NewsBlog

  • பென்னிக்ஸ் – ஜெயராஜ் விழுந்த ஒவ்வொரு அடியும் நம் சமூகத்தின் மீதான தாக்குதலே!

    மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாக பேசியும், எழுதியும் வருபவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ சந்திரன். ஆம்! தம் வாழ்வியலுக்காக ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் சந்திரகுமார் அதே பெயராலேயே அழைக்கப்படுகிறார். 80-களில் அவர் விசாரணைக் கைதியாக ஆந்திர மாநில காவலர்களால் துன்புறத்தப்பட்ட உண்மை கதைதான் அவர் எழுதிய 'லாக்கப்' நாவல். அந்த நாவல்தான் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம். தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து.. – இக்வான் அமீர்.

  • இயற்கையோடு இயைந்த இல்லம்

    இதற்காகச் சில தென்னைகளை வெட்டச் சொன்ன சமயத்தில் தவிர்க்க இயலாத நிலையில் 8 தென்னம்பிள்ளைகளில் ஒன்றை மட்டுமே நான் பறிகொடுக்க நேர்ந்தது. அவற்றை வெறும் அஃறிணைகளாக நான் பார்க்கவில்லை. எனது உற்ற நண்பனாகவே பாவித்து வந்தேன். வீட்டோடு உரசும் மற்றொரு தென்னம்பிள்ளையை வெட்ட சுட்டிக்காட்டியபோது, “என்னோடு சுக- துக்கங்களில் வளர்ந்த நல்ல நண்பன் அவனை இழக்க முடியவே முடியாது! வீட்டை வளைச்சு கட்டுங்க போதும்!” எனச் சொல்லிவிட்டேன். இன்றும் மரங்களுக்கேற்ப வளைந்து நெளிந்தும், கட்டிய தளத்தில் உரசலோடும் உயிர் பிழைத்த உற்சாகத்தில் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தத் தென்னம்பிள்ளை~இக்வான் அமீர்.

  • காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

    ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள்.

  • புனையப்பட்ட செய்திகள் வெளியிடும் இந்திய ஊடகங்கள் மீது நடவடிக்கை: நேபாளம் கடும் எச்சரிக்கை

    நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் நேபாளத்துக்கான சீன தூதர் யாங் ச்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து சில இந்திய ஊடகங்கள் கேலி செய்திருந்தன. இதை தொடர்ந்து அம்மாதிரியான புனைவு செய்திகளுக்கும், கற்பனையான செய்திகளுக்கும் எதிராக ‘அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும்’ நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள அரசு எச்சரித்துள்ளது.

  • அரளிச் செடியை விதைகள் மூலம் முளைவிப்பது எப்படி?"

    அரளி செடிகள் உஷ்ணத்தை தாங்கி வளர்ந்து அழகிய பூக்களைப் பூக்கும் தாவரமாகும். நமது நாட்டு பருவநிலைக்கு நடவு செய்ய ஏற்றவை.

Thursday, October 27, 2016

நீதியின் அரசாட்சி..!



அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. என்னிடம் வந்த கவர்னரின் மகன், எந்தவிதமான காரணமும் இல்லாமல், “நீ வெகு சாதாரணமானவன். நானோ சிறப்புக்குரிய கவர்னரின் மகன்! என்னோடவா போட்டிப் போட்டு ஜெயிக்கிறாய்?” – என்று என்னை சவுக்கால் விளாச ஆரம்பித்தார். - இக்வான் அமீர்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

ஒருநாள்.

ஜனாதிபதி உமர் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்.

அப்போது, ஒரு எகிப்தியர் அங்கு வந்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும் – உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழிவதாக!” – என்று முகமன் கூறினார்.

அதற்கு உமரும் பதில் முகமன் தெரிவித்தார்.

அந்த வழிப்போக்கர் ஜனாதிபதியின் பக்கத்தில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

“ஜனாதிபதி அவர்களே! நான் ஒரு வழக்கு சம்பந்தமாக தங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதேசமயம், பாதுகாப்பும் கிடைக்கும் என்று தாங்கள் உறுதி அளிக்கும் பட்சத்தில் என் வழக்கை முறையிடுவேன்!” – என்று நிபந்தனை விதித்தார்.

“கண்டிப்பாக.. நீதியும், பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறேன். அச்சப்படாமல் விஷயத்தைச் சொல்லுங்கள்!” – என்றார் ஜனாதிபதி உமர்.

எகிப்தியர் சொல்லலானார்: “எகிப்தின் கவர்னர் அம்ர் பின் அல்ஆஸ், குதிரைப் பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அரபியர்களைப் போலவே எகிப்துவாசிகளான நாங்களும், குதிரைகள் மீது எந்த அளவு பிரியம் வைத்திருப்பவர்கள் என்று தங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகவே பல பந்தயக்குதிரைகள் உண்டு. அதனால், எதிர்பார்த்திருந்த குதிரைப் பந்தய அறிவிப்பு எங்களுக்கு உற்சாகமூட்டியதோடு, அதில் பங்கெடுக்கவும் வைத்தது.

நானும், ஓர் அழகிய … அற்புதமான குதிரை ஒன்றை வைத்திருக்கிறேன். அந்தப் பந்தயத்தில் என் குதிரை நிச்சயம் வெற்றி பெறும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கையும் இருந்தது.

இதைப்போல, அம்ரின் மகன் முஹம்மதுவும் அந்தக் குதிரைப் பந்தயத்தில் கலந்து கொண்டார்.

போட்டி ஆரம்பித்தது.

குதிரைகள் நாலுகால் பாய்ச்சலில் ஓடலாயின. ஒவ்வொரு முறையும் குதிரைகள் பந்தய மைதானத்தைச் சுற்றிவரும்போது, முன்னணியில் இருந்த குதிரை தெளிவாகவே தெரிந்தது.

ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த என் குதிரை, பிறகு மின்னல் வேகத்தில் எல்லா குதிரைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெற்றி இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது. இரண்டாவது சுற்றிலும் இவ்வாறுதான் நடந்தது. மூன்றாவது சுற்றான இறுதிச் சுற்றில், திடீரென கவர்னரின் மகன் முஹம்மது, “ என் குதிரை முன்னால் வருகிறது.. என் குதிரை முன்னால் வருகிறது!” – என்று எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்தார்.

ஆனால், அந்தச் சுற்றிலும் எனது குதிரைதான் நாலுகால் பாய்ச்சலில் முன்னால் ஓடிக் கொண்டிருந்தது.

அந்தக் கணத்தில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் நான் எழுந்து நின்று குதித்து நடனமாட ஆரம்பித்தேன்.

இறைவன் அருளால் என் குதிரை வெற்றி இலக்கை தொட்டுவிட்டது.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது. என்னிடம் வந்த கவர்னரின் மகன், எந்தவிதமான காரணமும் இல்லாமல், “நீ வெகு சாதாரணமானவன். நானோ சிறப்புக்குரிய கவர்னரின் மகன்! என்னோடவா போட்டிப் போட்டு ஜெயிக்கிறாய்?” – என்று என்னை சவுக்கால் விளாச ஆரம்பித்தார்.

இதற்கு பிறகு நடந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை ஜனாதிபதி அவர்களே..!” – என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த எகிப்தியரின் கண்கள் கலங்கிவிட்டன.

அவரின் தோள் மீது பரிவோடு கையைப் போட்ட உமர் சமாதானப்படுத்தும் விதமாக மென்மையாக தட்டிக் கொடுத்தார்.

சற்று நேர மௌனத்துக்குப்பின், கண்களைத் துடைத்துக் கொண்ட அந்த எகிப்தியர், “… இந்த விஷயத்தை நான் எங்கே தங்களிடம் சொல்லிவிடப் போகிறோனோ என்று பயந்துபோன கவர்னரின் மகன் அப்பாவியான என்னை பொய்குற்றச்சாட்டுகளோடு சிறையில் அடைத்துவிட்டார்.

சிறையில் என் கதையைக் கேட்ட சிறைக்காலவர் ஒருவர் இரக்கப்பட்டிருக்காவிட்டால், நான் இந்நேரம் தங்கள் முன் அமர்ந்திருக்க முடியாது! என் வழக்கையும் முறையிட்டிருக்க முடியாது!” – என்றார் கனத்து குரலோடு.


 நடந்ததைக் கேள்விப்பட்ட ஜனாதிபதி உமர், மௌனத்தில் மூழ்கிவிட்டார்.

சற்று நேரம் கழித்து, “நிம்மதியாக இருங்கள் சகோதரரே! உங்களுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். அதுவரை தாங்கள் இங்கேயே எனது விருந்தாளியாக தங்கியிருக்கலாம்!” – என்று ஆறுதல் சொன்னார்.

அதன்பிறகு, ஜனாதிபதி உமர் எகிப்தின் கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘கவர்னரும், அவரது மகனும் உடனடியாக தலைநகர் மதீனாவுக்கு வந்துசேர வேண்டும்!” – என்று அதில் ஆணை பிறப்பித்தார்.

ஜனாதிபதியின் கடிதம் கண்டு அம்ர் பின் அல்ஆஸ் பதறிவிட்டார். ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று மட்டும் தெளிவாகவே புரிந்தது. தனது மகனை அழைத்து, ‘என்ன நடந்தது?’ – என்று கவலையுடன் விசாரிக்க, மகனோ, “ஒன்றுமில்லையப்பா!” – என்று சமாளித்தார்.

“அப்படியென்றால்.. ஜனாதிபதி நம் இருவரையும் தலைநகர் வரும்படி அழைத்திருப்பது ஏன்? நீ ஏதோ என்னிடம் மறைக்கிறாய்.. சரி.. உடனே புறப்பட தயாராக இரு!” – என்று கடுமையாக சொன்னார்.

நீண்ட பயணத்துக்குப் பிறகு, கவர்னர் அம்ர் பின் அல்ஆஸ்ஸீம், அவரது மகன் முஹம்மதுவும் மதீனாவை அடைந்தனர். நேராக ‘மஸ்ஜிதுன் நபவீ’யை இருவரும் அடைந்தார்கள்.

அங்கு மக்கள் கூட்டம் சேர்ந்துவிட்டது. தமது மதிப்புக்குரிய தோழரும், எகிப்தின் கவர்னருமான அம்ர் பின் அல்ஆஸைக் கண்டதும் மக்கள் குசலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் ஜனாதிபதி உமரும் அங்கு வந்து சேர்ந்தார். வழக்கமான சம்பிரதாய உபசரிப்புகள், நடைமுறைகள் ஏதுமின்றி விசாரணையை நேரிடையாகவே துவக்கினார்.

“எங்கே உமது மகன்?”

தந்தைக்குப் பின்புறம் நின்றிருந்த முஹம்மது தலை குனிந்தவாறே முன்னால் வந்து நின்றார்.

“எங்கே அந்த எகிப்தியர்?”

“இதோ..! இங்கே இருக்கிறேன் ஜனாதிபதி அவர்களே!”

ஜனாதிபதி உமர் தம்மிடமிருந்த சவுக்கை எடுத்து எகிப்தியரிடம் நீட்டினார்.

“ம்.. உங்களைச் சவுக்கால் அடித்தது போலவே இதோ இந்த கவர்னரின் மகனையும் சவுக்கால் விளாசுங்கள்!” – என்று ஆணை பிறப்பித்தார்.

சவுக்கைப் பெற்றுக் கொண்ட அந்த எகிப்தியர் கவர்னர் அம்ர் பின் அல்ஆஸின் மகனை சாட்டையால் விளாச ஆரம்பித்தார்.

உமரோ முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டிக்கொள்ளவில்லை.

“ம்.. இன்னும் வேகமாக அடியுங்கள்.. பயப்படவேண்டாம்! நான் இருக்கிறேன்.. இன்னும் வேகமாக அடியுங்கள்!” – என்று தைரியமூட்டினார்.

எகிப்தியர் சவுக்கால் அடித்து முடித்ததும், கவர்னரின் மகனான முஹம்மது அங்கிருந்து தலைகுனிந்தவாறே அகன்றார்.

இப்போது ஜனாதிபதி உமரின் குரலில் கடுமை ஏறியது: “யாருடைய அதிகாரமும், செல்வாக்கும் அவரது மகனை பிறரைவிட உயர்ந்தவன் என்ற மனப்பான்மையைத் தந்ததோ, குற்றம் செய்யத் தூண்டியதோ.. அந்த கவர்னருக்கு இப்போது சில சவுக்கடிகள் கொடுங்கள்!”

இதைக்  கேட்டதும், அம்ரின் முகம் சுருங்கிவிட்டது.

சுற்றியிருந்தவர்கள் சிலையாக நின்றார்கள்.

பாதிக்கப்பட்ட எகிப்தியர் தெளிவான குரலில் சொன்னார்: “இல்லை ஜனாதிபதி அவர்களே! என்னை அடித்ததற்கு பழிக்குப் பழி வாங்கியாகிவிட்டது. கவர்னரின் மீதும் எந்த தவறும் இல்லை!”

“நீங்கள் அடிக்க விரும்பினால்… அதைத் தடுப்பவர்கள் யாருமில்லை!” – என்ற ஜனாதிபதி உமர், அதன் பிறகு, கவர்னர் பக்கம் திரும்பி, “ஒவ்வொரு மனிதரும் தாயின் கருவறையிலிருந்து சுதந்திரமானவர்களாகப் பிறக்க அவர்களை நீங்கள் எப்போது அடிமைப்படுத்த ஆரம்பித்தீர்கள் அம்ர்?” – என்று காட்டமான குரலில் கேட்டார்.

அம்ர் தனது மகன் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி உமர் எகிப்தியரின் பக்கம் திரும்பினார்.

“சகோதரரே! இனி நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று நிம்மதியாக வாழலாம். மறுபடியும் உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் என்னை அணுக தயக்கம் வேண்டாம்!” – என்று விடைகொடுத்து அனுப்பி வைத்தார்.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” – என்பதை எகிப்தியர் கண்ணாரக் கண்டார். ஜனாதிபதியை வாழ்த்தியவாறே அங்கிருந்து சென்றார்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில், 27.10.2016 அன்று பிரசுரமான எனது கட்டுரை) 

 
Share:

Tuesday, October 25, 2016

இங்கே என்னடா நடக்குது கோபாலு?




”முஸ்லிம் பெண்களின் உாிமையைப் பாதுகாப்போம்..!” - தலாக் விவகாரத்தில் மோடி திட்டவட்டம். - செய்தி.
 
'''''''''''''''''''''''''''''''''''''''

•    கட்டிய மனைவியின் உாிமையை பாதுகாக்க முடியலே..!

•    குஜராத் படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனையளித்து சொந்த குடிமக்களின் உாிமைகளைப் பாதுகாக்க முடியலே..!

•    விரும்புற உணவை சாப்பிடும் உாிமை பாதுகாக்கப்படலே..!

•    அங்க நம்ம காஷ்மீர்லே காணாமல் போகும் ஆண்களால் அதிகமாகிவரும் விதவைகளுக்கு நியாயம் கிடைக்கும் வழியில்லே..!

•    இவரு இப்போ யாரோட உாிமைங்கள பாதுகாக்க இந்த சீன் போடறாரு...?

என்னடா நடக்குது இங்கே கோபாலு?”

Share:

Thursday, October 6, 2016

ஹிஜ்ரி புத்தாண்டு சிறப்புக் கட்டுரை: மக்காவை ஏன் துறந்தார்?


”இறை உவப்பை பெறுவது மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்ட இறை பக்தரின் பார்வையில் நிலையற்ற உலக சுகபோகங்களும், செல்வ, குவியல்களும், ஆட்சி, அதிகாரங்களும்... துச்சமே..! இத்தகைய அடியாரை விலைக்கு வாங்கவே முடியாது! என்று பாவம் … உத்பா அறிந்திருக்கவில்லை” - இக்வான் அமீர்

"""""""""""""""""""""""""""""""""""""
'தீ' ஜுவாலைகளாகி அனல் கக்கிக் கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்! தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளவே முடியாமல் அவர்கள் துடித்தார்கள். நபிகளாரின் போதனைகளால், மக்காவின் இல்லந்தோறும் வாழ்வியல் அமைப்பில் பெரும் மாறுதல் உண்டாகிக் கொண்டிருந்த நேரமது.

"முஹம்மதை இறைவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு அவர் போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமா? முடியாது.. முடியவே முடியாது..!”- குறைஷிகள் அனலில் இட்ட புழுவாக துடித்தார்கள்; துவண்டார்கள்!

"இதை விடக்கூடாது! அவரிடம் அப்படி என்னதான் இருக்கிறதோ கேட்பவரெல்லாம்.. உடனே அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களே..!"- வியப்பும் கோபமும் கொண்ட குறைஷித் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினார்கள். இறுதியாக, நாவன்மையும்,  நுண்ணறிவும் கொண்ட 'உத்பா'வை தூதராக நபிகளாரிடம் அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

உத்பா நபிகளாரை தம் வழிக்கு கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிக்கிறார்: "என் அன்பு மகனே! எங்கள் கொள்கைகளை ஏன் புறக்கணிக்கிறீர்? உம்முடைய நோக்கம் செல்வம்தான் என்றால்... அரபு நாட்டின் மொத்த செல்வக் குவியலையும், உம்முடைய காலடியில் கொட்டத் தயாராக இருக்கிறோம்! அழகிய பெண்தான் உம்முடைய நோக்கம் என்றால் .. இந்த அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணை உமக்கு மண முடித்துத் தருகிறோம்! உம்முடைய நோக்கம் கண்ணியமும், மதிப்பும்தான் என்றால் .. உம்மை எம் தலைவராக ஏற்றுக் கொள்ள சித்தமாகவும் இருக்கிறோம்! உமது நோக்கம்.. ஆட்சி அதிகாரம்தான் என்றால், அதிலும் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. வாருங்கள்..! உம்மை அரபு நாட்டின் மன்னராக்கி மகிழ்கிறோம்! அல்லது… அல்லது… " சிறிது தயங்கிய உத்பா.., ".... அல்லது உம்முடைய மூளையில்தான் ஏதாவது கோளாறு என்றால்.. அதற்காக நாம் சிறந்த மருத்துவரிடம் உம்மை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்கிறோம்!" - என்கிறார் குத்தலாக!

இறை உவப்பை பெறுவது மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்ட இறை பக்தரின் பார்வையில் நிலையற்ற உலக சுகபோகங்களும், செல்வ, குவியல்களும், ஆட்சி, அதிகாரங்களும்... துச்சமே..! இத்தகைய அடியாரை விலைக்கு வாங்கவே முடியாது! என்று பாவம் … உத்பா அறிந்திருக்கவில்லை.

உத்பாவின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த நபிகளார் கடைசியாக, மென்மையும், உறுதியும் வாய்ந்த குரலில் பதிலளித்தார்:

"பெண்ணோ, பொருளோ அதிகாரமோ எனது தூதின் நோக்கமல்ல. என் மூளையில் எவ்விதமான கோளாறும் இல்லை! நான் மனநலம் பாதிக்கப்பட்டவனுமல்ல. இறைவனின் திருத்தூதைதான் நான் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன். பின்பற்றுவோருக்கு நற்செய்தியும், நிராகரிப்போருக்கு கடும் தண்டனைப் பற்றிய எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது. அதனால், தாங்கள் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது!”

தெள்ளத் தெளிவான, திட்டவட்டமான, எந்தவித நீக்குப் போக்குகள் இல்லாத.. நேரடியான பதிலை அழகிய வார்த்தைகளால்.. நபிகளார் எடுத்து வைத்து விடுகிறார்.



கடைசியில், உத்பா தோல்வியுடன் திரும்பி செல்ல வேண்டியதாயிற்று!

தம் தூதில் தோல்வியுற்ற குறைஷிகள் மீண்டும் ஒன்று கூடி திட்டமிடுகிறார்கள். பின்பு நபிகளாரின் பெரிய தந்தையான அபூதாலிபின் மூலமாக மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.

"ஓ! அபூதாலிப்பே! எங்கள் மத்தியில் உம்முடைய நிலை மிகவும் உயர்வானதாகவும், கண்ணியத்திற்குரியதாகவும் உள்ளது. நாங்கள் ஏற்கனவே, உமது சகோதரர் மகனை கண்டித்து வைக்கும்படி உம்மை எச்சரித்தோம்! ஆனால், அதை நீர் பொருட்படுத்தியதாகக் காணோம்! உமது சகோதரரின் மகனோ, தொடர்ந்து அவரது கொள்கைகளைப் போதித்து வருகிறார். இதை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! இனியும் நாங்கள் அவரை, அனுமதிக்க முடியாது! அவருடைய போதனைகளை அவர் உடனே கைவிட வேண்டும்! இல்லையெனில் நீங்கள் இருவரும் இதன் கடும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்!! - என்று மிரட்டிவிட்டு செல்கிறார்கள்.

 அபுதாலிப் கவலையடைகிறார். நபிகளாரை அழைத்துச் சொல்கிறார்:

"என்னுடைய சகோதரரின் மகனே! இனி நான் உமக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது. நீர் தொடர்ந்து உமது பணிகளை நீடித்தால்.. அதனால்.. ஏற்படும் விளைவுகளுக்கு நீரே பொறுப்பாவீர். நன்றாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!"

தம் பெரிய தந்தையாரின் இக்கட்டான சமூகச் சூழலையும், அதேநேரத்தில், அவர் தம் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், உணர்ந்து நபிகளார் கண்கலங்குகிறார். சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சொல்கிறார்:

"பெரிய தந்தையே! தங்களது இக்கட்டான சூழல் என்னை பெரிதும் கவலைக் கொள்ள செய்கிறது. தாள முடியாத வேதனை அளிக்கிறது. இறைவன் மீது ஆணையாக! இவர்கள் என் போதனைகளை விடச் சொல்லி.. என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும்.. நான் இப்பணியிலிருந்து விலகப் போவதில்லை! இறைவாக்கில் ஓர் எழுத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ போவதில்லை! இந்தப் பணியில் என் உயிர் போவதாயினும சரியே!" - என்று கூறிவிட்டு வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லலானார்.

நபிகளாரின் அசைக்க முடியாத உறுதியைக் கண்ட அபூதாலிப் தமது முடிவை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. நபிகளாரை தடுத்து நிறுத்தி, அருகில் அழைத்துச் சொன்னார்:

"எனது சகோதரரின் மகனே! நீர் உம்முடைய கொள்கையில் நிலையாக நில்லுங்கள். வருவதை எதிர்கொள்வோம்!”


தங்கள் உருட்டல், மிரட்டல் – சாதுர்யங்கள் எடுபடாததைக் கண்ட குறைஷிகள் தற்போது, நேரிடையான வார்த்தை மோதலில் இறங்கினார்கள்.

தடித்த வார்த்தை பிரயோகங்கள்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். மோதல்களுக்கு வழிவகுக்கும் சாதனம். குறைஷிகள் இந்த ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.   ஆனால். நபிகளாரோ இவற்றை அழகிய முறையில் எதிர்கொள்கிறார்.

•    "முஹம்மதே! எம்மைச் சுற்றியுள்ள இம்மலைகள் அனைத்தையும், தரைமட்டமாக்கி... சிரியாவிலும், இராக்கிலும் உள்ளதைப் போல நதிகளை ஓடவிடச் செய்யும்படி உமதிறைவனிடம் கேளும்!"

•    “எங்களது முன்னோர்களில் சிலரை குறிப்பாக குஸையை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொல்லும்! உம் தூதைப்பற்றி அவரிடமே நாங்கள் கேட்டு தெளிவுப் பெறுகிறோம்!"

•    “இவைகளை எங்களுக்கு செய்துதர முடியாவிட்டாலும் பரவாயில்லை! உமக்காவது சில உதவிகளை இறைவனிடம் கேளும்.  உம்மிடம் ஒரு வானவரை அனுப்பி நீர் சொல்வதை உறுதிப்படுத்தியும், நாங்கள் சொல்வதைப் பிழையென காட்டும்படியும் உம் இறைவனிடம் கேளும்!"

•    "தோட்டங்கள், மாளிகைகள், தங்கம்-வெள்ளி முதலான செல்வங்களை தரும்படி கேளும். இதிலிருந்து உமது செல்வாக்கு உமதிறைவனிடம் எவ்வாறு உள்ளது  என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம்!"

குறைஷிகள் நபிகளாரை கிண்டலும், கேலியுமாய் பரிகாசம் செய்தனர்.

நபிகளார் மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார்.  உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினையாற்றவில்லை. இந்த பரிகாச கேள்விகளுக்கு அமைதியாக, அதேநேரத்தில், ரத்தின சுருக்கமாக பதிலளித்தார்:

"நான் அற்புதங்களை இறைவனிடம் கேட்டுப் பெறுபவன் அல்ல. அதற்காக அனுப்பப்பட்டவனுமல்ல. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நற்செய்தி கூறுபவனுமாக மட்டுமே இறைவன் என்னை உங்களிடையே அனுப்பியுள்ளான்!"

கொதித்தெழுந்த குறைஷிகள், "ஓ! முஹம்மதே! நாங்கள் உம்மை  நிம்மதியாக இருக்க விடமாட்டோம்! உம்மை நாங்கள் அழிக்கும்வரை .. அல்லது நீர் எங்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம்!"- என்று சூளுரைத்தார்கள்.

இவை எல்லாம் நபிகளார், மக்காவில் இஸ்லாத்தின் திருச்செய்தியை மக்களுக்கு எடுத்த வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத குறைஷிகள் நபிகளாரையும், அவர்களது திருச்செய்தியையும் கடுமையாக எதிர்த்ததை விளக்கும் வரலாற்றுச் சம்பவங்கள்.

தமது போதனைகளுக்காக, நபிகளார் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பக் காவியங்கள். நல்லொழுக்க அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைப்பதற்கான அவரது முயற்சிகளுக்கு கிடைத்த பரிசுகள், சித்திரவதைகள், சமூக விலக்குகள், அடக்குமுறைகள் என விதம் விதமாக நீளும் பட்டியல் அது.

சுற்றமும், நட்பும், ஒட்டு மொத்த சமூகமும் பகையாகி நின்றபோது, நபிகளார் சத்தியத்தையும், பொறுமையையும் மட்டும் ஆயுதங்களாகிக் கொண்டார். ஓராண்டல்ல.. ஈராண்டல்ல இப்படி பதிமூன்றாண்டுகள் தாய் மண்ணில் மௌன யுத்தம் நடத்தினார். இந்த 13 ஆண்டுகளும், அண்ணலாரும் அவரைப் பின்பற்றி வாழ்ந்த தோழர், தோழியரும் குறைஷிகளின் கொடுமைகளுக்கு நித்தம் ஆளாகி இரத்தம் சிந்திக் கொண்டேதானிருந்தார்கள். கொடுமையின் உச்சக்கட்டத்தில்தான்...

நபிகளார், இறைக்கட்டளைப்படி மக்காவை துறந்து மதீனாவுக்கு செல்கிறார். இந்த சம்பவம்தான் வரலாற்றில்  “ஹிஜ்ரத்“ எனப்படுகிறது. இந்த முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இஸ்லாமிய ஆண்டுகணக்கும் நாள்காட்டியாய் கணக்கிடப்படுகிறது. நபிகளார் மற்றும் அவரது தோழர், தோழியரின் எண்ணற்ற தியாகங்களை நினைவுறுத்த ஹிஜ்ரி 1438-ம், ஆண்டு பிறந்துவிட்டது. இப்புத்தாண்டின் பிறப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் ஏராளம்! அவற்றைப் பின்பற்றி நடக்க முஸ்லிம்கள் முன் வர வேண்டும்.

(தி இந்து, ஆனந்த ஜோதி இணைப்பில் 06.10.2016 அன்று வெளியான எனது கட்டுரை)

 
Share:

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Pages

Labels