NewsBlog

Friday, April 10, 2020

முஸ்லிம்களின் டிசைன் உலகம் முழுக்க ஒரே டிசைன்தான்!


'''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''
எனது இளம் வயதில் நடந்த சம்பவம் இது.

அப்போது, காலராவும், அம்மையும் கதிகலங்கடித்து கொண்டிருந்த நேரம். அதுவும் பெரியம்மை என்றாலே முகங்களில் பள்ளங்கள் விழுந்த விகாரமான தோற்றமாகிவிடும்.

இத்தகைய சூழலில் நடுநிசியில், எனது நண்பன் ராஜுவின் தாய் காலராவால் பாதிக்கப்பட்டு குற்றுயிரும், குலையுயிருமாய் ஆனார். புறநகர் பகுதியாதலால், நடுநிசியில் வாகனம் கிடைக்கவில்லை. ஒருவழியாக அலைந்து, திரிந்து வாகனம் பிடித்து காலரா ஆஸ்பிடல் என்றழைக்கப்படும் வடசென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள அரசு தொற்று நோய் கிருமிகளுக்கான சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் சேர்த்து ஒருவழியாக அவர் காப்பாற்றப்பட்டார்.

இந்த சூழலில் ஒருவிதமான தனிமையை எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஏற்படுத்தி கொண்டோம். நோயாளியை மருத்துவமனையில் சந்திப்பதிலிருந்து, நண்பர்கள் நாங்கள் ஒருவர் மற்றொருவரை சந்திப்பதுவரையிலான சூழல்களில் சற்று விலகியிருந்தே நாங்கள் சமாளித்து கொண்டோம்.

தொற்று நோய்க்கிருமிகள் பரவும் என்ற அடிப்படை அறிவியல் உண்மை தெரிந்திருந்ததைத்தவிர பெரியளவிலான மருத்துவ அறிவு நாங்கள் பெற்றிருக்கவில்லை என்பதே யதார்த்தம். இந்த நோய்க்கான வீண்பழியை எந்த மதத்தின் மீதும் நாங்கள் போடவில்லை. அப்படி ஊக்குவிக்கும் அரசும் அப்போது இல்லை.
 
அது ஒரு காலகட்டம்.

இப்போது 60 வயதை கடந்து நிற்கும்போது, எல்லாமே வித்யாசமான காலகட்டமாக தெரிகிறது.

அப்போது காலரா. இப்போது கொரானா.  அதுவும் கொரானா நோய்த்தொற்று, பச்சை வர்ணத்தால் அப்பப்பட்டு பூதகரமாக நிற்கிறது. படித்தவரிலிருந்து, பாமரர்வரை வதந்திகளால் நிரம்பி வழிகிறது.

வகுப்புவாதிகளும், பொறுப்பற்ற ஊடகங்களும் பரப்பும் வதந்திகளால் ஒரு குறிப்பிட்ட சாரரின் வாழ்வியல் முடங்கிபோயிருக்கும் நிலை தற்போது.

இந்த வதந்திகள் என்னைப்போன்ற சாதாரணமானவர்களையும் https://www.youtube.com/watch?v=JG9kEqZNYpc&t=15s பாதிக்காமலில்லை. மனஉளைச்சல்களால் துளைத்தெடுக்காமல் இல்லை.

இத்தகைய இடர்பாடுகள் நிரம்பிய சூழல்களிலும் உதவும் மனப்பான்மையும், மனித சேவையுணர்வும் முஸ்லிம் சமூகத்தில் நிரம்பிவழிவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நண்பர்களே,

நீங்கள் ஏதாவது ஒரு முஸ்லிம் நண்பரின் நிக்காஹ் என்றழைக்கப்படும் திருமண நிகழ்வுக்கு சென்றிருப்பீர்களானால் சில அரபி வசனங்கள் அங்கு ஓதப்படுவதை கேட்டிருக்கலாம். தற்போது, அதன் மொழியாக்கம் அந்த திருமணத்தை நடத்துபவரால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஓதப்படுகின்றன.

ஒரு ஆணும், பெண்ணும் திருமண உறவில் இணையும் அந்த முக்கிய நிகழ்வில் ஓதப்படும் வசனத்தில் சில முக்கியச் செய்திகள் விவரிக்கப்பட்டு வலியுறுத்தப்படுகின்றன.

1 மனிதர்களே, இறைவனுக்கு அஞ்சி கொள்ளுங்கள்

2 இறைவன்தான் உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்.

3 அந்த ஆத்மாவிலிருந்தே அதனுடைய துணையையும் படைத்தான்.

4 அவ்விருவரிலிருந்தே ஆண், பெண்களை உலகில் பரவச் செய்தான். அதனால், இரத்த பந்த உறவுகளை முறிப்பதிலிருந்து விலகி இருங்கள்.

5 இறைவன் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்ச உணர்வால் தவறிழைக்காமல் வாழ்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு முஸ்லிம் திருமணத்திலும் ஓதி வலியுறுத்தப்படும் கூட்டு சமுதாய அமைப்புக்கான ஐந்து அடிப்படை செய்திகள் இவை.

ஆக, முஸ்லிம் சமுதாயத்தின் முதலாவது அடிப்படையே இறையச்சம் எனப்படும் இறைவனுக்கு அஞ்சி வாழும் வாழ்க்கைதான்.

அது இன்பமோ, கொரானா போன்று நோய்த்தாக்குதல்களுக்கு ஆளாகும்போது, ஏற்படும் துன்பமோ எதுவானாலும் ஒரு முஸ்லிம் இறைவனுக்கு அஞ்சியவாறு வாழ வேண்டியிருக்கிறது.

இரண்டாவதாக,

பூமி பந்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களாவர். சகோதரத்துவ உறவுமுறை கொண்டவர்களாவர். அனைவரும் ஒரே தாய், தந்தையரின் வழி வந்தவர்கள்.  இனப்பெருமையும், குலச்செருக்கும் அறிவீனம் அன்றி வேறில்லை.

மூன்றாவதாக,

ஆணும், பெண்ணும் ஒரே இனத்தின் வழித்தோன்றல்களே! இங்கு எந்த ஆணும் உயர்ந்தவரில்லை. எந்த பெண்ணும் தாழ்ந்தவருமில்லை.

நான்காவதாக,

உறவுமுறைகளை பேணி வாழ்வது. பெற்றோர் பிள்ளைகளது உரிமைகளையும், பிள்ளைகள் பெற்றோரின் உரிமைகளையும் பேணி வாழ வேண்டும் என்பதற்கான வலியுறுத்தல்.

இந்த மனித உறவுகளுக்கான உரிமைகளும், கடமைகளும் உற்றார், உறவுகளைத் தாண்டி உலகம் முழுக்க உள்ள மனித சமூகத்தையும் உட்படுத்தி வலியுறுத்தப்படுகிறது. ஒட்டு மொத்த மனித இனமும் இந்த உறவுமுறை வரையறைக்குள் அடங்குகிறது.

கடைசியாக ஐந்தாவது முக்கிய அம்சம்,

இறைவன் தனது செயல்களை சதா கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உள்ளுணர்வுடன் வாழும் வாழ்க்கை.

இந்த ஐந்து அடிப்படைகளை வலியுறுத்திதான் முஸ்லிம்களின் திருமணத்தின் போது நபிகளாரின் வழிகாட்டுதலின்படி திருக்குர்ஆனிலிருந்து மேலே குறிப்பிட்ட இறைவசனங்கள் ஓதப்படுகின்றன.  

முஸ்லிம்கள் பின்பற்றி வாழ முயலும் இந்த அடிப்படைகளின் முக்கிய கூறான உலக சகோதரத்துவத்தால் உந்தப்பட்டுதான் தனது அண்டை, அயலார் உறவுகளின் தேவைக்கு முஸ்லிம்கள் ஓடியோடி உதவுகிறார்கள்.

அது மழை வெள்ளமானாலும், கொரானாவால் பாதிக்கப்பட்டு உணவில்லாமல் திண்டாடும் எந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கு உதவ ஓடோடி செல்கிறார்கள். அடி-உதைப்பட்டு சாகிறார்கள்.

இந்த டிசைனை எங்களால் மாற்றிக் கொள்ளவே முடியாது நண்பர்களே. ஏனென்றால், இது எங்களின் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டிருப்பது!

அவர்கள் வெறுப்பு விதைத்தாலும் நாங்கள் அன்பையே விதைப்போம்! ஆம்.. அன்பை மட்டுமே விதைப்போம்!

 
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive