'''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''''
அறமற்ற விமர்சனங்கள் அல்லது கருத்துகளின் முடிவுகள் என்னவாகும் என்பதற்கு
தற்போது வளைகுடா நாடுகளில் சங்பரிவார் வகுப்புவாதிகளுக்கு எதிரான கொந்தளிப்புகளே
சாட்சி.
ஏப்ரல் 16-ஆம் தேதியன்று ஷார்ஜா அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட் அல் காஸிமி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவு நிலைமையின் விபரீதத்தை உணர்த்தியது.
ஒரு ட்விட்டர் பதிவர் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியிருந்ததைச்
சுட்டிக்காட்டியிருந்த இளவரசி,
"அரச குடும்பத்தினர் இந்தியர்களின் நண்பர்கள். இவ்வளவு வெறுப்புடன் நீங்கள் பேசுவதை அரச குடும்பத்தைச் சேர்ந்த என்னால் ஏற்க இயலாது. எல்லோருமே ஊதியத்திற்காகத்தான் வேலை பார்க்கிறார்கள். யாரும் இலவசமாக வேலை பார்ப்பதில்லை. நீங்கள் இகழும் இந்த மண்ணிலிருந்துதான் உங்களுக்கு உணவு கிடைக்கிறது. உங்கள் கேலி கண்டுகொள்ளப்படாமல் போகாது"
- எனத் தன் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் தன் ட்விட்டர் கணக்கையே அழித்துவிட்டார்.
ஞாயிற்றுக் கிழமையன்று இஸ்லாமிய ஒருங்கிணைப்பிற்கான அமைப்பின் (OIC) மனித உரிமைப் பிரிவான OIC-IPHRC வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
'இந்தியாவில் கொரோனாவை பரப்பியது முஸ்லிம்கள்தான் என்று கூறி பரப்பப்படும் செய்திகளைக் கண்டித்ததோடு, இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் தணிக்க இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனக்' கூறியது.
இதையடுத்து மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி "இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக, சமய, பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக' விளக்கமளித்தார்.
வகுப்புவாதம் பேசியே ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கும், மோடி சர்க்காரும், தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
"இனம், மதம், நிறம், ஜாதி, ஏழை - பணக்காரன் வித்தியாசம், மொழி, எல்லைகள் போன்றவற்றை பார்த்து கொரோனா தாக்குவதில்லை."
என்றும் பதிவிட்டார்.
வளைகுடா நாடுகளில் பெரும்பாலும் பணிபுரிபவர்கள் ஏழை, பாழை ஒடுக்கப்பட்டவர்கள்தான். அமெரிக்கா போன்ற நாடுகளில் பணிபுரிபவர்களைப் போல, சொல்லிக் கொள்ளும் விதமான பெரிய மேல் தட்டு மக்களோ, சாதிய மேலடுக்குவாதிகளோ அல்ல.
மனைவி, மக்களை பிரிந்து கடல்கடந்து வாழும் சாதாரண ஏழை, எளியோர்! இவர்களில் ஊடுருவியிருக்கும் சங்பரிவார் அடிவருடிகள் செய்த விஷமத்தனங்கள் அமீரகத்தில் வசிக்கும் மூன்றரை மில்லியனுக்கும் அதிகமானோரின் வாழ்வியலை சிக்கிலாக்கியுள்ளது.
2018ஆம் ஆண்டு நிலவரப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் சுமார் 78,500 மில்லியன் டாலர்களை நமது நாட்டுக்கு அனுப்புவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதில் அதிகபட்ச தொகை அமீரகத்திலிருந்து வருகிறது.
திரைக்கடலோடி திரவியம் தேடியதோடு நிற்க வேண்டியதான ஒப்பந்த ஷரத்துகளை மீறி சங்பரிவாரின் அடிவருடிகளாய், ஏவலாட்களாய் மாறி அறம் வழுவி நிற்பதன் விளைவு மொத்த வாழ்க்கையும் இழுக்க வேண்டியிருக்கும் என்தற்கான சமிஞ்சையே தற்போதைய நிலவரம்.
சங்பரிவார் கூட்டம் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கும், அவர்களை ஒழித்தொழிக்க முனைவதற்கும் அப்படி என்னதான் காரணம்?
இதற்கான பதில் மிகவும் எளிதானது. ஓரிரு வரிகளில் சொல்ல முடிவது.
அது இதுதான்: ‘ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!’
இந்த முழக்கமும், இந்த முழக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் பின்பற்றி வாழும் சமத்துவ வாழ்வியல் வாழ்வும்,
மனுவாத கட்டமைப்பை தூள் தூளாக்கி சிதைப்பதால் வந்த கோபம் தான் முஸ்லிம் எதிர்ப்பு.
மனுவாத சனாதனம் வேண்டும் என்று நினைப்போர் பொய்களாலேயே மூளைச்சலவை செய்து உருவாக்கிய ஒரு கூட்டத்துக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்தால் சும்மா இருப்பார்களா என்ன?
வகுப்புவாத வெறிபிடித்த இந்த சங்பரிவார் கும்பல், இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆடும் விலங்காட்டமும், சொந்த மக்களையே வெறிப்பிடித்தாற்போல கொத்தி குதறுவதும், அவர்களின் உயிர், உடமைகள், மானம், மரியாதைகள் அனைத்தும் சூறையாடுவதுமான துயரங்கள் நாடு முழுக்க தொடர்கின்றன.
உலக நாடுகள் இந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்கும்போதெல்லாம் இது உள்நாட்டு விவகாரம் என்று திசைதிருப்பல்கள் மழுப்பல்கள் என்ற தொடர்கதைகளுக்கு முற்று இல்லாமல் போகாது.
இவர்கள் கக்கிய நச்சு கருத்துக்கள், பரப்பிய கொரானாவைவிட கொடிய வெறுப்பு பரப்புரைகள் தற்போது வளைகுடாநாடுகளில் எதிர்விளைவுகளாய் ஆர்ப்பரித்து நிற்கிறது.
இந்த எதிர்வினைகள் அமெரிக்கா போன்ற கிருத்துவ நாடுகளிலும் எதிரொலிக்காது என்பதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் இல்லை.
இந்தியாவில் வகுப்புவாத கொலைப்பட்டியலின் அடுத்த வரிசையில் நிற்பவர்கள் கிருத்துவர்கள்தான்.
கோடி, கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி அடுக்குமாடி கட்டிடங்களில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் இந்த அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் சுகவாசிகள். சங்பரிவார் அமைப்பின் பொருளியல் முதுகெலும்பாய் இருப்பவர்களும் அவர்கள்தான்.
இவர்கள் நமது ஏழை, எளியவர்கள் போல, நூற்றுக்கணக்கான மைல்கள் கால்நடையாய் நடந்து ஊர் போய்ச் சேர்ந்த இழி நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் அல்ல. ஆனாலும் கொரானா அச்சத்தால் விமானமேறி பறந்துவந்தவர்கள்.
இந்த அச்ச உணர்வின் நீட்சியாக வெறுப்பு பரப்புரைகளின் அறுவடை பருவத்தின் விபரீத பலனையும் இவர்களும், அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைய நிலைமைகள் உணர்த்துகின்றன.
''''''''''''''''''''''''
0 comments:
Post a Comment