NewsBlog

Thursday, November 26, 2015

குழந்தை இலக்கியம்: சிறுவர் கதை: 'பொய் சொல்லக்கூடாது பாப்பா!'



பொற்கொடியைப் பார்க்க தமிழரசி வந்தாள்.

தமிழ் நோட்டுப் புத்தகம் கேட்டாள்.

தமிழரசிக்கு விருப்பமில்லை. அதனால், அதை "கண்ணகி வாங்கிப் போனாப்பா!" - கூசாமல் பொய் சொன்னாள் அவள்.

"சரி.. சரி.. நீ படிப்பா.. வேறே யாரிடமாவது வாங்கிக்கிறேன்.."

தமிழரசி கேட்டைத் தாண்டியதும், அவள் கேட்ட நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைக்க பொற்கொடி எழுந்தாள்.

அந்த நேரம் பார்த்து, "மாமி! அம்மா ரெண்டு தக்காளி கேட்டாங்க!" - என்றவாறு மீண்டும் வந்தாள் தமிழரசி.

புத்தகம் எங்கே அவள் கண்ணில் படப்போகிறதோ என்று பயந்து போனாள் பொற்கொடி. அவசரம் அவசரமாக அதை சோபாவுக்கு அடியில் தள்ளினாள். நெஞ்சு படபடத்தது; உடல் வியர்த்தது.

தமிழரசி தக்காளி வாங்கிச் செல்லும்வரை பொற்கொடிக்குக்குப்  படிப்பில் கவனம் செல்லவில்லை. சில முக்கியமான பாடங்களுக்கான விடைகளை மறுநாள் வகுப்பாசிரியையிடம் ஒப்புவிக்க வேண்டும். இருப்பினும் அவளது மனம் படிப்பில் முழு ஈடுபாடு கொள்ளவில்லை.

தேவையில்லாமல் மனம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. பொய் சொன்னதற்காக உள்ளம் உறுத்தியது. பேசாமல் தமிழரசி கேட்ட நோட்டைக் கொடுத்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

"பொற்கொடி! கொஞ்சம் காலை மேலே தூக்கிக்க! எவ்வளவு தூசி!" - என்றவாறு அம்மா சோபாவுக்கு அடியில் துடைப்பதால் பெருக்க மறைத்து வைத்திருந்த நோட்டுப் புத்தகம் வெளியில் வந்தது.

"இது என்னடி புத்தகம்?"-என்று அம்மா நீட்டவும், "மாமி.. மாமி..!"-என்றவாறு தமிழரசி வரவும் சரியாக இருந்தது.

பதறிப்போன பொற்கொடி, "அதைக் கொடும்மா இப்படி.."- என்று வாங்கிக் கொண்டு உள்ளறைக்கு ஓடினாள். அம்மாவும், தமிழரசியும் ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தனர்.

சற்று நேரம் கழித்து வந்த பொற்கொடியிடம் அம்மா, "என்னடி அது?"- என்றாள்.

"ஒன்னுமில்லேம்மா.. இங்கிலீஷ் புக்"-என்று மறுபடியும் பொய் சொன்னாள் பொற்கொடி.

இரவு உணவுக்குப் பின் படிக்கலாம் என்று நினைத்தவளுக்குத் தூக்கம்தான் வந்தது.

அடுத்த நாள்.

பாடங்களைப் படிக்காததால்.. ஆசிரியையிடம் அடி கிடைத்தது.

பொய் சொன்னதால்.. தமிழரசியிடம் சகஜமாக பழக முடி யாமல் போனது.

பொற்கொடி ஒரு பொய் சொன்னாள்.

அந்த ஒரு பொய்யை மறைக்கப் பல பொய்கள் சொல்ல வேண்டிவந்தது.

கூட உடலும்-உள்ளமும் பாதிக்கப்பட்டது.

உண்மை பேசியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது!

அதானல், எப்போதும் நாம் உண்மையே பேச வேண்டும்.

(தினமணிகதிர் குழந்தை இலக்கியத்தில் வெளியான எனது சிறார் கதை)






Share:

1 comment:

  1. உள்ளபடியே மழலைகள் பத்து வயது வரை தாம் பொய்சொல்கின்றன எனதெரியாமலே சிலவற்றைச் சொல்லும்.காரணம் எது பொய்? ஏன் இப்படிச் சொல்கிறோம் எனத்தெரியாத பேதைப் பருவம் அது. பெண்களின் பருவங்கள் ஏழில் பேதை என்பது ஏறத்தாழ எட்டு வரை. பெதுமை,அரிவை, தெரிவை,மங்கை,மடந்தை, பேரிளம்பெண். ஆனாலும் மழலையின் அறியா வார்த்தையால் மிகப் பெரிய தண்டனையை இறை தராது. ஆனாலும் மனத்துக்குள்ளே ஓர் அச்சம், படபடப்பு தோன்றும். ஆகவே கதைப்படி சரிதான் தமிழரசின் சூழல்.

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive