NewsBlog

Tuesday, July 14, 2020

பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!



மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார்.  80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''  

"1983- ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, விசாரணைக்காக காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். என்னைப் போன்றே மொழி தெரியாமல், ஆதரவில்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். விசாரணை என்ற பெயரில் நாங்கள் அனைவரும் அடித்து உதைக்கப்பட்டோம். 
 
எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு அடி விழுந்தது. செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி எங்களை காவல்நிலையத்தில் சித்ரவதை செய்தனர். ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் ஒப்புக்கொள்ள கூடாது என்ற மனஉறுதியில் நான் இருந்தேன். 5 மாத சிறை தண்டனைக்குப் பிறகு நிரபராதி என நிரூபிக்கப்பட்டு தப்பித்து வந்தேன். 
 
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டவைதான். உடலுக்குள் லத்தியை விட்டு சித்ரவதை செய்து, உருக்குலைத்து, ரத்த கசிவு ஏற்படவைத்து உயிரிழக்கச் செய்துள்ளனர். அவ்வாறு செய்தால் உயிரிழந்து விடுவார்கள் என காவலர்களுக்கு தெரியாமல் இருக்குமா?" 
 
காவலர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துவந்து பல வருடங்கள் ஆனாலும், என் கண் முன் நிகழும் எல்லா பிரச்சனைகளையும், நான் அங்கிருந்து தான் தொடங்குவேன். அந்தவகையில், சித்ரவதை நாட்களில் பென்னிக்ஸும் ஜெயராஜும் அனுபவித்த வலியை என்னால் உணர முடிந்தது. அடிவாங்கி உயிரிழந்த பென்னிக்ஸும் ஜெயராஜும் நான் தான் என தோன்றியது. அவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்." 
 
காயங்கள் வெளியே தெரியாத வகையில் தான் காவலர்களின் அடி இருக்கும். விதவிதமாக சித்ரவதை செய்து வலி ஏற்படுத்துவார்கள். மருத்துவர்களில் எப்படி குறிப்பிட்ட சிகிச்சைக்கான நிபுணர்கள் இருப்பார்களோ, அதேபோல் விசாரணை என்ற பெயரில் சிக்கியவர்களை அடித்து உதைக்க கைதேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 
 
காவலர்களின் சித்ரவதையில் இருந்து மீண்டு வந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு உடல்நலக்குறைவு அல்லது பாதிப்போடு தான் உயிர் வாழ்வார்கள். உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்து சில ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவர். 
 
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் சமூகவெளியில் பரவியதால் தான் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
முன்பெல்லாம் காவல்நிலையம் அல்லது சிறையில் மரணம் ஏற்பட்டால், அந்த தகவல் பொதுமக்களை சென்றடைய காவலர்களிடமிருந்து தான் தகவல்களை பெற வேண்டும், அதை பிரசுரிக்க செய்தி ஆசிரியரின் அனுமதி வேண்டும். 
 
ஆனால், இப்போது ஒரு தகவலை ஒரு சில நிமிடத்தில் உலக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த முடிகிறது. பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மீது தொடுக்கப்பட்ட ரத்தவெறி தாக்குதலின் ஆதாரங்கள் அனைத்தும் நம் அனைவருக்கும் வந்து சேர்ந்தது. தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த பிரச்சனை குறித்து விவாதித்தன. 
 
காவல்துறையின் அதிகாரம் எளிய மக்களை எப்படி கொன்றது என்பதை அனைவரும் தெரிந்துகொண்டனர். இவ்வாறான தொலைத்தொடர்பு வசதி இல்லாததால், ஆதாரங்கள் வெளிவராமல் ஏராளமான மனித உயிர்கள் காவல்துறையின் அடக்குமுறையால் பலியாகியுள்ளன"

 (நன்றி: பிபிசி-தமிழ்)
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive