பருவக்காலம் தொடங்கிவிட்டது. ஆம்..! மதச்சார்பின்மை பருவம் தொடங்கிவிட்டது. எதிர்பார்த்தது போலவே, வியாழக்கிழமை (26.11.2015) தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை கால்பந்தாட்ட களத்தின் பந்தானது.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் (நவம்பர் 26) இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததன் நினைவாகவும், சட்டமேதை அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த தினத்தை ஒட்டியும், மக்களவையில் 2 நாள் சிறப்பு விவாதம் வியாழக்கிழமை தொடங்கியது.
இதில், ‘மதச்சார்பின்மை’ திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டினார். இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:
அம்பேத்கரால் அறிமுகப்படுத்தப்பட்ட நமது அரசமைப்புச் சட்டத்தில் "மதச்சார்பின்மை' "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசமைப்புச் சட்டத்தில் அந்த வார்த்தைகளைச் சேர்ப்பது அவசியம் என அம்பேத்கர் கருதவில்லை.
அதன்பிறகு 1976-ஆம் ஆண்டில்தான், 42-ஆவது சட்டத் திருத்தம் மூலமாக, "மதச்சார்பின்மை', "சோஷலிசம்' என்ற வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. மதச்சார்பற்ற தன்மை என்பது, இந்தியாவின் இயல்பிலேயே அமைந்துள்ளது.
ஆனால், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தற்போது திரித்துப் பொருள்கொள்ளப்பட்டு, மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற செயல்கள் முடிவுக்கு வர வேண்டும்.
ஏனெனில், "மதச்சார்பின்மை' என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்படுவதால், சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால், சமூக ஒற்றுமையைப் பராமரிப்பது சிரமமாக உள்ளது.
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஜாதி, இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து பாதுகாப்பு அளிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
72 பிரிவுகளைக் கொண்ட முஸ்லிம் சமூகத்தினர் பாதுகாப்பாக இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே.
அவமதிப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றால் பாதிப்புகளுக்கு ஆளான அம்பேத்கர், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று ஒரு முறை கூட யோசித்ததில்லை - என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்துப் பேசுவதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு தகுதியில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.
மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது பேசிய அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசிய உரையின் முக்கிய அம்சங்கள்:
சகிப்பின்மை காரணமாக அண்மையில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.
நமது அரசமைப்புச் சட்டத்தின் மீது பாஜகவினர் நம்பிக்கை வைக்கவில்லை. அதை உருவாக்குவதிலும் அவர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்துக்கு பாஜகவினர் உரிமை கொண்டாடுகிறார்கள். அதன் மீது விவாதமும் நடத்துகிறார்கள். இது கேலிக்குரியதாக உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும், அதன் தத்துவங்களும் தற்போது அச்சுறுத்தலில் உள்ளன. நமது அரசமைப்புச் சட்டம் நெகிழ்வுத் தன்மை கொண்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட முறை திருத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையை நமது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதில், சந்தேகம் ஏதுமில்லை.
ஆனால், அதனை நடைமுறைப்படுத்துவதில், அரசுக்கும், அதன் பிரதிநிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
அரசமைப்புச் சட்டம் சிறப்பாக இருந்தாலும், அதை அமல்படுத்துவோர் தீயவர்களாக இருந்தால், விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை சட்டமேதை அம்பேத்கர் முன்பே கூறியிருக்கிறார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அரசியல், பொருளாதாரம் ஆகிய துறைகளில் கல்வியை முடித்து நாடு திரும்பிய அம்பேத்கரின் தனித்திறமைகளை அறிந்த காங்கிரஸ் கட்சி, அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அவரைத் தேர்வு செய்தது.
சிறந்த தலைமை இல்லாதிருந்தால், அரசமைப்புச் சட்டத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கமுடியாது என்று அம்பேத்கரை டாக்டர் ராஜேந்திர பிரசாத் பாராட்டினார் என்றார் சோனியா காந்தி.
மக்களவையில் வியாழக்கிழமை மாலை 7 மணி வரை இந்த விவாதம் நீடித்தது.
வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த விவாதத்தின் முடிவில், பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment