NewsBlog

Tuesday, September 15, 2015

இஸ்லாம் வாழ்வியல்: சவாலை ஏற்ற சிறுவன்



இராக்கின் 'கூபா' நகருக்கு விதண்டாவாதம் புரியும் மேதாவி ஒருவர் வந்தார். அவ்வூர் அறிஞர்களிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார். யாராலும் பதில் சொல்ல முடியாமல் போகவே கடைவீதியின் உயர்ந்த மேடையில் நின்று கொண்டு மக்களுக்கு அறைகூவல் விட்டார்.

அதை ஒரு சிறுவன் கேட்டான். சவாலை ஏற்றான்.

இது முதல் கேள்வி:

"தம்பி! இப்போது உன் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?"

சிறுவன் அமைதியாக, "அய்யா, கேள்வி கேட்பவரைவிட பதில் சொல்பவரே அந்தஸ்தில் உயர்ந்தவர். அதனால், நீங்கள் மேடையை விட்டுக் கீழறங்கி வர வேண்டும்!" - என்றான்.

மேதாவி கீழே இறங்கினார்.

மேடையின் மீது ஏறிய சிறுவன், "இப்போது என் இறைவன் இறைநம்பிக்கையற்ற ஒருவரின் மதிப்பைக் குறைத்து, தன் அடியானின் மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கின்றான்" - என்றான்.

சுற்றி நின்ற மக்கள், "உண்மை! உண்மை!" - என்று அதை ஆமோதித்தார்கள்.

திடுக்கிட்ட மேதாவி இரண்டாவது கேள்வி கேட்டார்:

"தம்பி! உன் இறைவனுக்கு முன்னால் என்ன இருந்தது?"

"பெரியீர்! நீவிர் 9 லிருந்து இறங்கு வரிசையில் எண்களைக் கூறுங்கள்!"

"ஒன்பது.. எட்டு.. !" - எண்ணிக் கொண்டே வந்த மேதாவி ஒன்றில் வந்து நின்றார். "அவ்வளவுதான். ஒன்றுக்கு முன்னால் எதுவும் இல்லை தம்பி!" - என்றார்.

சிறுவன் புன்முறுவலுடன், "அதுபோலத்தான் இதுவும். இறைவனுக்கு முன்னால் எதுவும் கிடையாது. அவன் முதலும் முடிவுமானவன்; ஆதியும், அந்தமுமில்லாதவன்!" - என்றான்.

மேதாவிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசி கேள்வியைக் கேட்டார்:

"தம்பி! இறைவனின் முகம் எந்தப் பக்கமாய் உள்ளது?"

சிறுவன் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான்.

"அய்யா! இதன் வெளிச்சம் எந்தப் பக்கம் உள்ளது?" - என்று கேட்டான்.

"நாலா பக்கமும்" - என்றார் மேதாவி.

"இறைவன் ஜோதி வடிவானவன். அதனால், அவனது முகம் எல்லாப்புறமும் உள்ளது!" - என்றான் சிறுவன்.

தோல்வியை ஒப்புக் கொண்ட மேதாவி அங்கிருந்து அகன்றார்.

சிறுவயதில் இத்தகைய அறிவைப் பெற்றிருந்தவர், இஸ்லாமிய சட்ட நிபுணர்களில் உச்சாணியில் வைத்துப் போற்றப்படும் பேரறிஞர் இமாம் அபூஹனீபா அவர்கள்தான்.

(தினமணி, ஆன்மிகச் சிந்தனையில் 07.07.1995 அன்று பிரசுரமான எனது கட்டுரை)  

'''''''''''''''''''
இஸ்லாம் வாழ்வியல் முந்தைய இணைப்புகளுக்கு:1. இரவில் ஒலித்த அழுகுரல் : http://ikhwanameer.blogspot.in/2015/08/blog-post_21.html

 


Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive