NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Monday, August 31, 2015

லென்ஸ் கண்ணாலே:008, புகைப்படக் கலையின் கதை

ஒரு நூற்றாண்டுக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத புகைப்படத்துறையின் பல தொழில்நுட்பங்கள் இப்போது, மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன.

புகைப்படத்துறையின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு முன்பாக, மக்கள், பொருட்கள், இடங்கள் இது பற்றியெல்லாம் விளக்க உதவியது என்ன தெரியுமா?

ஓவியம்தான்!

அதுவும் ஓவியங்கள் வரைய தெரிந்தவர்களாலேதான் இது சாத்தியமானது.

ஆனால், இன்றோ, செல்போனிலிருந்து டிஜிட்ல் காமிரா வரை யார் வேண்டுமானாலும் கிளிக்கலாம். அழகிய படங்களைப் பிடிக்கலாம்.


சரி.. புகைப்படக்கருவிகளான காமிராக்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது, எப்படி படம் பிடித்தார்கள் தெரியுமா?

புகைப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டபோது. பிலிம் சுருள்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. பிலிமுக்கு பதிலாகக் கண்ணாடித் தகடுகள்தான் பயன்படுத்தப்பட்டன. அந்தக் கண்ணாடியில் எமல்ஷன்ஸ் வெள்ளிரசம் பூசி இருப்பார்கள். ரசம் பூசப்பட்ட கண்ணாடியில் வெளிச்சம் பட்டால் அது கறுப்பாகிவிடும். அதாவது பிலிம் சுருளில் வெளிச்சம் பட்டு கருப்பாக மாறுவதைப் போல!


அதன் பிறகு கண்ணாடித் தகடுகளுக்குப் பதிலாக கண்ணாடி லென்ஸீகள் வந்தன.

இதில் படம் பதிவாக நீண்ட நேரம் தேவைப்பட்டது.

அந்த நாட்களில் நிழல் படம் எடுக்க ஸ்டுடியோக்களுக்குச் சென்றவர்கள் மணிக்கணக்காக ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டி இருந்தது.


ஆனால், இன்றோ நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

4000-ல் ஒரு செகண்ட் அல்லது அதற்கும் குறைந்த வேகத்தில் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் படம் எடுத்துவிடுகிறோம்.

தரமான காமிராக்கள் உருவான பிறகு, பிளாஷ் லைட்டுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா?


படம் எடுப்பவர் ஒரு குறுகிய தட்டு ஒன்றில் மக்னீஷியம் தூளைத் தூவுவார். படம் எடுக்கும்போது அதனைப் பற்ற வைப்பார். குபுக்கென்று நம்ப முடியாத அளவுக்கு ஒளிவெள்ளம் பாயும். அந்த ஒளியில் படம் எடுத்துவிடுவார்.

இதில் ஒரு பெரும் சங்கடம் இருந்தது.

ஒளி வெள்ளம் பாய்ந்து முடிந்ததும், கரும்புகையும், ஒருவகை மணமும் சூழ்ந்துகொள்ளும். சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும்.

அன்றைய ஊடகத்துறையைத் சேர்ந்வர்கள்கூட இந்த தொழில்நுட்பத்தைத்தான் பயன்படுத்தினார்கள்.


முக்கியப் பிரமுகருக்கான செய்தியாளர்களின் கூட்டத்தில் திரளாக திரண்டிருக்கும் செய்தியாளர்கள் ஒரே சமயத்தில் இப்படி மக்னீஷியத் தூளை பற்ற வைத்தால் என்னவாகும்? நினைத்துப் பாருங்கள்.

புகை மண்டலத்தில் சிக்கி, அந்தக் கூட்டத்தின் முக்கியப் பிரமுகர் உட்பட அனைவரும் மயங்கி விழ வேண்டியதுதான்!

இதற்கு ஒரு மாற்றுவழி கண்டுபிடித்தார்கள்.

செய்தியாளர் கூட்டத்தில் அதற்கென்று ஒருவர் மக்னீஷிய தட்டுடன் நிற்க வேண்டும். “ரெடி..! ஷீட்..!” - என்று அவர் அந்தத் தூளை பற்ற வைத்துக் கொண்டே கத்துவார். உடனே எல்லோரும் படமெடுக்க வேண்டும்.


இந்த ரசாயன பிளாஷ் லைட் முறைமை ஒழிந்து மக்னீஷியம் ரசாயனக் கலவை பூசப்பட்ட பல்புகள் வந்தன. புகைப்படலம் ஒழிந்தது.

கடைசியில், எலக்ட்ரானிக் பிளாஷ் லைட்டுகள் அந்த இடத்தைப் பிடித்தன.

இப்படி வளர்ந்ததுதான் புகைப்படக் கலை!

அதனால்தான் இன்றைய பாடத்தில் இந்த வரலாறு!

அடுத்தது இறைவன் நாடினால், காமிராவின் செயல்பாட்டைப் பார்ப்போம்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய தொடர்களை வாசிக்க:

001. அனுபவங்களின் பகிர்வன்றி.. அறிவின் ஊற்றல்ல - http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_21.html

002. உங்களுக்கான காமிரா எது? - http://ikhwanameer.blogspot.in/2015/07/2_22.html

003. கையாள்வது எளிது! ஆனாலும், கடினம்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/3_23.html

004. வாய்ப்பு என்பது ஒருமுறைதான்! : http://ikhwanameer.blogspot.in/2015/07/4_24.html

005. படமெடுக்க நினைப்பதை மட்டுமே படம் பிடியுங்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/07/5_30.html

006. என்கவுண்டர் செய்யாதீர்கள் : http://ikhwanameer.blogspot.in/2015/08/6.html

007. பிளாஷை பயன்படுத்துவது எப்படி? : http://ikhwanameer.blogspot.in/2015/08/7.html
Share:

வைகறை நினைவுகள் 17: பாகல் கொடி

 

பேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் பற்றி சென்ற நினைவுகளில் பகிர்ந்துகொண்ட போது, பின்னூட்டமாக, சகோதரி ரிஸ்வானா ஷகீல் அவரின் எடுப்பான சிறப்புகளை நினைவு கூர்ந்தார்.

ஒரு இயக்கத்தின் தலைவர் என்ற நிலையைத் தாண்டி ஒரு அன்பான ஆலோசகராகவும், அவர் எனக்கிருந்தார். அவரது மகளின் திருமணத்துக்காக வாணியம்பாடி சென்றபோது, பள்ளியில் மிக எளிமையாக அவர் தனது மகளின் திருமணத்தை நடத்தி வியப்பளித்தார். பொதுவாழ்விலும், தனிநபர் வாழ்விலும் ஒரு சிறந்த ஆளுமைக்குரியவர் அவர் என்பது மறுக்க முடியாதது.

எனது மூத்த மகளின் இஸ்லாமிய அறிவெழுச்சிக்காக உத்திரப் பிரதேசத்தின் வரலாற்று புகழ்மிக்க ராம்பூரின் ஜாமியத்துஸ் ஸாலிஹாத் மகளிர் அரபி பாடசாலைக்கு அனுப்ப வேண்டியிருந்தது. மதரஸாவின் சேர்க்கைக்கும், ஆண்டுதோறும் விடுமுறை நாட்களில் பிள்ளைகள் தமிழகம் அழைத்து வரவும் பெருமளவில் அஸ்லம் சாஹெப் தானே பயண திட்டமிடுவார். குழுவாக பிள்ளைகளை அழைத்து வருவார். (அப்போது, அவரது இரண்டு மகள்களும் அங்குதான் ஓதினார்கள்) எனது மகளின் ஐந்தாண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு அவரின் பெருமளவு உதவியால்தான் முடிந்தது எனலாம்.

ஆக பெரும் ஆளுமைகளுடனான எனது தொடர்பு அவர்களின் குணாம்சங்களை ஓரளவு என்னுள்ளும் உள்வாங்கி வடிவமைத்துக் கொள்ள முடிந்தது.


இப்படி பேராசிரியர் மௌலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப் மூலமாக கதை சொல்லியாக நான் உருவெடுத்தது முதல் காரணம் என்றால், மர்ஹீம் அப்ஸல் உசைன் சாஹெப், மாயில் கைராபதி (ராம்பூரில் அவரது இல்லத்திலேயே சந்தித்திருக்கிறேன்) குர்ரம் முராத் போன்ற குழந்தை இலக்கியவாதிகளின் மொழியல் நடையும் என்னுள் பாதித்து நிறமேற்றியது.

இப்படிதான் நான் மழலைப் பிரியன் என்ற கதை சொல்லியானேன்.

மிக எளிய வார்த்தைகளை தேர்வு செய்து குழந்தைகளோடு நேருக்கு நேர் உரையாடுவது ஒரு தனி கலைதான்! மெல்ல.. மெல்ல பழக்கிக் கொண்டேன் அல்லது குழந்தைகளிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.

நேரிடையாக கதை சொல்வது, குழந்தைகளுக்காக எழுதுவது, சமீபத்தைய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மிக எளிய முறையில் காணொளிகளை உருவாக்கி யுடியூபில் பதிவேற்றம் செய்வது என்று இது வளர்ந்து கொண்டேயிருக்கிறது. (Tell Me Nanaji: https://www.youtube.com/watch?v=unfrsskQs0Q

Jungle Stories: https://www.youtube.com/watch?v=F2Ohi9QlDLg இறைவன் நாடினால், சிறார்களுக்கான குறும்படங்களைத் தாண்டி கார்டூன் படங்கள் வரை முயற்சி நீள்கிறது.

எல்லாதுறைகளிலும், எல்லோரும் சிறப்பாக செயல்பட முடியாது. ஆயினும், நம்மால் முடியும். மிக எளிதாக… இருக்கும் சக்தி சாமர்ததியங்களைக் கொண்டு செய்ய முடியும் என்பதற்கான முயற்சியே மேலே கொடுத்துள்ள யுடியூப் இணைப்பு காணொளிகள்.

நம்பிக்கையூட்டவும், முடியும் என்பதைக் காட்டவும் சிறு பிள்ளைகளை காமிரா இயக்குனர்களாக வைத்து, மாணவர்கள் மூலமாக எடிட்டிங் செய்ய வைத்து, என்னைப் போல காமிரா என்றாலே அலறும் நபர்களை பேச வைத்து பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அவை.

நான் நேற்று குறிப்பிட்டது போல. கதைச் சொல்லியாய் நான் மாறிய பிறகு சொன்ன கதைகளில் ஒன்று இப்போது சொல்கிறேன் அங்கும் இங்கும் பார்க்காமல் கவனமாக கேளுங்கள்:

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 

கதைக்கான தலைப்பு: பாகல் கொடி

வேலி ஓரத்தில் பாகல் விதை ஒன்று முளைவிட்டது.

நீர்ப்பாய்ச்ச யாருமில்லை. பாதுகாக்க ஆளுமில்லை.

வளர்ந்து செழிக்க வசதி வாய்ப்புகளும் போதவில்லை.

ஆனாலும், பாகல் கொடி தளரவில்லை. மெல்ல… மெல்ல துளிர் விட்டு வளர்ந்தது. பூமியெங்கும் வேர்ப் பாய்ச்சி நீரை உறிஞ்சியது.

விரைவிலேயே, செடி கொடியானது.

இப்போது பற்றிக் கொள்ள கொழு கொம்பும் இல்லை.

அதனால், பாகல்கொடி சோர்ந்துவிடவில்லை. “நான் வளர்ந்து செழிப்பேன்!” – என்று உறுதி பூண்டது.

கற்களைப் பற்றிக் கொண்டு மேலே ஏறியது. சிறு புற்களையும் பிடித்துக் கொண்டு மேலே.. மேலே ஏறியது.

மேல் மூச்சு.. கீழ் மூச்சு வாங்கியபோதும், “விடமாட்டேன்!” – என்று உரத்துக் கூவியது. தொடர்ந்து கொடியை படரவிட்டது.

“ஆஹ்.. அய்யோ..! முட்கள்!” – முட்கள் குத்தியபோது, பாகல் கொடி வலிதாளாமல் அலறியது. கூரிய முட்கள் அதை குத்திக் கிழித்தன. தாள முடியாத வேதனையை உருவாக்கின. துன்பத்தையும், துயரத்தையும் பாகல் கொடி பொறுமையுடன் சகித்துக் கொண்டது.

கூரிய முட்களில் படருவது எப்படி என்று சிந்தித்து திட்டமிட்டது.

அனுபவங்கள் அதற்கு பாடங்கள் ஆயின.

இப்போது முட்களையே பந்தலாக்கிக் கொண்டு கொடி லாவகமாய் ஏறியது. “நான் செழித்து வளராமல் விடமாட்டேன்!” – என்று திடமான உறுதி பூண்டது. தன் இலட்சியத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்தது. அதன் ஒவ்வொரு பிடிமானத்திலும் விவேகமும், பலமும் தென்பட்டன.

சில வாரங்கள் சென்றபின்-

முள்வேலி முழுவதும் பாகல் கொடி செழித்துப் படர்ந்திருந்தது. பச்சைப் பசேலென்று போர்வையாய் அது முட்களைப் போர்த்திவிட்டது.

மஞ்சள் நிறப் பூக்கள் வேலி எங்கும் பூத்து சிரித்தன. இளம் பிஞ்சு காய்கள் அதிலிருந்து வெளிப்பட்டு குலுங்கின.

பாகல் கொடியின் இலட்சியம் காய்த்துக் குலுங்குவது. அது தன் இலட்சியத்தின் இறுதி எல்லையைத் தொட்டுவிட்டது. அந்த வெற்றியைக் குறித்து அது ஆர்ப்பரிக்கவில்லை. உரக்க எக்காளமிட்டு குதிக்கவுமில்லை. காய்த்தப் பாகல் காய்கள் கீழ் நோக்கி தொங்கி பாகல் கொடியின் தன்னடக்கத்தைப் பறைச்சாற்றின.

‘பொறுமையும், விடாமுயற்சியும், விவேகமும் வெற்றியைத் தரும்!’ – என வேலி ஓரத்தில் பூத்துக் காய்க்கும் பாகல் கொடி நமக்குப் படிப்பினையைத் தருகிறது.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

கதை எப்படி இருக்கிறது. அன்றாடம் வேலி ஓரம் நாம் பார்க்கும் ஒரு செடிதான் இந்தக் கதையின் கதாநாயகன்.

குழந்தைகளின் வயது, படிப்பு இவற்றுக்கு ஏற்றாற் போல வார்த்தைகளை எளிமையாக்கி சொல்ல முடியும்.

மழலைப் பிரியன் என்ற கதை சொல்லியாகிய நான், குழந்தைகளிடம் சொல்லி, எழுத்துக்களில் பதிவாக்கி தினமணி கதிர், சிறுவர் இலக்கியத்தில் இந்தக் கதை பிரசுரமானது.

இறைவன் நாடினால்… அடுத்த வைகறை நினைவுகளில்…

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html





Share:

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 2: நற்குணங்களை நிறைவாக்குவதற்காக...

 

இந்தச் சிங்காரப் பூவுலகில் மனித வருகைகள் பலவிதம். பொன்-பொருளுக்காக.. மண்-பெண்ணுக்காக.. சித்தாந்த சீர்த்திருத்தங்களுக்காக.. என்று மனித வருகைகள் பலவிதம்.

ஆனால், நபிகளாரின் வருகையோ முற்றிலும் வேறுபாடானது. அதை த் தமது திருவாயால் நபிகளார் இப்படிக் கூறுகிறார்கள்: "நற்குண்களை நிறைவாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்!"
(இமாம் மாலிக் (ரஹ்), முஅத்தா)

இறைவன் மற்றும் அவது இறுதித் தூதர் முஹம்மது நபிகளாரின் (ஸல்) வழிகாட்டுதலே இஸ்லாமிய வாழ்க்கை நெறியாகும். இந்தச் சமூக அமைப்பின் கட்டமைப்பு முழுவதும், நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைந்தது. ஒழுக்கத்திலான உயரிய ஆளுமைப் பண்பாளர்களை உருவாக்குவது நபிகளாரின் தலையாய பண்பாக இருந்தது.

"வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை! முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்!" - என்ற 'கலிமா'வை அதாவது சொற்றொடரைப் பிரகடனப்படுத்துபவர் முஸ்லிம்கள் ஆவர். இறைவனின் அடிமைகளான இவர்கள் மீது தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் கடமையாகின்றன.

இவற்றில் முதல் தர இறைவணக்கம் .. தொழுகை.

"திண்ணமாக தொழுகை, மானக்கேடான மற்றும் தீய செயல்களைத் தடுக்கிறது!" (29:45) என்கிறது திருக்குர்ஆன்.

"உங்களில் ஒருவருடைய வீட்டருகே ஆறு ஒன்று ஓடுகிறது.அதில் ஒருவர் நாள்தோறும் ஐவேளை குளிக்கிறார்.அவருடைய உடலில் அழுக்குச் சேருமா?" - நபிகளார் தமது தோழர்களிடம் கேட்டார்கள்.

"சிறிதளவு அழுக்குக்கூட சேராது இறைவனின் தூதரே!" – தோழர்கள்  பதிலளித்தார்கள்.

"ஆங்..இதே போன்றதுதான் ஐவேளைத் தொழுகையும். இறைவன் இந்தத் தொழுகைகளின் மூலமாக பாவக்கறைகளைப் போக்கிவிடுகிறான்!" (புகாரி, முஸ்லிம்)

தொழுகையைக் குறித்து நபிகளாரின் உவமையோடு கூடிய விளக்கமிது.


 நோன்பு மற்றொரு இறைவணக்கம்.

"இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போல, நோன்பு உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுடையவர்களாக மாறலாம்!" (21:83) என்கிறது திருக்குர்ஆன்.

"எவர் (நோன்பு நோற்றுக் கொண்டே) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும், தாகித்திருப்பதையும் பற்றி இறைவனுக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை!" (அபுஹீரைரா (ரலி) - புகாரி)

நோக்கத்தை அறியாமல் நோற்கும் நோன்பு வீணாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நபிகளார்.

அடுத்தது. ஜகாத்.. சமூக நலநிதி. பொருளால் இறைவனை வழிபடும் முறைமை.

"தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்!"-(2:43) என்கிறது திருக்குர்ஆன்.

இருப்பவரின் செல்வம் ஒரு வரம்பைத் தாண்டும்போது, ஆண்டுதோறும் தம் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டியது ஜகாத். இல்லாதவரின் உரிமை இது.

"நான் நபிகளார் இவ்வாறு சொல்லக் கேட்டிருக்கின்றேன். ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளிலிருந்து ஜகாத்தைப் பிரித்துவிடுங்கள். இல்லாவிட்டால்.. அது அசல் பொருளையே அழித்துவிடும்!" (அன்னை ஆயிஷா(ரலி), மிஷ்காத்)

கடைசியான இறைவணக்கம்.. ஹஜ். வசதி படைத்தோர் ஆயுளில் ஒருமுறை மேற்கொண்டு கஅபாவை சந்திக்கச் செல்லும் புனித யாத்திரை.

"நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை என்னவென்றால்... வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக உயர்ந்தது இறையச்சம்தான்!" (2:197) என்கிறது திருக்குர்ஆன்.

நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்:

"யாரொருவர் இந்த (கஅபா) ஆலயத்தை தரிசிக்க வந்து, மன இச்சைகள் சம்பந்தமான சொற்களைப் பேசாமல் .. இறைவனுக்கு மாறு செய்யும் செயல்களைச் செய்யாமல் இருந்தால்... அன்று பிறந்த குழந்தையைப் போல அவர் தன் வீட்டுக்குத் திரும்பிச் செல்வார்! - (இறைவன் அவரது எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுவான்!)"

படைத்தவனுக்கு அஞ்சி, ஒழுக்கத்துடன் வாழ்வது... உயரிய சமூகம் அமைத்து அமைதியுடன் வாழ்வதே... தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் சொல்லும் அடிப்படைச் செய்தி.

- அருட்கொடைகள் தொடரும்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை இணைப்புகளை வாசிக்க:

Share:

லென்ஸ் கண்ணாலே: கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி

தேன் உண்ட கிறக்கத்தில் வண்ணத்துபூச்சி

Share:

Thursday, August 27, 2015

உடல் நலம்:தூதுவளை: ஒரு முட் செடியின் மகத்துவம்.


தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் மூலிகை செடி வகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இது தோட்ட வேலிகளில் வளரும் முட்கள் நிறைந்த ஒருவகை கொடியாகும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டவை என்பது முக்கியமானது.
.
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளி, வாத – பித்த நோய்கள் முதலியவை நீங்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கியும் அடைபோல செய்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். குழந்தை பேறு குறைப்பாடுகளைப் போக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும். இதன் காய்களை சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் போன்றும் சாப்பிட்டு வருவதும் நல்லது. பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்கள் போன்றவை நீங்கும்.


தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். இதன் பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல் போன்றவை நீங்கும். இது சிறந்த மலமிளக்கி. அதேபோல, பாம்பின் விஷ முறிவுக்கும் சிறந்த மூலிகை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வந்தால் நல்ல பலனை காண முடியும். இப்படி வாரமிருமுறை சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாக மாறிவிடும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவிளங்காய்களைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இது சளி, இருமலை நீக்கும். பசி உணர்வைத் தூண்டும்.  ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது நல்லது. இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.  இதனுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் தரும் என்கிறார்கள் அவர்கள்.


புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றின் பின்விளைவுகளின் விபரீதம்தான் புற்றுநோயாகும். இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், தூதுவளை இலையைப் பயன்படுத்தி, சில மாதங்களில் முற்றிலும் குணமாக்கிவிடலாம் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தூதுவளையை ரசமாக்கியும் சாப்பிடலாம்.
 
>> தூதுவளை இலை - ஒரு கையளவு அதாவது சுமார் 50 இலைகள்.
>> மிளகு - 1 தேக்கரண்டி
>> சீரகம் - 1 தேக்கரண்டி
>> நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
>> பூண்டு -  6 பல்லு
>> பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
>> புளி - பெரு நெல்லியளவு
>> கடுகு - தேவையான அளவு
>> கறிவேப்பிலை - ஒரு கொத்து
>> புதினா - ஒரு கொத்து
>> உப்பு - தேவையான அளவு
>> மிளகாய் வத்தல் - 4 பெரியது
>> கொத்த மல்லி - ஒரு கையளவு

செய்முறை:

வாணலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை லேசாக சுடவைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும். பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .

அதேபோல, தூதுவளை இலைகுழம்பு செய்தும் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:
>> தூதுவளை இலை - 2 கப்
>> வாழைக்காய் - 1
>> பூண்டு - 5 பல்லு
>> வெங்காயம் - 1
>> பச்சை மிளகாய் - 1
>> தேங்காய்ப்பால் – கால் கப்
>> கடுகு - சிறிதளவு
>> வெந்தயம் - 1 ரீஸ்பூன்
>> எண்ணெய் – கால் லிட்டர்
>> மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
>> தனியா பொடி - 1 தேக்கரண்டி
>> மஞ்சள்பொடி - சிறிதளவு
>> உப்பு தேவைக்கு ஏற்ப
>> புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு

செய்முறை:

இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள் அல்லது கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளவும்.

பின்பு இலையைக் கழுவி நன்றாக நீர் வடிய விட்டுவிடுங்கள்.
வாழைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை தனித்தனியாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.
 
கொதிக்கும் எண்ணெயில்  வாழைக்காய் மற்றும் இலைகளைப் பொரித்துக் கொள்ளுங்கள்.

சிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற வரிசையில்,  தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.

இத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய் மற்றும் வதக்கிய தூதுவளை இலைகளையும் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய்ப் பால் விட்டு நன்றாக கொதித்ததும் இறக்கி வையுங்கள்.
 

 தூதுவளையைக் கடைந்தும் சாப்பிடலாம்.

தூதுவளைக் கீரை மிகவும் முள் நிறைந்தது. முதலில் அதில் உள்ள முட்களை நீக்கி நீரில் போட்டு கழுவி அதன் இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சிறிதளவு நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் துவரம் பருப்பு அல்லது பாசி பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். பின்பு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும்.

தூதுவளை துவையல் இப்படி செய்யலாம்.

சுத்தபடுத்திய கீரை, கடுகு, தோல் நீக்கிய முழு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கொத்தமல்லி, கொத்தமல்லி தழை, இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, உப்பு அனைத்தையும் எண்ணையில் வதக்கி அரைத்து துவையல் செய்து சாப்பிடலாம்.

தூதுவளை தோசை:

>> பச்சரிசி 1 கப்,
>> புழுங்கல் அரிசி 1 கப்,
>> துவரம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவை ஒரு மேஜைக்கரண்டி அளவு,
>> தூதுவளை (இலைகள் மட்டும்) ஒரு கோப்பை அளவு,
>> பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் 6
>> உப்பு, எண்ணெய் ஆகியவை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இதனுடன், சுத்தம் செய்த கீரை, மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்து,  தேவையான அளவு உப்புடன் சேர்த்து கரைத்து 3 மணி நேரம் வைத்திருந்தால் அது புளித்துவிடும்.

சற்று கனமான தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.

தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி இவற்றோடு தூதுவளை தோசைகளைச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இறைவனின் படைப்பில் ஒரு முட்செடியின் மகத்துவம் இது.
Share:

Wednesday, August 26, 2015

சிறுவர் கதை: 'காட்பரீஸ் சாக்லெட்'



நெடுமாறனின் கையில் இருபது ரூபாய் இருந்தது. அதைப் பார்க்கும் போதே நாக்கில் எச்சில் சுரந்தது. இருக்காதா பின்னே? இன்னும் சிறிது நேரத்தில் 'காட்பரீஸ்' சாக்லேட்டை அவன் சுவைக்கப் போறானே!

ம்... எத்தனை நாள் சேர்த்து வைச்ச காசு! அதுவும் சிறுக .. சிறுக.. நாலணாவும், எட்டணாவும் என்று! ஸ்கூலுக்குப் போகும்போது அப்பா கொடுத்த காசுதான் அது.

எட்டாம் வகுப்பில் அவனோடு படிக்கும் சக மாணவர்கள் கொஞ்சம் வித்யாசமானவர்கள். நினைத்த நேரத்தில் ஐஸ் கிரீம், சாக்லேட் என்று வாங்கி சாப்பிடுவார்கள். அதில் அவனுக்கும் ஒரு பங்கு கிடைக்கும்தான்! ஆனால், நெடுமாறனுக்கு அதில் திருப்தியில்லை. அப்பாவோ, கொத்தனார் வேலை செய்பவர். அவரது கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும். அதனால், அவருக்குத் தொந்திரவு தரவும் விரும்பவில்லை. அதேசமயம், காட்பரீஸ் சாக்லெட் மீதிருந்த ஆசையும் குறைவதாய் இல்லை. அதை எப்படியாவது வாங்கிச் சாப்பிட வேண்டும் என்று எடுத்த முடிவுதான் கையிலிருந்த இருபது ரூபாய்! எப்படியும் இரண்டு சாக்லெட் வாங்கலாம்.

நெடுமாறன் சாக்லெட் வாங்க ஆசையுடன் கடைக்குச் சென்று கொண்டிருந்தான். அப்போதுதான் அது நடந்தது. பக்கத்தில் ஒரு டீ கடை இருந்தது. அதன் எதிரே ஒரு நாய் நின்றிருந்தது. ஒரு சிறுவனும் அங்கே இருந்தான்.


டீ கடைகாரர் அந்த சிறுவனிடமிருந்து காசு வாங்கி ஒரு பிஸ்கட் தந்தார். பிஸ்கட் கைத்தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க சிறுவன் குனிந்தான். நாயும் பிஸ்கட்டைப் பார்த்துவிட்டது. "வவ்!" என்று பாய்ந்து சிறுவன் கையை கவ்வியது.

"யம்மா..!" - என்று அலறிய சிறுவன் "ஓ..!" - என்று அழ ஆரம்பித்தான்.

டீ கடையிலிருந்த யாரும் சிறுவனை கண்டு கொள்ளவில்லை. அவன் அழுது கொண்டே நடந்தான். பக்கத்திலிருந்த சர்ச்சுக்குள் நுழைந்தான்.

இப்போது நெடுமாறனுக்கு காட்பரீஸ் சாக்லெட் மறந்து போனது. நாய் கடித்த சிறுவன்தான் நினைவில் இருந்தான்.நெடுமாறன் சிறுவனைப் பின் தொடர்ந்தான்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடிசைவாசிகள் சர்ச்சு பக்கத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள். நாய்க் கடித்த சிறுவனை யாரும், "என்ன?", "ஏது?" என்று கேட்கவில்லை. அவரவர் வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.


'நாய்க்கடி விபரீதமானது. அதை அலட்சியம் செய்யக் கூடாது. கடித்த நாய் வெறி நாயாகவும் இருக்கலாம். நாயின் உமிழ் நீரில் 'ராபீஸ்' என்ற நோய்க்கிருமிகள் இருக்கும். அவை மனிதனின் உடலில் கலந்தால் நோய்த் தொற்றும். மனிதன் நாயைப் போலவே குரைத்து சாக வேண்டியதுதான். கொடுமையான நோய் அது!' - வகுப்பில் அறிவியல் ஆசிரியர் சொன்னது நினைவில் வந்தது.

நெடுமாறன் அங்கிருந்த குடிசைவாசிகளிடம் சென்றான். நடந்ததைச் சொன்னான். சிறுவனை அருகில் அழைத்தான். கூட்டத்திலிருந்த ஒரு பெண் அவனுக்கு உதவ முன்வந்தாள்.

குளியல் சோப்பு கேட்டு வாங்கிய நெடுமாறன் பக்கத்திலிருந்த குழாய் அருகே சிறுவனை அழைத்துச் சென்றான். நீரை வேகமாக திருகி விட்டான். நாய்க்கடித்திருந்த இடத்தில் நீர்படும்படி செய்தான். காயத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவினான். மீண்டும் நீரைப் பீய்ச்சினான். நாய்ப்பல் பட்ட இடம் நீல நிறத்தில் கன்றிப் போயிருந்தது.

"அக்கா!! இந்த தம்பியின் அம்மா எங்கே?" - நெடுமாறன் விசாரித்தான்.

"அவங்க வேலைக்கு போயிருக்காங்கப்பா!" - என்றான் அந்தப் பெண்.

நெடுமாறன் அவளிடம், "இவனுக்கு உடனே தடுப்பூசி போடனுண்ம்கா" - என்றான்.

"அவங்கம்மா இல்யேப்பா..!" என்று இழுத்து பேசியதிலிருந்து காசு இல்லை என்பது புரிந்தது.

இதோ இருபது ரூபாய். பக்கத்தில் இருக்கிற டாக்டர்கிட்ட தயவுசெய்து உடனே கொண்டு போங்க!" - என்று கொஞ்சமும் தயங்காமல் இருபது ரூபாய் நோட்டை நீட்டினான்.

பணத்தை வாங்கிக் கொண்ட பெண், சிறுவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றாள்.

நெடுமாறன் மனநிறைவோடு வீடு திரும்பினான். 'காட்பரீஸ்' சாப்பிட்டதைவிட பன்மடங்கு மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது.

(25.01.1998, தீக்கதிர் - வண்ணக்கதிர் இணைப்பில், குழந்தைகள் பூங்கா பகுதியில் பிரசுரமான எனது சிறுவர் கதை)
Share:

Tuesday, August 25, 2015

லென்ஸ் கண்ணாலே சங்கதி சொல்வோமே: கோழிக்கொண்டையில் வண்டு

கோழிக்கொண்டைபூவில் தேனருந்தும் வண்டு

Share:

Monday, August 24, 2015

வைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன்

 

இஸ்லாமிய கல்வியின் கற்றலும், வாசிப்பின் அவசியமும் எந்தளவுக்கு முக்கியம் என்றால் அது விரிந்த விசாலமான எண்ணங்களை உருவாக்குகிறது. பயத்தைப் போக்குகிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள செய்கிறது. தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னையும், தனது சக படைப்புகளையும், தன்னைப் படைத்தவனையும் இனம் கண்டு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள செய்கிறது.

நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் நூல் வாசிப்பில் சிறு வயதிலிருந்தே பெரு விருப்பம் என்று! இந்த வாசிப்பு இஸ்லாமிய கொள்கையை ஒப்புக் கொண்டபின் இன்னும் அதிகரித்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொள்வது என்பது வேறு! நடைமுறைப் பிரச்னைகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும்போது பிறரை சமாதானப்படுத்துவது என்பது வேறு!

ஆக, இந்த நிலைகளில் வாசிப்பு அதி முக்கியத்துவம் பெறுகிறது.

நூல் வாசிப்பின் உள்வாங்கலில் அதிகமதிகமாக இருந்த நான் ஒருமுறை சென்னை பெரம்பூர் ‘ஐ.எஃப்.டி’-க்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது எனது மனதில் வரலாற்று நாயகர்களான அபூபக்ககர்களும், உமர்களும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். நேர்வழி சென்ற அந்த கலீஃபா பெருந்தகைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் நான் ஐ.எஃப்.டி-க்கு சென்றதும்!


அப்போது. தமிழ ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் மெளலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப். ஒரு கலீஃபாவை ஒரு பொதுஜனம் சந்திக்க சென்றிருப்பதாக ஒரு எண்ணம் என்னுள்!

வாசலில், காவலர் ஒருவர் தடுத்தார். “நீங்க.. தலைவரை சந்திக்க அனுமதி பெற்றிருக்கிறீர்களா?” – என்றார். “இல்லை!” – என்றதும் என்னை வாசலில் மறித்து நிறுத்திவிட்டார்.

புறநகர் பகுதியிலிருந்து, கிட்டதட்ட 20 கி.மீ. பயணம் செய்து எனது தலைவரை சந்திக்க சென்றால்.. முன் அனுமதி வேண்டும் என்கிறார்களே! எங்கிருந்து எடுத்தார்கள் இந்த முன்னுதாரணத்தை?

கோபம் தலைக்கேற வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கலீஃபாக்களின் முன்னுதாரணங்களை வைத்து இரண்டு, மூன்று பக்க கடிதத்தை தயாரித்து அஞ்சலில் அனுப்பினேன். இப்போது நினைத்தாலும் அது சிறு பிள்ளைத்தனமாகவே தெரிகிறது.

முதிர்ச்சியற்ற நிலையில் நான் செய்த இத்தகைய செயல்கள் சில நல்ல உள்ளங்களையும் பாதித்திருக்கின்றன. அவர்களில் நமது பிரபல எழுத்தாளரும், எனது நண்பருமான ஹிமானா சையத்தும் ஒருவர். அவருடனான காரசாரமான ஒரு அஞ்சல் வழி யுத்தத்தில் மன சங்கடங்கள் ஆனதுதான் மிச்சம்.

அந்த செயலை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் என்னை வெட்கம் பிடுங்கி தின்கிறது. பாவம்! சகோதரர் ஹிமானா சைய்யத்தின் மனம் என்ன புண்பட்டிருக்குமோ என்று நெஞ்சம் பதறுகிறது. இறைவன் வாய்ப்பளித்தால், மற்றொரு நினைவுகளில் அது சம்பந்தமாக பகிர்ந்து கொள்வோம்.

இவை அறியாமையால் விளைந்தவை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.

அப்படிப்பட்ட அறியாமைத்தனத்தில், ஜமாஅத் தலைவருக்கு உணர்ச்சிபூர்வமாக வரலாறுகளைச் சுட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அறியாமையாக இருந்தாலும் அதில் ஒரு துளி தீய நோக்கமும் இல்லை. தூய எண்ணமே மேலோங்கி இருந்தது.

கடிதம் கிடைத்த ஓரிரு நாளில், “பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப் என்னை சந்திக்க விரும்புகிறார்!” – என்று அழைப்பு வருகிறது.

அதே உணர்ச்சிபூர்வமான எண்ணங்களுடன் (என்) தலைவரை காண செல்கிறேன். அவரை உண்டு இல்லை என்று ஆக்கிட வேண்டும் என்ற ‘பதூதின் – நாட்டுப்புற அரபியின்’ மனப்போக்கு என்னிடம் மேலோங்கியிருக்கிறது.

ஐ.எஃப்.டி. வளாகத்தின் காவலர் என்னைக் கண்டதும் பெரிய சல்யூட் அடிக்கிறார். பவ்வியத்துடன் மௌலானா அஸ்லம் சாஹெப் அறைக்கு அனுப்பி வைக்கிறார்.

ஒரு சாதாரணமான 10 க்கு 10 அறை. புத்தகங்கள், மேசை, நாற்காலிகள் என்று மிகச் சாதாரணமான அறை!

பேராசிரியர் இஹ்ஜாஜ் அஸ்லம் சாஹெப்
வாணியம்பாடி, பேரணம்பேட் முஸ்லிம்கள் அணியும் குல்லா. நீண்ட ஆடைகள். கண்ணாடி வழியே உள்ளத்தை ஊடுருவும் கண்கள் என்று ஜமாஅத்தின் தலைவர் அமர்ந்திருந்தார்.

என்னைக் கண்டதும், சலாம் சொல்லிவிட்டு புன்முறுவல் பூத்தார். “என்ன இக்வான் சாப்..! என் மீது ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது!” உருது தாய் மொழியாகக் கொண்ட அவர் தமிழில் தட்டுத் தடுமாறி பேச, உருது தாய்மொழியாகக் கொண்ட நான் நல்ல உருதுவில் பேச தெரியாமல் அழகிய தமிழில் பேச, இப்படிதான் பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப்புடன் எனது முதல் பரிச்சயம் ஆரம்பமானது.

அஸ்லம் சாஹெப் மிகச் சிறந்த கதைச் சொல்லி. ஆங்கிலத்தில் குர்ரம் முர்ராத்தின் புத்தகங்களை வாசித்து காட்டுவார்; அங்க அசைவுகளோடு! கதாப்பாத்திரத்துக்குள் நுழைந்து நம்மையும் நுழைய வைத்துவிடுவார்.


சிறந்த கதைச் சொல்லியான அவரிடமிருந்துதான் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கதைச் சொல்ல நான் கற்றுக் கொண்டேன். மழலைப் பிரியன் ஆனேன்.

அதன் பின் எண்ணூர், தாங்கல், காலாடிப்பேட்டை, செரியன் நகர் என்று குழந்தைகள் எங்கெல்லாம் கூடுவார்களோ அங்கெல்லாம் எந்தவிதமான கூச்ச நாச்சமில்லாமல் அங்க அசைவுகளோடு கதை சொல்லி அவர்களோடு பாடி, ஆட ஆரம்பித்தது இப்படிதான்.

இறைவன் நாடினால்… அடுத்த நினைவுகளில் உங்களோடு இந்த மழலைப் பிரியன் கதைச் சொல்லியாக ஒரு கதையுடன்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html

வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html

வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html

வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html

வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html

வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html

வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html

வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html

வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html

வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html

வைகறை நினைவுகள் 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html

வைகறை நினைவுகள் 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html

Share:

சிறுவர் கதை: 'பண்புகள் தந்த பாடம்'



குணாளனும், முகிலனும் நண்பர்கள். ஒரே பள்ளியில் ஒன்றாய்ப் படிப்பவர்கள்.

குணாளன் மென்மையானவன். உண்மை, நேர்மை, நாணயம் இவைகளை உயிர் எனக் கடைப்பிடிப்பவன். இந்தக் குணங்களே வெற்றி தரும் என்பதில் நம்பிக்கை உள்ளவன். சிறியவர், பெரியவர் அனைவரிடமும் அன்புடன், மரியாதையுடன் பழகுவான்.

முகிலன் வன்மைக் குணம் கொண்டவன். அடாவடி, முரட்டுத்தனம், கோபம் இவையே அவனுடைய உயிர் மூச்சு. தீய பழக்கங்கள் ஏதும் இல்லையென்றாலும் தீமை பயப்பனவற்றைத் தயங்காமல் செய்பவன். பெரியவரையே மதிக்க மாட்டான். சிறியவர் நிலை சொல்ல வேண்டுமா?

குணாளன் அடிக்கடி முகிலனிடம், "முகிலா..! முரட்டுத் தனத்தைக் கைவிட்டு விடு. அது தீமையானது. சில நேரங்களில் ஆபத்தைத் தருவது. நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்" - என்று அறிவுரை கூறுவான்.

முகிலன், "ஆங்..! மகாத்மா ஆகிவிடாதே குணா..!" - என்று கிண்டலும், கேலியும் செய்வான். நண்பனின் அறிவுரையை அலட்சியப்படுத்துவான்.


ஒருநாள் காலை. பள்ளிக்குச் செல்ல குணாளனும், முகிலனும் பேருந்தில் ஏறினார்கள். ஓட்டுநர் பேருந்தைக் கிளப்பியதும் குணாளன் ஏதோ ஞாபகம் வந்ததைப் போல சட்டை பாக்கெட் மற்றும் புத்தகப் பையைத் துழாவினான். தேடியது கிடைக்காமல் போகவே பதற்றடைந்தான். பக்கத்திலிருந்த முகிலன், "என்ன குணா..?" - என்றான்.

"அடையாள அட்டையை மறந்து விட்டேன். பயணச்சீட்டு பரிசோதகர் வந்தால் விபரீதமாகிவிடும்" - குணாளன் வருத்தத்துடன் சொன்னான்.

"அடையாள அட்டையா..? அது எப்படியிருக்கும்? அப்பா வாங்கி வந்து கொடுத்ததுதான் தெரியும். பிறகு அது எங்கே மாயமானதோ தெரியாது. அய்யாவிடம் கேட்க யாருக்குத் தைரியமிருக்கு? அவ்வளவுதான் ரூட் பஸ்ஸை மடக்கிட மாட்டோம்!"

நன்மைக்காகப் பாடுபட வேண்டிய மாணவப் பருவத்தைத் தீமைக்குத் தாரை வார்க்க முகிலன் தயாராயிருந்தான்.

குணாளனுக்கு முகிலன் கருத்தில் உடன்பாடில்லை.

வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தான். மனத்திற்குள் ஞாபக மறதியைக் கடிந்து கொண்டான்.

பேருந்து, அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நின்றது. உடனே பரிசோதகர்களின் குழு ஒன்று முன்-பின் வாசல்களை மறித்து கொண்டது. இறங்குவோர் அமைதியாகத் தங்கள் பயணச் சீட்டுகளைக் காட்டினர். "நன்றி சார்!" என்று அவர்களைப் பரிசோதகர்கள் அனுப்பினர்.

பாதை ஓரத்தில் வயர்லெஸ் சகிதமாக ஒரு ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது.

பேருந்தில் ஏறிய பரிசோதகர் குழுவினர் ஒவ்வொரு பயணியாகச் சோதிக்க ஆரம்பித்தனர். இதைக் கண்ட குணாளனுக்குத் திக்கென்றது. என்ன செய்வதென்று புரியாமல் அவன் தவித்தான். ஆனால், முகிலனோ எதையும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தான்.


இனியும் தாமதித்துப் பயனில்லை என்று தெரிந்ததும் குணாளன் பரிசோதகரை நெருங்கினான். பணிவுடன் முகமன் கூறினான். அதன் பின், "அய்யா!" என்று அழைத்து ஞாபக மறதியால் பயண அடையாள அட்டையை வீட்டில் வைத்துவிட்டு வந்ததைக் கூறி வருத்தம் தெரிவித்தான். தன் தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். இனி எந்நாளும் அத்தகைய தவறு நிகழாதவாறு பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தான்.

குணாளனின்  பண்பாலும், நேர்மையாலும் கவரப்பட்ட பரிசோதகர் புன்முறுவல் பூத்தார். மென்மையாக முதுகில் தட்டிக் கொடுத்து.. போய் இருக்கையில் அமரும்படிக் கூறினார்.

"நன்றி அய்யா!" - என்றவாறு குணாளன் இருக்கைக்குத் திரும்பினான்.

"தம்பி பயணச் சீட்டு?" - பரிசோதகர் முகிலனிடம் கையை நீட்டினார்.

"இல்லை!" - என்றான் முகிலன் விறைப்பாக.

"என்ன..! இல்லையா?"- முகிலனின் பதில் பரிசோதகருக்கு கோபமூட்டியது.

"ஆமாம்.. பயணச் சீட்டு இல்லை. பயண அட்டைதான் இருக்கு!" மீண்டும் அலட்சியமாகப் பதில் வந்தது.

"சரி.. பயண அட்டையை எடு!" - பரிசோதகரின் குரல் சற்றுக் கடுமையானது.

"கொண்டு வரவில்லை!"

"எழுந்திருடா..!" - பரிசோதகர் முகிலனின் கையைப் பிடித்து இழுத்தார்.

முகிலன் வழக்கம் போல சீருடை அணியாததாலும், புத்தகப் பையைக் கொண்டு வராததாலும் பரிசோதகரின் சந்தேகத்திற்கு ஆளானான். பேருந்திலிருந்து தர.. தர.. வென்று இழுத்துச் செல்லப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டான்.

முகிலனுக்கு அவமானமாகி விட்டது.

குணாளன் ஞாபக மறதியால் பயண அடையாள அட்மையைக் கொண்டு வரவில்லை. அது தவறு என்று வருந்தி அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.

இனிமையான பண்புகளால் பரிசோதகரின் அன்பிற்கு ஆளானான். தண்டனையின் தன்மையும் குறைந்தது.

முகிலன் வேண்டுமென்றே அலட்சியப் போக்கால் அடையாள அட்டையைக் கொண்டு வரவில்லை. பரிசோதகரின் கேள்விகளுக்கும் முறையாகப் பதில்  சொல்லவில்லை. செய்த தவறை உணரவும் இல்லை. தண்டனையின் கடுமைக்கு ஆளாக வேண்டியிருந்தது.

முகிலன் சோகமாக ஜீப்பில் அமர்ந்திருந்தான். அவன் தன்னோடு படிக்கும் மாணவன்தான் என்று சாட்சி சொல்லவும், அவனுக்காக மன்னிப்புக் கேட்கவும் பேருந்தைவிட்டு குணாளன் கீழிறங்கினான்.

ஜீப்பிற்கு வெளியே நின்றிருந்த உயர் அதிகாரி முன் பணிவாக சென்று, "வணக்கமய்யா..!" - என்று பேச ஆரம்பித்தான். அவனுடைய உரையாடலின் தொடக்கத்திலேயே பணிவு பளிச்சிட்டது.

(தினமணி, தமிழ்மணி இணைப்பில் - செப். 21, 1991 அன்று பிரசுரமான எனது சிறுவர் கதை)
Share:

அழைப்பது நம் கடமை : 10, ''ஊடகங்களின் இரண்டு அளவுகோல்கள்!''


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஒரு காலத்தில் உலகின் இரும்புத் திரையாய் வழங்கப்பட்ட சோவியத் யூனியன் சிதறிப் போனது. அந்த வெறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தற்போது அமெரிக்கா புஜபலத்தால் உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. அமெரிக்கா அராஜகத்துக்கு உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி முனைகள் தீர்வாகாது என்று உலக நாடுகள் உணரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மேற்கத்திய சிந்தனையாளர்கள் எண்டிஸம் என்ற வார்த்தைப் பிரயோகம் ஒன்றைத் தற்போது கண்டு பிடித்துள்ளனர். உலகின் அனைத்துச் சித்தாந்தங்களும், இஸங்களும் மனிதரிடையே நம்பகத் தன்மையை இழந்துவிட்டன என்பதே  இதன் பொருள். இந்த சிந்தனைப் போக்கு மிகவும் ஆபத்தானது. மறைமுகமாக இஸ்லாத்தைச் சேதப்படுத்துவது. இஸ்லாம் என்னும் கதிரொளியை மறைப்பதற்கான முயற்சி. ஆனால், அச்சப்படத் தேவையில்லை. திருக்குர்ஆன சொல்கிறது: "திண்ணமாக சிரமத்துடன் இலகுவும் இருக்கிறது" (94:6) ஒவ்வொரு சிரமத்திற்கு பிறகும், அது கடந்த ஒரு லேசான நிலைமையும் ஏற்படும். ஒவ்வொரு மாற்றத்திலும், நிகழ்விலும் மேலெழுவதற்கான வாய்ப்புகள் இறையருளால் பிரகாசமாக பெருகியவாறு இருக்கும். இந்த கிடு.. கிடு மாற்றங்கள் இஸ்லாத்திற்கு பெரும் சாதகங்களை ஏற்படுத்துபவை.

இன்றைய நாட்களில் உலக மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மார்க்கம் இஸ்லாம். அதேபோல, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் முஸ்லிம்கள். இதற்கு முக்கியக் காரணம் திட்டமிட்டு இந்த பொய்மையை பரப்ப தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வரும் தகவல் தொடர்பு சாதனங்கள்.. பத்திரிகைகள் போன்ற எழுத்து ஊடகமாக இருந்தாலும் சரி அல்லது டிவி. போன்ற மின்னணு ஊடகங்களாக (விஷீவல் மீடியாக்களாக) இருந்தாலும் சரியே!  இஸ்லாத்துக்கு எதிராக இவை முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. 

  • தீவிரவாதிகள்
  • மதவாதிகள்
  • கடத்தல்காரர்கள்
  • விமானக்கடத்தல்கள்
  • கொடுரமானவர்கள்
  • சர்வாதிகாரிகள்
  • காட்டுமிராண்டிகள்
இந்த சொற்பிரயோகங்கள் முஸ்லிம்களுக்கான செய்திகளில் சர்வசாதாரண மாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

  •     இஸ்லாமிய தீவிரவாதம்
  •     இஸ்லாமிய பழமைவாதம்
  •     இஸ்லாமிய கற்காலத் தண்டனைகள்
  •     முஸ்லிம் கலகக்காரர்கள்
போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்த எழுத்து மற்றும் மின்னணு ஊடகங்கள் தயங்குவதில்லை!


இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையிலான சக்திகள் பல நூற்றாண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த துர்பிரசாரத்துக்காக அவர்கள் எது ஒன்றையும்  பயன்படுத்தத் தயங்குவதில்லை. தங்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை. தற்போதைய யுகத்தில் இந்தத் தீய சக்திகள் நவீன தகவல் தொடர்பு ஊடகங்களை அதிதீவிரமாக இத்தகைய பணிகளுக்கு முடுக்கிவிட்டுள்ளன. அதேநேரத்தில், முஸ்லிம்களின் தரப்பிலோ இஸ்லாத்துக்கு எதிரான இந்த இமாலயப் பிரச்சாரத்துக்கு எதிர்வினையோ குன்றளவும் இல்லை.

சத்தியத்தைத் தடுக்கும் எதிரிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க அவர்கள் பதிலியான தகவல் தொடர்புக் களத்தில் இறங்கவேயில்லை. பல நூற்றாண்டுகளாக எதிரிகளால் திட்டமிட்டு செய்துவரப்படும் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரப் பணிகளை ஒரே நாளில் முறியடித்துவிடவும் முடியாது!

சொந்த தாய் நாட்டை அநீதியாக கைப்பற்றிக் கொண்ட அமெரிக்கர்களை எதிர்க்கும் இராக்கியர்கள் பயங்கரவாதிகள் என்று செய்திகளில் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், அப்பாவி இராக்கியர்களையும், ஆப்கானியர்களையும் கொன்று குவிக்கும் அமெரிக்கப் படையினரை ஆக்கிரமிப்பாளர்கள் - பயங்கரவாதிகள் என்று அவர்கள் சார்ந்துள்ள சமய அடையாளங்களை வைத்து இதே ஊடகங்கள் அழைப்பதில்லை. அதேபோல, சொந்தத் தாய் மண்ணை இழந்து நிற்கும் பலஸ்தீன சுதந்திரப் போராளிகளை தீவிரவாதிகள் என்கின்றன ஊடகங்கள்.

ஆனால், ஐநாவின் எந்தக் கட்டளைக்கும் .. எந்தத் தீர்மானத்துக்கும் அடிபணியாத இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை யூதத் தீவிரவாதிகளாக இதே ஊடகங்கள் பெயர் சூட்டி அழைப்பதில்லை.

இத்தகைய இருவிதமான அளவுகோல்கள் இஸ்லாத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த அளவுகோள்களின்படியே இந்திய ஊடகங்களும், மேற்கத்திய ஊடகங்களும் கொஞ்சமும் குறையாமல் செய்திகளைத் தருகின்றன. இஸ்லாத்துக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செய்திகளை வெளியிடுகின்றன. 

  • பாபரி மசூதி இடித்தவர்கள்
  • அந்தப் பள்ளிவாசல் இடிபடுவதற்கு தூண்டுகோலாய் இருந்தவர்கள்
  • அதைத் தொடர்ந்து நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலை களுக்குக் காரண கர்த்தாக்கள்.
  • குஜராத்தில் முஸ்லிம்களை உயிரோடு எரித்தவர்கள்.
  • கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து கருக்களை கொன்றவர்கள்.
  • முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷங்களிலேயே முதல்வராக தொடர்ந்து வருபவர்கள்.
முன்னாள் பிரதமர் இந்நாள் முதல்வர்கள் என்று சங்பரிவார் தீவிரவாதிகள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று இந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும். உண்மையும் அதுதான்!

அப்படிச் செய்திருந்தால்... பாசிஸ்டுகளான இந்து பயங்கரவாதிகள் ஆட்சி பீடம் ஏறுவதைத் தடுத்திருக்கலாம். இந்திய நாட்டின் வரலாற்றில் களங்கம் பதியாமல் காத்திருக்கலாம். ஒருமைப்பாட்டுக்கும், சமய நல்லிணக்கத்துக்கும் அடித்தளமிட்டிருக்கலாம். நரேந்திர மோடி போன்ற நர மாமிச தின்னிகளை தூக்கு மேடைக்கு எப்போதோ அனுப்பியிருக்கலாம்.

இந்த ஒரு சார்புடைய போக்கால்.. பாதிக்கப்படுவது.. முஸ்லிம்கள் மட்டுமல்ல.. ஒடுக்கப்பட்ட அனைவரும்தான்! இதற்கு விலை கொடுக்கப்போவது முஸ்லிம்கள் மட்டுமல்ல. நாளைய இந்தியத் தலைமுறையும்தான்!


இந்த யதார்த்தங்களை முஸ்லிம்கள் புரிந்துகொள்வதோடு தங்கள் பொறுப்புகளையும் உணர வேண்டும்.

அநீதிக்கு எதிரான மாற்றாக சத்தியத்தை இன்னும் பல மடங்கு உத்வேகத்தோடு எடுத்து வைக்க வேண்டும். அசத்தியம் என்னும் காரிருளை விரட்ட வேண்டும். சத்தியம் என்னும் பேரொளியை ஏற்ற வேண்டும்.

இதில்தான் இம்மை - மறுமைக்கான வெற்றி அடங்கியிருக்கிறது. இஸ்லாம் சம்பந்தமாக தப்பும் தவறுமாக பரப்பப்படும் பிரச்சாரத்துக்கு எதிராக உண்மையை எடுத்துரைக்க வேண்டிய பெரும்பணி இது. விழுவதும், எழுவதுமாய் முஸ்லிம்கள் தங்கள் அழைப்புப் பணி என்னும் கடமையை தொடர வேண்டிய தருணம் இது.


இந்த ஊடகப் பிரச்சாரங்கள் முஸ்லிம் இளைய சமுதாயத்தைக் கடுமையாக பாதிக்கும். அவர்களிடையே தாழ்மை உணர்ச்சியை உருவாக்கிவிடும். கற்பனையான குற்ற உணர்வு அவர்களைப் பிடித்தாட்டும். அருள் மார்க்கத்தில் பிறந்தவர்கள் அந்த மார்க்கத்தில் பிறந்ததற்கு தங்களை நொந்து கொள்ள வேண்டிய துரதிஷ்டநிலை அது!

சத்தியவானில் இருளாய் கப்பியிருக்கின்றன அசத்திய கருமேகங்கள்! புயலென சீறி இவற்றை விரட்டியடிக்க வேண்டும். இந்தத் துடிப்பு முஸ்லிம் சமுதாயத்துக்கு முதலில் தேவை. 

  • இழந்துபோன ஆளுமைப் பண்பிலான அசல் முகங்களை முஸ்லிம்கள் திரும்பப் பெற வேண்டும்.
  • மனிதகுல நன்மைக்காக ஒன்று திரண்டு பாடுபட வேண்டும்.
  • இதற்காக ஒடுக்கப்பட்ட.. பிற்படுத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை ஓரணியில் திரட்டி அழைப்புப் பணியை முடுக்கிவிட வேண்டும்.
உண்மையில் இன்று மனிதகுலத்துக்கு மிக மிக அத்யாவசியமான தேவை ஒரு சீரிய வழிகாட்டுதல். அது இஸ்லாத்தால் மட்டுமே முடியும்.

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html

6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html

8. அந்த நாள் வரும்முன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/8.html

9. அழைப்பாளர்களின் இலக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/08/9_22.html

Share:

Saturday, August 22, 2015

வைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்

 
இந்த சந்தர்பத்தில் ஒரு முக்கிய மனுஷியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் நண்பர்களே!

தனது இளம் வயதிலேயே கணவன் இறந்துபோனதால், கைக்குழந்தையுடன் வயல்காட்டில் ஒரு கூலியாளாக, பண்ணையார் வீடுகளின் வேலைக்காரியாக தனது முழு வாழ்க்கையையும் உழைப்பாலேயே கழித்தவள். கடைசிவரை ரோஷக்காரியாகவே வாழ்ந்து சென்றவள். எனது அப்பாவின் அம்மா. எனது அன்புக்குரிய பாட்டிதான் அவள்!

கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும்போது, தனது இதமான ஸ்பரிசத்தால் என் தலைமுடியை கோதிவிட்டு என்னை தன்னுள் உள்வாங்கி நேசித்த ஜீவன்!

எங்கள் குடும்பம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டை மாநிலம் ஆந்திரத்திலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு புலம்பெயர்ந்த குடும்பம். (இது சம்பந்தமான இன்னும் விவரங்களுக்கு காண வேண்டிய இணைப்பு: http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E0…/article6644499.ece)

என் தாயுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அப்படி புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

ஆனால், அந்த சூழலிலும் தனது மகனுடன் (என் தந்தையார்) வர மறுத்துவிட்டார் எனது பாட்டி. தனது சொந்த வீட்டில், தனக்கிருந்த 2-3 ஏக்கர் நிலத்தில் அவர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் அமைத்திருந்தார்.

எனது இருள்சூழ்ந்த இளமையின் வறுமைக்காலங்களில், நான் கல்வி கற்க உதவிகள் செய்தவர்.

எனது வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை நான் எழுத்துக்களால் பல்வேறு இதழ்களில் பதிவு செய்துள்ளேன். அவற்றின் ஒரு பதிவுதான் ‘வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்’

மணிச்சுடர் நாளேட்டில், ‘இளங்கதிர்’ என்னும் புனைப்பெயரில் 24.11.1988-ல், எனது பாட்டியின் நினைவாக எழுதிய சிறுதை இது.

எழுத்துக்கள் கதை வடிவில் இருந்தாலும் நிகழ்வுகள் அனைத்தும் 100 விழுக்காடு உண்மைகள். இதோ படியுங்கள்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

‘வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்’

“ஏங்க..! நாளைக்கு பாட்டி ஊருக்கு கிளம்பறாங்களாம்..!” - இரவு உணவை பறிமாறிக் கொண்டே மனைவி சொன்னாள்.

“… நீங்க முன்னமாதிரியில்லையாம்..! ரொம்ப மாறிட்டீங்களாம். ஊர்லேயிருந்து வந்ததிலேயிருந்து சரியாககூட பேசலியாம். பாட்டி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!”

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிவர நேரமாகிவிட்டதால்… அந்த சாப்பாட்டு வேளையிலும் எனது உடல் அசதியால் ஓய்வை கேட்டது. பத்திரிகை நிருபர் தொழிலிலிருந்த சிரமங்களுக்காக எரிச்சல் மேலிட்டது.
 
 
“பாவம்..! வயசானவங்க. நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.. அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கூடாதா?” – எனது மனைவி தனது பேச்சை முடிக்கும் முன், போன் கிணு கிணுக்த்தது.

போனை எடுத்தவள், “பத்திரிகை ஆபீஸிலிருந்து!” – என்றாள்.

அவசரமாக எழுந்து ஓடினேன். பேசி முடித்து மனைவியைப் பார்த்தபோது, அதன் பொருள் அவளுக்கு விளங்கிவிட்டது. புலனாய்வு செய்திக்கான அடுத்த மாவட்டத்தை நோக்கிய என் பயண ஏற்பாடுகளை விரைந்து செய்ய ஆரம்பித்தாள்.

என் களைப்பு எங்கோ பறந்து விட்டிருந்தது.

உடைகளை அணிந்து தயாராவதற்கும், தொங்கு பையையும், காமிராவையும் மனைவி என்னிடம் தருவதற்கும் சரியாக இருந்தது. ஆசிரியர் கொடுத்த பணிக்கான குறிப்புகளையும் எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன். வேறு யாரும் நுழைவதற்குள் முதல் தரமான செய்திகளை திரட்டி என் பத்திரிகைக்கு உடன் தர வேண்டும் என மனம் துடித்தது.

இதோ..! பாட்டி புறப்பட்டுவிட்டாள்.

என்னுடன் தங்க சொன்னாலும், அவள் வழக்கம் போல, “இல்லே தம்பி! நான் பிறந்து வளர்ந்த கிராமம் தர்ற மன நிம்மதியை இந்த நகரம் எனக்கு தராது. என் காலம் முடியப்போவுது. நம்ம குடும்ப பெரியவங்க நடமாடிய அந்த மண்ணிலேயே என் கடைசி காலத்தையும் தள்ளிடறேம்பா..!” – என்றுதான் சொல்வாள்.

சுருக்கம் விழுந்த முகத்தில், கருணை சொரியும் கண்களுடன் பாட்டி, இன்னும் சில நிமிடங்களில் புறப்படத் தயாராக இருந்த ரயில் வண்டிக்கு வெளியே நின்றிருந்தாள். என் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் அவள் அறிவுரைச் சொல்லிக் கொண்டிருந்தாள். இடை இடையே அவளது கண்களிலிருந்து திரண்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டு கொண்டிருந்தது.

“உன் புருஷனை நல்லா கவனிச்சுகோம்மா. காலையிலே கிளம்பறவன் ஓய்வில்லாமல் சுத்திகிட்டிருக்கான். பாவம்..! வாரந்தோறும் தவறாமல் அவனுக்கு எண்ணெய் தேய்ச்சுவிட்டு, நான் கிராமத்திலிருந்து கொண்டு வந்தேனே பச்சிலைப் பொடி.. அதாலே குளிப்பாட்டு. அது நல்லா குளிர்ச்சியானது. உடம்புக்கு நல்லது.

ம்.. அவனுக்குப் பிடிச்ச கத்திரிக்கா வத்தல், புளியம் தளிர் பொடி எல்லாத்தையும் காய்ந்த பாட்டில்லே போட்டு வச்சுக்க.

புள்ளைங்க பத்திரம்! காஸ் அடுப்பு சமைக்கும்போது, பார்த்து….”

பாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

பாட்டி.
 
 
என் முன்னேற்றங்களில் ஏணியாக இருந்தவள். எனது தந்தையின் குழந்தைப் பருவத்திலேயே கணவனை பறிகொடுத்தவள். கூடவே தன் வசந்தங்களையும், மூட்டைக்கட்டிவிட்டு துணிச்சலுடன் வாழ்க்கையில் போராடியவள்.

இருந்த ஒரே சொத்தான பூர்வீக வீட்டில், தனியாக வாழ்ந்து கொண்டு பகல், இரவு பாராமல் சேறும், சகதியுமான வயல்களில் நாற்று நட்டு, வேர்க்கடலை, மிளகாய் அறுவடைகளில் வேர்வைக் கொட்டி, என் தந்தையை வளர்த்து ஆளாக்கியவள்.

ஆனால், பாட்டியின் இளமையைப் பறித்துக் கொண்டு என் தந்தை ஊதாரியாகவே வளர்ந்தார். நான் பிறந்தபோதும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

வேலை நிமித்தமாக கிராமத்திலிருந்து நகரம் வந்தவருக்கு சொகுசான அதன் வாழ்க்கை பழகிப் போனது. அதனால், கிராமத்தின் பக்கம் தலைவைத்து படுக்கவும் மறந்து போனார்.

தனி மரமாக நின்ற பாட்டி இப்போது, என்னுடைய கல்விக்காகவும், முன்னேற்றத்துக்காவும் தனது முதுமையை தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தாள். வெள்ளை நரைகள் தலை முழுவதும் பரவி பாட்டியின் உடலெங்கும் சுருக்கம் விழுந்தபோது, நான் வாழ்க்கையின் இக்கட்டுகளிலிருந்து விடுபட்டிருந்தேன்.

அந்த நாட்களில்,

பள்ளி விடுமுறைகளில் என் முழு நேரமும் பாட்டியுடன்தான் கழியும். நெல் மணம் சொரியும் வயல் வரப்புகளில்… ஆட்டு மந்தைகளில் காலம் விரையும்.

உயரமான ஆலமரத்து இலைகளைப் பறித்து, காய வைத்த பாட்டி சாப்பாட்டு இலைகளைத் தைப்பாள். அவற்றை விற்று, சில்லறைக் காசுகளை பானைக்குள்ளிருக்கும் டப்பாவில் போட்டு சேர்த்து வைப்பாள்.

விடுமுறை முடிந்து திரும்பவும் நான் கிளம்ப தயாராகும்போது, எனக்கு தேவையான துணிமணிகளுக்கும், புத்தக செலவுகளுக்கும் அந்த சில்லறையை மூட்டைக்கட்டிக் கொடுப்பாள்.

என்னுடைய இன்றைய வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்ற படியிலும் பாட்டியின் கடந்தகால உழைப்புகள் பிரிக்க முடியாதவாறு பின்னி பிணைந்திருந்தன.

பாட்டியின் கதகதப்பான அணைப்பில், காய்ப்பேறிய அவள் கைவிரல்கள் தலைமுடியை கோதிவிட அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே கண்ணயர்வது ஒரு சுகமான அனுபவம். வாரந்தோறும் அவள் போடும் கடிதங்களில் தன் இயத்தையே பிழிந்து வைத்திருப்பாள்.

படித்து, வளர்ந்து பத்திரிகையில் நிருபரானபோது, அவளை என்னுடன் அழைத்துக் கொள்ள நான் செய்த பிரயத்தனங்கள் வீண் விரயங்களாகின.

மனிதன் வாழ்க்கையில், உயர.. உயர.. எந்திரத்தனமாக அவன் மாறிவிடுவான் என்பது என்னைப் பொருத்தவரை நிஜமாகியது.

எந்த நேரத்தில் எனது பயணம் என்பது யாருக்கும் தெரியாது. எனது மனதுக்கு பிடித்தமான பத்திரிகை தொழில் அது. நானே வலிய தேடிக் கொண்டது.

சமயங்களில் பல நாட்கள் வெளியூர்களில் அலைய வேண்டியிருக்கும். திரட்டிய அத்தனை தகவல்களையும், சரிபார்த்து அச்சேற்றி வாசகர்கள் முன் வைக்கும்போது பட்ட கஷ்டங்கள் அத்தனையும் பனி போல மறைந்துவிடும். ஒரு ஆத்ம திருப்தி மனமெல்லாம் நிறைந்துவிடும்.

ஆரம்பத்தில், என்னுடைய தொழில் என் மனைவியைப் பாதித்தாலும், குழந்தைகள் பிறந்த பின் அவள் பழகிவிட்டாள்.

ஆனால், கிராமவாசியான பாட்டியோ என் தொழிலுடன் சிறிதும் உடன்படவில்லை.
 
 
இரயில் வண்டி புறப்பட, சிவப்பிலிருந்து சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறிய போது, பாட்டி என்னிடம் வந்தாள்.

தளர்ந்த நடை. வெள்ளி நிறத்தில் தலைமுடிகள். சுருக்கம் விழுந்த முகத்தில் பாட்டிக்கே உரிய அபரிதமான புன்னகை.

நான் அவளை ஏறிட்டு நேருக்கு நேர் ஒரே ஒரு கணம்தான் பார்க்க முடிந்தது.

அதன்பின் நான் சிறுவனாகிவிட்டேன். பாட்டியின் தோளில் உடைந்து குலுங்கிக் கொண்டிருந்தேன்.

“மடத் தம்பி.. மடத் தம்பி..! இவ்வளவு வயசானாலும் இன்னும் பழைய சின்ன பயலாட்டம் இருக்கிறாயே..! ச்சீ.. ச்சீ கண்ணைத் துடை..! அழாதே கண்ணா..! நான் வந்ததிலிருந்து கவனிச்சுகிட்டுதானிருக்கேன். சாப்பிடக் கூட உனக்கு எங்கே நேரம் கிடைக்குது? தம்பி… அழாதே..! மனைவி, புள்ளைங்களை பத்திரமா பார்த்துக்கோ..” – என் தலைமுடிகளை கோதி விட்டுக் கொண்டிருந்த பாட்டியின் கண்களிலும் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

வண்டி புறப்பட விசில் ஊதியாகிவிட்டது.

பாட்டியை வேகமாக அழைத்துச் சென்று பெட்டியில் அமர வைத்தேன்.

வண்டி புறப்பட்டது.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாட்டி கைகளை அசைத்தாள்.

வண்டி தொலைவில் புள்ளியாய் சென்று மறைந்தது.

கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்தவாறு மனைவியைப் பார்த்தேன்.

“நான் மாறிவிட்டேனாமே!”

என் மனைவி என்னை இப்போது நன்றாக புரிந்து கொண்டவளாக புன்னகைத்தாள்.

பாசங்கள் நெஞ்சுக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பது வெளியில் யாருக்குத் தெரியும்?

(மணிச்சுடர் நாளேடு, 24.11.1988)

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பாட்டியின் பாதிப்பாய் மணிச்சுடர் நாளேட்டில் இளங்கதிர் என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய சிறுகதை முடிந்தது.

பாட்டியின் கடைசி காலத்தில், அவள் நினைவில்லாமல் செயலிழந்து கிடந்தபோது, என் மனைவியோடு ஆந்திரத்தின் அந்த குக்கிராமத்துக்கு சென்றேன். இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செம்மண் ரோடுகளோடு, குண்டும், குழியுமாய், மினுக்.. மினுக் என்று என்று எரியும் மின் விளக்குகளோடுதான் அந்த கிராமம் இன்னும் இருந்தது. எந்த அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் புதிதாய் இல்லை.

பாட்டி கட்டிலில் அலங்கோலமாகக் கிடந்தாள். என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவளின் கண்களில் ஒரே ஒரு கணம் பிரகாசம் மின்னியது. அதன் பின் அவளது சுய நினைவு தப்பிவிட்டது.
 
 
பிறந்த இடத்திலேயே தனது ஜீவன் பிரிய வேண்டும் என்ற எனது பாட்டியின் ஆசையை நான் நிறைவேற்ற முடியவில்லை. கிராமத்திலிருந்து பெரும் பகுதி எனது தோளில் சுமந்தவாறு நினைவில்லாமல் கிடந்த அவளை சென்னைக்கு கொண்டு வந்தேன். சிறிது நாளில், எனது இல்லத்திலேயே அவளது ஆத்மாவும் பிரிந்தது.

அன்பான அந்த நல்லாத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது.

மண்ணறை தரிசிப்பின் போது, அவளை காணவும், அவளது பக்கத்திலேயே நீண்ட நித்திரையில் லயிக்கவும் வசதியாக நான் பிறந்த எண்ணூர் பகுதி பள்ளிவாசல் மையவாடியிலேயே பாட்டியை நல்லடக்கம் செய்தேன்.

ஒருவேளை இறைவன் அவளது ஆத்மாவுக்கு திரை மறைவான (ஆலமே பர்ஸக்) வாழ்விலிருந்து அனுமதி கொடுத்தால் அவள் என் வீட்டையே சுற்றிக் கொண்டிருப்பாள் இந்நேரம்.

கருணையுள்ள இறைவன், உழைப்பாலும், உறவுகளாலும் வாழ்க்கையை கட்டியமைத்த எனது பாட்டியின் பிழைகளைப் பொருப்பானாக! கம்பீரமாய் வலம் வந்த அந்த பெரிய மனுஷிக்கு அளப்பரிய தனது தயாள குணத்தால் இறைவன், சுவனங்களில் உயர்ந்த இடங்களைத் தந்தருள்வானாக! (ஆமீன்)

இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive