NewsBlog

Saturday, July 2, 2016

அழைப்பது நம் கடமை: 15, 'கொந்தளிப்புக்குப் பின்தான் பேரமைதி!'



விமர்சனங்களுக்கு ஈடு கொடுக்கும் ஒன்றுதான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அந்த வகையில் சமீபகாலமாக விமர்சனங்களுக்கும், ஏராளமான கேள்விகளுக்கும் ஆளாகிவரும் மார்க்கம் இஸ்லாம். அதுவும் செப்.11 இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்த நிலை தீவரமடைந்தது. தற்போது சகோதரி ரிஸானா தண்டனைவரை அது தொடர்கிறது.

இந்த விமர்சனங்களால் இரண்டுவிதமான நன்மைகள் கிடைத்தன. முதலாவது, இஸ்லாம் சம்பந்தமாக சரியான விளக்கத்தை அடுத்தவர்க்கு எடுத்து வைக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அடுத்தது, இஸ்லாம் சம்பந்தமான கருத்துக்களை சுயமாக  ஆய்வு செய்து அறிவு வளர்த்துக் கொள்ள கிடைத்த வாய்ப்பு.

ஆப்கானிஸ்தான் முதற்கொண்டு இராக் வரையிலான இன்றைய சம்பவங்கள் சகிக்கும்படியாக இல்லை. இறைவன் மகா வல்லமையுள்ளவன்! அல்லாஹீ அக்பர்! - என்ற அற்புதமான தத்துவார்த்த முழக்கம் அப்பாவிகளைக் கொல்ல.. தலைகளை வெட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்தக் காட்டுமிராண்டித்தனங்களை சகித்துக் கொள்ள இயலவில்லை.

சக உயிர்களிடம் பேரன்புடன் இருக்கும்படி வழிகாட்டியுள்ள மார்க்கம் இஸ்லாம். சக உயிர்களின் உரிமைகளைப் பேணும்படி இறைநம்பிக்கையோடு முடிச்சுப் போட்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம். அப்படிப்பட்ட உயரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்பவர்கள் நடந்துகொள்ளும் முறை உண்மைதானா? என்று பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.



உணர்ச்சிமயமான கொந்தளிப்புகள், அவரவர் நாட்டுக்குரிய பிரச்சினைகள், அதன் அடிப்படையில் அந்த நாட்டு மக்கள் எடுக்கும் முடிவுகள், உலகளவில் ஒட்டு மொத்தமாக முஸ்லிம் நாடுகளில் காணப்படும் இஸ்லாமிய சிந்தனா வரட்சி! மிகைத்தவிட்ட உலகாயதப்போக்கு இவை எல்லாம் நடப்பு சம்பவங்களின் பின்புலன்கள் என்பது உண்மைத்தான்! ஆனால், அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒருகாலும் அனுமதிக்க முடியாது.

கடும் உஷ்ணமாய் இறங்கிக் கொண்டிருக்கும் நடப்பு யதார்த்தங்களை எல்லாம் உள்வாங்கி தனது அழைப்பியல் களத்தில் நிலைத்திருக்க வேண்டியது அழைப்பாளனின் தனித்திறமையாகும்.

ஆக்கிரமிப்புகள், சிறைக்கொடுமைகள், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகள் என்று அமெரிக்க, பிரிட்டன் வினைகளுக்கு...

ஆள் கடத்தல்கள், தலைவெட்டல்கள். சிறைபிடிப்புகள், பணயக் கைதிகள் என்று எழும் எதிர்வினைகளை இஸ்லாத்தின் ஒளியில் பொறுத்துக் கொள்ள முடியாது.

இவற்றுக்கிடையே மேற்கத்திய ஊடகங்கள், போலி-பொய்மைக் கலந்த செய்தி சித்தரிப்புகள், கருத்துருவாக்கங்கள் என்று ஏகத்துக்கும் பிரச்சினைகள் மலை.. மலையாய் தலையே வெடிக்கும் அளவுக்கு கனக்கிறது. இஸ்லாம் வீறு கொண்டு எழுந்த அரபு மண்ணின் ஆட்சியாளர்களோ ஆட்சி, அதிகாரம், உலக போகங்கள் ஒன்றே குறியாய் மறுமையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் கண்டு அழைப்பாளர் கலங்கிடக் கூடாது.

கடல் கொந்தளிப்புக்கு பின்தான் பேரமைதி என்பதே இயற்கையின் நியதி. சமுத்திரக் கொந்தளிப்பும், புயல் காற்றின் ஆர்ப்பரிப்பும் மீனவனைத் துளியும் பாதிப்பதில்லை. ஏனென்றால்... இவற்றுக்குப் பின்னே ஏற்படும் அமைதியில் ஏராளமான பலன் பெறலாம்.. வலை வலையாய் மீன்களை வேட்டையாடலாம் என்பது அனுபவம் போதிக்கும் உண்மை. இதை உணர்ந்தவனாதலால் இந்த மௌனநிலை அவனுக்கு சாத்தியமாகிறது. மக்கள் மனங்கள் என்னும் மீன்களைப் பிடிக்க இருக்கும் அழைப்பாளர்கள் ஒரு வகையில் சிறந்த மீன்பிடித் திறன் மிக்க மீனவர்களாய் தங்களை உருமாற்றிக் கொள்ள வேண்டும். மனித மனங்கள் என்னும் மீன்களைப் பிடிப்பவர்கள் அவர்கள்.

-- இறைவன் நாடினால்... அழைப்பது தொடரும். 


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive