NewsBlog

Saturday, July 2, 2016

இஸ்லாம் வாழ்வியல்: ரமலான் விருந்தினர்



மகத்தான விருந்தாளியை எதிர் நோக்கி முஸ்லிம் உலகம் காத்திருக்கிறது. எண்ணற்ற அருட்கொடைகளை பரிசுகளாய் சுமந்துவரும் ரமளான் என்னும் அந்த விருந்தாளியைக் குறித்து நபிகளார் அதற்கு முந்தைய மாதமான

ஷபானின் இறுதித் தேதியில் ஆற்றிய உரையில் இப்படி சொல்கிறார்:

“மக்களே! மகத்தான, பாக்கியங்கள் நிறைந்த மாதம் ஒன்று எதிர்பட இருக்கிறது. அந்த மாதத்தில் ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும் இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். மேலும், இரவுவேளைகளில் தராவீஹ் எனப்படும் தொழுகையைத் தொழுவது உபரி செயலாக ஆக்கியுள்ளான். எவர் அந்த மாதத்தில் ஒரு நன்மையை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் கட்டாய கடமையாக்கிய ஒரு செயலைச் செய்ததற்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் கடமையாக்கப்பட்ட ஒரு செயலை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்பான நற்கூலியைப் பெற்றுத்தரும்.

மகத்துவம் மிக்க மாதமான ரமலான் இறைவனின் பிரத்யேகமான கருணையை உள்ளடக்கிய மாதமாகும். அதனால், ரமலானை வரவேற்கும் விதமாக நபிகளார் ஷாபானின் இரண்டு வாரங்களுக்கு முன்பே அதை வரவேற்க தயாராகிவிடுவார்.  “அண்ணல் நபி மற்ற மாதங்களைவிட ஷாபான் மாதத்தில் அதிக நோன்பை கடைப்பிடிப்பார்கள்!” – என்கிறார் அவரது துணைவியார் ஆயிஷா நாச்சியார்.

ரமலானின் பிறைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டும் நபிகளார் பிறைத் தெரிந்ததும் நெஞ்சுருக, “இந்தப் பிறையை அமைதி, சாந்தியைத் தரும் பிறையாக ஆக்கியருள்வாயாக! உனக்கு பிடித்தமான நற்செயல்களை புரியும் பேற்றினை இதன் மூலம் எங்களுக்குத் தந்தருள்வாயாக!” – என்று பிராத்தனைப் புரிவார்.

ஆர்வத்துடனும், உத்வேகத்துடனும் தானும் தனது குடும்பத்தாரும், அண்டை, அயலாரும் நோன்பு நோற்பதற்கான சூழல்களை ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது. நோன்பு நோற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் ரமலானின் மதிப்பை முன்னிட்டு வெளிப்படையாக உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வது சிறப்பானது.

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால், அதிகதிகம், திருக்குர்ஆன் ஓதுவதையும் குர்ஆன் ஓதுவதை செவிமடுப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளவதும் சிறப்பானது.

ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் வானவர் தலைவர் ஜிப்ரீயல் (காப்ரியல்) நபிகளாருக்கு திருக்குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார். அதேபோல, நபிகளார் திருக்குர்ஆன் ஓதுவதையும் கேட்பார்.

ரமலான், ஒரு நற்செயல் பல மடங்காய் பல்கி பெருகும் மாதமாகையால், ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள், விதவைகள் ஆகியோரின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற கிடைக்கும் சந்தர்பத்தை நழுவவிடக்கூடாது. தேவையுள்ளோர் மீது கரிசனம் காட்டுவது, பொருளுதவி செய்வது. பொருள் உதவி செய்ய இயலாதோர் அவர்களுடன் மென்மையுடன் நடந்து கொள்வது. இனிய முறையில் பழகுவது. பணியாட்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது. அவர்களுக்கு இயன்றவரையிலான சலுகைகள் அளிப்பது என்று நற்செயல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே நபிகளார், கொடைவள்ளல் மனம் கொண்டவர். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள விரும்பாதவர். அத்தகையவர் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகதிகம் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அந்தக் கொடைத் தன்மை வேகமாக வீசும் பாலைவனப் புயல்போன்றிருக்கும் என்கிறது வரலாறு.


திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் கடைசி பத்து ஒற்றைப் படை நாட்களில் அருளப்பட்டதால், கண்ணியம் மிக்க அந்த நாட்களின் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது. அந்த நாட்களின் முக்கியம் குறித்து திருக்குர்ஆன் இப்படி எடுத்துரைக்கிறது:

“திண்ணமாக இந்த திருக்குர்ஆனை கண்ணியம் மிக்க ஓர் இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியம் மிக்க அந்த இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? மாட்சிமை மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். அதில் வானவர்களும், ஜிப்ரீயலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்திய இரவாய் திகழ்கிறது… வைகறை வரை..!

ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் நபிகளார் அதிகம் இப்படி இறைஞ்சுபவராக இருந்தார்: “இறைவா! நீ பெரிதும் மன்னிப்பவன். மன்னிப்பதை விருப்பமாக கொண்டவன். எனவே என்னை மன்னித்தருள்வாய் இறைவா!”

சிறப்பு மிக்க இந்த கடைசி ஒற்றைப்டை இரவுகளில் மறைந்துள்ள ஆயிரம் மாதங்களைவிட சிறந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவின் பாக்கியங்களை இழப்பவன் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்தவன் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 02.06.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை)


Share:

1 comment:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive