NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, December 22, 2017

Tuesday, December 19, 2017

தேர்தல்கள்: இதில் பீற்றிக் கொள்ள என்ன இருக்கிறது .. மோடி சர்க்காரின் புளுகு மூட்டைகளைத் தவிர?


 "இந்தியா கடந்த ஓராண்டில்தான் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்காக 150 ஆண்டுகள் போராட்டம் நடத்தப்பட்டது என்பதெல்லாம் சுத்தப் பொய்!” – என்று புதியதொரு வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படு வதிற்கில்லை என்று சாம்னா தலையங்கம் காட்டமாக குறிப்பிட்டுள்ளது. ~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் தென்பகுதியான தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள மலை அடிவார கிராமங்களான முருகன்பதி, அய்யன்பதி மலைவாழ் பழங்குடி மக்கள் பேருந்து வசதியில்லாமல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நாட்டின் வடபகுதியில் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை கரை சேர்த்த டிஜிட்டல் பொய்யுரை நாயகன் மோடி சர்க்கார் குதுகலம் அடைவதற்கு ஒன்றுமேயில்லை.

காங்கிரஸ் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் ஹிமாசலப் பிரதேசத்தின் அரியணையைப் பெற்றுத் தந்தது என்றால், குஜராத்தோ மோடி சர்க்கார் தில்லியை மறக்கடித்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் வேர்த்து விறுவிறுக்க செய்து தண்ணீர் காட்டியதை எப்படி மறக்க முடியும்? இத்தனைக்கும் குஜராத்தில் 2002 முதல் அடுத்தடுத்து நடந்த மூன்று தேர்தல்களிலும் பாஜகதான் ஆளும் கட்சி. இந்நிலையில் ஜிக்னேஷ் மேவானி, ஹார்திக் பட்டேல், அல்பேஷ் தாக்குர் போன்ற 'சின்னப் பையன்'களுடன் சேர்ந்து ராகுல் காந்தி என்ற 'பொடியனும்' சேர்ந்து தேர்தல் அறுவடைகளில் தேர்ந்த ஜாம்பவான்களான நரேந்திர மோடி – அமித் ஷா அண்ட் கோவுக்கு தண்ணீர் காட்டியதை இந்தியர்கள் எப்படி மறக்க முடியும்?

2002-ல், 182 இடங்களைக் கொண்ட குஜராத்தின் சட்டமன்ற தேர்தல்களில் 127 இடங்களைப் (49.8 விழுக்காடு) பெற்று ஆட்சி அமைத்த பாஜக அதைத் தொடர்ந்து 2007-ல், 117 இடங்களையும், 2012-ல், 115 இடங்களையும் தற்போது சரிந்துபோன வாக்கு  விழுக்காடுடன் 99 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் எதிர்ப்பாளர்களை சுத்தமாக துடைத்திட கங்கணம் கட்டிய மோடி சர்க்காரின் தலையில்  விழுந்த இடி இது.

குஜராத் சட்டமன்றத்தில் வெறும் 61 இடங்களைக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தற்போதைய தேர்தல்களில் முன்னேறி 77 இடங்களாக தனது பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளது. மாநிலத்தின் அத்தனை எதிர்க்கட்சிகளையும் 'பொடியன்' ராகுல் காந்தி திரட்டியிருந்தால் பாஜக குஜராத்தைவிட்டே அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். நடுத்தர, விளிம்புநிலை, ஆதிவாசி, சிறுபான்மை இன மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

நாட்டின் எல்லா பகுதிகளிலும், பண மதிப்பு இழப்பு, சரக்கு சேவை வரி விதிப்பு, இந்தியாவை அந்நியர்களிடம் தாரைவார்க்கும் பாஜகவின் வெளிவிவகாரக் கொள்கைகள் சம்பந்தமாக நாட்டு மக்கள் அக்கட்சியின் மீது கடும் அதிருப்தியை கொண்டிருந்தார்கள். ஆனால், அவற்றை எல்லாம் மறக்கடிக்கும் விதத்தில் சமய காழ்ப்புணர்ச்சிகள் என்னும் 'அபினை' அளவுக்கடந்து புகட்டி, உணர்ச்சியைத் தூண்டும் துவேஷக் கோஷங்களால் மக்களை திசைத்திருப்பி உத்திரப்பிரதேசத்தைப் போலவே மகத்தான அறுவடை  செய்ய நினைத்த மோடி சர்க்கார்-அமித் ஷா அண்ட் கோக்கள் தோல்வியடைந்தார்கள் என்பதே உண்மை.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தல்களின் பாஜகவின் வெற்றி மோடி சர்க்காரின் சர்வாதிகாரப் போக்கை மேலும் அதிகரிக்கும் என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் குஜராத்தில் உண்மையில் வெற்றிப் பெற்றது காங்கிரஸ்தான் என்று சிவசேனையின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா தலையங்கம் தீட்டியுள்ளது.

ராகுல் காந்தி நிச்சயம் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமேயில்லை என்று குறிப்பிட்டுள்ள சாம்னாவின் தலையங்கம், “இக்கட்டான தருணத்தில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற ராகுல் காந்தி குஜராத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது குறித்து கவலைப்படாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் பாஜக மூத்த தலைவர்களின் முகங்கள் இருண்டிருந்த நிலையில் ராகுல் காந்தி கவலைப்படாமல் செயல்பட்டார். இந்த நம்பிக்கைதான் அவரைத் தனது பாதையில் முன்னெடுத்துச் செல்லும்.

கடந்த 60 ஆண்டுகளாக நாட்டில் எதுவும் நடக்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளில்தான் அனைத்தும் நடந்தது என்று நினைப்போர் மனிதப்பிறவிகளா? அல்லது முட்டாள்களா?

"இந்தியா கடந்த ஓராண்டில்தான் சுதந்திரம் பெற்றது. சுதந்திரத்திற்காக 150 ஆண்டுகள் போராட்டம் நடத்தப்பட்டது என்பதெல்லாம் சுத்தப் பொய்!” – என்று புதியதொரு வரலாறு எழுதப்பட்டாலும் ஆச்சரியப்படு வதிற்கில்லை என்று சாம்னா தலையங்கம் காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் வெற்றிகள் பாஜக கொண்டாட ஒன்றுமேயில்லை. 2019 தேர்தல் வெற்றிகளுக்கான முன்னோட்டமும் இதுவல்ல என்று மோடி சர்க்கார் உணர வேண்டிய தருணமிது. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில செல்வந்தர்களின் கைப்பாவையாக பாஜகவும், அதன் இமாலய பிம்பமாக்கப்பட்டுள்ள மோடி சரக்காரும் இனியும் தொடரக்கூடாது என்று மேலெழுந்துள்ள சாமான்ய மக்களின் குரல் இது.   

Share:

Friday, December 8, 2017

படைத்தவனுக்கே அடிபணிவீர்

"மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! அவ்வாறு செய்வதால் மட்டுமே நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 

அவனே உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். 

அவனே மேலிருந்து மழையைப் பொழியச் செய்து அதைக் கொண்டு உங்கள் உணவுக்காக விளைபொருள்கள் அனைத்தையும் வெளிப்படுத்துகின்றான். 

எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் அறிந்திருந்தும் இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்" ~(திருக்குர்ஆன்: 2:21,22)
Share:

இவரே வெற்றியாளர்

"அவர்கள் எத்தகையவர்கள் என்றால், 

• மறைவானவற்றை நம்புகிறார்கள்.

• மேலும், தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள்.

• நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள்.

• மேலும், உமக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் - வேதத்தின் மீதும் -

• உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்.

• இறுதித் தீர்ப்பு நாளின் - மறுமை - மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கிறார்கள்.

இவர்கள்தான் தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள்.

மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்"

~ (திருக்குர்ஆன்: 2:3-5)


Share:

இறைவனின் வேதமிது

இது இறைவனின் வேதமாகும்.

இதில் யாதொரு சந்தேகமும் இல்லை.

இறையச்சமுடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும். ~ (திருக்குர்ஆன்: 2:2)
Share:

Thursday, December 7, 2017

பொறாமை நற்செயல்களை அழிக்கிறது

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார். >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபை வழக்கம் போல, ‘மஸ்ஜிதுன் நபி’யில் கூடியிருந்தது. நபிகளாரின் அருளுரைகளைக் கேட்டு அவற்றைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்தத் தயாராய் நபித்தோழர்கள் அங்கு குழுமியிருந்தனர். அவர்களிடம் நபிகளார் சொன்னார்: “தோழர்களே, இப்போது சுவனவாசி ஒருவர், உங்கள் முன் வர இருக்கிறார் பாருங்கள்”

நபிகளாரின் மதிப்புக்குரிய அந்த மனிதரைப் பார்க்க நபித்தோழர்கள் ஆவலுடன் காத்திருக்க அங்கே மதீனாவாசியான அன்சாரியின் தோழர் ஒருவர் வந்தார். தொழுவதற்குத் தயாராய் தாடியில் நீர் சொட்டச் சொட்ட, தனது செருப்புகளை சுமந்துகொண்டு அவர்களைக் கடந்து சென்றார்.

இரண்டாவது நாளும் அவர் அங்கே வந்தார். மூன்றாவது நாளும் இப்படியே நடந்தது. நபிகளாரும் சுவனவாசிக்குரிய அந்த அன்சாரியின் தோழரை முன்அறிவிப்பு செய்தார்.

மூன்று நாட்கள் கழிந்தன

இதைக் கேட்டு அங்கு குழுமியிருந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அம்ர் வியப்படைந்தார். நபிகளாரின் திருச்சபை கலைந்ததும், நபிகளாரால் சுவனவாசி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரி தோழரிடம் சென்றார். ஒரு மூன்று நாள் அவரோடு தங்கியிருக்க அனுமதி வேண்டினார். அவரும் அதற்குச் சம்மதித்தார்.

அன்சாரியின் தோழரோடு மூன்று நாட்கள் தங்கியிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் எந்தவிதமான பிரத்யேக வணக்கமுறைகளையும் அவரிடம் காணவில்லை. எல்லாம் வழக்கம்போலவே இருக்கக் கண்டார். ஆனால், அவர் தூங்கச் செல்லும்போது, இறைவனை நினைவுகூர்ந்து தியானிப்பவராக இருந்தார். அதேபோல, யாரைக் குறித்தும் எவ்விதமான தீயவார்த்தைகளையும் அவர் கூறாமலிருப்பதையும் கண்டார். இப்படியே மூன்று நாட்களும் கழிந்தன.

வழக்கமான நடத்தைகள் கொண்ட ஒருவரை ‘சுவனவாசி’ என்று நபிகளார் முன்அறிவிப்பு செய்தது எப்படி? குழம்பித் தவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் தனது சந்தேகத்தை விடைபெறும்போது, அந்த அன்சாரி தோழரிடம் கேட்கவும் செய்தார்.

அதைக் கேட்ட அன்சாரி தோழர், புன்முறுவலுடன் சொன்னார்: “சகோதரரே! நீங்கள் மூன்று நாட்கள் என்னோடு தங்கியிருந்து கண்டது முழுக்க முழுக்க உண்மைதான்! அதே நேரத்தில் நீங்கள் காணாத ஒரு விஷயமும் இருக்கிறது. நான் யார் மீதும் குரோதம் கொள்வதில்லை. அதேபோல, பிறருக்கு இறைவனால் அருளப்படும் அருட்கொடைகளைக் கண்டு பொறாமைப்படுவதும் இல்லை!”

இந்த அருங்குணங்கள் பெற்றிருந்ததாலே அந்த அன்சாரி தோழர், சுவனவாசி என்று நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யப்பட்டார் என்பதை அப்துல்லாஹ் பின் அம்ர் புரிந்து கொண்டார்.

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார்.

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது”

(தி இந்து - தமிழ், ஆனந்த ஜோதி இணைப்பில் 30.11.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)

இந்துவில் வாசிக்க: http://tamil.thehindu.com/society/spirituality/article21085286.ece

Share:

The Hunters - கடலோடிகள்

Share:

பாஜகவின் அறுவடை காலமிது


விதைப்பவைதானே முளைக்கும். ஆம்.. இது பாஜகவின் அறுவடைக்காலம். விதைப்பவை முளைக்கின்றன..!

சமய துவேஷங்களாலும், அதன் விபரீத விளைவு அச்சத்தாலும், வெறுப்பு அரசியலாலும் வளர்ந்த பாஜகவின் அறுவடைக்காலம் இது.

குஜராத்தில் இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னெடுத்தவரும் ‘படிதார் அனாமத் அந்தோலன்’ அமைப்பின் தலைவருமான ஹர்திக் படேல் ‘தி இந்து – தமிழ்’ (07.12.2017) அளித்துள்ள பேட்டி இதை இன்னும் உறுதிபடுத்துகிறது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும்..?

ஆனால், துரதிஷ்டவசமாய் இந்தியர்கள், பாஜகவின் முடிசூடல்களுக்காக கொடுத்த விலையோ சொல்லி மாளாதது.

பறிக்கப்பட்ட பெண்களின் மானம், கருறையிலிருந்து குத்திக் கிழிக்கப்பட்ட சிசுக்களின் உயிர்கள், விண்ணுயர தீச்சுவாலைகள் எழுந்து அதில் பொசுக்கப்பட் நாட்டின் நீதி, நியமங்கள், இட்டுக்கட்டப்பட்டு துப்பாக்கி குண்டுகளால் பறிக்கப்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் என்று இந்தியர்கள் அர்ப்பணித்துள்ள தியாகம் இணையற்றது. பாஜகவிடமிருந்து மற்றுமோர் சுதந்திரத்துக்காக கொடுத்த விலையின் முன்பணம் இது.

குஜராத்தில் தற்போது பாஜக தோற்கலாம். வெல்லலாம். ஆனால், அது எதை விதைத்ததோ அதை இன்றில்லாவிட்டாலும் நாளை அறுவடை செய்துதான் ஆக வேண்டும். இனி ஹர்திக் படேல் சொல்வதைக் கேளுங்கள்   -  இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''

? குஜராத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரம் செய்து வரும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

! குஜராத்தில் பாஜகவின் ஆட்சியில் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். பாஜகவின் மிக மோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த ஆட்சியில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை. எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு ஏராளமான அளவில் மக்கள் வருகின்றனர். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு தயாராகி விட்டனர்.

? ஆனால் உங்கள் பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அனைத்தும் வாக்குகளாக மாறாது என பாஜகவினர் கூறுகின்றனேரே?

! குஜராத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மக்களின் மனநிலையை என்னால் உணர முடிகிறது. பாஜகவினர் கூறுவது உண்மை என்றால் பிறகு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும். பாஜகவின் மீது நம்பிக்கை இழந்த மக்கள், ஏராளமான அளவில் எனது பிரச்சாரக்கூட்டங்களுக்கு திரண்டு வருகின்றனர். படேல் சமூக மக்கள் மட்டுமின்றி பழங்குடியினர்கள் கூட எனது கூட்டத்திற்கு அதிகஅளவில் வருகின்றனர். இடஒதுக்கீடு போராட்டத்தை விலக்கிக் கொள்ள எனக்கு பாஜகவினர் 1,200 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினர். இதை மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். ஆனால், படேல் சமூக மக்களுக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த குஜராத்தின் நலனுக்காக அதை நான் நிராகரித்து விட்டேன். அதே பாஜகவினர் தற்போது தேர்தலுக்காக, 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்கின்றனர்.

? இடஒதுக்கீடு தவிர இந்த தேர்தலில் நீங்கள் முன் வைக்கும் திட்டம் என்ன?

! அரசியலில் தலைமையை வழிபடும் கலாச்சாரத்தை முற்றிலுமாக வெறுக்கிறேன். சர்தார் வல்லபாய் படேல் இந்த கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தார் அவரது வழியை நானும் பின்பற்றுகிறேன். மக்கள் தங்கள் உரிமைக்காக போராட அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

? குஜராத் தேர்தலில், உங்கள் பிரச்சாரத்தால் மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறீர்களா?

! நிச்சயமாக நான் முழு நம்பிக்கையுடன் உள்ளேன். பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் பாஜகவின் நடவடிக்கையை குஜராத்தின் அனைத்து தரப்பு மக்களும் எதிர்க்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் தவிக்கின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அழுது புலம்புகின்றனர். மாநிலம் முழுவதும் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கல்விக்காக மக்கள் செலவழிக்கும் பணம் அதிகரித்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி பாஜகவினர் பேசுகின்றனர். குஜாரத்தின் உள்பகுதி சாலைகளை பாருங்கள். பாஜக ஆட்சியில் அவை மிக மோசமாக உள்ளது.

? குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போட்டியிடும் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் உங்கள் பிரச்சாரக் கூட்டத்திற்கு பிறகு உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் கூட்டத்திற்கு செலவு செய்தது யார் என்பது குறித்து தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்துகிறதே?

! இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதற்கும் தயாராக உள்ளனர். எவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள். என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. இடஒதுக்கீடு போராட்டத்தின் போதும் இதேபோன்ற செயலில் அவர்கள் ஈடுபட்டார்கள். என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்கள். எங்கள் அமைப்பை சேர்ந்த சிலருக்கு பணம் கொடுத்து போராட்டத்தை உடைக்க பார்த்தார்கள். இறுதியில் அவர்களின் செயல் வெட்ட வெளிச்சமானது. குஜராத் மக்கள் அவர்களை பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். இந்த தேர்தலில் சரியான தீர்ப்பு வழங்குவர்.



Share:

Wednesday, December 6, 2017

பொதுவெளியில், ஒற்றைச் சொல்லாடல்களால் குறைந்துவிடப் போவதுதான் என்ன?

 
நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம். ~ இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் கோவை Abdul Hakkim அப்துல் ஹகீம் ஒரு செய்தியை இன்பாக்ஸில் https://www.facebook.com/jih.kovai.1/posts/524138047961762 அனுப்பியிருந்தார். அதை சொடுக்கினால் மற்றொரு பக்கத்தில் கண்ணாடி என்ற தலைப்பில் ஓர் அழகிய நபிமொழி அதன் விரிவாக்கத்துடன் இருந்தது.

அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

நண்பர்கள் அதை முதலில் படித்துவிட்டு தொடர்ந்து எனது கருத்துக்களை வாசித்தல் நலம் என்று கருதுகிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கண்ணாடி..!!
'''''''''''''''''''''''''''
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் சகோதரராவார். அவருக்கு உதவி-ஒத்தாசை ஏதுமளிக்காமல் அவரை வெறுமனே விட்டுவிடமாட்டார். அவரிடம் பொய்யுரைக்கமாட்டார். அவருக்கு அநீதி இழைக்கவும் மாட்டார். மேலும், திண்ணமாக உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குக் கண்ணாடியாவார். அவரிடம் ஏதேனும் குறையை அவர் கண்டால் அதனை அவரை விட்டு அகற்றிவிடட்டும்.” நூல்: திர்மிதி, மிஷ்காத்

இந்த நபிமொழியில் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உவமை மூலம் ஒரு முஸ்லிமுடன் மற்றொரு முஸ்லிமுக்கு உள்ள தொடர்பு பின்வரும் முறைகளில் அமைந்திருப்பது தெரியவருகிறது.

• உண்மையில் முகத்தில் எவ்வளவு கரைகள்-குறைகள் உள்ளனவோ அவற்றையே கண்ணாடி காண்பிக்கின்றது. அவற்றில் குறைப்பதுமில்லை, கூட்டுவதுமில்லை.

• அக்குறைகளைக் கூட முகக் கண்ணாடியின் முன்னாள் இருக்கும்போது மட்டுமே காட்டுகிறது.

• எவரேனும் ஒருவர் கண்ணாடியில் தன் குறைகளைக் கண்டதும் கண்ணாடியின் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் என்று கேள்விப்பட்டதில்லை. மாறாக நன்றி கூறாமல் மௌனமாய் இருந்தவாறு கண்ணாடியை பாதுகாப்பாக வைக்கின்றனர்.

• கண்ணாடி முகத்திற்கு முன் இருக்கும் வேலையில்தான் முகத்தின் குறைகளைக் காண்பிக்கிறது.

கண்ணாடி உவமை மூலம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்கு கீழ்காணும் நான்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

1. உண்மையில் ஒரு முஸ்லிமிடம் எந்த அளவுக்கு குறைகள் உள்ளனவோ அந்த அளவிற்கு மட்டுமே அவரது குறைகளை எடுத்துக் கூறுங்கள்.
2. குறைகளை நேரடியாக அவரின் முன்னால் கூறவேண்டுமே தவிர அவர் இல்லாதபோது கூறாதீர்கள்.
3. குறைகளைச் சுட்டிக்காட்டுபவரை அல்லது விமர்சிப்பவரை கோபித்துக்கொள்ளாதீர், மாறாக அவருக்கு நன்றி கூறுங்கள்.
4. பிறரை விமர்சிப்பதாலும் அல்லது அறிவுரை கூறுவதாலும் தான் சிறந்தவன், உயர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தலாகாது. தற்புகழ்ச்சியையோ தேவையற்ற புகழையோ விரும்பலாகாது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மேலே குறிப்பிட்டுள்ள நபிமொழியும், அதன் வீச்சும் மிகவும் பிரமாண்டமானது. ஒவ்வொரு இறைநம்பிக்கையாளரையும் வசீகரிப்பது. சமயங்களைத் தாண்டி ஒவ்வொரு தனிநபரையும் ஈர்த்து சீர்த்திருத்த வைப்பது.

ஒரு முஸ்லிமாக நின்று முஸ்லிம்களுக்கான வெளியில் இதே நபிமொழியை கேட்டு நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்.

அண்ணலாரின் ஆளுமைப் பண்பால் எனக்கு முன்னிருந்தோர் ஈர்க்கப்பட்டதைப் போலவே ஈர்ப்புக்கு ஆளாகி நானும் அந்த மாபெரும் வரலாற்றில் கரைந்திருக்கிறேன்.

ஆதாரப்பூர்வமான அண்ணலாரின் சொல்லுரைகளைத் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். அந்த ஆதாரங்களை எனது எழுத்து, சொல்லுக்கு குழிகற்களாக அமைத்திருக்கிறேன். அவற்றை எனது வாழ்வில் பொருத்தி அதை செம்மைப்படுத்தி அழகாக்கி இருக்கிறேன்.

ஆனால், இந்த செம்மையை, நபிகளாரின் ஆளுமைப் பண்புகளை, நட்சத்திரப்பூக்களாய் மின்னும் அந்த ஒளிக்கீற்றுகளை பொதுவெளியில் சேர்ப்பது எப்படி?

இதற்கான எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஏற்கனவே வாசித்த கண்ணாடியை நானும் 'தி இந்து தமிழ் ஆனந்த ஜோதி' இணைப்பில் எழுதியிருக்கிறேன்.

கீழே தந்துள்ள அவ்வரிகளை சற்றும் சிரமம் பார்க்காமல் வாசிக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகள் மொழி: கண்ணாடியின் ஐந்து குணங்கள்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

உங்களில் ஒருவர் மற்றொரு சகோதரருக்குக் கண்ணாடி போன்றவராவார். எனவே, தம் சகோதரரிடம் ஒரு குறையைக் கண்டால் அதனைக் களைய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

கண்ணாடி நேருக்கு நேராக குற்றங்குறைகளைக் காட்டிவிடுகிறது. விலகி நின்றால் மௌனமாகிவிடுகிறது. பிறர் குற்றங்களை நேருக்கு நேராகக் காட்ட வேண்டும். அவர்கள் குறித்து புறம் பேசக் கூடாது. இதுவே முதல் அம்சம்.

முகத்தில் உள்ள குறைகளை உள்ளதை உள்ளபடியே காட்டுகிறது கண்ணாடி. மிகைப்படுத்தியோ குறைத்தோ ஒருக்காலும் காட்டுவதில்லை. சக மனிதர்களின் குற்றங்குறைகளை மிகைப்படுத்தியோ, குறைத்தோ காட்டாதீர் என்பது இரண்டாம் அம்சம்.

உங்கள் சகோதர்களின் குறைகளைக் கண்டறிய அவர்களைப் பின்தொடர்ந்து திரியாதீர்கள். தமது சகோதரரின் மறைவான குறைகளை வெளிப்படுத்த ஒருவர் முற்படுவாராயின், இறைவனும் அந்த மனிதரின் மறைவான குறைகளை வெளிப்படுத்திவிடுவான். பிறகு அவர் அவமானத்தால் கூனிக்குறுகிப் போக வேண்டியிருக்கும் என்று நபிகளார் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறார்.

கண்ணாடி, எவ்வித எதிர்பார்ப்பும் சுயலாபமும் இன்றித் தனது கடமையைச் செய்கிறது. யாரிடமும் பகைமை, குரோதத்தைக் காட்டுவதில்லை. யாரையும் பழிவாங்குவதுமில்லை. கோபதாபங்களின்றி, எதிரிலிருப்பவர் அழகிய தோற்றம் பெறக் கண்ணாடி உதவுவதுபோலவே சக மனிதர்களின் அகம், அழகுபெற உதவ வேண்டும் என்பதே மூன்றாவது அம்சம்.

கண்ணாடியில் முகம் பார்ப்பவர், தமது குற்றங்குறைகளைக் கண்டு வெறுப்படைவதில்லை. கோபப்படுவதில்லை. கோபத்தைக் கண்ணாடி மீது காட்டுவதுமில்லை. மாறாக அழகுபடுத்திக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுகின்றான். மகிழ்ச்சியோடு கண்ணாடியைத் துடைத்து வைத்துப் பாதுகாக்கிறான். உங்கள் குற்றங்குறைகளை நளினமாகச் சுட்டும்போது வெறுப்படையாதீர்கள். கோபப்படாதீர்கள். மாறாக, மகிழ்ச்சியடைந்து, சக மனிதர்களின் தோழமையைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சீர்த்திருத்தத்துக்குத் தயாராகுங்கள் என்பதே கண்ணாடி சொல்லும் அடுத்த அம்சம்.

தோழமைக்குக் கண்ணாடி உவமானப்படுத்தப் பட்டிருப்பது சக மனிதர்களிடம் நிலவும் நட்பும் தோழமையும் அன்பின் வடிவமாக நலன்விரும்பியாகத் திகழ வேண்டும் என்பதற்குத்தான்!

நீங்கள் உங்கள் நண்பர்களின், சக மனிதர்களின் சுகதுக்கங்களில் பங்கெடுங்கள். உங்கள் விமர்சனங்கள், மன உருக்கம் என்னும் அந்த அன்பில் கரைந்துவிடும். உள்ளங்கள் பிணைந்துவிடும்.

அன்பளிப்புகள் சிறியதானாலும் பெரிதானாலும், அவை மனித உள்ளங்களைப் பிணைக்கும் என்பதை உறுதிப்படுத்தி நபிகளார் இப்படிச் சொல்கிறார்.

“ஒருவர் மற்றொருவருக்கு அன்பளிப்புகளை அளித்தவண்ணம் இருங்கள். இதனால், பரஸ்பரம் அன்பு பெருக்கெடுக்கும். உள்ளங்களிலிருந்து கபடங்கள் விலகும். ஒருவர் ஓர் ஆட்டின் கால்களை எனக்கு அன்பளிப்பாக வழங்கினாலும் நான் அவற்றை அவசியம் ஏற்றுக்கொள்வேன். ஒருவர் ஆட்டின் கால்களை சமைத்து விருந்து வைத்தாலும் நான் கட்டாயம் அந்த விருந்தை ஏற்றுக்கொள்வேன்!”

http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8532117.ece

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
எழுத்து நடையோ, சொற்சிறப்புகளோ அவற்றுக்கான வலியுறுத்தலோ எனது எழுத்தின் நோக்கமல்ல என்பதை முதலிலேயே தெரிவித்து விடுகிறேன்.

என்னிலும் அழகாய் எழுதுபவர்கள், சொல்லடுக்குபவர்கள், திறமையானவர்கள் அதிகமதிகம் என்பதை நன்கறிவேன்.

நான் அழுத்தமாக சொல்ல வருவது இதுதான்:

நபிகளார் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மொத்த மனித இனத்துக்கானவர்.

இன்னும் விரிவாக சொல்லப்போனால் நபிகளார் மொத்த உயிரினத்துக்கானவர்.

அதனால், அவரை முஸ்லிம்  சமுதாயத்துக்குள் மட்டும் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டாம். பொதுவெளியில் அன்னியப்படுத்தவும் வேண்டாம்.

உலக மக்களுக்கு அருளாக அனுப்பப்பட்ட அண்ணலாரை எல்லோரும் கொண்டாட விடுங்கள். அவரை எல்லோரும் அணுகும்விதமாக சொல்லாடல்களைக் கையாளுங்கள். மண்ணுக்கேற்ற மைந்தராய் அவர் மனித உள்ளங்களை ஈர்க்க வழிவிட்டு நில்லுங்கள்.

முஃமின் என்பவர் முஸ்லிம் என்பது விளங்கிக்  கொள்ளக்கூடியதுதான். ஆனால், பொதுவெளியில் இறைநம்பிக்கைக் கொண்டவர் என்றால் குறைந்துவிடப்போவதுதான் என்ன?

அந்த ஒற்றைச்சொல்லாடலால், நபிகளார் எனக்குமானவர், என் நலனும் நாடுபவர் என்று ஒவ்வொரு சமயத்தாரும் எண்ணி பூரிக்க வழிவகுத்தால்தான் என்ன?

ஆதாரங்கள், குறிப்பெண்கள் எல்லாம் தவிர்த்து நேரிடையாய் செய்தியை வைத்தால்தான் என்ன?

எந்த மொழி சிறந்தது என்ற சர்ச்சைக்குள் சிக்காமல், மூலமொழிக்குள்ளேயே நிற்காமல் அவரவர் அழகிய தாய் மொழியில் நபிகளாரை பேசவிட்டால்தான் என்ன?

அடைப்புக்குறிக்குள் எல்லாம் நபிகளாரை வாட்டாமல் பொதுவெளியில் எல்லோருக்குமானவர் என்றொரு உறவை பிணைத்தால்தான் என்ன?

இது போன்ற கேள்விகள், இன்னும் பல கேள்விகள் என்னுள் அடுக்கடுக்காய் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.
எனது இந்தக் கருத்தில் முரண்படுவர்கள் ஏராளமானோர் இருக்கலாம். ஆதரிப்போரும் இருக்கலாம்.

முரண்படுபவர் தமது கருத்துக்களை முன்வைப்பதைவிட்டு எனக்கு ‘பட்டப் பெயர்களை’ சூட்டாமலிருக்கட்டும்.

ஏனென்றால், எனக்கு நபிகளாரைவிட்டால் வேறு நாதியில்லை என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது.

நாத்திகனாக திரிந்து இளமையை வீணடித்த எனக்கு இறைநம்பிக்கை ஊற்றைக் அடையாளம் காட்டி தாகம் தீர்த்தவர்.

ஒப்பற்ற அருங்குணங்களால் என்னை புடம்போட வைத்து என் வாழ்வின் தடம் மாற்றியவர்.

வாழ்வின் அடிதோறும் காலத்தால் அழியாத பொன்மொழிகளால், ஒப்பற்ற வழிமுறைகளால் என்னை கைத்தாங்கலாய் வழி நடத்தி இறையன்புச் சுனையை சுவைக்க வைப்பவர்.

சோர்ந்திருக்கும் போதெல்லாம் தாயுமானவராய் நினைவில் எழுந்து இறையருள் பொழிய வழி வகைச் செய்பவர்.

நாயகமே..! நீரின்றி எனக்கு உய்வில்லை… இறையன்பை பெற்றுத்தரும்  வேறு யாருமில்லை என்றே சான்றளிக்கிறேன்.




 


Share:

Tuesday, December 5, 2017

Monday, December 4, 2017

அருள்வாய் இறைவா..!



"உனக்கே நாங்கள் அடிபணிகின்றோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கின்றோம். நீ எங்களுக்கு நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! அவ்வழி, எவர்களுக்கு நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி. உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாதவர்களின், நெறித்தவறிப் போகாதவர்களின் வழி" (திருக்குர்ஆன்: 1:4-7)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive