NewsBlog

Tuesday, September 22, 2015

அகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 6: அன்று கண்ட பிரேமை இன்றும்... என்றென்றும்..!


ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். வாழ்ந்த நிலபரப்பு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்! பேசிய மொழியும் அன்னியம்தான்! அவரைக் கண்ணால் பார்த்ததில்லை. சிலை இல்லை. சித்திரம் இல்லை! அவரது பேச்சைக் காதால் கேட்டதுமில்லை. வரலாற்றுப் பதிவுகள்தான் ஆதாரங்கள்! 

ஆனாலும், அவர் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் விந்தை. "சிறு துரும்புகூட அவர் மீது பட அனுமதியோம்!"-என்று அவரது இன்னுயிர் தோழர் - தோழியர் அன்று கொண்ட பிரேமையைப் போலவே இன்றும் உலக முஸ்லிம்களிடம் தொடரும் அந்த ஈர்ப்பு!

அவர் கற்றவராக இருந்தாலும் சரி அல்லது கல்லாத கூலி வேலை செய்பவராக இருந்தாலும் சரியே! ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் தமது பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வி அளிப்பதில் காட்டும் முக்கியத்துவம். 'மக்தபுகள் - தொடக்கக் கல்வி கூடங்கள், மதரஸாக்கள் - நடுநிலை .. உயர்நிலை கல்விச் சாலைகள் என்று ஒரு தலைமுறை, அடுத்த தலைமுறைக்குத் தங்களின் கொள்கைகளை எடுத்துச் செல்லும் இயல்பான பொறுப்புணர்வு .. முஸ்லிம்களின் ஆன்மா அது.

இத்தகைய மாபெரும் ஆளுமைக்குச் சொந்தக்காரர் முஹம்மது நபி. அவரது பெயரைக்கூட வெறுமனே சொல்வதில்லை. "ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்!" அதாவது இறைவனின் சாந்தியும்-சமாதானமும் உண்டாகட்டும் அவர் மீது!" - என்று வாழ்த்தும் பேரன்பு!

ஒருவர் முஸ்லிம் என்று தெரிந்தோ இல்லையோ புன்முறுவலோடு, "உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - என்று விரைந்து ஒலிக்கும் வாழ்த்தொலி: "அஸ்ஸலாமு அலைக்கும்!" சலாம்.

அவர் எந்த நாட்டவர்? எந்த இனத்தவர்? எந்த மொழிக்குரியவர்? என்ற பாகுபாடு இல்லை. சிறியவரா? பெரியவரா? ஆட்சியாளரா? சாமான்யரா? என்ற கேள்வியே இல்லை.

சலாமுக்கு பதிலாக, "உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக!" - என்று பதில் வாழ்த்தொலி செலுத்தும் பாங்கு.

இறைவனின் பெயர் சொல்லி அறுக்கப்படாதவை. செத்தவை, உடலுக்கு பெரிதும் தீது விளைவிக்கும் பன்றியின் இறைச்சி போன்றவை மது, வட்டி, விபச்சாரம் என்று நீளும் பட்டியல் உலகின் எந்த மூலையில் வாழும் முஸ்லிம்களுக்கும் ஹராம்தான்! அதாவது தடுக்கப்பட்டவைதான்! நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள் என்று மாறாத சர்வதேச பொதுவிதி!

முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் போப்பாண்டவர் போல ஒரு தலைவர் இல்லை. ஆனாலும், "இரண்டை விட்டுச் சொல்கின்றேன்! அவற்றைப் பின்பற்றும்வரை நேர்வழி தவற மாட்டீர்கள்"- என்று நபிகளார் காட்டிச் சென்றதை இன்றும் பின்பற்றும் முஸ்லிம்கள்.

திருக்குர்ஆனின் கட்டளைகள், திருநபியின் வழிமுறைகள் தான் அந்த இரண்டும். இந்த திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் எனப்படும் இவை இரண்டுமே உலக முஸ்லிம்களின் சர்வதேச பொதுச் சட்டங்கள். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாட்களிலும் ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடத்தப்படும் பிரசங்கத்திலும் தொழ வருபவர்களுக்காக செய்யப்படும் அறிவுரைகள் இவை. 

தனிநபர் வாழ்வா? கூட்டுச் சமூக வாழ்வா? அரசியலா? ஆன்மிகமா? அறிவியலா? வானயியலா? பூகோளமா? அல்லது பொருளாதாரமா? மனித வாழ்க்கையில் எதிர்படும் 24 மணி நேரப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கும் சட்டங்கள் (ஷ ரீஅத்)

நபிகளாரின் ஆளுமைக்கு மற்றொரு சாட்சி, ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒலிப்பெருக்கி வழியே விடப்படும் தொழுகைக்கான அழைப்பு-பாங்கு.

"இறைசக்திதான் உலக சக்திகளைவிட மேலானது. "அல்லாஹீ அக்பர்!" - என்ற பிரகடத்துக்குப் பிறகு "முஹம்மது நபி இறைவனின் திருத்தூதர் - முஹம்மதுர் ரஸீலூல்லாஹ்!" - என்று உரத்து செய்யப்படும் பிரகடனம். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் 24 மணி நேரமும் உலகின் பகுதிதோறும் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் திருப் பெயர்.

இறைவன் ஒருவன் என்பதோடு மனிதகுலத்துக்கான மார்க்கமும் ஒன்றுதான் என்பதே இஸ்லாத்தின் முழக்கம்.
  •      ஏகத்துவம் (Unity of God)
  •      மனித இனித்தின் ஒருமைப்பாடு (Unity of Mankind)
  •      மார்க்க அடிப்படையிலான ஒருமைப்பாடு (Basic Unity of Religion)
- இவை இஸ்லாத்தின் மிக முக்கிய அம்சங்கள்.

அமெரிக்க நீக்ரோ இன மக்களின் தலைவரான மால்கம் எக்ஸ் - மாலிக் யேல் ஷஹபாஜ் தனது ஹஜ் அனுபவங்களைத் தனது உதவியாளர் அலெக்ஸிடம் பகிர்ந்து கொள்ளும்போது சொலகிறார்.

மால்கம் எக்ஸ் சொன்னது என்ன?

-இறைவன் நாடினால்... அருட்கொடைகள் தொடரும்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''
 முந்தைய அருட்கொடை தொடர்களை வாசிக்க:

அண்ணல் நபி : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_12.html

நற்குணங்களை நிறைவாக்குவதற்காக: http://ikhwanameer.blogspot.in/2015/08/2.html

குட்டி எறும்புகளும், அன்பு நபியும் : http://ikhwanameer.blogspot.in/2015/09/3.html

கடலில் மிதந்துவந்த கடன் : http://ikhwanameer.blogspot.in/2015/09/4.html

ரொட்டித் துண்டுகள் : http://ikhwanameer.blogspot.in/
Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive