NewsBlog

Saturday, July 2, 2016

இஸ்லாம் வாழ்வியல்: பாதி பேரீத்தம் பழமாவது தர்மம் செய்யுங்கள்!


பகல் முழுவதும் நோன்பு, இரவுகளில் பிரத்யேகத் தொழுகைகள் என்று சுழற்சியான ஓர் அற்புதமான சூழல் கொண்ட மாதம் ரமலான். பகலில் பசி, தாகம் மற்றும் உடல் இச்சைகளிலிருந்து விலகி இருந்தும், இரவில் பிரத்யேக தொழுகை, திருக்குா்ஆன் வாசிப்பு மற்றும் உபரி இறை வணக்கங்கள் என்று படைத்தவனை சரணடைவதற்கு பள்ளிவாசல்கள் நிரம்பிவழியும் மாதம். அதேபோல, தான தர்மங்கள், தேவையுள்ளோர்க்கு உதவிகள் என்று உள்ளம் ஈந்து கனியும் காலம் இது.

பசித்திருப்பதும், விழித்திருப்பதும், இறைவணக்கம் என்பது போலவே, தேவையுள்ளோரின் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி பொருளால் செய்யும் இறைவணக்கமாகும்.

தான, தர்மங்களின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக ஒருமுறை நபிகளார் இப்படி அறிவுறுத்துகிறார்:

”மறுமையில், உங்கள் ஒவ்வொருவரிடமும் இறைவன் நேரடியாக பேசி, கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தனக்கு பரிந்துரை செய்பவர் அல்லது உதவுபவர் எவராவது தென்படுகின்றாரா என்று தனது வலது பக்கம் திரும்பிப் பார்ப்பான். அந்தோ..! அங்கே அவனது செயல்களைத் தவிர வேறு எதுவும் தொியாது. பிறகு இடது பக்கம் திரும்பிப் பார்ப்பான். அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறு எதுவும் தென்படாது. பின்னர், முன் பக்கம் பார்வையைச் செலுத்துவான். அங்கும் அவனுக்கே உரிய பயங்கரங்கள் நரக வடிவில் காத்திருப்பதை காண்பான். எனவே, மக்களே! பாதியளவு பேரீத்தம் பழத்தையாவது தருமம் செய்து நீங்கள் நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள்!”

இறைநம்பிக்கையாளர்கள் தமது செயல்களுக்கான நற்கூலியை இறைவனிடம் மட்டுமே எதிர்பார்த்து செயல்படுபவர்கள். இந்த உயர் பண்பை அவர்களின் வாய்மொழியாலேயே, திருக்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது:

”நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடம் இதற்கான எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை!”

பகட்டுக்காகவும், பிறருக்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் அவர்களின் நற்செயல்களை பாழாக்கிவிடும்.

•   தேவையுள்ளோருக்காக, இறைவழியில் தான, தர்மங்கள் செய்த பின்னர் அதை சுட்டிக் காட்டக் கூடாது.
•    உதவிகள் பெற்றவரின் உள்ளம் புண்படும்படி பேசக் கூடாது.
• தர்மம் செய்த பின்னர், தேவையுற்றோர், ஏழை, எளியோரின் சுயமரியாதை பாதிக்கும்வகையில் அவர்களுடன் இழிவாக நடந்து கொள்ள கூடாது. மேலும் அவர்களுக்கு உதவி செய்ததைச் சுட்டிக்காட்டி அவர்களின் உள்ளங்களை புண்படுத்தக் கூடாது.
•    உதவி பெற்றோர் எப்போதும். தங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும், தங்கள் முன் தலைத் தாழ்த்தி நிற்க வேண்டும். தங்களை உயர்வாக கருத வேண்டும் என்று ஒருகாலும் எண்ணக் கூடாது.
•  யாசிப்போர், தேவையுடையோருடன் மென்மையாகவும், அழகிய முறையிலும் நடந்து கொள்வதோடு, அவர்களை அதட்டவோ, விரட்டவோ கூடாது.

மட்டரகமான இந்த எண்ணங்களை விட்டு இறைநம்பிக்கையாளர்கள் உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் தான, தருமங்கள் பாழாகிவிடும் என்று எச்சரிக்கிறது திருக்குா்ஆன்:

”மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளை செலவு செய்பவனைப் போல, நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், மனம் புண்படச் செய்தும் உங்களுடைய தான, தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்!”


தான, தர்மங்களின் போது, ஹலாலான வழிகளில் அதாவது இஸ்லாம் அனுமதிக்கும் ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட  பொருளையே செலவழிக்க வேண்டும். தமக்கு பிடித்தமான, தாங்கள் விரும்புகின்ற உயரிய பொருள்களையே அடுத்தவர்க்கும் வழங்க வேண்டும் என்றும் திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது. 

”இறைவனின் தரப்பிலிருந்து இரண்டு வானவர்கள் இறங்காமல் எந்த நாளும் கழிவதில்லை. அவர்களில் ஒருவர் தேவையுள்ளோருக்கு தாராளமாக செலவு செய்கின்ற அடியானுக்காக,  ”இறைவா! தாராள மனம் கொண்ட இந்த அடியானுக்கு தகுந்த நற்கூலியைத் தருவாயாக!” – என்று இறைஞ்சுகின்றார். அடுத்த வானவரோ, குறுகிய உள்ளம் கொண்ட கஞ்சர்களுக்காக,  ”இறைவா! கஞ்சத்தனம் புரியும் இந்த மனிதனுக்கு அழிவைத் தா!” – என்று சபிக்கிறார் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

நபித்தோழர் அபூதர்தா நபிகளாருடனான தனது அனுபவம் ஒன்றை இப்படி பகிர்ந்து கொள்கிறார்:

”ஒருமுறை நான் நபிகளாரின் திருச் சமூகம் சென்றிருந்தேன். அண்ணலாரின் பார்வை என் மீது பட்டபோது, ”அவர்கள் அழிந்துவிட்டார்கள்!”- என்று கடுமையாக சொன்னார்கள். பயந்து போன நான், ”என் தந்தையும், தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! யார் அழிந்து போனார்கள் இறைவனின் திருத்தூதரே?” – என்று பதற்றத்துடன் கேட்டேன். நபிகளார் பதிலளித்தார்கள்: ”யார் செல்வந்தர்களாய் இருந்தும், செலவழிக்காமலிருந்தார்களோ அவர்கள் அழிந்துவிட்டார்கள். முன்னால் இருப்பவர்களுக்கும், பின்னால் இருப்பவர்களுக்கும், வலது பக்கம் இருப்பவர்களுக்கும் என்று எல்லோருக்கும் தங்கள் செல்வத்தை வாரி வாரி வழங்குபவர்கள் வெற்றியடைந்தவர்கள். ஆனால், தோழரே! இப்படி செலவு செய்யக் கூடிய செல்வந்தர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்!”

ரமளான் வெறும், பசியையும், உறக்கத்தையும், மன இச்சைகளையும் கட்டுப்படுத்தும் மாதமல்ல. தங்கள் பொருளால் சக மனிதர்களின் துயர்துடைக்கவும், அவர்களின் துன்பம், துயரங்களை களையவும் இறைநம்பிக்கையாளர்களுக்கு பயிற்சியளிக்கும் மாதமாகும். 

(தி இந்து நாளேட்டின், ஆனந்த ஜோதி பகுதியில் 30.06.2016 அன்று  பிரசுரமான எனது கட்டுரை)




Share:

1 comment:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive