NewsBlog

Friday, July 3, 2020

வலையொளியில் எனது பயணம்


நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க ஆளுமைகளும்  என்னிடம் இல்லை என்பதை உறுதியாக அறிவேன். ஆனால், உண்மைகளை வெளிக்கொணர, உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''
அன்பு தோழர் - தோழியருக்கு வாழ்த்துகள்!

வலையொளியில் (YouTube) பாமரன் நியூஸ் Pamaran News https://www.youtube.com/channel/UCzPPNS7B6m5ydvB98g8xNlQ என்றொரு சானல் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.

அக்.7, 2008 – இல், ஆரம்பி்க்கப்பட்ட இந்த கணக்கு, சென்னை ராயப்பேட்டை காப்பி கேப் ஒன்றில் காப்பி அருந்தியவாறு எனது லாப் டாப்பில் எனது உறவினர் இளைஞர் ஒருவர் ஆலோசனையின் பேரில் அதன் பிறகு சில ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றது.

அப்போதெல்லாம் வலையொளி அவ்வளவாக சமூகத்தில் பிரபலம் அடைந்திருக்கவில்லை. தமிழ் மொழியும் மானிடைஸ்ஸீக்காக அங்கீகரிக்கப்படவில்லை.

இருந்தாலும், சில ஆயிரம் ரூபாய் கொண்ட படப்பிடிப்பு கருவிகளால், நாமே ஒற்றையாய் தலைமைத் தாங்கி, ஒத்த சிந்தனையாளர்களை ஒன்றுபடுத்தி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக, படத்தொகுப்பாளராக, சில நேரங்களில் கதைச் சொல்லியாக என்று பன்முகங்களில் செயல்பட முடியும் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பு அது.

சோம்பி கிடக்கும் இளைஞர்களுக்கும், நம்மால் முடியவில்லையே என்று ஏங்கும் இளைஞர்களுக்கும் இப்படி செய்யலாம்; நீங்கள் செய்ய மறுப்பதேன்? என்று வினாக்களை எழுப்பிய தருணம் அது.

காமிராவுக்கு முன் நிற்கும் எந்த வசீகரமும், சொல் ஈர்ப்பும் இல்லாத நிலையிலும், என்னால் முடிந்ததை செய்து காட்டி, இளைஞர்களை செய்ய வைக்க வேண்டும் என்ற துடிப்பு பல மாவட்டங்களுக்கு பயணிக்க வைத்த காலம் அது.

இந்த துடிப்பும், தாகமும் காடு, மேடெல்லாம் அலைய வைத்தது. ஓரிரு கல்லூரி மாணவர்களை இணைத்து அவர்களுக்கும் எனக்குத் தெரிந்ததை எல்லாம் கற்றுக் கொடுத்து விழிகள்என்ற குழுவாய் பயணிக்க காலம் கொடுத்த வாய்ப்பு அது.

ஒரு கட்டத்தில் அந்த ஓரிருவரும் பொருள் தேடல்களுக்காக என்னை விட்டு விலகியபோதும், தளராமல் ஒற்றை ராணுவ வீரனாய் என் குறிக்கோளிலேயே குறியாக இருக்க வேண்டி வந்தது.

விழிப்புணர்வற்ற ஒரு சமூகத்தின் பிள்ளை நான். அதிலும், குழு மனப்பான்மையோடு செயல்படும் சமூகத்தில் எனக்கென்று ஆதரவு தந்தவர் வெகு சொற்பமானவரே! அதுவும், வானத்துக்கு கீழாகவும், பூமிக்கு மேலாகவும் உள்ள அனைத்தையும் படங்களாய், ஆவணங்களாய் அடக்க நினைத்த எனதாசைக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் குறிப்பிடத்தக்கதாக இல்லை.

ஆனாலும். ஊடகம் என்னும் பெரும் கனவுகளும், சாதிக்க வேண்டும் என்ற பெரும் வெறியும் இந்த ஒற்றை  ராணுவ வீரனை முன் தள்ளியவாறே இருந்தது. 

இளம்தலைமுறையை வார்த்தெடுக்க, காமிராவின் முன் நிற்க பிடிக்காவிட்டாலும் அதன் முன் நின்று கதை சொன்னேன்.

குழந்தைகளின் கற்பனையைத் தூண்ட அவர்களிடையே கதை சொல்ல வைத்தேன்.

சமூகங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க குறும்படம் எடுத்தேன்.

சூழல் மாசுவுக்கு எதிராக ஆவணங்களைப் பதித்தேன்.

இருளர், குயவர், உழவர், மீனவர் என்று சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வியல் போர் நடத்தும் ஒடுக்கப்படுவோரின் குரலை ஆவணப்படுத்தினேன்.

நடப்பு நிகழ்வுகளை பதிவுகளாக்கினேன்.

புகழனைத்தும் இறைவனுக்கே! இதில் எதையும் ஆதாயம் கருதி, பொருள் தேடி நான் செயல்பட்டதேயில்லை.

இடை இடையே குழுவாய் செயல்பட கிடைத்த வாய்ப்புகளும் என்னோடு ஒன்றி போகாததால் மீண்டும் ஒற்றையாகிப் போனதுதான் மிச்சம். 

இப்படியான எனது வலையொளிப் பயணத்தில் நான் உங்களோடு உரையாடும் இந்த தருணம்வரை வலையொளியின் எனது பயணம் 682 பதிவுகளாகவும், எனது பதிவுகளை பார்வையிட்டவர்கள் 684,869 பேராகவும், எனது பதிவுகளின் சந்தாதாரர்கள் (Subscribers) 7.97K என்ற அளவிலும் கடந்து வந்திருக்கிறேன்.

கடைசியாக எனது பதிவுகள், பறவைகளும், இயற்கையுமாய் என்றாகியுள்ள தற்போதைய ஊரடங்கு சூழலில் நமது வெகுஜன ஊடகங்களில் பெரும்பான்மை ஊடகங்கள் வாய்த்திறக்காத பக்கங்களை திறந்து காட்ட பாமரன் நியூஸ் சானலின் இணை சானல் ஒன்று இறைவன் நாடினால், ஆரம்பிக்க நினைக்கிறேன்.

இன்னும் அதற்கான பெயர் முடிவாகாத நிலையில், இந்த சானல் முற்றிலும் அரசியலுக்கான சானல் என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். 

நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல வசீகரமும், ஈர்ப்பும், குறிப்பிடத்தக்க ஆளுமைகளும்  என்னிடம் இல்லை என்பதை உறுதியாக அறிவேன். ஆனால், உண்மைகளை வெளிக்கொணர, உண்மைகளை மட்டும் பேசும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறேன்.

வழக்கம் போல, வாருங்கள் என்று யாரையும் அழைக்கப் போவதில்லை.

அந்த அழைப்பு செயற்கையாக நினைக்கப்படுமோ என்ற அச்சத்தில், விரும்பியோர் என்னோடும், என் பணிகளோடும், அந்தப் பணிகள் தடைப்படாத ஆலோசனைகளோடும், ஒத்துழைப்பு களோடும் என்னோடு இணையலாம்.

இது ஒற்றை ராணுவ தலைமையின் கீழான அணிவகுப்பு என்பதை மட்டும் நினைவில் கொள்க.

நம்பிக்கையுள்ளோர் பிரார்த்தியுங்கள். நம்பிக்கையற்றோர் வாழ்த்துங்கள்!

நன்றி தோழர், தோழியரே!

கொரோனா தீ நுண்மியிடமிருந்து பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள்.



Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive