NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Monday, April 27, 2020

Thursday, April 23, 2020

வெறுப்பு பரப்புரைகளின் அறுவடை காலமிது



'''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''
அறமற்ற விமர்சனங்கள் அல்லது கருத்துகளின் முடிவுகள் என்னவாகும் என்பதற்கு தற்போது வளைகுடா நாடுகளில் சங்பரிவார் வகுப்புவாதிகளுக்கு எதிரான கொந்தளிப்புகளே சாட்சி.

ஏப்ரல் 16-ஆம் தேதியன்று ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட் அல் காஸிமி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது. 
 
ஒரு ட்விட்டர் பதிவர் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்த இளவரசி,

"அரச குடும்பத்தினர் இந்தியர்களின் நண்பர்கள். இவ்வளவு வெறுப்புடன் நீங்கள் பேசுவதை அரச குடும்பத்தைச் சேர்ந்த என்னால் ஏற்க இயலாது. எல்லோருமே ஊதியத்திற்காகத்தான் வேலை பார்க்கிறார்கள். யாரும் இலவசமாக வேலை பார்ப்பதில்லை. நீங்கள் இகழும் இந்த மண்ணிலிருந்துதான் உங்களுக்கு உணவு கிடைக்கிறது. உங்கள் கேலி கண்டுகொள்ளப்படாமல் போகாது"

- எனத் தன் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் தன் ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார்.

ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்லாமிய ஒருங்கிணைப்பிற்கான அமைப்பின் (OIC) மனித உரிமைப் பிரிவான OIC-IPHRC வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,

'இந்தியாவில் கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள்தான் என்று கூறி பரப்பப்படும் செய்திகளைக் கண்டித்ததோடு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் தணிக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக்' கூறியது.

இதையடுத்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி "இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, சமய, பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக' விளக்கமளித்தார்.

வகுப்புவாதம் பேசியே ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும், மோடி சர்க்காரும், தன்னுடைய ட்விட்டர் பதிவில்,

"இனம், மதம், நிறம், ஜாதி, ஏழை - பணக்காரன் வித்தியாசம், மொழி, எல்லைகள் போன்றவற்றை பார்த்து கொரோனா தாக்குவதில்லை."

என்றும் பதிவிட்டார்.

வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் பணிபுரிபவர்கள் ஏழை, பாழை ஒடுக்கப்பட்டவர்கள்தான். அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களைப் போல, சொல்லிக் கொள்ளும் விதமான பெரிய மேல் தட்டு மக்களோ, சாதிய மேலடுக்குவாதிகளோ அல்ல.

மனைவி, மக்களை பிரிந்து கடல்கடந்து வாழும் சாதாரண ஏழை, எளியோர்! இவர்களில் ஊடுருவியிருக்கும் சங்பரிவார் அடிவருடிகள் செய்த விஷமத்தனங்கள் அமீரகத்தில் வசிக்கும் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமானோரின் வாழ்வியலை சிக்கிலாக்கியுள்ளது.

2018ஆம் ஆண்டு நிலவரப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் சுமார் 78,500 மில்லியன் டாலர்களை நமது நாட்டுக்கு அனுப்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகபட்ச தொகை அமீரகத்திலிருந்து வருகிறது.

திரைக்கடலோடி திரவியம் தேடியதோடு நிற்க வேண்டியதான ஒப்பந்த ஷரத்துகளை மீறி சங்பரிவாரின் அடிவருடிகளாய், ஏவலாட்களாய் மாறி அறம் வழுவி நிற்பதன் விளைவு மொத்த வாழ்க்கையும் இழுக்க வேண்டியிருக்கும் என்தற்கான சமிஞ்சையே தற்போதைய நிலவரம்.

சங்பரிவார் கூட்டம் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கும், அவர்களை ஒழித்தொழிக்க முனைவதற்கும் அப்படி என்னதான் காரணம்?

இதற்கான பதில் மிகவும் எளிதானது. ஓரிரு வரிகளில் சொல்ல முடிவது.

அது இதுதான்: ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

இந்த முழக்கமும், இந்த முழக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பின்பற்றி வாழும் சமத்துவ வாழ்வியல் வாழ்வும்,

மனுவாத கட்டமைப்பை தூள் தூளாக்கி சிதைப்பதால் வந்த கோபம் தான் முஸ்லிம் எதிர்ப்பு.

