NewsBlog

Wednesday, August 19, 2015

அழைப்பது நம் கடமை - 8: அந்த நாள் வரும்முன்..!



அந்த நாள்!

சூரியன் சுருட்டப்பட்டு...

தாரகைகள் உதிர்ந்து..

மலைகள் நடத்திச் செல்லப்படும் அந்த நாள்!!

நிறைமாத கர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விடப்பட்டு...

வனவிலங்குகள் ஒன்று திரட்டப்படும் அந்த நாள்!

உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம், அவள் எந்தக் குற்றத்துக்காக கொல்லப்பட்டாள்? - என்று கேட்கப்படும் அந்த நாள்!

வினைச்சுவடிகள் விரிக்கப்பட்டு...

வானத்திரை அகற்றப்பட்டு..

நரகம் எரிக்கப்பட்டு..

சுவனம் அருகே கொண்டுவரப்படும் அந்த நாள்!!

ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டுவந்துள்ளான் என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் அந்த நாள்!

மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகப் பேசும்... கணக்கு வாங்கும் நாள்!

அங்கு பரிந்துரை செய்பவர் எவரும் இருக்க மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தன் வலப்பக்கம் பார்ப்பான்; பரிந்துரை செய்பவர்... உதவுபவர் யாராவது இருக்க மாட்டாரா என்று!

"ஊஹீம்..!" அவனுடைய செயல்களைத் தவிர வேறெதுவும் அவனுக்குத் தென்படாது.

பின்னர், இடப்பக்கம் பார்ப்பான்; அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறெதுவும் தெனபடாது!

பின்னர், முன்பக்கம் பார்வையினை செலுத்துவான். அஙகே அதற்கே உரிய பயங்கரங்கள் அனைத்தும் தெரியும்! நரகம் மட்டுமே தென்படும்!

நல்லவர்கள் இன்பத்திலும், தீயவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நரகத்திலும் கொண்டு செல்லப்பட்டு கூலி கொடுக்கப்படும் நாள்!

அந்த நாளில், எந்த மனிதனுக்காகவும் எதையும் செய்திட எவருக்கும் சக்தி இருக்காது. தீர்ப்பு வழங்குவது முற்றிலும் இறைவனின் அதிகாரத்தில் இருக்கும்.


அன்பு நபிகளார் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்: "நான் நிம்மதியான.. கவலையற்ற .. வாழ்க்கையை எப்படி வாழ முடியும்? ஸீர் என்னும் எக்காளத்தை ஊதும் பொறுப்புடைய வானவர் - இஸ்ராஃபீல் - எக்காளத்தை வாயில் வைத்துக் கொண்டு செவி சாய்த்து.. தலை தாழ்த்திய விதமாக எப்போது ஊதும்படி கட்டளைவரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது!" (திர்மிதி)

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: "இறைவனின் தூதர் நபிகளார் சில தொழுகைகளில், இறைவா! என்னிடம் இலேசான கணக்கு வாங்குவாயாக! - என்று இறைஞ்சுவதை நான் கேட்டிருக்கின்றேன். இலேசான கணக்கு என்பதன் பொருள் என்ன? - என்று நான் வினவினேன். அதற்கு அண்ணலார் பின்பவருமாறு பதிலளித்தார்கள்: இறைவன் மனிதனின் வினைச் சுவடியைப் பார்த்து அதில் பதிக்கப்பட்டிருக்கும் தீய செயல்களைப் புறக்கணித்து விடுவதே இலேசான கணக்காகும்! ஆயிஷாவே! கணக்கு வாங்கப்படும்போது, எவனுடைய ஒவ்வொரு செயலும் துருவித் துருவி ஆராயப்படுகின்றதோ அவன் அழிந்துவிட்டான் என்றுதான் பொருள்!" (முஸ்னத் அஹ்மது)

அந்த மறுமை நாளில் ஒவ்வொரு இறைத்தூதரும் இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்; அவரவர் பொறுப்புகளை நிறைவேற்றியது சம்பந்தமாக. இறைவனின் திருச்செய்தியை மக்களுக்கு சமர்பித்துவிட்டது சம்பந்தமாக மக்களிடமும் கேள்வி கேட்கப்படும். இதை திருக்குர்ஆன் இப்படி சொல்கிறது:

"எந்த மக்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ. அந்த மக்களிடம் திண்ணமாக நாம் விசாரணை நடத்துவோம். மேலும், தூதர்களிடமும், தூதுத்துவ கடமையை நிறைவேற்றியது சம்பந்தமாகவும், அதற்கு மக்கள் என்ன பதிலளித்தார்கள் என்பது குறித்தும் நிச்சயம் விசாரிப்போம்!" (7:6)


முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித் தூதர் ஆவார்கள். இஸ்லாமிய வாழ்வியலை மனித குலத்துக்காக இறைவனிடமிருந்து தாங்கி வந்தவர்கள். தங்களின் முழு வாழ்வையும் இஸ்லாத்தை மக்களுக்கு எத்தி வைப்பதிலேயே செலவு செய்தார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இறைவன் கேட்கின்றான்:

"(நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வரும்போது, இவர்களுக்கு (விரோதமான) சாட்சியாக உம்மை நாம் கொண்டு வந்தால்.. நிராகரித்த இவர்களுடைய நிலைமை எப்படியிருக்கும்? (திருக்குர்ஆன் - 4:41)"

நபிகளாரைவிட இறைவனின் திருச்செய்தியை பொறுப்புடன் மக்களிடம் சமர்பித்தவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. அத்தகையவர்கள் இறைவனின் சந்நிதியில் நிறுத்தப்படுவார்கள். கேள்வி கேட்கப்படுவார்கள் என்பது எவ்வளவு முக்கியமானது!

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (இறையருள் பொழிவதாக!) நபிகளாரின் நெருங்கியத் தோழர் ஆவார்கள். இனிமையான குரலில் திருக்குர்ஆனை ஓதுபவர்கள்.

ஒருமுறை நபிகளார் கேட்டார்கள்: "மஸ்ஊதே! திருக்குர்ஆனை ஓதுங்கள்! நான் கேட்க வேண்டும்!"

"இறைவனின் தூதரே! திருக்குர்ஆன அருளப்பட்டதே தங்கள் மீதுதானே! நான் ஓத தாங்கள் கேட்பதா?" - என்றார்கள் நபித்தோழர்.

அதற்கு நபிகளார், "ஆமாம்! நீங்கள் ஓதுங்கள் நான் கேட்க வேண்டும்!" - என்கிறர்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் திருக்குர்ஆனின் 4:41 திருவசனங்களை ஓத ஆரம்பித்தார்கள்.

நபிகளாரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. உடல் நடுக்கமெடுக்கிறது. "போதும்..! போதும்...!! ஓதியது போதும்.. மஸ்ஊதே!" பதறுகிறார்கள்.

நபித்தோழர் நபிகளாரை ஏறெடுத்துப் பார்க்கிறார்கள்.

நபிகளார் மறுமையின் அச்சத்தால் தங்களின் தாடி நனையுமளவுக்கு அழுது கொண்டிருந்தார்கள்.

நபிகளார் தங்களின் 63வயதில் இறையடி சேர்க்கிறார்கள். அன்பு நபிகளாரின் மறைவுக்குப் பிறகு நபித்துவம் என்ற முத்தாரத்தின் தொடர் முற்றுப் பெறுகிறது. இனி வேறு நபி வர முடியாது. இதில் எந்த முஸ்லிமுக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. ஆனால், இந்த முடிவில் மற்றொரு கேள்வி எழுவதை யாராலும் தடுக்க முடியாது.

நபிகளாருக்குப் பிறகு வேறொரு நபி வரமுடியாத நிலையில் இனி நபிகளாரின் திருப்பணியை யார் செய்வது? இனி இஸ்லாத்தின் திருச்செய்தியை மனித இனத்துக்கு எத்தி வைப்பது யார்?

இதற்கான எளிய பதில் இதுதான்: "அன்பு நபியை பின்பற்றுபவர்கள்தான் நபிகளார் செய்த அந்தத் திருப்பணியை செய்ய வேண்டும்!".

உண்மைதான்!

எந்த இறைச்செய்தியை நபிகளார் அல்லும்-பகலும் சுமந்தவாறு மக்களிடம் சமர்பித்து வந்தார்களோ... அந்தப் திருப்பணியை செவ்வனே நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களையே சார்கிறது. மனித இனத்துக்கு இறைநெறியாம் இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு இனி முஸ்லிம்களின் பலவீனமான தோள்களில் சுமத்தப்படுகிறது.

இறைவன் தனது திருநபியை நோக்கி மக்களிடம் இப்படி கூறும்படி சொல்கிறான்:

"இந்தக் குர்ஆன் எனக்கு வஹீ மூலம் அருளப்பட்டது. எதற்காகவெனில், உங்களையும் இன்னும் யார் யாரையெல்லாம் இது எட்டுகிறதோ அவர்களையும் நான் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக!" (6:19)

நபிகளார் இந்த உலகைவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், அவர்கள் உலக முடிவு நாள்வரை செயல்படும் வாழ்கை நெறியாம் இஸ்லாத்தின் செய்தியை விட்டுச் சென்றுள்ளார்கள். முஸ்லிம் சமுதாயம் இந்த உலகில் இருக்கும்வரை இறைத்தூதரின் திருத்தூதை சுமந்து செல்ல வேண்டிய பொறுப்பு கொண்டது. இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைக்க வேண்டியவர்கள், இறைவனின் திருச்செய்தியை மனித இனத்துக்கு சேர்க்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்.


நபிகளார் மேற்கொண்ட புனித யாத்திரை  ஹஜ்ஜதுல் விதா!

அரஃபா திடல்.

லட்சக்கணக்கான நபித்தோழர்கள், தோழியர்கள் அங்கு குழுமியிருக்கிறார்கள்.

அன்பு நபிகளார் உணர்சிகரமான ஒரு சொற்பொழிவாற்றுகிறார்கள். கேட்பவர் இதயங்களை பிழிந்தெடுக்கும் நல்லுரை அது. இந்த உலகைவிட்டு நபிகளார் பிரிவதற்கு முன் நடத்தப்பட்ட உரை அது. அதை சூசகமாகவும் நபிகளார் தெரிவிக்கிறார்கள்.

அத்தகைய ஒரு கூட்டத்திரல் தங்களின் உரையின் ஒரு பகுதியாக மக்களை நோக்கி கேட்கிறார்கள்: "மக்களே! நான் இஸ்லாத்தின் திருச் செய்தியை உங்களுக்கு எத்தி வைத்துவிட்டேனா?

"ஆம்! இறைவனின் தூதரே! தாங்கள் எடுத்துரைத்துவிட்டீர்கள்!" - மக்களும் சான்று பகர்கிறார்கள்.

இறைத்தூதர் முஹம்மது நபிகளார் (ஸல்) தங்களின் சுட்டுவிரலை வானத்தை நோக்கி சுட்டியவர்களாக மூன்று முறை, "இறைவா! இதற்கு நீயே சாட்சி..! இறைவா! இதற்கு நீயே சாட்சி..!! இறைவா! இதற்கு நீயே சாட்சி...!!!" - என்கிறார்கள்.

அதன்பிறகு நபிகளார் தமது இன்னுயிர் தோழர்-தோழியரை நோக்கி கூறுகிறார்கள்: "இங்கு வந்தோர், இங்கு வராதோர்க்கு எனது செய்தியை எத்தி வைத்துவிடுங்கள்!"

யார் யாருக்கெல்லாம் இந்த இஸ்லாத்தின் செய்தி எட்டியதோ அவர்கள் எல்லாம் அந்த செய்தியை அடுத்தவர்க்கு எத்தி வைக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள் என்பதே இதன் பொருள். இஸ்லாத்தைக் குறித்து மக்களுக்கு சான்று பகர வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சுமூகத்தின் மீது உள்ளது. இதை அவர்கள் மறந்துவி

ஏனெனில்,

கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான இறைவனின் திருச் செய்தி இஸ்லாம். இந்த வாழ்வியல் நெறியை மறைத்து வைத்ததற்கான குற்றம் செய்தவர்கள் ஆவார்கள்.

இன்றைய உலகம் வாழ வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அமைதியைத் தொலைத்துவிட்டிருக்கிறது. அத்தகைய நிலையில் மனித இனத்துக்கு நேர்வழிக் காட்ட மறுப்பவர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெற்றுவிடுவார்கள்.

இதைத்தான் இறைவன் இப்படி கேட்கின்றான்:

"இறைவனிடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதை மறைப்பவனைவிட கொடிய அக்கிரமக்காரன் யார்?" (2:140)

"நாம் இறக்கியருளிய தெளிவான அறிவுரைகளையும், வழிகாட்டுதலையும் அவற்றை மக்கள் அனைவருக்காகவும் நம் வேதத்திலர் எடுத்துரைத்த பின்னரும் எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக இறைவன் சபிக்கின்றான். மேலும், சபிப்போர் அனைவரும் அவர்களைச் சபிக்கின்றனர்" (2:159)

-- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''
அழைப்பது நம் கடமை: முந்தைய தொடர்களை வாசிக்க:
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
1. அந்தக் கடலோரக் கிராமத்தின் கதை : http://ikhwanameer.blogspot.in/2015/07/1_23.html

2. கிராமவாசியின் செயலும், நபிகளாரின் அணுகுமுறையும் : http://ikhwanameer.blogspot.in/2015/07/blog-post_49.html

3. படிப்பினை மிக்க அந்த இறைத்தூதரின் வரலாறு : http://ikhwanameer.blogspot.in/2015/08/3.html

4. அழைக்க வேண்டும் ஏன்? : http://ikhwanameer.blogspot.in/2015/08/4.html

5. சகல லோகங்களின் இறைவன் : http://ikhwanameer.blogspot.in/2015/08/5.html
 
6. சான்று வழங்குதல் என்றால் என்ன? http://ikhwanameer.blogspot.in/2015/08/6_14.html

7. கடல் பிளந்தது. நெருப்பு குளிர்ந்தது : http://ikhwanameer.blogspot.in/2015/08/13_18.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive