NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Showing posts with label எனது கவிதைகள். Show all posts
Showing posts with label எனது கவிதைகள். Show all posts

Thursday, July 16, 2020

நித்தம் வதைபடுவது யாரெனில்..

காலிலிருந்து பிறந்தவனோ..
காலால் உதைக்கிறீர்!
எப்போதும் ஒடுக்கப்பட்டவனோ..
அடித்து வதைக்கிறீர்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ்
இருவரையும் கொன்ற
அதே அதிகாரம்..
இதோ மத்தியபிரதேசத்தில்
மற்றொரு ரூபத்தில்..!

சோறு படைக்க நினைத்தது தவறோ
சேற்றில் இறங்கி உலகுக்கு
சோறு கிடைக்க நினைத்தது
கேடோ இங்கே!

தலைக்காய்ந்தவர்
வரிப்பணத்தில்
உயிர் வாழ்பவர்கள்
குண்டாந்தடி எடுத்து
அதிகார கொலைஞராய்
இதோ பார்த்தீரா இங்கே..!

இனி விசாரணைகள்
தொடரும்!
அதிகாரம் அரிதாரம்
பூசி நடிக்கும்!
மாண்பிழந்து போன
மனித உரிமைகளோ
இனி இழப்பதற்கு
ஒன்றுமில்லாமல்
நிர்வாணமாய் நிற்கும்!

மறதி நித்திரைக்குள்
ஜனநாயகம்
குறட்டை விடும்
கணபொழுதுக்குள்
அதோ அதிகார திமிர்
தடியை ஓங்கி
ஆர்ப்பரித்து நிற்கிறது
நாட்டின்
மற்றுமோர் மூலையில்
புதியதோர் பெயரில்..!

அந்தோ!
நித்தம் வதைபடுவது
ஒடுக்கப்படுபவன் மட்டுமே!
விண்ணதிர ஒலிப்பது
அவனது
அழுகை ஒலி மட்டுமே!

'''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''
Share:

Friday, May 15, 2020

அகல மறுக்கின்றன நினைவுகள்

''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
விழிகளை மூடினால்
அகல மறுக்கின்றன
அந்த நினைவுகள்
நிழலாடுகின்றன
அந்த பாதங்கள்!
 
பஞ்சு கணக்கில்..
பிஞ்சு பாதங்கள்,
இளம் பாதங்கள்,
முதியோர் பாதங்கள்
ரத்தகறை படிந்த
பாதங்கள்!
 
நெடுஞ்சாலை முழுவதும்
குருதியின் தடயங்களாய்
பதிந்திருக்கின்றன
மண்ணின் மைந்தரின்
ஏழை, பாழைகளின்
இயலாமை பாதங்கள்..!
 
தோளில் சுமைகளோடு
சுமைகளாய் குழந்தைகள்!
தன் அன்பு முழுக்க
வெளிப்படுத்தி
துணைவியரை
தாய், தந்தையரை
உடன்பிறப்புகளை
சுமந்து செல்லும்
உறவுகள்!
 
வாழ்வியல் யாத்திரையாய்
நெடுஞ்சாலை முழுவதும்
ஆட்சியாளரின்
கையாலாகாத தனத்தை
வெளிப்படுத்தும்
ரத்த தடயங்கள்!
 
பிள்ளை பேறுகளும்,
இறுதி யாத்திரைகளும்,
வாழ்வின் அனைத்தும்
நெடுஞ்சாலையிலே
வெளிப்படுத்தி
தளராமல்
தொடரும் பயணத்தின்
பெரு வலி படிந்த பாதங்கள்
 
எங்கே செல்கிறது எனது நாடு?
எங்கே செல்கிறது என் சமூகம்?
 
மண்குதிரைகளை
நம்பினால்
என்ன நடக்கும்
பதில் சொல்கிறது காலம்
 
மக்கள் மன்றம் முன்
அதிகாரமும் பதில்
சொல்லிதான்
ஆக வேண்டும்
நாளை!
 
 
Share:

Saturday, January 28, 2017

ஜல்லிக்கட்டு: கொப்பளிக்கும் குருதித் திவலைகள்


இனி வரும்
தலைமுறையினரின்
மரபணுக்களில்
அச்சத்தை புகுத்த
முனைகிறது
அதிகார வர்க்கம்..!
ஒருபோதும்
சமரசம் காணமுடியாத
அரசியல் ஏவல் வர்க்கம்!

அறவழி
போர்க்குரலை
நசுக்கத்தான்
எத்தனை எத்தனை
பிரயத்தனம்..!
சகல ஆள், அம்பாரியோடு,
யுத்த திறனோடு
சொந்த மக்களுக்கெதிராய்
பீடு நடை போட்டது
மக்களாட்சி எந்திரம்..!
சாமான்யனின்
முதுகுதண்டுகளை முறித்திட
சுற்றியது குண்டாந்தடிகளை..!

இங்கு
உரிமைகள்
கேட்போர் எல்லாம்
தேசதுரோகிகளே..!
எதிர்ப்போர்
எல்லாம்
கலகக்காரர்களே!

வெறும் முஷ்டியை 
முறிக்கினால்..
சும்மா விடுவோமா..என்ன..?
கண் முன்னே பாருங்கள்
உடனடி தண்டனையை!
வரமழையாய் பொழிந்தன
மண்டைகளைக் கிழித்துக்கொண்டு
குண்டாந்தடிகள்..!

”தீ ஜுவாலைகளால் பொசுக்கிடு..
கண்ணில் படுவதை எல்லாம் உடைத்திடு..
குண்டாந்தடிகளால் எலும்பை முறித்திடு..!”
சட்டம், ஒழுங்கு
அதிகாரப் போதை ஏற்றப்பட்டு
சீறிப்பாய்ந்த வேளை அது..!

அய்யகோ... இனி…
எப்போதும் போல
சில அபலைகள்..
சிறைகொட்டடிகளில் நிரம்பும்..!
வெள்ளையனின் சட்டங்களால்
அதிகார வேடன்
பின்னிய வலைகளில்
சிக்கிய அப்பாவி முயல்கள்!
செய்யாத குற்றங்களுக்காக...
சிலுவைகளைச் சுமக்கத்
சிறைக்கொட்டடிகளில்
காத்திருக்கும்
ஏசுபிரான்கள்..!

முரசை ஒலித்திடு..
கூட்டம் சேர்த்திடு...
பொய்மை மையால்
பக்கங்களை நிரப்பிடு..!
உண்மைகளை மறைத்திடு..!

இத்தனைக்குபிறகும்,
உண்மைகள் உறங்குமோ..?
அக்னி சிறகுகளாய்
சீறிப் பாய்கின்றன
அடுக்கடுக்காய் சாட்சியங்கள்..!

பீனிக்ஸ் பறவைகளை
எதிர்கொள்ள முடியாமல்
திணறி நிற்கிறது ஹிட்லரின் படை!
கைகளைப் பிசைந்து கொண்டு..
ஏதேதோ பிதற்றிக் கொண்டு..
திரிகின்றன குண்டாந்தடிகள்..!

ஜனநாயக
அடையாள யுத்த
சாணக்கியத்தில்
எங்கள் இளம் தலைமுறை
காணிக்கையாக்கியது..
கொப்பளிக்கும்
குருதித் திவலைகள்..!
வற்றாத
குருதித் திவலைகள்..!

'''''''''''''''''''''''''''''''''''''''''
- இக்வான் அமீர்

'''''''''''''''''''''''''''''''''''''''''
Share:

Thursday, May 5, 2016

எனது கவிதைகள்: பிரமித்து நிற்கிறேன் நான்!


ஷணம் தோறும்
மாறும் அந்த
அந்திநேரத்து
வானத்தின் முன்
வாயடைத்து
நிற்கிறேன்..
நான்!

எத்தனை எத்தனை
நிறங்கள்..!
அத்தனையும்
ஷணம் தோறும்
மாறி மாறி..

ஓ..! வண்ணத்தில்
தோய்த்தெடுத்த
அந்த கடைசி
நேரத்து அழகை
மேகங்களில்
தோய்த்துவிட்டு
நினைவுகளை
நிலைக்கவிட்டு
ஒரு காத்திருக்கும்
பேராவலை
விட்டுச் செல்கிறானே
இந்தக் கள்ளன்!

ஒவ்வொரு அந்தியிலும்...
ஷணம் தோறும்
மாறும்
அந்த
அந்திநேரத்து
வானத்தின் முன்..
வாயடைந்து
நிற்கிறேன் ..
Share:

Friday, August 21, 2015

எனது கவிதை:'கனவுகளைத் தொலைத்துவிட்ட குழந்தையின் அழுகுரல்'


அச்சுறுத்தப்படும் தாய் நாட்டில்..
சுக்கலான இதயத்தோடு நான்!
எடுங்கள் வாளை..
வீசுங்கள் என்னைக் காக்க..
கனவுகளைத் தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரை துடைப்பீரோ?

காப்பாற்றுங்கள்..!
காப்பாற்றுங்கள்..!!
என் குரல் கேட்கிறதா?
என் தேவை... வாழும் உரிமை!
தாக்குதலை நிறுத்துங்கள்
வாழ அனுமதியுங்கள்!

 'குற்றவாளி.. குற்றவாளி..!'
என்று சொல்வோர்
இன்னும் குற்றத்தை
நிரூபிக்க காணோம்!
நாங்கள்
ஒப்புக் கொள்ளாதோரை
தடுத்து நிறுத்துவதுதான் எப்படி?

சோகமும், கோபமும்
பொங்கி வந்து
என்ன லாபம்?
மன உணர்வுகள்
கொடுமைகளைத்தான்
தடுக்குமா?

நீதியும் சமாதானமும்
வார்த்தைத் தோரணமா?
குருதிப் பொங்கும் உலகில்
மனித நேயம் வாழுமா?
அப்பா சொல்கிறார்
நிகழ்வுகள்
நான் அறியா வயசென்று!

 ஆய்வுகளும், அனுமதிகளும்
கட்டுப்படுத்துமா
என் நாட்டை?
எங்கள் எண்ணெய் வளம் சுரண்டி
மாற்றம்தான் சாத்தியமா?
சர்வதேச சட்டமாவது
மண்ணாங்கட்டியாவது
சட்டாம் பிள்ளையிடம்!

என் வயதுக்கு மிஞ்சி
இன்னும் பல பிரச்னைகள்!
போரின் அச்சம்தான்
புதைந்துள்ளது; சதா எனக்குள்!
நான் என்ன செய்ய?
விண்ணைத் தொடுகின்றன வினாக்கள்!

 என் சூரியன் அஸ்தமிக்க
அவர்கள் வானத்தில் இருட்டடிக்கிறார்கள்!
என் பிஞ்சு மனம் நிரம்பியுள்ளது; பேரச்சத்தால்!
என் அப்பாவி
முகம் முழுக்க
கண்ணீர் ஓடைகள்!

என் மனதின் ஓலம்
"யாராவது காப்பாற்ற வாருங்களேன்!"
என் கனவுகளின்
அமைதி தேவதை
சதா சிரித்துக் கொண்டு!
என் எதிர்காலத்தை
தொலைத்துவிட்டும்
நம்பிக்கையில் இன்னும் நான்!

முழு உலகின்
ஒரே அரியணைக்காக
ஜனநாயக முகமூடியில்
ஒரு சர்வாதிகரியின்
'கிறுக்குத்தனம்' போர் இது!
யார் காப்பது ..
எனது மனித உரிமைகளை!
எல்லாம் இழந்த பின் ..
காத்திருந்து என்ன பயன்?

 இராக்கிய குழந்தை
உங்கள் முன்
இதோ நான்!
அச்சுறுத்தப்படும்
தாய் நாட்டில்....
சுக்கலான இதயத்தோடு!
எடுங்கள் வாளை..
வீசுங்கள்
என்னைக் காக்க..

கனவுகளை தொலைத்துவிட்ட
பச்சிளம் குழந்தை நான்!
தனிமையில் அழுகிறேன்
கண்ணீரைத் துடைப்பீரோ?
"காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..!
யாராவது காப்பாற்றுங்களேன்..!"
என் குரல் கேட்கிறதா?

மூலம்:  'மாய் ஹம்தி அலி டெசவ்கி'
(இராக்கிலிருந்து கண்ணீர் கவிதை)


தமிழில் : இக்வான் அமீர்

(வெளிச்சம் 2004 இல், சிறப்பு மலரில் வெளியானது)
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive