NewsBlog

Saturday, April 11, 2020

தற்போதைய சூழலில் தப்லிக் ஜமாஅத் செய்ய வேண்டியது என்ன?

''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
'''''''''''''''''''''''''''''''''''
தப்லிக் ஜமாஅத் ஏதோ சன்யாசி அமைப்பல்ல. துறவுறம் பூண்டு மலைமுகடுகளில் அமர்ந்து கொண்டு மோட்சம் அடைவதற்கு! அது இப்படியான ஒரு சன்யாசி அமைப்பு என்று யாராவது நினைத்திருந்தால் அது அவர்களின் குறைபாடு அன்றி தப்லிக்கின் குறைபாடு அல்ல.

உண்மையில், தப்லிக் ஜமாஅத் பெயர்தாங்கி முஸ்லிம்களை சீர்த்திருத்தம் செய்து செயல் ரீதியான இறையன்பை பெறும் முஸ்லிம்களாக்க ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இந்தியாவில் உதயமான உளத்தூய்மையான கட்டமைப்பு கொண்ட அமைப்பு.

முஸ்லிம்கள் குறித்த பெரும் கவலையும், அவர்கள் வாழ்வியல் நிலைகுறித்த அக்கறையும் அதன் குழிகற்களாக இருப்பவை. அதன் அணுகுமுறையில் தவறிருக்கலாம். நோக்கத்தில் ஒரு குறையுமின்றி, தனக்கென்று ஒரு வேலைதிட்டத்தை வகுத்துக் கொண்டு உலகம் முழுக்க சீராக செயல்பட்டுவரும் அமைப்பு அது.

ஒவ்வொரு அமைப்புக்கும் சில குறைபாடுகள் இருப்பது சகஜம். அது தப்லிக் ஜமாஅத்துக்கும் பொருந்தும்.

நவீன உலகோடு முஸ்லிம்கள் போட்டிபோட முடியாமல் தட்டுத்தடுமாறுவது போலவே, பாமரர் முதல் பண்டிதர்வரையிலான இந்திய முஸ்லிம்களில் ஒரு கணிசமான பகுதியினரை வாய்மொழி உறுப்பினராக கொண்டு செயல்படும் தப்லிக்கும் காலத்தோடு பொருந்தி போகாததில் வியப்பொன்றும் இல்லை. அவற்றை விமர்சிப்பது எனது நோக்கம் இல்லையாயினும் அந்த குறைகளே தற்போதைய பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. இதை தற்போது அந்த அமைப்பின் பெரியார்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

அரசியலைவிட்டு விலகி, இறைவணக்கங்களில், திக்ரு எனப்படும் மனத்தூய்மைக்கான தியான முறைகளில் அதிகமாக கவனம் செலுத்தும் அமைப்பாயினும் முஸ்லிம்களுக்கு எதிர்படும் பிரச்னைகளிலிருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்கின்றன நடப்பு நிகழ்வுகள். அதுவும் வகுப்புவாத அமைப்பொன்று ஆட்சி அதிகாரத்தில் வலுவாக அமர்ந்துள்ள சூழலில் இந்த நினைப்பு சாத்தியமற்றது.

தற்போது தப்லிக் ஜமாஅத் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டுள்ளது அல்லது அறியாமையால் பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளது.

இந்த இரண்டில் எதுவாயினும், வேறு வழியின்றி அதை எதிர்கொண்டேயாக வேண்டும். இந்நிலையில், அநீதி இழைக்கப்பட்டவர் என்ற ரீதியில் நீதியை விரும்பும் ஒவ்வொருவரும் தப்லிக்குடன் இணைந்து நிற்பார்கள்.

அதனால், தன் மீது சாட்டப்பட்டுள்ள மருத்துவ ரீதியான பழிச்சொற்களாகட்டும், சட்ட ரீதியான பிரச்னைகளாகட்டும் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவில் செயல்படும் பிற இஸ்லாமிய அமைப்புகளின் உதவியையும், ஆலோசனைகளையும் நாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்பினர் இதற்கு முன்பே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்கள். நீதிமன்றங்கள் மூலமாக அவற்றை தகர்த்தெறிந்து வென்றவர்கள்.

அநீதி இழைக்கும் ஆட்சி, அதிகாரத்தைவிட தற்போது ஆபத்தானவர்கள் அநீதியாளர்களுக்கு ஊதுகுழலாக, அடிவருடிகளாக இருக்கும் ஊடகங்கள்தான்.
பட்டிதொட்டிதோறும் முஸ்லிம்கள் குறித்த வதந்திகளை பரப்பிய புண்ணியவான்கள் இவர்கள்.

இப்படி தவறாக செய்தி வெளியிடும் ஒவ்வொரு ஊடகத்தின் மீதும் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். தவறான செய்திகளை வெளியிட்டதற்கு, நாடு முழுக்க அச்செய்திகள் மூலமாக மக்களை அச்சுறுத்தியதற்கு தகுந்த பரிகாரம் காண வேண்டும்.

நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒடுங்கி கொள்வதும் ஒரு வாழ்வியல் முறைதான்! தன்னைக் காத்துக் கொள்ள புலியாய் பாய்வதும் வாழ்வியல் முறைதான்! சூழலைப் பொறுத்தே விலங்குகள் இவற்றை தீர்மானிக்கின்றன. நாம் மனிதர்களாயினும், இதில் நமக்கும் படிப்பினைகள் உள்ளன. 

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive