கனத்துபோன மனதுடனே
இரவுகளில் நான்!
பேரானந்தம் தரும்
இரவின் அமைதியை
நடுஇரவிலும்
பசுமையுடன் இருக்கும்
என் ரசனையை
தொலைத்துவிட்டேனோ நான்?
அல்லது பறித்துவிட்டனரோ
மனுவாத பாவிகள்!
“உலகில் சிறந்த நாடு
என் நாடு
இந்திய திருநாடு..!”
என்று எத்தனை முறை
பாடியிருப்பேன்?
புளாங்கிதம் அடைந்திருப்பேன்!
எழுத்துக்களாய் வடித்திருப்பேன்!
மேடைதோறும் முழங்கியிருப்பேன்!
மீரட், பீவண்டி, பாகல்பூர்,
பாபரி மஸ்ஜித், குஜராத் என்று
இனப்படுகொலைகளால்
அவநம்பிக்கை கரு மேகங்கள்
வாழ்வில் சூழ்ந்தபோதெல்லாம்
எத்தனை எத்தனை முறை
என் தலைமுறையை
அமைதி படுத்தியிருப்பேன்!
"பொறுங்கள் பிள்ளைகளே
எல்லாம் சீராகிவிடும்!"
என்று ஆற்றுப்படுத்தியிருப்பேன்!
இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?
ஆம்..!
இன்று எல்லாம்
பறிபோகும் நிலையில்
பொய்யுரைத்தேனோ நான்?
தாயகத்தின் மீதிருந்த
கண்மூடித்தனமான
'தாயகப் பித்தால்'
கடல் கடந்து பொருள்தேட
எத்தனை எத்தனை
வாய்ப்புகள் வந்தும்
அத்தனையும் புறக்கணித்த
என் இறந்தகாலம்
நையாண்டி செய்வதை ஏற்பதா?
இளமையில், கடவு சீட்டிருந்தால்
வற்புறுதப்படுவேனோ என்று
முதுமையில்
ஹஜ் வணக்கத்துக்கான கடமைவரை
அதை வாங்க மறுத்த நினைவுகள்,
கைக்கொட்டி சிரிப்பதை ரசிப்பதா?
இன்று கண்முன்னே
தலைநகர் தில்லி
வகுப்புவாத வானரங்களால்
பற்றவைக்கப்படுகிறது!
மனிதம் தோட்டாக்களால்
துளைக்கப்படுகிறது!
உணவு எரிப்பொருளும்
எதிர்காலம் சிதைக்கும் என்று
எரிவாயு உருளைகளால்
கட்டடங்கள் தகர்க்கப்படுகிறது!
வேலியாய் நின்று காக்க வேண்டிய
காவல்துறையின் பாதுகாப்பில்
அத்தனையும் நடக்கிறது!
நாட்டாமை தீர்ப்புகளாய்
நீதிமன்றங்களில்
தீர்ப்பு வாசிக்கப்படுகிறது
அந்தோ, அழகிய எனது பேரழகு
கனவுநாடு சிதைக்கப்படுகிறதே!
தெய்வமே! இது எனது தேசமா?
அல்லது ஹிட்லரின் தேசமா?
என்ற குழப்பத்தில்
சிதைந்து போகிறது எனதுள்ளம்
மௌனத்தில்
கரைந்து போகிறது எனதுயிர்காற்று
கிள்ளி கிள்ளிப் பார்க்கிறேன்
ஆம்.. என்னை
கிள்ளிக் கிள்ளிப் பார்க்கிறேன்
இது கனவாகவே இருக்கக் கூடாதா
என்று துடியாய் துடிக்கிறேன்!
நனவுகள்தான் என்றானபோது
அனலிட்ட புழுவாய் துடிக்கிறேன்!
மனுவாத எதிரி உக்கிரமாய்
இனவாத யுத்தம் தொடுத்துவிட்டும்
தமக்கென்ன என்றொரு பொது சமூகம்
என்னைச் சுற்றி!
தன் தனயனின் தாயும், மகளும்
நிர்கதியாய் நிற்பதைக் கண்டும்
ஊமையாய் நிற்கிறது
எனது அண்டை, அயலை!
இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!
ஆம்..! இத்தனை சுமைகளையும்
பொதிகளாய் சுமந்தவண்ணம்
இன்றும் நான்
"சீராகிவிடும் கொஞ்சம்
அமைதியாய் இருங்கள்"
என்றுதான் சொல்ல முடிகிறது!
ஒவ்வொரு துன்பத்தின் பின்னும்
இன்பம் துளிர்க்கும் என்கிறது
சுற்றிச் சூழ்ந்து நிற்கும் இயற்கை!
எத்தனை எத்தனை
அநீதியாளர்களை
தன்னுள் விழுங்கி கொண்டது
இதோ நான் நிற்கும் பூமி!
இழப்பதற்கு ஒன்றுமில்லாதவன் நீ
பின்வாங்காமல் போராடு என்கிறது
என் மனஉறுதி!
உன் தேசத்தை மீட்பதற்கான
கடைசி யுத்தம் இது
இதே அஹிம்சை போராட்டத்தை
முன்னெடு அல்லது செத்துபோ
என்கிறது என் நம்பிக்கை!
இத்தனை அவநம்பிக்கைகளைக்
கடந்தும் வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!
சமாதான ரோஜாக்களை நீட்டி
தன் குருதி மையால்
மண்ணின் மைந்தர்களின்
விடுதலைக்காக
வரலாறுகளை
எழுதிக் கொண்டிருக்கிறது
எனதருமை சமூகம்!
இன்ஷா அல்லாஹ்
ஆம்.. இறைவன் நாடினால்
இந்த சிறு பறவை ‘அபாபீல்’ கூட்டம்
மனுவாதிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்யும்
என்ற முழு நம்பிக்கையோடு
என் கண்களை மூடுகிறேன்!
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
0 comments:
Post a Comment