NewsBlog

Monday, August 24, 2015

வைகறை நினைவுகள் 16: கதைச் சொல்லியாய் மழலைப் பிரியன்

 

இஸ்லாமிய கல்வியின் கற்றலும், வாசிப்பின் அவசியமும் எந்தளவுக்கு முக்கியம் என்றால் அது விரிந்த விசாலமான எண்ணங்களை உருவாக்குகிறது. பயத்தைப் போக்குகிறது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள செய்கிறது. தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னையும், தனது சக படைப்புகளையும், தன்னைப் படைத்தவனையும் இனம் கண்டு பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள செய்கிறது.

நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் நூல் வாசிப்பில் சிறு வயதிலிருந்தே பெரு விருப்பம் என்று! இந்த வாசிப்பு இஸ்லாமிய கொள்கையை ஒப்புக் கொண்டபின் இன்னும் அதிகரித்தது. தன்னை சமாதானப்படுத்திக் கொள்வது என்பது வேறு! நடைமுறைப் பிரச்னைகளை எதிர்கொண்டு பதில் அளிக்கும்போது பிறரை சமாதானப்படுத்துவது என்பது வேறு!

ஆக, இந்த நிலைகளில் வாசிப்பு அதி முக்கியத்துவம் பெறுகிறது.

நூல் வாசிப்பின் உள்வாங்கலில் அதிகமதிகமாக இருந்த நான் ஒருமுறை சென்னை பெரம்பூர் ‘ஐ.எஃப்.டி’-க்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது எனது மனதில் வரலாற்று நாயகர்களான அபூபக்ககர்களும், உமர்களும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். நேர்வழி சென்ற அந்த கலீஃபா பெருந்தகைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் நான் ஐ.எஃப்.டி-க்கு சென்றதும்!


அப்போது. தமிழ ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் மெளலானா இஃஜாஜ் அஸ்லம் சாஹெப். ஒரு கலீஃபாவை ஒரு பொதுஜனம் சந்திக்க சென்றிருப்பதாக ஒரு எண்ணம் என்னுள்!

வாசலில், காவலர் ஒருவர் தடுத்தார். “நீங்க.. தலைவரை சந்திக்க அனுமதி பெற்றிருக்கிறீர்களா?” – என்றார். “இல்லை!” – என்றதும் என்னை வாசலில் மறித்து நிறுத்திவிட்டார்.

புறநகர் பகுதியிலிருந்து, கிட்டதட்ட 20 கி.மீ. பயணம் செய்து எனது தலைவரை சந்திக்க சென்றால்.. முன் அனுமதி வேண்டும் என்கிறார்களே! எங்கிருந்து எடுத்தார்கள் இந்த முன்னுதாரணத்தை?

கோபம் தலைக்கேற வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக கலீஃபாக்களின் முன்னுதாரணங்களை வைத்து இரண்டு, மூன்று பக்க கடிதத்தை தயாரித்து அஞ்சலில் அனுப்பினேன். இப்போது நினைத்தாலும் அது சிறு பிள்ளைத்தனமாகவே தெரிகிறது.

முதிர்ச்சியற்ற நிலையில் நான் செய்த இத்தகைய செயல்கள் சில நல்ல உள்ளங்களையும் பாதித்திருக்கின்றன. அவர்களில் நமது பிரபல எழுத்தாளரும், எனது நண்பருமான ஹிமானா சையத்தும் ஒருவர். அவருடனான காரசாரமான ஒரு அஞ்சல் வழி யுத்தத்தில் மன சங்கடங்கள் ஆனதுதான் மிச்சம்.

அந்த செயலை நினைக்கும் போதெல்லாம் இப்போதும் என்னை வெட்கம் பிடுங்கி தின்கிறது. பாவம்! சகோதரர் ஹிமானா சைய்யத்தின் மனம் என்ன புண்பட்டிருக்குமோ என்று நெஞ்சம் பதறுகிறது. இறைவன் வாய்ப்பளித்தால், மற்றொரு நினைவுகளில் அது சம்பந்தமாக பகிர்ந்து கொள்வோம்.

இவை அறியாமையால் விளைந்தவை என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம்.

அப்படிப்பட்ட அறியாமைத்தனத்தில், ஜமாஅத் தலைவருக்கு உணர்ச்சிபூர்வமாக வரலாறுகளைச் சுட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அது அறியாமையாக இருந்தாலும் அதில் ஒரு துளி தீய நோக்கமும் இல்லை. தூய எண்ணமே மேலோங்கி இருந்தது.

கடிதம் கிடைத்த ஓரிரு நாளில், “பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப் என்னை சந்திக்க விரும்புகிறார்!” – என்று அழைப்பு வருகிறது.

அதே உணர்ச்சிபூர்வமான எண்ணங்களுடன் (என்) தலைவரை காண செல்கிறேன். அவரை உண்டு இல்லை என்று ஆக்கிட வேண்டும் என்ற ‘பதூதின் – நாட்டுப்புற அரபியின்’ மனப்போக்கு என்னிடம் மேலோங்கியிருக்கிறது.

ஐ.எஃப்.டி. வளாகத்தின் காவலர் என்னைக் கண்டதும் பெரிய சல்யூட் அடிக்கிறார். பவ்வியத்துடன் மௌலானா அஸ்லம் சாஹெப் அறைக்கு அனுப்பி வைக்கிறார்.

ஒரு சாதாரணமான 10 க்கு 10 அறை. புத்தகங்கள், மேசை, நாற்காலிகள் என்று மிகச் சாதாரணமான அறை!

பேராசிரியர் இஹ்ஜாஜ் அஸ்லம் சாஹெப்
வாணியம்பாடி, பேரணம்பேட் முஸ்லிம்கள் அணியும் குல்லா. நீண்ட ஆடைகள். கண்ணாடி வழியே உள்ளத்தை ஊடுருவும் கண்கள் என்று ஜமாஅத்தின் தலைவர் அமர்ந்திருந்தார்.

என்னைக் கண்டதும், சலாம் சொல்லிவிட்டு புன்முறுவல் பூத்தார். “என்ன இக்வான் சாப்..! என் மீது ரொம்பவும் கோபமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது!” உருது தாய் மொழியாகக் கொண்ட அவர் தமிழில் தட்டுத் தடுமாறி பேச, உருது தாய்மொழியாகக் கொண்ட நான் நல்ல உருதுவில் பேச தெரியாமல் அழகிய தமிழில் பேச, இப்படிதான் பேராசிரியர் மௌலானா அஸ்லம் சாஹெப்புடன் எனது முதல் பரிச்சயம் ஆரம்பமானது.

அஸ்லம் சாஹெப் மிகச் சிறந்த கதைச் சொல்லி. ஆங்கிலத்தில் குர்ரம் முர்ராத்தின் புத்தகங்களை வாசித்து காட்டுவார்; அங்க அசைவுகளோடு! கதாப்பாத்திரத்துக்குள் நுழைந்து நம்மையும் நுழைய வைத்துவிடுவார்.


சிறந்த கதைச் சொல்லியான அவரிடமிருந்துதான் ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு கதைச் சொல்ல நான் கற்றுக் கொண்டேன். மழலைப் பிரியன் ஆனேன்.

அதன் பின் எண்ணூர், தாங்கல், காலாடிப்பேட்டை, செரியன் நகர் என்று குழந்தைகள் எங்கெல்லாம் கூடுவார்களோ அங்கெல்லாம் எந்தவிதமான கூச்ச நாச்சமில்லாமல் அங்க அசைவுகளோடு கதை சொல்லி அவர்களோடு பாடி, ஆட ஆரம்பித்தது இப்படிதான்.

இறைவன் நாடினால்… அடுத்த நினைவுகளில் உங்களோடு இந்த மழலைப் பிரியன் கதைச் சொல்லியாக ஒரு கதையுடன்

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html

வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html

வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html

வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html

வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html

வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html

வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html

வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html

வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html

வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html

வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html

வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html

வைகறை நினைவுகள் 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html

வைகறை நினைவுகள் 15, வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive