NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Thursday, July 16, 2020

நித்தம் வதைபடுவது யாரெனில்..

காலிலிருந்து பிறந்தவனோ..
காலால் உதைக்கிறீர்!
எப்போதும் ஒடுக்கப்பட்டவனோ..
அடித்து வதைக்கிறீர்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
இருவரையும் கொன்ற
அதே அதிகாரம்..
இதோ மத்தியபிரதேசத்தில்
மற்றொரு ரூபத்தில்..!

சோறு படைக்க நினைத்தது தவறோ
சேற்றில் இறங்கி உலகுக்கு
சோறு கிடைக்க நினைத்தது
கேடோ இங்கே!

தலைக்காய்ந்தவர்
வரிப்பணத்தில்
உயிர் வாழ்பவர்கள்
குண்டாந்தடி எடுத்து
அதிகார கொலைஞராய்
இதோ பார்த்தீரா இங்கே..!

இனி விசாரணைகள்
தொடரும்!
அதிகாரம் அரிதாரம்
பூசி நடிக்கும்!
மாண்பிழந்து போன
மனித உரிமைகளோ
இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லாமல்
நிர்வாணமாய் நிற்கும்!

மறதி நித்திரைக்குள்
ஜனநாயகம்
குறட்டை விடும்
கணபொழுதுக்குள்
அதோ அதிகார திமிர்
தடியை ஓங்கி
ஆர்ப்பரித்து நிற்கிறது
நாட்டின்
மற்றுமோர் மூலையில்
புதியதோர் பெயரில்..!

அந்தோ!
நித்தம் வதைபடுவது
ஒடுக்கப்படுபவன் மட்டுமே!
விண்ணதிர ஒலிப்பது
அவனது
அழுகை ஒலி மட்டுமே!

'''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''
Share:

Tuesday, July 14, 2020

பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!



மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார்.  80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''  

"1983- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, விசாரணைக்காக காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். என்னைப் போன்றே மொழி தெரியாமல், ஆதரவில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். விசாரணை என்ற பெயரில் நாங்கள் அனைவரும் அடித்து உதைக்கப்பட்டோம். 
 
எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அடி விழுந்தது. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி எங்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்தனர். ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் ஒப்புக்கொள்ள கூடாது என்ற மனஉறுதியில் நான் இருந்தேன். 5 மாத சிறை தண்டனைக்குப் பிறகு நிரபராதி என நிரூபிக்கப்பட்டு தப்பித்து வந்தேன். 
 
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டவைதான். உடலுக்குள் லத்தியை விட்டு சித்ரவதை செய்து, உருக்குலைத்து, ரத்த கசிவு ஏற்படவைத்து உயிரிழக்கச் செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் உயிரிழந்து விடுவார்கள் என காவலர்களுக்கு தெரியாமல் இருக்குமா?" 
 
காவலர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துவந்து பல வருடங்கள் ஆனாலும், என் கண் முன் நிகழும் எல்லா பிரச்சனைகளையும், நான் அங்கிருந்து தான் தொடங்குவேன். அந்தவகையில், சித்ரவதை நாட்களில் பென்னிக்ஸும் ஜெயராஜும் அனுபவித்த வலியை என்னால் உணர முடிந்தது. அடிவாங்கி உயிரிழந்த பென்னிக்ஸும் ஜெயராஜும் நான் தான் என தோன்றியது. அவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்." 
 
காயங்கள் வெளியே தெரியாத வகையில் தான் காவலர்களின் அடி இருக்கும். விதவிதமாக சித்ரவதை செய்து வலி ஏற்படுத்துவார்கள். மருத்துவர்களில் எப்படி குறிப்பிட்ட சிகிச்சைக்கான நிபுணர்கள் இருப்பார்களோ, அதேபோல் விசாரணை என்ற பெயரில் சிக்கியவர்களை அடித்து உதைக்க கைதேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 
 
காவலர்களின் சித்ரவதையில் இருந்து மீண்டு வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு உடல்நலக்குறைவு அல்லது பாதிப்போடு தான் உயிர் வாழ்வார்கள். உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து சில ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவர். 
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் சமூகவெளியில் பரவியதால் தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
முன்பெல்லாம் காவல்நிலையம் அல்லது சிறையில் மரணம் ஏற்பட்டால், அந்த தகவல் பொதுமக்களை சென்றடைய காவலர்களிடமிருந்து தான் தகவல்களை பெற வேண்டும், அதை பிரசுரிக்க செய்தி ஆசிரியரின் அனுமதி வேண்டும். 
 
ஆனால், இப்போது ஒரு தகவலை ஒரு சில நிமிடத்தில் உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த முடிகிறது. பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மீது தொடுக்கப்பட்ட ரத்தவெறி தாக்குதலின் ஆதாரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் வந்து சேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த பிரச்சனை குறித்து விவாதித்தன. 
 
காவல்துறையின் அதிகாரம் எளிய மக்களை எப்படி கொன்றது என்பதை அனைவரும் தெரிந்துகொண்டனர். இவ்வாறான தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், ஆதாரங்கள் வெளிவராமல் ஏராளமான மனித உயிர்கள் காவல்துறையின் அடக்குமுறையால் பலியாகியுள்ளன"

 (நன்றி: பிபிசி-தமிழ்)
Share:

Friday, June 26, 2020

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!



இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள் ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''‘’
 இரவெல்லாம் தூக்கம் வரவில்லை எனக்கு!

அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் ஜெயராஜும், பென்னிஸீம்?

இந்தளவு கொடுமை இழைக்குமா சொந்த நாட்டின் சொந்த போலீஸ்?

நம்பவே முடியவில்லை!

ஒரேயடியாக சுட்டு கொன்றுவிட்டிருக்கலாம்!

அந்த சித்திரவதை வலியின் வேதனை தெரியாமலிருக்க.. கண நேரத்தில் பாயும் தோட்டாவின் வலியோடு எல்லாம் முடிந்திருக்கும்?

துடிக்க.. துடிக்க.. கதற.. கதற.. அண்டை. அயலாரின் காதுகள் செவிடாகி போனதேன்?

எல்லாம் அறியாமையும், சுயநலமும் ஒருசேர வாய்க்க பெற்ற சுயநல மக்களின் ஜனநாயக அமைப்பில் அவரவர் கால்களில் படும்போதுதான் வலி தெரியும் போலும்!

குற்றவாளிகளாயினும், தண்டனை அளவீடு மிஞ்சுவதில்லை எங்கும்!

அரசு பதக்கங்களும், பாராட்டுகளும், பதவி உயர்வுகளும், சாதீய அமைப்புமான அரசியல் சமூக அமைப்பில் இந்த அதிகார அத்துமீறல்கள் கட்டுக்கடங்காதவை!

தலைக்காய்ந்தவர்களும், சாமான்யர்களும் வாழ தகுதியற்றவர் என்கிறதா இந்த அதிகார அத்துமீறிய அரசியல் அமைப்பு? அல்லது ஒவ்வொரு கணமும் இருப்புகளுக்கான போராட்டமும், விழிப்புணர்வூட்டும் மக்களுக்கான தலைமையும் அவசியம் என்கிறனவா சாத்தான்குளம் படுகொலைகள்?

ஒரு ஜார்ஜ் பிளாய்ட் மூச்சுவிட திணறி இனவெறியனால் கொல்லப்பட்டதற்கு ஒட்டுமொத்த அமெரிக்க சமூகம் திரண்டு நின்றதே தெருக்களில்! நீதி கேட்டு நடந்த அந்த உக்கிர மக்கள் திரள்முன் மண்டியிட்டதே அதிகாரம்! நம்மால் ஏன் செய்ய முடியவில்லை! காரணங்களின் முடிவில் தீர்வாய் தடைபோட்டு நிற்பது அதே தன்னலம்தான்!

வலி பொறுக்க முடியாமல், ஓங்கி.. ஓங்கி ஒலிக்கின்றன பெரியவர் ஜெயராஜின், தம்பி பென்னிஸின் ஓலங்கள்! அதோ தெரித்து சுவர்களில் ஒட்டிக் கொள்கின்றன பிய்ந்தபோன அவர்களின் முன்பின் மறைவான அவையங்களின் நுண்ணிய ரத்தம் தோய்ந்த தசைகள்!

இதே வேதனை, இதே தண்டனை ஆட்சியாளர் முதற்கொண்டு கடைநிலை அதிகாரம்வரை பெற வேண்டாமா? அவர்களின் ஒவ்வொரு அணுத்துகள்களும் அதேஅளவு வேதனையை அனுபவிக்க வேண்டாமா? அதுதானே சமநீதி! அதுதானே பாதிக்கப்பட்டவரின் இழப்புக்கான முதல்நிலை இழப்பீடாக இருக்க முடியும்? மீண்டும் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்கும்?  

நாகரீக சமூகம் என்று சொல்லிக்  கொண்டு ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின் நுழைவாயிலில் நிற்கிறோமோ நாம்!

இந்த அதிகார வெறிப்பிடித்த கொடுமைக்கார்ரகளைவிட கொரோனோ எவ்வளவோ மேல்!

''''''''''''''''''''''''''''



Share:

சாத்தான்குளம் காவல்நிலைய கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர்
 '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இயக்குனர் சசியின் பிச்சைக்காரன் படத்தில் இறுதி காட்சியாக இப்படி வரும்: ‘மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் கதாநாயகனை தேடிவரும் போலீஸ் காவலர்கள், “எழுந்துர்டா!” – என்று அதிகார மிடுக்குடன் மேலதிகாரியிடம் அழைத்து செல்வார்கள். போலீஸ் அதிகாரியிடம், "என்ன காரணமாக கைது செய்கிறீர்கள்?” என்று கதாநாயகன் கேட்பான். “பிச்சைக்காரனுக்கெல்லாம் காரணம் சொல்லனுமா?” - என்று ஓங்கி அறைவார் அந்த அதிகாரி.

இந்த ஆணவத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீஸ் ஆகிய இருவரின் காவல்நிலைய கொட்டடி கொலைகள். அதிலும் பென்னீஸ் எம்எஸ்டபிள்யூ (MSW)பட்டதாரி! மக்கள் சேவைக்காக இந்த பட்டப்படிப்பை முடித்திருக்கும் இளைஞர். இவருடைய முன்,பின் பகுதிகள் முற்றிலும் சிதைக்கப்பட்டிருப்பதாக அவருடன் பிறந்தவர்கள் சொல்லி அழுகிறார்கள். கொரோனோ காலத்தில் அதிக நேரம் கடை திறந்து வைத்திருந்ததற்காக சட்டத்திற்கு புறம்பாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இவை என்கிறார்கள் பொதுமக்கள்.

இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போதெல்லாம். சம்பந்தப்பட்ட காவலர்களை இடமாற்றம் செய்வதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பதும், பாதிக்கப்படும் குடும்பத்து உயிரிழப்புகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் சில லட்ச ரூபாய் சட்ட ரீதியான கையூட்டாக வழங்குவதும் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத சட்ட சம்பிரதாயங்களாகிவிட்டது.

இதையும் மீறி போராட்டங்களின் விளைவாக எழும் மக்களின் அழுத்தம் காரணமாக கண்துடைப்புக்கு ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்படும். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது.

இதற்கு அடுத்த சில மாதங்களில் காவல்நிலைய கொட்டடியில் அநியாயமாக துடிக்க.. துடிக்க கொலை செய்த அதே காவலர்களுக்கு விருதுகளோடு பதவி உயர்வுகளும் வழங்கப்படும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் சாமான்ய மக்களின் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!

“தற்போதுள்ள போலீஸ் சட்டங்களை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிய வேண்டும்.  புத்தம் புதிய போலீஸ் சட்டத்தை உருவாக்க வேண்டும்!” – என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். "நீதிமன்றம், காவல்துறை, சிறைத்துறை ஆகிய மூன்றும் இந்த அமைதி கூட்டுச்சதியில் பங்காளிகள்!" - என்கிறார் அவர் தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளை மறைத்த காவலர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், ரிமாண்ட் செய்வதற்கு முன்பாக குற்றம் சுமத்தப்பட்டவர் தரப்பு நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கு வாய்ப்பளிக்காத நீதித்துறை நடுவர், மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் போலியான அத்தாட்சிகளை தந்த மருத்துவர் மற்றும் மருத்துவ சோதனை செய்யாமலேயே (செய்யப்பட்டதாக அதிகார பூர்வமற்ற ஒரு தகவல் உண்டு) சிறையிலடைத்த சிறைத்துறை ஆகிய அனைவருமே இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்கள். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.

மக்கள் போராட்டம்  தீவிரமடைந்திருக்கும் நிலையில், நமது முதல்வரோ, மகன் மூச்சுத் திணறி இறந்ததாகவும், தந்தையோ நெஞ்சுவலியால் இறந்ததாகவும் அறிக்கை வெளியிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், ஏதாவது விசாரணை கமிஷன் நியமித்தாலும் முதல்வரின் அறிக்கைக்கு எதிராக ஒரு அறிக்கை வெளியாவதற்கு வாய்ப்பேயில்லை!

அதே பிச்சைக்காரன் படத்தில், அதே கிளைமாக்ஸ் காட்சியில், கதாநாயகனை அடித்து தர தரவென்று இழுத்து செல்லும் காவல்துறை அதிகாரி, அவர் செல்வந்தர் என்று தெரிந்ததும், வேர்த்து, விறுவிறுத்து போவார். தட்டிவிட்ட அதே கையை இரு கையாலும் பவ்வியமாகப் பிடித்து மன்னிப்பும் கேட்பார்.

இந்த வேர்த்து விறுவிறுப்பும், தவறிழைத்தால் தண்டனைக்காளாக நேரிடும் என்ற நடுக்கமும் சாமான்யனைக் கண்டதும் காவல்துறைக்கு ஏற்படுத்தும் விதமான அரசும், அதற்கான அமைப்புமே தற்போதைய தேவை!

'''''''''''''''''''''''''


Share:

Thursday, April 23, 2020

வெறுப்பு பரப்புரைகளின் அறுவடை காலமிது



'''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''
அறமற்ற விமர்சனங்கள் அல்லது கருத்துகளின் முடிவுகள் என்னவாகும் என்பதற்கு தற்போது வளைகுடா நாடுகளில் சங்பரிவார் வகுப்புவாதிகளுக்கு எதிரான கொந்தளிப்புகளே சாட்சி.

ஏப்ரல் 16-ஆம் தேதியன்று ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட் அல் காஸிமி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது. 
 
ஒரு ட்விட்டர் பதிவர் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்த இளவரசி,

"அரச குடும்பத்தினர் இந்தியர்களின் நண்பர்கள். இவ்வளவு வெறுப்புடன் நீங்கள் பேசுவதை அரச குடும்பத்தைச் சேர்ந்த என்னால் ஏற்க இயலாது. எல்லோருமே ஊதியத்திற்காகத்தான் வேலை பார்க்கிறார்கள். யாரும் இலவசமாக வேலை பார்ப்பதில்லை. நீங்கள் இகழும் இந்த மண்ணிலிருந்துதான் உங்களுக்கு உணவு கிடைக்கிறது. உங்கள் கேலி கண்டுகொள்ளப்படாமல் போகாது"

- எனத் தன் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் தன் ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார்.

ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்லாமிய ஒருங்கிணைப்பிற்கான அமைப்பின் (OIC) மனித உரிமைப் பிரிவான OIC-IPHRC வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

'இந்தியாவில் கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள்தான் என்று கூறி பரப்பப்படும் செய்திகளைக் கண்டித்ததோடு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் தணிக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக்' கூறியது.

இதையடுத்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி "இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, சமய, பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக' விளக்கமளித்தார்.

வகுப்புவாதம் பேசியே ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும், மோடி சர்க்காரும், தன்னுடைய ட்விட்டர் பதிவில்,

"இனம், மதம், நிறம், ஜாதி, ஏழை - பணக்காரன் வித்தியாசம், மொழி, எல்லைகள் போன்றவற்றை பார்த்து கொரோனா தாக்குவதில்லை."

என்றும் பதிவிட்டார்.

வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் பணிபுரிபவர்கள் ஏழை, பாழை ஒடுக்கப்பட்டவர்கள்தான். அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களைப் போல, சொல்லிக் கொள்ளும் விதமான பெரிய மேல் தட்டு மக்களோ, சாதிய மேலடுக்குவாதிகளோ அல்ல.

மனைவி, மக்களை பிரிந்து கடல்கடந்து வாழும் சாதாரண ஏழை, எளியோர்! இவர்களில் ஊடுருவியிருக்கும் சங்பரிவார் அடிவருடிகள் செய்த விஷமத்தனங்கள் அமீரகத்தில் வசிக்கும் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமானோரின் வாழ்வியலை சிக்கிலாக்கியுள்ளது.

2018ஆம் ஆண்டு நிலவரப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் சுமார் 78,500 மில்லியன் டாலர்களை நமது நாட்டுக்கு அனுப்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகபட்ச தொகை அமீரகத்திலிருந்து வருகிறது.

திரைக்கடலோடி திரவியம் தேடியதோடு நிற்க வேண்டியதான ஒப்பந்த ஷரத்துகளை மீறி சங்பரிவாரின் அடிவருடிகளாய், ஏவலாட்களாய் மாறி அறம் வழுவி நிற்பதன் விளைவு மொத்த வாழ்க்கையும் இழுக்க வேண்டியிருக்கும் என்தற்கான சமிஞ்சையே தற்போதைய நிலவரம்.

சங்பரிவார் கூட்டம் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கும், அவர்களை ஒழித்தொழிக்க முனைவதற்கும் அப்படி என்னதான் காரணம்?

இதற்கான பதில் மிகவும் எளிதானது. ஓரிரு வரிகளில் சொல்ல முடிவது.

அது இதுதான்: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

இந்த முழக்கமும், இந்த முழக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பின்பற்றி வாழும் சமத்துவ வாழ்வியல் வாழ்வும்,

மனுவாத கட்டமைப்பை தூள் தூளாக்கி சிதைப்பதால் வந்த கோபம் தான் முஸ்லிம் எதிர்ப்பு.

மனுவாத சனாதனம் வேண்டும் என்று நினைப்போர் பொய்களாலேயே மூளைச்சலவை செய்து உருவாக்கிய ஒரு கூட்டத்துக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன?

வகுப்புவாத வெறிபிடித்த இந்த சங்பரிவார் கும்பல், இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆடும் விலங்காட்டமும், சொந்த மக்களையே வெறிப்பிடித்தாற்போல கொத்தி குதறுவதும், அவர்களின் உயிர், உடமைகள், மானம், மரியாதைகள் அனைத்தும் சூறையாடுவதுமான துயரங்கள் நாடு முழுக்க தொடர்கின்றன.

உலக நாடுகள் இந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்கும்போதெல்லாம் இது உள்நாட்டு விவகாரம் என்று திசைதிருப்பல்கள் மழுப்பல்கள் என்ற தொடர்கதைகளுக்கு முற்று இல்லாமல் போகாது.

இவர்கள் கக்கிய நச்சு கருத்துக்கள், பரப்பிய கொரானாவைவிட கொடிய வெறுப்பு பரப்புரைகள் தற்போது வளைகுடாநாடுகளில் எதிர்விளைவுகளாய் ஆர்ப்பரித்து நிற்கிறது.

இந்த எதிர்வினைகள் அமெரிக்கா போன்ற கிருத்துவ நாடுகளிலும் எதிரொலிக்காது என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை.

இந்தியாவில் வகுப்புவாத கொலைப்பட்டியலின் அடுத்த வரிசையில் நிற்பவர்கள் கிருத்துவர்கள்தான்.

கோடி, கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி அடுக்குமாடி கட்டிடங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் இந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுகவாசிகள். சங்பரிவார் அமைப்பின் பொருளியல் முதுகெலும்பாய் இருப்பவர்களும் அவர்கள்தான்.

இவர்கள் நமது ஏழை, எளியவர்கள் போல, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாய் நடந்து ஊர் போய்ச் சேர்ந்த இழி நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் கொரானா அச்சத்தால் விமானமேறி பறந்துவந்தவர்கள்.

இந்த அச்ச உணர்வின் நீட்சியாக வெறுப்பு பரப்புரைகளின் அறுவடை பருவத்தின் விபரீத பலனையும் இவர்களும், அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

                                                       
''''''''''''''''''''''''
 



Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive