NewsBlog

Wednesday, November 4, 2015

குழந்தை இலக்கியம் - சிறுவர் கதை: 'மன்னித்தலே மகத்தான குணம்!'


“போச்சு..! போச்சு..! என் டிராயிங் நோட் போச்சு..! டேய் அப்பு, சனியனே! ஏண்டா என் நோட்டை எடுத்தே?”

நான் கஷ்டப்பட்டு வரைந்து கலர் பெயிண்ட் செய்திருந்த ரோஜாப் பூவைக் கிழித்து விளையாடிக் கொண்டிருந்தால்.. கோபம் வராத பின்னே?

அடிதாளாமல் அப்பு, “அண்ணே! அண்ணே! இனி எடுக்க மாட்டேன். மன்னிச்சுடுண்ணே! அடிக்காதே வலிக்குது. வலிக்குது. மன்னிச்சுடுண்ணே!” அழ ஆரம்பித்தான். அதற்குள் அம்மா ஓடிவந்து என் பிடியிலிருந்து அவனை மீட்டுச் சென்றாள்.

இரவு. அப்புவுக்கு ஜீரம். கணகணவென்று உடம்பு கொதித்தது. படுக்கையில் படுத்திருந்தவன், “மன்னிச்சிடு.. மன்னிச்சிடு அடிக்காதேண்ணே!” – என்று புலம்பியவாறு இருந்தான். 

அப்பாவும் வந்துவிட்டார். நடந்ததைத் தெரிந்து கொண்டார். “ம்.. அது ஒரு காலம்! எதிரிகளையும் மன்னித்துவிட்ட நல்லவர் வாழ்ந்த காலம். இப்போது சொந்தத் தம்பி என்றுகூட பார்க்காமல், அதுவும் நாலு வயது குழந்தை என்றுகூட பார்க்காமல்… அவன் செய்த தவறையும் மன்னிக்க முடியாத இரும்பு மனம் கொண்ட மனிதர்கள் வாழும் காலம்!”-என்று வருத்தப்பட்டவாறு ஜீர மாத்திரைகளை ஊட்டிவிட்டார்.

அப்புவின் நிலைமையைக் கண்டதும் என் கோபமெல்லாம் போய்விட்டது. தம்பிக்கு ஏதும் ஆகக்கூடாதென்று கவலை சூழ்ந்துகொண்டது.

இரவு உணவு முடிந்தது.

அப்பா அப்புவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். அவனது தலையை லேசாக வருடிவிட்டார்.

நானும் அப்பாவின் அருகே அமர்ந்தேன்.

அம்மாவும் வந்துவிட்டார்.


அப்பா, “இது உண்மையில், நடந்த ஒரு சம்பவம்!” – என்றவாறு சொல்லலானார்:

“ஒருமுறை, ஒருவன் ஒரு இளைஞனைக் கொலை செய்துவிட்டான். அதை ஒருவர் பார்த்துவிட்டார். கொலைக்காரனை விரட்டினார். பயந்துபோன அவனோ ஓடிப் போய் ஒரு ரொட்டிக் கடையில் புகுந்து கொண்டான். அதன் உரிமையாளராக இருந்த முதியவரிடம், “அய்யா! பெரியவரே! என்னைக் காப்பாற்றுங்கள்! என்னைக் கொல்ல ஒருவன் விரட்டி வருகிறான். தயவு செய்து காப்பாற்றுங்கள்!” – என வேண்டினான்.

மனம் இளகிய முதியவர் அவனுக்கு அடைக்கலம் தந்தார். கடையில் பதுங்கிக் கொள்ள இடம் தந்தார். விரட்டி வந்தவர் முதியவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் கொல்லப்பட்டது அவருடைய அருமை மகன்! நடந்ததை சொல்லிவிட்டு, “அய்யா! உங்கள் மகனைக் கொலை செய்த படுபாதகன் இங்குதான் வந்தான். எங்கே அவன்?” – என்றார் கோபமாக.

‘மகன் கொலை செய்யப்பட்டான்!’ என்ற செய்தியைக் கேட்டதும் பெற்ற தந்தையின் மனம் பதறியது. துக்கத்தில் இதயம் துவண்டது. கண்களில் கண்ணீர் பீறிட்டது. அழுதுகொண்டே அவர், தேடி வந்தவனிடம், “தம்பி! நீ சொன்ன ஆள் இங்குதான் என் பாதுகாப்பில் இருக்கின்றான். நான் அவனுக்கு புகலிடம் தந்துள்ளேன். அவன் என் மகனைக் கொன்றவனாக இருந்தாலும் சரி, என் வாக்கை கொஞ்சமும் மீற நான் விரும்பவில்லை. நான் அவனை மன்னித்துவிட்டேன். தயவு செய்து நீ போய்விடு!” – என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.

பிறகு உள்ளே சென்றவர், பதுங்கியிருந்தவனைப் பத்திரமாய் வெளியே அழைத்து வந்தார். அவன் பயணம் செய்ய ஒரு குதிரையைத் தந்தார். அவனிடம், “மகனே! நான் உனக்கு வாக்களித்ததைப் போல் காப்பாற்றி விட்டேன். இங்கிருந்து உடனே புறப்படு! இதற்கு மேல் நான் உனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது!” – என்றார் துயரத்துடன்.

கொலைக்காரன் சென்றதும், முதியவர் அழுது கொண்டே தன் மகனின் உடலைக் காணச் சென்றார்.

எவ்வளவு பெருந்தன்மையான மனம் அவருடையது! எவ்வளவு பொறுமைசாலி அவர்! பார்த்தாயா?” – என்று அம்மாவிடம் சொன்ன அப்பா தொடர்ந்து, “ம்… அது தர்மங்கள் வாழ்ந்த காலம்!”-என்று முடித்தார் என்னைப் பார்த்தவாறு.

குற்ற உணர்ச்சியால் நான் தலை குனிந்து கொண்டேன்.

‘மன்னிக்கும் பண்பு மகத்தானது!’ – என்று புரிந்துகொண்டேன்.

என் கண்களில் கண்ணீர் பெருகியது.

(தினமணி கதிரில் பிரசுரமான எனது சிறுவர் கதை)
Share:

1 comment:

  1. தத்தா தமர் எனும் ஓர் தொடர் இலக்கியத்தில் உண்டு. அவரோ துறவி! வழக்கம்போல் அவர் பூசையில் ஈடுப்பட்டுள்ளார். அவ்வேளையில் வாயிலில் ஒருவன் நிற்கிறான்.
    சாமிய பாக்கணுமே!
    வாயிற்காப்போன் துறவியின் சூழலைச் சொல்கிறான்.
    துறவியோ! யாரப்பா! யாராயிருந்தாலும் உள்ளே அனுப்பு எனச் சொல்ல!
    வாயிலில் நின்றவனோ மட,மட, கட, கடவென துறவியின் அருகே செல்கிறான். கண் மூடி கண் திறக்கும் நொடிக்குள் இரத்த வெள்ளத்தில் துறவி கிடக்கிறார்.
    வாயிற்காப்போனுக்கோ கடுஞ்சினம் கொப்புளிக்கிறது.
    துறவி அழைக்கிறாராம்! மகனே! நீ அவனை ஏதும் தண்டித்துவிடாதே! அவன் சிவனடியார் வேடத்தில் திருநீற்றை அணிந்து, காவி உடையை அணிந்து, கழுத்திலே சிவமணி எனும் உருத்திராட்சத்தையும் அணிந்து வந்துள்ளான். ஓர் இறை அடியார் இன்னோர் இறையடியாரைத்தண்டித்தல்கூடாது. அதற்குரிய உரிமை நமக்கானது அன்று. எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக்கொள்வான்.ஊரின் எல்லையிலே அவனைக் கொண்டு விடு எனச் சொல்கிறார்.
    வாயிற்காப்போன் திகைக்கிறான்! என்ன இது? அவன் பழிச்செயலைச் செய்துள்ளான். இவர் என்ன சாமியாரோ! என நினைக்க!
    அவனும் நம்மைப் போல அல்லவா!
    தத்தா தமர் எனச்சொல்லியதாலே அவனைத் தண்டித்தல் கூடாது என அறிவுரையும் சொன்னதாலே மன்னித்துவிடல் நம் கடமை என்பதை வாயிற்காப்போன் உணர்ந்ததாக அறுபத்து மூவர் மாக்கதையில் சேக்கிழார் சொல்லியுள்ளார்.
    இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு எனக் கேட்கிறார் வள்ளுவர்.
    தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என இன்னோர் குறளில் காட்டியுள்ளார்.
    அமீர்....!
    மன்னிப்பு என்பது மாபெரும் கருணை இருந்தால் மட்டுமே இருக்கும். அல்லது கொலைவெறியே தாண்டவமாடும்.

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive