NewsBlog

Wednesday, November 4, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 10: அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த வதந்தி!



நம் மீது யாராவது களங்கம் கற்பித்தால்... கோபம் வரும்! நம் தாய்-தந்தையர் மீது களங்கம் கற்பித்தால்.. வானம்-பூமிக்கும் துள்ளிப் பாய்வோம்! அதுவே நமது வாழ்க்கைத் துணைவியார் மீது களங்கம் கற்பித்தால்.. வாழ்வின் இக்கட்டான தருணமிது! இத்தகைய ஒரு சம்பவத்தை நபிகளார் எப்படி எதிர்கொண்டார்கள்?

அப்துல்லாஹ் பின் உபை!

நயவஞ்சகத்துக்கும், குழப்பச் செயல்களுக்கும், தீய பண்புகளுக்கும் முழு வாழ்க்கையையே வீணாக்கியவன்! கிடைக்கும் எந்த வாய்ப்பையும், நழுவவிடாமல்.. அதை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டுப் பயன்படுத்தத் தயங்காதவன் இவன்!

நபிகளாரின் அன்புத் துணைவியாரும், முஸ்லிம்களின் தாயாகவும் போற்றப்படும் அன்னை ஆயிஷா நாச்சியாரின் கற்பையே களங்கப்படுத்திப் பேசவும் துணிந்தவன்தான் அப்துல்லாஹ் பின் உபை!

இந்த வதந்தியால் இஸ்லாமிய கூட்டமைப்பின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் நடடிவடிக்கைகளில் ஈடுபட்டவன். நபிகளாருக்கும் அவர்களது அருமைத் தோழர்களுக்கும் உள்ளத்து அமைதி இழப்புக்குக் காரணமானவன். கடைசியில் இது சம்பந்தமாக இறைவன் திருக்குர்ஆனில்,

"இந்த அவதூற்றைப் புனைந்து கொண்டு வந்தவர்கள் உங்களில் ஒரு கும்பல்தான்! இந்த நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள்! மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது. அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ, அந்த அளவுக்கு பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது!" (24:11)

- இந்த திருவசனத்தை இறக்கி உண்மையை உணர்த்த வேண்டியதாயிற்று.

விபரீத நிகழ்ச்சிக்கும், வதந்தி பரப்புதலுக்கும் காரணமானவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்.

ஆனால், மூலக்கர்த்தாவான அப்துல்லாஹ் பின் உபையோ எந்தத் தண்டனைக்கும் ஆளாகவில்லை. அந்த நிலையிலும் அவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தன் விஷமச் செயல்களிலேயே குறியாக இருந்தான்.

பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இறையருளால்... முஸ்லிம்கள் மகத்தான வெற்றியை ஈட்டினார்கள். இஸ்லாமியச் சமூகம் உருவானது.

இந்த மாற்றங்களின் மன அழுத்தங்களால்.. அப்துல்லாஹ் பின் உபை நோயுற்றான். கடைசியில், இறந்தும் போனான்.

அவனுடைய மகன்கள் நபிகளாரிடம் சென்று தங்கள் தந்தையின் செயல்களை மன்னிக்க மன்றாடினார்கள்.

நபிகளாரும் அப்துல்லாஹ் பின் உபையை மன்னித்தார்கள். தந்தையின் உடலைப் போர்த்த நபிகளாரின் மேலாடையைக் (போர்வையை) கேட்டார்கள். நபிகளாரும் அதைக் கொடுத்தார்கள். தந்தையின் மரணத் தொழுகையை (ஜனாஸா தொழுகை) நடத்த வேண்டினார்கள். தந்தைக்காக பிரார்த்திக்கும்படி கேட்டார்கள். நபிகளார் இதையும் மறுக்கவில்லை.

தங்களின் கண்ணியத்தை இழிவுப்படுத்த முனைந்த அப்துல்லாஹ் பின் உபையின் மரணத் தொழுகையை நபிகளார் முன் நின்று நடத்தினார்கள்.

தீயவர்களை இறைவன் மன்னிக்காத நிலையிலும் நபிகளாரின் மன்னிக்கும் பண்பு வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்தியது. மாபெரும் வெற்றிக்கு வழிகோலியது.

- இறைவன் நாடினால்.. அருட்கொடைகள் தொடரும்.

''''''''''''''''''''''''''''''''''''''''
முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

1. அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

2.. நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

3. குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

4. கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

5. ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/2015/09/5.html

6. அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..: http://ikhwanameer.blogspot.in/2015/09/6.html

7.ஓர் இறை.. ஓர் நிறை..  : http://ikhwanameer.blogspot.in/2015/10/7.html

8. அடிமைத் தளையிலிருந்து விடுதலை: http://ikhwanameer.blogspot.in/2015/10/8.html

9. ஒரு ராஜாதி ராஜா... பஞ்ச பராரியாய்... :http://ikhwanameer.blogspot.in/2015/10/9.html
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive