NewsBlog

Friday, November 20, 2015

இறைவன் அழைக்கின்றான் - 2: இறையன்பைப் பெற்றுத் தரும் ஒரே வழி'


இறை நம்பிக்கை என்பது பக்தி-பரவசங்கள் என்பதோ.. வெறும் புறத்தோற்றங்கள் மட்டுமே சம்பந்தப்பட்டதோ அல்ல. இவை அகவாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவை.

இறை நம்பிக்கையும், இறை பக்தியும் கொண்ட மனிதனின் அகம் சதா தூய்மையாக இருப்பதுடன்.. அன்பு, கருணை, இரக்கம், மனிதநேயம் போன்ற உயர் பண்புகளால் நிரம்பி வழியும். தியாகம், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய நன்னெறிகளால் நிரம்பியதாக இருக்கும். கோபமும்-குரோதமும், பிணக்கும்-பூசல்களும், ஆவேசமும்-அகங்காரமும், பரம வைரிகளாக இருக்கும்.

அதனால், அப்படிப்பட்ட மனிதனின் நடத்தைகளும் கூட அகத்தின் அழகு முகத்தில் பிரதிபலிக்கும் விதமாக உயர்ந்ததாக இருக்கும். அவனது  சிந்தனையும் செயலும் குன்றிலிட்ட விளக்காக ஒளி வீசும்

இறைவன் தனது அடியார்களின் நம்பிக்கைகளுக்கு மட்டுமல்ல.. நடைமுறை வாழ்க்கைக்கும் வழிகாட்டியிருக்கின்றான்.  எண்ணங்களுக்கு மட்டுமல்ல.. செயல்களுக்கும் பாதை அமைத்துத் தந்திருக்கின்றான். வழிமுறைகள், கொள்கைகள் மட்டுமல்லாமல் அவற்றை செயல்படுத்திக் காட்ட ஏற்பாடும் செய்திருக்கின்றான்.

யதார்த்த பூர்வமான இந்த வாழ்வியல் திட்டம், மனிதன் உலகில் தோன்றிய நாள் முதற்கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும், அவனை வழிநடத்திக் கொண்டே வந்திருக்கின்றது.

இத்தகைய வாழ்வியல் நெறிமுறைகள், மனித சமூகம் உலகில் பரவியிருந்த இடமெல்லாம் எடுத்துச் சென்று சேர்க்கப்பட்டன. மனித குலம் முழுமைக்கும் பரப்பப்பட்டன. சத்தியத்தை எத்தி வைக்கும் அந்தத் தொடரின் இறுதியானவர்தான் அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்கள்.

மனித இனம் இறையன்பையும், இறை நெருக்கத்தையும் பெற வேண்டும்  என்றால்.. நபிகளாரை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியேயில்லை!

"நபியே! மக்களிடம் நீர் கூறுவீராக: நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாய் இருந்தால்.. என்னைப் பின்பற்றுங்கள்; இறைவன் உங்களை நேசிப்பான். மேலும், உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். இறைவன் மன்னிப்பு வழங்குபவனும், பெரும் கருணையுடையவனுமாவான்!" (திருக்குர்ஆன்:3:31)

கேட்டீர்களா?

இறைவனை நேசிப்பதற்கும், அவன் மீது பக்தி பரவசம் கொள்வதற்கும் 'உரைகல்' அவனது திருத்தூதரான முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று இறைவன் சொல்வதை!

அத்துடன் நபிகளாரை நேசிப்பது இறைநேசத்தையும், பாவ மன்னிப்பையும் பெற்றுத் தருவதற்கு வழிகோலுகிறது.

- அழைப்பது தொடரும்


இதற்கு முந்தைய இணைப்புகளை வாசிக்க:

001. இதுவே உன்னத அழைப்பு : http://ikhwanameer.blogspot.in/2015/10/1.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive