இறைவன்தான் உலகங்களின் அதிபதி. உரிமையாளன். படைப்பாளன். சட்டங்களைத் தரவல்லவன். இறைமறை திருக்குர்ஆன் தொடக்கத்திலேயே இதை தெளிவுபடுத்திவிடுகிறது.
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்" - 'சகல லோகங்களையும் படைத்து, பரிபாலிக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும்!' (திருக்குர்ஆன் - 1:1)
"கூறுவீராக! மக்களின் அதிபதியிடம், மக்களின் மன்னனிடம், மக்களின் உண்மையான இறைவனிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்!" (திருக்குர்ஆன் - 114:8)
இறைவனிடமிருந்து மனித குலத்துக்கு வழிகாட்ட வந்த வேதங்களில் இறுதியானது திருக்குர்ஆன். அது வழங்கும் செய்தியும் பொதுவானது.
"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. அது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்கு வழிகாட்டக்கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கிறது" (திருக்குர்ஆன் - 10:57)
"மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், மேலும், நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் - அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது" (திருக்குர்அன் - 2:185)
மனித இனத்துக்கு நேர் வழி போதிப்பதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தூதர்களை இறைவன் அனுப்பினான். அந்த வரிசையில் இறுதியாக வந்தவர்களே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆவார்கள்.
"மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம்" (திருக்குர்ஆன் - 34:28)
இயல்பாகவே, முஸ்லிம் சமுதாயம் இறைநெறி அடிப்படையிலான வாழ்வியல் கருத்தோட்டத்தின் பக்கம் மனித இனத்தை அழைக்கும் பொறுப்பு கொண்டிருக்கிறது.
ஒரே இறைவன் என்ற குடையின் கீழ் மனித இனத்தைத் திரட்ட பணிக்கப்பட்டுள்ளது.
நீதிக்கும், நேர்மைக்கும், வாய்மைக்கும், சீரிய வாழ்க்கை அமைப்புக்கும் உலக மக்களுக்கு சான்று பகர வேண்டிய பெரும் பொறுப்பும் கொண்டது. நீதி, நேர்மை, நடுநிலைமை ஆகியவற்றை நிலையாக கடைப்பிடிக்கும் குணாம்சம் பெற வேண்டியது. அனைவரிடமும் ஒரே விதமான சத்தியமான.. வாய்மையான நடத்தையை மேற்கொள்ளும் பண்பு கொண்டது. எவரிடமும்.. அசத்தியமான.. தவறான போக்கை அறவே மேற்கொள்ளாதது.
இத்தகைய பண்புகள் கொண்ட மிக உயர்ந்த, உலக சமுதாயங்களுக்குத் தலைமை அந்தஸ்து வகிக்கக்கூடிய லட்சிய சமுதாயமே முஸ்லிம் சமுதாயம்.
"மேலும், இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக" (திருக்குர்ஆன் - 2:48)
"இறைவன் உங்களுக்கு முஸ்லிம்கள் என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான். இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு இதே பெயர்தான்) தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!" (திருக்குர்ஆன் - 22:78)
-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html
2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html
3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html
4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html
0 comments:
Post a Comment