NewsBlog

Friday, May 15, 2020

அகல மறுக்கின்றன நினைவுகள்

''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''
விழிகளை மூடினால்
அகல மறுக்கின்றன
அந்த நினைவுகள்
நிழலாடுகின்றன
அந்த பாதங்கள்!
 
பஞ்சு கணக்கில்..
பிஞ்சு பாதங்கள்,
இளம் பாதங்கள்,
முதியோர் பாதங்கள்
ரத்தகறை படிந்த
பாதங்கள்!
 
நெடுஞ்சாலை முழுவதும்
குருதியின் தடயங்களாய்
பதிந்திருக்கின்றன
மண்ணின் மைந்தரின்
ஏழை, பாழைகளின்
இயலாமை பாதங்கள்..!
 
தோளில் சுமைகளோடு
சுமைகளாய் குழந்தைகள்!
தன் அன்பு முழுக்க
வெளிப்படுத்தி
துணைவியரை
தாய், தந்தையரை
உடன்பிறப்புகளை
சுமந்து செல்லும்
உறவுகள்!
 
வாழ்வியல் யாத்திரையாய்
நெடுஞ்சாலை முழுவதும்
ஆட்சியாளரின்
கையாலாகாத தனத்தை
வெளிப்படுத்தும்
ரத்த தடயங்கள்!
 
பிள்ளை பேறுகளும்,
இறுதி யாத்திரைகளும்,
வாழ்வின் அனைத்தும்
நெடுஞ்சாலையிலே
வெளிப்படுத்தி
தளராமல்
தொடரும் பயணத்தின்
பெரு வலி படிந்த பாதங்கள்
 
எங்கே செல்கிறது எனது நாடு?
எங்கே செல்கிறது என் சமூகம்?
 
மண்குதிரைகளை
நம்பினால்
என்ன நடக்கும்
பதில் சொல்கிறது காலம்
 
மக்கள் மன்றம் முன்
அதிகாரமும் பதில்
சொல்லிதான்
ஆக வேண்டும்
நாளை!
 
 
Share:

2 comments:

  1. ஓ.............!அகல மறுக்கின்றன நினைவுகள்....!
    அப்படித்தான் ஏழைகளைக் காதலிக்கும் மாந்தன் மறுகி, மறுகி அழுவான்! ஒருநொடியாவது ஏதாவது ஓர் நிலையில் அல்லது நொடியில் அவன் ஏழையாய் இருந்திருப்பானே! பின் என்னவாம்! அதுதானே அவனை அலைக்கழிக்கிறது. இங்கே அரசியல் அழிவுடைப்போக்கு அப்படியே எழுத்துகளால் ஓவியமாக்கப்பட்டுள்ளது. பாதங்களில் தேங்கிய குருதிகள் யாவுமே பாதைகளில் தன்னை அடையாளப்படுத்திச் செல்கின்றன. ஆனாலும் நடக்கிறான்! குருதி வழிந்ததை அவனால் நினைக்கக் கூட இயலவில்லை. ஏழைக்குரிய வறுமை மட்டுமே அவனை அவன் கால்களால் அவனுடை காலத்தைப் போக்குகின்றன. காக்கும் எம் காவலனே! காண்பரிய பேரொளியே! என மாணிக்கவாசகர் சொன்னதை நினைவில் கொள்ளவேண்டியுள்ளது. எல்லாம் வல்ல இறைக்கு எப்படி இது தெரியாமல் போயிற்று? கடுஞ்சினம் வருகிறது. இன்று அவன் நடக்கிறான்.நாளை நான் நடப்பேன்! இன்னொரு நாள் நீரும் நடப்பீரே! நடை என்பது இதுவா!அதிகார நடையால் அகிலமே குருதியால் கழுவப்படுகிறதே!குருதியில் பிறக்கும் நுண்கிருமி இதற்கு விடை தரும். நம்புவோமாக! நம்பிக்கை தானே வாழ்க்கை!

    ReplyDelete
    Replies
    1. வாழ்வியல் போக்கை வெளிப்படுத்தும் தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி Ki.Ilampirai

      Delete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive