NewsBlog

Thursday, July 21, 2016

இஸ்லாம் வாழ்வியல்: நன்றாக உபசரியுங்கள்

”விருந்தினரை உபசரிப்பது சம்பந்தமாக நபிகளார் மக்களிடையே ஆர்வமூட்டி வந்தார். இந்த உபசரிப்பை இறைநம்பிக்கையுடன் சம்பந்தப்படுத்தி, ”இறைவனையும், மறுமையையும் நம்பும் ஒருவர் தமது விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்!” – என்று அறிவுறுத்தியுள்ளார்” - இக்வான் அமீர்
 
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


சலாம் என்னும் முகமன் கூறி, இன்முகத்துடன் விருந்தினரை வரவேற்பதிலிருந்து ஆரம்பித்து, அறுசுவை உணவைப் படைப்பது, தங்க ஏற்பாடு செய்வது, மனம் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்வது, சக நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, துளியும் கண்ணியக் குறைவின்றி பார்த்துக் கொள்வது என்று ஒரு நீண்ட பட்டியல் நல்விருந்தோம்பலில் அடங்கும்.

அதேபோல, விருந்தளிப்பவர், விருந்தினரை உபசரிப்பதற்கென்று பணியாட்களை அமர்த்தாமல் தாமே முன்னின்று உபசரிப்பது அன்பை அதிகரிக்கும். தமது இல்லத்துக்கு வருகைத் தரும் விருந்தாளிகளை நபிகளார் அன்புடன் வரவேற்று அழைத்துச் செல்வதோடு தம் கைப்பட விருந்துப் படைத்து மகிழ்வார். விருந்தினர், ”போதும்…! போதும்..!” - என்று சொல்லும்வரை வயிறு நிறைய உணவை பறிமாறுவார்.

விருந்தினருக்கான ஏற்பாடுகளை ஓடியாடி பிறர் கவனம் கவரும்படி வெளிப்படையாக இல்லாமல், மறைமுகமாகவே செய்வது நல்லது. ஏனென்றால், கூச்சத்தால் நமது உணவு ஏற்பாடுகளை விருந்தினர் மறுத்துவிடலாம். தமது வருகையால் உபசரிப்பவர் தேவையின்றி சிரமத்துக்குள்ளாவதாக அவர் நினைத்துவிடலாம்.  இதனால், விருந்தினரை உபசரிக்கும் நல்வாய்ப்பு நழுவிவிடும்.

விருந்தினரை உபசரிப்பது சம்பந்தமாக நபிகளார் மக்களிடையே ஆர்வமூட்டி வந்தார். இந்த உபசரிப்பை இறைநம்பிக்கையுடன் சம்பந்தப்படுத்தி, ”இறைவனையும், மறுமையையும் நம்பும் ஒருவர் தமது விருந்தினரை நன்றாக உபசரிக்கட்டும்!” – என்று அறிவுறுத்தியுள்ளார்.

விருந்தினரை உபசரிப்பவர் அன்பு ஊற்றெடுக்கும் மன மகிழ்வோடு ஆன்மிக வாழ்வியலின் ஓர் அங்கமாக விருந்தினரை உபசரிக்க வேண்டும். அதேபோல, விருந்தினரும் அதே உணர்வுடன் உபசரிப்பவருடன் கண்ணியத்துடன் நடந்து கொண்டு அவரது உபசரிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

விருந்தினரின் தேவைகள் மிகவும் முக்கியமானது. குளிக்க, இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக் கொள்ள, உடல் நலத்தையொட்டி சாப்பிடும்  நேரத்தை அறிந்து உணவு படைப்பது சிறந்தது. களைப்புடனிருக்கும் விருந்தினரோடு அமர்ந்துகொண்டு அரட்டையடிப்பதும், அவரை ஓய்வெடுக்கச் செய்யாமல் நடந்து கொள்வதும் விரும்பத்தக்கதல்ல. நேரத்தோடு விருந்தினர் தூங்க ஏற்பாடு செய்யாமல் அவரையும் தூங்கவிடாமல், தானும் தூங்காமல் நடந்து கொள்வது சிறந்த பழக்கமல்ல.

ஒவ்வொருவருடைய உணவையும் நிர்ணயிப்பவன் இறைவன்தான் என்பது இறைநம்பிக்கை. இதன் மூலம், விருந்தினருக்காக தாம் படைக்கும் உணவு இறைவன் அவருக்காக தன் மூலமாக வழங்கும் உணவு. அது விருந்தினரின் உாிமை என்ற மனப்பான்மையைத் தோற்றுவிக்கும்.

விருந்தினரைக் கண்ணியப்படுத்துவது என்பது தன்னைத்தானே கண்ணியப்படுத்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

”விருந்தினர் உபசரிப்பு மூன்று நாட்களாகும். அதற்கு மேல் அவரை உபசரிப்பது தர்மத்தில் அடங்கும்!” - என்று ஒரு எல்லையை நிர்ணயித்துள்ளார் நபிகளார்.

இஸ்லாமிய உலகின் சட்ட வல்லுநர், பெரும் அறிவு ஜீவிகளில் மிகவும் முக்கியமானவர்களில் இருவர் இமாம் ஷாஃபி மற்றும் இமாம் மாலிக் ஆவார்கள்.

ஒருமுறை இமாம் ஷாஃபி இமாம் மாலிக்கின் விருந்தினராக சென்றார்.

அப்போது இமாம் ஷாஃபிக்குத் தேவையான அனைத்து பணிவிடைகளையும் இமாம் மாலிக் தாமே முன்னின்று செய்ததோடு, அவர் இரவில் உறங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

காலை வைகறைத் தொழுகை நேரத்தில் யாரோ சலாம் கூறி தம்மை எழுப்புவதை அறிந்த இமாம் ஷாஃபி எழுந்து பார்த்தபோது, அங்கே முகம், கை-கால்களை அலம்பிக் கொள்ள தண்ணீரை குவளையில் ஏந்தியவாறு புன்முறுவலுடன் இமாம் மாலிக் நின்றிருப்பதைக் கண்டார்.

சங்கடத்துடன் நெளிந்த ஷாஃபியிடம் இமாம் மாலிக், ”சகோதரரே! நீங்கள் சங்கடமடைய தேவையில்லை. ஏனென்றால் விருந்தினருக்கு சேவைப் புரிவது சிறப்புக்குரிய எனது கடமையாகும்!” – என்றார்.

அதேபோல, விருந்திராக சென்றிருப்பவர் விருந்தளிக்கும் வீட்டார் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு குறைந்தது சிறியளவிலான அன்பளிப்புகளை  கொடுப்பது அன்பு பறிமாற்றத்தின் வெளிப்பாடாக இருக்கும்.

•    விருந்தளிப்பவர் வீட்டில் முக்கியமான தேவைகள் அன்றி ஒருகாலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்கக் கூடாது.
•    ”விருந்தினர் அதற்கு மேலும் கவனிக்க முடியாததன் விளைவாக விருந்தளிப்பவர் பாவியாகும்விதமாக அவரது இல்லத்தில் தங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல!” – என்று நபிகளார் எச்சரிக்கிறார்.
•    விருந்துபசாரத்தை ஏற்றுக் கொள்ள செல்பவர் அந்த விருந்தின் தொடர்ச்சியாக தானும் அவரை விருந்துபசாரத்துக்கு அழைக்க வேண்டும்.
•    விருந்தினராக செல்லும்போது தங்கும் நிலை ஏற்படும் என்ற கட்டத்தில் தனக்குத் தேவையான சிறியளவிலான விரிப்பு, சோப்பு – சீப்பு, துவாலை என்று அத்யாவசதியத் தேவைதளை எடுத்துச் செல்வது நல்லது.
•    விருந்தளிப்பவரின் பணிகள் எவ்வகையிலும் தம்மால் தடைப்படக் கூடாது
•    விருந்தளிப்பவரின் ஒவ்வொரு உபசரிப்பை ஏற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் அவருக்கு நன்றி சொல்வது சிறந்த பண்பாகும்.
•    எளிதில் கிடைக்காத எந்த பொருளையும் கேட்கக் கூடாது.
•    விருந்தளிப்பவர் ஏதாவது பணிகளுக்காக வெளியே சென்றிருக்கும்போது, அவரது வீட்டாரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியமானது.

விருந்தினர் தனக்கு விருந்தளித்தவர் நலனுக்காக, ”இறைவா, இந்தக் குடும்பத்தாரின் வாழ்வியல் தேட்டத்தில் அருள்பொழிவாயாக! இவர்களை மன்னித்தருள்வாயாக! இன்னும் இவர்கள் மீது  கருணைச் சொரிவாயாக!” – என்று பிரார்த்திப்பது சிறந்தது.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 21.07.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை) 

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive