'''''''''''''''''''''''''''''''''''''''''''
இக்வான் அமீர்
''''''''''''''''''''''''''''''''''''''''''
இஸ்லாமிய அறிஞரும் நண்பருமான ஜபருல்லாஹ் ரஹ்மானி அனுப்பியிருந்த ஒரு குரல் பதிவை கேட்டேன்.
தப்லிக் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் சம்பந்தமான பதிவு அது. தன்னை டாக்டர் கார்த்திகேயன் என்று அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் அதில் பேசுகிறார்.
கொரானா நோய்த்தொற்றுக்கு ஆளானதாக அரசால் தனிமைப்படுத்தப்பட்ட தப்லிக் ஜமாஅத்தைச் சேர்ந்த நபர்கள் நலமாக இருப்பதாகவும், கொரானா வைரஸ்ஸால் எந்த பாதிப்பும் அவர்களுக்கு இல்லை என்றும் டாக்டர் கார்த்திகேயன் வியப்பு தெரிவிக்கிறார். இதற்கு தப்லிக் ஜமாஅத்தாரின் உடலிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். இந்த எதிர்ப்பு சக்தி இவர்களது உடலில் எப்படி உருவாகிறது? என்று விரிவான ஆய்வை மேற்கொண்டாலே கொரானா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடலாம் என்றும் ஆலோசனை தெரிவிக்கிறார்.
இது எந்தளவு உண்மையானது என்பது எனக்கு தெரியாது.
ஆனால், தப்லிக் ஜமாஅத்தோடு கரோனா வைரஸ் புனையப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் மட்டும் எனக்கு உண்டு. இந்த புனைவை இந்தியர் இல்லந்தோறும் கொண்டு சேர்த்த பெருமை நமது பொறுப்பற்ற ஊடகங்களையே சாரும்.
நானெல்லாம், ஊடகங்களில் அதி ஈடுபாடோடு இருந்த காலகட்டத்தில் என்னை அறியாமலேயே ஒரு பெருமிதம் இருக்கும். இதழியல் மேல்நிலை பட்டப்படிப்பு படிக்கும்போது இந்த உணர்வு இன்னும் தூக்கலாகவே இருந்தது எனலாம்.
மக்கள் சேவன், ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகத்துக்கான அறநெறிகள் வார்த்தெடுத்த திமிர் என்றுகூட அதை அழைக்கலாம்.
இந்த வெறியுடன்தான் எனது புலனாய்வு தேடல்கள் தொடர்ந்தன. இதற்காக நிறைய ஆபத்துகளை சந்திக்க வேண்டியிருந்தது. அந்த புலனாய்வு, எழுத்துக்களாய் பத்திரிகைகளில் வடிவம் பெறும்போது பட்ட கஷ்டமெல்லாம் பஞ்சாய் பறந்து போகும்.
அதே ஊடக பெருமிதம் இன்றும் இருந்தாலும், ஊடகவாதி என்று சொல்லிக் கொள்ளவே சில இடங்களில் கூச்சமாக இருக்கிறது. அதுவும் சாமான்ய மக்களிடம், செய்தி சேகரிக்க செல்லும்போது இப்படி அறிமுகப்படுத்திக் கொள்ள வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால் ஊடகவாதிகள் விலைபோனவர்கள் என்று ஒரு சாமான்ய மனிதனும் தெரிந்து வைத்திருக்கிறான்.
அறநெறியற்ற விலை போன ஊடகங்களின் கெடுமதியின் விளைவை இன்று முஸ்லிம் சமூகம் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், பொய்மையால் என்னதான் 'பட்டி'ப்பார்த்து பூசி மெழுகினாலும் உண்மைகள் வெளிப்படவே செய்யும்.
அப்போதும் முஸ்லிம்கள் காலரை தூக்கிவிடாமல் தங்கள் கடமையே கண்ணாக கடந்து சென்று கொண்டேயிருப்பார்கள். ஆனால், கூச்சநாச்சமில்லாமல், வதந்தி பரப்பியவர்கள் எல்லாம் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியிருக்கும்.
இதைதான் டாக்டர் கார்த்திகேயனின் இந்த குரல் பதிவு சொல்கிறது.
0 comments:
Post a Comment