மனுவாத சனாதனம் வேண்டும் என்று நினைப்போர் பொய்களாலேயே மூளைச்சலவை செய்து உருவாக்கிய ஒரு கூட்டத்துக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன?

வகுப்புவாத வெறிபிடித்த இந்த சங்பரிவார் கும்பல், இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆடும் விலங்காட்டமும், சொந்த மக்களையே வெறிப்பிடித்தாற்போல கொத்தி குதறுவதும், அவர்களின் உயிர், உடமைகள், மானம், மரியாதைகள் அனைத்தும் சூறையாடுவதுமான துயரங்கள் நாடு முழுக்க தொடர்கின்றன.

உலக நாடுகள் இந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்கும்போதெல்லாம் இது உள்நாட்டு விவகாரம் என்று திசைதிருப்பல்கள் மழுப்பல்கள் என்ற தொடர்கதைகளுக்கு முற்று இல்லாமல் போகாது.

இவர்கள் கக்கிய நச்சு கருத்துக்கள், பரப்பிய கொரானாவைவிட கொடிய வெறுப்பு பரப்புரைகள் தற்போது வளைகுடாநாடுகளில் எதிர்விளைவுகளாய் ஆர்ப்பரித்து நிற்கிறது.

இந்த எதிர்வினைகள் அமெரிக்கா போன்ற கிருத்துவ நாடுகளிலும் எதிரொலிக்காது என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை.

இந்தியாவில் வகுப்புவாத கொலைப்பட்டியலின் அடுத்த வரிசையில் நிற்பவர்கள் கிருத்துவர்கள்தான்.

கோடி, கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி அடுக்குமாடி கட்டிடங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் இந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுகவாசிகள். சங்பரிவார் அமைப்பின் பொருளியல் முதுகெலும்பாய் இருப்பவர்களும் அவர்கள்தான்.

இவர்கள் நமது ஏழை, எளியவர்கள் போல, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாய் நடந்து ஊர் போய்ச் சேர்ந்த இழி நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் கொரானா அச்சத்தால் விமானமேறி பறந்துவந்தவர்கள்.

இந்த அச்ச உணர்வின் நீட்சியாக வெறுப்பு பரப்புரைகளின் அறுவடை பருவத்தின் விபரீத பலனையும் இவர்களும், அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.

                                                       
''''''''''''''''''''''''
 



Share:

Tuesday, April 14, 2020

கொரானா: யார் பொருப்பேற்பது? யார் பதிலளிப்பது?


‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
இக்வான் அமீர்
‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
மோடி சர்க்காரிடமிருந்து, அடுத்து என்ன அறிவிப்பு வருமோ என்று திகிலுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்தபோது, மே, 3-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிட்டு வழக்கம்போல உரையாற்றி முடித்து கொண்டார் அவர். நல்லவேளை, மோடியின் சொல்லுக்கு வரிந்து கட்டி அடிபணிபவர்களின் அட்டகாசங்களிலிருந்து தப்பிப் பிழைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராணுவ வீரர்களைப் போல நீங்கள் நாட்டுக்காக செயல்படுகிறீர்கள் என்று மோடி சர்க்கார் சொன்னதும்,

தனது அதிரடியான பணமதிப்பிழப்பு அறிவிப்பின் மூலமாக வங்கிகளின் வாசலில் நின்ற ராணுவம் போன்ற மக்கள் வரிசையும்,

தற்போது திடீர் ஊரடங்கு மூலமாக நாட்டு மக்களை ராணுவம் போலவே பல நூறு மைல்கள் நடக்க வைத்ததும் நினைவில் எழுகிறது.

அய்யா, புண்ணியவானே, ராணுவத்துக்கும் சோறு போடுங்க. எங்களுக்கும் சோறு போட்டுட்டு பிறகு மன்கீபாத்களில் வந்து பேசுங்க மகாராசா என்கிறது உள்மனம்.

கொரானா சம்பந்தமான வெளிப்படைத்தன்மையும், அதிலிருந்து மீளுவதற்கான தக்க நடவடிக்கைகளும்தான் சராசரி இந்தியன் தற்போது வேண்டுவது. கொரானா மரணங்களைவிட பசி, பட்டினி மரணங்கள் முந்திவிடும் என்கிறன நடப்பு தரவுகள். அதனால், வெறும் அலங்கார பேச்சுகளோ, அரிதாரம் பூசப்பட்ட முகங்களோ தற்போதைய தேவை அல்ல.
 
நாட்டின் பிரதமர் இப்படி என்றால் அவர் கீழ் பணியாற்றும் அரசு எந்திரமோ பிரதமரின் வகுப்புவாத எண்ணங்களின் படியே அடிபிசகாமல் செயல்பட்டுவருகிறது.

கொரானா தீநுண்மி முஸ்லிம்களை குறிவைக்கிறதோ இல்லையோ அதை தடுத்து நிறுத்த வேண்டிய ஆட்சி, அதிகாரமோ வகுப்புவாத பாகுபாட்டுடனேயே நடந்து கொள்கிறது.

நிஜாமுதீனின் தப்லிக் ஜமாத் மார்க்கஸிலிருந்து சத்தீஸ்கரிலிருந்து திரும்பிய 159 பேரின் பட்டியலை பிபிசிக்கு கொடுத்தார் மனுதாரரின் வழக்கறிஞர் கெளதம் க்ஷேத்ரபால். அதில் 108 பேர் முஸ்லிம் அல்லாதவர்கள். அனைவரின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவர்களில் பெரும்பாலோர் தப்லிக் ஜமாஅத்துடனும் இஸ்லாமிய சமயத்துடனும், எந்தவித தொடர்பும் இல்லாதவர்கள். இவர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் டெல்லிக்கு வந்திருந்தனர். டெல்லியிலிருந்து திரும்பிய பின்னர், உள்துறை அமைக்கத்தின் சுகாதாரத் துறையின் உத்தரவின் பேரில் தற்போது, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட பிலாஸ்பூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பாண்டே (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் பிபிசியிடம் இப்படி சொல்கிறார்: "நான் ஒரு பிராமணன். தப்லிக் ஜமாஅத்தை சேர்ந்தவர்களுடன் எனக்கு என்னத் தொடர்பு இருக்க முடியும்? மார்ச் மாதத்தில் நான் டெல்லிக்குச் சென்றிருந்தேன். நான் பிலாஸ்பூருக்கு செல்வதற்காக நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்குச் சென்றேன். ஆனால் தப்லிக் ஜமாத்தின் மார்க்கஸ் உள்ளே செல்லவேயில்லை. டெல்லியிலிருந்து திரும்பிய பிறகு, போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் என்னிடம் விசாரணை செய்த பிறகு, என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கச் சொன்னார்கள்"

ராய்ப்பூரைச் சேர்ந்த ஜெய்தீப் கவுரும் தப்லிக் ஜமாத்துடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மறுக்கிறார்.

"நான் சமீபத்தில் தொலைக்காட்சியில் தான் முதல் முறையாக தப்லிக் ஜமாஅத் என்ற பெயரைக் கேட்டேன். நான் மார்ச் 16-ஆம் தேதியன்று டெல்லியிலிருந்து வீடு திரும்பினேன். பிறகு காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் வந்து என்னிடம் விசாரணை செய்தார்கள். பரிசோதனை செய்த பின்னர், 14 நாட்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னர்கள். அதன் பின்னர் நான் வீட்டிலேயே இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

துர்க் என்ற ஊரைச் சேர்ந்த முகமது ஜுபைர் இவ்வாறு கூறுகிறார்: "எனக்கு தப்லிக் ஜமாஅத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை, இந்த ஆண்டு தப்லிக் ஜமாஅத்தின் எந்தவொரு நிகழ்விலும் நான் கலந்து கொள்ளவில்லை".

நிஜாமுதீனில் உள்ள மார்க்கஸில் கூட்டம் நடைபெற்ற நாளின்போது அந்தப் பகுதியில் இருந்தவர்களின் மொபைல் எண்கள், மொபைல் போன் கோபுரங்களில் பதிவாகியிருந்தன. அந்த தகவல்களின் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு சென்று வந்தவர்களின் உடல்நலம் சரிபார்க்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் நிஜாமுதீன் பகுதிக்கு சென்றவர்கள் அல்லது நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு அந்த வழியாக கடந்து சென்றவர்கள்” - என்று இதற்கு விளக்கமளிக்கிறார் மாநில சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங்தேவ்.

ஆனால் இந்த 159 பேரின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பிரேம் குமார் சாஹு, "சுகாதாரத் துறையும் காவல்துறையும் எங்கள் நலத்துக்காகவும், எங்கள் நன்மைக்காகவும் தகவல்களைச் சேகரித்தன என்பதெல்லாம் சரிதான். ஆனால், இந்த விசாரணையால் சுற்றுவட்டாரத்தில் எங்களை சந்தேகக்கண் கொண்டு ஒருவிதமாக அல்லவா பார்க்கிறார்கள்” – என்கிறார் வருத்தத்துடன்.

பிரேம் குமார் சாஹு என்ற ஒருவரின் மனநிலையை, பாதிப்புகளை, உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்திய சமூகத்தில், பிரேம் குமார் சாஹு போன்ற விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒரு சிலருக்கு உருவாகும் இத்தகைய மனரீதியான துன்பமும், பிரச்னைகளும், நெருக்கடிகளும் வகுப்புவாதிகளும், கூலிக்கு விலைபோன ஊடகங்களும், திட்டமிட்டு இந்திய முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ளது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்!

உலக வரலாற்றில் இதைவிட மோசமான இழப்புகளை சந்தித்த சமூகமே முஸ்லிம் சமூகம். அதனால், இந்த புரளிகளிலிருந்தும், வகுப்புவாத வன்மங்களிலிருந்தும் முஸ்லிம்கள் வெகுவிரைவில் தங்கள் அரும் பண்புகளை முன்னிறுத்தி வெளிவந்துவிடுவார்கள். ஆனால், தவறான தகவல்கள், வதந்திகள் மூலமாக தற்போது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு யார் பொறுப்பேற்பது? மனதுன்பங்களுக்கு யார் மருந்திடுவது?

மோடி சர்க்காரின் மனம் எப்போது திறக்கும்?





Share:

கொரானா: தென்கொரியாவின் 3T யும், மோடியின் வகுப்புவெறியும்!

''''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''''''''
எல்லாம் முஸ்லிம்கள்தான் காரணம் என்று ஊடகங்களும், சங்பரிவார் வகுப்புவாதிகளும் பரப்பிய 'கொரானா சாக்கு' வெறுப்பு பரப்புரைகள் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சங்கடங்கள் உருவாக்காமலில்லை.

மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற செல்லும் மருத்துவமனைகளில், அண்டை, அயலார் உறவுகளில் இந்த பொய்ப் பரப்புரை வதந்திகள் அவர்களின் மூளை செல்களில் அமர்ந்துவிட்டது. முஸ்லிம்களின் மீதான அச்ச உணர்வை ஏற்படுத்தி சகஜ தன்மையை சீர்குலைத்துவிட்டது. ஒருவிதமான அச்ச உணர்வுடனும், சங்கோஜத்துடனுமேயே முஸ்லிம்கள் பிரச்னைகளை அணுக வேண்டியதாகிவிட்டது. இது ஒருவிதமான மனயியல் ரீதியான தாக்குதலாகும்.

முஸ்லிம்களையும், அவர்கள் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கத்தையும் பூண்டோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி அரியணையில் அமர்ந்திருக்கும் மூர்க்கத்தனமான அரசு அதிகார எந்திரம்.

மாட்டின் பெயரால் நாடு முழுக்க நடந்த கும்பல் படுகொலைகள்,

முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியல் கோட்பாடுகளாய் பின்பற்றும் தனியார் சட்டங்களில் மேற்கொண்ட முத்தலாக் சட்ட திருத்தங்கள்,

எது எப்படியாயினும் நீதி கிடைக்கும் என்று பெரும் நம்பிக்கையில் முஸ்லிம்கள் காத்திருந்த பாபரி மஸ்ஜித் பிரச்னையில் தரப்பட்ட ஒருசார்பான தீர்ப்பு,

முஸ்லிம்களின் வாக்குரிமையைப் பறிக்க இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம்,

அதைத் தொடர்ந்து ஜாமியக்களில், ஜனநாயக ரீதியாக நடந்த மாணவர் போராட்டங்களை ஒடுக்க தில்லி காவல்துறை மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள்,

தங்கள் இருப்புகளை காத்துக் கொள்ள நாடு முழுக்க தெருக்களில் வரலாறு காணாது ஷாஹின்- பாக்குகளில், திரண்ட முஸ்லிம் பெண்கள்,

தலைநகர் தில்லியில் அந்த போராட்டங்களை ஒடுக்க களத்தில் இறங்கிய இனவெறி வகுப்புவாத குண்டர்களின் கொலைவெறித்தனங்களால் ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் கொடூரமான உயிரிழப்பு, கோடிக்கணக்கான பொருளிழப்பு

- என்று இந்திய முஸ்லிம் சமூகம் அடுக்கடுக்காய் அனுபவித்த சோகங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

இவை எல்லாவற்றையும், பொறுமையுடனும், சட்ட ரீதியாகவும் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவர்கள் மீது பூசப்படும் கொரானா நோய்த்தொற்று பொய் பரப்புரைகள் என்று ஏக மன அழுத்தங்களில் முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

உலகிலேயே ஒரு தீநுண்மிக்கு அதாவது கொரானா வைரஸீக்கு மத சாயம் பூசிய நாடு இந்தியா. இந்தியாவை ஆளும் வகுப்புவாதமும், வகுப்புவாதத்தின் எடுபிடிகளாக விளங்கும் ஊடகங்களும் கட்டவிழ்த்துவிட்ட பொய்-புனைவுகள் இன்று நாட்டின் பட்டிதொட்டிகள் எல்லாம் சேர்ந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி நிற்கின்றன.

நாட்டை ஆளும் வகுப்புவாதிகளுக்கு கொரானா தீநுண்மியை எதிர்கொள்ள திராணி இல்லை அல்லது மக்கள் மீது அக்கறையில்லை என்பதையே இந்த பொய், புனைவு, புரளிகள் காட்டுகின்றன. இந்திய சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு வகுப்புவாதிகள் இழைக்கும் அநீதிகள் இத்தகையவை என்றால் அது பொது சமூகத்தின் மேன்மைக்கும் ஒரு திட்டத்தையும் வகுக்கவில்லை என்பதே உண்மை.

ஆம். இந்திய பொதுசமூகத்துக்கு வகுப்புவாதிகளால் ஒரு நன்மையும் பயக்கவில்லை என்பதையே அவர்களின் கடந்தகால செயல்பாடுகள் காட்டுகின்றன.

👺😈 வெறும் சமய வெறியூட்டியதும்,

👺😈 உலகத்தின் உயரமான சிலை என்று கோடி கோடியாய் இந்தியரின் பணத்தை வாரி இறைத்ததும்,

👺😈 பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்ற பெயரால் இந்தியரை தெருக்களில் பிச்சைக்காரர் போல நடத்தியதும்,

👺😈 ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால், நடைபாதை வணிகர்கள் உட்பட சராசரி வணிகரின் வாழ்வியலை நசுக்கியதும்

👺😈 தற்போது, திடீர் அறிப்பான ஊரடங்கு உத்திரவால் நாட்டு மக்களை நூற்றுக் கணக்கான மைல்கள் நடக்க வைத்ததும்,

- என்றுமாய் இந்த சாதனைகள் தொடர்கின்றன.

விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரின் வாழ்வாதாரம் சிறக்க பெரும்பகுதி இந்தியரின் வாழ்வதாரத்தை நசுக்கியதாய் ஆட்சி அதிகாரம் தொடர்கிறது. நாடு பெருத்த பொருளியல் சரிவுக்கு வந்த பிறகு, மீள முடியாத பேரழிவை சந்தித்திருக்கும்போது, அந்த உண்மையை மறைக்க மீண்டும் கொரானா வகுப்புவாத சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் கணிசமான மக்கள் மத போதையில், திளைத்திருக்கும் விதமாய் திட்டமிட்டு கருத்துருவாக்கங்கள் உருவாக்கப்படுகிறது. எல்லாமே கூலிக்கு மாறடிக்கும் கூட்டம்தான். பொய்களும், புனைவுகளுமான தரவுகளும், பரப்புரைகளும் கொள்கை-கோட்பாடுகளுமாய் ஆட்சி-அதிகார எந்திரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவுடன் ஒப்பிடும்போது, தென் கொரியா நம்மைவிட ஒரு சிறிய நாடு. அதற்கும் ஏராளமான உள்நாட்டு பிரச்னைகள். தற்போது கொரானா தீநுண்மியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு. ஆனால், மக்கள் மீதுள்ள அக்கறையால் அவர்களை அந்த நோய்த் தொற்றிலிருந்து விரைந்து மீட்டெடுத்த நாடு. அடுத்தவர் மீது பழியைப் போடாமல், வன்மம் பரப்பி மக்களை கூறுபோடாமல், அந்நாடு கொரானா தீநுண்மியை எப்படி மீண்டது தெரியுமா? தென்கொரிய மருத்துவமனைகள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் டாக்டர் லீ சொல்வதின் கருத்துப் பிழிவு இதோ!

கொரானாவுக்கு எதிராக 3 T கோட்பாடுகளை தென்கொரியா பின்பற்றியது.

அது என்ன 3 T?

1. Trace,
2. Test and
3. Treat

அதாவது

1. கண்டறி,
2. சோதனை செய் மற்றும்
3. சிகிச்சையளி.

இந்த கோட்பாட்டை செயல்படுத்த தென்கொரியா நான்கு விதமான வழிமுறைகளை பின்பற்றியது.

1 கொரானா சம்பந்தமாக மக்களை அச்சுறுத்தாத எச்சரிக்கும் வெளிப்படைத்தன்மை

2 கொரானாவை கட்டுப்படுத்துவதிலும், குறைப்பதிலுமாய் போராடுவதுமான தொடர் போராட்டம்

3 கொரானாவை கட்டுப்படுத்த Rapid Test Kits களை ஆயுதங்களாய் பயன்படுத்துவது.

4 Rapid Test Kits மூலமாக பாதிக்கப்பட்டவர் என்றில்லாமல் பகுதி தோறும் அதிவேகமான மருத்துவ சோதனைகள் மேற்கொள்வது. (தென்கொரியாவில் ஒரு வாரத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்ற மருத்துவ தரவுகள் வியப்புக்குரியவை)

இந்த துரித நடவடிக்கைகளால் தென்கொரியா கொரானா இறப்பை 1.4 விழுக்காடாக கட்டுப்படுத்திவிட்டது அதாவது கொரானவுக்கு தென்கொரிய நாடு முழுக்க இறந்தவர்களின் எண்ணிக்கை 126 பேர் மட்டுமே!

இந்தியா வல்லரசாகிறது, ஒளிர்கிறது என்றெல்லாம் வாய்சவடால்களில் ஒரு பிரதமர் உரையாடி கொண்டிருக்க,

தனது இயலாமைகளை ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மீது திணித்து வெறுப்பு பரப்பி கொண்டிருக்க,

அவர் சொல்வதற்கெல்லாம் ஆட மற்றொரு கூட்டம் காத்திருக்க

உலக நாடுகள் தத்தமது நாட்டு மக்களை காக்க அக்கறையுடன், அவர்கள் மீதான பெரும் நேசத்துடன் போராடி கொண்டிருக்கின்றன என்பதற்கு தென்கொரியா ஒரு சிறந்த உதாரணம்.

ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இனியாவது, மோடி சர்க்கார் கொரானாவுக்கு எதிராய் முழு வீச்சில் செயல்பட போகிறாரா? அல்லது வழக்கமாய் வகுப்புவாத பரப்புரைகளிலும், தற்பெருமைகளிலுமேயே காலத்தை கடத்திவிடப் போகிறாரா என்பது கவலை அளிக்கிறது.

ஏனென்றால் கொரானா தீநுண்மி முஸ்லிம்கள் போல பொறுமையுடன் அடங்கி இருக்காது. நீதி, நியமங்களை எதிர்நோக்கி காத்திருக்காது. அது சமயங்களை, இனங்களை, வகுப்புவெறித் தனங்களைத் தாண்டி நாட்டு மக்கள் அனைவரையும் தீண்டக்கூடியது.












Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive