கள் மடல்களாய். நிராசை விளிம்பிலும், கோபத்தின் குமைச்சலிலும், விரக்தியின் படுபாதாளத்திலும் பல்வேறு வினாக்களுடன் நின்றிருந்த ஆண், பெண் நிஜங்கள். அவர்களுடன் மனம் விட்டு பேசும் மடல்கள் இவை. அவர்களை நம்பிக்கையூட்டி விலகியிருந்த பாதையில் சீராக பயணிக்க என்னாலான முயற்சி. கடந்த காலத்தின் பதிவுகள். உள்ளது உள்ளப்படி அப்படியே. உங்களுக்குப் பிடித்திருந்தால்.. நீங்களும் மடல்களை வாசிக்கலாம். கருத்துக்களை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது மறுக்கலாம்" --- இக்வான் அமீர்

பாசத்துக்கும், பிரியத்துக்கும் உரிய சகோதரிக்கு,

இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!

அஸ்ஸலாமு அலைக்கும்,

உன்னை இம்மடல் நல்ல உடல் நிலையுடனும், வீரியமான நல்லுணர்வுகளுடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன். அதற்காக இறைவனிடம் இரு கரமேந்தி நெஞ்சுருக இறைஞ்சுகின்றேன்.

சமீபத்தில், An Innocent Man’ என்ற ஆங்கில நாவலை வாசித்தேன். அதன் கதைச் சுருக்கம் இதுதான்:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணியமான குடும்பத்தைச் சேர்ந்த கதாநாயகன் விமான நிலைய பழுது பார்க்கும் தளத்தில் அதிகாரியாகப் பணிபுரிபவன். தான் உண்டு. தன் வேலை உண்டு. தன் குடும்பம் உண்டு என்று தன் இளம் மனைவியுடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருபவன்.

இந்நிலையில், ஒருநாள். கதாநாயகன் வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருக்கின்றான். திடீரென்று பாய்ந்துவரும்போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவனைச் சுட்டு படுகாயப்படுத்துகிறார்கள். பிறகு வீடு முழுவதும் சோதனையிடுகிறார்கள். போதைப் பொருள் ஏதும் சிக்கவில்லை. அப்பாவி மனிதன் சுடப்பட்டதற்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதால் அவன்தான் தங்களைச் சுட்டதாக சாட்சிகளை ஜோடித்து நீதிமன்றத்தில் அவனுக்குத் தண்டனையையும் வாங்கி தந்துவிடுகிறார்கள்.

உண்மையில் இந்த காவல்துறை அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள். பிடிபடும் போதைப் பொருளை முழுவதையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்காமல், அதை விற்று லாபம் சம்பாதிப்பவர்கள்.

சிறையில் அடைபட்டிருக்கும் அப்பாவி கதாநாயகன், அங்கே பல கொடுமைகளை, “தாதாக்களின் அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து காலம் தள்ளுகின்றான். இடையில், கதாநாயகி காவலைதுறையினரின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து தனது கணவன் நிரபராதி என்றும், அந்த காவல்துறை அதிகாரிகள்தான் ஊழல் பேர்வழிகள் என்றும் பல முறை முறையிட்டும், அழுது புலம்பியும் பலனில்லாமல்  போகிறது.

சிறையில் தோழனாய் கிடைத்த ஓர் அறிவாளி கைதியின் தோழமையாலும், அறிவுறுத்தலாலும் தன்னைத் துன்புறுத்தி இம்சிக்கும் தாதா கைதியை கழிப்பறையில் சாட்சிகள் இல்லாமலேயே கொன்றுவிடுகின்றான்.

அதன்பின், தண்டனை முடிந்து வெளிவரும் கதாநாயகன் தன்னை பொய்க்குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பிய காவல்துறை அதிகாரிகளைத் தேடிப் பிடித்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தருவதே நாவலின் முடிவாகும்.

சகோதரி, இந்த நாவலில் நமக்கு படிப்பினை உள்ளதாலேயே இந்த சந்தர்பத்தில் இதை உனக்கும் நினைவுறுத்துகின்றேன்.  சில சமயங்களில் சாட்சியங்கள் என்ற முலாம் பூச்சால், பொய்மையும், உண்மையாகிவிடுகிறது. இது பௌதீயியல் அடிப்படையிலான மனித சட்டங்களில் உள்ள குறைபாடுகளாகும். இந்த பொய்ச் சாட்சியங்களை உரசிப்பார்க்கும் திறனின்மை நமது நீதிமன்றங்களின் பலவீனங்களாகும். வேறு வழியில்லாமல் நீதிபதிகள் தங்கள் இயலாமையால் அளிக்கும் தீர்ப்பால் குற்றவாளிகள் நிரபராதிவிடுகிறார்கள். நிரபராதிகளோ குற்றம் சாட்டப்பட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.

ஆனால், மனித மனமோ ஒரு பரிபூரண நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது.  ஒவ்வொரு செயலும், அது மறைவானதோ, வெளிப்படையானதோ எதுவானாலும், வெளிச்சத்தில் நடந்தாலும், காரிருளில் நடந்தாலும் அனைத்தையும் அறிந்து தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதியின் தேவையை உணர்கிறது. அத்தகைய நீதிபரிபாலனம், நீதமான சட்டத்தின் அரசாட்சி நடக்கும் இடம் எதுவென்று தெரியுமா உனக்கு?

இதோதிருக்குர்ஆன் சொல்வதைக் கொஞ்சம் செவி தாழ்த்தி கேளேன்:

பூமி முழு பலத்துடன் உலுக்கப்படும்போது, மேலும், பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொண்ர்ந்து விடும்போது, மேலும் அதற்கு என்ன நேர்ந்தது?“ – என்று மனிதன் கேட்கும்போது, அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும். ஏனெனில், உம் இறைவன் அதற்கு அவ்வாறு எடுத்துரைக்கும்படி ஆணையிட்டிருப்பான். அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள். தங்கள் செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக..! பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ, அவன் அதனைக் கண்டுக் கொள்வான். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுக் கொள்வான். (99:1-8)

வானம் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றையும் இறைவன் நன்கு அறிகின்றான். அவை அனைத்தும் ஓர் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன” 22:70)

அவர்களுடைய நெஞ்சங்கள் மறைந்திருக்கின்றவற்றையும், அவை வெளிப்படுத்துகின்றவற்றையும் நிச்சயமாக இறைவன் நன்கறிகின்றான். வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ள எந்த ஒரு பொருளும் ஒரு தெளிவான பதிவேட்டில் எழுதப்படாமல் இல்லை..!” (27:75)

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொன்றையும் இறைவன் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா என்ன? மூன்று மனிதர்களிடையே இரகசியப் பேச்சு வார்த்தை எதுவும் நடப்பதில்லை. அவர்களிடையே நான்காவதாக இறைவன் இருந்ததைத் தவிர! (58:7)

எனதருமைச் சகோதரியே, கேட்டாயா இறைவனின் வார்த்தைகளை..! இறைவனின் ஞானம் அளப்பரியது! கற்பனைக்கு எட்டாதது..!

மனிதனின் அத்தனைச் செயல்களும் பதிவு செய்யப்படுகின்றன. துல்லியமாக கண்காணிக்கப்படுகின்றன. அதனால், இறைவினன் நீதிமன்றத்தில் அணுவளவும் வழுவாத நீதி கிடைக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

இத்தகைய பேராற்றல் மிக்க இறைவனைத்தான் இறைவனின் அடிமைகளாகிய நாம் நம்முடைய இறைவனாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுவதாக உறுதி பிரமாணத்தில் (கலிமாவில்) வாக்களிக்கின்றோம். அது ஒரு பொறுப்பை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு அதற்காக செய்யப்படும் முயற்சியாகும் என்பதை நினைவில் வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய தூதுச் செய்திகளையும் சேர்ப்பித்துவிடுவதைத் தவிர வேறு எந்தப் பணியும் எனக்கில்லை!‘ என்ற திருக்குர்ஆனின் (72:23) வசனத்தை உன் முன் நிறுத்தி விடை பெறுகின்றேன். வஸ்ஸலாம்.

உன் இம்மை, மறுமை நலனை் நாடும்

உன் அண்ணன்

இக்வான் அமீர்.

““““““““““““““““““““
Share:

Saturday, January 28, 2017

ஜல்லிக்கட்டு: கொப்பளிக்கும் குருதித் திவலைகள்


இனி வரும்
தலைமுறையினரின்
மரபணுக்களில்
அச்சத்தை புகுத்த
முனைகிறது
அதிகார வர்க்கம்..!
ஒருபோதும்
சமரசம் காணமுடியாத
அரசியல் ஏவல் வர்க்கம்!

அறவழி
போர்க்குரலை
நசுக்கத்தான்
எத்தனை எத்தனை
பிரயத்தனம்..!
சகல ஆள், அம்பாரியோடு,
யுத்த திறனோடு
சொந்த மக்களுக்கெதிராய்
பீடு நடை போட்டது
மக்களாட்சி எந்திரம்..!
சாமான்யனின்
முதுகுதண்டுகளை முறித்திட
சுற்றியது குண்டாந்தடிகளை..!

இங்கு
உரிமைகள்
கேட்போர் எல்லாம்
தேசதுரோகிகளே..!
எதிர்ப்போர்
எல்லாம்
கலகக்காரர்களே!

வெறும் முஷ்டியை 
முறிக்கினால்..
சும்மா விடுவோமா..என்ன..?
கண் முன்னே பாருங்கள்
உடனடி தண்டனையை!
வரமழையாய் பொழிந்தன
மண்டைகளைக் கிழித்துக்கொண்டு
குண்டாந்தடிகள்..!

”தீ ஜுவாலைகளால் பொசுக்கிடு..
கண்ணில் படுவதை எல்லாம் உடைத்திடு..
குண்டாந்தடிகளால் எலும்பை முறித்திடு..!”
சட்டம், ஒழுங்கு
அதிகாரப் போதை ஏற்றப்பட்டு
சீறிப்பாய்ந்த வேளை அது..!

அய்யகோ... இனி…
எப்போதும் போல
சில அபலைகள்..
சிறைகொட்டடிகளில் நிரம்பும்..!
வெள்ளையனின் சட்டங்களால்
அதிகார வேடன்
பின்னிய வலைகளில்
சிக்கிய அப்பாவி முயல்கள்!
செய்யாத குற்றங்களுக்காக...
சிலுவைகளைச் சுமக்கத்
சிறைக்கொட்டடிகளில்
காத்திருக்கும்
ஏசுபிரான்கள்..!

முரசை ஒலித்திடு..
கூட்டம் சேர்த்திடு...
பொய்மை மையால்
பக்கங்களை நிரப்பிடு..!
உண்மைகளை மறைத்திடு..!

இத்தனைக்குபிறகும்,
உண்மைகள் உறங்குமோ..?
அக்னி சிறகுகளாய்
சீறிப் பாய்கின்றன
அடுக்கடுக்காய் சாட்சியங்கள்..!

பீனிக்ஸ் பறவைகளை
எதிர்கொள்ள முடியாமல்
திணறி நிற்கிறது ஹிட்லரின் படை!
கைகளைப் பிசைந்து கொண்டு..
ஏதேதோ பிதற்றிக் கொண்டு..
திரிகின்றன குண்டாந்தடிகள்..!

ஜனநாயக
அடையாள யுத்த
சாணக்கியத்தில்
எங்கள் இளம் தலைமுறை
காணிக்கையாக்கியது..
கொப்பளிக்கும்
குருதித் திவலைகள்..!
வற்றாத
குருதித் திவலைகள்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''
- இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''
Share:

தடைசெய்யப்பட்ட சித்திரவதைகளை நடைமுறைப்படுத்த டிரம்ப் முயற்சி

சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ள வார்ட்டர் போர்டிங்’ அதாவது மூச்சு முட்ட நீரில் முக்கி திணறிடித்தல் போன்ற விசாரணை முறைகள் நல்ல பலன் தருவதாக டிரம்ப் ஏபிசி செய்தி ஸ்தாபனிடத்திடம் தெரிவித்துள்ளார். அந்த முறைகளை கொண்டு வருவது குறித்து தான் சிஐஏ மற்றும் பெண்டகன் தலைவர்களை கலந்தாலோசிக்கப் போவதாகவும்  அப்போது அவர் கூறியுள்ளார்.

தண்ணீரில் மூச்சுத்திணறச் செய்து வாக்குமூலம் பெறப்படும் இந்த முறைக்கு எதிராக கடந்த காலங்களில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

கனத்து கிடக்குது மனம்..!

"மூத்த அதிகாரி என்ற சட்டையைக் கழற்றி ஒரு சுதந்திர இதழியலாளனாக பொதுவெளியில், நான் வெளிவந்து நின்றபோது, அது மற்றொரு உலகமாகவே பட்டது. நிறுவனத்தில் எனது நிர்வாக பணி அழுத்தம் தந்த சுமையால் நான் ஏழாண்டுகள் பொதுவெளி ஊடகங்களிலிருந்து முற்றிலும், தொடர்பற்று போயிருந்த நிலை அது. ஒரு காலத்தில் நான் கோலோச்சிய ஊடகங்களில் எல்லாமே, எல்லோருமே மாறிப்போயிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கதான் முடிந்தது. சரி.. சிறுபான்மை ஊடகங்களில் பணியாற்ற எத்தனித்தபோது, அப்பாடா… எத்தனை தனித்தனி வீடுகள்! எத்தனை தனித்தனி கதவுகள்!! எதை நான் தகர்த்து உள் நுழைவேன் கடவுளே!" - இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''
ஏனோ தெரியவில்லை.. சமீபத்திய எனது பொழுதுகளில் சுணக்கம்.

ஒவ்வொரு பொழுதிலும், ”உலகம் பிறந்தது எனக்காக..!” - என்றொரு முணுமுணுப்புடன் துவங்கும் உற்சாகம் பின்தள்ளப்படுகிறதோ என்ற கவலை என்னைச் சூழ்ந்து கொள்கிறது.

மதியம் உணவு உண்ணும்போது, எனது துணைவியாரிடம் இப்படி கவலையுடன் கேட்டேன்:

“நான் எதற்கும் பயன்படாதவனாகிவிட்டேனோ..?”

எனது கேள்வியின் அழுத்தம் அவருக்கு புரிய வாய்ப்பில்லை.

”என்னவாச்சு..? நல்லாதானே பொழுது போயிட்டிருக்கு..! காலையிலே எழுந்ததும், கோழிகள், லவ்பேர்ட்ஸ், புறாக்கள், மாடி தோட்டம் என்று கழிகிறது. முடிந்ததும், கம்யூட்டரில் எழுத்து வேலைகள்னு நைட்டெல்லாம் தூங்காமலேயே கழியுது. என்னாச்சு உங்களுக்கு?”

அதற்கு மேல் பாவம்.. அவருடன் விவாதித்து பயனில்லை. ஒரு சராசரி குடும்பத்தலைவியான அவருள் எனது கவலைகள் நுழைவதை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை!

2013-ம் ஆண்டு. எனது வாழ்வை பொருளாதாரம், சமூக அந்தஸ்து என்று சகலவற்றிலும் என்னை மெருகேற்றி மேம்படுத்தி வைத்திருந்த பணியைத் துறந்து, விருப்ப ஓய்வு பெற்று வந்தது தவறோ? இந்த உறுத்தல் அவ்வப்போது மேலெழுவது வழக்கம்தான்! இன்று அது சற்று தூக்கலாக இருந்தது.

நிறுவனத்திலிருந்து வெளியேறி ஏதாவது ஒரு ஊடகத்துறைக்கு முழுநேரமாய் சென்றுவிடதான் திட்டம். வண்ணமய கனவுகள் எல்லாம்.

ஆனால், பொதுவெளி ஊடகங்களில் நுழைவதில் பல்வேறு சிக்கல்கள் என்றால் சிறுபான்மை ஊடகங்களோ கண்டும் காணாத மனப்போக்கில் அவரவர்களுக்கான உருக்குக் கோட்டைகளுக்குள் நின்று அச்சுறுத்தின. 

இந்நிலையில், முஸ்லிம் காட்சி ஊடகம் ஒன்று பணிக்கு அமர்த்தி, ஒரு பத்து நாளைக்குள் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்ட துரதிஷ்டம்!  வாழ்வில் முதன்முதலாக பட்ட இழிவு.

அதுவும் அந்த ஊடகத்து தற்போதைய நிர்வாக இயக்குனரும் நானும், பல ஆண்டுகளுக்கு முன் வேறொரு காட்சி ஊடகத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களாக இருந்திருந்தும் இந்த அவலநிலை ஏற்பட்டது ஜீரணிக்க முடியாததானது! என்னோடு முகம் கொடுத்துகூட பேசாமல், எனக்கான நேரம் ஒதுக்கி என்னை அமர வைத்து பேசாமல் வீட்டுக்கு அனுப்பிய இழிநிலை அது.

எனது வயது, அனுபவம், படிப்பு, இதற்கு முன் நான் வகித்த பதவிகள் எல்லாம் துச்சமாக தூக்கி எறியப்பட்ட அந்த பத்து நாட்கள் அவை.

ஆனால், ஆசியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி ஆலையில் பணியாளராக நான் இருந்தபோது, இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாட்டு பகுதிகளுக்கும் நிர்வாக தலைவராக இருந்தவர் சேசஷாயி. எனது நிறுவன செயல்பாடுகள் மற்றும் வெளிப்புற ஊடக செயல்பாடுகளுக்கு கைப்பட எழுதி கொடுத்த  பாராட்டு கடிதமும், நேரில் அழைத்து எனக்களித்த மதிப்பீடுகளும் முரண்களாய் நினைவில் எழுவதை தடுக்க முடியவில்லை.

ஆக, மூத்த அதிகாரி என்ற சட்டையைக் கழற்றி ஒரு சுதந்திர இதழியலாளனாக பொதுவெளியில், நான் வெளிவந்து நின்றபோது, அது மற்றொரு உலகமாகவே பட்டது.

நிறுவனத்தில் எனது நிர்வாக பணி அழுத்தம் தந்த சுமையால் நான் ஏழாண்டுகள் பொதுவெளி ஊடகங்களிலிருந்து முற்றிலும், தொடர்பற்று போயிருந்த நிலை அது.

ஒரு காலத்தில் நான் கோலோச்சிய ஊடகங்களில் எல்லாமே, எல்லோருமே மாறிப்போயிருப்பதைக் கண்டு திகைத்து நிற்கதான் முடிந்தது. 

சரி.. சிறுபான்மை ஊடகங்களில் பணியாற்ற எத்தனித்தபோது, அப்பாடா… எத்தனை தனித்தனி வீடுகள்! எத்தனை தனித்தனி கதவுகள்!! எதை நான் தகர்த்து உள் நுழைவேன் கடவுளே!

மீண்டும் போராட்ட களமானது வாழ்க்கை.

அச்சுறுத்திய அந்தப் பொழுதுகளை துச்சமாய் தூக்கியெறிந்து வழக்கம்போலவே, உலகம் பிறந்தது எனக்காக என்ற அதே துள்ளலுடன் களத்தில் நான். 

எழுத்து ஊடகங்களிலிருந்து முற்றும் விலகாமல், மின்னணு ஊடகங்களுக்கான தட மாற்றங்களாக பாதையை சீரமைத்துக் கொள்ளும் முனைப்பில் நான்.

இது ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கத்திலோ,

வழக்கமாக நான் எழுதிக் கொண்டிருந்த பொதுவெளிப் பத்திரிகையில் என் எழுத்துக்கள் தொடர்ந்து, சில வாரங்களாக வெளியாகவில்லை என்ற கவலை!  நிர்வாக ஒதுக்கீடுகளால் அவை வேறொருவருக்கு பறிபோன நிலை என்று மீண்டும் மன அழுத்தமாய் எனது போராட்டம் தொடர்கிறது.

இந்த நினைப்பும், ஆழ் மனதை கனக்கச் செய்கிறதோ என்னவோ..!

ஏறக்குறைய ஒரு முப்பது ஆண்டுகள் நான் எழுதுவது எனது சமகாலத்து நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த முப்பது ஆண்டுகளின் ஒவ்வொரு பொழுதையும் நான் ஒரு போர்க்களமாகவே கடந்திருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது!

ஏன் எழுதவில்லை? ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்ற கேள்விகளின் 'தங்கமலை ரகசியம்' எனக்கும், என்னை படைத்தவனுக்கு மட்டுமே தெரிந்தவை என்ற உண்மையை எப்படி சொல்வேன்?

முரண்பாடுகளோடு எனது உடன்பாடுகளை சுமந்து சென்றதை எப்படி விளக்குவேன்?

எனது நிறங்களை நான் இழக்காமல் பொத்திப் பொத்தி பத்திரமாய் பார்த்துக் கொண்ட தருணங்கள் அல்லவா அவை?

எனது எழுத்தாணிப் போராட்டக் களம் இப்படி என்றால்… என்னைச் சுற்றியும் வாழும் நலிந்த மனிதர்களின் வாழ்க்கை என்னை தொடர்ந்து பாதித்துக் கொண்டிருக்கிறதே... ஏன்?

எனது உலகம் ஒரு கற்பனை உலகமோ? அடுக்கடுக்காய் வருகின்றன கேள்விகள். பதில் காண முடியாமல் தவிக்கிறேன் நான்.

அண்மையில்தான், தமிழகத்து பல மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உயிர்பிரிந்த மரநிழல்களில், கருகிய வயல் வரப்போரங்களில் நின்று திரும்பியிருந்தேன். 

கட்டபொம்மனாய், பறிபோன அந்த உயிர்களின் மதிப்பு வெறும் ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்தான் என்றறிந்தபோது, மானஸ்தர்களாக அந்த எளிய விவசாயிகள் எனக்குப் பட்டார்கள். ஆனாலும், அவர்களைக் கொன்றொழித்த வெள்ளுடை அரசியல் நாயகர்களுக்கு யார் தருவர் தண்டனை?

இருண்ட இரவுகளில் அச்சுறுத்தும் அந்தத் தூக்குக்கயிறுகளின் அசைவுகளிலிருந்து இன்னும் நான் மீண்டெழ முடியாமல் தவிக்கிறேன்!

இந்நிலையில்,  கடந்த வாரம் எனது வழக்கமான காட்டுயிர் ஆய்வு மற்றும் ஒளிப்படங்களுக்கான பயணத்தின் போது எதிர்பட்டது அந்த ஏழை,பாழை இருளர்களின் சந்திப்பு.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து ஒரு அரைநூற்றாண்டு காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.. அவர்களின் வாழ்க்கைத் தரம் அப்படியே அவர்களின் செம்பட்டை முடியைப்  போலவே நிறமற்று கிடக்கிறது. https://www.youtube.com/watch?v=4q_9_176FD4&t=35s   https://www.youtube.com/watch?v=-avrrlco8jg&t=61s

பக்கிங்காம் கால்வாய் ஓரமாகவும், காடுகளிலும் கழியும் வாழ்க்கை அவர்களுடையது! மண்ணின் பூர்வ குடிகளான அந்த இருளர் இன மக்களின் அறியாமைகளும், அவர்களின் வாழ்வியல் போக்கும் இன்னும் என் சோகத்தை அதிகரிக்கின்றன.

கடைசியாக, எனது இளம் நண்பர் நாகர்கோவில் டாக்டர் மொஹித்தீன் அத்தனை விஷயங்களையும் உள்வாங்கி சொன்னார்:

"தொடர்ந்து எழுதுங்கள்… குறிப்பிட்ட தலைப்புகளில் எழுதிக் கொண்டேயிருங்கள். அவை பிரசுரமானானலும் சரி… பிரசுரமாகாவிட்டாலும் சரி.. தொடர்ந்து எழுதுங்கள்… உங்கள் வலைப்பூக்களை நிரப்பியவாறு இருங்கள். நமக்கென்று பொதுவெளி ஊடகம் ஒன்று வரும்வரை இந்த போராட்டம் தொடர்ந்வாறே இருக்கட்டும்!"

காலம் சென்ற எனது ஆசான் மூதறிஞர் ஜமீல் அஹ்மது, நான் இப்படி, சோர்வுறும்போதெல்லாம் என்னை அமரவைத்து, அவருக்கு விருப்பமான உப்புத் தடவிய ஆரஞ்சு சுளைகளை என் முன் நீட்டியவாறே அந்த 11 மணி தாண்டிய இரவுகளில் என்னை உற்சாகப்படுத்த சொல்லும் அதே சொற்கள் இவை! இளமை வடிவில்..! 

மனம் கனத்திருந்தாலும், உடல் சோர்ந்திருந்தாலும், என் அறிவாயுத யுத்தத்துக்கு முடிவேயில்லை .... மரணம்வரை என்கின்றன நடப்புச் சூழல்கள்!

          “““““““““““““““““““““““““““““““““
Share:

Friday, January 27, 2017

ஜல்லிக்கட்டு: போராட்டக்காரர்கள் மீது குறைந்தபட்ச நடிவகைக்கை..! ஓ.பி.எஸ். சட்டபேரவையில் விளக்கம்

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்ததாக முதல்வர் ஓ.பி.எஸ். சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். அவரது பேச்சின் முழுமையான வடிவம் இது:

தமிழர்களின் பண்பாட்டு சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை அவ்வப்போது வழங்கிய பல்வேறு இடைக்கால உத்தரவுகளின்படியே ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தனது 11.7.2011 நாளிட்ட அறிவிக்கையில் காட்சிப்படுத்த தடை செய்யப்படும் விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம், மத்திய அரசால் 11.7.2011 அன்று வெளியிடப்பட்ட அந்த அறிவிக்கை மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 7.5.2014 அன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தவும், மகாராஷ்டிராவில் காளைமாட்டுப் பந்தயத்தை நடத்தவும் முழுமையான தடை பிறப்பிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009, இந்திய விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதால், இது மத்திய சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த இயலாத சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்போர் சங்கம், மாடுபிடி வீரர்கள் சங்கம் போன்ற சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களும், சில அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும் 12.1.2017 முதல் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 16.1.2017 அன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 700 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி வாடிவாசல் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 227 பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களை 17.1.2017 அன்று கைது செய்தனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் சுமார் 3,500 பேர் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை மாநகர், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடினர்.

இதனையடுத்து, காவல் துறையினர் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினர் தலையீட்டின் பேரில், பின்னர் அவர்கள் கலைந்து சென்று வாடிவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டனர்.

அன்று, சென்னை மெரினா கடற்கரை, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஆங்காங்கு தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் காவல் துறை உயரதிகாரிகள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களுடன் பேசி அவர்களின் பிரதிநிதிகள் சுமார் 15 பேரை இது குறித்து அரசுடன் பேச சம்மதிக்க வைத்தனர். எனது உத்தரவின் பேரில், மீன்வளத்துறை அமைச்சர் திரு. டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு.கே.பாண்டியராஜன் ஆகியோர் 18.1.2017 அன்று அதிகாலை 2 மணிக்கு போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு தடை நீக்குவதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வந்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். பிரதிநிதிகள், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள், போராட்டக்காரர்கள் அனைவரும் அறியும்படி அரசு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டுமென்று கோரினர்.

18.1.2017 அன்று, நான் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சட்டரீதியான தீர்வு காண அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கி, 19.1.2017 அன்று காலை புதுடில்லியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். நான் புதுடில்லி செல்வதற்கு முன் எனது வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து இது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

19.1.2017 அன்று மதுரை மாநகர், வைகையாற்று பாலத்தில் சுமார் 1,000 பேர் நாகர்கோயிலில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, காரைக்கால் - பெங்களூர் விரைவு ரயில் வண்டியை சேலம் நகரில் சுமார் 500 பேர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை ரயில்வே சந்திப்பில் பயணிகள் ரயில் ஒன்றையும், பின்னர் காரைக்குடி ரயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரயில் வண்டியையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர். காவல் துறையினர் தலையிட்டும் அவர்கள் ரயில் வண்டிகளை செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மறியல் போராட்டங்களினால் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஊர்வலம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர். இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் பொது அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற போதும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் பார்த்துக் கொண்டனர்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை 19.1.2017 அன்று புதுடில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துகளை பரிவுடன் கேட்டுக் கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், இந்த பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படாததை சுட்டிக் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாக எடுத்திடும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற உத்தரவாதத்தை அளித்தார். எனவே, நான் புதுடில்லியிலேயே தங்கியிருந்து மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் ஜல்லிக்கட்டு நடத்திட இயலுமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு

உயரதிகாரிகளுடன் விவாதித்தேன். அதனடிப்படையில் மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் ஒன்றை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டு, வரைவு சட்ட திருத்தம் புதுடில்லியிலேயே தயார் செய்யப்பட்டது. இதை அவசர சட்டமாக பிறப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி, இந்த அவசர சட்டத்திற்கு மத்திய அரசின் பரிந்துரை பெறப்பட்டு, மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவேண்டும் என்பதால் அதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த அவசர சட்டத்தை அதிகாரிகள் மூலம் 20.1.2017 அன்று மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு நான் சென்னை திரும்பினேன். இந்த அவசர சட்டத்திற்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அன்று இரவே பெறப்பட்டது.

20.1.2017 அன்று புதுடில்லியிலும், சென்னை விமான நிலையத்திலும், பத்திரிகையாளர்களை சந்தித்த போது, தமிழக அரசால் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினேன்.

அன்று மாலை மதுரை மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் சுமார் 200 பேர் மதுரை விமான நிலையத்திற்குள் சென்று விமான போக்குவரத்தை தடை செய்யும் நோக்குடன் விமான நிலையத்திற்கு முன்பு மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அமைதியாக கலைந்து போக செய்து, விமான நிலையம் அருகில் தேவையான ஏற்பாடுகளை பலப்படுத்தினர்.
மேதகு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெற்று, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கான தமிழ்நாடு திருத்தச் சட்டம் 21.1.2017 அன்று சட்டமாக்கப்பட்டது. எனவே, அடுத்த நாளே, அதாவது, 22.1.2017 அன்றே ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் மற்றும் சில இடங்களில் நடைபெறும் என தெரிவித்து அறிக்கை ஒன்றை நான் வெளியிட்டேன்.

21-1-2017 அன்று, ஊடகங்களுக்கு நான் பேட்டி அளித்தபோது, 23-1-2017 அன்று துவங்க உள்ள சட்டமன்றக் கூட்டத் தொடரில், அவசரச் சட்டத்திற்கு மாற்றான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும் என்பதை எடுத்துக் கூறினேன்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி நிரந்தர சட்டம் கொண்டுவர வேண்டுமெனவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும் அதுவரையில் தங்கள் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடையே பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தூண்டிவிட்டதோடு, அவ்வமைப்பினர் பொது இடங்களில் மிகவும் ஆட்சேபகரமாக பேசி வந்தனர். இப்போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் அன்றாட அலுவலுக்கு இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் 26.1.2017 வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, குடியரசு தினத்தன்று கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசு தின விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டுமெனக் கோரி வந்தவர்கள், தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கிய பின்னரும், நிரந்தர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும், காவிரி நதி நீர் விவகாரம், முல்லை பெரியாறு பிரச்சினை, பன்னாட்டு வர்த்தகங்கள் மீதான தடை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதிலும் ஒரு பகுதியினர் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தனி தமிழ்நாடாக அறிவிக்க வேண்டுமென்றும், இந்திய குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அறிவிக்க வேண்டுமென்றும் கோரினர். போராட்டத்தின் போது, ஓசாமா பின் லாடன் படம் வைத்திருந்தவர்கள், ‘இந்திய குடியரசு தினத்தை நிராகரிக்கிறோம்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தையும் இங்கே காண்பிக்க விழைகிறேன்.

22.1.2017 அன்று இப்போராட்டத்தை முன் நின்று நடத்தி வந்தவர்களுள் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில், இப்போராட்டத்தை தேச விரோதிகளும், விஷமிகளும், சமூக விரோதிகளும் கையிலெடுத்து கொண்டு விரும்பத்தகாத கோரிக்கைகளை முன் வைப்பதாகவும், தேசிய கொடியை எரிப்பதாகவும், போராட்டத்தை திசை திருப்புவதாகவும் தெரிவித்ததோடு, மாணவர்களும், இளைஞர்களும் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறும் கூறியிருந்தார். மேலும், அன்று மாலை ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ராஜசேகரன், ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாதிபதி, பெரியவர் அம்பலத்து அரசர், ராஜேஷ், ஹிப் ஹாப் தமிழா என்கிற ஆதி ஆகியோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், இவர்கள் தான் இந்த போராட்டத்திற்கு பத்தாண்டுகளாக போராடி இந்த போராட்டம் முதன்முதலில் ஆரம்பித்தவர்கள், 2006லிருந்து இப்போது நடைபெறும் போராட்டத்திற்கும் இவர்கள் தான் அடிப்படை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து போராட்டம் வெற்றி பெற்றது என்றும், அனைவரும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்ட பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.

போராட்டத்தில் பல்வேறு தேச விரோத அமைப்புகளைச் சார்ந்தவர்கள், விஷமிகள், சமூக விரோதிகள் ஊடுருவி, அமைதியாக நடைபெற்று வந்த பேராட்டத்தில் வன்முறையில் ஈடுபடவிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், 23.1.2017 அன்று காலை முதல் காவல் துறையினர், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் துறையினர் மெரினா கடற்கரை நோக்கி வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எவரும் மெரினா நோக்கி வராமல் தடுத்து, மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலமாகவும் கேட்டுக் கொண்டதையடுத்து, சுமார் 10,000 பேர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்து அமைதியான முறையில் கலைந்து சென்றனர். எனினும், சுமார் 2,000 பேர் மட்டும் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சட்டவிரோத கும்பல் ஒன்று ஐஸ் அவுஸ், பெசன்ட் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலைகளில் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி, காவல் துறையினரை தள்ளிக் கொண்டு கடற்கரைக்குச் செல்ல முற்பட்ட போது, தடுத்தும் கேளாமல், காவல் துறையினர் மீது கற்களை வீசி தடுப்பை உடைத்துக் கொண்டு முன்னேறியதால், காவல் துறையினர் தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை உபயோகித்தும் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

மேலும், மற்றொரு சட்டவிரோத கும்பல் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்குள் புகுந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியதில் தீ பிடித்து, காவல் நிலையத்திலுள்ள பொருட்கள் மற்றும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து, சேதமடைந்தன. இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் இரண்டு நான்கு சக்கர வாகனங்களும், 31 இரண்டு சக்கர வாகனங்களும், ஒரு ஆட்டோ ரிக்ஷாவும் எரிந்து சேதமடைந்தன.

சென்னை, நடுக்குப்பத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று கூடி மெரினா நோக்கி செல்ல முற்பட்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்தும் அக்கும்பல் கலைந்து செல்லாமல் காவல் துறையினர் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது. இச்சம்பவத்தில், நடுக்குப்பம் மீன் மார்க்கெட் பகுதியில் இருந்த தற்காலிக பந்தல்கள் 20, ஒரு டெம்போ டிராவலர், நான்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. காவல் துறையினர் அவர்களை கலைந்து போகச் சொல்லி எச்சரித்தும் கேட்காமல், அவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், காவல் துறையினர், தக்க எச்சரிக்கைக்குக் பின்பு, குறைந்தபட்ச பலத்தை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

ஜாம்பஜார், பாரதி சாலையில் சட்டவிரோத கும்பல் ஒன்று, காவல் துறையினர் மீது கற்களை வீசித் தாக்கியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தது. காவல் துறையினர் உரிய எச்சரிக்கை விடுத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தகுந்த எச்சரிக்கைக்கு பின் கண்ணீர் புகையை உபயோகித்து அவர்களை கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவத்தில் பொதுமக்களின் எட்டு வாகனங்கள் தீயில் கருகின. சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நாயர் பாலத்தில் சட்டவிரோத கும்பல் ஒன்று மறியலில் ஈடுபட்டு வந்தது குறித்து தகவலறிந்து சென்னை மேற்கு காவல் இணை ஆணையர் அவர்கள் அங்கு சென்ற போது, அவரது அரசு வாகன ஓட்டுநரைத் தாக்கி, அவ்வாகனத்திற்கு தீ வைத்தனர். இச்சம்பவத்தில் காவல் வாகனம் முற்றிலும் எரிந்து போனது.

சென்னை, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியில் கும்பல் ஒன்று வன்முறையில் ஈடுபட்டு காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், அப்பகுதியிலிருந்த மூன்று டாஸ்மாக் கடைகளை சூறையாடியது. இதே போன்று வடபழனி நூறடி சாலையில், சட்டவிரோத கும்பல் ஒன்று வடபழனி காவல் ஆய்வாளரின் வாகனத்திற்கு தீ வைத்தது.

சென்னை, அரும்பாக்கம் நூறடி சாலையில் சட்டவிரோத கும்பல் ஒன்று, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தையும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களையும் தாக்கி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டெம்போ டிராவலர் காவல் வாகனம் மற்றும் தீயணைப்புத் துறை வாகனம் ஒன்றையும் தீ வைத்து சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடைக்கும் தீ வைத்தனர்.

மேலும், சென்னை, மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம் அருகேயுள்ள புறக்காவல் உதவி மையத்தினை சட்டவிரோத கும்பல் ஒன்று சேதப்படுத்திவிட்டு, அங்கு இருந்த இரண்டு காவல் வாகனங்களை தீ வைத்து எரித்தது.

சென்னையில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் அவர்களை கலைக்க மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம், தரமணி, அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, கொட்டிவாக்கம், கே.கே.நகர், கிண்டி, ஓட்டேரி, ஜாம்பஜார், விருகம்பாக்கம் உட்பட 76 இடங்களில் மொத்தம் 12,500 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கலைந்தனர்.

சென்னை மாநகரில் ஆங்காங்கு சட்டவிரோத கும்பல்கள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தும், காவல் ஆளிநர்களைத் தாக்கியும், காவல் வாகனங்களுக்கு தீவைத்து வன்முறையில் ஈடுபட்ட போது காவல் துறையினர் தலையிட்டு அவர்களை கலைந்து போக அறிவுறுத்தியும், கலைந்து செல்ல மறுத்து வன்முறையில் தொடர்ந்து ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி தகுந்த எச்சரிக்கைக்கு பின் குறைந்த பட்ச பலத்தை உபயோகித்தும், கண்ணீர் புகையை பயன்படுத்தியும் கலைத்தனர். இதனால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பெரும் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இச்சம்பவங்களின் போது காவல் துறையினர் பெருமளவில் காயமடைந்தனர். மேலும் பல காவல் வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டும், கல்வீசியும் சேதப்படுத்தப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினர் 142 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 138 பேரும் காயமடைந்தனர். அவர்களில் காவல் துறையினர் 68 பேரும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 41 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையாளர்கள் தீ வைத்ததில் 19 காவல் வாகனங்கள், இரண்டு தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் ஒரு சிறைத்துறை நான்கு சக்கர வாகனம், ஒரு மாநகர அரசுப் பேருந்து ஆகியவை எரிந்து சேதமாகின. இது மட்டுமல்லாமல், விஷமிகளால் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், 29 இரு சக்கர வாகனங்கள் தீ வைக்கப்பட்டு சேதமாகின. மேலும், 15 காவல் துறை வாகனங்கள், 41 பிற அரசு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் 4 நான்கு சக்கர வாகனங்கள் வன்முறையில் சேதமடைந்தன. சென்னையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 66 வழக்குகள்

பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், பொது இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போன்றவற்றில் ஈடுபட்டது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மாநிலத்தில் மதுரை மாநகர், மதுரை மாவட்டம், கோவை மாநகர் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் காவல் துறையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அமைதியாக கலைந்து சென்றனர். சேலம் மற்றும் மதுரை மாநகரில் ரயில் மறியலில் ஈடுபட்டு வந்தவர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களைக் கலைந்து போக செய்து, ரயில் போக்குவரத்தை சரி செய்தனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்த பிறகும், ஒரு கும்பல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதுமின்றி, காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, காவல் துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களை காவல் துறையினர் குறைந்தபட்ச பலத்தை உபயோகப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். கோயம்புத்தூர் மாநகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று, காந்திபுரம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட போது, காவல் துறையினர் அவர்களை கலைந்து போக செய்தனர்.

 ஜல்லிக்கட்டு போராட்டங்கள் காரணமாக சென்னைக்கும் தென்மாவட்டங்களுக்கும் இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின.

சென்னை நீங்கலாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவங்களில் 27 காவல் ஆய்வாளர்களும், 4 அரசு பேருந்து பணியாளர்களும், 19 போராட்டக்காரர்களும் காயமடைந்தனர். மேலும், 7 காவல் வாகனங்கள், அரசு பேருந்துகள் உட்பட 50 அரசு வாகனங்கள், 2 தனியார் வாகனங்கள் ஆகியன சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 250 நபர்களிடமும் 24.1.2017 அன்று காலை, காவல் துறையினர் அவர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டு கொண்டதன் பேரில், அவர்கள் சிறிது சிறிதாக கலைந்து அன்று மாலை அனைவரும் கலைந்து சென்றனர்.

 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போன்றோரால் நடத்தப்பட்டு வந்த போராட்டத்தின் இடையே தேச விரோத, சமூக விரோத, தீவிரவாத சக்திகள் ஊடுருவினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல விடாமல் அமைதியான போராட்டத்தை திசை திருப்பி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராகவும், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பல இடங்களில் அச்சக்திகள் வன்முறையில் ஈடுபட்டு காவல் துறையினரை தாக்கியும், காவல் நிலையங்கள், காவல் வாகனங்களுக்கு தீவைத்தும், சேதம் விளைவித்தும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய போதும் காவல் துறையினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் தூப்பாக்கிச்சூடு, தடியடி போன்ற பலப்பிரயோகம் போன்றவற்றில் ஈடுபடாமல் குறைந்தபட்ச பலத்தை மட்டுமே உபயோகித்து பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் ஏற்படாமல் அச்சக்திகளைக் கலைத்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனர் என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஜல்லிக்கட்டு நடைபெற சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்ட மகிழ்ச்சியை, இதற்கு பங்களித்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அனுபவிக்க முடியாதபடி சமூக விரோதிகள் செய்து விட்டனர்.
சென்னையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது, சட்டவிரோதமாக செயல்பட்ட சமூகவிரோத கும்பல்களை கலைக்கும் போது காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இது தொடர்பாக சில காணொளி பதிவுகள் பல்வேறு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன. இது குறித்து முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, குற்றசாட்டுகள் உண்மை எனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வழக்குகள் விசாரணையின் போது அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறையில் ஈடுபட்ட தீயசக்திகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு முதல்வர் விளக்கமளித்தார்.
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive