NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Friday, August 31, 2018

"பதவி துறப்பதே மேல்..!"

கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
Share:

வாஜ்பேயி மென்மையானவரும் அல்ல, அவரது ஆட்சி ஊழலற்றதும் அல்ல

"மோடி ஆட்சியில் குஜராத்தில் (2002) நடந்த மிகப் பெரிய மத வன்முறையில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது வாஜ்பேயி அதைக் கண்டித்தார் என்கிற கருத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒரு தவறான கருத்து.

அப்படிப் பெரிதாக மோடியை அவர் எதுவும் கண்டிக்கவில்லை. "ஆள்பவர்களுக்கு ராஜதர்மம் வேண்டும்" என மோடியை வாஜ்பேயி கண்டித்தார் என்பார்கள்.

அ.மார்க்ஸ்
குஜராத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது வாஜ்பேயி அப்படிச் சொன்னது உண்மை. மேடையில் அமர்ந்திருந்த மோடி, "நான் அப்படித்தான் ஆட்சி நடத்துகிறேன்" என்றார். வாஜ்பேயி உடனடியாக அதை ஏற்று அதை உண்மை என்றார். அதுதான் அன்று உண்மையில் நடந்தது"~பேராசிரியர் அ.மார்க்ஸ்,மனித உரிமை செயற்பாட்டாளர்
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வாஜ்பேயி பொற்கால ஆட்சி ஒன்றைத் தந்த ஒரு சிறந்த முன்னாள் பிரதமர் என்கிற அளவு இன்று அரசாலும் ஊடகங்களாலும் முன் நிறுத்தப்படுகிறார்.

ஒரு பக்கம் அவர் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவற்றின் விசுவாசமான ஊழியராகவே வாழ்வைத் தொடங்கி முடித்தவராயினும், இன்னொரு பக்கம் அவர் ஒரு மென்மையான இந்துத்துவவாதி, பாபர் மசூதி இடிப்பில் கலந்து கொள்ளாதவர், குஜராத் 2002 வன்முறையைக் கண்டித்தவர், அவரது ஆளுகை ஊழலற்ற ஒன்று என்பதாக அவரது பிம்பம் இன்று கட்டமைக்கப்படுகிறது.

அவரது கட்சி மட்டுமின்றி, ஊடகங்களும். இந்தப் பிம்ப உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்தப் பின்னணியில் இந்துத்துவ அரசியல் குறித்த மாற்றுக் கருத்து உடையவர்களாலும் கூட, "ஒரு தவறான கட்சியிலிருந்த சரியான மனிதர்" என்றெல்லாம் அவ்வப்போது அவர் குறித்து கருத்துக்கள் உதிர்க்கப்படுகின்றன.

நான் அவரது ஆட்சிக் காலங்களை மிகக் கூர்மையாகக் கவனித்துக் குறைந்த பட்சம் நான்கு நூல்களுக்கு மேல் எழுதியவன் என்கிற வகையில் இந்தக் கருத்துக்கள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை.

இந்துத்துவ அரசியலுக்கு எதிரானவன் என்கிற வகையில் என் கருத்துக்கள் ஒரு பக்கச் சார்பானவை என யாரும் குற்றஞ்சாட்டினால் அதில் நியாயம் உண்டு.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மட்டுமே நான் வாஜ்பேயி குறித்துச் சொல்பவை தவறு எனச் சொல்வதற்கு ஆதாரங்களாகிவிடாது.

குஜராத் வன்முறையை கண்டிக்கவில்லை

மோடி ஆட்சியில் குஜராத்தில் (2002) நடந்த மிகப் பெரிய மத வன்முறையில் பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது வாஜ்பேயி அதைக் கண்டித்தார் என்கிற கருத்தை எடுத்துக் கொள்வோம். அது ஒரு தவறான கருத்து.

அப்படிப் பெரிதாக மோடியை அவர் எதுவும் கண்டிக்கவில்லை. "ஆள்பவர்களுக்கு ராஜதர்மம் வேண்டும்" என மோடியை வாஜ்பேயி கண்டித்தார் என்பார்கள்.

குஜராத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது வாஜ்பேயி அப்படிச் சொன்னது உண்மை. மேடையில் அமர்ந்திருந்த மோடி, "நான் அப்படித்தான் ஆட்சி நடத்துகிறேன்" என்றார். வாஜ்பேயி உடனடியாக அதை ஏற்று அதை உண்மை என்றார். அதுதான் அன்று உண்மையில் நடந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் நடந்த மிகப்பெரிய மதக் கலவரம் அது. ஆயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடிழந்தனர். கண்முன் கொலைகளை மோடியின் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது.

ஒரு கேபினட் அமைச்சர் வன்முறைகள் நடந்து கொண்டிருந்த ஒவ்வொரு இடங்களாகச் சென்று வன்முறையாளர்களை ஊக்குவித்துக் கொண்டு வந்தார்.

இப்படியான வன்முறையில் வாஜ்பேயி ஒரு பிரதமராக இருந்து தெரிவித்த கண்டனம் இவ்வளவுதான். அதற்கு மேல் எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நரேந்திரமோதி பதவி விலகவேண்டும் என்று கூட அவர் சொல்லவில்லை.

பாபர் மசூதி இடிப்பை எதிர்க்கவில்லை

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அவர் அந்த இடத்தில் இல்லாதிருந்திருக்கலாம். அத்வானியுடன் ரத யாத்திரையில் பங்கு பெறாமலும் இருந்திருக்கலாம்.

ஆனால் வாஜ்பேயி மசூதி இடிப்பை எந்நாளும் எதிர்க்கவில்லை. குறைந்தபட்சம் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே நாளில் அவர், "அயோத்தியில் இராமர் கோவிலைக் கட்டுவது என்பது இன்னும் பூர்த்தி செய்யப்படாத தேசிய உணர்வின் வெளிப்பாடு" எனக் கூறி (The Hindu, Dec 07, 1992) அதை ஆதரித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே வழக்கை இழுத்தடித்ததன் விளைவாக 1999 வரை வழக்கு விசாரணை தொடங்கவே இல்லை.

லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது மத்தியில் வாஜ்பேயி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சிதான்.

இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது மசூதி இடிப்பு தொடர்பான இரண்டு குற்றப்பத்திரிகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டதில் ஒரு சட்டப்பிரச்சினை உள்ளது என நீதிபதி ஜகதீஷ் பல்லா குறிப்பிட்டார்.

அதைத் திருத்துவதற்கு அன்றைய பா.ஜ.க ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு விசாரணை நிறுத்தப்பட்டது. இன்றுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை.

அணுகுண்டு வெடிப்பு புத்திசாலித்தனமானது அல்ல

வாஜ்பேயி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு வெடிப்பு எந்த வகையிலும் புத்திசாலித்தனமானது அல்ல. ஏற்கனவே 1974 லேயே இந்திரா பிரதமராக இருந்தபோது அணுகுண்டு வெடித்து இந்தியா அணு வல்லமையுள்ள நாடு என்பது நிறுவப்பட்டு விட்டது.

மீண்டும் ஒரு முறை சிறிய அளவிலான குண்டுகளை வெடித்து அன்று வாஜ்பேயி அரசு பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. இந்தியா ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இன்றுவரை ஆக முடியாமல் இருப்பது ஒன்றுதான் இதனால் விளைந்த ஒரே பயன்.

காவிமயமான ராணுவம்

"ராணுவத்தை காவி மயமாக்குவது" என்பது இந்துத்துவத்தின் அடிப்படை அணுகுமுறைகளில் ஒன்று. வாஜ்பேயி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் ராணுவத்தில் இந்துத்துவக் கருத்தியல் உடையவர்கள் புகுத்தப்பட்டனர்.

வாஜ்பேயி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட கப்பற்படைத் தளபதி விஷ்ணு பக்வத், "இக்காலகட்டத்தில் ராணுவத்தில் பெரிய அளவில் காவிக் கருத்தியலுடையவர்கள் பல்வேறு மட்டங்களில் புகுத்தப்பட்டனர்" என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பின்னாளில் மலேகான் (2008), மெக்கா மசூதி, சம்ஜூதா எக்ஸ்பிரஸ் (2007) ஆகியவற்றில் குண்டுகள் வெடித்துப் பலரும் கொல்லப்பட்டபோது அதற்குக் காரணமாக இந்துத்துவ அமைப்பினர் பலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுள் ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா முதலான முன்னாள், அன்னாள் ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். ராணுவ வெடிமருந்துக் கிடங்கிலிருந்து கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகள் இந்தத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் உறுதியாயிற்று.

இரண்டு

1995 மே 7 ம் நாள் அன்று ஆர்.எஸ்.எஸ்.சின் 'ஆர்கனைசர்' இதழில் வாஜ்பேயி கட்டுரை ஒன்று எழுதினார். "சங்கம் எனது ஆன்மா" என்பது தலைப்பு. சங்கம் என்பது 'ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம்' (RSS) என்பதைக் குறிக்கிறது.

இக்கட்டுரை இன்றும் சங்கத்தின் அதிகாரபூர்வ இணையத் தளத்தில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் அவர் பிரதமர் நாற்காலியில் முதல் முறையாக அமரப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ் முன்னுள்ள இரண்டு கடமைகளாக அவர் அதில் குறிப்பிடுவன:

1. இந்துக்களை அமைப்பாக்க வேண்டும்

2. முஸ்லிம்களைத் தன்வயப்படுத்த வேண்டும்.

இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மிக முக்கியமானவை.

அடுத்து அவர் இதற்கான முஸ்லிம்கள் குறித்த அணுகல் முறைகள் எப்படியெல்லாம் இருக்க முடியும் என்பதற்கு மூன்று வடிவங்களைச் சொல்கிறார். அவை:

அ. திரஸ்காரம்: ஒதுக்குதல், விலக்குதல். அதாவது முஸ்லிம்களின் இருப்பையும் அடையாளங்களையும் மறுத்தல்;

ஆ. புரஸ்காரம்: முஸ்லிம்களுக்குச் சலுகைகள் கொடுத்து அவர்களை வசப்படுத்தல்.

இ. பரிஸ்காரம்: அவர்களை மாற்றிச் செரித்துக் கொள்ளுதல்.

இதில் இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது காங்கிரசின் அணுகல்முறையாம். மற்ற இரண்டும்தான் அவர்களின் அணுகல்முறைகளாம்.

அதாவது முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாக விலக்குவது அல்லது அவர்களை அடையாளம் இழக்கச் செய்து உள்ளே கொண்டுவருவது.

அவைதான் இன்று பசுக் கொலைகள், 'கர்வாபசி', 'சுத்தி' எனப் பல்வேறு நடவடிக்கைளாகச் சங்கப் பரிவாரங்களால் மேற்கொள்ளப்படுபவை.

வாஜ்பேயியின் மென்மை இந்துத்துவம் என்பது இதுதான்.

மூன்று

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவார அமைப்புகளுக்கு இடையே எப்போதும் ஒரு மெல்லிய 'இழுபறி' நிலவும். அதனுடைய சுதேசியக் கொள்கைக்கும், கார்ப்ரேட் ஆதரவுக்கும் இடையிலான முரண்தான் அது.

ஆனால் இறுதியில் வலிமையான இந்தியா, நவீனமான இந்தியா என்கிற முழக்கத்தின் ஊடாக சுதேசியம் என்பது ஊற்றி மூடப்படும்.

காங்கிரஸ் முதலான கட்சிகளைக் காட்டிலும் பலமடங்கு தீவிரமான கார்ப்ரேட் மயமாதல், அந்நிய மூலதன ஊடுருவல் ஆகியவற்றிற்கு வழி திறக்கப்படும்.

வாஜ்பேயி தலைமையிலான அரசுக்கும், மோதி அரசுக்கும் இந்த வகையில் எந்த வேறுபாடும் இல்லை. வாஜ்பேயி அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மட்டும் இங்கே:

1.இந்திய காப்பீட்டுத் துறையில் அந்நிய மூலதன நுழைவைக் கடுமையாக எதிர்த்து வந்தது பா.ஜ.க. ஆனால் 1998 ல் வாஜ்பேயி அரசு அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முன்வைத்த 'இன்சூரன்ஸ் சட்ட வரைவு' அத்துறையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதோடு 40 சத அந்நிய மூலதனத்துக்கு வழிவகுத்தது.

2. தயாரிப்பு முறைக்கு வேண்டுமானால் 'பேடன்ட்' உரிமம் வழங்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்ட பொருள்களுக்கு 'பேடன்ட்' உரிமம் வழங்கக் கூடாது என்பது பா.ஜ.கவின் கொள்கை. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் தயாரிக்கப்பட்ட பொருளுக்கும் 'பேடன்ட்' உரிமம் வழங்கும் வரைவைச் சட்டமாக்கியது (1998) வாஜ்பேயி அரசு.

3. முன்னுரிமை இல்லாத துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்திற்கு கட்டுப்பாடு வேண்டும்; உயர் தொழில்நுட்பம், உள் கட்டுமானம் முதலான முன்னுரிமைத் துறைகளில் மட்டும் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வாஜ்பேயி ஆட்சிக்கு வந்த பின் முன்னுரிமை இல்லாத துறைகள் எவை என வரையறுக்க மறுத்தார். புகையிலை, சாராய வகைகள் உட்பட எல்லாவற்றிலும் அந்நிய நேரடி மூலதன நுழைவிற்கு வழி வகுக்கப்பட்டது.

சுருக்கம் கருதி ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

இந்தியப் பொருளாதாரம் கார்பொரேட் மயமாவதற்கான செயல்பாடுகள் வாஜ்பேயி அரசில் தீவிராமாயின.

டாக்டர் இராதாகிருஷ்ணன், பேரா.கோத்தாரி முதலான புகழ்மிக்க கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை அறிக்கைகள் உருவாக்கிக் கொண்டிருந்த மரபு வாஜ்பேயி ஆட்சியில் மாற்றப்பட்டது.

குமாரமங்கலம் பிர்லா, முகேஷ் அம்பானி என்கிற இரு கார்பொரேட் பெருமுதலாளிகளின் தலைமையில் உயர்கல்விச் சீர் திருத்தம் தொடர்பான குழு அமைக்கப்பட்டது.

'நீட்' உட்பட இன்றைய உயர்கல்விப் பிரச்சினைகள் பலவற்றிற்கும் தோற்றுவாயாக அமைந்தது அந்த அறிக்கையின் பரிந்துரைகள்.

"மாவட்டம்தோறும் ஒரு நவோதயாப் பள்ளி, மதிப்பீட்டுக் கல்வி எனும் பெயரில் புராண இதிகாசங்களைப் பாடத் திட்டத்தில் சேர்ப்பது, தேசிய அளவில் ஒரு பொதுவான பாடத் திட்டத்தை நோக்கி நகர்வது, ஆரம்ப மற்றும் நடுநிலைக் கல்விகளில் உள்ளூர்ச் சமூகத்திடமிருந்து நிதி திரட்டுவது. சந்தைத் தேவையை ஒட்டிக் கல்வி அமைப்பை மாற்றுதல், பல்கலைக் கழகங்களுக்கு நிதியைக் குறைத்து மாணவர் கட்டணங்களை அதிகப் படுத்துதல், புதிய தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்கச் சட்டம் இயற்றுதல், கல்லூரிகள் தரச் சான்றிதழ் (accreditation) பெறுவதைக் கட்டாயமாக்குதல், கல்லூரிகளைத் தன்னாட்சிக் கல்லூரிகளாக்குதல், உயர் கல்வியில் அந்நிய நேரடி முதலீடு, பல்கலைக்கழகங்களில் அரசியல் நடவடிக்கைகளைத் தடைசெய்தல், வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர்கல்விச் சந்தையைத் திறந்துவிடல், இதற்கெல்லாம் தோதாகப் பொருளாதாரத்தை எல்லாவிதக் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவித்தல்" முதலான பரிந்துரைகளை அந்த அறிக்கை முன்வைத்தது.

இவை அனைத்தும் இன்று நடைமுறைகளாகிவிட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் பாடநூல்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், உயர்கல்வி நிறுவனங்களை இந்துத்துவ சக்திகளைக் கொண்டு நிரப்பியது, ஜோதிடம், வேதம் முதலானவற்றையெல்லாம் பாடத் திட்டத்தில் புகுத்தியது முதலான செயல்பாடுகளுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் உருவாயின.

வாஜ்பேயி இறப்பை ஒட்டி அவரது சாதனைகளாக இன்று தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சி, நால்வழிச் சாலைகள் மூலம் போக்குவரத்து மேம்படுத்தப்பட்டது, அணுவல்லமை பெற்ற நாடாக இந்தியா ஆகியது, பொதுத்துறைகள் தனியார் மயமாக்கப்பட்டது ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

தொலைத் தொடர்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட "புரட்சி" என்பது இன்று உலக அளவில் ஏற்பட்டுள்ள ஒன்று. அரசு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., வி.எஸ்.என்.எல். ஆகியன வீழ்த்தப்பட்டு இன்று ரிலையன்ஸ் முதலான கார்ப்ரேட்கள் நுழைவதற்கும், பெரும் ஊழல்களுக்கும் அவை வழி வகுத்தன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பெருமை மிக்க நிறுவனங்களாக இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டதை பெருமைக்குரிய செயலாக கருத இயலாது. வாஜ்பேயி ஆட்சியில்தான் 'நவரத்தினங்கள்' என்றெல்லாம் போற்றப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து விற்பதற்கென்றே ஒரு துறை அமைக்கப்பட்டு அதற்கென ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது.

நான்கு

பிரதமர் பதவி ஏற்றபோது மிகவும் தளர்ந்த உடலையுடைய ஒரு வயோதிகர் வாஜ்பேயி. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் அரசுப் பொறுப்பை நிர்வகிக்க அவருக்கு நம்பிக்கையான துணைகள் தேவையாக இருந்தன.

கூட்டணிக் கட்சிகளை அதிகமாக முண்ட விடாமல் ஒடுக்கி வைக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர் பிரஜேஷ் மிஸ்ரா, என்.கே.சிங் என்கிற தனக்கு மிகவும் நம்பிக்கையான இருவரைப் பெரும் அதிகாரங்கள் உள்ள பதவிகளைக் கொடுத்து அருகில் வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

இவர்களோடு எந்தப் பதவியும் இல்லாமல் ஒட்டிக் கொண்ட வாஜ்பேயியின் வளர்ப்பு மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யாவையும் சேர்த்து ஒரு சூப்பர் அரசாக அவர்கள் செயல்படத் தொடங்கினர்.

கேள்விக்குறியான ஜனநாயக அமைப்பின் நடைமுறை

வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு ஓர் அதிகாரம் குவிந்த உச்சி அமைப்பாகப் பிரதமர் அலுவலகம் (PMO) இந்திய வரலாற்றில் முதல் முறையாக உருவாகியது.

இந்த பிரஜேஷ் மிஸ்ராவும், என்.கே சிங்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். 'ஏஜென்டுகள்' எனச் சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள்.

பிரதமரின் முதன்மைச் செயலர், தேசப் பாதுகாப்ப்பு ஆலோசகர் என இரட்டைப் பதவிகள் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்டன. தேசப்பாதுகாப்பு ஆலோசகர் என்பது அதுவரையில் இல்லாத ஒரு பதவி. 'பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான சிறப்பு அதிகாரி' என்கிற பதவி உருவாக்கப்பட்டு சிங்கிற்கு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அரசைக் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட பதவிகள் இவை. சிங் இடையில் ஓய்வுபெற்றுவிட்ட போதும் 'பிரதமர் அலுவலகச் சிறப்பு அலுவலர்' என்கிற பெயரில் அவர் தக்க வைக்கப் பட்டார்.

இதற்கெல்லாம் அரசியல் சட்டத்தில் இடமில்லை. அரசியல் சட்டப்படி அமைச்சரவைதான் உயர் அமைப்பு. அமைச்சரவைச் செயலர் (Cabinet Secretary) தான் உயர் அதிகாரப் பதவி. கூட்டு முடிவுகளுக்கு அமைச்சரவைதான் பொறுப்பு. துறை சார்ந்த முடிவுகளுக்கு அந்தந்த அமைச்சர்களும், செயலர்களும் பொறுப்பு.

ஒரு அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் மொத்த அமைச்சரவையையும் கூட்டித்தான் அதைச் செய்ய வேண்டும். இதுதான் ஒரு ஜனநாயக அமைப்பின் நடைமுறை.

அதிகார குவியல்

ஆனால் இந்த ஜனநாயக நெறிகளை எல்லாம் தாண்டிய ஒரு சூப்பர் அரசாக வாஜ்பேயியின் அலுவலகம் அதிகாரத்திலும், அளவிலும் பெரியதாகியது. அதன் ஒரு உச்சகட்ட அதிகாரக் குவியலை இன்றைய மோடி ஆட்சியில் நாம் காண முடியும்.

பிரதமர் அலுவகம் என்கிற பெயரில் அமைச்சரவை முடிவுகளில் தலையிட்டுத் தமக்கு வேண்டிய கார்ப்ரேட்களுக்கு வேண்டிய சலுகைகளைச் செய்ய இந்தச் சிறப்பு அதிகாரிகள் இதன் மூலம் வாய்ப்புகள் பெற்றனர்.

காஷ்மீர்ப் பிரச்சினை உட்படப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளில் முடிவெடுக்கும் சிறப்பு அதிகாரம் மிஸ்ராவுக்கும், அந்நிய மூலதனம் உட்பட முக்கிய தொழில்துறை அதிகாரங்கள் சிங்கிற்கும் அளிக்கப்பட்டன.

அதோடு துறை சார்ந்த சிறப்பு முடிவுகளை எடுக்க 'அமைச்சரவைக் குழுக்களை' (GoM) அமைக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் துறை சார்ந்த அமைச்சர்களின் அதிகாரமும் பறிக்கப்பட்டு, அமைச்சரவைக்குழு என்கிற பெயரில் பிரதமர் அலுவலகமே முடிவெடுக்கும் நிலை ஏற்பட்டது.

அமைச்சரவைக் குழுக்களில் தி.மு.க, ம.தி.மு.க, பா.ம.க, திரிணாமூல் முதலான 21 கட்சிகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் கூட்டணி ஆட்சி என்பதும் கேலிக்கூத்தாக்கப்பட்டது.

இப்படியான அமைச்சரவைக் குழுவை அமைத்து பெருந்தொழில் நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்கப்பட்ட ஒரு சில எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கே காணலாம்.

2001 ஜனவரி 29 அன்று தொலைத் தொடர்புச் செயலர் சியாமல் கோஷ் தொழில்துறைச் செயலர் பியூஷ் மன்காடுக்கு ஒரு கடிதம் எழுதினார். இதை 'அவுட்லுக்' இதழ் (மார்ச் 5, 2000) வெளியிட்டு அம்பலப்படுத்தியது.

பிரச்சினை இதுதான்: வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் தொழில்துறையிடம் உள்ளது. தொலைத் தொடர்புத் துறை திறந்துவிடப்பட்ட காலம் அது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் 70 சதத்திற்கும் மேலாக முதலீடு செய்ய அனுமதி கோரியிருந்தன.

ஆனால் 49 சதத்திற்கும் மேலாக வெளிநாட்டு மூலதனத்திற்கு அனுமதி இல்லை என்கிற விதியின்படி தொழில்துறை அவற்றை மறுத்துவிட்டது. ஆனால் வாஜ்பேயியின் பிரதமர் அலுவலகம் நியமித்த அமைச்சரவைக்குழு ஒன்று தொழில்துறை அமைச்சகத்தின் ஆணையைப் புறந்தள்ளி, தொழில்துறை அமைச்சர் உட்பட யாருக்கும் தெரியாமல் இந்த அனுமதிகள் வழங்கப்பட்டன.

தமக்குத் தெரியாமலேயே இவ்வாறு தம் ஆணை புறக்கணிக்கப்பட்டு இந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதைக் கண்டித்து தொழில்துறைச் செயலர் பியூஷ் எழுதிய கடிதத்தைத்தான் அவுட்லுக் இதழ் அம்பலப்படுத்தியது.

இவை தவிர பிரதமரின் பொருளதார ஆலோசனைக்குழு (EAC), செயற்திட்ட நிர்வாகக் குழு (SMG) ஆகியவற்றின் ஊடாக பிரதமர் அலுவலகம் நேரிடையாகத் தலையிட்டு எடுத்த வேறு சில முடிவுகள்:

1.ஹிர்மா மின்சாரத் திட்டத்திற்கு (ஒரிசா) ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் லாப உத்தரவாதத்துடன் அனுமதி அளிக்கப்பட்டது. நிதி, பொருளாதாரம், மின்சாரம் ஆகிய மூன்று துறை அமைச்சகங்களும் இதற்கு ஏற்கனவே அனுமதி மறுத்திருந்த நிலையில் பிரஜேஷ் மிஸ்ராவின் தலைமையிலான குழு நவம்பர் 17, 2000 அன்று இந்த அனுமதியை ரிலையன்சுக்கு அளித்தது.

2.நிதி அமைச்சகமும், பொது முதலீட்டு வாரியமும் மறுத்த யூரியா இறக்குமதித் திட்டம் ஒன்றை ஜனவரி 24, 2001 அன்று பிரதமர் வாஜ்பேயியின் அலுவலகம் அனுமதித்தது. சுமார் இரண்டு பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இந்தியாவுக்கு செலவாகும் ஒரு தேவையற்ற திட்டம் இது.

3.நிலையான தொலைத்தொடர்புச் சேவை (FSPS) அளிக்கும் மொபைல் தொலைபேசிச் சேவைக்கு (LMS) அனுமதி வழங்கும் முடிவொன்றை பிரதமர் வாஜ்பேயி அலுவலகம் ஜனவரி 5, 2001 அன்று எடுத்தது. ஒரு மெகா ஹெர்ட்ஸ் ரூ 830 கோடி விலை உள்ள 30 மெகாஹெர்ட்ஸ் அதிர்வெண்களை 'ரிலையன்ஸ்' மற்றும 'இமாச்சல் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெ' எனும் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கும் திட்டத்தை உள்ளடக்கியது இம்முடிவு. இதனால் அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 25,000 கோடி. மொபைல் உரிமையாளர் சங்கம் இதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தது (அவுட்லுக், பிப் 26, 2001). குஜராத் பூகம்பத்தால் பேரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் அதை ஈடுகட்ட வருமான வரி 2% உயர்த்தப்பட்ட பின்னணியில் ரிலையன்சுக்கும் இமாச்சல் லிமிடெடுக்கும் இந்தச் சலுகைகளை அளித்தார் வாஜ்பேயி.

பிரதமர் வாஜ்பேயி அலுவலகத்தின் இத்தகைய செயல்களைக் கண்டித்து பொருளதார விவகாரச் செயலர் இ.ஏ.எஸ். ஷர்மா நவம்பர் 2000ல் பதவி விலகியது குறிப்பிடத் தக்கது.

பிரதமர் அலுவலகம் மூலம் ரிலையன்ஸ், இந்துஜா முதலான நிறுவனங்கள் அரசை ஆட்டிப்படைப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். "தேவையானால் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் அளவிற்கு இந்துஜாக்கள் அதிகாரம் மிக்கவர்களாக உள்ளனர்" என ஷர்மா குற்றம்சாட்டினார்.

அது மட்டுமல்ல ரிலையன்ஸ்களும் இந்துஜாக்களும் ஒரு வகையில் மாநில அரசுகளையும் காட்டிலும் அதிகாரம் மிக்கவர்களாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்குமுன் வரலாற்றில் இப்படியான நிலை இருக்கவில்லை. இந்திரா ஆட்சியில் இப்படி பிரதமர் அலுவலகம் நடைமுறையில் (defacto) அதிகாரம் பெற்றிருந்தது எனக் கூறினாலும் இத்தகைய முறை மீறல்கள் இந்த அளவிற்கு அப்போது சட்டபூர்வமாகவில்லை.

வாஜ்பேயியின் கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு ஒருமுறை பிரஜேஷ் மிஸ்ரா பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரைச் சந்திக்கப் போகிறார். போபார்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்துஜாவையும் அவர் கூட அழைத்துச் சென்றதையும் அவுட்லுக் இதழ் (மார்ச் 5, 2001) அம்பலப்படுத்தியது.

அரசுப் பணி நிமித்தம் இன்னொரு நாட்டுப் பிரதமரைச் சந்திக்கும் ஓர் உயரதிகாரி ஒரு தொழிலதிபரைக் கூட அழைத்துச் செல்வது ஜனநாயக மரபல்ல.

பொதுத்துறை நிறுவனமான 'பாரத் அலுமினியம் கம்பெனி லிமிடெட்டின்' (BALCO) பங்குகள் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டுக்கு குறைந்த விலைக்குத் தரப்பட்டதும் வாஜ்பேயியின் காலத்தில்தான்.

பங்குச் சந்தை ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஸ்டெர்லைட், பி.பி.எல், வீடியோகான் ஆகியவை இரண்டாண்டுகாலம் மூலதனச் சந்தையில் பங்குபெறக் கூடாது என 'செபி' அமைப்பால் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம் அது.

அந்தத் தடையை மீறியும், பால்கோ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைக் கண்டு கொள்ளாமலும் பால்கோவின் 51% பங்கை வெறும் 550 கோடி ரூபாய்க்கு வேதாந்தாவிடம் விற்றது வாஜ்பேயி அரசு.

ஐந்து

வாஜ்பேயி ஒரு திறமையான பிரதமராகவும் இல்லை. கார்கில் போர் பிரச்சினை ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியாவிற்கு மிகப்பெரிய படை இழப்பும், பொருள் இழப்பும் ஏற்படுத்திய போர் அது. இந்திய அரசின் கணக்குப்படி 1,300 இந்தியப் படை வீரர்கள் கார்கில் போரில் கொல்லப்பட்டனர். 1750 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவிற்கு ஏற்பட்ட பொருள் இழப்பு 2.5 பில்லியன் டாலர் (ஃப்ரன்ட்லைன், செப் 29, 2000). அப்போதைய இந்திய அரசு, உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் கவனக் குறைவுகளே இந்த இழப்புகளுக்குக் காரணம் என இது குறித்த ஆய்வுகள் சொல்கின்றன.

ஜனவரி 1999 லிருந்து கார்கில் பகுதியில் நடந்துவந்த ஊடுருவலை மே 99 வரை இந்தியாவால் கண்டு பிடிக்க முடியவில்லை.

தனது உளவுத்துறை தவறிழைக்கவில்லை என வாஜ்பேயி அடித்துச் சொன்னார். ஆனால் இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சுப்பிரமணியம் குழு உளவுத்துறையின் தவறையும் தோல்வியையும் சுட்டிக் காட்டியது.

வாஜ்பேயி திறமையான பிரதமரும் அல்ல. அவரது ஆட்சி ஊழலுக்கு அப்பாற்பட்டதும் அல்ல. இந்தக் கட்டுரையில் நான் அவரது ஆட்சி, கல்வி மற்றும் இதர துறைகளில் புகுத்திய மிக ஆபத்தான் காவியாக்க முயற்சிகளை அதிகம் பேசவில்லை. வாஜ்பேயி அரசு அறுதிப் பெரும்பான்மையற்ற ஒரு கூட்டணி அரசு.

இப்போதுள்ள மோடி அரசு அறுதிப் பெரும்பான்மையுள்ள அரசு. மோடியைக் காட்டிலும் வாஜ்பேயி சற்றே மென்மையாகத் தோன்றுவதன் அடிப்படை இதுதானே ஒழிய சாரத்தில் இருவரும் ஒன்றுதான். 

(நன்றி: பிபிசி)






Share:

Sunday, August 19, 2018

'சங் பரிவாரின் முகமூடி'- மோதிக்கு பாதையை வகுத்துக் கொடுத்த வாஜ்பேய்


(நச்சு மரத்தில் நல்ல கனியா.. வாஜ்பேய்? என்னும் தலைப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சமரசத்தில் நான் எழுதிய ஆய்வு கட்டுரை ஒன்றை நேற்று எனது வலைப்பூவிலும், (http://ikhwanameer.blogspot.com/2018/08/blog-post_18.html) முகநூலிலும் (https://www.facebook.com/ikhwan.ameer.9/posts/1104582359694792?__tn__=K-R) பதிவேற்றியிருந்தேன். இதே கருத்தையொட்டி ராஜேஷ் பிரியதர்ஷி, டிஜிட்டல் எடிட்டர் எழுதிய கட்டுரையொன்றை இன்று பிபிசி தமிழ் இணையம் வெளியிட்டிருக்கிறது (https://www.bbc.com/tamil/india-45238189) எனது கருத்துகளை உள்வாங்கி வலுசேர்க்கும் அக்கட்டுரையை அப்படியே இங்கே தருகிறேன் படியுங்கள் தோழர்களே.. எத்தனை எத்தனை முகமூடிகளுடன் இந்த பாசிஸவாதிகள் உலா வருகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இக்கட்டுரைகள் நல்ல சாட்சி.  ~இக்வான் அமீர்)
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அடல் பிஹாரி வாஜ்பேயியை அவரது விரோதிகள் கூட விமர்சிக்க மாட்டார்கள்.  'அஜதாசத்ரு', 'சர்வபிரிய', 'மதிப்பிற்குரிய' போன்ற பெருமைமிகு அடைமொழிகளை கொண்டவர் வாஜ்பேயி.

வாஜ்பேயின் இரக்க குணம், எதிர்கருத்து கொண்டவர்களையும் எதிரியாக கருதாமல் இயல்பாக அணுகுவது, பகைமை பாராட்டாமை போன்ற பண்புகளுக்கு சொந்தக்காரர் வாஜ்பேயி.

அதற்கு காரணம் அவருடைய இனிமையான சுபாவம் என்று நினைப்பது விவேகமற்ற செயல். அவரைப் பற்றிய ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குபவர்கள், அவர் ஒரு மிகச் சிறந்த அரசியல் தலைவர் என்பதை மறந்து விடுகிறார்கள் என்றே கூறலாம்.

'சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி'

அரசியலில் ஈடுபடும் ஒருவரின் வெற்றி, அவரது அடையாளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஜன்சத்தா பத்திரிகையின் பணியாற்றிய பிரபல பத்திரிகையாளர் பிரபாஷ் ஜோஷி வாஜ்பேயைப் பற்றி குறிப்பிடும்போது, "சங் பரிவார் அமைப்புகளின் முகமூடி" என்று சொல்கிறார்.

"சங் பரிவாருக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரு பிரசாரகராக செயல்பட்ட வாஜ்பேயி, தனது நீண்ட கால அரசியல் வாழ்க்கையில் சங் பரிவாரின் பிரதிநிதியாகவே செயல்பட்டார்" என்கிறார் பிரபாஷ் ஜோஷி.

2001இல் நியூயார்க்கில் வசிக்கும் இந்தியர்களிடம் உரையாற்றிய வாஜ்பேயி, "இன்று பிரதமராக பதவிவகிக்கும் நான், சங் பரிவாரின் முன்னாள் உறுப்பினர் மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் அமைப்பின் தன்னார்வலராக தொடர்வேன்" என்று குறிப்பிட்டார்.

அவரது வார்த்தைகள் முற்றிலும் உண்மையானவை, சரியானவை, உறுதியானவை. வாஜ்பேயி சங் பரிவாரில் பிரசாரகராக இருந்தார், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவரை ஜனசங்கத்தில் பணிபுரிய அனுப்பியது.

மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக வாஜ்பேயி பணியாற்றியபோது, அத்வானி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சராக பணியாற்றினார். 1977ஆம் ஆண்டு ஜனதா கட்சியுடன் ஜன்சங்கம் இணைந்தது.

பிறகு சோஷியலிச கட்சியை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இரட்டை உறுப்பினர் என்ற முறைக்கு எதிரான நிலைப்பாட்டை கோரிக்கையாக முன்வைத்தார். அதாவது ஜனதா கட்சியில் இருப்பவர்கள், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் அதாவது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருக்கக்கூடாது. இதனை தொடர்ந்து, வாஜ்பேயியும், அத்வானியும் விலகினார்கள்.

இதன்பிறகு 1980க்கு பிறகு ஜனசங்கம் 'பாரதிய ஜனதா கட்சி' என்ற புதிய பெயரில் பிறந்தது. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது என்னவென்றால், பா.ஜ.க தோன்றுவதற்கு முன்பிருந்தே வாஜ்பேயி, அத்வானி இருவரும் சங் பரிவாரின் வழிகாட்டுதலுடன் அரசியலில் ஈடுபட்டார்கள் என்பதே.

 2004ஆம் ஆண்டில் 'ஒளிரும் இந்தியா' தேர்தலில் தோல்வியடையும் வரை ஒற்றுமையாக இருந்த இந்த ஜோடி, இந்துத்வா அரசியலுக்காக போராடியது.

இந்து தேசிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது அந்த அமைப்பின் வெளிப்படையான குறிக்கோள் என்பதால் இது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது. இந்துக்களின் மேலாதிக்கம் இருக்கவேண்டும் என்பதை விரும்பும் இந்த அமைப்பு, யாருக்கும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் ஜனநாயக முறைப்படி நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பா.ஜ.கவை சேர்ந்தவராக இருந்தால், அவர் சங் பரிவாரின் கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுகிறார்.

ஜஸ்வந்த் சிங்கின் பெயரின் நீக்கம்

அடல் பிஹாரி வாஜ்பேயி 1996 ல் பிரதமராக பதவியேற்றபோது தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கை நிதியமைச்சராக்கினார். 1998இல் வாஜ்பேயி தனது அமைச்சரவை பட்டியலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியபோது, அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்ஷன் திடீரென்று வாஜ்பேயியை சந்தித்தார், பிறகு பட்டியலில் இருந்து ஜஸ்வந்த் சிங்கின் பெயர் நீக்கப்பட்டது.

தனது அமைச்சரவையை தேர்ந்தெடுப்பது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம் என்றாலும், வாஜ்பேயி சங் பரிவாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பதால், ஜஸ்வந்த் சிங்கிற்கு பதிலாக, யஷ்வந்த் சின்ஹாவை நிதியமைச்சராக நியமிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

மோதி தலைமையிலான அரசோ, உண்மையில் அரசின் 'ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை' சங் பரிவாரின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கும் நடைமுறையை பின்பற்றுகிறது.

இரட்டை முகமூடி

எண்பதுகளில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டதில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை, ராமர் ஆலயம், இந்துத்துவா மற்றும் கூட்டணி அரசு என்ற கொள்கைகளுக்காக முகமூடி அணிந்து இரட்டை நிலைப்பாடுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) ஏற்பட்டது.

இந்துத்துவா கடும்போக்கு கொள்கை கொண்டவராகவும், மதரீதியாக பிளவுபடுத்தும் வேலையை செய்தார் எல்.கே. அத்வானி.  அதே நேரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கும், அரசாங்கத்தை அமைதியாக நடத்துவதற்குமான பொறுப்பை ஏற்றுக் கொண்டார் வாஜ்பேயி.

அத்வானி மற்றும் வாஜ்பேயிக்கு இடையிலான மோதல்கள் மற்றும் கருத்துவேறுபாடுகள் போன்றவற்றை பெரும்பாலான பத்திரிகையாளர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை, உண்மையில், சங் பரிவாரின் 'இறுதி லட்சியம்' நோக்கியப் பயணத்தில் அத்வானியும் வாஜ்பேயும் வெவ்வேறு பாதையில் பயணித்து தங்களுக்கு இடப்பட்ட பணியை மேற்கொண்டனர்.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள், ஒருவர் கடும்போக்காளர் மற்றவர் மிதவாதி என்பது முற்றிலும் புனையப்பட்ட தோற்றம். இதை மக்கள் நம்பவேண்டும் என்று திட்டமிட்டு அதற்கேற்ப காய்கள் நகர்த்தப்பட்டன.

உண்மையில் இருவருக்கும் இடையில் பெரிய அளவிலான அடிப்படை வித்தியாசங்கள் கிடையாது.  ஏனெனில் இருவரும் சித்தாந்தங்களின் அடிப்படையில் சங் பரிவாரின் கருத்துக்களை கொண்டவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.  அதாவது மார்க்சியத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால், ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்க முடியாது என்பது போலவே, இந்துத்துவவாதியாக இல்லாத ஒருவர் எப்படி ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கமுடியும்?

பல சந்தர்ப்பங்களில் வாஜ்பேயின் நடவடிக்கை எப்படியிருந்தாலும், இந்துவாதி என்ற விஷயத்தில், 'இரும்பு மனிதன்' என்று அழைக்கப்பட்ட அத்வானிக்கு அவர் குறைந்தவர் இல்லை என்பதை உணர்த்தக்கூடிய பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம்.

2002இல் குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின்போது, வாஜ்பேயி பிரதமராகவும், நரேந்திர மோதி குஜராத் மாநில முதலமைச்சராகவும் பதவி வகித்தனர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். மோடி "அரசியல் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்" என்றும், "மக்களின் மதம் அல்லது சாதியின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டக்கூடாது" என்பது போன்ற வாஜ்பேயின் வார்த்தை ஜாலங்கள் மிகவும் பிரபலமானவை.

வாஜ்பேயின் பொன்மொழிகள்

எப்போதும் உண்மையையே பேசுங்கள், கடும் உழைப்புடன் உங்கள் பணியை செய்யுங்கள், மற்றவர்களின் இதயத்தை காயப்படுத்தாதீர்கள் என்பது போன்ற பொன்மொழிகளை உதிர்த்ததைத் தவிர வாஜ்பேயி பெரிதான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.

அதன் பிறகு ஏப்ரல் 12ஆம் தேதியன்று கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், மிதவாதியும், முஸ்லிம்கள் மீது "கருணை கொண்ட" வாஜ்பேயி என்ன பேசினார்?  வாஜ்பேயின் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தும் சொற்பொழிவு அது.

  "முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும், பிறருடன் இணைந்து வாழ்வதை அவர்கள் விரும்புவதில்லை.  அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதை விரும்புவதில்லை. தங்கள் எண்ணங்களை அமைதியுடன் வெளிப்படுத்தாமல், மதத்தின் பிரசாரத்தை தீவிரவாதம் மற்றும் மிரட்டல்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார்கள்" என்பது தான் கோவா செயற்குழு கூட்டத்தில் வாஜ்பேயி பேசியதன் சாரம்சம்.

அத்வானி, உமா பாரதி முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாபர் மசூதியை இடிக்கும் பணிக்கு தலைமை தாங்குவார்கள் என்பதும், முன்னரே எழுதி செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியே.  அதேபோல், இந்த செயலில் இருந்து திட்டமிட்டே வாஜ்பேயி பிரித்து வைக்கப்படவேண்டும் என்பதும் அந்த உறுதியான திட்டத்தின் ஒரு பகுதி.

'நிலத்தை சமப்படுத்துவார்கள்'

இதன் மூலம் மக்களிடையே பா.ஜ.கவின் ஒரு பிரிவு கடும்போக்காளர்களாகவும், மற்றொன்று மிதவாதிகளை கொண்டது என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.  அதுமட்டுமல்ல, மசூதி இடிக்கப்படும்போது, மிதவாதி வாஜ்பேயி அந்த இடத்தில் இருக்கவேண்டாம் என்பதும் திட்டத்தின் ஒரு பகுதியே.

ஆனால் சம்பவத்திற்கு முன்னர் டிசம்பர் 5ஆம் தேதி லக்னோவில் அவர் அவர் ஆற்றிய உரை, அவர் அத்வானிக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் இல்லை என்பதை நிரூபிக்க போதுமானது. அயோத்தியாவில் கரசேவகர்கள் 'நிலத்தை சமப்படுத்துவார்கள்' என்று சொன்னதை மறந்துவிட முடியாது.

 இதுபோன்ற மற்றொரு உதாரணத்தையும் நினைவுகூரலாம்.  அசாம் மாநிலத்தில் நல்லி என்ற இடத்தில் கொடூரமான படுகொலை நடைபெற்றது

அப்போது, 1983ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பேய் உணர்வுகளை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய உரையாற்றினார்.  அப்போது வாஜ்பேயி ஆற்றிய உரைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோது, பா.ஜ.க பின்வாங்கியது.

ஆனால், 1996 மார்ச் 28ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையின்போது, அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா வாஜ்பேயின் அஸ்ஸாம் உரையை சுட்டிக்காட்டி அவரின் எண்ணப்போக்கை வெளிப்படுத்தினார்.

அதில் வங்கதேசத்தில் இருந்து வந்த வெளிநாட்டவர்களை சகித்துக் கொள்ளவேண்டாம் என்றும் அவர்களிடம் வன்முறையை கையாளலாம் என்றும் வாஜ்பேயி கூறியிருந்தார்.

இறுதி இலக்கை நோக்கிய தொடர் பயணம்

பல தசாப்தங்களாக தொடர்ந்த ஹிந்துத்வாவின் அரசியல் பயணத்தில் அடல் பிஹாரி வாஜ்பேயின் பங்கு மிகவும் முக்கியமானது. படிப்படியாக, அமைதியில் இருந்து இந்துத்துவா கொள்கைக்கான ஒரு தளத்தை உருவாக்குவது வாஜ்பேயி இல்லாமல் சாத்தியமாகியிருக்காது.

1996 முதல் 2004 வரை மூன்று முறை இந்திய பிரதமராக பணியாற்றிய வாஜ்பேயி, காங்கிரஸ் கட்சியை சேராத பிரதமர் ஒருவர் ஐந்தாண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்தவர் என்ற பெருமை பெற்றவர்.

கட்சிக்கு விசுவாசியாகவும், கட்சியின் கோடிக்கணக்கான தொண்டர்களின் அன்பைப் பெற்ற அபிமானத் தலைவர் வாஜ்பேயி என்பதோடு, அவருடைய தாராளவாத கொள்கைக்காகவும் அறியப்படுபவர் அவர்.

எந்தவொரு நபருடனும் பகைமை பாராட்டாத சிறந்த அரசியல்வாதியான வாஜ்பேயி, தன்னுடைய அரசியல் திறமையால், இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற நிலைமையில் இருந்து காங்கிரஸுடன் போட்டியிடும் நிலைக்கு கட்சியை உயர்த்தியவர்.

கட்சியின் வளர்ச்சிக்கு தனது சகா அத்வானியின் உதவியுடன் முழுமூச்சாய் பாடுபட்ட வாஜ்பேயியின் ஆட்சியில், அதிகாரத்தின் நன்மையையும், ஆசீர்வாதத்தையும் பெற்ற சங்க பரிவார், தனது வேர்களை பலப்படுத்திக் கொண்டது.

ஒரு புறம் கடும்போக்காளர் அத்வானி, மறுபுறம் நிலைத்தன்மை மற்றும் கூட்டணி தர்மம் என்று பேசி பிரச்சனைகளுக்கே பிரச்சனை கொடுத்து அதை அடக்கிய மிதவாதி வாஜ்பேயி.

இன்று, நரேந்திர மோதி, சாக்ஷி மகாராஜ், கிரிராஜ் சிங் போன்றவர்கள் அத்வானியின் பாணியை பிந்தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.  இன்று அவர்களுக்கு இரண்டு முகங்களோ, முகமூடிகளோ தேவையில்லை.

அவர்களுக்கான முகமூடியாய் இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயி போன்றவர்களின் தேவை தற்போது சங் பரிவாருக்கு இல்லை. தனது வாழ்நாளிலேயே சங் பரிவாரின் தேவைகளை பூர்த்தி செய்து தனது கடமையை செவ்வனே ஆற்றினார் வாஜ்பேயி. 

(நன்றி: பிபிசி) 


Share:

ஆய்வு கட்டுரை: நச்சு மரத்தில் காய்த்த நல்ல கனியா வாஜ்பேய்?


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
வாஜ்பேய் குறித்து ஊடகங்கள் உருவாக்க முயலும் பிம்பம் என்ன? நிஜம் என்ன என்பதைக் குறித்து மே 16-31, 1998, பக்கம் 13-16 அன்றைய சமரசத்தில் நான் எழுதிய ஆய்வு கட்டுரை இது.

தரவுகள், சம்பவங்கள் எல்லாமும் கட்டுரை எழுதப்பட்ட சூழலில், காலத்தில் சம்பந்தப்பட்டவை என்பதை வாசகர்கள் நினைவில் வைக்க வேண்டும். - இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள வாஜ்பேய் குறித்து பத்திரிகைகள் ஊதி… ஊதி.. பெரிதாக்கிய அளவுக்கு அவர் சிறப்பானவர்தானா? என்பதை நாம் தெரிந்து கொண்டேயாக வேண்டும்.

வாஜ்பேய், ஒரு ‘மாடரேட்’ அதாவது ‘முற்போக்குவாதி’ ‘நல்லவர்’ ‘வல்லவர்’ ‘நளினமானவர்’ – என்றெல்லாம் சொல்லப்படுவது எந்தளவுக்கு உண்மை? இதை ஒரே வரியில் சொன்னால், வாஜ்பேய், “ஆர்.எஸ்.எஸ். சிந்தனையுடன் சிறிதும் முரண்பாடு இல்லாதவர்” எனலாம். உண்மையும் இதுதான். அவர், ‘திறமையான பிரதமர்’; ‘நச்சு மரத்தில் காய்த்த நல்ல கனி’ என்னும் கூற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

1996-ல், 13 நாட்கள் நாடாண்ட பா.ஜ.க தலைவரான வாஜ்பேய், நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வை மதிப்பவர் என்றும், எல்லாத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிக் கொண்டிருப்பவர் என்றும், சிறுபான்மையினரின் தார்மீக உரிமைகளை காப்பாற்றும் சூரர் என்றும் செய்யப்பட்ட பரப்புரைகள், பொய்யுரைகளாகும். கலப்படமில்லாத கட்டுக் கதைகளாகும்.

பி.ஜே.பியின் முக்கியமான மூன்று தலைவர்களில் வாஜ்பேயும் ஒருவர். அத்துடன், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகிய இவர்களைவிட மூத்தவர் அதாவது சீனியர். பி.ஜே.பி. துவங்கிய நாளிலிருந்து இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதற்கும் முன்பாக ‘ஜனசங்’ காலத்திலிருந்து வாஜ்பேய் அந்த இயக்கத்தின் முக்கியத் தலைவராய், தளகர்த்தாவாய், சிந்தாந்தத்தில் முக்குளித்த பிரமுகராய் உள்ளவர். கடந்த ஐம்பதாண்டுகளாய் அவர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர். இவ்வளவு நீண்ட நெடிய காலம் இயக்கத்துடன் நகமும், சதையுமாய் உறவு வைத்துள்ள இந்த ‘மாடரேட்’ ஒருநாளும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரதான கொள்கையாள முஸ்லிம் விரோதப் போக்கையும், அதை செயல்படுத்த மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளையும் கண்டித்ததேயில்லை. அதற்கு மாறாக, இயக்கத்தின் முஸ்லிம் விரோதப் போக்கை நீரூற்றி பேணுதலோடு கண்காணித்து வளர்த்து வந்தவர் அவர் என்றே சொல்லலாம்.

அதேசமயம், மிகவும் எச்சரிக்கையோடும், ‘இரட்டை நாக்கு’ தோரணையில், தன்னை நடுநிலைவாதியாகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் ஊடகங்கள் சித்தரிக்கும் வண்ணம் நடந்து கொண்டார் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த போலி சித்திரமே இன்று ஒருபுறம் பா.ஜ.கவுக்கும், மறுபுறம் வாஜ்பேய்க்கும் லாபம் தந்து கொண்டிருக்கிறது.

அசாம் அசாமியர்களுக்கே என்ற போராட்டம் முற்றிவரும்நிலையில், ‘அசாமில் பல நூற்றாண்டுகளாய், தலைமுறை தலைமுறையாய் வசித்துவரும் முஸ்லிம்களால்தான் இந்துக்கள் அவதிப்படுவதாகவும், அதனால், இந்துக்கள் தங்கள் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியிருக்கும் என்றும் வாஜ்பேய் சொன்னதாய் முன்னாள் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா கூறியிருக்கிறார்.

இதுதான் வாஜ்பேய்.

பாபரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளி, ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரிழப்புக்கு காரணமானது. குறிப்பாக வடஇந்தியாவில் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயினும், ‘மாடரேட்’ வாஜ்பேயின் இதயமோ இரக்கத்தால் கசியவில்லை. தனது கட்சி செய்யும் முஸ்லிம் விரோதப் பரப்புரைகளை அவர் ஒருநாளும் தடுக்கவில்லை. பல்வேறு வகுப்பு கலவரங்கள் சம்பந்தமாக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைள்படி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் ஒருமுறைகூட அவர் குரல் எழுப்பியதில்லை.

ஏனென்றால், கலவரங்களை முன்னின்று நடத்திய சக்திகள் எவை என்பது வாஜ்பேயிக்கு நன்றாகவே தெரியும். அதுவே அவரது மௌனத்துக்கு காரணம்.

1993, ஜனவரியில் மும்பை நகரில் சுமார் 15 நாட்கள் தலைவிரித்தாடிய முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்பு கலவரங்களின்போது, ‘மாடரேட்’ வாஜ்பேய் இந்த மரணகாண்டத்தை உடனே நிறுத்தும்படி சிவசேனைத் தலைவர் பால்தாக்கரேயையோ, அரசு எந்திரத்தையோ கேட்டுக் கொண்டதில்லை. 
பாபரி மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கியபோது, இது ‘பக்தி’ பரவசத்தால், விளைந்த செயல் என்று அதை அசல்டாக வர்ணித்தவர் வாஜ்பேய்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் மட்டுமல்ல காசி, மதுரா இன்னும் வி.ஹெச்.பி பட்டியலில் இடம் பெற்றுள்ள நூற்றுக் கணக்கான மசூதிகளை கோயில்களாக்கும் மதவெறியைக் கண்டித்து அவர் ஒருநாளும் வாய் திறந்து பேசியதேயில்லை.

ஜனதா கட்சி அரசாண்டபோது, வாஜ்பேய் வெளியுறவு அமைச்சராக பொறுப்பிலிருந்தார். அப்போது அவர் அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவுகள் மேற்கொண்டதாக செய்திகள் பரபரப்பாய் வெளிவந்தன. ஆனால், இதற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? இந்திய முஸ்லிம்கள் இந்திய மண்ணில் பிறந்து, இந்த மண்ணிலேயே வளர்ந்து, இந்த மண்ணிலேயே மரணிக்கிறார்கள். அண்டை, அயல்நாடுகளுடன் வாஜ்பேய் கொள்ளும் உறவால் இந்திய முஸ்லிம்களுக்கு ஆகப் போவதும் ஒன்றுமில்லை. இருப்பினும் இந்த செய்திக்கு ஊடகங்களால் முக்கியத்துவம் தரப்பட்டது.

பல்லாண்டு காலம் நன்கு திட்டமிட்டு வாஜ்பேய் மிகவும் எச்சரிக்கையுடன் தன்னை ஒரு மாடரேட் தலைவராய் காட்டி பெயர் சம்பாதித்துக் கொண்டார். அவரது பயங்கரமான சிந்தனையை உள்ளுக்குள் மறைத்து, புறத்தில் தேன் தடவிய சொற்களாய் உதிர்த்து கேட்பவரை வசீகரம் செய்யும் திறமைசாலி அவர்.

தீவிரமான இந்துத்துவ வகுப்புவாதி என்று பெயர் பெற்ற எல்.கே.அத்வானியால் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது என்று முடிவெடுத்த ஆர்.எஸ்.எஸ் வாஜ்பேயை களத்தில் இறக்கியது. இதன் விளைவாக 1991 ஏப்ரல் 30, அன்றைய சூழலை முன் வைத்து அத்வானியின் பெயரை பிரதமர் பொறுப்புக்கு வாஜ்பேய் முன்மொழிந்தார். அதே ஸ்டைலில் தற்போது, வாஜ்பேய்தான் பிரதமர் பொறுப்புக்கு பொருத்தமானவர் என்று அத்வானி முன்மொழிந்தார். உண்மையில், இந்த இருவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கைப்பாவைகளே! ஒரே சித்தாந்த குட்டையில் ஊறிய மட்டைகளே..!

நவம்பர் 9, 1995-ல், மும்பையில் வாஜ்பேய் பேசிய பேச்சுகள் அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தின. “இந்திய ஒருமைப்பாடு இந்துத்துவத்தின் மீது ஆதாரப்பட்டிருக்கிறது. இந்துத்துவம், இந்துயிஸம் எல்லாம் ஒன்றுதான். இந்தியா மதம் சார்ந்த நாடாகவே பாவிக்கப்படும்” – என்றார் அப்போது வாஜ்பேய். (தி ஆசியன் ஏஜ், நவ.10,1995)

இந்திய நாட்டின் மதச்சார்பின்மையை வாஜ்பேயால் ஒருகாலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அத்வானியோ, முரளிமனோகர் ஜோஷியோ, ராஜேந்திர சிங்கோ யாராக இருந்தாலும் இவர்களது சிந்தனையும், எண்ணங்களும் ஒன்றுதான். இவற்றில் எந்த முரண்பாட்டையும் காண முடியாது. இப்படியிருக்கும்போது, வாஜ்பேய் எப்படி மாடரேட்டாக இருக்க முடியும்? இவர்களுக்குள் இருந்த வேறுபாடு என்னவென்றால், அத்வானி, ராஜேந்தி சிங் போன்றவர்கள் இந்துத்துவம் குறித்து பேசும்போது முரட்டுத்தனமாய் வெட்டு ஒன்று. துண்டு இரண்டு என்று பேசுவார்கள். ஆனால், வாஜ்பேயோ தேன் தடவி இந்துத்துவ கருத்துக்களை சமர்பிப்பதில் அதிவல்லவர்.

ஏப்ரல் 30, 1991. ஜெய்பூர் மக்களவைத் தேர்தல்களில் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும், கிரிமினல்களுக்கும் சாட்சாத் இதே வாஜ்பேய் பரிந்துரைத்தார் என்பதே அவரது ‘நல்லவர்’, ‘வல்லவர்’ பெயர்களுக்கு ஓர் உதாரணம். “இவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள். குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகள் அல்ல!” என்று கிரிமினல்கள் குறித்து இவர், நற்சான்றிதழும் தந்தார்.

சமீபத்தில், உ.பியில் பி.ஜே.பி கட்சி கிரிமினல்களுக்கு அமைச்சரவையில் இடம் தந்தபோது, கடும் விமர்சனம் எழுந்தது. அந்த நேரத்தில் வாஜ்பேய் அப்பிரச்சினையை மிகச் சாமார்த்தியமாக சமாளித்தார். காட்சி ஊடகங்களிலும், செய்தியாளர் கூட்டங்களிலும், “கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் உ.பியின் பி.ஜே.பி அமைச்சர்கள். இவர்களை குற்றவாளிகள் என்று எப்படி சொல்ல முடியும்? இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டனவா?” – என்று குதர்க்கவாதம் புரிந்தார்.

பா.ஜ.கவின் கொள்கையிலும், கோட்பாடுகளிலும், வழிமுறைகளிலும் வாஜ்பேய் என்றும் முரண்பட்டதேயில்லை. வெகு சாமார்த்தியமாக அவர் மாடரேட் முகமூடியை தரித்துக் கொண்டார். வாய்ப்பு கிடைத்தால் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இவர்களைவிட ஒருபடி மேலே சென்று முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதே இல்லை. அவர் ஒருகாலும் ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்த கொள்கைகளிலிருந்து நூலிழையும் விலகி நடக்க விரும்பியதேயில்லை.
மாடரேட்டான வாஜ்பேய்-ஆர்.எஸ்.எஸ் இடையிலான உறவு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, வாஜ்பேய், “நான் மாடரேட் என்றும், கட்சி அப்படியில்லை என்றும், நான் மதசார்பின்மையை கடைப்பிடிப்பவன் என்றும், கட்சி அப்படியில்லை என்றும், நான் நல்லவன், கட்சி அப்படியில்லை என்றும் இடதுசாரிகள்தான் (போலியாக) பிரச்சாரம் செய்கிறார்கள்” – என்றார். தனது சித்தாந்தத்தை விளக்க வரும்போது, “இந்துத்துவமும், தேசிய கலாச்சாரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. இவற்றைப் பிரிக்கவே முடியாது!. இதுவே என் கொள்கை” – என்றார். (சண்டே 30.06.1996). அத்வானி சொல்வதும் இதுதான்.

கோல்வால்கர் இந்த விஷயம் குறித்து எழுதும்போது, “இந்த நாட்டில் தேசிய வாழ்க்கை என்பது இந்து மக்களுடையதே..! இது முழுமையான இந்து நாடு!” – என்கிறார். இதைத்தான் வாஜ்பேய் வேறு வார்த்தைகளில், “இந்துத்துவமும், தேசிய கலாச்சாரமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை” – என்கிறார்.

1970-ல், ஜனசங்கம் நடத்திய அகில இந்திய மாநாட்டில், வாஜ்பேய் இந்துத்துவ பிரச்சாரகராக பொறுப்பு வகித்தார். அதேசமயம் தன்னை மாடரேட்டாக நிலைப்படுத்திக் கொள்ள அவர் பேசிய பேச்சை கவனமாக கையாண்டார் இப்படி:

“மதபேதமில்லாமல் இந்திய மக்கள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கதவுகள் திறந்து வைக்கப்பட வேண்டுமென்று நான் கொள்கை ரீதியாக நினைக்கிறேன். ஆனால், ஆர்.எஸ்.எஸ் இந்து சமுதாயத்திற்கு சேவைச் செய்ய முயல்கிறது. ஆர்.எஸ்.எஸ் மாறிவிட்டாலும் இன்னும் நிறைய மாற்றங்கள் அதில் வர வேண்டும்!” (16.03.1979)

ஆகஸ்ட் 2, 1979 – ல், இந்தியன் எக்ஸ்பிரஸில் ஆர்.எஸ்.எஸ் குறித்து வாஜ்பேய் எழுதிய கட்டுரையொன்றில், “ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் அல்லாதவரை தனது இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லையே ஏன்? – என்று கேள்வி எழுப்புவது நியாயமானதே..! ஆனால், ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னுள்ள பணி இந்து மத சமூகப் புனரமைப்பு பணியாகும். இந்து மத்ததிலுள்ள தீமைகளை களைந்து நீக்கும் அமைப்பாக இருப்பதால்தான் (இது சாத்தியமில்லை!)
ஆனால், அதே ஆண்டு டிசம்பர் 8-ல், ஆர்.எஸ்.எஸ் தனது கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும், இந்து ராஷ்டிரத்தாகம் இந்திய ராஷ்டிரமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வாஜ்பேய் ஆலோசனை வழங்கினார்.

இந்த செயல்பாடுகள், வாக்கியங்கள், சொல்லாடல்கள் எல்லாமே திட்டமிட்டு ‘சமநிலைப்படுத்தவே’ கையாளப்பட்டவை. தன்னைத் தானே முற்போக்குவாதியாய் காட்டிக் கொள்ள 1979-ல், வாஜ்பேய் ஆரம்பித்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கின எனலாம். ஆனால், சில ஆண்டுகள்கூட இந்த முகமூடி நிலைக்கவில்லை என்பதே உண்மை. அதற்குள் வாஜ்பேயின் சுயமுகம் வெளிப்பட்டுவிட்டது.

ஜுலை 10, 1985-ல், ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்வியும் வாஜ்பேய் அளித்த பதிலும் இதோ:

“பா.ஜ.க மீண்டும் பழைய ஜனசங் பாதையை நோக்கி செல்கிறதா?”

“நாங்கள் ஜனசங் கொள்கையிலிருந்து எப்போது விலகினோம். மீண்டும் அதை நோக்கி செல்வதற்கு?” (தி ஸ்டேட்மேன், ஜுலை 26, 1985)

‘தி சங் ஈஸ் மை சோல்’ – என்று வாஜ்பேய் மே 7, 1995-ல் எழுதிய ஒரு கட்டுரை அவருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸீக்கும் இடையே உள்ள இணைப்பை நன்கு புலப்படுத்தும்.

இந்து ராஷ்டிரம், இந்து ராஜ்ஜியம் இவற்றுக்கு இடையேயுள்ள வேறுபாட்டை விளக்கி வாஜ்பேய் பேட்டியளிக்கும்போது,

“ஆர்.எஸ்.எஸ் இந்து ராஜ்ஜியத்திற்காக போராடவில்லையென்றும், இந்து என்னும் சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதால், இந்தியன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது நல்லது என்றும், தனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து ராஷ்டிரா கொள்கையில் எவ்வித முரண்பட்ட கருத்தும் இல்லை என்றும் சொன்னார். (தி இந்துஸ்தான் டைம்ஸ், ஆக.11,1983)

வாஜ்பேயின் இத்தகைய பேச்சுகள் சில பத்திரிகையாளர்களை கவர்ந்தது. இதன் விளைவாக வாஜ்பேய் மாடரேட்டாக மாறினார்.

மே 17, 1987 சி.பி.ஐ தலைவர் எம். பாரூக்கி ஒரு கூட்டத்தில், “விஸ்வ இந்து பரிஷத் இந்து ராஷ்டிரத்தை கோருவதாய் விமர்சனம் செய்தார். பதறிப்போன வாஜ்பேய், “இந்து ராஷ்டிரம் என்பது ஒரு பண்பாட்டு அமைப்பு” என்று சொல்லி அதற்கு வக்காலத்து வாங்கவும் செய்தார். அதற்காக பல கதைகளை அவர் கதைக்க வேண்டி வந்தது.
ஏப்ரல் 6, 1989-ல், மும்பையில் வாஜ்பேய் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை பேசும்போது, பாபரி மஸ்ஜித் விவாதத்திற்குள்ளாகியிருக்கும் கட்டிடம். தேசிய சின்னமாக மாற்றுவதற்கு ஒப்புக் கொள்ளும்படியும், அது இந்துக்களின் கலாச்சார வாரிசுத்துவம் என்றும், இந்துத்துவம் என்பது உலகின் தொன்மை வாய்ந்த பண்பாடு என்றும், அந்த இடம் மீது (பாபரி மஸ்ஜித்) நியாயமான உரிமைகள் இந்துக்களுக்கே இருப்பதாகவும், இதை, தான் ஒரு பிஜேபி தலைவராய் சொல்லவில்லை என்றும், மாறாக, ஒரு சுயம்சேவக்காகவும், ஒரு இந்துவாகவும் சொல்வதாக சொன்னார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 7, 1989)

இந்துத்துவத்தை இந்தியனாக மாற்றச் சொல்லும் வாஜ்பேய் சமயத்துக்கு ஏற்றாற்போல, பாபரி மஸ்ஜித் இந்துக்களுக்கே சொந்தமானது என்று வாதிக்கிறார். மீண்டும் மாடரேட் முகமூடியை தரித்துக் கொண்டு, இந்துத்துவம் ஒரு மதம் அல்ல. அது ஒரு கலாச்சாரம் என்கிறார்.

அத்வானியின் ரத யாத்திரை ரத்த யாத்திரையாக மாறிக் கொண்டிருந்த சமயம் அது. வி.பி.சிங் அரசு அதிகாரத்தை இழந்த நிலை. இந்த சமயத்தில் வாஜ்பேய் பேசும்போது, “மண்டல் பிரச்னை மீது நாங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வது நல்லதல்ல என்று நினைத்தோம். ஆனால், எங்களுக்கு நல்ல வாய்ப்பை (ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியது) வி.சி.சிங் தந்தார். அத்வானியை உ.பிக்குள் நுழைய அனுமதிக்காவிட்டால்.. ஆதரவை விலக்கிக் கொள்வது என்று முடிவெடுத்தோம்!” – என்றார்.

வாஜ்பேயின் குள்ள நரித்தனத்துக்கும், இரட்டை நாக்கு பேச்சுகளுக்கும் இந்த சம்பவம் நல்ல உதாரணம்.

“நாங்கள் இந்திய ராஷ்டிரம் தேவை என்கிறோம். இந்து ராஷ்டிரம் என்ற பெயர் வைத்தவர்களின் பார்வையில் இந்தியர் அனைவரும் முஸ்லிம்கள் உட்பட இந்துக்களே! மதத்தைப் பொருத்தவரை அவர்கள் முஸ்லிம்களாக இருக்கலாம். இந்து ராஷ்டிரம் வேண்டுமென்று யாராவது கோரினால் அவர்களுடன் எங்களுக்கு எந்த முரண்பாடும் இல்லை” (தி இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆப் இண்டியா ஜனவரி 26, 1991)

1989-ல், ஒரு ஸ்வயம் சேவக்காக, ஒரு இந்துவாக, இந்தியன் எக்ஸ்பிரஸில் வாஜ்பேய் காட்டிய முகத்தோடு பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இந்துக்களுக்கே உரிமை என்ற வகுப்புவாத முகத்தை ஒப்பிட்டு பார்த்தால் வாஜ்பேயின் உண்மை முகம் வெளிப்பட்டுவிடும். நயவஞ்சகத்தனமும், கடைந்தெடுத்த ஏமாற்று சித்து வேலைகளுமே அவரது நற்பண்புகளாய் இருப்பது வெளிப்படையாய் தெரிந்து கொள்ளலாம்.

தேவைப்படும்போது வாஜ்பேய் அதிதீவிரமான வகுப்பு வெறியராய் பேசுவார்.

அத்வானி ரத யாத்திரை விமரிசையாக நடந்தபோது, அத்வானி முன் வைத்த இந்துத்துவத்தால் அவரது செல்வாக்கு பெருகுவதைக் கண்ட வாஜ்பேய்கூட தானும் வகுப்புவாத வெறியுணர்வுக்கு சற்றும் குறைந்தவனல்ல என்று காட்டிக் கொள்ள வேண்டி வந்த்து. அதன் அடிப்படையில், பைசாபாத்தில் பேசும்போது அவர், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது அத்யாவசியமானது என்றும், அதுவே இந்துக்களின் ஆத்ம கௌரவத்தைக் காப்பதாக இருக்கும்” - என்றார். (டைம்ஸ் ஆப் இந்தியா மே 31, 1991)

“தேவைப்பட்டால், இதற்காக ஆட்சி மாற்றமும் தவிர்க்க இயலாதது” - என்றும் முழங்கினார். “அயோத்தி தேசிய அடையாளத்துடன் தொடர்புடைய பிரச்னை என்றும் அது இந்துக்களின் இதயங்களைப் பாதித்த பிரச்னை என்றும்” - அப்போது அவர் சொன்னார்.

ஆக, வாஜ்பேயின் பார்வையில் இந்துக்களின் நலனே தேசிய நலன் என்று பொருள்.

காசி, மதுரா தமது செயல் திட்டத்தில் இல்லை என்று வாஜ்பேய், சொல்லிக் கொண்டிருப்பார். அதேசமயம், ‘தற்காலிகமாக’ என்ற சாதுர்யமான வார்த்தையை மறக்காமல் பேச்சினூடே திணித்துவிடுவார்.

பதிமூன்று நாள் அரியணை கவிழ்ந்ததும், ஜுன் 9, 1996 சென்னையில் வாஜ்பேய் பேசும்போது, “இந்துத்துவம் விஷயத்தில் எதையும் விட்டுத்தர முடியாது என்றும், ஒரு கூட்டணி அரசு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது, தமது அரசு வாத, விவாதங்களில் ஈடுபட போவதில்லையென்றும் மக்களுக்கு சொல்லி தனது இந்துத்துவ விசுவாசத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் செய்தார்.

மத துவேஷங்களை விதைத்து, வர்ணாசிரம சித்தாந்தத்தை நிலைநிறுத்த முயலும் பா.ஜ.க தன்னை முற்றிலும் மாற்றிக் கொள்ளும் என்பது வீணான கற்பனையாகும். அதேபோல, நச்சு மரம் நல்ல கனிகளை என்றும் காய்ப்பதில்லை என்பதும் யதார்த்தமாகும்.
ஆர்.எஸ்.எஸ் என்ற பாசிஸ நச்சு மரத்தின் ஆணி வேராக இருக்கும் வாஜ்பேய்யும், அவரது அரசும் எந்நாளும் மக்களுக்கு பலன் தர முடியாது.

வாஜ்பேய் இந்துத்துவ காற்றை சுவாசித்தவாறே பிறந்தார். அந்த சுவாசத்தை உள்வாங்கி வளர்ந்தார். மேலுக்கு என்னதான் அவர் நடித்தாலும் அவரது உண்மை முகம் பயங்கரமான பாசிஸ முகமாகும். உலகம் மாபெரும் இழப்பை சந்தித்த சித்தாந்தத்திற்கு சொந்தமான முகமாகும்.

(சமரசம், மே 16-31, 1998, பக்கம் 13-16)



Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive