NewsBlog

Wednesday, August 12, 2015

வைகறை நினைவுகள் - 11, ‘நான்’ தொலைந்து போனது இங்குதான்!



ஒவ்வொரு மனிதனும் நியாயமான தன் அன்றாட தேவைகளுக்கு தனது வாழ்வில் பல லட்சங்களை சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மனிதனின் வாழ்நாள் என்பது, ஒரு 50 ஆயிரம் நாட்களையும் தாண்டுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதனின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அவன் 40 ஆயிரம் நாட்களையும் நெருங்குவதில்லை; 40 ஆயிரம் நாட்கள்கூட அவன் இந்த உலகத்தில் வாழ்வதில்லை என்பது எவ்வளவு விசித்திரம்!

ஒரு துளி நீரிலிருந்து வெளிப்பட்ட கண்ணுக்கே தெரியாத ஒரு நுண்ணுயிரிதான் மனிதனின் துவக்கம்.

அதன்பின், ரத்தக் கட்டியாகி, பரிபூரண தேவைகளுடன் அமைந்த கருவறை என்னும் ஆலையில் எலும்பு, தசை, தோல் என்று அடுக்கடுக்கு போர்வைகளுடன் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வடிவமைப்புகள் பெறுபவனே மனிதன்.

• வாழ்க்கையும் நிஜம்.

• சுக, துக்கங்களும் நிஜம்,

• வெற்றித் தோல்விகளும் நிஜம்.

• வலியும், சந்தோஷங்களும் நிஜம். அதுபோல,

• மரணமும் நிஜம்.

ஆக பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான இடைப்பட்ட காலத்தில் வாழும் நிஜமான வாழ்க்கைக்கான வழிகாட்டல் அவசியம்.

இறப்புக்கு பின்னே உள்ள நிலைமை குறித்து ஆய்வும் அதைவிட அவசியம்.

வெறும் உக்கி, மக்கி மண்ணோடு மண்ணாகி ‘மௌனத்தில்’ மனித வாழ்க்கை கரைந்து போனால் பரவாயில்லை!

ஆனால், ஒருவேளை.. ஆம்… ஒருவேளை… இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை, வாழ்ந்த வாழ்க்கையின் எதிர்வினைகளாய் அதில் நல்லது, கெட்டதுகள் என்று இருந்துவிட்டால் … என்ற தேடலின் முடிவாய் நான் தேர்ந்தெடுத்ததுதான் இஸ்லாம்.


தன்னை பகுத்தறிவாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கு எதிர்வினைகளாய் அமைந்த நம்பிக்கையின் அடித்தளங்களில்தான் வாழ்வியல் வீடமைக்கிறான்.

தன்னை இறைமறுப்பாளனாக காட்டிக் கொள்பவனும் தனக்கென்ற பொருள்முதல்வாதம் போன்ற நம்பிக்கைகளின் கட்டமைப்பில்தான் வாழ்வியலைத் தேர்வு செய்கிறான்.

சக மனிதர்களை கடவுள்களாக்கிக் கொள்கிறான். மனோ இச்சைகளை தெய்வங்களாக்கிக் கொள்கிறான். மனித படைப்புகளை மூலதனமாக வேதங்களாக்கிக் கொள்கிறான்.

இவர்கள் இருவரோ அல்லது பலரோ வேறு வேறானலும் வாழும்வரை அனுபவி என்ற ஒரே மனோநிலை கொண்டவர்கள். யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்று சொந்த மனித சமூகத்தில் அவலங்களை சிருஷ்டித்து சுகம் காண்பவர்கள்.

பகுத்தறிவு மனோநிலையில், அடுத்தவர் உரிமைகளைப் பறிக்கும் பலவான்களாக, ஏகாதிபத்தியவாதிகளாக, இரும்பு திரைக்குள் மக்களை அடக்கியாளும் சர்வாதிகாரிகளாக வரலாற்றில் இடம் பெற்றவர்கள்; இடம் பெற போகிறவர்கள்.

அதேபோலதான்,

• இறைவன் ஒருவன்! கண்ணுக்குத் தெரியாத மாபெரும் சக்தியானவன். சகலங்களின் உரிமையாளன். அதிபதி.

• அவனது சட்டங்களின் அடிப்படையில்தான் சகல லோகங்களின் இயக்கமும் நடக்கிறது.

• அதனால்தான் அமைதி நிலவுகிறது.

• மனிதனும் அந்த சட்டங்களுக்கு உட்பட்டு வாழ முன்வரவேண்டும்.

• படைப்புகள் அனைத்தும் பெரும் நோக்கத்துக்காகவே படைக்கப்பட்டவை. வீணுக்காக அல்ல.

• ஒவ்வொரு வினையும் அதற்கு இணையான எதிர்வினை கொண்டது.

• விதைப்பவைதான் முளைக்கும்.

• படைப்புகள் ஒருபோதும் இறைவனாக முடியாது!

என்று பகுதித்தறிவு ரீதியான தர்க்கத்தில் விடைகண்டு இறைநம்பிக்கையாளனாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறான்.


குரங்கிலிருந்து தோன்றியவன் என்ற மிருகவாதத்திலிருந்து விடுபட்டு மனிதனாய் மீண்டெழுகிறான். தான் இறைவனின் பிரதிநிதி என்ற அந்தஸ்தை உணருகின்றான். தன் அதிபதி அளித்த வாழ்வியல் அமைப்பை பின்பற்றி அமைதி விரும்பியாய் வாழ எத்தனிக்கின்றான். சமூகம் முழுக்க அமைதியையும். சுபிட்சத்தையும் விதைக்க முயல்கிறான். அதற்காகவே தனது வாழ்வை அர்ப்பணிக்கின்றான்.

• இறைவன் உண்டு; இல்லை என்னும் நம்பிக்கையை அடித்தளமாக கொண்ட இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்லது

• இருவேறுபட்ட பின்விளைவுகள் தரும் இவர்கள் இருவரின் சித்தாந்தம்தான் சமமாகுமா?

‘உண்டு’ என்பது நிரூபணம் இல்லை என்று மறுப்பவர்கள். ‘இல்லை’ என்ற நிரூபணமற்ற கற்பனையை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்?

இத்தகைய பல்வேறு கேள்விகள், அவற்றின் தேடல்களின் முடிவில் அடியேன் பெற்றதே இஸ்லாம். வாழ்வியல் திட்டம். இறைநெறி. படைத்தவனால், படைப்புகளுக்கு அருளப்பட்ட பிரபஞ்ச சட்டம்.

அன்பு நபிகளாரின் பாசறைக்கு திரும்பிய நான் முதல்வேளையாக அன்னார் ஹிரா மலைக்குகையிலிருந்து, மனித இனத்தின் சுபிட்சத்துக்காக கொண்டு வந்த இறைவாக்கு, திருக்குர்ஆனின் பக்கம் திரும்பினேன். இனி அதுதான் எனது வழிகாட்டும் ஒளிவிளக்கு. எனது வாழ்வின் அனைத்துத் தீர்வுகளுக்குமான மாமருந்து! என்றும் தீர்மானித்தேன்.

கலிமாவை ஒப்புக் கொண்ட பின், அதைத் தொடர்ந்து என் மீது கடமையாக்கும் இறைவழிபாடுகளில் முதன்மையான தொழுகைக்கு என்னை தயார்படுத்திக் கொள்ளும்விதமாக சிறு சிறு வசனங்களை மனனம் செய்ய ஆரம்பித்தேன். அந்த எளிய மனன முறைகளை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்.

திருக்குர்ஆனை வாசிப்பதற்காக அது அருளப்பட்ட மொழியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன்.

மிக எளிமையான மொழி அது. கொஞ்சம் கூடுதலாக நேரம் ஒதுக்கினால் ஒரு பத்து நாட்களும், நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்குபவர் ஒரு மாதத்திற்குள்ளும் திருக்குர்ஆனை ஓத ஆரம்பித்துவிடலாம்.

ஒருமுறை அன்னை தெரசாவிடம், “உங்கள் வாசிப்புகளில் முதன்மையானது எந்த நூல்?” - என்று கேட்டபோது, அந்த வெள்ளுடை அன்பு தேவதை அலட்டிக் கொள்ளாமல் சொன்ன மறுமொழி இது: “வேதகாமம் – பைபிள்!”

இத்தகைய ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டால் “திருக்குர்ஆன்!” – என்று பளிச்சென்று பதில் சொல்ல நம்மில் எத்தனைப் பேர் தயாராக இருப்போம் சொல்லுங்கள் நண்பர்களே!


இறைவேதத்தைக் கற்றுக் கொள்வதும், இறைவேதத்தை தன்னில் செயல்படுத்துவதுமாய் மௌன மொழி பேசிய நாட்கள் அவை.

ஓதுவதை தன்னுள் செயல்படுத்தும் எத்தனம்.

அதேபோல, உலக மக்களின் அருளாய் வந்த ஒப்பற்ற ஆளுமைக்குச் சொந்தக்காரரான நபிகளாரின் வாழ்வியலில் என்னை தோய்த்தெடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.

பெரிய சிரமம் தேவையில்லை.

நாள்தோறும் ஒரு நபி மொழி என்று வாசித்தாலே போதும். அந்த வாசிப்பே மன மாசுகளை சுத்தமாக்கி விடும். நபிகளாரின் ஆளுமைப் பாசறைக்குள் நம்மை அறியாமலேயே நுழையச் செய்துவிடும்.

14 நூற்றாண்டுகளைக் கடந்த நபிகளாரின் காலத்தினுள் உட்புகுவது எனகொன்றும் சிரமாக இல்லை. அந்த பூரண ஒளி பிம்பத்தை, தகதகக்கும் முழு நிலவை தரிசிக்கும் பாக்கியம் அது!

அன்பு நபிகளாரும், அன்னாரின் அருமைத் தோழர், தோழியர்களும் அலைக்கடல் ஒலியாய் ஆர்ப்பரித்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்று நிராயுதபாணியாக நின்ற நான், சராணகதி அடைவதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?

ஒரு அபூபக்கராக, ஒரு அலியாக, ஒரு சுமைய்யாவாக, ஒரு பிலாலாக, ஒரு ஹம்சாவாக, ஒரு உமராக, ஒரு உஸ்மானாக அந்த மாபெரும் ஆளுமைக்குரிய பிம்பங்கள் எழுந்து நடமாடிய அந்த காட்சிகளை என்னவென்பேன்?

சகோதர, சகோதரிகளே அது ஒரு மகத்தான அனுபவம்.

இந்த ஆளுமைகளும், அவற்றின் உள்வாங்கலும் பின்னாளில் என் சாயல்களாய் என் சுய நிறத்தை மாற்றிவிட்டன. நான் தொலைந்து போனது இங்குதான்!

நான் ஓதுபவற்றை, வாசித்தவற்றை என் வாழ்வில் நிஜமாக்கி காட்டியபோது, என் இல்லாள் வியப்பால் புருவம் உயர்த்த ஆரம்பித்தார்.

நான் மௌன மொழி பேசிய காலம் அது.

அகமும், புறமும் ஒரு சேர மாற மாற என் வாய் மொழி செய்யாததை என் மௌன மொழி சாதித்துவிட்டது.

காலம் காலமாக பின்பற்றிவந்த என் மனைவியின் நம்பிக்கைகள் அன்பு நபிகளாரின் திருக்கரங்களால், புனித கஅபாவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட இணைவைப்புகளைப் போல் மனதிலிருந்து தூக்கியெறியப்பட்டது இப்படிதான்! அவர் இறைவன் ஒருவன் என்று பிரகடனம் செய்ததும், இந்த சொல்லுக்கும், செயலுக்கும் மாற்றமில்லாத அடியொற்றிதான்! தன்னை மிகச் சிறந்த இறைஅடிமையாக அவர் இறைவனிடம் ஒப்புக் கொடுத்தது இப்படிதான்!

என் வாழ்வில் கிடைத்தற்கரிய இந்த ஒரே ஒரு செயலுக்காக இறைவன் எனது அறியாமைக் காலத்து பாவங்களையும், பிழைகளையும் மன்னித்துவிடுவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அன்பு நபிகளார் எச்சரிப்பது போல, மறுமை நாளில் எனதிறைவன் “துருவி.. துருவி விசாரிக்கும்” அவ நிலையிலிருந்து நானும் தப்பித்துவிடுவென் என்று உள்ளம் சொல்கிறது.

அன்பு நபிகளார், “சுவனத்தில் சாட்டையளவாவது இடம் தா!” – என்று யாசித்தது போல,

“இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து எங்களுக்கு சுவனத்தில் சாட்டையளவு இடமாவது தா!” என்று கேட்டு மனம் இறைஞ்சுகிறது. நீங்களும் இறைஞ்சுங்கள் சகோதர, சகோதரிகளே! நண்பர்களே!

நான் பெற்ற இந்த இறைநம்பிக்கை பேரொளியை இரும்பு குதிரைகள் (கன ரக வாகனங்கள்) உருவாக்கும் என் நிறுவனத்தில் எப்படி கொண்டு சென்றேன்?

சக இறைநம்பிக்கையாளர்களை சீரமைத்து வடிவமைக்கும் அந்தப் பணியில் எதிற்கொண்ட இன்னல்கள்தான் என்ன?

இறைவன் நாடினால், அடுத்தடுத்த வைகறை நினைவுகளில்…

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

வைகறை நினைவுகள் முந்தைய தொடர்களை வாசிக்க:
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html

வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
 
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
 
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive