NewsBlog

Thursday, December 7, 2017

பொறாமை நற்செயல்களை அழிக்கிறது

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார். >>> இக்வான் அமீர் <<<
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபை வழக்கம் போல, ‘மஸ்ஜிதுன் நபி’யில் கூடியிருந்தது. நபிகளாரின் அருளுரைகளைக் கேட்டு அவற்றைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்தத் தயாராய் நபித்தோழர்கள் அங்கு குழுமியிருந்தனர். அவர்களிடம் நபிகளார் சொன்னார்: “தோழர்களே, இப்போது சுவனவாசி ஒருவர், உங்கள் முன் வர இருக்கிறார் பாருங்கள்”

நபிகளாரின் மதிப்புக்குரிய அந்த மனிதரைப் பார்க்க நபித்தோழர்கள் ஆவலுடன் காத்திருக்க அங்கே மதீனாவாசியான அன்சாரியின் தோழர் ஒருவர் வந்தார். தொழுவதற்குத் தயாராய் தாடியில் நீர் சொட்டச் சொட்ட, தனது செருப்புகளை சுமந்துகொண்டு அவர்களைக் கடந்து சென்றார்.

இரண்டாவது நாளும் அவர் அங்கே வந்தார். மூன்றாவது நாளும் இப்படியே நடந்தது. நபிகளாரும் சுவனவாசிக்குரிய அந்த அன்சாரியின் தோழரை முன்அறிவிப்பு செய்தார்.

மூன்று நாட்கள் கழிந்தன

இதைக் கேட்டு அங்கு குழுமியிருந்த நபித்தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அம்ர் வியப்படைந்தார். நபிகளாரின் திருச்சபை கலைந்ததும், நபிகளாரால் சுவனவாசி என்று அறிவிக்கப்பட்ட அன்சாரி தோழரிடம் சென்றார். ஒரு மூன்று நாள் அவரோடு தங்கியிருக்க அனுமதி வேண்டினார். அவரும் அதற்குச் சம்மதித்தார்.

அன்சாரியின் தோழரோடு மூன்று நாட்கள் தங்கியிருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் எந்தவிதமான பிரத்யேக வணக்கமுறைகளையும் அவரிடம் காணவில்லை. எல்லாம் வழக்கம்போலவே இருக்கக் கண்டார். ஆனால், அவர் தூங்கச் செல்லும்போது, இறைவனை நினைவுகூர்ந்து தியானிப்பவராக இருந்தார். அதேபோல, யாரைக் குறித்தும் எவ்விதமான தீயவார்த்தைகளையும் அவர் கூறாமலிருப்பதையும் கண்டார். இப்படியே மூன்று நாட்களும் கழிந்தன.

வழக்கமான நடத்தைகள் கொண்ட ஒருவரை ‘சுவனவாசி’ என்று நபிகளார் முன்அறிவிப்பு செய்தது எப்படி? குழம்பித் தவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் தனது சந்தேகத்தை விடைபெறும்போது, அந்த அன்சாரி தோழரிடம் கேட்கவும் செய்தார்.

அதைக் கேட்ட அன்சாரி தோழர், புன்முறுவலுடன் சொன்னார்: “சகோதரரே! நீங்கள் மூன்று நாட்கள் என்னோடு தங்கியிருந்து கண்டது முழுக்க முழுக்க உண்மைதான்! அதே நேரத்தில் நீங்கள் காணாத ஒரு விஷயமும் இருக்கிறது. நான் யார் மீதும் குரோதம் கொள்வதில்லை. அதேபோல, பிறருக்கு இறைவனால் அருளப்படும் அருட்கொடைகளைக் கண்டு பொறாமைப்படுவதும் இல்லை!”

இந்த அருங்குணங்கள் பெற்றிருந்ததாலே அந்த அன்சாரி தோழர், சுவனவாசி என்று நபிகளாரால் முன்னறிவிப்பு செய்யப்பட்டார் என்பதை அப்துல்லாஹ் பின் அம்ர் புரிந்து கொண்டார்.

பொறாமையை இஸ்லாம் ‘ஹராம்’ (விலக்கப்பட்டது) தீய செயலாக எச்சரிக்கிறது. பொறாமை கொள்பவர்களின் தீங்குகளிலிருந்து அபயம் தேடிக் கொள்ளும்படி தனது திருத்தூதரான நபிகளாரை இறைவன் எச்சரிக்கிறான். பொறாமை, இறை நம்பிக்கையார் உள்ளத்தில் உறைவிடம் கொள்ளவே முடியாது என்று அறிவுறுத்தும் நபிகளார் இன்னும் எச்சரிக்கிறார்.

“பொறாமையிலிருந்து விலகியிருங்கள். ஏனென்றால், நெருப்பு விறகுகளை எரித்துவிடுவதைப் போல, பொறாமை நற்செயல்களை அழித்துவிடுகிறது”

(தி இந்து - தமிழ், ஆனந்த ஜோதி இணைப்பில் 30.11.2017 அன்று பிரசுரமான எனது கட்டுரை)

இந்துவில் வாசிக்க: http://tamil.thehindu.com/society/spirituality/article21085286.ece

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive