NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, September 14, 2018

உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்


மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார். பிறகு. ஒரு மர நிழலில் போய் அமர்ந்து கொண்டார். “என் இறைவா..! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி.. நான் அதன் பக்கம் தேவையுடையவனாகவே இருக்கின்றேன்!”~இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''
உலகியல் சாதனைகளும், அதன் வெற்றிகளும் இம்மை, மறுமை ஈருலகிலும் வெற்றித் தருபவையாக இருத்தல் வேண்டும். இதை வலியுறுத்தும்விதமாகவே நபிகளார் இப்படி பிரார்த்திக்கிறார்:

“இறைவா! பசியிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நேர்மை வழுவாமலிருக்கவும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.”

வறுமையும் அதன் கொடுமையும் உலகியல் துன்பங்கள். ஆனால், வாய்மையில் வழுவுவது என்பது மறு உலகில் தீராத துன்பங்களுக்கு ஆளாக்கிவிடும். அதனால்தான் நபிகளார் இந்த இரண்டிலும் வெற்றியைத் தர இறைவனிடம் கையேந்தி நின்றார். இறைவனின் திருத்தூதர் என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பாகவே நபிபெருமகனார் தூய்மையான தமது நடத்தைகளால், அல் அமீன், அஸ்ஸாதிக் (நம்பிக்கைக்குரியவர், உண்மையாளர்) போன்ற சிறப்புப் பட்டங்களை மக்களிடையே பெற்றிருந்தார்.

இதேபோலதான் மூஸா (மோசஸ்) நபியும் மக்கள் போற்றும் நேர்மையாளராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். அந்த வனாந்திரப் பாலை நிலத்தில் வசித்து வந்த ஒரு முதியவரின் இரண்டு மகள்கள் கொண்டுவரும் கால்நடைகளுக்கு முன்னுரிமை அளித்து நீரருந்த வழிவகைச் செய்தார். அவர்களைக் கண்ணியமான முறையில் நடத்தினார்.

மூஸா, அவர்களுடைய கால்நடைகளுக்கு தண்ணீர் புகட்டினார். பிறகு. ஒரு மர நிழலில் போய் அமர்ந்து கொண்டார். “என் இறைவா..! நீ எனக்கு இறக்கியருளுகின்ற நன்மை எதுவானாலும் சரி.. நான் அதன் பக்கம் தேவையுடையவனாகவே இருக்கின்றேன்!”

சிறிது நேரத்தில் திரும்பி வந்த பெண்களில் ஒருத்தி, நாணத்தோடு, அவரிடம் வந்து கூறினாள்: “நீங்கள் எங்கள் கால்நடைகள் நீரருந்த செய்த உதவிக்கு கைம்மாறு செய்ய என்னுடைய தந்தையார், தங்களைப் பார்க்க வேண்டும் என்று அழைக்கிறார்.”

அந்த அழைப்பை ஏற்றுச் சென்ற மூஸா தன்னைக் குறித்து அந்த முதியவரிடம் அறிமுகம் செய்துகொள்ள, அந்த முதியவர் அவருக்கு ஆறுதல் சொன்னார். இதனிடையே, இரு பெண்களில் ஒருத்தி மூஸாவின் நடத்தைக் குறித்து சான்றளித்து இப்படி பரிந்துரைக்கவும் செய்தாள்: “தந்தையே! வலிமை மிக்கவரும், நம்பிக்கைக்குரியவருமான இவரை நாம் பணிக்கமர்த்திக் கொள்வது மிகவும் சிறந்தது.!”

இந்த நிகழ்வின்போது மூஸா, நபி என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கவில்லை. அன்றைய எகிப்தை அரசாண்ட கொடுங்கோலன் பிர்அவ்னின் (பாரோ மன்னன்) அரசவைக்குச் சென்று ஒடுக்கப்பட்டவர் உரிமைக்காக போர்க்குரல் எழுப்பவும் இல்லை. அவர் தீர்க்கத்தரிசியாகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நடந்த சம்பவம் இது.

இத்தகைய உயரிய பண்பாளரைத்தான் இறைவனும் தனது தூதர்களாக தேர்ந்தெடுக்கிறான். அதிலும் வறுமையிலும், துன்பத் துயரங்களிலும் வாடி, வதங்கி புடம்போடப்பட்ட நல்லாத்மாக்களே நேர்மையாளராகவும், மக்கள் போற்றும் நம்பிக்கையாளராகவும் இருப்பர். இறைவனின் வல்லமையைப் ஏற்று அடிபணிந்து வாழ்வதுபோலவே அவனது படைப்புகளான மனிதர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரவும், அவற்றை நிலைநிறுத்தவும் இத்தகைய தூய ஆத்மாக்களாலேயே முடியும்.

(இந்து தமிழ் திசையின் இணைப்பான ஆனந்த ஜோதியில் 13.09.2018 அன்று வெளியான எனது கட்டுரை)

இந்துவில் வாசிக்க: https://tamil.thehindu.com/society/spirituality/article24935825.ece

Share:

Thursday, September 6, 2018

ஹஜ் சிறப்புக் கட்டுரை: இறைவனே உன் இடத்தில்

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து சென்ற ‘ஆப்ரஹாம்’ என்றழைக்கப்படும், இப்ராஹீம் நபி “இறையடியார்களே, இறைவனின் வீட்டுக்கு வாருங்கள். அலைகடலெனத் திரண்டு வாருங்கள். அணி.. அணியாக வாருங்கள்.. நடந்தோ, வாகனங்களிலோ வாருங்கள்!” என்று முதன் முதலாக விடுத்த அழைப்பிற்கான மறுமொழிதான் இது~இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
மனிதன் மேற்கொள்ளும் பயணங்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிழைப்புக்குப் பொருளீட்ட மேற்கொள்ளும் பயணம். அடுத்ததோ பொழுதுபோக்குக்கான பயணம். பயணங்கள் இரண்டானாலும், இவற்றில் தன்னலமும் இச்சைகளுமே மிகுந்திருக்கின்றன. இவையே அவனை வீட்டைவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்லத் தூண்டுகின்றன.

அன்பான உற்றார், உறவுகளைவிட்டு பல ஆயிரம் மைலுக்கு அப்பால் அனுப்புவதும் தன் நலன்சார்ந்த காரணங்களாகவே இருக்கும். இதில் அர்ப்பணம் என்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால், ஹஜ் பயணம் இவை எல்லாவற்றையும்விட முற்றிலும் மாறானது. இது இறைவனுக்காகவே மேற்கொள்ளப்படும் பயணம்.

மனிதனின் உள்ளுணர்விலிருந்து வரும் தூண்டலும் இறையின் அழைப்பும் இல்லையென்றால் இந்தப் பயணம் சாத்தியமாகும் வாய்ப்பேயில்லை. தனது வீட்டைத் துறந்து, உற்றார், உறவுகளைப் பிரிந்து, வணிகத் தொடர்புகளை விட்டு இப்பயணத்தை மேற்கொள்வதால், இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக அந்த மனிதன் இப்பயணத்தின் மூலம் பக்குவம் அடைகிறான். இறைவனுக்காக எத்தகைய தியாகங்களையும் அவன் மேற்கொள்ளச் சித்தமாக இருக்கிறான் என்பதே இதன் செய்தி.

ஹஜ் பயணத்துக்காக ஒரு மனிதன் முன்னேற்பாடுகளைச் செய்யும்போதே, நன்மைகளின் அருகில் செல்லும் துடிப்பும் அதிகரிக்கிறது. தன்னால் யாருடைய மனமும் புண்படலாகாது என்றும், முடிந்தவரை அடுத்தவருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற உணர்வும் அவனுக்குள் பிரவாகமெடுக்கிறது. அவன் எல்லாவிதமான தீய செயல்களுக்கும் மூடுவிழா நடத்திவிடுகிறான். அதனால்தான் இந்தப் பயணம் மற்றைய பயணங்களைவிட வேறுபட்ட பயணமாக உள்ளது.

மக்காவுக்கு ஹஜ் பயணம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் ‘இஹ்ராம்’ என்றழைக்கப்படும் எளிமை மிக்க ஒரு வெள்ளாடையுடன் போர்வை, காலணிகளை உடைமைகளாக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். இறைவனின் திருமுன் உடலாலும் உள்ளத்தாலும், எளிமையாக இருங்கள் என்பதே இதன் செய்தி.

இஹ்ராம் வெள்ளுடையைத் தரித்துக் கொண்டதும், ஒவ்வொரு ஹஜ் பயணியின் நாவிலிருந்தும் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சொல், “இறைவா.. இதோ உன் திருச்சன்னிதியை நோக்கி நான்..! “ என்பதுதான்.

“நான் வந்திருக்கிறேன் இறைவா.. நான் வந்திருக்கிறேன்.. இறைவா..! நான் வந்திருக்கிறேன்! உனக்கு யாரும் இணையில்லை. உன் அழைப்பை ஏந்தி வந்திருக்கிறேன்! பாராட்டுக்குரியவன் நீயே! அருட்கொடைகளுக்குரியவனும் நீயே. அண்டசராசரங்களின் ஆட்சி உனதே.. எங்கும், எதிலும்.. எவரும் உனக்கிணையில்லை.. இறைவா..!” என்ற பிரகடனம் சதா ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

உண்மையில், இது, நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து சென்ற ‘ஆப்ரஹாம்’ என்றழைக்கப்படும், இப்ராஹீம் நபி “இறையடியார்களே, இறைவனின் வீட்டுக்கு வாருங்கள். அலைகடலெனத் திரண்டு வாருங்கள். அணி.. அணியாக வாருங்கள்.. நடந்தோ, வாகனங்களிலோ வாருங்கள்!” என்று முதன் முதலாக விடுத்த அழைப்பிற்கான மறுமொழிதான் இது.

யுக முடிவுநாள்வரை தொடர்ந்து கொண் டிருக்கும் அந்த அழைப்பிற்கான பதில். இறைக்காதலால் இறையடியான் கட்டுண்டதன் அடையாளமாய் ஒலிக்கும் குரல் இது.

தவாஃப் வலம்
'''''''''''''''''''''''''''''''''
இத்தகைய சிறப்பியல்புகள் பெற்ற ஹஜ் பயணி மக்காவை அடைந்ததும், கஅபா என்னும் இறையாலயத்தை நோக்கி விரைகிறார். அந்த ஆலயத்துக்கு முத்தமிடுகிறார். பிறகு தமது கொள்கை, கோட்பாடுகளுக்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கஅபாவைச் சுற்றி ஏழுமுறை ‘தவாஃப்’ என்றழைக்கப்படும் வலம் வருகிறார். ஒவ்வொரு சுற்றும், முத்தத்திலோ அல்லது முத்த சைகையிலோ ஆரம்பித்து, அதேபோலவே முடிகிறது.

இதன் பிறகு ‘மகாம் இப்ராஹீம்’ என்றழைக்கப்படும் இப்ராஹீம் நபி நின்று தொழுத இடத்தில் காணிக்கைத் தொழுகையை நிறைவேற்றுகிறார்.

அதன்பின், தன் பிஞ்சு மகன் இஸ்மாயீல் நபியின் கடும் தாகத்தைத் தீர்ப்பதற்காக நீர் தேடி ஸஃபா, மர்வா மலைகளுக்கிடையே ஒடிய தியாகத்தின் திருஉருவமாய் விளங்கும் பெண்மணி ஹாஜிரா அம்மையாரின் வரலாற்றை நினைவுகூர்கிறார். ஹஜ் பயணி வரலாற்றின் நினைவுகளைச் சுமந்தவாறு ஓடுகிறார். மன்னிப்பையும், மகத்துவத்தையும் தேடி நடைபெறும் ஓட்டமது.

அதற்கடுத்து, மினா, அரஃபாத், முஸ்தலிஃபா போன்ற இடங்களில் கடமையுணர்வு மிக்க இறைவனின் சிப்பாயைப் போல ஐந்தாறு நாட்கள் ‘முகாம்’ வாழ்க்கை ஆரம்பித்துவிடுகிறது.

“இறைவன் மிகப் பெரியவன். வழிகெடுக்கும் சைத்தானுக்கும், அவனது கூட்டாத்தாருக்கும் நாசம் உண்டாவதாக!” என்றவாறு மினாவில் கல்லெறியப்படுகிறது. இறைவனுக்கான அடையாளப் பலியாக இப்ராஹீம் நபி செய்தது போலவே ‘குர்பானி’ என்றழைக்கப்படும் திருப்பலி நிகழ்வும் நடக்கிறது.

அதன்பின், கஅபாவுக்குத் திரும்பல், தவாஃப் என்றழைக்கப்படும் வலம் வருதல், திரும்பவும், ‘ஜம்ராத்’ என்றழைக்கப்படும் கல்லெறிதல், ‘தவாஃபே விதா’ என்றழைக்கப்படும் இறுதி வலம் வருதல் என்று ஹஜ் பயணம் நீண்டு.. முடிகிறது.

ஒருவர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு, திரும்பிவரும் வரையிலான சில மாத காலத்தில், எத்தகைய மாற்றங்களை இந்தப் புனிதப் பயணம் ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி.

காலம், பொருள், ஓய்வு, உலகியல் தொடர்புகள், ஆசைகள் அனைத்தின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு இறைவனுக்காகத் தியாகம் செய்யப்படுகின்றன. ஒழுக்கம், இறையச்சம், பெருக்கெடுக்கும் இறையன்பு, இறைத்தூதர் நபிகளார் மீது ஊற்றெடுக்கும் பிரேமை என்று பல தடங்களை வாழ்வில் பதித்து நீங்காத நினைவுகளாக்கிவிடும் பயணம் இது.

கஅபாவைச் சுற்றியும் உள்ள தனது முன்னோர்களின் ஒவ்வொரு வரலாற்றுச் சின்னமும் கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்தோடு ஹாஜியின் உள்ளத்தில் பதித்துவிடுகிறது. இறைத்தூதர் நபிகளாரின் அத்தனை வரலாற்றுப் பதிவுகளும் கண்முன் ஓடி, மனத்தில் நீங்காமல் இடம்பெறுகின்றன.

ஹஜ் பயணம் தரும் பயிற்சிகளோடு ஏற்கெனவே தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற இறைவணக்கங்களில் பெறும் பயிற்சி இறையடியானை மகத்தான மனிதனாக மாற்றிவிடுகிறது. அதுவும், ஒரு நேரத்தில் உலகம் முழுக்க உள்ள இறையடியார்களால் மேற்கொள்ளப்படும் பயணத்தின் விளைவுகள் பூவுலகில் அமைதி தவழச் செய்கின்றன.

(இந்து தமிழ் திசை - நாளேட்டின் இணைப்பான ஆனந்த ஜோதியில், 06.09.2018 அன்று வெளியான எனது கட்டுரை)

இந்து தமிழ் திசை இணைப்புக்கு: https://tamil.thehindu.com/society/spirituality/article24873054.ece



Share:

Saturday, September 1, 2018

ஹிட்லரின் காலமும், இன்றைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு

இந்த கடிதங்களில் பெயர்கள் தெளிவாக இருப்பதுடன் பணப்பரிமாற்றம், காஷ்மீரத்து பிரிவினைவாதிகளுடனான தொடர்புகள், கல் எறிபவர்கள், மனித உரிமை பேசும் வழக்கறிஞர்கள், ஜெ.என்.யூ  டிஐஎஸ்எஸ் மாணவர்கள், யுஎபிஎவுக்கு எதிரான போராட்டங்கள்… ஏன் காங்கிரஸ், இப்படி  பாஜகவும் போலீஸும் விரும்பாத (வெறுக்கும்) பல விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தப்பும் தவறுமாக...நடந்திருக்க சற்றும் வாய்ப்பில்லாத தகவல்களே இதில் உள்ளன. இதன் நோக்கம் எதிர்ப்பாளர்களை இழிவு படுத்துவது, அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை பேசுபவர்களை மோசமாக சித்தரிப்பது ஆகும். ~பேராசிரியர் நந்தினி சுந்தர் 
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
ஜெர்மனியில் 1934-1945 காலகட்டத்தில் அரசிற்கு எதிரானவர்களை ஒழிக்க நாஜிக்கள் நடத்திய  மக்கள் நீதிமன்றம் மிகவும் பிரபலம். இது குறித்த ஒரு கண்காட்சி பெர்லினில் தற்போது நடந்து வருகிறது. அச்சுறுத்தக் கூடிய  இந்நிகழ்வு இந்திய பார்வையிலிருந்து பார்க்கும்போது பரிச்சயமான ஒன்றாகவே உள்ளது.

இதை நீதிமன்ற கட்டமைப்பு நோக்கில் பார்க்க முடியாது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தன்மை அடிப்படையில் பார்க்க முடியும்.

அது ஒரு ஹிட்லர் காலம்

கம்யூனிசம் தொடர்பான துண்டு அறிவிக்கைகளை தான் வசிக்கும் பகுதியில் உள்ள போலீஸ்காரருக்கு வழங்கிய சுரங்கத் தொழிலாளி, புகழ்பெற்ற நாஜி பிரமுகர்களை நகைச்சுவையாக கிண்டலடித்த வங்கி ஊழியர், ஹிட்லரை கேலி செய்து பாடல் இயற்றிய ஒலிப்பதிவு நிபுணர், ஹிட்லரின் பெயரை குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பிய நில வணிக முகவர் என இவர்களுக்கு எல்லாம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

மாபெரும் துரோகம், தேச ரட்சகனின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டது, எதிரிகளுக்கு உதவியது ஆகியவை மரண தண்டனைக்கான காரணங்களாக கூறப்பட்டன.

பயணச்சீட்டு எடுக்காத குற்றத்துக்காக 22 வயதான ஸ்விஸ் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஹிட்லரை கிறிஸ்துவ எதிரி மனித குலத்தின் எதிரி எனக்கூறி கொல்ல திட்டமிட்டதாக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்காக மரண தண்டனை அறிவிக்கப்பட்டு அதற்கான காரணங்களும் முன் வைக்கப்பட்டன.

குற்றஞ்சாட்டப்பட்டவர் ஜெர்மனி நாட்டின் ரட்சகரை அழிக்க முற்பட்டார் என்றும் அந்த ரட்சகர் 8 கோடி ஜெர்மானிய மக்களின் எல்லையற்ற அன்புடன் மரியாதையுடன் நன்றியுணர்வை பெற்றவர் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன் எப்போதையும் விட வலிமையும் உறுதியான தலைமைப் பண்பும் அவருக்கு தேவையாக இருந்து என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன் நடந்த ஒரு கண்காட்சி நாஜிக்களின் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு குறித்ததாக இருந்தது.

அரசுக்கு எதிர்ப்பு குரல் எழுப்பியவர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். மற்றவர்கள் பணிந்து நடந்துகொள்ள வைக்கப்பட்டனர்.

நாஜிக்களுக்கு ஆதரவாக இருந்த சில பத்திரிகையாளர்கள் போருக்கு பின் தங்கள் அடையாளத்தை மாற்றிக்கொள்ள முற்பட்டனர். ஆனால் அவர்கள் இறுதியில்  அடையாளம் காணப்பட்டனர்.

உருவாக்கப்படும் தோற்றம்

இந்தியாவில் இப்போது நகர்ப்புற மாவோயிஸ்டுகள் பரவலான அளவில் தொடர்ந்து விரிவடைவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.

சில தொலைக்காட்சிகளும் போலீஸும் இணைந்து இத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. இது ஃபாசிஸ காலத்தை திரையில் விரைவாக ஓட விட்டு பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரதமரையே அதாவது நாட்டின் ரட்சகரையே கொல்லத்துணிந்த திட்டம் பற்றிய கடிதம் முதன் முதலில் டைம்ஸ் நவ் சேனலில்  ஒளிபரப்பாகிறது. வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் முதல் கம்யூனிஸ தோழர் பிரகாஷ் ஆகியோரின் கடிதங்கள் எனக்கூறி மூச்சுவிட இடைவெளி இன்றி ரிபப்ளிக் சேனலில் ஒளிபரப்பானது.

இந்த கடிதங்களில் பெயர்கள் தெளிவாக இருப்பதுடன் பணப்பரிமாற்றம், காஷ்மீரத்து பிரிவினைவாதிகளுடனான தொடர்புகள், கல் எறிபவர்கள், மனித உரிமை பேசும் வழக்கறிஞர்கள், ஜெ.என்.யூ  டிஐஎஸ்எஸ் மாணவர்கள், யுஎபிஎவுக்கு எதிரான போராட்டங்கள்… ஏன் காங்கிரஸ், இப்படி  பாஜகவும் போலீஸும் விரும்பாத (வெறுக்கும்) பல விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. தப்பும் தவறுமாக...நடந்திருக்க சற்றும் வாய்ப்பில்லாத தகவல்களே இதில் உள்ளன. இதன் நோக்கம் எதிர்ப்பாளர்களை இழிவு படுத்துவது, அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை பேசுபவர்களை மோசமாக சித்தரிப்பது ஆகும்.

இதுவரை ஏராளமான செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மற்றவர்கள் என ஏராளமானோர் மீது வழக்குகள் திணிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை வெளிக்கொணர பல வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அவர்களும் கைது செய்யப்படுகின்றனர். ஆதிவாசிகள் தலித், அரசியல் கைதிகளுக்காக வாதாடும் சுரேந்திர வாட்லிங், ஸ்டெர்லைட் பிரச்னையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிய எஸ்.வாஞ்சிநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டனர். மனித உரிமைகள் காக்க போராடிய ஹைதராபாத் வழக்கறிஞர் சிக்குது பிரபாகர் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா சிறையில் அபத்தமான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு மாதங்கள் இருந்தார். தோழர் சுதாவை ரிபப்ளிக் டிவி ஒரு துஷ்ட சக்தியாக சித்தரித்தது. ஆனால் இவர் பெரிதும் மதிக்கப்படும் தொழிற்சங்கவாதி   ஆவார். மேலும் மனித உரிமை வழக்கறிஞர், பியுசிஎல்லின் தேசிய செயலாளர் என பன்முகங்கள் கொண்ட இவர் தற்போது தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் வருகை பேராசிரியராகவும் உள்ளார்.

வழக்கறிஞர்களும் தப்பவில்லை

தொழில்ரீதியான வழக்கறிஞர்களுக்கான விதிகளை பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

ஒருவர் மீதான குற்றச்சாட்டு உண்மை என வழக்கறிஞர் ஒருவர் தனிப்பட்ட முறையில் கருதினாலும் அந்த குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடலாம் என்கிறது விதி.

போதிய ஆதாரங்கள் இன்றி எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது சட்டம்.

இந்த சட்டத்துக்கு விசுவாசமாக வழக்கறிஞர்கள் எப்போதும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது விதி.

இந்த விதியை பின்பற்றும் வழக்கறிஞர்களைத்தான் போலீஸ் முறையற்ற வகையில் குறிவைக்கிறது. மற்ற வழக்கறிஞர்கள் சர்ச்சைக்குரிய அல்லது முக்கிய வழக்குகளில் ஆஜராகாமல் அச்சுறுத்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

நமக்கு சொல்லப்பட்டுள்ள சட்டம் ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருந்தாலும் சரி வன்முறையில் ஈடுபட்டிருந்தாலும் சரி... சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கிறது.

டெல்லியில் மாணவர் தலைவர் கன்னையா குமாரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

வழக்கறிஞர்கள் இனியும் தாமதியாமல் தங்கள் தொழிலுக்கு வந்த ஆபத்தை தடுக்க ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.

கடந்த ஜூன் 6-ம் தேதி மகாராஷ்டிராவில் வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், ஆங்கில பேராசிரியர் சோமா சென், எழுத்தாளர் சுதிர் தவாலே, வன உரிமை ஆர்வலர் மகேஷ் ரவுத், சிறைவாசிகள் உரிமை பாதுகாப்பு ஆர்வலர் ரோனா வில்சன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு தகவலை தருவதற்காகவே இந்த கைது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகளின் பின்னணியில் பீமா கோரேகான் வன்முறையில் இவர்களை தொடர்பு படுத்தியதுடன் ராஜிவ் காந்தியை போன்றே மோடியையும் படுகொலை செய்யும் சதித்திட்டத்துக்கு துணை போனார்கள் என்ற  அபத்தமான குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

கைது செய்ய ஆதாரங்கள், சாத்தியக்கூறுகள், சட்டம் போன்றவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பதை வெளிக்காட்டவே இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிமா கோரேகான் வன்முறைக்கு நிஜமாகவே காரணமாக இருந்த மிலிந்த் எக்பொடே, சம்பாஜி பிடே ஆகியோருக்கு தண்டனையும் இல்லை. மக்கள் நலனுக்காக செயல்படவேண்டிய போலீஸ் அவர்களின் எஜமானர்களுக்காக வாலாட்டுவதையே இது காட்டுகிறது. எஜமானர்கள் ஆட்சியில் தொடர என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்ய  இவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

(நந்தினி சுந்தர் டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் கற்பிப்பவர்)

நன்றி: பிபிசி (கட்டுரை இணைப்புக்கு: https://www.bbc.com/tamil/global-45339753)



Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive