NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Wednesday, April 19, 2017

விண்ணுலகவாசிகளின் கனாக் காலமா மார்க்கம்?

தமிழ் தேசியம், திராவிடம், பெரியாரிஸம், சங்ககாலம், தமிழர் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு – வாழ்வியல், மண்ணுக்கான அரசியல் இவற்றைக் கடக்காமல் எந்த இஸ்லாமிய இயக்கமும், முஸ்லிம் கட்சிகளும் தமிழகத்தில் வேரூன்றவே முடியாது! மண்ணைத் தெரிந்து கொள்ளாமல் மக்களைப் புரிந்து கொள்வது எப்படி?

இன்று நிஜத்தில் நடப்பது என்ன?

• தன்னைப் பற்றி எதுவும் தெரியாமல்,
• தானும் இந்த மண்ணுக்கான ஒரு பூர்வீக இனம் என்று அறியாமல்,
•வாழ்வியல் தேட்டங்களில் பொதுவானவன் என்று அடிடையாளப்படுத்த முடியாமல்,
• ஒருவிதமான மனச்சிதைவுக்கு ஆளானதைப் போலவே

தன்னை சிறுபான்மை இனமாக சிறுமைப்படுத்திக் கொண்டு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.

இதன் விளைவாக மூன்றாம் தர குடிமக்களாக தன்னைப் பாவித்துக் கொள்கிறார்கள்.

தாங்கள் பின்பற்றி வாழும் மார்க்கத்தின் தேட்டங்களை தானும், விளங்கிக் கொள்ளாமல், அடுத்தவர்க்கும் விளக்கத் தெரியாமல் தவிக்கிறார்கள் அல்லது தனித்தனியாக்கிக் கொண்டு குழம்புகிறார்கள்.

மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் தனது அன்றாட வாழ்வின் ஒரு சகஜமான வாழ்வியல் நடைமுறைகளாய் பாவிக்காமல், இதற்கு எதிரான சிந்தனைகளை எளிமையாக எதிர்க்கொள்ளும் மார்க்க அறிவில்லாமல்,

சதா சுமைச் சுமக்கும் சிந்துபாத் கிழவனைப் போல ஒரு பெரும் சுமையுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தின் பின்பற்றாளர் மனோநிலை இதுவென்றால், அவர்களை வழிநடத்தும் அண்மைக்கால தலைவர்களின் மனோ நிலையோ இன்னும் படுமோசமாகவே இருக்கிறது.

தமிழ் மண்ணுக்கு, தமிழ் பேச்சுக்கு, தமிழின் தொன்மைக்கு, கலை, இலக்கியங்களுக்கு கலாச்சாரத்துக்கு மார்க்கத்தை கொண்டு சேர்க்காமல்,

வாழும் மண்ணுக்கேற்ப மார்க்கம் சம்பந்தமான எளிய, தெளிவான வழிகாட்டுதல் காட்டாமல்,

செம்மறி ஆட்டு மந்தைகள் போலவே தொண்டர்கள் வழிநடத்தப்படுகிறார்கள்.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் தெளிவின்றி, அவற்றை தீர்க்கும் அறிவின்றி உணர்ச்சி பிழம்பானவர்களாய் மாயத் தோற்ற சித்தரிப்பில் சிக்க வைக்கப்படுகிறார்கள்.

எரிமலையாய் வெடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய நாட்டுச் சூழலில் தாடி, தொப்பிகளும், விரல் அசைவுகளும் அல்லது அவர்களது வாழ்வின் சில நடைமுறைகளுமே பிரதானப்படுத்தப் படுகின்றன என்பது எவ்வளவு துரதிஷ்டவசமானது!

பட்டப் பகலில், மக்கள் திரண்டிக்கும் சாலையில், திருப்பூரில் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியால் தாக்கப்பட்டது ஒரு எளிய பெண் அல்ல. தன் வீட்டின் நெருங்கிய அங்கம், உறவுமுறை கொண்டவள் என்னுணர்ந்திருந்தால் தமிழகத்தின் தெருக்கள் எல்லாம் இந்நேரம் கருப்பு அங்கிகளால் ஸ்தம்பித்துப் போயிருக்குமே..! அநாகரீகமாய், மூர்க்கமாய் நடந்துகொண்ட அந்தக் காவல்துறை அதிகாரி இந்நேரம் தனது சீறுடையை இழந்திருப்பார்.

சோறு போடுபவன் நிர்வாணமாய் தலைநகரில் ஒரு மாதத்துக்கும் மேலாக பரிதவிக்கிறான் என்றறிந்து வெறும் உச் கொட்டிக் கொண்டிராமல் தில்லி நகரம் தாடி, தொப்பி அங்கிகளால் திணறியிருக்கும்!

தானும், தன்னைச் சுற்றியிருக்கும் சமூகமும் உயிர்வாழ்வதற்கே தள்ளாடும் பெரும் சூழல் சுமையில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வழிகாட்டும் மீகாமன்களோ திசைத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலநிலை எவ்வளவு துரதிஷ்டவசமானது!

இலக்கில்லாமல் மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் சாரதிகளை அகற்றிவிட்டு இலக்குகளை நோக்கிச் சீறிப்பாயும் ரதமோட்டிகளாய் பொதுவெளியில் இந்த சமூகம் அடையாளப்படுத்தப்படுவது எப்போது?
Share:

பாபரி மசூதி தீர்ப்பு: கோவில் கட்ட உயிரையும் கொடுப்பேன் - உமா பாரதி - தீர்ப்பின் பின்னணியில் மோடி - லல்லு பரபரப்பு தகவல்

2001-ம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து ரேபரேலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.

இந்நிலையில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அவர்கள் மீதான கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் 2011-ல் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு செய்தது. 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கடுமையாக்க உச்சநீதிமன்றம்  இன்று, 19.04.2017, புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்ற அளவிலான சட்ட விதிகளின் கீழ்தான் இதுவரையிலும் விசாரிக்கப்பட்டு வந்தார்கள். இவர்களை சதிக்குற்றம் பிரிவுகளின் கீழாத விசாரிக்க வேண்டும் என்று மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ), என்று கேட்டுக் கொண்டதை ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில், சிபிஐயின் மேல்முறையீட்டு கோரிக்கையை ஏற்று விசாரித்த உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொண்டது.  ஆத்திரமூட்டும் வகையில் பேசியது சம்பந்தமான குற்ற விதிகளை விடக் கடுமையான சதிக்குற்ற விதிகளின் கீழ் வழக்கை விசாரிக்க ஆணையிட்டது.

 உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து உமா பாரதி கூறும்போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எந்த சதியும் கிடையாது. எல்லாம் வெளிப்படையாக உள்ளது. நான் பெருமையுடனும் நம்பிக்கையுடனுமே ராமர் கோவில் பிரச்சாரத்தில் பங்கேற்றேன். ராமர் கோவில் கட்டப்பட்டே தீரும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ராமர் கோவில் கட்டப்படுவதற்காக என் உயிரையும் அளிப்பேன்" என்று கூறினார்.

பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடி சிந்தித்த ராஜதந்திர அரசியல் இது என்று லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் சிபிஐ உள்ளதால்தான் அது உச்ச நீதிமன்றத்தில் அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்று பேசப்பட்டுவரும் நிலையில், மோடியின் ராஜதந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது.

அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதான் சிபிஐயின் வேலை.

தனக்கு எதிரி யார் என்று தீர்மானித்துவிட்ட பிறகு, அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியல் தந்திரங்களில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கு நிகர் இல்லை!” – என்று விமர்சித்த லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலமின்றிப் போனது ஏன்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கும் சல்யூட் அடிப்பார்கள். இதுதான் பாஜக!” - என்றார் லாலு பிரசாத் யாதவ்.


Share:

Thursday, April 13, 2017

ரத்த களறியாகிக் கொண்டிருக்கும் மோடியின் இந்தியா!

 
பாலைக் கறந்து அன்றாடம் தங்கள் வயிற்றைக் கழுவும் ஐந்து முஸ்லிம் விவசாயிகள் சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிவரும்போது, இடைமறித்து நடத்திய கொலை வெறித்தாக்குதலில் சம்பவம் நடந்த இரண்டு நாளில் 55 வயது பஹ்லுகான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.  -இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''

70 வயதைக் கடந்த முதியவர் முஹம்மது சுலைமான் சோகமே உருவாக அமர்ந்திருக்கிறார். எதிரே, கட்டிலில் அவரது மகன், துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய பருவத்து 20 வயது இளைஞன் அஸ்மத் வேரருந்த மரமாய் கிடக்கிறார்.

படுகாயமுற்று கிடக்கும் தனது மகன் அஸ்மத்தின் நடுங்கும் விரல்களை, முதுமையால் நடுங்கும் தனது கைகளுக்குள் ஆதரவாய் வைத்து வருடிவிடுகிறார் முதியவர் சுலைமான், ”இறைவா! எனது கண்மணி அஸ்மத்தைக் காத்தருள்..!” – என்று உதடுகள் முணுமுணுக்கின்றன. தோளிலும், மார்பிலும் தூக்கி தாலாட்டி, சீராட்டி வளர்த்த அன்பு மகன், உடைந்த மண்டையோடு, முறிந்த முதுகெலும்போடு, கண்கள் சிதைக்கப்பட்டு, நெஞ்சு மிதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தைக் காண சகிக்காமல் அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

அண்மையில், ராஜஸ்தான் மாநிலம் ஆள்வாரில், “கோ-ரக்ஷர்கள்“ என்ற பெயரில் இந்துத்துவ வெறிப்பிடித்த மாட்டுக் காவலர்களால் கொலை வெறித்தாக்குதல்களுக்கு ஆளாகி குற்றுயிரும், குலையுயிருமாய் கிடப்பவர்தான் அஸ்மத். தனது மகனுக்கு நீதி கிடைக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று மோடி இந்திய அரசின் மீது இன்னும் நம்பிக்கை இழக்காமலிருக்கிறார் முதியவர் முஹம்மது சுலைமான்.

முஹம்மது சுலைமான்
ஹரியானாவின் அந்த கிராமப்புறத்து வீட்டுக்கு நலம் விசாரிக்கவருவோரிடம் எல்லாம், ”என் மகனுக்காக பிரார்த்தியுங்கள்!”- என்று கைகளைப் பிடித்துக் கொண்டு வேண்டுகிறார் முதியவர் சுலைமான்.

இதுவரை 70 ஆயிரத்துக்கும் அதிகமாக செலவழித்துவிட்டோம். என் மகனை காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே நான் இருக்கிறேன்!”- என்று அரற்றுகிறார். மோடியின் பாசிஸ இந்தியாவில் மூன்றாம் தர குடிகளாய் போன ஒரு சமூகத்தின் மெல்லிய மூச்சுக் காற்று அது.

”பாலுக்காக 90 ஆயிரம் ரூபாய் கொடுத்து சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிக் கொண்டு வரும்போது நடந்த இந்த துரதிஷ்டம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது!” புலம்புகிறார் முதியவர் முஹம்மது சுலைமான்.

பாலைக் கறந்து அன்றாடம் தங்கள் வயிற்றைக் கழுவும் ஐந்து முஸ்லிம் விவசாயிகள் சந்தையிலிருந்து கறவை மாடுகளை வாங்கிவரும்போது, இடைமறித்து நடத்திய கொலை வெறித்தாக்குதலில் சம்பவம் நடந்த இரண்டு நாளில் 55 வயது பஹ்லுகான் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அஸ்மத், அந்த திகில் சம்பவத்தை அதிர்ச்சியுடனேயே விவரித்தார்:

”பாலுக்காக வாங்கிவந்த கறவை மாடுகளுக்கான முறையான ஆவணங்களைக் காட்டியும், அந்தக் கொலை வெறிக் கும்பல் எங்களை விடுவதாக இல்லை. ஆரம்பத்தில் 10 பேராக இருந்தவர்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் சேர்ந்து கொலை வெறியோடு எங்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். சாலையின் மறுபக்கத்தில் பஹ்லுக்கானை இன்னும் சிலர் தாக்கிக் கொண்டிருந்தார்கள். குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்த எங்களை உயிருடன் கொளுத்த முயற்சித்தார்கள். நல்லவேளை போலீஸார் வந்ததால் நாங்கள் உயிருடன் மீட்கப்பட்டோம்!”- என்கிறார் அச்சம் அகலாமல் அஸ்மத்.

மாட்டுக் காவலர்களால் படுகொலைச் செய்யப்பட்ட பஹ்லுகானின் இளைய மகன் இர்ஷாத் தாக்குதலில் அதிஷ்டவசமாய் படுகாயங்களுடன் உயிர் பிழைத்தவர் சொல்கிறார்: “நாங்கள் ஜெய்பூர் மாட்டுச் சந்தையில், கறவை மாடுகளை வாங்கி வரும்போது, வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் எங்களை வழிமறித்தார்கள். நாங்கள் அவர்களிடம் கால்நடைகளுக்கான முறையான ஆவணங்களைக் காட்டியும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை. எங்களை கொலைவெறியுடன் தாக்க ஆரம்பித்தார்கள். எங்கள் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநரின் பெயரைக் கேட்டு (இந்து சமயத்தவர்) அவரை விரட்டிவிட்டு எங்களைத் தொடர்ந்து தாக்க ஆரம்பித்தார்கள். கால்நடைகளை களவாடி சென்றதோடு, படுகாயமுற்று கிடந்த எங்களிடமிருந்து 75 ஆயிரம் ரூபாயும், எங்களது செல்போன்களையும், பர்ஸ் மற்றும் அடையாள அட்டைகளையும் பறித்துக் கொண்டார்கள். எங்கள் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியதோடு உயிருடன் கொளுத்தவும் முயன்றார்கள். சரியான நேரத்தில் போலீஸார் வந்ததால் நாங்கள் உயிர் பிழைக்க முடிந்தது.”

இதுதான் மோடியின் ஜொலிக்கும் இந்தியா..! நீதிக்கு ஏங்கும் மண்ணின் மைந்தார்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தியா..!

(Source:indiaTomorrow.net)
  
Share:

Monday, April 10, 2017

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive