NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Sunday, July 31, 2016

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 19: 'மறக்க முடியாத அந்த நாள்!'



பெரியவர்கள் நபிகளார் மீது அன்பு கொண்டிருப்பவர்கள் என்பது யதார்த்தமானது. ஆனால், சிறுவர்கள் நபிகளாரை நேசிப்பது விந்தையிலும் விந்தையானது! இந்த நேசமானது காலம் கடந்து.. எல்லைகள் கடந்து.. தொலைவுகள் கடந்து.. மொழிகள் கடந்து நமது பிள்ளைகளையும் ஆக்கிரமித்திருப்பது முஸ்லிம்களுக்கே உரிய பிரத்யேகமானது!

அந்த நாள் மறக்க முடியாத நாளாக மதீனத்துப் பிள்ளைகளின் மனதில் படிந்து போனது.

குழந்தைகளின் திருநாளாக வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பதிவாகியுள்ளது.

மதீனா மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது.

முஸ்லிம்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்திருந்தார்கள். ஒரு பெரும் விழாவை எதிர்நோக்கி அவர்கள் காத்திருந்தார்கள்.

குழந்தைகளுக்கோ உற்சாகம் தாளவில்லை. வரவேற்பதற்கான பாடல்களை திரும்பத் திரும்பப் பாடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அந்த நாளை மதீனாவாசிகள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க... நாட்கள் கழிந்தன.

குழந்தைகள் அந்த நாளுக்கான ஆடைகளைத் தேர்வு செய்து தயாராக வைத்திருந்தார்கள்.
அப்படி அவர்கள் யாரைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறர்கள்?

இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனாவுக்கு வரபோகும் திருநாள் அது. சந்தோஷத்திலும் சந்தோஷம் தரும் நன்னாள்! வரலாற்றுச் சிறப்பு மிக்க 'ஹிஜ்ரத்' நாள். சந்தோஷம் இருக்காதா பின்னே!

மதீனாவாசிகள் குழந்தை,குட்டிகள் சகிதமாக மகிச்சியில் திளைத்ததில் வியப்பில்லையே! ஒவ்வொரு நாளும் ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்ததில் அதிசயம் இல்லையே! ஏனென்றால்.. வரப்போவது.. அருமை நபி .. கருணை நபி.. நபி பெருமானார் ஆயிற்றே!



 அந்த நாளும் வந்தது.

மக்கள் மதீனாவின் எல்லையில் வந்து காத்திருந்தார்கள்.நேரம் ஆமை வேகத்தில் மெதுவாக நகர்ந்தது.

"அதோ..! அதோ..!!இறைத்தூதர்! அதோ வருகிறார்கள்!"

மக்களின் உற்சாகக் குரல் பாலைவனம் எங்கும் எதிரொலித்தது. அந்தச் சத்தத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பேரீச்ச மரக்கீற்றுகள் அசைந்தாடின.

குழந்தைகளின் முகமோ பிரகாசத்தால்..மின்னியது. எல்லோரும் முன்வரிசைக்கு ஓடிவந்தார்கள். முன்னரே கவனமாகத் தயாரித்து வைத்திருந்த வரவேற்புப் பாடலைப் பாட ஆரம்பித்தார்கள்.

குழந்தைகளைக் கண்டதும் அன்பு நபியின் முகம் மலர்ந்தது.

நபிகளார் குழந்தைகளின் வரவேற்பை அதிகம் ரசித்தார்கள். பெண் குழந்தைகளின் இனிய பாடல்களில் மனதைப் பறிகொடுத்தார்கள்.

குழந்தைகள் தம்மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்தது நபிகளாருக்குத் தெரியும். இருந்தும் குழந்தைகளிடம் புன்முறுவலுடன் கேட்டார்கள்:

"உங்களுக்கு என் மீது இவ்வளவு பிரியமா பிள்ளைகளே!"

"ஆமாம்... ஆமாம்... இறைவனின் தூதரே, தங்கள் மீது எங்களுக்குக் கொள்ளை விருப்பம்"

சிறுவர்-சிறுமிகள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார்கள்.

"நாங்கள் எல்லோரும் தங்களை அதிகம் நேசிக்கின்றோம் இறைவனின் தூதரே!"-என்றார்கள் தொடாந்து ஒரே குரலில்.

இதைக் கேட்டதும் நபிகளாரின் முகம் ரோஜாப்பூ போல பூத்தது.

"குழந்தைகளே, நானும் உங்களை அதிகம் அதிகமாக நேசிக்கின்றேன் தெரியுமா?" - என்றார்கள் அன்பொழுக.

நபிகளாரின் இந்தப் பதிலைக் கேட்டதும் குழந்தைகளுக்குத் தலை - கால் புரியவில்லை.

உற்சாக மிகுதியால் "ஓ..! ஓ...!!" - என்று சத்தமிட்டார்கள். நபிகளாரை இன்னும் உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.

அது ஓர் அற்புதமான நாள்!

மதீனாவாசிகள் என்றென்னும் மறக்க முடியாத நாள்!

அன்பு நபிகளார் மக்காவைத் துறந்து மதீனா வந்தடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நன்னாள்!

குழந்தைகளின் திருநாள்!

 ---- இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.



முந்தைய அருட்கொடைகளுக்கு:
2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html
3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html
4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html
5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html
6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html
7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html
8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html
9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... : http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
10. அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி : http://ikhwanameer.blogspot.in/2015/11/10.html
11. அவர்கள் எதிரிகள் குழந்தைகளாயினும்... : http://ikhwanameer.blogspot.in/2015/11/11.html
12. குற்றம் குற்றமே!:  http://ikhwanameer.blogspot.in/2015/11/blog-post_19.html
13 . பாவங்களின் பரிகாரம் http://ikhwanameer.blogspot.in/2015/12/13.html
14. அழுதபடியே தொழுத அண்ணல்http://ikhwanameer.blogspot.in/2015/12/14.html
15 இருளில் வந்த வெளிச்சம்: http://ikhwanameer.blogspot.in/2016/01/15.html
16 உதவி சிறிது. பதவி பெரிது: http://ikhwanameer.blogspot.in/2016/01/16.html
17 தலைக்கு மேல் பறந்த தாய்க்குருவி: http://ikhwanameer.blogspot.in/2016/04/17.html
18 இம்மையில் கொடுத்தால்... http://ikhwanameer.blogspot.in/2016/05/blog-post_13.html
Share:

Saturday, July 30, 2016

இறைவன் அழைக்கின்றான்: ”நீதியில் நிலைத்திருங்கள்!”

 
 
இந்தப் பிரபஞ்சம் நீதியின் அடிப்படையில்தான் நிலைத்திருக்கிறது. நீதி என்னும் அந்த ஒழுங்கமைப்பில் கட்டுப்பட்டுள்ளது.

இந்த பேரண்டத்தின் பூமி என்னும் ஒரு பகுதியில் மனித இனமும் வசித்து வருவதால் மனிதர்கள் நீதியின் மீதே நிலைத்திருக்க வேண்டும்.

அப்போதுதான் வாழ்வியல் அமைப்பும் இந்த அண்டசாரம் போலவே அமைதியுடன் திகழும்.

இதற்கு மாறாக,

அநீதி இழைப்பது, நீதி தவறுவது, வாய்மையில் வழுவி வாழ்வது இந்த அண்டசார அமைப்புக்கு எதிராக கலகம் செய்வதற்கு ஒப்பாகும்.

தனது கைகளாலேயே அமைதியை தொலைத்துக் கொள்வதாகும்.

இதுவே இன்றைய பிரச்னைகளுக்கெல்லாம் மூலக்காரணங்களாகும்.

மனிதர்களே..! நீதியில் நிலைத்திருங்கள்..! இறைவன் அழைக்கிறான் அவன் சொல் கேளுங்கள்..!
 
 
Share:

Friday, July 29, 2016

வைகறை நினைவுகள் - 31: என்னவானது எனது அன்பு உள்ளங்களுக்கு?



மாடி தோட்டத்து செடிகளுக்கு நீரூற்றிவிட்டு, வழக்கம் போல அவற்றுடன் உரையாடிவிட்டு, எனது பூ உலகம் மற்றும் பூச்சிகள் உலகத்துக்கு சில படங்களையும் எடுத்துவிட்டு முகநூல் பக்கம் வந்தால், எனது இளைய தளபதிகள் அப்பாஸ் Abbas Al Azadi மற்றும் அஹ்மது ரிஸ்வான் Ahamed Rizwan (https://www.facebook.com/photo.php?fbid=10209484663411245&set=a.1733173766921.216114.1165837089&type=3&theater
https://www.facebook.com/abbas.kovai/posts/10210569976754200) தங்கள் அன்பால் என்னை அதிர வைத்துவிட்டார்கள்.

கூடவே அன்பு சகோதர, சகோதரிகளான நீங்களும் கைக் கோர்த்துக் கொள்ள நான் ஒத்தையாய் என்ன செய்வேன்?

என்னவானது எனது அன்பு உள்ளங்களுக்கு என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை என்னை முகநூல் செயல்பாடுகளை முடக்கிவிட ஏதோ சதி திட்டமோ.. என்று மென்மையாய் முணு முணுத்துக் கொள்கிறேன்.

இயல்பாய் நான் ஒரு கூச்சசுவாபி. அதிகமாய் பேச வராது.

உண்மைதான்! அடுத்தவர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டே இருப்பேனேயொழிய அதிகமாய் எனக்கு பேச வராது. அதை நான் விரும்புவதும் இல்லை.

அந்த கூச்ச உணர்வுடனேயே நான் தலை குனிந்தே நடப்பேன். அதேநேரத்தில் சூழல்களின் அத்தனை ஆரவாரங்களையும், விவரங்களையும் புலன்கள் பதிவு செய்தவாறே இருக்கும்.

அதுபோலவே, காலம் என்னை முன்னுக்குத் தள்ளியபோது, நான் முரண்டு பிடித்து நிற்கவில்லை என்பது மட்டும் நிஜம்.

நான்காம், ஐந்தாம் வகுப்பிலிருந்தே காலம் எனக்களித்த வாய்ப்புகளோடேயே நான் முன் நகர்ந்துள்ளேன்.

அந்த ஆரம்ப பள்ளி நாட்களில் பள்ளி சபாநாயகராய் சட்டசபையை நடத்தியிருக்கிறேன். கேள்வி கேட்கும் பள்ளி மாமன்ற உறுப்பினர்களுக்கு (பிள்ளைகளுக்கு) மென்மையுடன் சமாதானம் சொல்லியிருக்கிறேன். தவறுகளை சீர்த்திருத்திக் கொள்வதாய் வாக்களித்திருக்கிறேன். அவை வெறும் வாக்குகளாய் மாறாமலிருக்க மாலை நேரங்களில் பள்ளியைச் சுற்றியுள்ள குப்பைகளைக் கூட்டி பள்ளியைச் சுத்தம் செய்து, எங்கள் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிமிருக்கிறேன்.

பேச வராத நான் ஐந்தாம் வகுப்பில், மகா அலெக்சாண்டராய் ஆர்த்தெழ வேண்டியிருந்தது. வீரத்துடன் எதிர்த்து நின்ற புருஷோத்தமன் என்னும் குறுநில மன்னனின் தோழமையை அரவணைத்து ஏற்று கொள்ளவும் வேண்டியிருந்தது.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்த எனது வாசிப்பு, தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்து அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்த அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை எனக்களித்தது.

எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் இந்த சிறுவயதில் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.

சிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலும்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடும்.

எத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்று மோப்பம் பிடித்து வந்து விடுவார். ஒருவித சிநேகித உணர்வுடன் “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே!” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்.

இன்று இறையருளால் வீட்டில், ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.

இந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எழுத்தாளனாய், எத்தி வைக்கும் அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.

அத்தோட விட்டதா என்னை காலம்!

உயர்நிலைப் பள்ளி நாட்களில் பள்ளியின் இலக்கிய மன்றச் செயலாளராக, பள்ளித் தலைவராக, செய்தி வாசிப்பாளராக என்று என்னை முந்தி.. முந்தி.. முட்டித் தள்ளியவாறே இருந்தது.

என்னுள்ளிருந்த அத்தனை பலவீனங்களையும், இயலாமைகளையும் மூட்டைக் கட்டிவிட்டு நான் போர் முனையிலிருக்கும் சிப்பாயாய் முன்னுக்கு செல்வதைத் தவிர வேறு வழியேயில்லை.

இரவு உணவு மட்டும் உண்டு வாழும் அனுபவம் தந்தது வாழ்க்கை.

ஓட்டைக் கூரையின் கீழ், அம்மாவின் ஓட்டை புடவையைப் போர்த்திக் கொண்டு ஓட்டைக் கூரை வழியே வானத்து நட்சத்திரங்களை எண்ணிய காலம் அது!

பசி எனப்படும் எனது இயலாமையை என் சக நண்பர்கள் அறிந்துவிடாமலிருக்க ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் தூரத்தை நடைபயணமாய் கடந்து அம்மா எனக்குத் தரும் ஐந்து பைசாவுக்கு மரவள்ளிக் கிழங்கின் கீழேஎறியும் முன்பின் முனைகளை (அவற்றின் ஒரே கஸ்டமர் நான்) அந்த கூன் விழுந்த கிழங்கு விற்பனைச் செய்யும் பாட்டியிடம் வாங்கி மதிய உணவாக உண்ட நாள்கள் அவை.

உலக வரைப்படத்தை வாங்கவும் காசு இருக்காது. எனது சரித்திர ஆசிரியை தரும் ஐந்து பைசாவில் வரைப்படத்தை வாங்கி வரைந்திருக்கிறேன்.

இவை எல்லாமே எனது கூச்சத்துக்கு காரணங்களாயினும் மறுபுறம் காலம் எனக்களித்த வாய்ப்புகளை நான் நழுவவிட்டதே இல்லை.

எட்டாம் வகுப்பில், மண்டையில் பீவர் புருக்கின் பளிச்சென்று பதிந்துபோன வாசகம் இது: ”வாழ்க்கை பறந்து கொண்டிருக்கிறது. பொழுது புலரும் ஒவ்வொரு நாளும் இறப்பு உன்னை நெருங்கி வந்து கொண்டேயிருக்கிறது. ஆகவே உன்னுடைய ஒவ்வொரு கணத்தையும் முற்றிலும் பயன்படுத்துவாயாக!” ஒவ்வொரு புத்தாண்டின் துவக்கமும் எனது டைரியில் மண்ணறையை வடிவமைத்து அதன் தலைப்புறத்து பலகையில் வரைந்து வைத்து பாதுகாத்த வாசகங்கள்!

நேரத்தை நான் எப்போதும் வீணடித்ததில்லை!

வறுமையும் அதன் கொடுமையும் என்னை செங்கொடி ஏந்தச் செய்தது. போராட்ட களங்களில் முன்நிறுத்தியது. சிலபோது, சிறைப்பட வைத்தது. ”இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர என்ற அச்சமற்ற தன்மையைத் தந்தது”

இத்தனைக்கும் நடுவிலும் நான் கூச்சசுவாபியாகவே இருந்தேன் (இருக்கிறேன்).

இவ்வளவு பிரச்னைகளுக்கும் ஊடே, என்னுள்ளும் ஒரு காதல் இருந்தது. என்னை நம்பி வந்த வாழ்க்கை துணைவிக்காக முழு உலகை எதிர்க்கும் துணிவிருந்தது. பக்க பலமாய் நண்பர் குழுவும் இருந்தது. இவையும் காலம் எனக்களித்த பரிசுகள்தான்!

அதன் பின் 80-களில் இஸ்லாத்தின் பரிச்சயம். வாசிப்பின் வரமாய் கிடைத்த நல்வழிகாட்டல். மார்க்ஸ் என்னும் தாடிக்காரரிடமிருந்து புலன் பெயர்ந்து அன்பு நபிகளாரின் அடிச்சுவடுகளில் பயணம் என்று வாழ்க்கைத் தொடர்கிறது.

யான் பெற்ற அந்த பேரின்பத்தை எனது வீட்டாரிடம் எடுத்துரைத்தது, அவர்களை எனது அறப்பணியின் தளபதிகளாக்கியது. அந்த பணிகளைத் தொடர ஜமாத்தோடு இணைந்து பணியாற்றியது. எனது நல்வழிகாட்டிகளாக ஏராளமான ஆளுமைகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியது என்று எனது பயணம் இறையருளால் தொடர்கிறது.

இறைவன் எனக்களிக்கும் அவகாசம்வரை இறைவன் நாடினால் இந்தப் பயணம் தொடரும்.

இந்த பயணத்தை நான் வெற்றிகரமாக்க என்னை கல்வி, கேள்விகளில் பலப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கான பட்ட ரீதியாக தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டி அவசியமானது.

எழுத்தாளனாய், பத்திரிகையாளனாய், மனித உரிமை ஆர்வலனாய், பேச்சாளனாய் இப்போது ஒரு ஒளிப்பதிவு கலைஞனாய் என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்.

இத்தனைக்கும் பிறகும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் நான் கூச்சசுவாபம் கொண்டவனாகவே இருக்கிறேன். எனது பாவங்கள் மன்னிக்கவே வேண்டுகிறேன்.

சுவனத்தில் சாட்டையளவு இடமாவது எனக்கும் எனது சமுதாயத்தார்க்கும் கிடைத்தால் போதும் என்று கருணையாளனிடம் இரு கரமேந்துகிறேன்.

என்னவானது எனது அன்பு உள்ளங்களுக்கு..? என்னை மேலும், மேலும் கூச்சத்தில் தள்ளியவாறே இருக்கிறார்களே இவர்கள் என்று காரணம் தொியாமல் உடைந்து நிற்கிறேன் நான்!

இறைவன் நாடினால்... அடுத்த வைகறை நினைவுகளில்.. 



முந்தைய வைகறை நினைவுகளை வாசிக்க:

வைகறை நினைவுகள் பகுதி 1: கருணையாளனான இறைவன் அவரது பாவங்களை மன்னிப்பானாக:  - http://ikhwanameer.blogspot.in/2015/07/1.html
வைகறை நினைவுகள் பகுதி 2: இந்நேரம் புதைச்ச இடத்தில் புல் முளைச்சிருக்கும்: http://ikhwanameer.blogspot.in/2015/07/2.html
வைகறை நினைவுகள் பகுதி 3: நிழலாய் நின்ற அந்த இருவர்: http://ikhwanameer.blogspot.in/2015/07/3.html
வைகறை நினைவுகள் பகுதி 4: நீண்ட தேடல்களின் அந்த முடிவில்: http://ikhwanameer.blogspot.in/2015/07/4.html
வைகறை நினைவுகள் பகுதி 5: மறக்க முடியாத அந்த இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/07/5.html
வைகறை நினைவுகள் பகுதி 6: அதிபதியின் தர்பாரில் ஆஜரான ஓர் அடியான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/6.html
வைகறை நினைவுகள் பகுதி 7: சுமக்க முடியாத பாரத்தை சுமத்துவதில்லை: http://ikhwanameer.blogspot.in/2015/07/7.html
வைகறை நினைவுகள் பகுதி 8: யாகூப் மேமன் தண்டனை கூனி குறுகிப் போகிறேன் நான்: http://ikhwanameer.blogspot.in/2015/07/7_31.html
வைகறை நினைவுகள் பகுதி 9: இறைவனின் பிரதிநிதியா? குரங்கின் சந்ததியா?: http://ikhwanameer.blogspot.in/2015/08/9.html
வைகறை நினைவுகள் பகுதி 10: http://ikhwanameer.blogspot.in/2015/08/10.html
வைகறை நினைவுகள் பகுதி 11 : நான் தொலைந்து போனது இங்குதான் : http://ikhwanameer.blogspot.in/2015/08/11.html
வைகறை நினைவுகள் பகுதி 12: இதோ என் இப்ராஹீமா: http://ikhwanameer.blogspot.in/2015/08/11_14.html
வைகறை நினைவுகள் பகுதி 13: ஒரு கேள்விக்கு விடை தேடி நான்: http://ikhwanameer.blogspot.in/2015/08/13.html
வைகறை நினைவுகள் பகுதி 14, ஒரே டேக்கில் ஓகே: http://ikhwanameer.blogspot.in/2015/08/14.html
வைகறை நினைவுகள் பகுதி 15: வெளிச்சத்துக்கு வராத பாசங்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/08/15.html
வைகறை நினைவுகள் பகுதி 16 : கதைச் சொல்லியாய் மழலைப்பிரியன்: http://ikhwanameer.blogspot.in/2015/08/16.html
வைகறை நினைவுகள் பகுதி 17: பாகல் கொடி : http://ikhwanameer.blogspot.in/2015/08/17.html
வைகறை நினைவுகள் பகுதி 18: மறக்க முடியாத அந்த குட்டிச் சுவர்: http://ikhwanameer.blogspot.in/2015/09/18.html
வைகறை நினைவுகள் பகுதி 19: அந்த இருபது ரூபாய்: http://ikhwanameer.blogspot.in/2015/09/19.html
வைகறை நினைவுகள் பகுதி 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு மடல்கள்: http://ikhwanameer.blogspot.in/2015/09/20.html
வைகறை நினைவுகள் பகுதி 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் செய்த அழகிய ஒளிவிளக்கு: http://ikhwanameer.blogspot.in/2015/09/21.html
வைகறை நினைவுகள் பகுதி 22: வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நடுநிசி இரவு: http://ikhwanameer.blogspot.in/2015/10/22.html
வைகறை நினைவுகள் பகுதி 23:  மர்யம் ஏன் அழுதாள்?:  http://ikhwanameer.blogspot.in/2015/10/23.html
வைகறை நினைவுகள் பகுதி 24:  வேட்டைக்காரன்:  http://ikhwanameer.blogspot.in/2015/12/24.html
வைகறை நினைவுகள் பகுதி 25:  லென்ஸ் விழி வழியே..:  http://ikhwanameer.blogspot.in/2015/12/25.html
வைகறை நினைவுகள் பகுதி 26:  ரஷ்ய கரடியை விரட்டியடித்த திருக்குர்ஆன்: http://ikhwanameer.blogspot.in/2016/02/26.html
வைகறை நினைவுகள் பகுதி 27:  ஈந்து கசிந்த மனம்:  http://ikhwanameer.blogspot.in/2016/02/27.html    
வைகறை நினைவுகள் பகுதி 28: நான் புரிந்துகொண்ட இஸ்லாம்: http://ikhwanameer.blogspot.in/2016/02/28.html
வைகறை நினைவுகள் பகுதி: 29 காலப்பெட்டகம்: நூற்றாண்டே சாட்சியாக…!: http://ikhwanameer.blogspot.in/2016/02/29.html
வைகறை நினைவுகள் பகுதி: 30 - ஓ.. ஜமீலாபாத்..! சாட்சியாய் இருப்பாய்.. நீ.. - http://ikhwanameer.blogspot.in/2016/04/30.html
Share:

Friday, July 22, 2016

மாற்றான் தோட்டத்து மல்லிகை: நீதி அதுவே தீர்வும் கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்..!



நீதி, நியமங்களை குழிகற்களாக வைத்துதான் இந்திய உபகண்ட சமஸ்தானங்களை அன்றைய மன்னர் காலத்து ஆட்சியாளர்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்பு இன்று அசைந்து கொண்டிருக்கிறது. அரியணை ஆசைகள் நமது ஆட்சியாளர்களின் எழுதப்படாத நியமங்களாக இருப்பதே நாட்டின் இத்தகையப் பிரச்னைகளுக்கும், அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம். இதில் மற்றொரு தீராத பிரச்னையாக  தொடர்ந்து வருவது காஷ்மீர். 

1980 வரை வாய் மூடிக்கிடந்தவன் காஷ்மீர் இளைஞன். அதன்பின்தான், அடிப்படை உாிமைகள் எதுவும் கிடைக்காத அவலநிலையைப் போக்க, தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தான். அதுவரை மௌனமே அவனது மொழியாக இருந்தது. உணவு, கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை உாிமைகளையும் மீட்டுத்தராத மகாராஜாக்களான நமது ஆட்சியாளர்களுக்கு தமது அடிப்படைத் தேவைகளைக் கேட்கும் காஷ்மீரிகள் தீவிரிவாதிகளாகிப் போனதில் வியப்பில்லை. 

வெண் பனிமலைகள் கந்தக நெடிகள், துப்பாக்கி தோட்டாக்களின் கரும் புகை மூட்டங்களால் சூழ்ந்துவிட்டுள்ள அவல நிலை தற்போது காஷ்மீரில். 

இந்திய நாட்டின் ஒரு பகுதியாக கருதப்படும் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை இங்கே வாய்த்திறக்க முடியாது. 

கிட்டதட்ட பத்து நாட்களாக ஊடகங்கள் செயலிழந்துபோன ஒரு அவலநிலை. ஊரடங்கு உத்திரவு என்று ராணுவ கெடுபிடிகள். பல்வேறு உயிரிழப்புகள். ராணுவம் பயன்படுத்தகூடாத சிதறல் குண்டுகளால் பார்வையிழந்து போன மக்கள் என்று ஏராளமான துன்பத் துயரங்களைத் தாங்கி நிற்கும் நாட்டின் பிறிதொரு பகுதி மக்கள். 

ராகுல் காந்தி குறட்டைவிட்டார், தூங்கி வழிந்தார் என்று உப்புச் சப்புப் பெறாத விஷயங்களை தலைப்புச் செய்திகளாக்கும் தேசிய ஊடகங்கள். 

இந்தச் சூழலில் மனித உாிமைப் போராளிகளுக்கு அடுத்ததாக தமிழ் ஊடக வரலாற்றில், அநேகமாக முதன்முறையாக வாய்த்திறந்திருக்கிறார் தி இந்துவின் சமஸ். 

இதுவே மௌனத்தின் இறுதி தவணையாகட்டும். ஊடகங்களின் மௌனம் கலையட்டும். காஷ்மீர் வெளிப்படையாக விமர்சிக்கப்படட்டும். முடிந்தால் இதே சமஸ் ஒரு பத்திரிகையாளர் குழுவோடு காஷ்மீர் சென்று அங்கு நடக்கும் உண்மைகளைத் தோலுரித்துக் காட்டட்டும். 

இன்றைய தி இந்து தமிழ் 22.07.2016 நாளேட்டில் காஷ்மீர் போராட்டம் சம்பந்தமாக சமஸ் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு இது மாற்றான் தோட்டத்து மல்லிகையாய்!
““““““““““““““““““““““““““““““““““““

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் இந்தியாவிடமிருந்து விலகும் முடிவை எடுக்கலாம். போகட்டும். ஜம்முவாசிகள், லடாக்வாசிகள் இந்தியாவில் நீடிக்கும் முடிவையே தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் படைகளுக்கு வாரி இறைக்கிறோம். அவர்களுக்கும் அமைதி இல்லை. நமக்கும் நிம்மதி இல்லை. எப்படியும் இந்தப் பிரச்சினையை இந்தியா தீர்த்தே ஆக வேண்டும்!”

முதல் முறையாக இப்படிக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சராசரி இந்திய மனம் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம் இந்தியச் சுதந்திரப் போரட்ட வரலாற்றுடன் இணையாகவே பயணித்த காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படிக்கச் சொன்னார். இன்றைக்கு நாம் ‘காஷ்மீர்’ என்றழைக்கும் காஷ்மீருக்குள் உள்ளடங்கியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான கலாச்சார வேறுபாடுகளையும் புவியியல் சூழலையும் படிக்கச் சொன்னார். இந்திய வரைபடம் காட்டும் காஷ்மீரில் உள்ளபடி சரிபாதிகூட நம் வசம் இன்றைக்கு இல்லை. நம் வசம் உள்ள 1.01 லட்சம் சொச்ச சதுர கி.மீ. காஷ்மீரின் பரப்பில், 58.33% பரப்பு லடாக் பிராந்தியத்தில் இருப்பது; 25.93% பரப்பு ஜம்மு பிராந்தியத்தில் இருப்பது; 15.73% பரப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. இந்தியாவின் மாணிக்கம் என்று சொல்வதற்கும், இந்தியா இழுத்துப் பிடித்து வைத்திருப்பதற்குமான பெரிய, அரிய வளங்கள் ஏதும் பள்ளத்தாக்கில் கிடையாது. அதேசமயம், இந்தியா தலைகுனிய வேண்டிய எல்லா அவலங்களும் பள்ளத்தாக்கில் நடக்கின்றன.

நூறாண்டு கடந்த முழக்கம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒலிக்கும் சுதந்திரக் குரலுக்குப் பின் குறைந்தது நூறாண்டு வரலாறு இருக்கிறது. 1846-ல் ஜம்முவுடன் இணைக்கப்பட்ட அடுத்த சில பத்தாண்டுகளில் டோக்ரா அரச வம்சத்துக்கு எதிராக ஒலிக்க ஆரம்பித்தது முதலாக அங்கு சுதந்திர கோஷம் கேட்டுக்கொண்டிருக்கிறது. காஷ்மீர் சுதந்திரப் போராட்டம் மதச்சார்பற்ற ஒரு தேசிய இயக்கமாக வெளிப்படையாகத் தெரிய 1939-ல் ‘முஸ்லிம் மாநாடு’ அமைப்பின் பெயரைத் ‘தேசிய மாநாடு’ என்று பெயர் மாற்ற ஆலோசனை கூறியவர்களில் ஒருவர் நேரு. 1942-ல் இந்தியா ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கம் நடத்தியதுபோலவே, 1946-ல் ‘அரசனே வெளியேறு’ (Quit Kashmir) இயக்கம் நடத்தியது காஷ்மீர். 1947-ல் இந்திய ஒன்றியத்துடனான காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் இணைப்பும் ‘காஷ்மீர்களின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் பொதுக் கருத்துக்கேட்பின் முடிவே தீர்மானிக்கும்’ எனும் நிபந்தனைக்குட்பட்டே நடந்தது. ஆக, காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்தை இன்றைய இந்தியாவுக்கான எதிர்ப்புப் போராட்டமாக, இனப் போராட்டமாக, போராட்டக்காரர்களைத் தேச விரோதிகளாக அணுகும் பார்வை வரலாற்று அடிப்படையற்றது.

சுதந்திரத்தை வேறு எந்தச் சொல் கொண்டு கேட்பது?

காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் இன்றைக்கு எதிரொலிக்கும் ‘சுதந்திரம்’ (ஆசாதி) எனும் சொல் பள்ளத்தாக்குக்கு வெளியே இருக்கும் நாட்டுப்பற்று மிக்க ஒரு குடிமகரைச் சங்கடப்படுத்தலாம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக காலனியாதிக்கக் காலக் கருப்புச் சட்டமான ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்ட’த்தின் கொடுங்கோன்மையையே அன்றாட ஆட்சிமுறையாக எதிர்கொள்பவர்களிடமிருந்து வேறு எந்தச் சொல்லை எதிர்பார்க்க முடியும்?

ஜனவரி 1989 முதல் 2016 ஜூன் வரை 94,391 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்; 22,816 பெண்கள் விதவைகள்ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 1,07,569 குழந்தைகள் அநாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர்; 10,193 பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது காஷ்மீர் ஊடக சேவையகம். இது சற்று மிகையானது என்று நாம் நினைக்கலாம். அரசுத் தரப்பு எப்போதும் எண்ணிக்கையைக் குறைத்தே சொல்லிவந்திருக்கிறது. 2011-ல் காஷ்மீர் மனித உரிமை ஆணையம் வெளியிட்ட ஒரு செய்தி காஷ்மீரிகள் எதிர்கொள்ளும் ஆயுதப் படைகளின் ரத்த வெறியாட்டத்தை வெளியே கொண்டுவந்தது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபூர், குப்வாரா மாவட்டங்களில் 38 இடங்களில் 2,730 அடையாளம் தெரியாத சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தியது மனித உரிமைகள் ஆணையம். இந்தச் சடலங்கள் அனைத்தும் அடையாளம் காணப்படாத பயங்கரவாதிகள் என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் அழுத்தம் தரப்பட்டுப் புதைக்கப்பட்டவை.

பல்லாண்டு காலமாகத் தங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று புகைப்படத்துடன் சாலைகளில் நின்று போராடிக்கொண்டிருந்த பெற்றோர் பலர் அப்படியே உருக்குலைந்து உடைந்தழுதார்கள். ஒரு பெரிய படுகொலை. இதே சம்பவம் இன்னொரு நாட்டில் நடந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் கொந்தளித்திருக்கும். காஷ்மீர் என்பதாலேயே இந்தியா சகஜமாகக் கடந்து செல்ல முடிந்தது. பதினைந்து காஷ்மீரிகளுக்கு ஒருவர், சாலைகளில் நூறு மீட்டருக்கு ஒருவர் என்கிற அளவில் பள்ளத்தாக்கில் படைகளைக் குவித்து நிறுத்தியிருக்கிறது இந்திய அரசு. கூடவே, தாம் நினைக்கும் எவர் வீட்டினுள்ளும் புகுந்து எவரையும் விசாரணை என்ற பெயரில் தூக்கிச் செல்லும், எவரையும் சுட்டுத்தள்ளும், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லா அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறது. இப்படியாக மனித உரிமைகளின் குரல்வளை கொடூரமாக நெரிக்கப்படும் சூழலில், ஒரு சமூகம் எழுப்பும் சொல் சுதந்திரம் என்பதன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

அதிகாரம் அற்ற சுயாட்சி

இந்திய ஒன்றியத்திடம் இணைந்தபோது, ‘பாதுகாப்பு, வெளியுறவு, மக்கள் தொடர்பு, நாணயப் பரிமாற்றம்’ ஆகிய நான்கு அம்சங்களை மட்டுமே காஷ்மீர் அரசு இந்திய அரசு வசம் ஒப்படைத்தது. இந்திய - காஷ்மீர் இணைப்பின் உயிர்நாடியான இந்திய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவோ ஏனைய எந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு அந்தஸ்தையும் தன்னாட்சியையும் காஷ்மீருக்கு அளித்தது. அந்த நாட்களில் காஷ்மீரின் முதல் ‘முதல்வர்’ ஷேக் அப்துல்லாவும் அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த பக்ஷி குலாம் முஹம்மதுவும் ‘பிரதமர்’ என்றே அழைக்கப்பட்டார்கள். இன்றைய நிலை என்ன? உண்மையில் காஷ்மீர் டெல்லியால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ மூலமாகவே ஆளப்படுகிறது.

இம்முறை காஷ்மீரில் கொதிநிலை ஏறிய நாட்களில் பிரதமர் மோடி ஆப்பிரிக்கப் பயணத்தில் இருந்தார். அவர் நாடு திரும்பும் வரை, எந்த உறுதியான முடிவையும் எடுக்க முடியவில்லை என்கிறார்கள். முதல்வர் மெஹ்பூபாவால் எதுபற்றியும் டெல்லியுடன் ஆக்கபூர்வமாக விவாதிக்க முடியவில்லை என்கிறார்கள். சிட்டிசிங்புரா கிராமத்து இளைஞர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி மக்கள் போராடியபோதுதான் காஷ்மீர் ஆட்சியாளர்களால் என்ன செய்ய முடிந்தது; படையினர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி சோஃபியான் பெண்கள் கொந்தளிப்போடு ஆர்ப்பாட்டம் நடத்தியபோதுதான் காஷ்மீர் ஆட்சியாளர்களால் என்ன செய்ய முடிந்தது? தன்னுடைய அடிப்படை உரிமையான உயிர் உரிமையில் ஏதும் செய்ய முடியாத ஒரு மாநில அரசின் மீதும் இந்த நாட்டின் அமைப்பின் மீதும் ஒரு மாநிலத்தின் மக்களுக்கு எவ்விதமான மதிப்பும் நம்பிக்கையும் இருக்க முடியும்?

முதல்வர் மெஹ்பூபாவின் செயல்பாடுகளை விமர்சித் திருக்கும் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா “என் ஆட்சிக் காலத்தில் நான் செய்த அதே தவறுகளையே மெஹ்பூபா இப்போது செய்கிறார். திரும்பத் திரும்ப. மேலும் பல மடங்கு” என்று குறிப்பிட்டிருக்கிறார். உமர், மெஹ்பூபா மட்டுமல்ல; காஷ்மீர் முதல்வர் நாற்காலியில் யார் அமர் ந்தாலும் இதே தவறுகளையே செய்ய நேரிடும். ஏனென்றால் மேலே டெல்லி ராஜாக்கள் அதே தவறுகளையே திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். அடுத்தடுத்து காஷ்மீரில் உருவான மிதவாத மக்கள் தலைவர்கள் எல்லோரையுமே அதிகார ஆசையைத் துருப்புச் சீட்டாக்கி தம் கைப்பாவையாக்கிக் கொள்வதையே உத்தியாக வைத்திருக்கிறார்கள் டெல்லி ராஜாக்கள். மக்கள் பெரிய நம்பிக்கையோடு வாக்களிக்கிறார்கள். முஃப்தி முஹம்மது சயீது முதல்வர் பதவியில் அமர்கிறார். அடுத்த 10 மாதங்களில் மரணிக்கிறார். முதல்வரின் இறுதிச் சடங்கில் பங்கேற்றோர் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டவில்லை. ஒரு 22 வயது இளைஞர், ஆயுததாரி, புர்ஹான் வானியின் இறுதிச் சடங்கில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள்; தொடர்ந்து 10 நாட்களாக நடக்கும் கலவரங்களில் இதுவரை 49 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்றால் இந
இந்தச் செய்தி நமக்கு உணர்த்துவது என்ன? தந்திரங்களால் மக்களை ஆளலாம்; இதயங்களை வெல்ல முடியாது.

ஒரு வார்த்தை நம்மிடம் இல்லையா?

காஷ்மீர் 1980-களில் எதிர்கொண்ட பயங்கரவாதம் வேறு; இன்று எதிர்கொள்ளும் சவால் வேறு. அண்டை நாட்டில் பயிற்றுவிக்கப்பட்டு, உள்ளே அனுப்பப்படும் குழுக்கள் அல்ல இன்று காஷ்மீர் எதிர்கொள்வது. இவர்கள் சொந்த மண்ணின் மைந்தர்கள்; சிறுவர்கள்; படித்த இளைஞர்கள். ராணுவத்தை எதிர்கொள்ள கையில் கற்களோடு ஓடி வரும் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் ஆக்கிவிடுதல் எளிது. காஷ்மீர் நம்முடன் இருக்காது.

காஷ்மீர் கலவரத் தடுப்புப் பணியில் இம்முறை ‘பெல்லட்’ ரகக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 2010 கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் பலியானதைத் தொடர்ந்து, அதிகம் உயிர் சேதத்தை விளைவிக்காத வகைக் குண்டுகள் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டவை இவை. ஒவ்வொரு குண்டும் பல சிறு துகள்களாகச் சிதறிக் காயம் ஏற்படுத்தும் இவ்வகைக் குண்டுகளை வெளிநாடுகளில் தூரத்திலிருந்து, கலவரக்காரர்களின் முழங்கால்களுக்குக் கீழே தாக்கும் வகையில் மட்டுமே பயன்படுத்துவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. காஷ்மீரிலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.பெல்லட் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர்; ஐந்து வயது சிறுமி உள்பட. பலருக்கு முகத்தில், கண்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது; பார்வை பறிபோயிருக்கிறது. நகர் மருத்துவமனையில் நிலைமையைச் சமாளிக்க டெல்லியிலிருந்து சென்ற ‘எய்ம்ஸ்’ மருத்துவர்கள் குழு காஷ்மீர் சூழலைப் போர்ச் சூழலோடு ஒப்பிட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில், வெளியிலிருந்து காஷ்மீர் மக்களை நோக்கிச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு பரிவானதாக இருக்க வேண்டும்? துளிக்கருணையின்றி தொலைக்காட்சி விவாதங்களில் வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் பாஜகவினரும், சங்க பரிவாரங்களும். மறுபுறம், காஷ்மீர் தீக்குத் தொடர்ந்து எண்ணெய் வார்த்துவரும் பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தரப்பிலிருந்து வெளியிடப்படும் அறிக்கை சொல்கிறது, “இப்படிப்பட்ட சூழலில், முழு பாகிஸ்தானும் காஷ்மீரிகளின் பின் நிற்கிறது. தார்மீகரீதியாக, அரசியல்ரீதியாக, ராஜாங்கரீதியாக!”

இந்தக் கட்டுரையை முடிக்கும் தருணம் வரை காஷ்மீர் மக்களுக்குச் சொல்ல நம்முடைய பிரதமர் மோடியிடம் ஒரு வார்த்தைகூட இல்லை. அவர்கள் படைகளை வெளியேறச் சொல்லிக் கல் எறிகிறார்கள். பதிலுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும் மேலும் 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புகிறது அரசு. மோடி சொல்ல விரும்பும் செய்திதான் என்ன?

அதிகாரப் பகிர்வு எப்படி இறையாண்மைக்கு எதிராகும்?

மூன்று அணு ஆயுத நாடுகள் மத்தியில் இருக்கும் ஒரு பிராந்தியத்தின் எதிர்காலத்தை அதன் பூர்வகால வரலாற்று அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும்; காஷ்மீருக்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் எனும் பேச்சு புவியரசியல் வியூகமற்றது. நிச்சயமாக, காஷ்மீர் என்பது இன்றைக்கு காஷ்மீர் மட்டும் அல்ல; சீனா, பாகிஸ்தான், இரு நாட்டு ராணுவங்கள், அணு ஆயுதங்கள், காஷ்மீருக்குள் வளர்ந்துவரும் மத அடிப்படைவாதம், அண்டை நாடுகள் பின்னின்று இயக்கும் ஆயுததாரிகள், முக்கியமாக இந்தியா எனும் ஒன்றியம் கோத்து வைத்திருக்கும் மாலையின் முக்கியமான முடிச்சு.

காஷ்மீர் அவிழ்ந்தால், அடுத்து பஞ்சாப் உதிரும், நாகாலாந்து உதிரும், அடுத்து தேசம் சுக்குநூறாகச் சிதறும் என்கிற இந்திய அரசின் அச்சம் அர்த்தமற்றது அல்ல. காஷ்மீருக்கு நம்மால் சுதந்திரம் அளிக்க முடியாது. அதேசமயம், இந்திய ஒன்றியத்துக்குள்ளிருக்கும் ஏனைய இந்தியர்களைப் போல, காஷ்மீரிகளின் சுதந்திர வாழ்க்கையை உறுதிப்படுத்தவிடாமல் இந்திய அரசைத் தடுப்பது எது? முதலில் அச்சத்திலிருந்து டெல்லி விடுபட வேண்டும். அடுத்து, மாநிலங்களின் உரிமையை நாளுக்கு நாள் உள்ளிழுத்து அது உருவாக்க நினைக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரக் கனவிலிருந்து விடுபட வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இவை ஒருபோதும் நல்லதல்ல.

ஒருகாலத்தில் தமிழ்நாடு தனிநாடாகிவிடும் என்று பயந்தவர்கள் உண்டு. பஞ்சாப், அஸாம், திரிபுரா, நாகாலாந்து என்று அடுத்தடுத்து இப்படிப் பிரிவினைப் பேரச்சம் சூழ்ந்திருந்த பல மாநிலங்களில் இன்றைய நிலை என்ன? அயர்லாந்து விவகாரத்தை பிரிட்டன் எப்படி எதிர்கொண்டது? க்யூபெக் விவகாரத்தை கனடா எப்படி எதிர்கொண்டது? ஹாங்காங் விவகாரத்தை சீனா எப்படி எதிர்கொள்கிறது?

மன்மோகன் சிங் ஆட்சிக் காலகட்டத்தில் ஒரு அருமையான வாய்ப்பை நாம் இழந்தோம். சிங்கின் முக்கியமான சகாக்களில் ஒருவரான ப.சிதம்பரம் காஷ்மீரின் இன்றைய கலவரம் தொடர்பாகக் கொடுத்திருக்கும் பேட்டி ஒருவகையில், காஷ்மீரிகளுக்கு நம் அரசும் சமூகமும் இழைத்திருக்கும் அநீதி தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம்: “காஷ்மீரிகளுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளையும் நம்பிக்கையையும் நாமே சிதைத்தோம்.”

ஒரு முக்கியமான பேச்சுவார்த்தையில் பேரத்தை டெல்லி தரப்பு எவ்வளவு நிராகரித்தது என்பதையும், காஷ்மீரில் படைகளை எல்லையை நோக்கி நகர்த்தும் முடிவை நோக்கி அரசு நகர்ந்தபோது, அரசுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் ராணுவத்திடமிருந்தும் எப்படியெல்லாம் எதிர்ப்புகள் வந்தன என்பதையும் சிதம்பரம் ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டியிருக்கிறார். “காஷ்மீர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறை வேற்றுவோம் எனும் நம்பிக்கையை நாம் உருவாக்க வேண்டும். நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்துக்குக் குந்தகம் ஏற்படாத வகையில், அவர்களுக்கான சட்டத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக நாம் இலங்கைக்குப் போதிக்கிறோம்; நாம் இங்கும் அதைச் செய்ய வேண்டும்” என்கிறார் சிதம்பரம்.

அடிப்படையில் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம். மாநிலங்களுக்கு இன்றைக்கு டெல்லி கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதற்கு மாநிலங்களிடை மன்றத்தை 10 ஆண்டுகளுக்குப் பின் அது கூட்டியிருப்பது ஒரு உதாரணம். பாதுகாப்பு, வெளியுறவு போன்ற மிக முக்கியமான துறைகள் நீங்கலாக ஏனைய துறைகளில் பெருமளவு அதிகாரத்தை மாநிலங்களோடு டெல்லி பகிர்ந்துகொள்ள வேண்டும். ராணுவம் எல்லைகளைப் பாதுகாக்கட்டும். எந்த ஒரு மாநிலத்தின் உள்பாதுகாப்பும் மாநிலக் காவல் துறையிடமே இருக்கட்டும். நவீனப்படுத்தப்பட்ட, அந்தந்தப் பிராந்திய மக்களைப் பெருமளவில் கொண்ட இன்றைய திரிபுராவின் காவல் துறை, ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை எப்படி முடிவுக்குக் கொண்டுவந்தது என்பதும், அமைதிச் சூழலை எப்படி இணக்கமாக உருவாக்கியது என்பதும் டெல்லி அகர்தலாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம். மேலும், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் போன்ற ஒரு ஜனநாயக விரோதச் சட்டத்தை இந்தியா முடிவுக்குக் கொண்டுவரவும் காஷ்மீர் ஒரு வரலாற்றுத் தருணத்தை நமக்கு வழங்குகிறது. இந்தச் சமயத்தில் அந்த முடிவை எடுப்பது காஷ்மீரிகளிடம் இந்திய அரசு இழந்திருக்கும் நம்பகத்தன்மையை மீடமீட்டெடுக்கவும் கூடுதலாக உதவும்.

அந்தந்த மாநில மக்களை அவர்களைக் கொண்டே முழுமையாக ஆள விடுவதும் உண்மையான சுயாட்சியை மாநிலங்களுக்கு வழங்குவதும் எந்த வகையிலும் இந்திய இறையாண்மைக்குக் கேடு விளைவிக்கக் கூடியது அல்ல. மாறாக இந்திய மனதில் உறைந்திருக்கும் பிரிவினை அச்சமும், அந்த அச்சம் வெளிப்படுத்தும் அடக்குமுறையும், அண்டை நாடுகளிலிருந்து போடப்படும் தூபமும் இந்தியாவின் கொடூரக் கனவை நிஜமாக்கிவிடும் அபாயம் கொண்டவை.

காஷ்மீர் போன்ற உலகின் நீண்ட காலமாக இழுத் தடிக்கும் ஒரு விவகாரத்தைத் தீர்வை நோக்கி நகர்த்த துணிச்சலும் அன்பும் நிறைந்த ஒரு பெரிய மனம் மட்டுமே நமக்குத் தேவைப்படுகிறது. கோபத்தினூடே வெளிப்படும் அன்புக்கான கோரிக்கையையும் புறக்கணிப்பின் வலியையும் புரிந்துகொள்ளும் மனம்; கல்லோடு வருபவர்களைக் கட்டியணைத்து ஆறுதல் பகிர, கைகளை நீட்டி நிற்கத் துணியும் மனம். இந்திய அரசியல் சட்டம் அப்படியான மனதுக்கு எந்தத் தடையையும் விதிக்கவில்லை. அது உறுதியளிக்கும் இந்நாட்டு குடிமக்கள் அனைவருக்குமான சமத்துவத்தையும் சமநிலையையும் காஷ்மீரிகளாலும் உணர முடிந்தால் காஷ்மீரிகள் கல்லெடுக்க என்ன தேவை இருக்கிறது? டெல்லி முதலில் நம்பிக்கையை காஷ்மீரில் விதைக்கட்டும். அது அறுவடையாகும்போதுதான் அங்கு தேசத்தின் வளர்ச்சியைப் பற்றி நாம் விவாதிக்க முடியும்!

நன்றி தி இந்து, (தமிழ்) 22.07.2016 

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
Share:

Thursday, July 21, 2016

இஸ்லாம் வாழ்வியல்: நன்றாக உபசரியுங்கள்

”விருந்தினரை உபசரிப்பது சம்பந்தமாக நபிகளார் மக்களிடையே ஆர்வமூட்டி வந்தார். இந்த உபசரிப்பை இறைநம்பிக்கையுடன் சம்பந்தப்படுத்தி, ”இறைவனையும், மறுமையையும் நம்பும் ஒருவர் தமது விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்!” – என்று அறிவுறுத்தியுள்ளார்” - இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


சலாம் என்னும் முகமன் கூறி, இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்பதிலிருந்து ஆரம்பித்து, அறுசுவை உணவைப் படைப்பது, தங்க ஏற்பாடு செய்வது, மனம் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, சக நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, துளியும் கண்ணியக் குறைவின்றி பார்த்துக் கொள்வது என்று ஒரு நீண்ட பட்டியல் நல்விருந்தோம்பலில் அடங்கும்.

அதேபோல, விருந்தளிப்பவர், விருந்தினரை உபசரிப்பதற்கென்று பணியாட்களை அமர்த்தாமல் தாமே முன்னின்று உபசரிப்பது அன்பை அதிகரிக்கும். தமது இல்லத்துக்கு வருகைத் தரும் விருந்தாளிகளை நபிகளார் அன்புடன் வரவேற்று அழைத்துச் செல்வதோடு தம் கைப்பட விருந்துப் படைத்து மகிழ்வார். விருந்தினர், ”போதும்…! போதும்..!” - என்று சொல்லும்வரை வயிறு நிறைய உணவை பறிமாறுவார்.

விருந்தினருக்கான ஏற்பாடுகளை ஓடியாடி பிறர் கவனம் கவரும்படி வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாகவே செய்வது நல்லது. ஏனென்றால், கூச்சத்தால் நமது உணவு ஏற்பாடுகளை விருந்தினர் மறுத்துவிடலாம். தமது வருகையால் உபசரிப்பவர் தேவையின்றி சிரமத்துக்குள்ளாவதாக அவர் நினைத்துவிடலாம்.  இதனால், விருந்தினரை உபசரிக்கும் நல்வாய்ப்பு நழுவிவிடும்.

விருந்தினரை உபசரிப்பது சம்பந்தமாக நபிகளார் மக்களிடையே ஆர்வமூட்டி வந்தார். இந்த உபசரிப்பை இறைநம்பிக்கையுடன் சம்பந்தப்படுத்தி, ”இறைவனையும், மறுமையையும் நம்பும் ஒருவர் தமது விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்!” – என்று அறிவுறுத்தியுள்ளார்.

விருந்தினரை உபசரிப்பவர் அன்பு ஊற்றெடுக்கும் மன மகிழ்வோடு ஆன்மிக வாழ்வியலின் ஓர் அங்கமாக விருந்தினரை உபசரிக்க வேண்டும். அதேபோல, விருந்தினரும் அதே உணர்வுடன் உபசரிப்பவருடன் கண்ணியத்துடன் நடந்து கொண்டு அவரது உபசரிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விருந்தினரின் தேவைகள் மிகவும் முக்கியமானது. குளிக்க, இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக் கொள்ள, உடல் நலத்தையொட்டி சாப்பிடும்  நேரத்தை அறிந்து உணவு படைப்பது சிறந்தது. களைப்புடனிருக்கும் விருந்தினரோடு அமர்ந்துகொண்டு அரட்டையடிப்பதும், அவரை ஓய்வெடுக்கச் செய்யாமல் நடந்து கொள்வதும் விரும்பத்தக்கதல்ல. நேரத்தோடு விருந்தினர் தூங்க ஏற்பாடு செய்யாமல் அவரையும் தூங்கவிடாமல், தானும் தூங்காமல் நடந்து கொள்வது சிறந்த பழக்கமல்ல.

ஒவ்வொருவருடைய உணவையும் நிர்ணயிப்பவன் இறைவன்தான் என்பது இறைநம்பிக்கை. இதன் மூலம், விருந்தினருக்காக தாம் படைக்கும் உணவு இறைவன் அவருக்காக தன் மூலமாக வழங்கும் உணவு. அது விருந்தினரின் உாிமை என்ற மனப்பான்மையைத் தோற்றுவிக்கும்.

விருந்தினரைக் கண்ணியப்படுத்துவது என்பது தன்னைத்தானே கண்ணியப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

”விருந்தினர் உபசரிப்பு மூன்று நாட்களாகும். அதற்கு மேல் அவரை உபசரிப்பது தர்மத்தில் அடங்கும்!” - என்று ஒரு எல்லையை நிர்ணயித்துள்ளார் நபிகளார்.

இஸ்லாமிய உலகின் சட்ட வல்லுநர், பெரும் அறிவு ஜீவிகளில் மிகவும் முக்கியமானவர்களில் இருவர் இமாம் ஷாஃபி மற்றும் இமாம் மாலிக் ஆவார்கள்.

ஒருமுறை இமாம் ஷாஃபி இமாம் மாலிக்கின் விருந்தினராக சென்றார்.

அப்போது இமாம் ஷாஃபிக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் இமாம் மாலிக் தாமே முன்னின்று செய்ததோடு, அவர் இரவில் உறங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

காலை வைகறைத் தொழுகை நேரத்தில் யாரோ சலாம் கூறி தம்மை எழுப்புவதை அறிந்த இமாம் ஷாஃபி எழுந்து பார்த்தபோது, அங்கே முகம், கை-கால்களை அலம்பிக் கொள்ள தண்ணீரை குவளையில் ஏந்தியவாறு புன்முறுவலுடன் இமாம் மாலிக் நின்றிருப்பதைக் கண்டார்.

சங்கடத்துடன் நெளிந்த ஷாஃபியிடம் இமாம் மாலிக், ”சகோதரரே! நீங்கள் சங்கடமடைய தேவையில்லை. ஏனென்றால் விருந்தினருக்கு சேவைப் புரிவது சிறப்புக்குரிய எனது கடமையாகும்!” – என்றார்.

அதேபோல, விருந்திராக சென்றிருப்பவர் விருந்தளிக்கும் வீட்டார் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தது சிறியளவிலான அன்பளிப்புகளை  கொடுப்பது அன்பு பறிமாற்றத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

•    விருந்தளிப்பவர் வீட்டில் முக்கியமான தேவைகள் அன்றி ஒருகாலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது.
•    ”விருந்தினர் அதற்கு மேலும் கவனிக்க முடியாததன் விளைவாக விருந்தளிப்பவர் பாவியாகும்விதமாக அவரது இல்லத்தில் தங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல!” – என்று நபிகளார் எச்சரிக்கிறார்.
•    விருந்துபசாரத்தை ஏற்றுக் கொள்ள செல்பவர் அந்த விருந்தின் தொடர்ச்சியாக தானும் அவரை விருந்துபசாரத்துக்கு அழைக்க வேண்டும்.
•    விருந்தினராக செல்லும்போது தங்கும் நிலை ஏற்படும் என்ற கட்டத்தில் தனக்குத் தேவையான சிறியளவிலான விரிப்பு, சோப்பு – சீப்பு, துவாலை என்று அத்யாவசதியத் தேவைதளை எடுத்துச் செல்வது நல்லது.
•    விருந்தளிப்பவரின் பணிகள் எவ்வகையிலும் தம்மால் தடைப்படக் கூடாது
•    விருந்தளிப்பவரின் ஒவ்வொரு உபசரிப்பை ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் அவருக்கு நன்றி சொல்வது சிறந்த பண்பாகும்.
•    எளிதில் கிடைக்காத எந்த பொருளையும் கேட்கக் கூடாது.
•    விருந்தளிப்பவர் ஏதாவது பணிகளுக்காக வெளியே சென்றிருக்கும்போது, அவரது வீட்டாரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

விருந்தினர் தனக்கு விருந்தளித்தவர் நலனுக்காக, ”இறைவா, இந்தக் குடும்பத்தாரின் வாழ்வியல் தேட்டத்தில் அருள்பொழிவாயாக! இவர்களை மன்னித்தருள்வாயாக! இன்னும் இவர்கள் மீது  கருணைச் சொரிவாயாக!” – என்று பிரார்த்திப்பது சிறந்தது.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 21.07.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை) 

Share:

Monday, July 18, 2016

இஸ்லாம் வாழ்வியல்: இறைவன் பேசமாட்டான்!

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அன்சாரித் தோழர் திரும்பவும் நபிகளாரின் அவைக்கு வந்தார். ”இறைவனின் தூதரே, தாங்கள் சொன்னபடியே இந்த பதினைந்து நாட்களும் விறகு வெட்டி விற்று குடும்பத்தாரின் தேவைகள் போக இதோ இந்த பத்து திர்ஹம்களை சேமித்துள்ளேன்!” என்றார்.- இக்வான்  அமீர் 

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நபிகளாரின் திருச்சபைக்கு மதீனாவின் அன்சாரித் தோழர் ஒருவர் வந்தார். தனக்கு ஏதாவது பொருளாதார உதவி செய்யும்படி வேண்டி நின்றார்.

”சகோதரரே..! உம்மிடம் ஏதாவது பொருளிருக்கிறதா? – என்று நபிகளார் அவரிடம் விசாரித்தார்.

”இறைவனின் தூதரே, தரையில் விரித்து படுக்க, போர்வையாக பயன்படுத்தும் விரிப்பொன்றும், ஒரு குவளையையும் தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை!” – என்றார் தமது ஏழ்மைநிலையை வெளிப்படுத்தியவாறு உதவி கேட்டு வந்தவர்.

”சரி அந்த இரண்டையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” - என்று அந்த அன்சாரித் தோழரைப் பணித்தார் நபிகளார்.

விரைவிலேயே அந்த இரண்டு பொருட்களும் கொண்டுவரப்பட்டன.

நபிகளார் விரிப்பையும், குவளையையும் ஏலம் விட்டார். இரண்டு திர்ஹம் கிடைத்தது. அவற்றை அன்சாரித் தோழரிடம் அளித்த நபிகளார், ”சகோதரரே! இதோ இவற்றில் ஒரு திர்ஹமுக்கு ஏதாவது உணவுப் பொருட்களை வாங்கிச் சென்று வீட்டாருக்கு வழங்குங்கள்.  இரண்டாவது திர்ஹத்தை வைத்து ஒரு கோடாரியை வாங்கி வாருங்கள்!” – என்றார்.

அன்சாரித் தோழர் நபிகளார் சொன்னது போலவே செய்தார். ஒரு திர்ஹமுக்கு உணவுப் பொருட்களை வாங்கி வீட்டாருக்கு கொடுத்தார். ஒரு திர்ஹமுக்கு கோடாரியையும் வாங்கிக் கொண்டு நபிகளாரிடம் வந்தார்.

கோடாரியைப் பெற்றுக் கொண்ட நபிகளார் தம் கைப்பட ஒரு கைப்பிடியைச் செய்து பொருத்தி அந்தத் தோழரிடம் கொடுத்தார்.

”சகோதரரே, நான் சொல்வதைப் போலச் செய்யுங்கள். தினமும் காட்டிற்கு சென்று விறகை வெட்டி அதை கடைவீதிக்குக் கொண்டு சென்று விற்று வாருங்கள். பதினைந்து நாட்கள் கழித்து என்னை வந்து பாருங்கள்!”என்றார் நபிகளார்.

அன்சாரித் தோழர் நபிகளார் சொன்னபடியே நடந்து கொண்டார்.

நாள்தோறும் காட்டுக்கு செல்வதும், விறகு வெட்டி விற்பதுமாய் நாட்களைக் கழித்தார்.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அன்சாரித் தோழர் திரும்பவும் நபிகளாரின் அவைக்கு வந்தார். ”இறைவனின் தூதரே, தாங்கள் சொன்னபடியே இந்த பதினைந்து நாட்களும் விறகு வெட்டி விற்று குடும்பத்தாரின் தேவைகள் போக இதோ இந்த பத்து திர்ஹம்களை சேமித்துள்ளேன்!” என்றார்.

நபிகளாரின் திருமுகம் மகிழ்ச்சியால் பௌர்ணமி நிலவாய் தகதகத்தது.

”சகோதரரே! வியர்வைச் சிந்தி உமது உழைப்பால் ஈட்டிய இந்தத் தொகை நீங்கள் உதவி கேட்டு யாசிப்பதைவிட சிறந்தது. இது மறுமை நாளன்று உங்கள் முகத்தில் படிய இருந்த யாசிப்பின் கறையையும் போக்கிவிட்டது!” – என்று யாசிக்கும் செயலிலிருந்து அவரைத் தடுத்து உழைப்பின் பக்கம் திசைத்திருப்பி விட்டார்.


உழைத்து ஈட்டும் வருமானம் மற்றும் பொய்மை, ஏமாற்று தில்லுமுல்லுகள் கலக்காமல் வணிகத்தால் ஈட்டிய  வருமானம் மற்ற எல்லா வருவாய்விட  சிறந்ததாகும்.

பொய்ப் பித்தலாட்டங்கள் செய்து பொருளீட்டும் வணிகர்களிடம் மறுமை நாளில் இறைவன் பேசமாட்டான். அவர்களின் குற்றங்குறைகளை மன்னித்து சுவனத்தில் நுழையவும் விட மாட்டான். மிகவும் கைச்சேதமான நிலைமை இது.

பொய் சத்தியம செய்து ஈட்டப்படும் வருமானம் ஆரம்பத்தில் வளர்ச்சியைப் போல தெரிந்தாலும் உண்மையில் அது வணிகத்தின் வளர்ச்சியை குன்றச் செய்துவிடும்.

நாணயமற்ற வணிகம் இஸ்லாத்தின் பார்வையில் ஹராம் எனப்படும் தடுக்கப்பட்ட ஒன்றாகிவிடும்.

நாணயமான வணிகன் மறுமையில் நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் இவர்களுடன் எழுப்பப்படுவான்.

நுகர்பொருளின் தரத்தை உறுதிப்படுத்துவது நுகர்வோரை அதிகரித்துத் தரும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத் தரும்.

”எவர் வணிகத்தில் மென்மையையும், நல்லொழுக்கத்தையும் பின்பற்றி வருகிறாரோ அத்தகையவர்களிடம் இறைவன் கருணைக் காட்டுவான்!” – என்று நற்செய்தியைத் தெரிவிக்கிறார் நபிகளார்.

•    நுகர்வோர் நலன் நாடுவது
•    வணிகத்தில் நேரந்தவறாமையைக் கடைப்பிடிப்பது
•    பணியாளர்களுடன் இணைந்து கடுமையாக உழைப்பது
• பணியாளரிடம் தாராளமனப்பான்மையுடன் நடந்து கொள்வது சிறந்த வணிகரின் இலக்கணங்களாகும்.

ஒருமுறை மதீனாவின் கடைவீதியில் நபிகளார் நடந்து சென்றார்.

வழியில் தானியக் குவியல் ஒன்றைக் கண்டார். சட்டென்று நின்றவர் தானியக் குவியலுக்குள் கையை விட்டு தானியங்களை அள்ளினார். அத்தனையும் ஈரமாக இருக்கக் கண்டு முகம் சுளித்தார்.

நிலைமையைப் புரிந்து கொண்ட அந்த வணிகர், ”இறைவனின் திருத்தூதரே! எதிர்பாராதவிதமாக பெய்த மழையில் இந்தத் தானியக் குவியல் நனைந்துவிட்டது!” – என்று விளக்கமளித்தார்.

”அப்படியானல், இவற்றை வாங்க வருபவரிடம் இதன் உண்மையான தரத்தை தெரிவித்து விற்பனைச் செய்யுங்கள்” – என்று அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

விலையேற்றத்துக்காக உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து மக்களை சிரமத்துக்குள்ளாக்கும் வணிகரை நபிகளார் பாவிகள் என்று கடுமையாக விமர்சிக்கிறார்.

அதேபோல, அளவைகளில் மோசடி செய்பவருக்கு கேடுதான் என்று திருக்குர்ஆனும் சாடுகிறது.

வணிகத்தில் அறியாமல் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக அதிகமாக தான, தர்மங்கள் செய்யும்படியும் நபிகளார் அறிவுறுத்துகிறார்.

(தி இந்து ஆனந்த ஜோதி இணைப்பில் 14.07.2016 அன்று  வெளியான எனது கட்டுரை) 


Share:

Saturday, July 16, 2016

நிகழ்வுகள்: துருக்கி: ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு முறியடிப்பு. 200 க்கும் அதிகமான மக்கள் உயிர்தியாகம்!


மக்கள் புரட்சியை அடுத்து, துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் துருக்கியில் மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தையொட்டி நாடு முழுக்க நடந்த மோதல்களில் சுமார் 200 க்கும் அதிகமான பேர் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது.

துருக்கியின் இரு பெரு நகரங்களான இஸ்தான்புல் மற்றும் அங்காராவில் ஒரே இரவில் மக்கள் தெருவில் இறங்கி ராணுவத்துக்கு எதிராகப் போராடினார்கள். அப்போது, துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதற்கு காரணமான 1500 க்கும் மேற்பட்ட ஆயுத படையினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி அதிபர் ரீஸெப் தாயிப் எர்துவான் தொலைக்காட்சி நிகழ்த்திய உரையில், ராணுவத்தின் கலக முயற்சியைக் கடுமையாகக் கண்டித்து பேசினார். அப்போது, ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னுடைய அரசை கவிழ்க்க செய்யப்பட்ட முயற்சிகள் தேசத்துரோக செயல் என்றும், ராணுவத்தினிடையே உள்ள தேசத்துரோகிகளை கண்டறிந்து உடன் நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, துருக்கி ராணுவத்தின் உயர் பதவிகளிலிருந்து 29 கர்ணல் மற்றும் 5 தளபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 துருக்கி அதிபர் எர்துவான் தொலைக்காட்சி உரையை தெருக்களில் திரளாக திரண்டு நின்ற பொதுமக்கள் ”ஒரே தேசம், ஒரு கொடி, ஒரே தாயகம்!” - என்று முழக்கங்களோடு ஆரவரமாக வரவேற்றார்கள்.

பாோஸ்போரஸ் நீரிணை பாலத்தில் நிலை கொண்டிந்த கவச டாங்கிகளை விட்டு, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட படையினர் கைகளை மேலே தூக்கியவாறு சரணடைய சாரசாரியாக வருவதை துருக்கி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஜனநாயகத்தை நிலைநாட்ட துருக்கி மக்களின் உயிர் தியாகம் நவீன வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பறிக்கப்பட வேண்டியது. 


Share:

Sunday, July 10, 2016

அழைப்பது நம் கடமை - 16: 'நீதியை கடைப்பிடியுங்கள்!'

மனித விழுமியங்களின் உயரிய சிகரமான இஸ்லாம், போரில் ஈடுபடாத அப்பாவிகளையும், பெண்கள், குழந்தைகள், முதியோர், ஊனமுற்றோர், சரணடைந்த வீரர்கள் இவர்களைக் கொல்வதற்கோ, துன்புறுத்துவதற்கோ ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

ஆப்கானிஸ்தான், இராக் நாடுகளுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினர் மேற்கொண்ட அட்டுழியப் பின்னணியில் இஸ்லாத்தின் கொள்கைப்பூர்வமான கருத்துக்களை அழைப்பாளர்கள் உள்வாங்க வேண்டும்.

அது போர்க்காலமோ, அமைதி காலமோ எந்தச் சூழலானாலும் இஸ்லாம் திட்டவட்டமான நடைமுறைகளையே அமல்படுத்தச் சொல்கிறது. மனித உரிமை மீறல்களை அது என்றும் அனுமதிப்பதில்லை. இஸ்லாமிய சட்டவியல் போர்க்காலத்தில் சில சட்டங்கள், போரில்லாத காலத்தில் சில சட்டங்கள் என்று கூறுபோடுவதில்லை.

படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்
 உலக வரலாற்றிலேயே அவை சமயம் சார்ந்த வரலாறானாலும் அல்லது அரசியல் சார்ந்த வரலாறானாலும் கைது செய்யப்பட்ட எதிரிகளிடம் யாரும் பரிவையும், அன்பையும் காட்டியதில்லை. அவர்களது உரிமைகளுக்கு உயர்ந்த மதிப்பளித்ததும் இல்லை; இஸ்லாத்தைத் தவிர! இந்த மனித உரிமைகள் நேற்றைய ஜெனீவா உடன்படிக்கைக்கு முன்னமே 1434 ஆண்டுகளாக இஸ்லாத்தில் நடைமுறையில் உள்ள மானுடவியல் சட்டங்கள்.

"இன்னும் உங்களோடு போர் புரிபவர்களுடன் நீங்கள் இறைவனின் பாதையில் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீறாதீர்கள். ஏனென்றால்.. வரம்பு மீறுபவர்களை இறைவன் நேசிப்பதில்லை!"- (2:190) என்கிறது திருக்குர்ஆன்.

போருக்கான அனுமதி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் அமைந்தது.

1. வலியச் சென்று தாக்குவது கூடாது. போரிடுவது தற்காப்புக்காக மட்டுமே!

2. அந்தப் போரும் வரம்பு மீறாத நிலையில் இருக்க வேண்டும்.

தற்காப்புக்கான போர்கூட ஆயுதமேந்தாத அப்பாவிகளுக்கு எதிரான போராக இருக்கக்கூடாது.

போரில் எதிரி வீரர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்க இயலாதது. அப்படி பிடிபடும் வீரர்கள் சம்பந்தமாக இஸ்லாம் சொல்வது இதுதான்:

1. எதிரி நாட்டு கைதிகளை பெருந்தன்மையோடு மன்னித்து விடுதலை செய்துவிட வேண்டும். அல்லது

2. மீட்புப் பணம் பெற்று அவர்களை விடுதலைச் செய்திட வேண்டும்.


படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்

திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது:

"இறை நிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திக்க நேர்ந்தால்.. முதல் வேலை கொல்வதுதான்! அவ்வாறு அவர்களை நீங்கள் முற்றிலும் அடக்கி ஒடுக்கிவிட்டால் .. கைதிகளை இறுக்கமாக கட்டிவிடுங்கள். அதன் பிறகு - அவர்கள் மீது நீங்கள் - கருணை காட்டலாம் அல்லது ஈட்டுத் தொகை பெறலாம். உங்களுக்கு இதற்கான உரிமை இருக்கிறது. போர் ஓயும் வரையில் இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய பணி!"- (47:4)

போர்க்களத்தில் போரிடும் வீரருக்கு இரண்டே இரண்ட வழிகள்தான் இருக்கும்: ஒன்று கொல்வது அல்லது கொல்லப்படுவது.

எதிரிகளைக் கண்டதும், துப்பாக்கி விசையை இயக்காதவர் எதிரிகளின் தோட்டாக்களால் கொல்லப்படுவார். அதேபோல, தனது தரப்பு படையினருக்கு எந்த இழப்பீடும் நேராமல் பார்த்துக் கொள்வது சக படை வீரனின் மற்றொரு இன்றியமையாத பணி. அதனால், போர்முனையில் எதிரியின் தரப்பில் முன்னேறிச் செல்லும்போது நடைமுறை வழக்கப்படி காயமுற்று வீழ்ந்திருக்கும் வீரர்கள்கூட ஆபத்தானவர்கள்தான்! அவர்கள் எந்த நிலையிலும், துப்பாக்கியை இயக்கலாம். கையெறி குண்டுகளை வீசலாம். அதனால், அவர்களின் ஆயுதங்களைப் பறித்து நிராயுதபாணிகளாக்கி விலங்கிடுவது அல்லது தேவைக்கேற்ப மருத்துவ சிகிச்சையளிப்பது என்பதே திருக்குர்ஆன் வலியுறுத்தும் மனிதநேயப் பண்பாகும்.

ஆனால், தற்போதைய போர்களில் இந்த உயரிய நெறிமுறைகள் பின்பற்றப் படுவதில்லை. வீழ்ந்து கிடக்கும் வீரன் நெஞ்சில் பைனட் என்னும் துப்பாக்கிச் சனியனை செருகி கொலை செய்துவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போரில் எதிரிகளோடு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக இஸ்லாம் திட்டவட்டமாக வழிகாட்டுகிறது.

போர் நியதிப்படி கொல்வது அல்லது வெற்றிபெற்றதும் கைது செய்யப்பட்டவர்களை கருணை காட்டி மன்னித்தோ, பணயத் தொகையைப் பெற்றுக் கொண்டோ விடுதலை செய்துவிடுவது.

படம்: இராக்கின் அபுகாரிப் சிறைகளில் அமொிக்கா நடத்திய கொடுமைகள்
இதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை. கைதிகளை சிறைப்பிடித்து விலங்குகளைப் போல கூண்டுகளில் அடைத்து நிர்வாணமாக்கி, துன்புறுத்தி, கற்பழித்து, வெறிநாய்களை ஏவிவிட்டு.. கைதிகள் படும் வேதனைகளைப் புகைப்படம் எடுத்து ரசித்து.. இவை எல்லாம் நாகரீக உச்சாணியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா போன்ற மனித குல விரோதிகளுக்குப் பொருந்தலாம். ஆனால், இஸ்லாம் இந்த மனித உரிமை மீறல்களை, காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிப்பதேயில்லை.

இரண்டாவது அம்சமான பணயத் தொகை பெறுவது என்பது...

கைது செய்யப்பட்டவர்கள் நிபந்தனைகள், ஒப்பந்தங்கள் அடிப்படையிலோ, மீட்புத் தொகையின் அடிப்படையிலோ, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாகவோ செய்யப்படும் விடுதலையாக இருக்கலாம்.

ஆனால், எக்காரணம் கொண்டும் கைது செய்யப்படும் எதிரி வீரர்களை கம்பிகளுக்குப் பின்னால் முடிவில்லாமல் அடைத்துத் துன்புறுத்துவதற்கு அனுமதியில்லை!

- இறைவன் நாடினால்.. அழைப்பது தொடரும்.


Share:

Thursday, July 7, 2016

ரமலான் சிறப்புக்கட்டுரை: ஈந்து கனிந்த மனம்....!



வழியில், தெருவொன்றில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.

அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் சொல்லி.. வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

”மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார். • இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 

கருக்கலின் பிடியிலிருந்து கீழ்வானம் விடுபட்டு செந்நிற சாயலை  படரவிட்ட அந்த வைகறையிலேயே மதீனா விழித்துக் கொண்டது.

அன்று ரமலான் பண்டிகை. இறைவனின் கட்டளைகளை சிரமேற்று ஒரு மாதம் முழுக்க நோன்பு நோற்று இறைவனின் பேரன்பைப் பெற்று கொண்டாடும் நன்னாள்.

பெருநாள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக மதீனாவாசிகளை உற்சாகம் தொற்றிக் கொண்டது. பெரியவர், சிறியவர் பேதமில்லாமல் அவரவர் வசதிக்கேற்ப புத்தாடைகளை அணிந்திருந்தனர். ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்வதும், மகிழ்ச்சியைப் பறிமாறிக் கொள்வதுமாய் மதீனா நகரின் தெருக்கள் களைக்கட்டின.

நகரின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது ’ஈத்கா’ எனப்படும் சிறப்புத் தொழுகைகளுக்கான திடல்.

மக்கள் சாரிசாரியாக கிளம்பி தொழுகைத் திடலை அடைந்தார்கள். அதற்குரிய நேரத்தில், நபிகளாரின் தலைமையில் ரமளான் சிறப்புத் தொழுகையும் நடந்து முடிந்தது.

தொழுகைக்குப் பின்னர், ஒருவர் மற்றொருவரைக் கட்டியணைத்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டார்கள். வீட்டை நோக்கி நடந்தார்கள்.

எதிர்படுபவர்களுக்கு சலாம் மற்றும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டே நபிகளார் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

வழியில், தெருவொன்றில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். முழங்கால்களுக்கு இடையே முகம் புதைத்து அவன் அழுதுகொண்டிருந்தான்.

அருகில் சென்ற நபிகளார் சிறுவனுக்கு சலாம் சொல்லி.. வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

”மகனே! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அவனது தோளைப் பிடித்து ஆறுதலாக விசாரிக்கவும் செய்தார்.

சிறுவனோ தலையைத் தூக்காமலேயே, “தயவுசெய்து என்னை யாரும் தொந்திரவு செய்யாதீர்கள்?” – என்றான் அழுகையுடன் குலுங்கிக் கொண்டே!

சிறுவனின் தலையை கோதியவாறு நபிகளார், “மகனே! சந்தோஷமான இந்த ரமலான் பண்டிகை நாளில் ஏனய்யா அழுது கொண்டிருக்கிறாய்?” – என்று அன்பொழுக கேட்டார்.


இதமான அந்த ஸ்பரிசம் சிறுவனை தலை நிமிராமலேயே பேச வைத்தது.

”எனது தந்தையார் போரில் கொல்லப்பட்டு விட்டார். தாயாரோ வேறொருவரை மணம் புரிந்து கொண்டார். எனது மாற்றான் தகப்பனாரோ என்னை சேர்த்துக் கொள்வதேயில்லை! ரமளான் பண்டிகை நாளும் அதுவுமாய் நான் போட்டிருக்கும் இந்த உடைகளைத் தவிர அணிந்து கொள்ள வேறு ஆடைகளும் என்னிடம் இல்லை!” – என்று கூறிவிட்டு சிறுவன் “ஓ” வென்று அழலானான்.

நபிகளாரின் கண்கள் பனித்துவிட்டன. துக்கத்தால் நெஞ்சடைத்துக் கொண்டது.

”மகனே! உன் நிலைமைப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே சிறுவயதிலேயே பெற்றோரைப் பறிக்கொடுத்த அநாதைதான். அழாதே..!” என்று ஆறுதல் சொன்னார்.

இதைக் கேட்டதும் அழுது கொண்டிருந்த சிறுவன் ‘ஜுஹைர் பின் ஸாஹிர்’ தலைநிமிர்ந்து பார்த்தான்.

கலங்கிய கண்களோடு, நின்றிருந்த நபிகளாரைக் கண்டான்.

”இறைவனின் திருத்தூதரே! தாங்கள் … தாங்களா?” – மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தெழுந்தான்.

ஜுஹைரை அணைத்துக் கொண்ட நபிகளார், “மகனே! இதோ பார்… இன்று முதல் நான்தான் உனது தந்தை. எனது மனைவிதான் உனது தாயார்! எனது மகள் ஃபாத்திமாதான் உனது சகோதரி! என்ன சம்மதமா?” – என்றார் அன்பொழுக.

உலகின் மிகச் சிறந்த அரவணைப்பை வேண்டாம் என்றா சொல்வான் ஜுஹைர்?

அந்த அனாதைச் சிறுவனை தன்னுடன் அழைத்துச் சென்ற நபிகளார் அவனை குளிக்க வைத்து புத்தாடை அணிய வைத்தார்.  தன்னோடு இருத்தி சுவை மிகுந்த உணவைப் படைத்தார். ரமளான் பண்டிகையின் அத்தனை சந்தோஷத்தையும் அவனுக்குத் தந்தார்.

ஆம்..! ஏழைகளையும், அநாதைகளையும் அரவணைத்து ஈந்துதவும் நாளே ஈகைத் திருநாள் எனப்படும் ரமளான் பெருநாள்.

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! இதயம் கனிந்த ரமலான் வாழ்த்துக்கள்!

(தி இந்து, ஆனந்த ஜோதியில், 07.07.2016 அன்று பிரசுரமான ரமலான் சிறப்புக்கட்டுரை) 




Share:

Monday, July 4, 2016

இஸ்லாம் வாழ்வியல்: மறுமையிலும் பரிந்துரைக்கும் நோன்பு



இறைவழிபாடுகளில் மிக முக்கியமானது நோன்பு. நிகரற்ற பலன்களைத் தரக்கூடியது. அதனால்தான் எல்லா சமுதாயத்தாரும் நோன்பை மிக முக்கிய கடமையாக கருதுகின்றனர்.

“இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல, உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளோராகக் கூடும்!” – என்கிறது நோன்பைக் குறித்து திருக்குா்ஆன்.

நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பலவீனங்களிலிருந்து மனிதனை விலக்கி நல்லவனாக விளங்கச் செய்வதேயாகும். நோன்பாளி நோன்பின் நோக்கம் குறித்தும், அதன் குறிக்கோள் குறித்தும் அறியாமலிருப்பது நோன்பின் உயிரோட்டத்தைக் குலைத்துவிடும்.

இதை நபிகளார் இப்படி அறிவுறுத்துகிறார்:

“எவர் நோன்பு நோற்றிருந்தும், பொய் சொல்வதிலிருந்தும், பொய்யான முறையில் செயல்படுவதிலிருந்தும் விலகி வாழவில்லையோ அவர் பசித்திருப்பதைக் குறித்தும், தாகித்திருப்பதைக் குறித்தும் இறைவனுக்கு எவ்வித அக்கறையுமில்லை”

நோன்பின் குறிக்கோள் அறிந்து சுயமதிப்பீட்டுடன் நோன்பு நோற்பவரின் பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவதாக மற்றொரு இடத்தில் அறிவுறுத்துகிறார் நபிகளார்.

•    நோன்பு மனிதனுள் உருவாக்க இருக்கும் மாண்பை எண்ணி மார்க்கம் அனுமதித்த காரணங்களைத் தவிர நோன்பை விடாமல் கண்ணும், கருத்துமாய் நோன்பை கடைபிடிப்பது
•    நோன்பு அல்லாத காலங்களில் இருப்பது போன்றே நோன்பாளி உற்சாகத்துடன் இருப்பது
•    அனைத்து விதமான தீயச் செயல்களிலிருந்தும் விலகி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவது
•    அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என்று நோன்பு காலங்களைக் கடப்பதே உத்தமம்.

அந்தியில், நோன்பைத் திறக்கும்போது, இந்தப் பிரார்த்தனை இன்றியமையாதது

“இறைவா! என் நோன்பை ஏற்றுக் கொள்வாயாக! நீ வாக்களித்துள்ள நற்கூலியையும், பலன்களையும் தந்தருள்வாயாக!” 


நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

தீயச் செயல்களிலிருந்து காத்துக் கொள்ளும் கேடயம் போன்றது நோன்பு. மறுமையில் பரிந்துரைக்கும் தோழன்கூட.

“நான் இந்த மனிதனைப் பகலில் உண்பதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தடுத்திருந்தேன். இறைவா..! இவனுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!” – என்று மறுமை நாளில் நோன்பு பரிந்துரைப்பதாகவும், அந்த பரிந்துரையை இறைவன் ஏற்றுக் கொள்வதாகவும் நபிகளார் சொல்கிறார்.

பயணக்காலம், நோய், நோன்பின் கடுமை இன்னும் இது போன்ற இஸ்லாம் அனுமதித்த காரணங்களால் நோன்பை கைவிடுபவர் ரமளான் அல்லாத பிற நாட்களில், நோன்பு நோற்றுக் கொள்ளலாம்.

“ரமளான் மாதத்தில் நபிகளாருடன் குழுவாய் பயணம் செய்யும் வாய்ப்பொன்று ஏற்பட்டது. குழுவிலிருந்தவர் சிலர் நோன்பு நோற்றனர். இன்னும் சிலர் நோன்பு நோற்கவில்லை. அப்படி இருந்தும், இந்த இருசாரரும், ஒருவர் மற்றொருவர் மீது எந்த குற்றங்குறைகளையும் சொல்லவில்லை!” – என்கிறார் நபித் தோழர் அனஸ்.

நோன்பு திறக்க வசதியற்றவர் நோன்பு திறக்க ஏற்பாடுகள் செய்து தருவது மிகவும் புண்ணியச் செயல்.

ஒருமுறை நபிகளார் நோன்பு குறித்து தமது தோழர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார்:

“எவர் ரமளான் மாதத்தில், பிறருடைய நோன்பைத் திறக்க ஏற்பாடு செய்கிறாரோ, அதற்குப் பகரமாக இறைவன் அவருடைய பாவங்களை மன்னிக்கின்றான். மேலும், நரக நெருப்பிலிருந்து அவரைக் காக்கின்றான். நோன்பு திறக்க ஏற்பாடு செய்பவருக்கு நோன்பாளிகளுக்கிணையான நற்கூலி அளிக்கிறான். மேலும், நோன்பாளியின் நற்கூலியில் யாதொரு குறையும் ஏற்படுவதில்லை!”

தோழர்கள் வினவினார்கள்:

“இறைவனின் திருத்தூதரே! நோன்பாளிகளின் நோன்பு திறக்க ஏற்பாடு செய்ய, அவர்களுக்கு உணவளிக்க எங்கள் எல்லோரிடமும் அந்த வசதியில்லையே!”

அதற்கு நபிகளார் இப்படி பதிலளித்தார்:

“நீங்கள் ஒரு பேரீச்சம் பழம் கொடுத்தோ அல்லது சிறிது பாலைக் கொடுத்தோ அதுவும் இல்லாத போது ஒரு மடக்கு தண்ணீர் கொடுத்தோ பிறர் நோன்பு திறக்க ஏற்பாடு செய்தாலே போதுமானது. அதுவே உத்தமான செயல்!”

மனிதனைச் சீர்த்திருத்தம் செய்து நல்லவனாக்கும் பயிற்சி பட்டறையாக ரமளான் விளங்குவதால், அதன் நோக்கம் அறியாதவர்கள் வீணாகி விடுவார்கள் என்று நபிகளார் எச்சரிக்கிறார்:

“எத்தனையோ நோன்பாளிகள் நற்பேறற்றவராய் ஆகிவிடுகின்றனர். அவர்கள் தங்கள் நோன்பின் வாயிலாக பசியையும், தாகத்தையும் தவிர வேறெதையும் பெறுவதில்லை. நோன்பு கால இரவுகளில் தராவீஹ் (விசேஷத் தொழுகை) தொழுபவர்களில் எத்தனையோ பேர் அந்தத் தொழுகைகளுக்காக கண் விழித்திருந்ததைத் தவிர வேறெந்த பலனையும் பெறுவதில்லை!”

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 09.06.2016 பிரசுரமான எனது கட்டுரை) 
 
Share:

Saturday, July 2, 2016

இஸ்லாம் வாழ்வியல்: ரமலான் விருந்தினர்



மகத்தான விருந்தாளியை எதிர் நோக்கி முஸ்லிம் உலகம் காத்திருக்கிறது. எண்ணற்ற அருட்கொடைகளை பரிசுகளாய் சுமந்துவரும் ரமளான் என்னும் அந்த விருந்தாளியைக் குறித்து நபிகளார் அதற்கு முந்தைய மாதமான

ஷபானின் இறுதித் தேதியில் ஆற்றிய உரையில் இப்படி சொல்கிறார்:

“மக்களே! மகத்தான, பாக்கியங்கள் நிறைந்த மாதம் ஒன்று எதிர்பட இருக்கிறது. அந்த மாதத்தில் ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும் இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். மேலும், இரவுவேளைகளில் தராவீஹ் எனப்படும் தொழுகையைத் தொழுவது உபரி செயலாக ஆக்கியுள்ளான். எவர் அந்த மாதத்தில் ஒரு நன்மையை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் கட்டாய கடமையாக்கிய ஒரு செயலைச் செய்ததற்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் கடமையாக்கப்பட்ட ஒரு செயலை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்பான நற்கூலியைப் பெற்றுத்தரும்.

மகத்துவம் மிக்க மாதமான ரமலான் இறைவனின் பிரத்யேகமான கருணையை உள்ளடக்கிய மாதமாகும். அதனால், ரமலானை வரவேற்கும் விதமாக நபிகளார் ஷாபானின் இரண்டு வாரங்களுக்கு முன்பே அதை வரவேற்க தயாராகிவிடுவார்.  “அண்ணல் நபி மற்ற மாதங்களைவிட ஷாபான் மாதத்தில் அதிக நோன்பை கடைப்பிடிப்பார்கள்!” – என்கிறார் அவரது துணைவியார் ஆயிஷா நாச்சியார்.

ரமலானின் பிறைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டும் நபிகளார் பிறைத் தெரிந்ததும் நெஞ்சுருக, “இந்தப் பிறையை அமைதி, சாந்தியைத் தரும் பிறையாக ஆக்கியருள்வாயாக! உனக்கு பிடித்தமான நற்செயல்களை புரியும் பேற்றினை இதன் மூலம் எங்களுக்குத் தந்தருள்வாயாக!” – என்று பிராத்தனைப் புரிவார்.

ஆர்வத்துடனும், உத்வேகத்துடனும் தானும் தனது குடும்பத்தாரும், அண்டை, அயலாரும் நோன்பு நோற்பதற்கான சூழல்களை ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது. நோன்பு நோற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் ரமலானின் மதிப்பை முன்னிட்டு வெளிப்படையாக உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வது சிறப்பானது.

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால், அதிகதிகம், திருக்குர்ஆன் ஓதுவதையும் குர்ஆன் ஓதுவதை செவிமடுப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளவதும் சிறப்பானது.

ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் வானவர் தலைவர் ஜிப்ரீயல் (காப்ரியல்) நபிகளாருக்கு திருக்குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார். அதேபோல, நபிகளார் திருக்குர்ஆன் ஓதுவதையும் கேட்பார்.

ரமலான், ஒரு நற்செயல் பல மடங்காய் பல்கி பெருகும் மாதமாகையால், ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள், விதவைகள் ஆகியோரின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற கிடைக்கும் சந்தர்பத்தை நழுவவிடக்கூடாது. தேவையுள்ளோர் மீது கரிசனம் காட்டுவது, பொருளுதவி செய்வது. பொருள் உதவி செய்ய இயலாதோர் அவர்களுடன் மென்மையுடன் நடந்து கொள்வது. இனிய முறையில் பழகுவது. பணியாட்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது. அவர்களுக்கு இயன்றவரையிலான சலுகைகள் அளிப்பது என்று நற்செயல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே நபிகளார், கொடைவள்ளல் மனம் கொண்டவர். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள விரும்பாதவர். அத்தகையவர் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகதிகம் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அந்தக் கொடைத் தன்மை வேகமாக வீசும் பாலைவனப் புயல்போன்றிருக்கும் என்கிறது வரலாறு.


திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் கடைசி பத்து ஒற்றைப் படை நாட்களில் அருளப்பட்டதால், கண்ணியம் மிக்க அந்த நாட்களின் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது. அந்த நாட்களின் முக்கியம் குறித்து திருக்குர்ஆன் இப்படி எடுத்துரைக்கிறது:

“திண்ணமாக இந்த திருக்குர்ஆனை கண்ணியம் மிக்க ஓர் இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியம் மிக்க அந்த இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? மாட்சிமை மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். அதில் வானவர்களும், ஜிப்ரீயலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்திய இரவாய் திகழ்கிறது… வைகறை வரை..!

ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் நபிகளார் அதிகம் இப்படி இறைஞ்சுபவராக இருந்தார்: “இறைவா! நீ பெரிதும் மன்னிப்பவன். மன்னிப்பதை விருப்பமாக கொண்டவன். எனவே என்னை மன்னித்தருள்வாய் இறைவா!”

சிறப்பு மிக்க இந்த கடைசி ஒற்றைப்டை இரவுகளில் மறைந்துள்ள ஆயிரம் மாதங்களைவிட சிறந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவின் பாக்கியங்களை இழப்பவன் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்தவன் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 02.06.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)


Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive