NewsBlog

Saturday, August 22, 2015

வைகறை நினைவுகள்: 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்

 
இந்த சந்தர்பத்தில் ஒரு முக்கிய மனுஷியை நான் உங்களுக்கு அறிமுகம் செய்வதுதான் பொருத்தமாக இருக்கும் நண்பர்களே!

தனது இளம் வயதிலேயே கணவன் இறந்துபோனதால், கைக்குழந்தையுடன் வயல்காட்டில் ஒரு கூலியாளாக, பண்ணையார் வீடுகளின் வேலைக்காரியாக தனது முழு வாழ்க்கையையும் உழைப்பாலேயே கழித்தவள். கடைசிவரை ரோஷக்காரியாகவே வாழ்ந்து சென்றவள். எனது அப்பாவின் அம்மா. எனது அன்புக்குரிய பாட்டிதான் அவள்!

கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும்போது, தனது இதமான ஸ்பரிசத்தால் என் தலைமுடியை கோதிவிட்டு என்னை தன்னுள் உள்வாங்கி நேசித்த ஜீவன்!

எங்கள் குடும்பம் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டை மாநிலம் ஆந்திரத்திலிருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு புலம்பெயர்ந்த குடும்பம். (இது சம்பந்தமான இன்னும் விவரங்களுக்கு காண வேண்டிய இணைப்பு: http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E0…/article6644499.ece)

என் தாயுடன் பிறந்த சகோதர, சகோதரிகள் அப்படி புலம்பெயர்ந்து வந்தவர்கள்.

ஆனால், அந்த சூழலிலும் தனது மகனுடன் (என் தந்தையார்) வர மறுத்துவிட்டார் எனது பாட்டி. தனது சொந்த வீட்டில், தனக்கிருந்த 2-3 ஏக்கர் நிலத்தில் அவர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யம் அமைத்திருந்தார்.

எனது இருள்சூழ்ந்த இளமையின் வறுமைக்காலங்களில், நான் கல்வி கற்க உதவிகள் செய்தவர்.

எனது வாழ்வின் பெரும்பாலான நிகழ்வுகளை நான் எழுத்துக்களால் பல்வேறு இதழ்களில் பதிவு செய்துள்ளேன். அவற்றின் ஒரு பதிவுதான் ‘வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்’

மணிச்சுடர் நாளேட்டில், ‘இளங்கதிர்’ என்னும் புனைப்பெயரில் 24.11.1988-ல், எனது பாட்டியின் நினைவாக எழுதிய சிறுதை இது.

எழுத்துக்கள் கதை வடிவில் இருந்தாலும் நிகழ்வுகள் அனைத்தும் 100 விழுக்காடு உண்மைகள். இதோ படியுங்கள்.

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

‘வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்’

“ஏங்க..! நாளைக்கு பாட்டி ஊருக்கு கிளம்பறாங்களாம்..!” - இரவு உணவை பறிமாறிக் கொண்டே மனைவி சொன்னாள்.

“… நீங்க முன்னமாதிரியில்லையாம்..! ரொம்ப மாறிட்டீங்களாம். ஊர்லேயிருந்து வந்ததிலேயிருந்து சரியாககூட பேசலியாம். பாட்டி எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க!”

முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரின் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிவர நேரமாகிவிட்டதால்… அந்த சாப்பாட்டு வேளையிலும் எனது உடல் அசதியால் ஓய்வை கேட்டது. பத்திரிகை நிருபர் தொழிலிலிருந்த சிரமங்களுக்காக எரிச்சல் மேலிட்டது.
 
 
“பாவம்..! வயசானவங்க. நாளைக்கு ஊருக்கு கிளம்பணும்னு சொல்லிக்கிட்டிருக்காங்க.. அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கூடாதா?” – எனது மனைவி தனது பேச்சை முடிக்கும் முன், போன் கிணு கிணுக்த்தது.

போனை எடுத்தவள், “பத்திரிகை ஆபீஸிலிருந்து!” – என்றாள்.

அவசரமாக எழுந்து ஓடினேன். பேசி முடித்து மனைவியைப் பார்த்தபோது, அதன் பொருள் அவளுக்கு விளங்கிவிட்டது. புலனாய்வு செய்திக்கான அடுத்த மாவட்டத்தை நோக்கிய என் பயண ஏற்பாடுகளை விரைந்து செய்ய ஆரம்பித்தாள்.

என் களைப்பு எங்கோ பறந்து விட்டிருந்தது.

உடைகளை அணிந்து தயாராவதற்கும், தொங்கு பையையும், காமிராவையும் மனைவி என்னிடம் தருவதற்கும் சரியாக இருந்தது. ஆசிரியர் கொடுத்த பணிக்கான குறிப்புகளையும் எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன். வேறு யாரும் நுழைவதற்குள் முதல் தரமான செய்திகளை திரட்டி என் பத்திரிகைக்கு உடன் தர வேண்டும் என மனம் துடித்தது.

இதோ..! பாட்டி புறப்பட்டுவிட்டாள்.

என்னுடன் தங்க சொன்னாலும், அவள் வழக்கம் போல, “இல்லே தம்பி! நான் பிறந்து வளர்ந்த கிராமம் தர்ற மன நிம்மதியை இந்த நகரம் எனக்கு தராது. என் காலம் முடியப்போவுது. நம்ம குடும்ப பெரியவங்க நடமாடிய அந்த மண்ணிலேயே என் கடைசி காலத்தையும் தள்ளிடறேம்பா..!” – என்றுதான் சொல்வாள்.

சுருக்கம் விழுந்த முகத்தில், கருணை சொரியும் கண்களுடன் பாட்டி, இன்னும் சில நிமிடங்களில் புறப்படத் தயாராக இருந்த ரயில் வண்டிக்கு வெளியே நின்றிருந்தாள். என் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் அவள் அறிவுரைச் சொல்லிக் கொண்டிருந்தாள். இடை இடையே அவளது கண்களிலிருந்து திரண்ட கண்ணீர் கன்னங்களில் உருண்டு கொண்டிருந்தது.

“உன் புருஷனை நல்லா கவனிச்சுகோம்மா. காலையிலே கிளம்பறவன் ஓய்வில்லாமல் சுத்திகிட்டிருக்கான். பாவம்..! வாரந்தோறும் தவறாமல் அவனுக்கு எண்ணெய் தேய்ச்சுவிட்டு, நான் கிராமத்திலிருந்து கொண்டு வந்தேனே பச்சிலைப் பொடி.. அதாலே குளிப்பாட்டு. அது நல்லா குளிர்ச்சியானது. உடம்புக்கு நல்லது.

ம்.. அவனுக்குப் பிடிச்ச கத்திரிக்கா வத்தல், புளியம் தளிர் பொடி எல்லாத்தையும் காய்ந்த பாட்டில்லே போட்டு வச்சுக்க.

புள்ளைங்க பத்திரம்! காஸ் அடுப்பு சமைக்கும்போது, பார்த்து….”

பாட்டியின் ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

பாட்டி.
 
 
என் முன்னேற்றங்களில் ஏணியாக இருந்தவள். எனது தந்தையின் குழந்தைப் பருவத்திலேயே கணவனை பறிகொடுத்தவள். கூடவே தன் வசந்தங்களையும், மூட்டைக்கட்டிவிட்டு துணிச்சலுடன் வாழ்க்கையில் போராடியவள்.

இருந்த ஒரே சொத்தான பூர்வீக வீட்டில், தனியாக வாழ்ந்து கொண்டு பகல், இரவு பாராமல் சேறும், சகதியுமான வயல்களில் நாற்று நட்டு, வேர்க்கடலை, மிளகாய் அறுவடைகளில் வேர்வைக் கொட்டி, என் தந்தையை வளர்த்து ஆளாக்கியவள்.

ஆனால், பாட்டியின் இளமையைப் பறித்துக் கொண்டு என் தந்தை ஊதாரியாகவே வளர்ந்தார். நான் பிறந்தபோதும், அவர் தன்னை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

வேலை நிமித்தமாக கிராமத்திலிருந்து நகரம் வந்தவருக்கு சொகுசான அதன் வாழ்க்கை பழகிப் போனது. அதனால், கிராமத்தின் பக்கம் தலைவைத்து படுக்கவும் மறந்து போனார்.

தனி மரமாக நின்ற பாட்டி இப்போது, என்னுடைய கல்விக்காகவும், முன்னேற்றத்துக்காவும் தனது முதுமையை தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தாள். வெள்ளை நரைகள் தலை முழுவதும் பரவி பாட்டியின் உடலெங்கும் சுருக்கம் விழுந்தபோது, நான் வாழ்க்கையின் இக்கட்டுகளிலிருந்து விடுபட்டிருந்தேன்.

அந்த நாட்களில்,

பள்ளி விடுமுறைகளில் என் முழு நேரமும் பாட்டியுடன்தான் கழியும். நெல் மணம் சொரியும் வயல் வரப்புகளில்… ஆட்டு மந்தைகளில் காலம் விரையும்.

உயரமான ஆலமரத்து இலைகளைப் பறித்து, காய வைத்த பாட்டி சாப்பாட்டு இலைகளைத் தைப்பாள். அவற்றை விற்று, சில்லறைக் காசுகளை பானைக்குள்ளிருக்கும் டப்பாவில் போட்டு சேர்த்து வைப்பாள்.

விடுமுறை முடிந்து திரும்பவும் நான் கிளம்ப தயாராகும்போது, எனக்கு தேவையான துணிமணிகளுக்கும், புத்தக செலவுகளுக்கும் அந்த சில்லறையை மூட்டைக்கட்டிக் கொடுப்பாள்.

என்னுடைய இன்றைய வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்ற படியிலும் பாட்டியின் கடந்தகால உழைப்புகள் பிரிக்க முடியாதவாறு பின்னி பிணைந்திருந்தன.

பாட்டியின் கதகதப்பான அணைப்பில், காய்ப்பேறிய அவள் கைவிரல்கள் தலைமுடியை கோதிவிட அவள் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டே கண்ணயர்வது ஒரு சுகமான அனுபவம். வாரந்தோறும் அவள் போடும் கடிதங்களில் தன் இயத்தையே பிழிந்து வைத்திருப்பாள்.

படித்து, வளர்ந்து பத்திரிகையில் நிருபரானபோது, அவளை என்னுடன் அழைத்துக் கொள்ள நான் செய்த பிரயத்தனங்கள் வீண் விரயங்களாகின.

மனிதன் வாழ்க்கையில், உயர.. உயர.. எந்திரத்தனமாக அவன் மாறிவிடுவான் என்பது என்னைப் பொருத்தவரை நிஜமாகியது.

எந்த நேரத்தில் எனது பயணம் என்பது யாருக்கும் தெரியாது. எனது மனதுக்கு பிடித்தமான பத்திரிகை தொழில் அது. நானே வலிய தேடிக் கொண்டது.

சமயங்களில் பல நாட்கள் வெளியூர்களில் அலைய வேண்டியிருக்கும். திரட்டிய அத்தனை தகவல்களையும், சரிபார்த்து அச்சேற்றி வாசகர்கள் முன் வைக்கும்போது பட்ட கஷ்டங்கள் அத்தனையும் பனி போல மறைந்துவிடும். ஒரு ஆத்ம திருப்தி மனமெல்லாம் நிறைந்துவிடும்.

ஆரம்பத்தில், என்னுடைய தொழில் என் மனைவியைப் பாதித்தாலும், குழந்தைகள் பிறந்த பின் அவள் பழகிவிட்டாள்.

ஆனால், கிராமவாசியான பாட்டியோ என் தொழிலுடன் சிறிதும் உடன்படவில்லை.
 
 
இரயில் வண்டி புறப்பட, சிவப்பிலிருந்து சிக்னல் பச்சை நிறத்திற்கு மாறிய போது, பாட்டி என்னிடம் வந்தாள்.

தளர்ந்த நடை. வெள்ளி நிறத்தில் தலைமுடிகள். சுருக்கம் விழுந்த முகத்தில் பாட்டிக்கே உரிய அபரிதமான புன்னகை.

நான் அவளை ஏறிட்டு நேருக்கு நேர் ஒரே ஒரு கணம்தான் பார்க்க முடிந்தது.

அதன்பின் நான் சிறுவனாகிவிட்டேன். பாட்டியின் தோளில் உடைந்து குலுங்கிக் கொண்டிருந்தேன்.

“மடத் தம்பி.. மடத் தம்பி..! இவ்வளவு வயசானாலும் இன்னும் பழைய சின்ன பயலாட்டம் இருக்கிறாயே..! ச்சீ.. ச்சீ கண்ணைத் துடை..! அழாதே கண்ணா..! நான் வந்ததிலிருந்து கவனிச்சுகிட்டுதானிருக்கேன். சாப்பிடக் கூட உனக்கு எங்கே நேரம் கிடைக்குது? தம்பி… அழாதே..! மனைவி, புள்ளைங்களை பத்திரமா பார்த்துக்கோ..” – என் தலைமுடிகளை கோதி விட்டுக் கொண்டிருந்த பாட்டியின் கண்களிலும் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

வண்டி புறப்பட விசில் ஊதியாகிவிட்டது.

பாட்டியை வேகமாக அழைத்துச் சென்று பெட்டியில் அமர வைத்தேன்.

வண்டி புறப்பட்டது.

ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாட்டி கைகளை அசைத்தாள்.

வண்டி தொலைவில் புள்ளியாய் சென்று மறைந்தது.

கைக்குட்டையை எடுத்து முகத்தை துடைத்தவாறு மனைவியைப் பார்த்தேன்.

“நான் மாறிவிட்டேனாமே!”

என் மனைவி என்னை இப்போது நன்றாக புரிந்து கொண்டவளாக புன்னகைத்தாள்.

பாசங்கள் நெஞ்சுக்குள் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பது வெளியில் யாருக்குத் தெரியும்?

(மணிச்சுடர் நாளேடு, 24.11.1988)

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பாட்டியின் பாதிப்பாய் மணிச்சுடர் நாளேட்டில் இளங்கதிர் என்னும் புனைப்பெயரில் நான் எழுதிய சிறுகதை முடிந்தது.

பாட்டியின் கடைசி காலத்தில், அவள் நினைவில்லாமல் செயலிழந்து கிடந்தபோது, என் மனைவியோடு ஆந்திரத்தின் அந்த குக்கிராமத்துக்கு சென்றேன். இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் செம்மண் ரோடுகளோடு, குண்டும், குழியுமாய், மினுக்.. மினுக் என்று என்று எரியும் மின் விளக்குகளோடுதான் அந்த கிராமம் இன்னும் இருந்தது. எந்த அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் புதிதாய் இல்லை.

பாட்டி கட்டிலில் அலங்கோலமாகக் கிடந்தாள். என்னைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவளின் கண்களில் ஒரே ஒரு கணம் பிரகாசம் மின்னியது. அதன் பின் அவளது சுய நினைவு தப்பிவிட்டது.
 
 
பிறந்த இடத்திலேயே தனது ஜீவன் பிரிய வேண்டும் என்ற எனது பாட்டியின் ஆசையை நான் நிறைவேற்ற முடியவில்லை. கிராமத்திலிருந்து பெரும் பகுதி எனது தோளில் சுமந்தவாறு நினைவில்லாமல் கிடந்த அவளை சென்னைக்கு கொண்டு வந்தேன். சிறிது நாளில், எனது இல்லத்திலேயே அவளது ஆத்மாவும் பிரிந்தது.

அன்பான அந்த நல்லாத்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று சேர்ந்தது.

மண்ணறை தரிசிப்பின் போது, அவளை காணவும், அவளது பக்கத்திலேயே நீண்ட நித்திரையில் லயிக்கவும் வசதியாக நான் பிறந்த எண்ணூர் பகுதி பள்ளிவாசல் மையவாடியிலேயே பாட்டியை நல்லடக்கம் செய்தேன்.

ஒருவேளை இறைவன் அவளது ஆத்மாவுக்கு திரை மறைவான (ஆலமே பர்ஸக்) வாழ்விலிருந்து அனுமதி கொடுத்தால் அவள் என் வீட்டையே சுற்றிக் கொண்டிருப்பாள் இந்நேரம்.

கருணையுள்ள இறைவன், உழைப்பாலும், உறவுகளாலும் வாழ்க்கையை கட்டியமைத்த எனது பாட்டியின் பிழைகளைப் பொருப்பானாக! கம்பீரமாய் வலம் வந்த அந்த பெரிய மனுஷிக்கு அளப்பரிய தனது தயாள குணத்தால் இறைவன், சுவனங்களில் உயர்ந்த இடங்களைத் தந்தருள்வானாக! (ஆமீன்)

இறைவன் நாடினால்… வைகறை நினைவுகள் தொடரும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive